ஊழி

0
(0)

அண்ணாச்சி நீங்களாச்சும் இதை என்னன்னு கேக்கக் கூடாதா. பாவிப்பயலுக இந்த அடி அடிச்சிருக்கானுவெளெ. குடிச்சமனுசங்கிட்டே இவங்களுக்கு என்ன பேச்சு வேண்டிக் கெடக்கு. குடிவெறியில அப்படி இப்படி பேச்சு வரத்தான் செய்யும். அதுக்காக இப்படியா கண்ணுமண்ணு தெரியாம போட்டு அடிக்கிறது… நீங்கல்லாம் பெரிய மனுசன்தானே… அப்பவே என்னன்னு கேக்கக்கூடாதா. அவருக்கு ஒண்ணு ஆயிடிச்சின்னா நான் மூணுபிள்ளைகளை வச்சிகிட்டு என்ன பண்ணுவேன்?

வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுக்கலைன்னா… அதுக்கு என்ன அடிமானம் வேண்டியிருக்கு… மூக்கந்தண்டைய ஒடைச்சிருக்கானுக… கையைத் திருப்பிவிட்ருக்கானுகளே… அந்தக் கை இருந்தாத்தானே கொடுத்த கடம் திரும்ப வரும்னு ஓர்மை இருக்கா அவனுகளுக்கு… அறுதப் பயலுக… அண்ணாச்சி நீங்களும் வேடிக்கை பாத்துகிட்டு இருந்திருக்கீகளே… கொஞ்சம் என்ன ஏதுன்னு கேக்கப்படாதா… யாரும் கேக்க நாதியில்லைன்னுதானே இம்புட்டு பேருக்கு நடுவில போட்டு அடிச்சிருக்கானுக… அவனுக வௌங்குவானுகளா… அவனுக கைல பாம்பு புடுங்க…

அண்ணாச்சி போனமாசம் நாலுபேரை வைச்சி பஞ்சாயத்து பண்ணி வட்டிப் பணத்தை வாங்கினீகளே… அப்ப என்னெல்லாம் சொன்னீக… எந்தம்பி மாதிரின்னு சொன்னீகளே… அந்த மனுசன் அடிபட்டு ரத்தம் கொட்டிக் கிடக்கும்போது, நீங்களும் ஆளோடு ஆளா நின்னு சிரிச்சிட்டு வேடிக்கை பாத்துகிட்டு இருந்திருக்கீகளே… உங்களுக்கே இது நல்லாருக்கா… நாங்க இந்த ஊருக்கு வந்ததிலிருந்து ஒங்ககிட்டே பணம் வாங்கிட்டு எவ்வளவு வட்டி கொடுத்திருப்போம்… எவ்வளவு மொதல திருப்பிக் கொடுத்திருக்கோம்… நீங்க ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல… ஏண்டா அடிக்கீகன்னு… அவருக்கு ஒண்ணு ஆயிடிச்சின்னா நான் மூணு பிள்ளைகளை வைச்சிகிட்டு என்ன பண்ணுவேன்…

எங்களுக்கு நாதியில்லன்னு மட்டும் நெனக்காதீங்க. தகவல் சொன்னா ஊரிலிருந்து எங்க மக்க மனுசாள் திரண்டு வந்திரும். அப்புறம் உண்டு இல்லைன்னு ஆயிரும்… இந்தத் துப்பு கெட்ட மனுசன்… ஒழைச்சி ஒழைச்சி என்னத்த கண்டாரு… கடனையும் வட்டியையும் அடைக்கத்தான் சரியாருக்கு… அரைவயிறும்… கால்வயிறும் கஞ்சிய குடிச்சிட்டு கெடக்கோம். அந்த வெறியில எதாச்சிம் இடக்குமடக்கா பேசியிருப்பாரு. குடிச்ச மனுசங்கிட்ட எப்படி அனுசரிச்சிப் போணும்னு தெரிய வேண்டாம். அதுக்காக இப்படியா போட்டு சக்கையா அடிக்கிறது. அண்ணாச்சி நீங்களே வந்து பாருங்க. நீங்க இருந்துமா இப்படி நடக்க விட்டீக…

இந்த ஊரை விட்டுத் தொலையலாம்னாலும் முடிய மாட்டேங்கு… கடனைக் கொடுத்து தீந்த பாடுமில்லை… வாழ்ந்த பாடுமில்லை… அன்னக்கி பஞ்சாயத்துல என்ன சொன்னீக… கடனைக் கொடுத்திட்டு ஊரைக் காலி பண்றதானா பண்ணிக்கலாம்னு சொன்னீகளே… இப்ப இந்த அடி அடிச்சிருக்கானுகளே… எந்திரிச்சி வேலைக்குப் போறதுக்கே பத்து நாளாவுமே… நாங்க எப்படி கடனை அடைக்கிறது. அய்யோ… எந்தெய்வமே… ஒனக்கு கண்ணில்லையா… இந்த அநியாயத்தை என்னன்னு கேக்கமாட்டியா… அவனுக கையில புத்து மொளைக்க… அண்ணாச்சி எனக்கு ஆத்தாமையெல்லாம், எப்படி உங்களுக்கு இந்த அக்கிரமத்தைப் பாத்துகிட்டிருக்க மனசு வந்திச்சி அப்புடின்னுதான்… மத்ததெல்லாம் சட்டமா பேசுதியளே… மனுசத்தன்மை கூடவா இல்லாமப் போச்சி…

ஒங்களுக்குத் தெரியாதா… இந்த ஊருக்கு வந்ததும் ஒங்களைத்தான முதல்ல பாத்தோம். அப்ப என்ன சொன்னீக. நானாச்சி கருப்பா. பொழைக்க வந்தவுகளை நாங்க காப்பாத்துவோம்னு சொன்னீகளே. யாவுகமிருக்கா. இப்ப இப்பிடி நட்டாத்துல விட்டுட்டீக… நீங்கள்ல முத ஆளா நின்னு கேட்டிருக்கணும். ஏதாயிருந்தாலும் நீங்க அதட்டிப் பேசி சமாதானம் பண்ணியிருக்கலாம்ல.

ஒங்க பேச்சை இதுவரைக்கும் மீறியிருக்கமா… நீங்க வரச் சொன்ன நேரத்துக்கெல்லாம் வந்து எவ்வளவு பாடு பாத்துக் கொடுத்திருப்போம்… எங்க சோலியக்கூட போட்டுப்புட்டு ஒங்ககிட்ட காவல் கெடந்தோமே. உங்களுக்கு அந்த நன்றியில்லையே அண்ணாச்சி.

பெரிய மனுசன்னா சொல்ற மாதிரியில்ல நடக்கணும். துட்டு சமாச்சாரத்தில மட்டும் பைசா சுத்தமா கணக்கு பாக்கீகளே… அவுக எம்புட்டு நடை நடந்திருப்பாக… எவ்வள ஒழைப்பு ஒழைச்சிருப்பாக. அதெல்லாம் நெனச்சிப் பாத்திருந்தா இப்படி சும்மா இருந்திருப்பீகளா. ஒரு ஆளை அத்தனை தடிமாட்டுப் பசங்களும் போட்டு உதைச்சிருக்கானுகளே. அவனுக வீடு வௌங்குமா. நான் வயிறெரிஞ்சி கொடுக்கிற சாபம் சும்மா விட்டுருமா.

அண்ணாச்சி நாங்க எளிய சாதிதான். கூலி வேலை செய்ற கூட்டம்தான்… எங்கள அடிச்சாலும் கொன்னாலும் யாரும் கேக்க வரமாட்டாங்கங்கிற தைரியம்தானே அண்ணாச்சி, அவனுகள இப்படி அடிக்கச் சொல்லியிருக்கு… நீங்களும் பேசாம இருந்திருக்கீக… என்ன வேணாலும் செய்யலாம்னா நெனச்சீங்க… எங்க பொறுமைக்கும் எல்லை உண்டு அண்ணாச்சி… இன்னக்கி நாங்க நாதியத்து இருக்கோம்… இப்படியே காலம் பூரா இருந்திரமாட்டோம். அப்பங்கூட இப்படி மிருகத்தனமா நடக்க மாட்டோம். கொஞ்சங்கூட ஈவிரக்கம் இல்லாம ஒரு மனுசன அதுவும் குடிச்சிட்டு நெதானமில்லாத மனுசன இப்படி அடிக்கிறவனுக… அரக்கனுகதான்… அவனுக கட்டைல போற நாளும் வராமயா போயிரும். எஞ்சொல்லும் பலிக்காமயா போயிரும்… அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருச்சின்னா மூணு பிள்ளைகளை வச்சிகிட்டு நான் என்ன பண்ணுவேன்?

நீங்க ஆயிரந்தான் சொல்லுங்க… எனக்கு சமானமில்ல. நீங்க இருந்தும் இப்படி ஒரு காரியம் நடக்க விட்ருக்கீகளே… பின்ன என்ன பெரிய மனுசன்னு பேரு.. ஒங்கள மல போல நம்பியிருந்தோமே… இப்படி துரோகம் பண்ணிட்டீங்களே. அப்படியே அவரு நாலு வார்த்தை தப்பா பேசிட்டாதான் என்ன… நாயா ஓடி செருப்பா தேஞ்சிருக்காரே… கொஞ்சம் பொறுத்துக்கக் கூடாதா.

அதுக்காக இப்படி வங்கொடுமையா… ஒங்க சம்மதமில்லாம இங்க ஒரு பய அவரு மேல கையை வச்சிருப்பானா. எப்படியும் அவரைக் கொன்னுறலாம்னு பாத்துட்டீக… கொல்லுங்க… என்னய எம்பிள்ளைகள எல்லோரையும் கொல்லுங்க.

ரத்தவெறி பிடிச்சவனுகளா… நீங்க நல்லாருக்க மாட்டீக… புழு வச்சி சாவீங்கடா… எங்க ரத்தத்தையெல்லாம் உறிஞ்சிகிட்டு எங்கள இக்கதிக்கு ஆக்குன நீங்க உருப்படுவீகளா… ஒங்க வீட்ல தீப்பிடிக்க… ஒங்க கையில புத்து மொளக்கெ… ஒங்க வீடு வௌங்காமப் போக… ஒங்க கை காலு வௌங்காம போக… எஞ்சாபம் ஒங்களச் சும்மா விடாதுடா… நான் தூத்துன மண்ணு ஒங்க நெஞ்ச அடைக்குமுடா…

ஏலேய்… அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சின்னா ஒங்கள நான் சும்மா விடமாட்டேன்டா… சும்மா விடமாட்டேன்.

 

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top