ஊராத்தி

0
(0)

‘பெரீம்மா.. பொழுதூன்னிக்கும்… ஆய் ஆயா வருது..”

வாசலிலிருந்த காப்பிக் கடையினைக் கடந்து வீட்டுக்குள்ளிருக்கும் அடுப்பங்கரைக்கு வந்தது திவ்யா. பகல் யேவாரத்திற்காக அடுப்பில் வடை போட்டுக் கொண்டிருந்தார் பெரியம்மா.

அடுப்பில் கருவேலங்குச்சியை ஒடித்து திணித்து ஊதுகுச்சியால் ஊதி, தீயை அணையாது வளர்த்துக் கொண்டிருந்தார். பத்தரை, பதினோரு மணிக்கெல்லாம் மசால்வடையும் தவளைவடையும் தயார் செய்துவிட்டால் மிக்சர் காராசேவு அய்ட்டங்களை சைக்கிள்காரரிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

புகைமண்டிய அந்த அறைக்கு ஓடிவந்த திவ்யா, அப்ப்டியே குத்த வைத்தபடிக்கு உட்கார்ந்து கொண்டது. கண்கள் பூராவும் புகை தேடிவந்து மொய்த்தது. கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டபடி பெரியம்மாளின் பதிலுக்காகக் காத்திருந்தது,

ஊதுகுழலின் தயவினால் அடுப்புத்தீ குபென பற்றிக்கொள்ள, புகை காணாமல் போனது. எண்ணெயில் மிதந்து கொண்டிருந்த வடைகளை கம்பியில் புரட்டிவிட்டு, திவ்யாவைப் பார்த்தார்.

“நீ எதுக்குடி பொகைக்குள்ள கெடக்க..? நகண்டு போ..!“

“பொழுதீன்னிக்கும் ஆய் வந்திட்டே இருக்கு பெரீம்மா..!“

“போய்ட்டு வந்திட்டியா..?“

ஆமென தலையை ஆட்டியது திவ்யா..

“கழுவி விடணுமா….!“

“ம் ஹூ ம். அக்கா கழுவீர்ச்சு.!“

“கருவாச்சி விட்லதே இருக்காளா..? “ – சட்டியில் மிதந்த வடைகள் மெதுவாய் மிதப்பதை நிறுத்தி எண்ணெய்க்குள் மூழ்க ஆரம்பித்தன. வடையைச் சுற்றி எழும்பிய குமிழ்கள் குறைந்து போயின.

கம்பியைப் போட்டுவிட்டு அரிகரண்டியை எடுத்து வடைகளை அள்ளி பதம் பார்த்தார். பளீரென மஞ்சள் பூத்துக் சிரித்தன வடைகள். இன்னமும் கால் வேக்காடு விடவேண்டும். பொன்னிறமாய்ச் சிவந்ததும் எடுத்துவிட வேண்டும். தாமதித்தால் கருகிவிடும். தீயை நிதானமாய் எரியவிட்டார்..

”யே.. மூக்கற..ங்ஙொக்கா வீட்லயா இருக்கா..? கேக்கறது காதில விழலியா.. ? “ பெரியம்மா சத்தமாய்க் கேட்டார்.

“அக்கா என்னிய அடிக்கிது.. பெரிம்மா.!.. “ – எழுந்துவந்து பெரிம்மாவின் முதுகினை ஒட்டி நின்று கொண்டது. பெரியாம்மாளின் உடம்பு பூராவும் வியர்த்துக் கிட்க்க, அடுப்பின் வெக்கை அவனையும் கதகதவென தாக்கியது.

வெளியில் – கடைக்கு – யாரோ கூப்பிட்டார்கள்., “ கேட்ட கேள்விக்கி பதில் சொல்றாளான்னு பாரு..! ” என கடிந்து கொண்ட பெரீம்மா.., “ந்தா வாரேன்..“ என வெளியாளுக்குப் பதில் கொடுத்துவிட்டு , “அடியே திவ்யா..  வேளிய அவகளுக்கு என்னா வேணும்னு கேளு.. ந்தா.. நா வாரென்…” என அவனளக் கடைக்கு விரட்டி விட்டார்.

திவ்யாவை அனுப்பிய கையோடு அடுப்பை இழுத்து தீயைத் தணித்து விட்டு, வடையை எடுத்துக்கொண்டு முகத்தில் வழிந்த வியர்வையோடு கடைக்கு வந்தார்.

“டீ வேணுமாம் பெரீம்மா..“ திவ்யா சொன்னது..

கொண்டுவந்த வடையை கண்ணாடிப் பெட்டியில் கொட்டிவிட்டு, முந்தானையை அவிழ்த்து உதறி, முகம் துடைத்து கொண்டு கையைக் கழுவிக் கொண்டது பெரியம்மா..

“என்னா வேணும்னு வேகமாக் கேட்டவ, டீ யப் போட்டுக்குடு டீ.. ? – கடைக்கு வந்த அந்தப் பெண் திவ்யாவைப் பார்த்து குறும்பு மிளிரக் கேட்டாள்.

“நாந்தேங் கேக்கச் சொன்னே..” – என்ற பெரியம்மா, இன்னேரத்தில என்னா காப்பி..? விருந்தாடியா..“ எனக் கேட்டது.

“அம்மவீட்டுக்கு ஆரு விருந்துக்கு வரப் போறா.. தெக்குவீட்டு ரேவதி இருக்காள்ல.. அதேன் மழுவெம் பொண்டாட்டி..! “

“வருசநாட்டுக்காரியா..?“

“ஆமா.. ஆறுமணி வேலைக்கிப் போயிருக்கா.. புள்ளய கொண்ணாந்து பாத்துக்கன்னு வீட்ல விட்டுட்டுப் போய்ட்டா.. அது கழுத வாரு வாருன்னு கத்தீட்டுக் கெடக்கு. அதுக்கு வயித்த நெப்பலாம்னுதே…”

“அது பச்சப் பிள்ளையாச்சே.. பாதகத்தி அதயா விட்டு வேலைக்கிப் போயிட்டா..”

“தவக்குற பிள்ளதே, நேத்து முந்தாநாளெல். லாம் அதுவாட்டுக்கு மண்ணாக் கெடந்திச்சு, வகுத்துக்கு எதும் பெரச்சனையான்னு தெரில.. நெனச்சு நெனச்சு அழுவுது…! “ அந்தப் பெண்ணின் முகத்தில் அழும் குழந்தையின் சாயல் தெரிந்தது.

“ பேர் சொல்லாத்து இருக்கா..?  இருந்தா கருக்கி ஊத்திவிடு..”

“அதத்தே சுடுதண்ணீல கரச்சுக் குடுத்தே.. சரி, வகுத்தயும் ரெப்பிவிட்டம்னா.. மதியத்துக்கு அவக ஆத்தா வந்திருவா..! “

“பாலா.. காப்பியா..?“

“காப்பியாவே குடு நாமளும் ஒரு மொடக்கு குடுச்சுக்கலாம்ல!“

“அதுவரையிலும் அவர்கள்து பேச்சில் குறுக்கிடாமல் இருந்த திவ்யா..டீ பட்டறையில் நின்று காப்பி போட்டுக் கொண்டிருந்த பெரியம்மாவின் சேலையினைப் பிடித்து இழுத்தது.

“என்னாடி.. ஒனக்கும் காப்பி வேணுமா. யே ஓட்டக்குண்டீ.”

வேண்டாமென தலையாட்டிய திவ்யா, “ இன்னம் ஆய் வ்ர்தூ..” என சோகமாய்ச் சொன்னது.

“ஆய் வ்ருதா..? ந்தா எம்மடில ஒக்காந்து இரு..சரியா..?“ பெரியம்மா சொன்னதும் திவ்யா சிரித்தது.

“சிப்பாணியப் பாரு மூக்கறச் சிரிக்கிக்கி. “பேச்சோடு காப்பிக்கு சீனியைச் சேர்த்துப் போட்டாள்., “ரெண்டுகரண்டி சீனி சேத்துப் போட்டுருக்கே நல்லா அலசிக் குடு..” – வாளியை நீட்டியது பெரியம்மா.

”கண்க்குல வச்சுக்க. அவ வந்ததும் வாங்கித்தாரே..” எனச் சொன்ன அந்த்ப் பெண் ,” என்னா இவக ஆத்தா தங்கல் வேலைக்கில்ல போகணுன்னா..?“

“ஆமா. மூணு நாள்தே .. நாளக் கழிச்சு வந்திருவா..! “

“மூணு நாளைக்கி இவகள கட்டிச் சேவிக்கணுமாக்கும்..! “

“நாம என்னத்தப் பாக்கப் போறோம்.. அதுக என்னா செடியா செத்தையா.. ஆடுமாடு மேயாமப் பாத்துக்க..? பெரியவ சோத்தத் தின்னிட்டு பள்ளிக்கூடம் போயிடுவா.. இந்த சின்னவாண்டுதே இங்கன நமக்கு பேச்சுத் தொணைக்கி இங்கனையே கெடப்பா ..அவ்வ்வளவுதே..”

”சோறுதண்ணீ..”

“அவக ஆத்தா புளித்தாளிச்சு வச்சிட்டுப் போயிருக்கா. அந்த புளிச் சோத்தத் தின்னுப்புட்டுத்தே வகுத்துக்குச் சேரல போலருக்கு அதுபாட்டுக்கு புடுங்கிகிட்டுப் போகுதுபோல..காலைலருந்து நாலஞ்சுதரம் போயிருப்பா போல.. ஏன் டீ..? “

“அய்யோ பாவமே.. “ எங்க வீடு தெரியுமா புள்ள. ஒனக்கு..? ” திவ்யாவைக் கேட்டாள் அந்தப் பெண்.

“ம் தெரியுமே..! “

“தெரியுமா.. “ பெரியம்மா ஆச்சர்யப்பட்டது.

“ந்த.. முத்துமாரி வீட்டுக்கிட்ட்க்க ஒரு குடுச மா. ரி.”  திவ்யா அடையாளமாய்ச் சொன்னது.

“குடுச மாதிரியில்ல குடுசதான்.”  அந்தப் பெண் சிரித்தாள் “முத்துமாரியோட அம்மாதே நானு . ஒங்க அக்கா பள்ளிக்கூடம் விட்டதும் ரெண்டுபெரும் அங்கன வாங்க வீட்ல ரசஞ்சோறு வச்சிருக்கே வந்து தின்னுட்டுப் போங்க. என்னா?‘’

“அக்கா..? “

“ரெண்டுபேருந்தாண்டீ..!“

“யேய் ஓட்டக்குண்டீ ஆய் வருதுன்ன..?  நீ வாட்டுக்கு கடைக்குள்ள இருந்து வச்சிராத..“ பெரியம்மா ஞாபகப் படுத்த திவ்யா பாவாடையைத் தூக்கிப் பிடித்தபடி கிள்ம்பியது.

“எங்க போய்டீ இருக்கப் போற.. ?“

“மந்தைக்கிப் பெரிம்மா..”

“மந்தைக்கா … ஆமா பெரிய மனுசி இவ.. கண்டுக்குவாக.. அங்கயெல்லா  வேணாம் பன்னி கின்னி முட்டித்தள்ளீரும். சும்மா,  இங்கன கடைக்கிட்டக்க சாக்கடைலயே ஒக்காந்து இரு.”

திவ்யா வெட்கத்தோடு ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு சாக்கடையை நோக்கி ஓடியது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top