உறவு

4.2
(27)

அழுது அழுது ஓய்ந்து போய் விட்டான் சுமதி. பாவம் அவளும் எத்தனை நேரம்தான் ஒண்டியாய் அழுவாள் முந்திச்சேலை மூக்கைச் சிந்தி நனைந்து போய்க் கிடந்தது. இரவெல்லாம் தூங்காமல் இருந்ததினால் கண்ணெல்லாம் எரிந்தது. மூக்கையாவிற்கு இவளே ஒன்னு விட்ட சொந்தம்தான். ஆனாலும் நெருங்கிய சொந்தமாக வேண்டிய வாய்ப்பு இருந்து கை நழுவிப் போய் விட்டதில் இவனைக் காட்டிலும் மூக்கையாவிற்குத்தான் வருத்தம். மனதிற்குள் பெரும் சஞ்சலம். கடைசிவரை ரவியை மனதிற்குள்ளாகவே வரித்துக் கொண்டு இருந்தவள். இவளை ரவியுடன் கிண்டலும் கேலியுமாய் மற்றவர்கள் இணைத்து பேசும் போதெல்லாம் முகத்தில் பொய்க் கோபம் காட்டி வார்த்தைகளால் எதிர்ப்பட்டாலும் மனதினுள் மீண்டும் அந்தப் பேச்சுகளை கேட்க ஆசைகள் முன்வந்து விழும் மனசின் அடி ஆழத்தில் இருந்து உற்சாகம் கொப்பளிக்க வெளிக்காட்டாது உள்ளுக்குள்ளேயே வைத்து பொத்திப் பொத்திப் பார்த்து பாவனைகளால் ஒன்றும் தெரியாது போல் அடக்கிக் கொள்வாள். நின்றாலும் நடந்தாலும் எப்போதும் ரவியின் நினைவுதான். இது மலைக்கும் மடுவுக்குமான இணைப்பு போலத்தான். என்றாலும் மூக்கையாவின் பேச்சு அவ்வப்போது நம்பிக்கைத் துளிர்விட வழிவகுக்கும். ஆனாலும் ஒவ்வொருவரின் பேச்சு அவள் கனவுகளைச் சிதறடிக்கும். “பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு எந்தச் சீமையில் முடிக்கப் போறானோ இந்தப் பட்டிக் காட்டையா திரும்பிப் பாப்பான்’ இப்படி எக்குத்தப்பாய் யாராவது பேசி கேட்டால் போதும், சுமதிக்கு துக்கம் தொண்டையை அடைத்துவிடும். அன்று முழுவதும் மனதிற்குள் நெருஞ்சி முள்ளாய் உறுத்திக் கொண்டே இருக்கும். சாப்பாடு வேம்பாய்க் கசக்கும் காரணமில்லாமல் எரிந்து விழுவாள். வீட்டிற்கும் வாசலுக்கும் நெகார் தெரியாமல் அலைந்து கொண்டு இருப்பாள். நெஞ்சினுள் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டு இருக்கும். எப்போதாவது வீட்டுப்பக்கம் வரும் மூக்கையா அம்மாவிடம் ‘ரவி பேசினான் எல்லோரையும் கேட்டதாய்ச் சொல்லச் சொன்னான். அவ்வளவுதான் தன்னையே விசாரித்தது போல சந்தோசம் பெருக்கெடுத்து ஓடும். மனதினுள் குதூகலம் வந்து விடும். சுழன்று சுழன்று வேலைகளைச் செய்வாள். உற்சாகம் கொப்பளிக்கும். மனம் தரையில் நில்லாது வானத்தில் வட்டமிடும். எதிரில் பறக்கும் சிட்டுக் குருவிகளிடம் குசலம் விசாரிக்கும் கூடப் பறக்கும் மணிப்புறாவுடன் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி சிரித்து ஆனந்த தாண்டவமாடும். எல்லாமே மனதிற்குள்ளே தான் வெளியே தெரியாது பொத்தி பூட்டி வைப்பாள். ஆனாலும் வெட்கம் பிடுங்கித் தின்னும், பளபளவென்று சூரியன் மேலேற ஆரம்பித்து விட்டான். அப்போதுதான் வந்த கொட்டுக்காரர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக்கொள்ள முனைந்தனர். செல்’ யுகத்திலும் டவர் இல்லா ஊர்களுக்கு துட்டி சொல்லப் போனவர்கள திரும்பிவிட்டனர். மைக் செட்காரர் மரத்தின் மீதேறி குழாயைக் கட்ட தோது பார்த்தார். சத்தம் அடுத்த ஊருக்கெல்லாம் கேட்கனுமில்ல. தென்னந்தட்டி பந்தலுக்குக் கீழே வாடகைச் சேர்களை எடுத்து பரப்பிக் கொண்டு இருந்தான் சேகர். எல்லா ஏற்பாடுகளையும் முன்னே இருந்து பார்த்துக்கொண்டு இருந்தான் சேகர். சொந்த பந்தங்களை விடை பழக்கப்பட்டவர்களை சேர்களை நிறைத்திருந்தனர். சுமதியை மெதுவாய் கைச்சாடையால் அழைத்தான். முகம் குறாவிப்போய் அருகில் வந்தவளிடம், “ரவியிடம் இருந்து ஏதாச்சும் தகவல் வந்துச்சா”. இல்லை என்பது போல தலையாட்டினாள். இப்ப என்ன செய்யுறது மத்த வேலைகளை ஆரம்பிச்சுடலாமா’ சுமதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்படியே சோகமாய் அமர்ந்துவிட்டாள். பசிக் கிறக்கம் தூக்கமின்மை இரண்டும் சேர்ந்து அவளை கிறங்கச் செய்தது. பரிதாபமாகத்தன் மனைவியைப் பார்த்தான் கேகர்.

