உள்ளும்வெளியும்

0
(0)

அன்றைக்கு வெயில் சகிக்க முடியவில்லை. அவன் ஆபீசிலிருந்து சாப்பிட வந்திருந்தான். முதுகில் பிசு பிசுத்த சட்டையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டு திரும்பியவன்,

“பாக்கியம்… ஏ… பாக்கியம்… இதென்ன வீடா லட்சணமா… அந்தச் சாக்கை எடுத்து வெளியில் காயப் போட்டான்ன… இந்த டம்ளர் பாரு வாசல்ல கிடக்குது… என்ன புஸ்தகம் அது… எத்தன தடவ எடுத்து வச்சாலும் அறிவுங்கிறதே கிடையாது… அவள எங்கே… பெரியவள…” என்று கேட்டுக் கொண்டே பேண்டை கொடியில் மடித்துப் போட்டான். பாக்கியம் அடுக்களையிலிருந்து வெளியேவந்தவள்,

“அந்தக் கீரை முண்டையக் காணும்… பள்ளிக் கூடம் விட்டு வரவேண்டிய தான்… அவள பாக்கப்போறேன்… இவள பாக்கப் போறேன்னு வீடு வீடா ஏறி இறங்கிட்டு வருவா… கொஞ்சமாவது நெஞ்சில் பயமிருந்தாத்தான சரி… ஒரு நாலணா இருந்தாக் கொடுங்க மோர் வாங்கணும்…” விருட்டெனத் திரும்பியவன்,

“காலயில தான ரெண்டு ரூபா கொடுத்தேன்…”

“ஆமா… யார் இல்லைன்னாக… துட்ட வச்சிகிட்டா ஒங்க கிட்ட கேக்காக… காகறி வாங்கிருக்கு… சின்னவளுக்கு ஒரு சிலேட்டு வாங்கிக் கொடுத்திருக்கு… ஒங்களுக்குத் தெரியாம என்ன சேத்து வச்சிரவா போறேன்…”

கடைசியாக அவள் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ஒனக்கு முதல்ல நெஞ்சில பயமிருந்தால்ல ஓம்பிள்ளைகளுக்கு இருக்கும்… அறிவு கெட்டவளே தேதி என்ன… தேதி என்னன்னு பாத்தியா… இன்னும் பத்து நாளக்கி என்ன பண்ணுவே… காலைல கொடுக்கும் போதே படிச்சிப் படிச்சிச் சொன்னேன்ல… அறிவு எங்கடி போச்சி…”

சட்டைப்பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்ற வைத்தான். மாசக் கடைசியாக ஆக சிகரெட் பீடியாக உருமாறிவிடும்.

“சரி… இப்ப அதுக்கென்ன… அதுக்கு இப்ப ஏன் நாய் மாதிரி மேலேவுழுதீக…”

பீடி மரக்கட்டையாய் இழுக்க இழுக்க புகையே வரவில்லை. பீடியைத் தரையில் தேய்த்து வாசலுக்கு வெளியே வெறுப்புடன் எறிந்தான்.

“ஆமடி… உக்காந்து… குறுக்கொடிய வேல செஞ்சிட்டு வர்றவனுக்கில்ல தெரியும்… அம்மக்களுக்கென்ன தெரியும்… துட்டோட அரும… நாந்தன்னால… என்ன பண்றதுன்னு தெரியாமக் கிடந்து கண்ணு முழி பிதுங்கிகிட்டு வாரேன்… சிறுக்கி முண்டைகளுக்கு கொஞ்சமாச்சும் ஓர்மஇருந்தாத்தான… என்னவோ புருஷன் பெரிய லாண்ட் லார்டு ரிச்சர்டுன்னு நெனப்பு… ஒண்ணொண்ணையும் நாலு நாளைக்காச்சும் ஒண்ணுமில்லாம போடணும்… அப்ப தெரியும்…”

அப்போது தான் தொட்டிலிலிருந்து முழித்த கடைக்குட்டி தலையைக் கீழே தொங்க விட்டுக்கொண்டு அப்பாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைக் கவனிக்கவேயில்லை.

