உளச்சல்

3.9
(55)

ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள் ரம்லத். எதிர் வீட்டு மைமூன் அக்கா வளர்க்கும் சேவல் “கொக்கரக்கோ..” என்று கூவி மொஹல்லாவாசிகளை  துயில் எழுப்பிக்கொண்டிருந்தது. ஸுபுகு தொழுகை நேரமாகிவிட்டதை உணர்ந்து எழுந்து உட்கார்ந்தாள். ‘கட கட..’ வென்று மெல்லிய சத்தத்துடன் மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. முஸ்தபா வந்ததும் உம்மாவுக்கு முதலில் ஒரு புதுப்  பேனை வாங்கிக் கொடுக்கச்சொல்லணும் என்று நினைத்துக் கொண்டவளாக உம்மா பக்கம் பார்வையைத் திருப்பினாள். பக்கத்து கட்டிலில், உம்மா ஒருக்கழித்துப் படுத்திருந்தது. அதிகாலை குளிருக்கு போர்வையை இன்னும் இழுத்து மூடிக்கொண்டு இந்தப்பக்கம் உம்மா திரும்பிப் படுப்பதைப் பார்த்தாள் ரம்லத். பாவம் உம்மா! எத்தனை ஆண்டுகளாக இப்படித் தனிமையிலேயே காலம் கழிக்கிறது. உம்மா மீதும்  இரக்கம் சுரந்தது.

இரவுகளில் தூங்கும்போது மட்டுந்தான் அவளின் மனம் எந்த நினைவுகளும் இல்லாமல் கொஞ்சம் ஓய்வெடுக்கிறது. இப்போது அதுவும்  கெட்டுவிட்டது ! தூக்கம் பிடிக்கவே நீண்ட நேரம் புரண்டு கொண்டே கிடக்க வேண்டியிருக்கு !. என்னாகுமோ…ஏதாகுமோனு ஒருவித கலக்கம் அவளுக்குள் அலைந்து கொண்டேயிருக்கிறது. குடும்ப வாழ்க்கை நசிந்து விடுமோ என்கிற அச்சம் அவளைத் தின்று கொண்டிருக்கிறது! நிம்மதியாக தூங்கக் கூட விடாமல் இம்சிக்கிறது. சின்னச் சின்ன சத்தத்துக்கெல்லாம் திடுக் திடுக்கென்று முழிப்பு வந்து விடுகிறது. பிறகு கண்ட கண்ட நினைவுகள் அலைகழிக்க கண்ணீருடன் விழித்துக்கொண்டே கிடக்க வேண்டியிருக்கு !

இன்னும் ஒரு மாதம்தான் முஸ்தபா வந்துவிடுவான் என்று நிலைகொள்ளாத மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தவளுக்கு முஸ்தபாவிடமிருந்து திடீரென சில நாட்களாக எந்தத் தகவலும் இல்லாமல் போனது ரம்லத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தினம் தவறாமல் போன் செய்து கொஞ்சிப் பேசுபவனுக்கு என்னாகிவிட்டது. என்னதான் ஓய் ஒழிச்சல் இல்லாத வேலை அதிகம் இருந்தாலும் தூங்கப் போகும்போது கூடவா ஒரு அஞ்சு நிமிஷம் பொண்டாட்டியுடன் ஆசையாகப் பேச நேரம் இருக்காது…!         அழுகை முட்டிக்கொண்டு வரும். அடுப்படிக்குச் சென்று முகம் பொத்திக்கொண்டு அழுவாள். எந்நேரமும் கணவனை நினைத்து நினைத்து இரவுகளில் அழுது கொண்டு யுகமாய் கழியும் நாட்களை எண்ணிக்கொண்டு மூன்று வருடமாக தவித்துக்கொண்டிருக்கும் தவிப்பு அவளுக்குத்தான் தெரியும்.

சென்ற முறை இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பாகவே லீவு போட்டு ஓடோடி வந்தவன் இப்போது லீவு கிடைக்கவில்லை என்று வருவதை தள்ளிப் போட்டுவிட்டான். ரம்லத் மிகவும் ஏமாந்து போனாள். போனில் அழுது புலம்பினாள். ஒரு ஆறுதல் கூட சொல்லாமல்  “சரி சரி..” என்று உடனே போனை கட் செய்துவிட்டான் முஸ்தபா. போனில் மணிக்கணக்காக உருகுபவனுக்கு இப்போது என்னாகிவிட்டது..!  ரம்லத் மிகவும் வருத்தமடைந்தாள். சில மாதங்களாகவே இந்த மாற்றத்தை அவள்  கவனித்துதான்  வருகிறாள். ஒரு வேளை நான் வருத்தம் அடைவேன் என்று இப்படிச் செய்கிறாராக இருக்கும் என்று அவளாகவே எண்ணிக்கொண்டு ஆறுதல் அடைந்தாள்.

