எங்க ஊர் பஸ்

0
(0)

பூதலபுரம் பிரசிடென்ட் கந்தசாமிக்கு ஆத்திரமுன்னா ஆத்திரம். இருக்காதா பின்னே? எப்பவும் கிளார்க் கணேசன். தடத்தடன்னு ஒரு ஓட்டை பைக்குல பின்னாடி ஜம்முன்னு ஒக்கார வச்சு எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியா ஓட்டிக்கிட்டு வருவான். யூனியன் ஆபீசுல கூட ஒரு மைலுக்கு அப்பால வரும்போதே கந்தசாமி வர்றாருப்பூன்னு அங்க வேலை பாக்குறவங்க நமுட்டுச் சிரிப்பா சிரிச்சுக்குவாங்க. அவவளவு எதுக்கு? அவர் மகன்கள் கூட எத்தனையோ தடவை சொல்லப் பார்த்துட்டாங்க. கேட்டாத்தானே. “போங்கடா நீங்களும் ஒங்க யோசனைகளும். இந்த வண்டி வாங்குனதுக்குப் பெறகுதான் மந்தைப்பிஞ்சை. நாடார் பிஞ்சை இருவது குருக்கம். டக்கர் கலப்பை எல்லாம் வாங்குனது. ராசியான வண்டிடா’ன்னு சொல்- எல்லார் வாயையும் அடச்சுருவார். இன்னிக்கு பாத்து என்ன ஆச்சுதோ தெரியலை. புதூர்ல வந்து வண்டி மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சு. மெக்கானிக்குக என்னத்த வேலை பாக்குறானுகளோ. துணிப்பா இது தான்னு சொல்லத் தெரியல. இம்புட்டுக்காண்டு வண்டிக்கு மதுரையில் போயி சாமான் வாங்கணுமாம். காசு புடுங்குறதுக்குன்னே நாக்க தொங்கப் போட்டுக்கிட்டு ஒக்காந்துக்கிட்டு இருப்பானுக போல. பட்டிக்காட்டுல இருந்து வாரவங்களை ஏமாத்துறதுக்குன்னே ஒரு கூட்டம் டவுன்ல இருக்குது.

பஸ்சுக்கு நின்னு நின்னு காலு கடுத்துப் போச்சு. ஒக்கார்ரதுக்கு கூட எடமில்ல. ஒரு பையில் அஞ்சாறு நோட்டுகளோட கணேசன் பஸ் வருதான்னு பாத்துக்கிட்டு இருந்தான். பஸ் ஸ்டாண்டுல கூட்டமுன்னா கூட்டம் பெருங்கூட்டம். அவங்களை பாக்குறப்போ எரிச்சல் பொத்துக்கிட்டு வந்ததுச்சு கந்தசாமிக்கு ஊர்ல மழ தண்ணி இல்ல. குடிக்க கஞ்சிக்கு இல்லாட்டி கூட புதூர பாக்காட்டி இவங்களுக்கு கண்ணடையாது போல. தெனசரி இங்க என்ன புடுங்குற வேலையா இவங்களுக்கு அந்த நேரத்திலும் பேரமார் நினைவு வந்தது. வேகமாய் போய் மாவிலோடை சேவுக் கடையில் சேவும் சீரணியும் வாங்கிக் கொண்டார்.

அங்கிட்டும் இங்கிட்டும் இருந்தவங்க எல்லாம் வேகமாய் வந்தாங்க டம டமன்னு சத்தம் போட்டுக்கிட்டு பின்பக்க கண்ணாடி இல்லாம அப்பளம் மாதிரி ஏகப்பட்ட நெளிசல்களோடு பஸ் வந்து நின்றுது. கூட்டம் முட்டி மோதிக்கிட்டு இருந்தது. கணேசன் அவசரமாய் இடிச்சு பிடிச்சு ஜன்னல் வழியா கா- யாய் இருந்த சீட்ல பையப் போட்டு எடத்தப் புடுச்சான். அப்பாடா ஒரு வழியா சீட்ட புடுச்சுட்டான் இடிக்காம கொள்ளாம ஒக்காந்து ஊருக்குப் போயிறலாம். சும்மா சொல்லக்கூடாது கணேசன் கெட்டிக்கார பயதான். இல்லாட்டி நம்ம ஊரு பசங்கள கெட்டி மேய்க்க முடியுமா? கிரித்திரம் புடுச்ச பயலுக. எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டி பேசிக்கிட்டே இருப்பானுக. அவங்ககிட்டேயே பேசி சமாளிக்கிறவனுக்கு சீட் போடுறதா பெரிசு. கணேசனை மனசுக்குள் மேச்சிக்கொண்டார் பஸ்ஸே நெரம்பிடுச்சு. நம்ப சீட்ல யாரும் ஒக்காந்துட்டாங்களான்னு பாத்துக்கிட்டே கூட்டத்தை வெலக்கிட்டு கிட்டே போய் பார்த்தால் மனசு திக்கென்றது. ஒக்கார்ற எடத்துல வெறும் கம்பி மட்டும்தான் இருக்கு சீட்ட காணோம். மூக்குக்கு மேல கோவம் வந்துச்சு. எடம்பிடிக்கப் போட்ட மஞ்சப்பை இவரப் பாத்து சிரிக்கிற மாதிரி இருந்துச்சு. இந்த துப்புக் கெட்ட நாயிக்கு ஒரு சீட் கூட போடத் தெரியல. சீட் இருக்கா வெறும் கம்பி மட்டுமான்னு பாத்து போட வேண்டாம். வெளங்காத பய. இவனையெல்லாம் நாம கிளார்க்குன்னு போட்டு மாரடிக்க வேண்டியிருக்கு.

கணேசன் படிக்கட்டுல தொங்கிக்கிட்டு வந்தான். கிட்ட மட்டும் இருந்தான்னா கடிச்சுக் கொதறி இருப்பார். பள்ளிக் கூடத்துப் பசங்க சிரிப்பும் கும்மாளமுமா வர்றாங்க. ராமசாமியும் பாண்டியும் இவர பாக்காதது மாதிரி ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக்கிட்டு வந்தாங்க. ஒரு பயலாச்சும் பிரசெண்டு வாராரே எந்திரிக்கானுகளா ஒரு வயசுக்காச்சும் எடம் கொடுக்கலாமுல்ல. பின் சீட்ல யாரையாச்சும் எந்திரிக்கச் சொல்லிட்டு ஒக்காறலா முன்னு எக்கிக்கிட்டு பார்த்தார். அட கண்றாவியே என்ன கொடுமை இது. நாலஞ்சு சீட்டு இருக்க வேண்டிய எடத்துல வெறும் கம்பி மட்டும் தான் இருக்கு அட, பே கொண்ட பயலுகளா. இதுக்குத்தானா இப்படி முட்டி மோதுனீங்க. நல்ல வண்டி விடணுமுன்னு நம்பகிட்ட சொல்லியிருந்தா இதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கலாம். பிரசெண்டுட்ட சொல்லி இந்த மாதிரி விசயங்களை செய்வோமின்னு எவன் வர்றான். மூட்டு வலியால நின்னு நின்னு காலு கடுத்துப் போச்சு. முட்டியில் விண் விண்ணுன்னு வலி. எலக்சன்லகூட அன்னபோஸ்டுல சீட்ட புடிச்சாச்சு. பஸ்ஸுலதான் நிக்க வேண்டியதாப் போச்சு!

வீட்டுக்குப் போனதும் மொத வேலையா கணேசனை விட்டு ஒரு மனு எழுதச் சொல் – டெப்போ மேனேஜருக்கு அனுப்பி வச்சார். இன்னும் ரெண்டு நாள்ல வேற நல்ல வண்டி வரப் போகுது பார். கெத்தாய் ஊருக்குள் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு மாசம் ஆயிடுச்சு புதுவண்டி வர்ற வழியைக் காணோம். கணேசன்ட்ட சொல்லி கலெக்டர்ல இருந்து போக்குவரத்து மினிஸ்டர் வரைக்கும் மனு எழுதி எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கிப் போட்டார். இது அவருக்கு மானப் பிரச்சனையாய் போயிடுச்சு. இவரோட வேகத்தைப் பார்த்த மக்களுக்கு ஓர் எதிர்பார்ப்பு. ஒரு நாள் இப்படித்தான் சும்மா இருக்கமாட்டாம டிரைவருட்ட வார்த்தையை விட “ஒங்க ரோடு இருக்குற இருப்புல இந்த வண்டி வர்றதே பெரிசு. இதையும் கெடுத்திடாதீங்கன்னு” சொல்லிட்டு போயிட்டார். இத்தனை வருச சர்வீசுல ஒரு பய நம்மள நாக்கு மேல பல்லப் போட்டு பேசுனது கெடையாது. இந்த டிரைவர் பய என்ன பேச்சு பேசறான் குமுறினார் கந்தசாமி.

எரியிற நெருப்புல எண்ணெய் ஊத்துற மாதிரி “என்ன பெரியய்யா நீங்க வேற பஸ்ஸுக்கு மனு போட்டுக்கிட்டு இருக்கீங்க. காடல்குடி ரூட்டுல புது பஸ்ஸு நேத்துல இருந்து ஓடிக்கிட்டு இருக்குது தெரியுமா? ரேடியோவில் பாட்டெல்லாம் போட்டுக்கிட்டு சும்மா ஜிலுஜிலுன்னு போறான். பாண்டி போகிற போக்கில் எகத்தாளமாய் கூறிக் கொண்டு போனான். கந்த சாமிக்கு நெஞ்சு திகுதிகுன்னு எரிஞ்சது. நம்மள என்ன கேணப்பயலுகன்னு நெனச்சிக்கிட்டானுகளா. காடல்குடிக்காரன் பெரிசாய் போயிட்டானா. நாம என்ன அவங்களுக்கு கொறஞ்சவங்களா? ரெண்டுல ஒண்ணு பாத்துட வேண்டியதுதான்.

சென்னம்பட்டி பிரசிடெண்ட் வெங்கடசாமி மாதலபும் குருசாமி மற்ற பெரிய தலைகளை எல்லாம் போய் பார்த்தார்.

இதப் பாருங்க நானும் எவ்வளவோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன். நாம் இப்படியே இருந்தா கவுருமெண்டு நம் மள ஒரு பொருட்டா நெனைக்க மாட்டாங்க மயிலே மயிலேன்னா எறகு போடாது. இவ்வளவு நாள் மனுப் போட்டதை எல்லாம் தொடச்சு போட்டு போயிட்டான். கந்தசாமி சொன்னது சரிதான்னு பட்டது.

மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பந்தல் நிரம்பி வழிந்தது. ஏழுர் சனமுன்னா சும்மாவா? கந்தசாமி சகட்டுமேனிக்கு எல்லோரையும் ஒரு பிடி பிடித்தார். அதிகாரிகள் எல்லாம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். எதற்கும் பிடி கொடுக்கவில்லை. முதலில் பஸ் அப்புறம்தான் மற்றது. எதிர்கட்சிக்காரங்க எல்லாம் வாழ்த்து சொல்லி கை குடுத்துட்டு போனாங்க. அதிகாரிகள் கூடிக்கூடிப் பேசினார்கள். ரெண்டு மாசத்துல எலக்சன் வேற வரப்போகுது. இந்த நேரத்துல என்னத் தையாவது செஞ்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடுச்சுன்னா நாமதான் அரசாங்கத்துக்கு பதில் சொல்லியாகணும். எம்.எல்.ஏ. போன்ல கேட்டுக்கிட்டே இருக்கார். ஒடனே பிரச்சனையை முடிக்கணும்.

‘அண்ணாச்சி எம்.எல்.ஏ வர்றார் கந்தசாமியின் காதுல கிசுகிசுத்தார் குருசாமி. பளீரென்ற வெள்ளை வேட்டி முழுக்கை சட்டையில் ரெண்டு கையையும் தலைக்கு மேல தூக்கி ”தலைவரே வணக்கம். என்ட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதா. நீங்களெல்லாம் இப்படி ரோட்டுல வந்து நிக்கணுமா. நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். எதுன்னாலும் நான் செஞ்சுதாரேன் தலைவரே. இந்த அதிகாரிங்களால எங்களுக்கு கெட்ட பேர் யோவ் என்னய்யா செய்யுறீங்க ஒடனே பஸ் வந்தாகணும்”

அடுத்த சில மணி நேரத்தில் புதுமணப்பெண் போல சத்தமே இல்லாமல் புத்தம் புதிய பஸ் வந்து நின்றது. உள்ளே டி.எம்.எஸ் பாடிக் கொண்டு இருந்தார். கந்தசாமி ஒரு ஆள் தூக்க முடியாத அளவு பெரிய மாலையை பஸ்ஸின் முன் கட்டினார். சொல்ல வொண்ணாத மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். சந்தோ சம்பிடிபடவில்லை. தரையில் கால் படவில்லை. உற்சாகத்தில் மிதந்தார். இப்பெல்லாம் யூனியன் ஆபீசுக்கு பஸ்ல தான் போகிறார். கணேசன் எடம் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை. பாக்குறவங்க எல்லாம் மரியாதையா ஒதுங்கிக்கிறாங்க.

அடுத்த ரெண்டு மாசம் எலக்சன்ல ஊரில் புழுதி கிளம்பியது. அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை பிரச்சாரத்துக்கு வந்தனர். தார் ரோடு பளபளத்தது.

எலக்சன் முடிந்துவிட்டது. எல்லாம் ஓய்ந்து ஒடுங்கியது ஒரு நாள் கந்தசாமி பஸ் நிற்கும் ஆலமரத்தடிக்கு வந்தார். பஸ்சிற்கு காத்திருந்தவர்கள் பவ்வியமாய் கும்பிட்டனர். அடுத்த பஞ்சாயத்து தேர்தலை மனதிற்குள் நினைத்தார். மனதிற்குள் உற்சாக வெள்ளம். தூரத்தில் பஸ் சத்தம். பக்கத்தில் வந்துவிட்டது ஏறிட்டுப் பார்த்தார். நொறுங்கிப் போனார்.

தடதடன்னு சத்தம் போட்டுக்கிட்டு பின்பக்க கண்ணாடி இல்லாமல் அப்பளம் போல் ஏகப்பட்ட நெளிசல்களோடு பாதிசீட் இல்லாத அந்த டப்பா பஸ் வந்து கொண்டு இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top