“இப்ப என்னத்துக்க இந்த வரத்து வாறீக… பேசாம ஒங்க சோலியப் பாத்துட்டு கிளம்புங்க… எப்பப் பாத்தாலும் வசவு… வாயில ஒரு நல்ல வார்த்த உண்டா… பெறகெப்படி வீடும் வாசலும் வௌங்கும்… நீங்க முதல்ல சிகரெட் பீடியை விட முடியுதா… இதில ஆத்தா மக்க திங்கறதுனால தான் இவுக சேத்து வைக்கிற சொத்து தேஞ்சி போகுதாம்… என்னமோ சொலவடை சொன்னாப்ல… நல்லா வாயில வருது…”

அவள் தட்டில் சோற்றை எடுத்து வைத்துக் கொண்டே சொன்னாள். அவளிருக்கிற அடுக்களைக் கும்பட்டாலைக்கும் ஒரு சிறு சுவர்தான் அடைப்பு. பட்டாலையில் தான் எல்லா சாமான்களும் அடைந்து கிடந்தன. பட்டாலையை விட்டு இறங்கினால் சின்னதாய் ஒரு ஆள் போகிற மாதிரி வராண்டா. அதில் தான் அவன் சைக்கிளை நிறுத்தியிருந்தான். பட்டாலை நடுவில் கடைக்குட்டிக்கு ஒரு தொட்டில், ரெண்டு மர பீரோ, ஒரு துணிக் கட்டில், இடது பக்க மூலையில் மேஜை நாற்காலி. பக்கத்தில் குத்து விளக்குவைக்கிற மாடப்புறை. மேலே ஸ்வாமிப் படங்கள். அறையே அடைந்து கிடப்பது போல ஒளியிழந்து இருந்தது. இந்த வீட்டுக்கு வாடகை எழுபத்தைந்து ரூபாய். இதற்கு முன்னால் இருந்த வீடு சாக்கடைகளுக்கு நடுவில் இருந்தது. அதற்கு இது பரவாயில்லை. ஆனால், அதை விட வாடகை அதிகம் தான். எல்லாச் செலவுகளையும் குறைக்கணும். இந்த அறிவெல்லாம் இருந்தா இப்படிப் பேசச் சொல்லுமா.

“ஏண்டி சொத்து சேத்து வைக்க ஒங்கப்பன் தஞ்சாவூர் ஏட்டு அள்ளிக் கொடுத்தாம் பாரு… வாயில வருதாம்ல… வாயில… அந்த வாயைக் கிழிச்சா…” என்று பொது வாய்சுவரைப் பார்த்துச் சொன்னான் அவன். அவள் சோற்றுத் தட்டுடன் வெளியே வந்தாள். தட்டை ‘ணங்’கென்று வைத்து விட்டு அவனை ஒரு முறை முறைத்தாள்.

“எங்கய்யாவப் பத்தி ஏம் பேச்செடுக்கீக… அவுக கொடுத்தது போதாதாக்கும்… கொடுத்ததையே கொறையில்லாம வைக்கதுக்கு வக்கில்ல… இன்னம் வேணுமாம்… ஏன்… உங்கப்பா அம்மா அண்ணந் தங்கச்சிகிட்டே போயி… கேட்டு… ஒரு ரூபா… ரொம்ப வேண்டாம்… ஒத்த ரூபா வாங்கிருங்க பாப்பம்… பெரிசா கிழிக்காக… எனக்குத்தான் கிழிக்கத் தெரியும்னு…”

திரும்பியவள் பிடரியில் அடி விழுந்து தடுமாறி அடுக்களைச் சுவரில் முட்டிவிட்டாள். என்ன என்று அறியு முன் இன்னோர் அறை கன்னத்தில் விழுந்தது. குப்பென இருட்டாய்த் தெரிந்தது. அவள் பின் வாங்கி காலைச் சோற்றுத் தட்டிலேயே வைத்து விட்டதால் சூடு பொறுக்க மாட்டாமல் துள்ளி விழுந்தாள்.

“என்ன மயித்துக்கு… இப்ப அடிக்கீக…”

வேதனையும் ஆத்திரமும் பொங்கக் கத்தினாள். அவன் இன்னமும் வெறி யேறி, “நல்லா வாய் துளுத்துப் போச்சி… தேவடியாமுண்டைக்கி…” என்று காலால் இடுப்பில் மிதித்தான்.