சென்ற முறை ஒத்தப்பாலம் சென்றபோது மஜீத்தான் அவளிடம் முஸ்தபா ஊருக்கு வர ரெடியாயிட்டிருக்கான் என்ற தகவலைச் சொன்னான்.  மஜீத் அப்போது விடுமுறையில் வந்திருந்தான். அந்த செய்தியைக் கேட்டவுடன் ரம்லத் சந்தோசத்தில் திக்குமுக்காடிப் போனாள்.  “உண்மையாவா மச்சான்.?” என்று பலமுறை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தாள். இதை ஏன் அவர் என்னிடம் போனில் பேசும் போது சொல்லவில்லை..! என்ற கேள்வி அவளுக்குள் எழுந்து அடங்கியது. ஒரு வேளை விளையாட்டுக்காக மஜீத் பொய் சொல்கிறரோ… சந்தேகம் அடைந்தாள். ஆனால் அவன் உறுதியாகச் சொல்லவே அவளுக்குள் கொஞ்சம் நெருடியது. இன்னிக்கு நைட் முஸ்தபாவிடம் பேசும்போது கேட்கலாம் என்று சமாதானம் அடைந்தாள். ஒரு வேளை என்னிடம் சொல்லாமல் ‘நாளைக்கு கிளம்பி வர்றேன்னு..’ திடுமென எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாராக இருக்கும் என்றும் நினைத்துக் கொண்டு தினம் தினம் முஸ்தபாவின் போனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். மனக் கலக்கத்தை கொஞ்சம் தள்ளி வைத்து, காலைக் கடன்களை முடித்து ஒளுவெடுத்து வந்து, முன் அறைக்கு வந்து விளைக்கைப் போட்டாள் ரம்லத். வெளியே இன்னும் இருட்டு மிச்சமிருந்தது. தொழுகை விரிப்பை எடுத்துபோட்டு தொழ ஆரம்பித்தாள். ஒவ்வொரு தொழுகையின் போதும் தினம் தினம் இறைவனிடம் மன்றாடி துஆ கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள்.

மஜீத் மச்சான் மட்டும் எப்படி வருஷம் தவறாம லீவுல வந்துடுறார். சிலசமயம் ஆறு மாசத்துக்குள்ளாகவே வந்துடுறார். இவருக்கு மட்டும் எப்படி அடிக்கடி லீவு கிடைக்குது…? மஜீத் வரும்போதெல்லாம் அவளுக்குள் இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப எழும். முஸ்தபாவிடம் இது பற்றி ஒரு முறை கேட்டபோது, “அவன் சொந்தக் கடை போட்டிருக்கான். அதனால அவன் அரபி     அவுனுக்கு லீவு குடுப்பாரு..” என்றான்.  ஒவ்வொரு முறையும் இவனிடம்தான் முஸ்தபா பணத்தையும், பொருட்களையும் கொடுத்து அனுப்புவான். மஜீத் ஊருக்கு வந்தவுடன் அவளுக்கு தகவல் வரும். மறு நாள் ஒத்தப்பாலத்துக்கு மாமியுடன் கிளம்பிவிடுவாள். சில சமயம் உம்மாவும் கூட வரும். முஸ்தபா ரம்லத்தின் மாமா மகன். இவன் மூலம்தான் முஸ்தபாவும் சவுதிக்குச் செறிருந்தான்.

அற்ப சம்பளத்தில் இங்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த முஸ்தபாவை திருமணத்திற்குப் பிறகு மஜீதை வற்புறுத்தி சவுதிக்கு அழைத்துப் போக வைத்தார்கள். விருப்பம் இல்லாமல்தான் சென்றான் முஸ்தபா.! மனைவியையும், குடும்பத்தையும் இங்கே தவிக்கவிட்டு கடல் கடந்து போய் சம்பாதிப்பதில் முஸ்தபாவுக்கு விருப்பம் இல்லை. கேரளாவில் உள்ள அவன் உறவினர்கள் எல்லாம் துபாய்,  சவுதி என்று வளைகுடா நாடுகளில்தான் வேலை செய்கிறார்கள். பெரிய பெரிய வீடுகள், கார்கள் என்று அவர்கள் எல்லாம் பணக்காரர்கள் ஆகிப்போனதில் இவனுக்கு கொஞ்சம் பொறாமையும் தானும் அவர்களைப் போல சம்பாதிக்க வேண்டும் என்கிற சபலமும் ஏற்பட்டது. அவர்களிடம் சவுதிக்கு அழைத்துப் போகும்படி தனது விருப்பத்தைச் சொன்னான். விசாவுக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லி, பிறகு பார்க்கலாம்… பார்க்கலாம் என்று தட்டிக் கழித்தார்கள். எனவே ஏஜெண்ட் மூலம் பணம் கொடுத்து ரியாத் செல்ல முயற்சித்தான். மெடிக்கல் டெஸ்ட் வரை எல்லாம் ஓகேவானது. கடைசி நேரத்தில் விசா கேன்சல் ஆகிவிட்டது என்று அவனது வெளிநாட்டுப் பயணம் கைகூடாமல் போனது. கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தான்.

சவுதி வந்த புதிதில் தானும் பணக்காரன் ஆகிவிட்ட உணர்வு எழுந்து மகிழ்ச்சியடைந்தான். பிறகுதான் வேலைப் பளுவின் கஷ்டம் புரிந்தது. ஓயாத உழைப்பு அவனை சோர்வடையச் செய்தது! திருமணம் ஆன கையோடு மனைவியைப் பிரிந்து வந்த சோகமும் அவனை வருத்தமடையச் செய்தது. இரவுகளில் ரம்லத்துடன் உருகி உருகி பேசிக்கொண்டிருந்தான். இரண்டாவது வருடத்தில் விடுப்பு பெற்று ஊருக்கு வந்து அந்த மூன்று மாத காலமும் ரம்லத்தை விட்டுப் பிரியாமல் கொஞ்சிக் கொண்டு திரிந்தான்.  மறுபடி சவுதி வந்த பிறகும் சில மாதங்கள் போனில் உருகிக்கொண்டுதான் இருந்தான் அறை நண்பனின் விஷயம் தெரியும் வரை ! சோகமாகத் திரிந்து கொண்டிருந்தார். அறை நண்பன் சம்சுதீன் மூலமாக இன்னொரு நண்பனான  தினேஷின் மனைவி பற்றிய விவரம் தெரிய வந்து அதிர்ச்சியடைந்து போனான். ஊரிலிருந்து தினேஷின் மனைவி பற்றி அரசல் புரசலாக செய்தி வந்து கொண்டிருந்தது. பொறாமையால் வீண் புரளி கிளப்புகிறார்கள் என்று அந்தச் செய்தியை நம்பாமல் புறக்கணித்தே வந்தான் தினேஷ். விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் புரளியல்ல உண்மை என்று தெரிந்து அதிர்ந்து போனான்.

இங்கே திரும்பி வந்து. அறையில் ஒருவரும் இல்லாத சமயம் சம்சுவிடம் ”என்ன குறை வைத்தேன் அவளுக்கு..?” என்று அழுது புலம்பியிருக்கிறான். சம்சுதீன் ஒருவாறு அவனைத் தேற்றி மீட்டெடுத்திருக்கிறான். எல்லாம் இந்த பணம் செய்யும் வேலை. பணப்பிரச்சனையால் ரொம்பகாலம் ஊருக்குப் போகாததன் விளைவால் வந்த வினை என்பது புரிந்தது அவனுக்கு. அதன் பிறகு கொஞ்ச காலம் சோகமாகத் திரிய ஆரம்பித்தான். ஊருக்குப் போவதையே மறந்து போனான். இன்னொரு நண்பனுக்கும் இதே போலவே ஆன சங்கதி கேட்டு ஆடிப்போனான் முஸ்தபா. இன்னொருவன் ஊருக்குப் போனபோது வேறொருவன் மனைவியை அனுபவித்த கதையை சாகசம் செய்ததற்கு ஒப்ப விவரித்துச் சொன்னான். அதைக் சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்த காதர், இங்கே அரபி வீட்டில் வேலை செய்யும் நைஜீரியப் பெண்ணை தான் பயன்படுத்திக் கொள்வதாக தம்பட்டம் அடித்து சிரித்தான். என்ன கர்மம் இது! சுய ஒழுக்கத்துடன் வாழ்வதை இவர்கள் பரிகாசம் செய்கிறார்களா..? ச்சை! தவறு செய்வதை– குற்றம் செய்வதை சாகசம் போல பெருமை பொங்க சொல்கிறார்களே..! ஏன் இப்படி எல்லோருமே சந்தர்ப்பம் கிடைத்தால் குற்றம் செய்ய தயாராக இருக்கிறார்கள்..? சுய ஒழுக்கம் என்பது தேவையற்றதாகி விட்டதா இன்று…? வெறுப்பாக உணர்ந்தான் முஸ்தபா. இந்த மாதிரியான செய்திகள் அடிக்கடி அவன் காதில் விழுந்து கொண்டிருந்தது. கேட்கவே அசிங்கமாக இருந்தது. ‘அவன் ஒயிப் அப்பிடியாமா …இவன் ஒய்ப் இப்பிடியாமா….’ இப்படியான செய்திகள் அடிக்கடி இங்கே அறைவாசிகளிடம் கேலியும்,கிண்டலுமாக  தெறித்துச் சிதறும். இதில் என்ன கேலியும் , கிண்டலும் இருக்கு..? எவ்வளவு சோகமான- அவமானம் இது  ச்சை….! நொறுங்கிப் போவான் முஸ்தபா..

அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு வித பயம் அப்ப ஆரம்பித்தது! பணம் சம்பாதிக்க வேண்டி பெண்களைத் தனியே விட்டு வரும் ஆபத்து அவனைப்  பிசைந்து கொண்டேயிருந்தது. ‘கொடுத்து விடும் பொருளயும், பணத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டி ஒத்தப்பாலம் வேறு ரம்லத் சென்று வருகிறாள். அவள் மாமா மகன் மஜீத். ஏற்கனவே ரம்லத்தை கட்டும் ஆசையில் இருந்தவன் வேற….மாசத்துல பாதி நாளு அவ உம்மா வீட்டுல போயி உக்காந்துக்குறா…! பக்கத்துல இரிக்கிற முபாரக் எப்பப் பாத்தாலும் பொம்பளைங்க கூடவே பேசித் திரியறவன் வேற. அதும் ரம்லத்தக் கண்டா நேரம் காலம் இல்லாமப் பேசிட்டே நிப்பான். நா வேற வருசக் கணக்கா இங்க கெடக்கேன். ரம்லத் யதார்த்தமான சுபாவம் கொண்டவள். யாரையும் எளிதில் நம்பிவிடுவாள். உருக்கமாக யார் எதைச் சொன்னாலும் பரிதாபம் கொள்ளும் குணம் அவளுக்கு! எவனாவது எதையாச்சும் சொல்லி ஏமாத்தி வீழ்த்தி விட்டால் என்னாவது ? இவையெல்லாம்தான் அவனை பயம் கொள்ளச் செய்தது. இங்கே இவுனுங்க சொல்றமாதிரி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப்போச்சுனா….ச்சை!  திடுமென அவனுக்குள் இப்படியான தேவையில்லாத எண்ணங்கள் ஓட ஆரம்பிக்க, தன் தலையை சுவரில் ஓங்கி முட்டிக் கொள்ளவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ச்சே! கண்ட கதைகளையும் கேட்டு நான் ஏன் என் மனைவியை சந்தேகிக்கிறேன்…!   என்ன ஒரு அற்பத்தனமான எண்ணம் ஓடுகிறது..! மனதை கட்டுப்படுத்த எவ்வளவோ  முயற்சித்தான். அதுபாட்டுக்கு தறிகெட்டுப் போய் கடிவாளம் பூட்டாத குதிரை போல அலைபாய்ந்து கொண்டிருந்தது. இனி ஒத்தப்பாலத்துக்கு ரம்லத்தைப் போகச் சொல்லக்கூடாது. முதல் காரியமாக மஜீத்திடம் பணம் கொடுத்து விடுவதை நிறுத்தி விடவேண்டும் என்றும் எண்ணிக் கொண்டான்.

என்னதான் மறக்க முயற்சித்தாலும் வேலையின் போதும் கூட இந்த நினைவுகள் அடிக்கடி அவனை இம்சித்துக்கொண்டே இருக்க, பித்துப்பிடித்தவன் போல ஆனான் முஸ்தபா. இந்த மயிரு சம்பளத்துக்காக நாடு விட்டு நாடு வந்து நாய் படாதபாடு பட்டும் நிம்மதியாயிருக்க முடியலையே…!  பேசாம ஊருக்கே போயிரலாம்… என நினைத்துக் கொள்வான்.  அங்கே போய் என்ன வேலை செய்வது.? அங்கே ஒண்ணும் சரியில்லை என்றுதானே இங்கே வந்தோம்..! என்ற எண்ணம் வரும்… ச்சை ! என்ன மயிரு வாழ்க்கை இது..! அவனுக்கு வெறுப்புதான் மிஞ்சியது. உடனடியாக ஊருக்குச் செல்ல மனம் பரபரத்தது. இரண்டு மூன்று முறை லீவுக்கு முயற்சித்தான். அரபி லீவு கொடுக்கவில்லை. அதன் பிறகு ரம்லத்துடன் பேசும் போதெல்லாம் ஒரு வித இறுக்கம் அவனைத் தொற்றிக் கொள்வதை உணர்ந்தான். முன்புபோல ரம்லத்துடன் ஆவலுடன் பேசமுடியாமல் எதுவோ அவனைத் தடுத்தது. எவ்வளவோ முயற்சித்தும் சகஜ நிலைக்கு அவனால் வரமுடியவில்லை! என்னாகிவிட்டது எனக்கு….! குற்றம் செய்தவனைப் போல தவிக்க ஆரம்பித்தான் முஸ்தபா. .

