உறவு

0
(0)

“இதுக்காவத்தான் எல்லாவனும் சேர்ந்து வந்தீகளோ”அம்மாவின் கண்களில் கோபம் கொப்பளித்தது. பீரோவின் கைப்பிடியைச் சுற்றிக்கொண்டிருந்தான் சின்னவன். கீழே கிடந்த புஸ்தகத்தைக் கையில் எடுத்து மறுபடியும் போட்டபடிக்கே நடுவான்,

“இப்பம் அதெல்லாம் எதுக்குளா. இதுக்கு நீ என்ன சொல்லுதே…”

பெரியவன் பேசாமல் இறுகின முகத்தோடு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் பிடித்து வைத்து சின்னச் சின்னதாக எல்லோரையும் அதன் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். நடுவான் திரும்பி,

“என்ன அண்ணே சொல்லு நீ… நாம் மட்டும் பேசிட்டிருந்தா…?”

“அதா சொல்லீட்டில்ல…”

அப்பாவைக் கிடத்தியிருந்த பட்டாசலிலிருந்து மூத்திர நாற்றம் ரெண்டாங் கட்டையும் மூழ்கடித்துச் சென்றது. அப்பாபடுத்து ஐந்தாறு வருஷங்கள், அவர் பற்றிய நம்பிக்கைகளைப் போலவே கழிந்துதான் போயிற்று. ரெண்டாங்கட்டு மௌனம் சாதித்தது. அம்மா எழுந்து எதுவும் பேசாமலே அடுக்களைக்குப் போய் கொதித்துக் கொண்டிருந்த அரிசியைக் கிண்டி விட்டு வந்தாள். அவள் முகமும் பாறையாயிருந்தது. ரெண்டாங்கட்டில் மூன்று பேரும் இதுதான் இப்படித்தான் என்கிற மாதிரி செய்ததைச் செய்து கொண்டு பார்வைக்கு மட்டும் உட்கார்ந்திருந்தனர். அம்மா மறுபடியும் நிலைவாசற் படியில் வந்து உட்கார்ந்தாள்.

“ஏளா நீதான் ஊர்ல இல்லாத புதுப்பழக்கமா அக்காவுக்கும் பத்துவுக்கும் சேத்து உயில்லே எழுதிவச்சே. சரி. மகன்க மூன்று பேரும் தடி மாடு மாதிரி இருக்கானுவளே அவனுகளை ஒரு வார்த்தை கேட்டுட்டுச் செய்வோம்னு செஞ்சியா… இல்ல… அது ஒனக்குத் தோணாமப் போச்சி… ஏன்னா ஒன்னச் சுத்தியிருக்கிற கூட்டம் அப்பிடி. சரி அதான் போகட்டும். உயில எழுதி முடிச்சே, உடனே ஒரு ரெண்டுவரி… ஒரு ரெண்டுவரி… ஒரு பதினைஞ்சிபைசா கார்டுல… அதுக்குக் கூடவா வக்கத்துப் போயிட்டீக… யெப்பா… இன்னின்ன மாதிரி வெவகாரம்… இப்பிடியிப்படி வெவரம்னு எழுதினா என்ன… இல்ல பக்கத்தில் யாரும் எழுதத் தெரிஞ்சவன் இல்லையா… யாரோ மூணாம் மனுஷன் சங்கரங்கோயில் வெறியாண்டி சொல்லி அப்புறம் கேட்டா ஆமான்றே… என்னம்மாது உனக்கு நெயாயமாருக்கா… நீயே சொல்லு…”

சின்னவன் பேசி முடிக்கும் போது அம்மா தகித்திருந்தாள். விடைத்த மூக்கு அடங்காமலும் அம்மாவை நேருக்கு நேர் பார்க்க முடியாமலும் தவித்தான் சின்னவன். நடுவான் மட்டும் அம்மா என்ன செய்யப் போகிறாள் என்பதில் ஆவலுடையவனாய் முகத்தையே நோக்கியிருந்தான்.

“ஆமாப்பா- எனக்கு நெயாயந் தெரியாது தான். நான் நெயாயங் கெட்டவ தான்… நீங்க ரொம்ப நெயாயவான்க… அவுஹளுக்கு… சீரிஸா இருக்கு… ஒடனே வாங்கன்னு லெட்டரு போட்டப்ப இல்லாத உறுத்து… எவனோ உயில் எழுதியாச்சின்னு சொன்னவுடனே வுழுந்தடிச்சி ஓடியாரச் சொல்லுது. உங்களுக்குத்தான் அப்பாமேல எம்புட்டுபாசம்… ஹ போங்கடா… வந்து நெயாயம் கேக்கிறானாம் நெயாயம்…” யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வெளியே பார்த்துக் கொண்டே பேசினாள்.

“பாசம்னா அந்த லட்சணத்தில் வளர்த்திருக்கீக…’’ பெரியவன் உச்சஸ் தாயியில் சொன்னான். அவனுக்கு எப்பவும் பேசினால் பெரிய குரல் தான்…

“ஏம்பா நாங்க வளத்ததில என்ன கொறை கண்டீக… சாப்பாடு போடாம பட்டினி போட்டோமா… சட்டத்துணி இல்லாம ரோட்டு வழியே அலையவிட்டோமா… இல்ல சொல்லப்பா… நாங்க எதில கொறைவச்சோம்… அவுஹராவும் பகலும் ஒங்களுக்காகத்தான் எழுதியெழுதி குறுக்கொடிஞ்சி வாதம்பிடிச்சி இப்படி சீவனத்துப் போயிகெடக்காக…”

“ஆமாமா ரொம்ப செஞ்சீக… தெரியும்…”

“ஒங்களுக்க என்னத்த செய்யல… அங்க இங்கன்னு அலைஞ்சி கண்டவன்ட்டயும் பல்லக்காட்டி வேல வாங்கிக் கொடுக்கலியா… அதனால்ல இப்ப நீங்க பெரிய ஆப்பீசருன்னு சொல்ல முடியுது… கலியாணத்துக்குத் தான் கொஞ்சப்பாடாபட்டிருக்கு… இன்னும் என்னத்தச் செய்யணும்கிறே…”

“ஆமாமா… ஊர்ல உலகத்தில இல்லாதத செஞ்சிகிழிச்சிட்டே… போம்மா… ரொம்பப் பேசாதே… ஒரு அஞ்சிபைசா குடுத்திருப்பியா நீ… அத்தனை பேரும் பள்ளிக்கூடத்தில் வாங்கித் திங்கயில நாங்க மட்டும் விரலைச் சப்பிக்கிட்டு அலைஞ்சோம்… அதெல்லாம் மறந்துடும்னு நெனச்சியா… சாகறவரைக்கும் மறக்காது…”

நடுவான் பேசினபோது சின்னவனும் பெரியவனும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பா இருமும் சத்தம் கேட்டதும், பெரியவன் தான் எழுந்து போய் பார்த்துவிட்டு ஒண்ணும் சொல்லாமலே வந்து உட்கார்ந்தான்.

“மறக்கவேண்டாப்பா… மறக்கவேண்டாம்… அவுஹ சம்பாத்யம் பூராவையும் நானே தான் தின்னேன். உங்களை பட்டினி போட்டு கொடுமப்படுத்தினேன். நீங்க யார் யார்ட்டயோ வரம் வாங்கி படிச்சிக்கிழிச்சி ஆப்பீசரா வானத்திலேர்ந்து குதிச்சிட்டீக…”

“சரி அதெதுக்கு இப்பம்… விடுண்ணே… அதுதான் தெரிஞ்ச கதையாச்சே. பேசிப்பேசி இனியென்ன நடக்கப்போவுது… யெம்மா அந்த உயிலுக்கு நகல் வச்சிருப்பில்ல அத எடுளா…”

அம்மா சாவியை எடுத்துக் கொடுத்தாள்… சின்னவன் பீரோவைத் திறந்து அப்பாவின் பழைய கேஸ் கட்டுகளின் மேல் புதிதாகக் கிடந்த கவரை எடுத்தான். பெரியவன் அதைக் கையில் வாங்கிப் பிரித்து எல்லோர் பொறுமையையும் சோதிக்கும் படி படிக்க ஆரம்பித்தான். சத்தமாய் வாசிக்க வேண்டிய இடம் வந்ததும், நிறுத்தி ஒரு முறை நிமிர்ந்து நடுவானையும், சின்னவனையும் பார்த்துவிட்டு,

“மக்கள் ஐவரும் வீட்டைச் சரிபங்காக அம்மாவின் காலத்திற்குப் பிறகு பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டியது. இதில் தான் சிக்கல். சரி அத அப்புறம் பேசுவோம். முதல்ல உன்னோட நகைங்க, கடற்கரையாபிள்ளகிட்ட ஒத்திக்கு வாங்கின வீட்டு மேலே உள்ளரூவா இதெல்லாம் இதில காட்டல…”

“பெறகு நான் என்னத்த திங்கறது… பச்சைமண்ணையா… அவுஹளுக்கு சிச்ருஷை பாக்கணும்… எத… நீங்க கொடுக்கிற பிச்சக்காசு பதினைஞ்சி ரூவாய நம்பியா… மாத்திரை வாங்கணும் மருந்து வாங்கணும்… ஒரு நல்லது பொல்லது… வீட்டுக்கு வந்த ஆட்களுக்கு ஏண்டத செய்யணும். இந்தா பாரு… நேத்திக்கு நெஞ்சில் சளிகட்டி இந்தா அந்தான்னு ரொம்பப் பயமுறுத்திப் போட்டாக… ஒடனே டாக்டருக்கு ஓடிப்போயி கூட்டிட்டு வந்து ஒரு ஊசி போட்டுருக்கு… மாத்திரை வாங்கிருக்கு… முப்பது ரூவாகாலி… இதுக்கெல்லாம் நான் எங்க போறது… இல்ல அருமாந்த பிள்ளக நீங்க தா அள்ளிக்கிள்ளிக் கொடுக்கீகளா…”

“சரி… சரி… நீ மருந்து வாங்குவியோ… மாத்திரை வாங்குவியோ… நல்லது பொல்லதுக்கு செலவழிப்பியோ வச்சுக்க… முடிவில் அதுக்கு என்ன தான் வழி…”

சீக்கிரம் எல்லாத்தையும் முடித்து விடவேண்டும் என்ற அவசரத்துடன் நடுவான் சொல்லி முடித்ததும்,

“அத அப்ப பார்த்துக்கலாம்…” அம்மா அசால்ட்டாக சொன்னாள். படாரென நிமிர்ந்த சின்னவன்,

“அப்ப எங்கள ரோட்டில குடுமியப்பிடிச்சிட்டு நிக்கச் சொல்றியா…”

“என்னமும் பண்ணுங்க…”

“இங்கபாரு இப்படி விட்டேத்தியா பேசாத… நீ பாட்டுக்கு ஒன் இஷ்டத்திற்கு ஒனக்கு பிரியமானவங்களுக்கா வாரிக்கொடுப்பே… நாங்க அதப்பாத்துக்கிட்டு  ‘ஈ’ன்னு இளிச்சிட்டுநிக்கவா…”

“ஏலேய்… எப்படிடா இதெல்லாம் பேசக்கத்துக்கிட்டீக… ஒங்களாலே எனக்கோ அவுகளுக்கோ… என்ன மாச்சும் பிரயோசனமுண்டா… சொல்லுங்க பாப்போம்… நகைநட்ட கேட்கறீங்களே… உங்க ஆத்தாளுக்கு அரும ஆத்தாளுக்கு ஒரு மிஞ்சாடித் தங்கம் உருக்கியிருப்பீகளா… இல்ல ஒரு தம்பிடிக்கு ஒங்களால லாபமுண்டா… ம்ஹும்…” பெரிய பெரு மூச்சுவிட்டு பொருமினாள்.

“இங்க பாரு… இப்படியெல்லாம் பேசாத… சரி விடு… எல்லாத்தையும் ஒன் இஷ்டப்படியே செலவழிச்சி நாசமாக்கு… நாங்க ஒண்ணும் கேக்கலை… அப்புறம் ஆத்தாடி யம்மாடின்னா யாரு வந்து கேக்கப்போறா…”

“யாரும் வந்து கேக்க வேண்டாம் என் கண்ணுகளா… யாரும் வந்து கேக்க வேண்டாம். நான் செத்துப்போனா வந்து எட்டிக் கூட பார்க்க வரவேண்டாம்பா… வரவேண்டா…” அவளுக்கு கண்ணீர் முட்டிநின்றது.

“சரி… உயில்ல பெண் மக்களுக்கு சேத்து வீட்டில் பங்கு எழுதியிருக்கையே அப்படின்னா ஒரு நல்லது பொல்லதுக்கும் அவுக சேந்துக்குவாகளா…”

“என்ன கேக்க நீ…”

“இல்லம்மா அண்ண என்ன சொல்லுதுன்னா… சொத்துல பங்குக்கு வர்றாகள்லியா… அப்பம் அப்பாவோட சாவுச் செலவுக்கு மத்த, கிழம, திதி செலவுகளுக்கும் சேந்து செய்வாகளான்னு கேக்கறான்… அப்படித்தானேண்ணே…”

“அடப்பாவிகளா… உங்கள பெத்த வயத்தல பெரண்டயத்தான் வச்சிக்கட்டணும். பெத்த அப்பனுக்கு செய்ய வேண்டியது புள்ளங்க கடம. மருமகன்களுக்கென்ன ஆத்திரம் வந்தது?”

“அங்… அப்ப சொத்துலமட்டும் பங்குக்குவர்றாக நாங்க என்ன இளிச்சவாயன்களா…” வேகமாய் பொரிந்து தள்ளினான் பெரியவன். நிலை கொள்ளாமல் கண்ணாடியை மாட்டுவதும் கழற்றுவதுமாக இருந்தான்.

“யப்பா இங்க பாருங்க… என்னால ஒங்களோட வாதாட முடியாது… நெஞ்சுவலிக்கு… ஒங்களுக்கு இஷ்டமின்னா செய்ங்க… இல்லைன்னா அவுஹென்ன போய்ச் சேராம இருந்திரப் போறாஹளா… புள்ள கொள்ளி இல்லாதவுகள்ளாம் போய்ச் சேராமலா கெடந்திட்டாக… அப்படி நாங்களும் நெனச்சிக்கிறோம். திருநெல்வேலி குமாஸ்தா புள்ளக்கு கொள்ளி வைக்க புள்ளையில்லைன்னா, அவுக கட்டை என்ன எரியாமலா போயிரும், அடப் போங்கடா…”

“அப்ப எங்ககிட்டேருந்து ரூபாய எதிர்பார்க்காத… அன்னைக்கு வந்து எங்க மூஞ்சியைப் பார்த்துட்டு நிக்காத…”

“அடச்சீ… மூதேவிகளா… உங்கள நம்பியாடா… அவுஹ பொறந்து இருக்காக… நீங்கள்ளாம் புள்ளங்களாம்… உங்கள பாக்குறப்போ பெத்த வயிறு அப்படியே பத்திகிட்டு எரியுது… புள்ளங்களாம் புள்ள…” முடிக்கு முன் அழுகை முந்திக் கொண்டது.

அப்போது அம்மாவைப் பார்க்க ரொம்பவும் விகாரமாய் இருந்தது. அவர்களுக்கே கஷ்டமாயிருந்தது போல முகத்தைச் சுளித்துக் கொண்டார்கள். இவ்வளவு நேரமும் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தவன் போல சின்னவன்,

“அதா… அழுதழுதுதான்… குடும்பமே சீர் கெட்டுப் போச்சே இன்னுமென்ன அழுக…”

நடுவான் கடைசியாகச் சொல்வது போலச் சொன்னான்.

“ஏளா… இங்க பாரு நாங்க சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம். இந்த உயிலு நியாயமில்லே. நீயும் எதுக்கும் சரிப்பட்டு வரமாட்டீங்க… இப்படியே இருந்தா கோர்ட்டுக்கு போக வேண்டித் தான் வரும்…”

இதைக் கேட்டதும் அம்மா இன்னமும் உடைந்து போனாள். பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்காமலேயே,

“போங்கடா… போங்க… கோர்ட்டுக்குப் போயி குடும்பத்த சந்தி சிரிக்கவைங்க… எத்தனையோ கேசுகள குமாஸ்தா புள்ள தீத்து வைச்சாக… அவுஹ புள்ளக சொத்து தாவால கோர்ட்டுக்கு போனாத் தான் ஊரு நல்லாச் சிரிக்கும்… எல்லாத்தையும் நீங்களே வாரிக் கட்டிக்கீங்க. நீங்க எம்புள்ளகளே இல்ல… இனிமே எம் முகத்திலேயே முழிக்காதீங்க…”

அழுகைக்குள் வார்த்தைகள் வெடித்துச்சிதற அழுகையை அடக்க மாட்டாமல் அடுக்களைக்குள் எழுந்து போனாள். சோறு குழைந்து போய் அடுப்பெல்லாம் அணைந்திருந்தது.

“அதான் என்னிக்கோ முடிவு பண்ணியாச்சே. அம்மா, அப்பா, அக்கா, தங்கச்சி, யாருமில்லைன்னு”என்று பெரியவன் சொல்லியது அடுக்களைக்குள் எட்டிப் பார்த்துப் போயிற்று. கொஞ்ச நேரம் அப்படியே நின்றிருந்தவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு பட்டாசலை நெருங்கும் போது சின்னவன் சொல்லிக் கொண்டிருந்தான்,

“சரிண்ணே… சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு கிளம்புவோம். இப்ப கௌம்பினாத்தான் கடையநெல்லூர் முருகேசபிள்ளை கிட்ட அவர் தங்கச்சி செத்ததுக்கு துஷ்டி கேட்டுட்டு போகமுடியும்.”

“அதெல்லா ஒண்ணும் அவசரமில்ல. இருந்து சாப்பிட்டுட்டு சாயந்தரம் வெயில் தாழ புறப்பட்டா போறும்…” அம்மா ஆணியறைந்த மாதிரி சொல்லிட்டு அடுக்களைக்குள் போனாள். யாருக்கும் அவள் வார்த்தையைத்தட்ட வேண்டும் என்று தோன்றவில்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top