“ஐயய்யோ… கொல்றானே… கொல்றானே… சண்டாளப் பய… தேவடியாமகனே… விடுடா…”

அவன் அவள் தலை மயிரைப்பிடித்துக் கர கர வென இழுத்து முதுகில் ஓங்கி ஓங்கிக் குத்தித் தள்ளினான்.

“வாயத் திறக்காத… சிறுக்கி… வாயத் திறக்காத… திறந்தே அப்படியே கொன்னுடுவேன்…”

இந்தச் சத்தத்தில் தொட்டிலில் கிடந்த கடைக்குட்டி கதறினாள். அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த பெரியவள் இதைக் கண்டதும் அப்படியே செய்வதறியாது நின்று விட்டாள். அவளைப் பார்த்ததும்,

“இங்க வாடி… பல வட்டரைச் சிறுக்கி… எங்கே போன… பள்ளிக்கூடம் விட்டா வீட்டுக்குள்ள தான இருக்கணும்… எங்கடி தொலஞ்சி போன…” என்றபடி கன்னத்தில் ஓங்கி அறைந்தான். விழுந்த அடியில் மூலையில் போய் சுருண்டு விழுந்து அப்படியே மயங்கிவிட்டாள். நடு வீட்டில் விழுந்த வாக்கில் உட்கார்ந்திருந்த பாக்கியம் விறு விறு வென்று எழுந்து வெளியே போகப் போனாள். அவன் எட்டி அவள் தலை மயிரைப் பிடித்து,

“எங்கடி போற… துப்புக் கெட்டவளே…”

“கைய எடு… முதல்ல… நான் எங்கயும் போறேன்… எனக்கு ஒரு கட்டைக்கு எங்கயும் சோறு கெடைக்கும்… இப்படிக் கெடந்து தெனமும் சித்ரவதைப்பட வேண்டாம்… அதுவும் உன்ன மாதிரி மிருகத்துக் கிட்ட…”

சொல்லி முடிக்கு முன்னர் மூக்கோடு சேர்த்து அடி விழுந்தது. அலறினாள். அவனைப் பிடித்துத் தள்ளினாள். கையைக் கடித்தாள். அவன் கடைசியில் சோர்ந்து போய்,

“போடி, தேவடியாச் சிறுக்கி… வெளியில போயி தேவடியாத்தனம் பண்ணு… ஒனக்கு அதுதான தொழில்… கல்யாணத்துக்கு முன்னால ஓங்காத்தா அப்பிடித்தான் ஒன்ன வச்சிப் பொழச்சா… இல்லாட்டா அப்பிடி ஒருத்தன் லட்டர் போடுவானா… சிறுக்கிப் புள்ள… ஒன்னயும் வச்சி வாழுறன் பாரு… என்னச் சொல்லணும்… போடி… வெளியே போடி… நானுமாச்சி… எம்பிள்ளகளுமாச்சி… தாலிய அறுத்துக் கொடுத்துட்டு போய்த் தொலை… நீ தொலஞ்சாத் தான் நிம்மதி…”

“யாரு தேவடியாத்தனம் பண்ணினா, ஒங்கக்கா பண்ணிருப்பா… ஒங்காத்தா பண்ணிருப்பா… நீ எதுக்கு மாசா மாசம் சங்கரங்கோவில் போய்ட்டு வாரேன்னு தெரியாது… ஊரெல்லாம் எச்சிக்கலை கணக்கா பெறக்கறது தெரியாது… நீ தான் தேவடியாத்தனம் பண்ற…”

இன்னும் அடி விழுந்தது. ரோட்டில் கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. யாரும் எதுவும் செய்ய முன் வரவில்லை. ஆனால், எல்லோர் முகத்திலும் பரிதாபம் மிகுந்திருந்தது.