ஒரு மாசத்துக்கும் மேலாகிவிட்டது. முஸ்தபாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை ! கொஞ்ச நாட்களாகவே ரம்லத் பயந்து கொண்டிருந்தாள். இந்த தலாக் பிரச்சனைதான் அவளை பயமுற செய்துகொண்டிருந்தது! கேரளாவில் உள்ள ஒரு உறவினர் பெண்ணை துபாயிலிருந்து அவள் கணவன் தலாக் சொல்லிவிட்டான் என்று பிரச்சனையானது. அதை அவள் வீட்டில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதெப்படி போனில் தலாக் சொல்லலாம். மார்க்கம் இப்படியெல்லாம் வழியுறுத்தவில்லையே…… இதையெல்லாம் அனுமதிக்கவில்லையே என்று குதித்தார்கள். அந்த ஊர் ஜமாத்தார் அதை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தார்கள். அந்தப் பெண் குமுறி அழுததை யாரும் பொருட்படுத்தவில்லை. அவளைப் பெற்றவர்கள் இடிந்து போனார்கள். மருமகனை துபாய்க்கு அனுப்ப வேண்டி அவர்கள் செய்த செலவெல்லாம் வீணாய்ப் போனது. மனைவியின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி அவன் சுலபமாக தலாக் கொடுத்து விட்டதையும் அதை ஜமாஅத் ஏற்றுக் கொண்டதையும் பெண்ணின் குடும்பத்தார்களால் ஜீரணிக்க முடியவில்லை. “இருந்தாலும்..இருக்கும்..” என்று அவளை ஊர் தூற்றியது.

இது போல இரண்டு மூன்று சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்க நிலை குலைந்து போனாள் ரம்லத். சிலர் வசதி வாய்பிற்காக வேறு பெண்ணைக் கட்ட வேண்டி முதல் மனைவியை பொய்யான காரணம் சொல்லி தலாக் விடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி வேண்டுமென்றே தலாக் கொடுப்பதுதான் அதிகமாக இருந்தது. இந்த சமூகம் அதை அங்கீகரித்துக் கொண்டிருந்ததுதான் வேதனையின் உச்சம்!

“என்னாயிருச்சு இந்த ஆம்பிளைகளுக்கு! சம்பாதிக்கப் போன இடத்தில் பெண்கள் தொடர்பு ஏதாச்சும் கிட்டியிருக்குமோ…அதனாலத்தா  அங்கிருந்தபடியே இப்டி தலாக் குடுக்குறாங்களோ என்னமோ….!” படிப்பறிவில்லாத அவளுக்குள் இப்படியான எண்ணங்கள் மேலும் பயத்தைக் கொடுத்தது. ‘எல்லா ஆம்பிளைங்களும் இப்பிடி ஒண்ணுபோலவே இரிக்காங்களே..!’ முஸ்தபா கூட முன்பு போல இல்லை. போனில் பேசுவதையே குறைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு வருடமாகியும் இன்னும் லீவில் வராமல் இருக்கார். அவளுக்குள் மெல்ல மெல்ல பயம் கூட்டிக்கொண்டிருந்தது.! போதாதற்கு இப்போது மாசமாக வேறு இருக்கிறாள். உம்மாவிடம் போய் சொல்லி ஆழ வேண்டும் போலிருந்தது. மாமி வீட்டில் ரெண்டு மாசம். உம்மா வீட்டில் ஒரு மாசம் என்று அவள் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.  ‘’அல்லாஹ் நாயனே..!” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் ரம்லத். இருந்தாலும் அவளுக்குள் தன் கணவன் மீது அதிகப்படியான நம்பிக்கை இருந்தது. ‘வேலைப்பளு அதிகம் இரிக்கும் போல…அதா இப்பவெல்லாம் அதிகமா பேச முடியலையாயிரிக்கும்…” இப்படியாக சமாதானம் அடைந்துகொள்வாள்.

“காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல் ஒரு கலக்கமும் தோணுதடி…
வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க உந்தன் விரலுக்கு சுளுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம்  வழி விட்டு அனுப்பி  வைப்பேன்…”
அவனுக்கு மிகப் பிடித்த காதலன் படத்தின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்து அவளை இப்போது கலங்கடித்தது.      

திடுமென ஒரு நாள் முஸ்தபாவிடமிருந்து போன் வர சந்தோஷம் பொங்க ஆசையுடன் போனை எடுத்தாள் ரம்லத். அப்போது அவள் உம்மா வீட்டில் இருந்தாள்.  ரொம்ப நாட்களுக்குப் பிறகு போன் வருகிறது. கணவன்  சந்தோஷம் பொங்க கொஞ்சிக் குழாவுவான்.ஊருக்கு  வரும் தகவலைச் சொல்லுவான் என்ற ஆசையோடு போனை காதில் வைத்து ‘சலாம்’ சொன்னாள். பதில் சலாம் அவனிடமிருந்து வரவில்லை. எடுத்ததும்,  “இனி நீயி ஒத்தப்பாலத்துக்குப் போகண்டாம். எங்கும்மா பேர்ல பாங்க் அக்கவுண்ட் ஒண்ணு ஆரம்பிக்கச் சொல்லியிரிக்கேன். இனி அதுலதா பணம் போடுவேன்….என்ன..?” என்றான். அதிர்ச்சியில் அவளுக்கு பேச்சு வரவில்லை. பதில் கொடுக்கத் தோன்றாமல் போனை காதில் வைத்தபடி அப்படியே பிரமை பிடித்தவளாக நின்றிருந்தாள். அடுத்த அஸ்திரத்தை வீசினான் முஸ்தபா. “இனி நீ நம்ம வீட்டுலதா இருக்கணும். உங்கும்மா வீட்டுக்கெல்லாம் இனிமே வரக்கூடாது. நாளைக்கே நீ உங்கும்மாகிட்டச் சொல்லி நம்ம வீட்டுல கொண்டு உடச்சொல்லு என்ன..?” அதட்டலுடன் இருந்தது அவன் உத்தரவு. இதற்கு என்ன மறு மொழி சொல்வது என்றே அவளுக்கு எதுவும் தோன்றவில்லை. “நாஞ்சொல்றது காதுல விழுதா. என்ன..?” என்ற அடுத்த அதட்டல் அவளை நிலைகுலையச் செய்தது. அழுகை பொத்துக்கொண்டு  கொண்டு வந்தது. வலது கையால் மெல்லக் கண்களைத் துடைத்துக்கொண்ட  ரம்லத், ’என்னங்க சொல்றீங்க..?” என்றாள். “இவ்வளவு நேரம் என்ன இங்கிலீஷ்லயா சொலிட்டிரிக்கேன். தமிழ்லதான சொல்றேன்…. அப்பறமென்ன..?” என்றான் வெடுக்கென்று. ‘என்னாகிவிட்டது இவுருக்கு..! நா பயந்த மாதிரியே நடந்துருமோ… அதா இப்பிடியெல்லாம் பேசுறாரோ…..’ மனதை கொஞ்சம் திடப்படுத்திக் கொண்டு, ”எப்ப ஊருக்கு வர்ரீங்க..?” என்றாள் ஆசை பொங்க. “லீவு கிடைக்கும் போது வருவேன்..நாளைக்கே நீ வீட்டுக்கு போயிரு என்ன..?” என்று சொல்லிவிட்டு உடனே போனை கட் செய்தான் முஸ்தபா. “யாருளா…..மருமொவனா..?” என்றபடியே உம்மா அடுப்படியிலிருந்து வந்தது. கண்களைத் துடைத்தவாறு தலையாட்டினாள் ரம்லத். “ஊருக்கு எப்ப வாராறாமா..?” உம்மா சந்தோஷத்துடன் கேட்டது. “லீவு கெடைக்கலனு சொல்லுதும்மா…” என்றாள் வருத்தத்துடன். ‘‘அதுக்குத்தா அழுவுரையாக்கும்..?” என்று திருப்பிக் கேட்டு விட்டு, ”லீவு கெடைக்காததுக்கு மருமவன் என்ன செய்வாரு..?’’ என்றது உம்மா.  உம்மாவிடம் கணவன் சொன்னதை எப்படிச் சொல்வது….? வெறுமனே தலையை ஆட்டினாள் ரம்லத். நாளைக்கு அவுங்க வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்காரே… இதை உம்மாகிட்டச் சொல்லித்தானே ஆகணும். பொங்கிவரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்ட ரம்லத்,  “உம்மா ! இனிமே நா இங்க வரக்கூடாதாம். நாளைக்கே அவுங்கூட்டுக்கு என்னப் போவச் சொல்றாருமா….” என்றாள்.                      “என்னவாம்.?” என்றது உம்மா.  “தெரீலமா. அப்பறம் அவுங்கும்மாக்குத்தா இனி பணம் அனுப்புவாராம்..” “என்னளா சொல்றே..?” அதிர்ச்சியுடன் கேட்டது உம்மா. “ஏன் இப்பிடியெல்லாம் பண்றாருனு ஒண்ணும் புரிலமா…!”  “எல்லாம் அந்தப் பொம்பள பண்ற வேலயாயிருக்கும். மகன் சம்பரிக்கிறதெல்லாம் மாமியா ஊட்டுக்கு கொட்டிக் குடுக்குறாருனு நெனப்பாயிருக்கும்..!.என்னயிருந்தாலும் எப்பிடிப் பாத்தாலும் மாமியார்களின் வேலத்தனத்த காமிச்சுருவாங்களே..!” சம்பந்தியம்மாவை குற்றம் சொன்னது உம்மா. ‘எதனால இப்பிடியெல்லாம் பண்றாருனு…’ என்கிற சிந்தனையே அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அன்று முழுக்க ஒரே அழுகையும், கலக்கமுமாகவே இருந்தாள் ரம்லத். ‘என்ன நெனச்சுட்டு அந்த மனுஷன் இப்பிடியெல்லாம் செய்றாரு….போனில் பேசும் போது நல்லருக்கியா ரம்லத்னு ஒரு வார்த்தை கேட்கவே இல்லையே அந்த மனுஷன்…என்னாயிப் போச்சு அவுருக்கு..! கடைசியில் என்னப் புடிக்கலேனு சொல்லி விடுவாரோ… !’ என் சங்கடத்தை நான் யாரிடம் போய் சொல்லி அழுவேன். அல்லா நாயனே! இது என்ன சோதனை..? அவளால்  அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இரவில் தூங்கும் அந்த கொஞ்ச நேரத் தூக்கமும் பறிபோனது. மனம் நிம்மதியில்லாமல் தவித்துக்கொண்டிருந்தது. அழுது அழுது முகம் வீங்கிப் போனது.. உம்மாவும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

அதிகாலை எழும்போதே மண்டையைப் பிளக்கும் தலைவலியை உணர்ந்தாள். ஸுபுகு தொழுதுவிட்டு அழுகையினுடே இறைவனிடம் துஆ கேட்டாள். மாமி வீட்டுக்கு இன்னைக்கே போகண்டாம்.ரெண்டு நாள் கழிச்சுப் போயிக்கலாம்  என முடிவு செய்தாள். உடனே உள்ளுக்குள் ஒரு வித அச்சம்  கிளர்ந்தது. இதுக்கும் கோவிச்சுக்கிட்டு ஏதாச்சும் சொல்லித் திட்டுவாரோ… இல்ல இனி போனே பண்ணாம இருந்தாலும் இரிக்கலாம்.. அவுங்கும்மாகிட்டயும் இதையெல்லாம் சொல்லியிருப்பாரே….இன்னிக்கு நா போகலேன்னா ‘முஸ்தபா உன்ன இன்னிக்கே வீட்டுக்கு வரச் சொன்னானே..நீ ஏன் வரலேன்னு அந்தப் பொம்பள கெடந்து சாடுமே..!’ என்ன செய்வது….என்று தவிக்க ஆரம்பித்தாள். தலைவலி இன்னும் கூடியது. மண்டையைப் பிடித்துக் கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். கரை புரண்டு வரும் வெள்ளம் போல அழுகை பொத்துக்கொண்டு வந்தது. திடும்னு முஸ்தபாவிடமிருந்து “தலாக்னு” செய்தி வருமோ….இதை நினைத்து நினைத்து ரம்லத் தினமும்  பயந்து கொண்டிருந்தாள்.நிம்மதி பறிபோனது. எல்லோரிடமும் வெடுக் வெடுக்கென்று கோபப்பட்டாள். சுய நினைவே இல்லாதவள் போல நடக்க ஆரம்பித்தாள். தேவையில்லாமல் மாமியிடம் சண்டைக்குப் போனாள்.

இப்படியாக காரணமே இல்லாமல் அங்கே முஸ்தபாவும், இங்கே ரம்லத்தும் மன உளச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை. காலம் பார்த்துக் கொண்டிருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3.9 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

279 thoughts on “உளச்சல்”

 1. எத்தனையோ பெண்கள் வெளிநாடு சென்ற கணவரிடமிருந்து வரும் ஒற்றை கடிதத்திற்காக வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த நாட்கள் ஏராளம். கடைசி வரை வராமல்போன கடிதங்களும் உண்டு. தலாக் சொல்லாமலே பிரித்து விட்ட கணவன்மார்களும் உண்டு. தன் குழந்தைகளின் தாயை சந்தேகிப்பதை விடுத்து, முஸ்தபா முதலில் அறைவாசிகளை மாற்றி கொண்டிருந்தால் நலம். முஸ்தபா ரம்லத்தின் மாமாமகன் எனில் சிறு வயதில் இருந்தே ஒருவருக்கு ஒருவர் சற்றேனும் புரிதல் இருந்திருக்கும்.பரிச்சயமானவர்களாகத்தானே இருந்திருப்பார்கள்!!?ஆனால், ஏனோ முஸ்தபா ரம்லத்தை திருமணம் முடித்துக் கொண்டு, அறைவாசிகளின் கதைகளை எல்லாம் கேட்டு கொண்டு, சந்தேக விதைகளை மற்றவர்கள் தூவும் போது அதை எல்லாம் மனதில் விதைத்து வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறார். ஆசிரியர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அவர்கள் ஒரு சமூக மக்களின் உரையாடலை அப்படியே உளச்சல் சிறுகதையின் வழியே எழுத்து வடிவில் கொண்டுவந்துள்ளார்.

  “ரம்லத் யதார்த்தமான சுபாவம் கொண்டவள். யாரையும் எளிதில் நம்பிவிடுவாள். உருக்கமாக யார் எதைச் சொன்னாலும் பரிதாபம் கொள்ளும் குணம் அவளுக்கு! எவனாவது எதையாச்சும் சொல்லி ஏமாத்தி வீழ்த்தி விட்டால் என்னாவது?”- இவையெல்லாம்தான் அவனை பயம் கொள்ளச் செய்ததெனில் இவை அனைத்தும் முஸ்தபாவின் புரிதலின்மையாலும், அறியாமையினாலும் ஏற்பட்டவைதான். ‘விருப்பம் இல்லாமல்தான் சவுதிக்கு சென்றான் முஸ்தபா!’- விருப்பமில்லாமல் வெளிநாட்டிற்கு செல்வானேன்?? சென்றுவிட்டு அவஸ்தைபடுவானேன்?..

  ‘முஸ்தபா உன்ன இன்னிக்கே வீட்டுக்கு வரச் சொன்னானே. நீ ஏன் வரலேன்னு அந்தப் பொம்பள கெடந்து சாடுமே! என்ன செய்வது’- மனைவியை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவன்மார்களுக்கு மனைவி மீது சந்தேக்கனல். பெற்று வளர்த்த தாய்வீட்டுக்கு கூட அனுப்பாமல் இருப்பது கொடுமையே தவிர வேறென்ன!! நிறைய முஸ்தபாக்களின் சந்தேக் கனலை பயன்படுத்திக் கொண்டு பல ரமலத்களை சித்ரவதை செய்யும் மாமியார்களும் உண்டு..

  ‘இரண்டு வருடமாகியும் இன்னும் லீவில் வராமல் இருக்கார். போதாதற்கு இப்போது மாசமாக வேறு இருக்கிறாள். அவளுக்குள் மெல்ல மெல்ல பயம் கூட்டிக்கொண்டிருந்தது.!!….ஆசிரியர் வந்து சொல்லாத வரை அவளுடைய பயம் குறைய போவதில்லை..!!?!!!?!!!

  பா.சாய்ராபானு
  கோவை .

 2. சந்தேகமும் அதனால் விளையும் தேவையற்ற மன உளச்சல் எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதை இச்சிறுகதை முன் நிறுத்துகிறது. தனக்கு விருப்பமற்ற செயல்களை நிர்பந்தத்தால் செய்யும்போது முதலில் ஈடுபாடற்ற தன்மையும் பின் அத்தன்மை உறவுகளிலும் வெளிப்படுவதை கதை காட்சி படுத்துகிறது.

  வாழ்விற்கு பொருளாதாரம் தேவை. அதற்கான தேடல்களும் முயற்சிகளும் வாழ்க்கையையே கேள்வி குறியாக்குவது இன்று கண்கூடாக சமூகத்தில் பார்க்க முடிகிறது. இந்த இரண்டையும் சரியாக மேலாண்மை செய்ய தவறும் போது அல்லது புரிதல் இல்லாத போது, அது வாழ்வின் அடிப்டையை சிதைக்கும் என்ற உண்மையை காட்டுகிறது இச்சிறுகதை.
  தனது தேவைகளை பார்க்காமல் பிறருடன் ஒப்பிடு செய்யும்போது நாம் வாழ்க்கையையே இழக்கிறோம். அதனுடன் ஆணாதிக்க உலகம் எவ்வாறு பெண்களை கால்பந்தாக உதைக்கிறது என்பதையும் புரிய வைக்கிறது. இரண்டு வருடமாக கணவன் வராத நிலையில் மனைவி கர்பிணியாக இருப்பதாக கூறுவது முரணாகவும் உள்ளது

  டார்வின் ராஜ் பி
  9840285958

 3. பிரகக.அ

  பொருளாதாரம் மனிதர்களை எந்த அளவுக்கு மனிதர்களை பிரிக்கிறது அல்லது பிரித்துக் கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் கதை. தற்போதைய சூழலில் ஒரே வீட்டில் வசிக்கும் தம்பதிகள் கூட மனதளவில் இடைவெளி அதிகமாக உள்ளதை பார்க்க முடிகிறது. நுகர்வுகளை குறைத்து சக மனிதர்கள் அல்லது உறவுகளை புரிந்து கொள்ளும் மன நிலையை மேம்படுத்திக் கொண்டால் இது போன்ற சிக்கல்களில் இருந்து நம்மால் மீள முடியும். அழகிய உரைநடை, கதையின் குடும்ப உறுப்பினர்கள் இடையே நேரில் இருந்தது போல் உணர முடிந்தது. வாழ்த்துகள் தோழர்.

  பிரகாஷ். அ, 9841468339. சிட்லப்பாக்கம், சென்னை.

 4. Selvakani Balakrishnan

  உளச்சல் கதை சிலர் வாழ்வில் நடக்கும் உண்மையை எடுத்து சொல்கிறது. வேறு வேறு ஊர்களில் இருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் சந்தேகங்களை எதார்த்தமாக சொல்லி இருக்கிறர் ஆசிரியர். இதனால் வரும் உளைச்சல் அதனை சுற்றி உள்ளவர்களிடம் உண்மையை கூற முடியாமல் கோபத்தை வெளி காட்டும் பெண்ணின் நிலையை மிக அருமையாக கூறி இருக்கிறர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: