உறுத்தல்

0
(0)

சிறுவயதிலிருந்தே எனக்கு ஒரு பழக்கம். பேருந்தில் ஏறினால் ஜன்னல் பக்கம் உட்கார்ந்து மலைகளை, மரங்களை, வயல்களை, ஆறுகளை மனிதர்களை வேடிக்கை பார்த்தபடியே பயணிப்பது. இப்படியான பயணங்களில் மனம் இலேசாகும். கவிதைகள் தோன்றும். கதைகள் பிறக்கும். ஆனால் அண்மைக் காலங்களில் நான் ஜன்னலோரம் உட்காருவதில்லை! மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்குவதாகப் புழுதிகளைப் பரத்திவிட்டார்கள். ஜன்னலோரப்புழுதி மூச்சுத் திணறச் செய்கிறது. மரமில்லாத சாலை புருவமில்லாத நெற்றியாக, மயிர் இல்லாத வழுக்கைத் தலையாக மொழுக்கென்று இருக்கிறது.

இரண்டு பேர் இருக்கையில் இரண்டாவது அமர்ந்தேன். பேருந்துக்குள் நடப்பதை கவனிக்கத் தொடங்கினேன். வண்டி கிளம்பவில்லை. நடத்துனர் பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கருகில் இருந்த பயணி ‘மதுரை ஒண்ணு கொடுங்க’

‘நாற்பத்தாறு ரூவா குடுங்க!

‘நான் வரும்போது 37 ரூபாய்தானே கொடுத்தேன்.

இதோ பாருங்க அந்த டிக்கட்’

‘அய்யா, இது எக்ஸ்பிரஸ் பஸ்!

‘பஸ்ஸில எந்த வசதியும் இல்லை . சீட்டு பழசு. முதுகில் குத்துது. காலை நீட்ட முடியலை, இடிக்குது. எக்ஸ்பிரஸ்னு ஒரு காகிதத்தில் எழுதி ஒட்டினா போதுமா… இதை எல்லாம் கேட்பாரில்லையா…’

அய்யா அதெல்லாம் தெரியாது. இந்த பஸ்ஸில் 46 ரூபாய்தான். எனக்கு பேச நேரமில்லை. இன்னும் நிறைய சீட்டு போடணும்’

அந்தப் பயணி முணங்கியபடியே ஐம்பது ரூபாயைக் கொடுத்தார். நடத்துநர் டிக்கட்டையும் மீத சில்லறையையும் கொடுத்து நகர்ந்தார்.

நான் பார்வையை சுழல விட்டேன். எனக்கு முந்திய இருக்கையில் ஒரு இளம் ஜோடி உட்கார்ந்திருந்தது. காதோடு காதாக உரசிக் கொள்வதும் தோளில் சாய்ந்து கொள்வதும் பின் கிசுகிசுத்துச் சிரிப்பதும்… சிணுங்குவதுமாக… நாடகம் தொடர்ந்தது.

பக்கத்திலிருந்தவர் புலம்பினார். வீட்டுக்குள் நடக்க வேண்டிய தெல்லாம் பஸ்ஸுக்குள் நடக்குது. காலம் கெட்டுப் போச்சு. ஹும் வீட்டுக்குள்ளே என்ன இடைஞ்சலோ…. இங்கே இந்த உரசு உரசுதுக’ என்று பெருமூச்சு விட்டபடி என்னைப் பார்த்து சிரித்தார். சக மனிதரின் ஆதங்கத்தை உணர்ந்து கொண்டது போல் தலையசைத்து ‘பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வும் அவர்களுக்கு இருக்கணுமில்லையா…’ என்றேன். வலது பக்கம் பார்வையை நகர்த்தினேன். எனது இருக்கைக்கு முந்தின இருக்கைக்கு இணையான வலதுபுற இருக்கையில் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் எண்ணெய் காணாத தலை, பழுப்பும் வெள்ளையுமாய் பரவலாகப் பூ பூத்த புளிய மரம் போல! வலப்புறம் ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுமி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இடப்புறம் இரண்டு வயது பெண் குழந்தை வெளியே கையைக் காட்டி அழுது கொண்டிருந்தது. மாங்கொழுந்து நிற முகத்தில் கண்ணீர் சாரை சாரையாக உருண்டது. சளியும் வழிந்து கொண்டிருக்கும் போலிருக்கு. அம்மா முந்தாணையால் குழந்தை முகத்தை துடைத்து, கொஞ்சி ஆறுதல் படுத்தினாள். வெளியே முறுக்கு விற்பவரிடம் ஒரு முறுக்கு பொட்டலம் வாங்கி, பிரித்து இரு குழந்தைகளிடமும் ஒன்று ஒன்று கொடுத்தாள். சிறுபெண் முறுக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள்.

கால் ஊனமுற்ற ஒருவர் கட்டை ஊன்றி கையேந்தி வந்தார். ‘நடக்க முடியாத ஜன்மம், அய்யா வயிற்றுப் பசி தீருங்கய்யா’ என்ற கெஞ்சியபடி ஒவ்வொரு இருக்கையாக கையேந்தி வந்தார். சிலர் காசு பொட்டனர். சிலர் சில்லறை இல்லை என்ற உதட்டைப் பிதுக்கினர். சிறுகுழந்தை இருந்த இருக்கை அருகே கையேந்தி வந்தார். அது வாயில் கடித்துக்கொண்டிருந்த முறுக்கை சட்டென்று எடுத்து நீட்டியது. முடவர் கையை இழுத்துக் கொண்டார். படக்கென்று திரும்பிய அம்மா முடவரைப் பார்த்து முகம் கடுத்து, ‘உழைக்கத் துப்பு கெட்ட நாய், பிச்சை எடுக்கிறதைப்பாரு’ என்று முணங்கினாள். அதிர்ச்சியோடு அக்குரலைக் கேட்ட முடவர், காவல்நாயிடம் விரட்டப் பெற்றவர் போல் வேகமாய் திரும்பி ஊன்று கட்டையோடு பறந்தார்.