தன் ஒரே மகன் ரவியை காட்டுப் பக்கமே வரவிடாது படிப்பு ஒன்றே குறிக்கோளாய் வைத்து அதற்காக மூக்கையா பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தன் மனைவி இறந்த பிறகு கைக்கஞ்சி காய்ச்சிக் கொண்டு மகனைப் படிக்கவைத்தார். காட்டுக்கும் வீட்டுக்குமாய் நாய் பட்டபாடுதான். மேற்படிப்பிற்காக இருந்த கொஞ்ச நஞ்ச பூமியும் விலை போனது. அதற்காக இடிந்து போய் விடாமல் தன் உழைப்பை வியர்வை கொட்டி படிக்க வைத்தது வீண் போகவில்லை. எடுத்து எடுப்பிலேயே பன்னாட்டுக் கம்பெனியில் வேலை. முப்பதினாயிரம் சம்பளம். வேலை கிடைத்த கொஞ்ச நாட்களிலேயே வெளி நாட்டிற்கும் அனுப்பிவிட்டனர். வாங்கிய கடன்கள் எல்லாம் வெகு சீக்கிரத்தில் அடைபட்டுப் போனது. எல்லாவற்றிற்கும் கட்டுப்பட்டு தன் அப்பா சொல்லுக்கு பெட்டிப் பாம்பாய் இருந்த ரவி திருமணப் பேச்செடுத்த போது கட்டுத் தளையை உடைத்து எல்லை மீறிப் போய்விட்டதாய் மனதிற்குள் புழுங்கிப் போனார் மூக்கையா. உடன் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் முடித்து போட்டோவை மட்டும் அப்பாவின் ஆசீர் வாதத்திற்கு அனுப்பி வைத்தான் ரவி. காதல் திருமணம் பெரிதாய் படவில்லை சுமதியை மருமகளாக்க முடியவில்லையே என்ற ஏக்கமே பெரிதாய்ப்பட்டது. நல விசாரிப்புகள் எல்லாமே போனில் தான். அவ்வப்போது வங்கியில் மூக்கையா பெயரில் ஒரு தொகை வந்து சேரும் அவர் கேட்காமலேயே. பேரன் பேத்தி பிறந்ததும் வளர்ந்ததும் அவர்களின் பேச்சுகளும் எல்லாமே தொலைவழி வழியேதான். ஒருமுறையேனும் தான் சாவதற்குள் பேரன் பேத்திகளைக் கண்குளிரப் பார்த்து விட மாட்டோமா என்ற ஏக்கம் மனதிற்குள் மருகிக் கொண்டு இருந்தது. சொல்லவொன்னாத் துயரத்தைத் தன் மனதில் போட்டு அடக்கிக் கொண்டு இருந்தார். அடக்க அடக்க ஒரு நாள் வெடித்து உயர்ப்பறவை கூட்டிலிருந்து கிளம்பிவிட்டது. தீடீரென்று யாரும் எதிர்பாராத சோக நிகழ்ச்சி. “எனக்கு கடைசிக் காலத்துல நீதாம்மா பாக்கனும்” என்று சுமதியிடம் அடிக்கடி கூறிவந்தவர் அதற்கும் இடம் தராமல் இடைக்காலத்திலேயே கிளம்பி விட்டார். “நல்ல சாவுதான் மனுசன் ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் போயிட்டார். வந்தவர்கள் மெப்பனைப் பேச்சு சுமதியை உறுத்தியது. அவருக்கென்னய்யா வெள்ளையுஞ் சொள்ளையுமாய், வெளிநாட்டுல இருந்து காசு வந்து கொட்டுதுல்ல” இத்தனை வருச காலம் ஒழச்சு ஒழச்சு ஓடாய் தேஞ்சு நொம்பலப்பட்டதுக்கு பலன் கெடச்சுருக்கு நிம்மதியாய் இருக்காரு ஊரார் பேச்சு இப்படித்தான் இருந்தது. மனசுக்குள்ளேயே மருகிக்கொண்டு தினம் தினம் நெஞ்சுக்கூடு கனக்க மகனைப் பற்றி நினைத்தாலே மூச்சு விடுவது கூட சிரமமாய்ப்படும் மூக்கையாவிற்கு எதையுமே வெளிக் காட்டாமல் இருந்தாலும் அவ்வப்போது தன்னை மீறி வந்து விழும் சொற்களை வைத்து சுமதி சுளுவாய்க் கண்டு பிடித்து விடுவாள். எல்லாவற்றையும் விட தன் பேரக் குழந்தைகளை ஒருமுறையேனும் கண்குளிரப்பார்த்து ஆசைதீர தொட்டுக் கொஞ்சிவிட வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுமோ என்று மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டே இருந்தது. ஊர் மெச்ச இருந்தாலும் மனதிற்குள் நடைப்பிணமாய் மனம் முழுக்க வெறுமையாய் நல்ல வாழ்க்கை வாழ்ந்து முடித்தவர்கள் இறந்த பின்னும் தூங்குவது போல் இருக்கும். மூக்கையா முகத்திலோ இனம் புரியாத சோகக்களை அப்பிக்கிடந்தது. கொடுமையின் காரணமாய் விட்டால் போதும் என்று போனது போன்ற முகத்தோற்றம். கூர்ந்து பார்த்தால் அதிலும் ஒரு சோக இழையோடுவது தெரியும். ரத்த சொந்த பந்தங்கள் யாரும் இல்லாது வாழ்வதும் ஒருவிதத்தில் கொடுமைதானோ!