அவள் திமிறிக் கொண்டு வெளியே வரப்போனாள். அவன் அவள் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளினான். தள்ளியதில் தாலிக் கயிறு கையில் கிடைத்து அறுந்தது. தாலிப் பிள்ளையாரும், சிறகுகளும் சிதறின. அவன் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் கோபமாய் முறைத்துக் கொண்டே வாசல் கதவை ஓங்கிச் சாத்தினான். அவள் அதற்குள் டிரங்குப் பெட்டிக்குள் இருந்த சேலை, சட்டை எல்லாவற்றையும் ஒரு பையில் திணித்துக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி அழுது அழுது ஓய்ந்து அப்படியே தலையைத் தொங்க விட்டவாறே தூங்கிப் போயிருந்தாள். அவன் தொட்டிலுக்குள் அவளை நிமிர்த்திப் போட்டான். தூக்கத்திலும் ஏங்கிக் கொண்டிருந்தாள். பெரியவள் இப்போது தான் நினைவு வந்து லேசாய் கண்ணைத் திறந்து பார்த்தாள். வீடெல்லாம் சோறு சிந்தி விதைத்திருந்தது. தாறு மாறாய் சாமான்கள் இரைந்து கிடந்தன. அவள் அப்பாவைப் பார்த்ததும் மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு அப்படியே கிடந்துவிட்டாள். அவன் கதவருகில் நின்று கொண்டிருந்தான். அவள் கையில் பையுடன் நேரே வந்தாள்.

“எங்கே போறே…”

“எங்கேயும் போறேன்…”

படாரென அவள் கையிலிருந்த பையைப் பிடுங்கிக் கதவைத் திறந்து ரோட்டில் விட்டெறிந்தான். அவளையும் பிடித்து வெளியே தள்ளினான்.

“இனிமே வந்துராதே… சொல்லிட்டேன்…”

ரோட்டில் போய்க் கொண்டிருந்தவர் திகைத்துத் திரும்பினார். அவள் கோலத்தைப் பார்த்ததும் பேசாமல் போய்விட்டார். அவள் சிதறிய துணிகளை பைக்குள் திணித்து பின் கொஞ்ச நேரம் அப்படியே நின்றாள். அவன் படாரென கதவைச் சாத்திக் கொண்டான்.

கொஞ்ச நேரத்தில், பெரியவள் கதவைத் திறந்து கொண்டு பைக்கட்டுடன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினவள் எதிரே இருக்கிற சர்வேயர் வீட்டுத் திண்ணையில் அம்மா உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு பேசாமல் போய்விட்டாள். சின்னவள் பள்ளிக்கூடத்திலேயே சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டாள் போல. வரவேயில்லை. பின்னும் சிறிது நேரங்கழித்து அவன் கதவை விரியத் திறந்து கொண்டு சைக்கிளை எடுத்து வெளியில் வைத்தவன், அவளைப் பார்த்தான். கதவை லேசாய் ஓரஞ் சரித்து வைத்துவிட்டு சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துக்கொண்டே,

“ஏய்… ஒழுங்கா வீட்ல போய் இரீ… இல்ல எங்கயாவது கண் காணாம போயிரு… நான் சாயந்திரம் வரும் போது இந்த இடத்தில் பார்த்தேன்… இங்கனேயே சமாதி வச்சிடுவேன்… சொல்லிட்டன்…”

அவள் யாருக்கோ சொல்வது போல முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் போய்விட்டான்.

சாயந்திரம் வெயில் குறைந்து காற்று வீசியது. அவன் கையில் பீடியுடன் சைக்கிளை உருட்டிக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான். அப்பொழுதும் அவள் அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தாள். நமுத்தலான சிரிப்புடன் அவள் முகத்தை ஆராயும் பாவனையில் பார்த்தான். அவள் அவனைப் பார்த்ததும் வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் உள்ளே போனான். கடைக்குட்டி இப்போதும் தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், முகமெல்லாம் கழுவி சீவிச் சிங்காரித்து விட்டிருந்தது. அவன் ஏதும் பேசாமல் வாசல் கதவை விரியத் திறந்தான். காப்பி போட்டான். பெரியவளும், சின்னவளும் டியூசன் முடித்து வந்தார்கள். இரண்டு பேரிடமும் காப்பியைக் கொடுத்துவிட்டு,

“ஒங்காத்தாளுக்கு காப்பி வேணுமான்னு கேளுட்டி”என்று சத்தமாய்ச் சொன்னான். மெல்லிய சிரிப்பு இழையோட பெரியவள் மெல்ல இறங்கி அம்மாவிடம் போய்,

“யெம்மா காப்பி வேணுமா…”

“நீயும் ஒங்கப்பாவுமே குடிங்க…”

பெரியவள் வீட்டிற்குள் வந்துவிட்டாள். காப்பி குடித்த ஏனங்களையெல்லாம் அங்கணக் குழியில் போட்டு கழுவியெடுத்துவிட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். சின்னவள் பாடப் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அப்பா அம்மாவுக்கு நேர் எதிரே வீட்டிற்குள் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு பெரியவளும் பேசாமல் உட்கார்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தாள். வீட்டுப் பாடமெல்லாம் எழுதி முடித்ததும், எழுந்து சின்னவளுக்கும் அவளுக்குமாய் சோறு வைத்து சாப்பிட்டுவிட்டு சரித்திர பூகோளப் புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். சின்னவள் படுத்து விட்டாள். அவளுக்கும் தூக்கம் தூக்கமாய் வந்தது. அப்படியே புஸ்தகத்துடன் தூங்கிவிட்டாள்.

அவன் யோசனையிலிருந்து திரும்பிய போது பெரியவளும் சின்னவளும் தூங்கியிருந்தனர். கடைக் குட்டி மட்டும் தனக்குத்தானே ஏதோ நினைத்துக்கொண்டே தொட்டிலுக்குள்ளேயே சிரித்துக் கொண்டிருந்தாள். மணியைப் பார்த்தான். மெல்ல எழுந்து ரோட்டுக்கு வந்தான். ரோட்டில் ஒரு சுடு குஞ்சி கூட கிடையாது. அவள் இன்னும் அந்தத் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். அவன் அவளருகில் வந்தான்.

“ஏய்… பாக்கியம்… ஒன்னத்தான வீட்டுக்குள்ள… வா…”

“வரலை… நீங்க… போங்க…”

“இதான வேண்டாங்கிறது… பேசாம எந்திரிச்சி வாம்மா…”

“நான் எப்படியும் தொலையுறேன்… நீங்களும் ஒங்க பிள்ளைகளுமாச்சி… நல்லா இருங்க…”

“சரிநாங்க… நல்லா இருக்கிறது இருக்கட்டும்… வீட்டுக்கு… வா…” என்றபடியே கையைப் பிடித்து இழுத்தான். அவள் கையை உதறினாள். கொஞ்ச நேரம் அப்படியே நின்றவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு திடீரென அவள் கக்கத்தில் கையைக் கொடுத்து பரபரவென இழுத்துக் கொண்டு வந்து பட்டாலையில் உட்காரவைத்தான். பின் விறு விறுவென வந்து பையை எடுத்துக் கொண்டு போனான். வெளி வாசலை நாதாங்கி போட்டு விட்டு உள்ளே வந்து பட்டாலை கதவைத் தாழ்ப்பாள் போடும் போது மெல்லச் சொன்னான்.

“நான்… என்ன சொல்லிட்டேன்னு நீ அப்படி பேசுதியே… மனுசனுக்கு ஆத்திரம் வருமா வராதா… தன்னால கிடந்து நான் படுறபாடு நாய்ப்பாடா இருக்கு… அந்த நேரத்தில் வந்து நீ துட்டு துட்டுன்னு நச்சரிச்சதும் கோவம் வந்திருச்சி… சரி சரி… எந்திரிச்சி சாப்பிடு…”

இளகிய குரலில் மன்னிப்பு கேட்கும் பாவனையில் சொன்னான். அவளும் தலை மயிரை ஒதுக்கிக் கொண்டை போட்டுக் கொண்டே,

“நானும் என்ன எனக்கா கேக்கேன்… ஒங்களுக்கும், பிள்ளைகளுக்கும் செய்யத்தான கேக்கேன்… அதுக்கு… அப்பிடிப் பேசுதீகளே… சரி தாலிச்சிறகெல்லாம் எடுத்துவச்சீகளா…”

“ம்… எடுத்துவச்சிட்டன்… சாப்பிடலியா நீ…”

“வேண்டாம்… சாயந்திரம் தான் சாப்பிட்டேன்…”

அவன் விளக்கை அணைத்தான். அது வரைக்கும், அப்புறமும் ரொம்ப நேரம் இருட்டுக்குள் கூட ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக் கூச்சப்பட்டுக் கொண்டு இருந்தனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top