‘ஏன்ம்மா அந்த மாமாவைத் திட்டினே..’ பெரிய மகள் கேட்டாள்.

‘அவனா மாமன்? ஏமன்! உன் அப்பனைக் கொன்ற கொலைகாரன். என்னையும் கொல்ல இருந்தவன்’ பெரிய மகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். அம்மாவின் முகத்தில் நிகழ்வுகள் நிழலாடின.

முத்தம்மாவும் கருப்பையாவும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணன் தங்கை உறவு முறையும் கூட, ஊரில் விவசாயம் அற்றுப் போனதால் கூலி வேலையும் இல்லை. உள்ளூர் கொத்தனார் மூலம் பக்கத்திலிருக்கும் நகருக்குச் சென்று சித்தாள் வேலை பார்த்து வந்தாள். அந்த ஊரிலிருந்து தினமும் பத்து பெண்கள் நாலு ஆண்கள் என கொத்தனாரின் மினிலாரில் சென்று வேலை பார்த்து வருவது வழக்கம். அந்த லாரிக்கு கருப்பையாதான் ஓட்டுநர். அவர் லாரியில் ஏறிவிட்டால் போதும் வண்டியில் புதுப் புதுப்பாட்டுகள் அலறும்! ரெட்டை அர்த்தங்கள் தொனிக்கும் குத்துப்பாடல்கள் காதலன் காதலி கேலி, ஊடல் பாட்டுகள் தாம்!

ஒருநாள் இப்படியான பாட்டு குஷியில் கட்டுபாடில்லாத வேகத்தில் ரோட்டோர புளிய மரத்தில் மோதவிட்டு விட்டார். ரோடே ரத்த வெள்ளம். குய்யே முறையோ குமுறல், ரணகளம். லாரி மோதிய வேகத்தில் பின்னால் நின்றிருந்த இருபெண்கள் இரு ஆண்கள் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயே உடல் சிதறிப் போயினர். இறந்துபோன ஆண்களில் முத்தம்மாளின் புருசனும் ஒருவர். இடிபாடுகளில் சிக்கி முத்தம்மாளின் இடதுகால் முறிந்தது. விவசாயக்கூலியாகவோ கட்டிடப் பணியாளராகவோ வேலை செய்யமுடியாது.

சங்கத்துக்காரர்களின் முயற்சியால் வாரியத்தின் மூலம் செயற்கைகால் பொருத்தி நடமாட முடிந்தது. கிடைத்த நிவாரணத் தொகை ஒரு வருஷத்துக்குக் கூட தாக்கு பிடிக்கலை. வயிற்றுப் பாடு. இருபெண் குழந்தைகளைக் காப்பாற்றியாகணும். பக்கத்து நகரத்தில் உணவகம் ஒன்றில் நின்றபடியே பத்துப் பாத்திரங்கள் கழுவும் வேலை செய்து வாழ்க்கையை நகர்த்துகிறாள். கிராமத்தில் உறவு வீட்டில் ஒரு விசேஷம். வந்து கலந்து விட்டு நகரத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அந்த முடவர் முகத்தில் பீதியுடன் விரைந்த வேகம் எனது மனக் கண்ணில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவரைப் பற்றி அறிய ஆர்வம் ததும்பியது.

ஊர் வந்தது. வண்டி நின்றது. எல்லோரும் இறங்கினார்கள். நான் சற்று தாமதித்தேன். அந்தப் பெண் முத்தம்மாள் மூச்சை அடக்கி எழுந்து நின்று இடப்புறம் குழுந்தையை இடுக்கிக் கொண்டாள். வலது தோளில் ஒரு துணிப்பை தொங்கியது. பெரிய பெண் அம்மாவின் சேலையைப் பற்றிக்கொண்டு பின் தொடர்ந்தாள். முத்தம்மாள் மெல்ல எட்டு வைத்தாலும் நடையில் உறுதியும் மனதில் வைராக்கியமும் தென்பட்டது!

ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒருவிதமான போராட்டமாகத்தானே இருக்கிறது. மனம் கனக்க நானும் நடந்தேன்.

மறுநாள் மதுரை செல்ல பஸ் நிலையம் வந்தேன். வண்டி ஏறும் முன் கழிப்பறைக்குப் போய்வந்தால் தேவலை என்ற உணர்வு. புறப்பட இருக்கும் வண்டியைத் தவறவிட்டுவிடக்கூடாது என்று வேகமாய் கட்டணக் கழிப்பறைக்குள் நுழைந்தேன். மேஜையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்தேன். திரும்ப வரும் போது யாரோ கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்பினேன். ஆச்சரியமாக இருந்தது.

அன்று பிச்சைகேட்டு வந்த முடவர் கழிப்பறைக் கட்டணம் வசூலிக்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அன்று அதிர்ச்சி யோடு விரைந்த முகத்தில் இன்று தெளிச்சி தெரிந்தது.

‘சார் இந்தாங்க மிச்சம் ரெண்டு ரூபாய் என்றார்.

‘இருக்கட்டும் வச்சிக்குங்க’

‘சார் இந்தாங்க டோக்கன்படி கணக்கு குடுக்கணும் கூடக் குறையக் காசு இருக்கக்கூடாது!’

தயங்கி, வாங்கிக் கொண்டேன். அன்று முத்தம்மாள் வைத வசவு நினைவில் மின்னியது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top