வந்தவர்கள் எல்லாம் பீடி குடிப்பதற்கும் ஒன்னுக்கு போவது போலவும் கலைந்து ஆங்காங்கே கொத்தக் கொத்தாய் நின்று பேசிக் கொண்டிருந்தனர். வெயில் அனலைக் கக்க ஆரம்பித்தது. ஒன்றிரண்டு வயதான ஆண்களும் பெண்களுமே இருந்தனர். அப்போது சத்தமே இல்லாமல் ஒரு காரில் வந்திறங்கிய வாலிபன் கையில் பெரிய ரோஜாப்பூ மாலை. யாருக்குமே அவன் யாரென்று பிடிபடாமல் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சுமதி யாருங்க என்றவனிடம் கை காட்டினார்கள் கை நிறையப் பணத்தை சுமதி கையில் திணித்துவிட்டு ஏதோ கூறுவதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிந்தான் சேகர். வந்தவன் சம்பிரதாயத்திற்கு இருந்துவிட்டு சத்தமே இல்லாமல் சென்றுவிட்டான்.

சுமதிக்கு சோகம் போய் கோபம் உச்சியில் வந்து நின்றது. நெஞ்செல்லாம் விம்மியது. கோபத்தில் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கினாள். ரவியை மனதிற்குள்ளாகவே கண்டபடி திட்டித் தீர்த்தாள். இவனெல்லாம் மனுசந்தானா. நன்றி இல்லா ஜென்மம். பசிச்சா பணத்தையா அள்ளித் திங்க முடியும். மனதிற்குள்ளேயே மருகினாள்.

சேகருடன் வாழ்க்கைப்பட்டு பத்து வருடங்கள் கடந்துவிட்டாலும் தான் முதன் முதலாய் நேசித்த ரவியின் நினைவுகளை அடியோடு அழிக்க முடியாமல் தவித்துக் கொண்டுதான் இருந்தாள். சேகர் எல்லா விதத்திலும் தனக்கு எல்லாமுமாய் இருந்தாலும் அவ்வப்போது ரவியின் நினைவுகள் வந்து செல்லும்.

மனசின் அடி ஆழத்தில் ஒரு ஓரமாய் வைத்து இதுநாள் வரை கட்டிக் காத்து வந்த நேசம் பாசம் காதல் என்று இனம்புரியாத ஏதோ ஒன்று இப்போது இரும்பாய்க் கனத்தது. இவ்வரை கட்டிக் காத்தது புனிதமல்ல அழுக்கு என்றுணர்ந்த அக்கணமே அதைத் தூக்கி குப்பையில் கொட்டினாள். இப்போது மனச் சஞ்சலம் அகன்று தெளிவு பிறந்து போல் உணர்ந்தாள்.

வந்தவன் சொன்னது இதுதான். ரவிக்கு முக்கியமான வேலை விசயமாய் கம்பெனியில் இருந்து ஆஸ்திரே-யா அனுப்பி இருக்காங்களாம். இடையில் வந்தா கம்பெனிக்கு ஏகப்பட்ட நஷ்டமாம் அதனால அப்பாவை நல்லபடியாய் அடக்கம் பண்ணச் சொன்னான்.

அதிர்ச்சியில் உறைந்துவிட்ட சுமதிக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. தன் ஒரே மகனை கண்ணுக்குள் வைத்து பொத்திப் பொத்திப் பாதுகாத்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர். பாசத்தினால் பிரிவுத்துயர் தாங்காது எத்தனையோ முறை அழைத்தும் தட்டிக்கழித்தவன், வயதான காலத்தில் கொஞ்சிக்குலாவ பேரக் குழந்தைகளைக் கூட கண்ணில் காட்டாது இருந்தவன், கடைசிக்கால ஆசைகளையும் ஏக்கங்களையும் கூட நிறைவேற்றாமல் இருந்தவனை போனால் போகிறதென்று மன்னிக்கலாம். ஆனால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் தந்தை இறந்தபின் முகத்தைக் கூட பார்க்காமல் அல்லது பார்க்க விரும்பாமல் தன் கடமையை தட்டிக் கழிக்கும் இவனெல்லாம் மனுசப் பிறவியா இல்லை ஈனப்பிறவியா, படிச்ச இவங்கெல்லாம் ஆறறிவு உள்ள மனுசனா இல்லை விலங்குக் கூட்டமா. சுமதிக்கு ஆத்திரம் கோபம் இயலாமை. உரிமையோடு காலைக்கட்டிப்பிடித்து ரெண்டு சொட்டு தண்ணீர் விடாதவன் மனுசனுமல்ல இவருக்கு மகனுமல்ல நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான் இப்போது சோகக்களை போய் அமைதி முகமாய் இருப்பது போல் தோன்றியது. ஓ வென்று பெருங்குரலெடுத்து மூக்கையாவின் காலைக் கட்டிப்பிடித்து மீண்டும் அழ ஆரம்பித்தாள். இப்போது அழும் காரணம் பிடிபடாமல் திகைத்தான் சேகர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

178 thoughts on “உறவு”

 1. நாராயணன் க 9444066755

  உறவு

  காதல் சுகமானது. ஆனால் சுமதி தன் ஒருதலை காதலை மனத்தினுள்ளே அழுத்தி வைத்துக்கொள்வது இயல்புதான். தன்னை அவனுடன் இணைத்து பேசுவதை கேட்கும் போது மனம் எவ்வளவு குதூகலிக்கும் என்பதை அழகாகவிவரித்துள்ளார். சொந்தம் ஆகும் வாய்ப்பு கிட்டாமல் போனது மூக்கையாவிற்கும் மட்டுமல்ல நம்மையும்
  வருத்தம் கொள்ளச்செய்கிறது.

  கதையின் போக்கு, பணம் தான் எல்லாம் என்ற அளவில் ரவியை வில்லத்தனமாக காட்டியிருப்பது எல்லா கதையிலும் வரக்கூடிய எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். நிஜத்தில் இவ்வாறு இன்றைய நாளில் , நிறைய நடப்பது மிக சாதாரண ஒரு நிகழ்வாகவே ஆகிவிட்டது.
  மனிதன் விலங்காக மாறினான் , மாறிவிட்டான் என்று கூட சொல்ல இயலாத அளவுக்கு மனிதம் தொலைந்துதான் போய்விட்டது. நாளை இவனின் கடைசி காலம் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு மகனும் நினைத்தால் போதும். ஆனால் நினைப்பார்களா?

  ஊருக்குள் இருப்பவர்கள் அவரின் புற வாழ்க்கையை பற்றி பெருமை பேசினாலும் , அவரின் ஆழ் மனதினுள் அனுதினம் புழுங்கி, செத்துக்கொண்டு இருப்பதை ஒரு சாதாரண தகப்பனின் மனநிலையை, ஏக்கத்தை ஆசிரியர் உணர்ந்து எழுதியுள்ளார்.

  சேகருக்கு வாழக்கைப்பட்டு இருந்தாலும் ரவியின் மீதிருந்த காதல், திடீரென வெறுப்பை ஒரு அழுக்கு மூட்டைக்கிணையாக மாற்றிய அவன் செய்கை நம்மையும் ரவி மேல் கோபம் கொள்ளத்தான் செய்கிறது. அழுது அரற்றுவதை தவிர வேறென்ன செய்ய இயலும் ? படிக்கும் நம்மில் மன மாற்றத்தை ஒவ்வொருவருக்கும் தரும் , நாமும் இதத்தைகைய தவறை செய்யக்கூடாது என்பதில் ஐயமும் உண்டோ.

  நாராயணன் க
  பெருங்குடி
  போன்: 9444066766

 2. Umamaheswari .R

  அரும்பாடுபட்டு தாயில்லாப் பிள்ளையை சிறப்பாக வளர்த்த தந்தையின் பணக்கடனை மட்டும் தீர்த்து விடுகிறார் மகன். மகனின் திருமணமும் தன்னுடைய விருப்பப்படியே அமைய வேண்டும் என்று எண்ணியது சற்று பேராசைதான்.

  தன்னுடைய குடும்பத்தை தந்தையின் கண்களில் காட்டாமல் காலச் சூழ்நிலைகளுக்குள் மாட்டிக்கொண்ட மகனின் தவறை எண்ணி எண்ணியே மனம் உழன்று தன்னுடைய முதுமை நாட்களை வேதனையுடன் கழிக்கிறார்.

  பெற்ற தந்தையின் சாவுக்கு பணத்தை மட்டும் அனுப்பிய மகனின் நிலையைக் கண்ட பின்னரே தன்னுடைய ஒருதலைக் காதலை முற்றிலுமாகத் துறந்து பெறாமல் பெற்ற மகளாய் கடைசி காரியங்களை செய்யும் பெண்.

  இவர்களுக்குள் நடக்கும் உறவுப் போராட்டம் நாம் எதார்த்த வாழ்வில் அன்றாடம் காண்பது தான். இதை அழகாக எடுத்தியம்பிய ஆசிரியர் தமிழ்க்குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  இரா. உமாமகேசுவரி
  கோவை

 3. உறவு என தலைப்பிடப்பட்ட இச்சிறுகதையில் தந்தையின் முகத்தை இறுதியாககூட பார்க்க வராமல், இது தன் கடமை அல்ல என்பது போல் பணத்தை தேடி ஓடும், உறவின் அருமையை உணரா மகன் ஒரு பக்கமும், தன் மருமகளாய் கொண்டுவர விருப்பம் வைத்த பெண் மகளாக மாறி நிற்கிறாள் என மறுபக்கமுமாக உறவைப் பற்றி ஆசிரியர் தமிழ்க் குமரன் கா.சி ஐயா அவர்கள் பதிவிட்டுச் செல்கிறார்.

  இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட தலைமுறைகளை தான் அதிகம் காணப்போகிறோம். உறவுகளின் அருமை உணர வேண்டும் இல்லையெனில் குழந்தைப் பருவத்திலேயே உணர்த்தப்பட வேண்டும்! பள்ளிகளும் சொல்லிக் கொடுப்பதில்லை. சமூகமும் இப்போது அதை செய்ய மறந்துவிட்டது!

  படிப்பு, பட்டம், முதல் மதிப்பெண், முதல் மாணவனாக வரவேண்டும் இதுதான் குழந்தைப் பருவத்தில் இருந்து திணிக்கப்படுகிறது. என் மவன் அமெரிக்கால இருக்கான் என்று பெருமைப்பட்டுக் கொண்டு, பார்க்கவில்லை, சாவிற்கு வரவில்லை என கவலை கொள்வதை எப்படி எடுத்துக் கொள்வது??!!

  பக்கத்து மாநிலத்திற்கு வேலைக்கு போகிற பிள்ளைகளே நல்லதுக்கும் வருவதில்லை, கெட்டதுக்கும் வருவதில்லை என்று புலம்பும் பெற்றோர்களை, இன்றைய சூழலில் காண முடிகிறது. ‘அமெரிக்கா என்ன பக்கத்துலயா இருக்கு’ அடிக்கடி பிள்ளை வந்து போக என்று சில பெற்றோர்கள் சொல்ல பார்த்து இருப்போம். பின்நாளில் அந்த வசனத்தை பிள்ளைகள் கூறுகிறார்கள்.

  அன்பை கொட்டிதான் வளர்க்கிறார்கள். எனினும் பிள்ளைகள் கைநிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நினைவில், ஆசையில் மட்டுமே பெற்றோர்கள் இளமையில் வளர்க்கிறார்கள். பெற்றவர்கள் முதுமையை அடைந்த பின்பு அமெரிக்காவில் இருந்து பணம் மட்டும் தான் கொடுத்தனுப்புவான்…பெற்றோர்களின் அன்பையும், குழந்தைகளை வளர்க்க அவர்கள் பட்ட கஷ்டங்களை எலாம் கண்டு உணர்ந்ததால், பெற்றவர்களை பேணிக் காக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்..

  காணும் காட்சி, ‘உறவு’ எனும் இச்சிறுகதையின் வாயிலாக நம்முடன் பேசிவிட்டு, பெற்றவர்களின் அருமை பெருமைகளையும், பிள்ளைகளை வளர்க்க அவர்கள் படும் வலிகளையும், வளர்த்ததால் படும் வேதனைகளையும் உணர்த்தி விட்டே செல்கிறது!

  பா.சாய்ரா பானு ,
  கோவை.
  9171637117

 4. Kaja Mohideen

  ந.காஜா முகைதீன்
  சென்னை: 95

  உறவு

  உறவு அப்படின்னா என்ன என்று கேள்வி கேட்க்கும் தலைமுறைகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் இந்த தருணம் இந்த சிறுகதை பொருத்தமாக இருக்கிறது.

  என்னதான் பொத்தி பொத்தி வளர்த்து ஆளாக்கினாலும் அவர்கள் விருப்பத்துக்கே செல்கிறாற்கள் பிள்ளைகள்.

  மூக்கையா போன்ற பெற்றோற்கள் இன்னும் ரவி போன்ற பிள்ளைகளை நம்பி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் பல பட்டி தொட்டிகளில்.

  அன்பு,பாசத்திற்கு விலை போய் விட்டது ஆடம்பர வாழ்க்கை.
  இது யார் செய்த தவறு?

  இச்சிறுகதை இந்த காலத்திற்கேற்ற உண்மையை வெளிப்படித்திவிட்டது.
  எழுத்தாளர்:தமிழ்க்குமரன் அவர் எழுத்துக்குறிய நடையில் புரிய வைத்தது சிறப்பு.வாழ்த்துகள்.

 5. Deepalakshmi B

  பா. தீபா லட்சுமி
  9962682994

  உறவு:
  ரவியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது இதில் சமுதாயம், பெற்றோர், உறவினர், அனைவரின் குற்றமும் உள்ளது. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் பலரின் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. நல்லவேளை சுமதி தப்பித்தாள். பெற்ற தந்தைக்கு இப்படி நிலைமை என்றால், ரவி திருமணம் செய்திருந்தால் சுமதியின் நிலைமை என்ன ஆயிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: