உறவு என்றொரு. .

0
(0)

அப்பா முகத்தைக் கடைசிவரை பார்க்க முடியவில்லை.

ஏழு வருடங்களுக்குமுன் இந்த வீதியைவிட்டு வெளியேறிய தங்கராசு, இன்று, மகள் பூங்கொடி, மகன் அன்பரசன் ஆகியோரடங்கிய குடும்ப சகிதமாய் மீண்டும் உள்ளே நுழந்தான். அன்றிருந்த தோற்றம் அப்படியே இல்லாமல் மாறி இருந்தது. அண்ணாவும் அதேபோல் மாறி ஏற்றுக் கொள்ளவேண்டும் ஆண்டவனே என நினைத்துக் கொண்டான்.

“போடா நாயே” என்று அப்பா அன்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது இன்றும் ரத்த நாளங்களுக்குள் அதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அண்ணன் ஓடிவந்து நெஞ்சில் ஏறி மிதித்தார். கண்கலங்கி நின்றிருந்த சசிகலாவை ஓங்கி அறைந்தார். “தேவடியாச் சிறுக்கிய நடுவயீட்டுக்குக் கொண்டாந்திருக்கியே: எம்புட்டுத் திமுரு ஒனக்கு?”

இவன் எழுந்து நின்று முறைத்துப் பார்த்தான்.

“என்னடா மொறக்கிற” என்று மீண்டும் எத்தினார் அண்ணன்.

“ஓடிப்போடா! செத்த எழவுல விழுகுறதுக்குக் கூட ஒனக்கு ஓக்யத கெடையாது.” சடாரென்று கதவைச் சாத்தினார் அப்பா. சசிகலா தேம்பித் தேம்பி அழுதாள். முகமும் கண்களும் வீங்கிப் போயின.

வீட்டைவிட்டு வெளியேறினர். அப்போது சாவடிமுன் நின்று இலைவீசி ஆசி வழங்கிய வேப்ப மரம் அழிக்கப் பட்டுவிட்டது. வேடிக்கைபாரத்த்த முகங்களில் ஒன்றைக் கூட இன்று பார்க்க முடியவில்லை. யாரும் இவனுக்கு அனுசரைணையாய்ப் பேசவில்லை. அப்பாவுக்குப் பயமா? அப்படியும் இருக்க முடியாது. ஒரு திருடனை அடித்தால் கூட விலக்கிவிடக் கூடியவர்கள். காதலித்துக் கல்யாணம் செய்தவர்களை விரட்டும் போது ஊமையாகிவிட்டார்கள். யாராவது  தங்களை ஆதரிக்க மாட்டார்களா என்றிருந்தது. காதல் திருடுவதைவிடக் குற்றமா?

வீதிவழி நடந்தபோது பார்வதி ஆச்சி கூப்பிட்டது. அருகில் வந்து கைகளைப் பிடித்து இழுத்தது. சசிகலாவைத் தோளோடு அணைத்துக் கொண்டு கண்ணீரைத் துடைத்துவிட்டது.

“எங்க போறீங்க?”

“எங்கயோ போறோம் ஆச்சி.”

“என் வீட்டுக்கு வாங்க: ரெண்டுநாள் தங்குங்க: அப்புறம் ஓஜன பண்ணுவோம்.”

வேண்டாம் என்று விலக்கத் தோன்றியது. ஆனாலும் ஒரு வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்யும் இவன் வேறு எங்கே போய்த் தங்க முடியும்? ஆச்சியின் வார்த்தையை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தபோது, “வேணாம்பாட்டி” என்றாள் சசிகலா.

“அப்பறம் என்ன  சய்யப் போறீங்க?”

“அதான் புரியல ஆச்சி.”

சசிகலாவைப்பார்த்து “ஒங்க வீட்டுக்குப் போனா ஏத்துக்குவாங்களா” எனக் கேட்டது.

“தெரியல.”

“ஏத்துக்க மாட்டாங்க: ஓடிப் போனவள ஒட்ட வச்சுக்கிட்டா சாதிசனம் சந்தி சிரிக்கும்: ஒன்னய வெட்டிப் பலி குடுத்திருவாங்க.”

தங்கராசுவுக்குப் பயம் அதிகரித்தது. படிக்கிற காலத்திலிருந்தே சசிகலாவோடு பழகி இருந்தான். இப்படியெல்லாம் ஆகுமென்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

“இல்லைன்னா இன்னொண்ணு செய்யி” என்றது ஆச்சி. பக்கத்துக் கிராமத்திலுள்ள தன் தங்கையின் முகவரியைக் கொடுத்து அங்கே அனுப்பி வைத்தது.

அங்கே போனவன் அங்கேயே குடியமர்ந்து ஆங்கேயே வாழ்க்கையைத் தொடங்கி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாகிவிட்டான். இவன்வழிச் சொந்தமோ பெண்வழிச் சொந்தமோ உதவவில்லை. ஊராரும் அக்கம்பக்கத்தவரும் ஊட்டம் கொடுக்க திகுதிகுவென செழித்தது குடும்பம்.

“எங்க்கக்கா போறோம்?” என்றான் அன்பரசன்.

“தாத்தாவப் பாக்க” என்றாள் பூங்கொடி.

“எந்தத் தாத்தா?”

“அப்பா தாத்தா.”

“நம்ப தாத்தா மாதிரி பெரிய மீச வச்சிருப்பாரா?”

பக்கத்துவீட்டுப் பரமசிவம் மாமாவை அடையாளப் படுத்துகிறான் எனப் புரிந்தது.

“சொல்லுக்கா.”

இந்தத் தாத்தா அதவிடப் பெரிய மீச வச்சிருப்பாருடா: அய்யனாரு சாமிமாதிரி.”

“நீ பாத்திருக்கியா?”

“ஓ.”

“எப்ப?”

“கனவுல வருவாருல்ல? அப்ப.”

இவன் பிள்ளைகளுக்குத் தன் தந்தையைப் பற்றி அடிக்கடி கதைசொல்வான். பெரிய மீசை! பூதம் மாதிரி கண்கள்! அய்யனார் கை அரிவாள் மாதிரி மூக்கு! கிரிக்கெட் பந்து மாதிரி கண்கள்! விழித்துப் பார்த்தார் என்றால் எதிராளி பொசுங்கிப் போவான்.”

வீதி முன்னேறி இருந்தது. கூரைக் குடிசைகள் தகரவீடுகளாகவும் ஓட்டு வீடுகள் சிமெண்டு கட்டிடங்களாகவும் வளர்ந்திருந்தன. இடைளி இல்லாமல் நெருக்கிக் கட்டப் பட்டிருந்தன. ஊடுபாவாய் சின்னச் சின்னக் கடைகள்!

அதோ அந்தச் சாவடி! அப்பாவும் மற்றவர்களும் இருந்து சொல்லாடக் கூடிய இடம். புதிய புதிய வஷயங்கள் பரிமாறிக் கொள்ளப் படும். பெரியவர்கள் பேசுவதைத் தங்கராசு கூர்மையாகக் கேட்பான்.

நிறைய விஷயங்கள் பிடிபடும். ஒருமுறை அப்பாவும் மற்றவர்களும் பேசிய சங்கதி மனசில் எதிரொலித்தது.

“ராமர் தேசத்துல ராவுத்தர் கோயில இடிச்சிட்டாங்களாமே: ஏன்?”

“ஆமா” என்றார் இன்னொருவர். “முன்னொரு காலத்துல பாபர் ராசா நாடாண்ட நேரத்துல ராமர் கோயில இடிச்சுட்டு அவுக சாமியக் கொண்டாந்து வச்சுட்டாகளாம்: அதாம்.”

“அவுகளுக்கு ஏதுப்பா சாமி?” என்று மற்றொருவர் இடைமறித்தார். “அவுகளுக்கு சாமியும இல்ல: பூதமும் இல்ல.”

“அப்பறம் எதுக்கு கோயிலு? ரோட்டுல நின்னே கும்பிட்டுப் போயிரலாமே.”

“அதுதான் ஒனக்கு அறிவு மட்டம்குறது: ஒரு டீ குடிக்யணும்னாலும் கூட நெழல் வேணும்குற: சாமியப் போயி ரோட்டுல நின்னு கும்பிடுவாகளா?”

இப்படியாக வளர்ந்தது உரையாடல்.

“நம்ம கோயில மொதல்ல இடிச்சுட்டானுக: இப்ப நாம இடிச்சுட்டோம். சரியாப் போச்சு என்ன்றார் அப்பா.

அமைதியாக உட்கார்ந்திருந்த விசுவாசம் தாத்தா வாய்திறந்தார். “போடா பொக்குப் பயலே” என்று திட்டினார். “நாமெல்லாம் மனுசங்கப்பா: நல்லத நெனவு வக்யணும்: பொல்லத மறந்துரணும்: அதுதான் நாயம்.”

அப்பா தனது குணத்துக்குத் தகுந்து கடைசிவரை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்த வாதம் இவனுக்குப் புதுப் பாடம் படித்த மாதிரி இருந்தது.

மண்டபத்தை ஏறிட்டுப் பார்த்தான். திறந்த அரங்கமாய் இருந்த அது கதவுகளால் மூடப் பட்டிருந்தது. கூரை நெற்றியின் வெள்ளை எழுத்துக்கள் ஒரு ஜாதிக்குச் சொந்தமானது என அறிவித்துக் கொண்டிருந்தன.

“தாத்தா வீடு எங்கப்பா?” பூங்கொடி கேட்டாள்.

அதோ! வலதுபக்க சந்துக்குள் ஒடுக்கமான இடைவெளியைத் தாண்டி விஸ்தாரமான தகரவீடு! வாசலில் பந்தல் போடப் பட்டிருந்தது. நாற்காலிகளில் உற்றார் உனறவினர் அமர்ந்திருந்தனர். சீரான இடைவெளி விட்டு தமுக்கு தட்டப் பட்டது. மரணத்தால் உண்டான மௌனத்தை அந்தச் சத்தம் மேலும் கனக்கச் செய்தது.

இன்னொரு பக்கம் சங்கூதி ‘பூஊஊஊம்’ என ஊதிக்கொண்டிருந்தான். வேஷக்காரர்களும் ஆட்டக்காரர்களும் வந்து நின்றிருந்தார்கள். நாதஸ்வரம், கொட்டுமேளம், ஸ்ருதிப் பெட்டி, சிங்கி ஆகியவை வந்துவிட்டன. இன்னும் சிறிதுநேரத்தில் சாவுவீடு களேபரப் பட்டுவிடும்.

உள்ளே நுழைந்தான். “மாமா” என அலறியபடி சசிகலா ஓடினாள். பெண்களின் ஒப்பாரிக் கூட்டத்தில் அவளும் உட்கார்ந்துகொண்டாள்.

கேரிபேகிலிருந்து மாலையை உருவி எடுத்தான். நெடுகமான ஜம்பங்கி மாலை: ரோஜாவும் மல்லியும் கலந்து கட்டப் பட்டிருந்தது.

கிழக்குச் சுவரில் சாத்தப் பட்டிருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்தான். நெற்றியில் கால்ரூபா நாணயம் பொட்டுப் போல வைக்கப் பட்டிருந்தது. சாப்பிடாமல் கிடக்கும் சிங்கம்போல் அப்பா முகம் வாட்டமாய் இருந்தது. கண்ணீர்த் துளிகள் பார்வையை மறைக்க, மாலை போட்டுவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டான்.

சாகுமுன் அவரைப் பார்க்க முடியவில்லை: அவரே பார்க்க விரும்பில்லையா, அல்லது அண்ணன் தடுத்துவிட்டாரா? தெரியவில்லை. ஒருவேளை அவர் என் நினைவைச் சுமந்தபடியே செத்திருக்கக் கூடும். மனக் குழப்பத்தோடு வெளியே வந்தான்.

பெண்கள் கூட்டத்தில் இருந்து பார்வதி ஆச்சி எழுந்து பின்னால் வந்தது. “வந்துட்டியா பேராண்டி” என்றபடி அவன் கைகளை இறுக்கிப் பிடித்தது. வசதியா அன்னந்தண்ணி தந்திருந்தா ஆறுமாசமோ ஒரு வருஷமோ தாக்குப் பிடிச்சிருப்பாரு: தொளசித் தீத்தம் ஊத்தியே கொன்னுட்டாம்பாவி.”

அழுகை முட்டியது: ஆச்சியைப் பிடித்துக் கொண்டு கேவிக் கேவி அழுதான். ஒருசிலர் கைத்தாங்கலாய்ப் பிடித்துவந்து நாற்காலியில் அமர்த்தினர்.

 

‘அய்யாமாரே! அம்மாமாரே!

அருமையுள்ள அக்காமாரே’!

 

என்று ஆடிக் கொண்டே பாட ஆரம்பித்தான் வேஷக்காரன்.

 

‘எது கேட்டாலும் தருவாரு

எங்க பெரிய அய்யா.

பொன் கேட்டாலும் தருவாரு:

பொருள் கேட்டாலும் தருவாரு:

ஒன் சொத்து பூராவும்

வேணும்னு கேட்டாலும்

சொத்துப் பூராவுக்கும்

கையெழுத்துப் போடுவாரு.

கதையக் கேளுங்க,

அய்யாவோட கதையக் கேளுங்க:

சிவராசன் வந்தாரு:

நஞ்சபுஞ்ச கேட்டாரு:

எடுத்துக்கோ இன்னு சொல்லி

கைநாட்டுப் போட்டாரு.

பிரம்மராசன் வந்தாரு:

ஒந்தல வேணுமின்னாரு:

தந்தேன்னு சொல்லிக்கிட்டு

கிட்டத்துல வந்தப்ப

யமதர்ம ராசன் கேள்விப் பட்டாரு:

ஒன் உயிரெனக்கு வேணும்னு எடுத்துக்கிட்டாரு.

அய்ய்யயோ கொண்டுகிட்டுப் போயிட்டாரு.”

 

கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை அப்பா முகத்தைப் பார்க்க உன்னே எழுந்து போனான்.

“நில்லுடா!”

திரும்பிப்பார்த்தான். அண்ணன்!

தோள் சட்டையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார். “யாருடா நீ?”

பேசவில்லை. நடுக்காட்டில் வழிதவறிய சிறுவன்போல திருதிருவென விழித்தான்.

“வம்ச கவுருதிய அழிச்சுப் போட்டு, எலும்புத் துண்டு கெடக்யும்னு வந்திருக்கியாக்கும்?”

நாலைந்துபேர் ஓடிவந்தார்கள். அண்ணனை அந்தப் பக்கம் இழுத்தார்கள்.

விசும்பினார் “இவன நான் கொல்லாம விடமாட்டேன். அய்யா சாவுக்கு இவந்தான் காரணம்.”

சும்மா நின்றிருந்த இவனையும் நாலுபேர் விலக்கிவிட்டார்கள்.

கிடா மீசைக்காரர் ஒருவர் வந்தார். “காரியம் முடியட்டும்ப்பா, பேசிக்கிருவோம்” என்றார்.

“இல்ல நாட்டாம: இவன் இந்த வீட்டு வாசலை மிதிச்சதே பெரும்பாவம்: அய்யாவோட ஆவி ஏத்துக்கிடாது: அவரோட நெஞ்சுக்கூடு வேகாது.” என்று சொல்லிக் கொண்டே தங்கராசுவைத் தள்ளிவிட்டான். மதிலில் முட்டி நின்றான் அவன்.

“அடப் பாவி சண்டாளா”” என்று திட்டிக் கொண்டே பார்வதி ஆச்சி ஓடிவந்தது. தங்கராசுவைத் தூக்கி நிறுத்த்தித் தலையை நீவிவிட்டது.

“தெழவி! ஒன்ஜோலியப் போய்ப் பாரு.”

“நல்லதுல இல்லைன்னாலும் பொல்லதுல கூடணும்: ஒரே ரத்தம் இல்லயா?”

“அந்த ஓராசம் அன்னக்கி இருந்திருக்கணும்.”

நாட்டாமை மீசையை நீவிவிட்டுக் கொண்டார். கோபக் குறி தெரிந்தது. அண்ணனைக் கூப்பிட்டார். “நான்  சால்றதக் கேக்கப் போறியா இல்லியா?”

“மன்னிச்சுக்க நாட்டாம: எங்கய்யாவோட சொல்லுதான் வேத மந்திரம்: இவன் எழவுல விழுகக் கூடாதுன்னு சொல்லிட்டு செத்திருக்காரு.”

“இருக்கட்டும்ப்பா: இப்ப அவரு தெய்வமாயிட்டாரு; தெய்வ சன்னதியில எல்லாருக்கும் மன்னிப்பு உண்டு.”

பற்களை நறநறவென்று கடித்தார் அண்ணன். உலகம் முழுவைதயும் மிதித்து நசுக்கிவிட வேண்டும் போன்ற ஆத்திரத்தோடு அழுத்திப் பதித்து நின்றார். “இவனோட திட்டம் என்னன்னு எனக்குத்தான் தெரியும்.”

“சொல்லு பாப்போம்” என்றது பார்வதி ஆச்சி.

“கொள்ளி வச்சுட்டு இருக்குற சொத்துபத்துகள அள்ளிட்டுப் போகலாம்னு வந்திருக்கான்.”

“அவனும் ஒங்கூடப் பொறந்தவன்தான?”

“இல்ல! குடுக்கமாட்டேன்: அய்யா கையெழுத்துப் போட்ட கடுதாசி என்னிட்ட இருக்கு: சல்லிப் பைசாகூட தரக்கூடாதுன்னு……….”

தங்கராசுவுக்குக் குபீரென்றது. சசிகலாவோடு பழகியபோதும் வீட்டைவிட்டு வெளியேறியபோதும்காசு ஞாபகம் வரவில்லை. அண்ணன் இப்போதுதான் ஞாபகப் படுத்துகிறார்.

சசிகலா வெளியில் வந்தாள். நெடுஞ்சாண் கிடையாய அண்ணன் காலில் விழுந்தாள். “மன்னிச்சுக்கங்க மாமா.” அழுது புலம்பினாள்.

பார்வதி ஆச்சி தூக்கி நிப்பாட்டியது: கூந்தலைக் கோதிவிட்டு முகம் துடைத்தது. “கண்ணத் தொடச்சுக்க தாயி.”

“மாமா” என்று மென்மையாக அழைத்தாள். குழந்தைகள் அப்பாவையும் பெரியப்பாவையும் மாறிமாறிப் பார்த்தன.

எல்லா முகங்களும் இவர்களை நோக்கின. ஆட்டக்காரனும் ஆட்டக்காரியும் ஒருகணம் நின்றனர். நாதஸ்வரம் மெளம் காத்தது. உள்ளறையில் ஒப்பாரிச் சத்தமும் ஓய்ந்ததுபோல் இருந்தது.

“காசுபணம், சொத்துசொகம் எல்லாத்தையும் நீங்க வச்சுக்கங்க: கொள்ளி வக்கிறதுக்கு மட்டும் அனுமதி குடுங்க மாமா.”

தாய்க்குத் தலைமகன், தந்தைக்கு இளைய மகன் என்ற கோட்பாடு முன்னுக்கு வந்தது.   அண்ணன் வெதும்பி நின்றார். எல்லார் முகத்திலும்மௌனமான பதட்டம். பணத்துக்காக ஒருவனும் உரிமைக்காக இன்னொருவனும் வாள்வீசத் துணிகிற போர்க்களம் அவர்கள் கண்முன்னால் விரிந்து நின்றது.

“முடியாது” என்று கர்ஜித்தார் அண்ணன்.

பார்வதி ஆச்சி தங்கராசுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது.

“தொளசிச் சாறு ஊத்தி அப்பனக் கொன்னவன் நீ: கொள்ளி வக்யக் கூடாதுன்னு சொல்ல ஒனக்கு என்னடா ஓக்யத இருக்கு?”

உறவுக் கூட்டம் இரண்டாகப் பிளந்தது. போர்க்களத் தோற்றம் உக்ரமடைந்தது. தங்கராசுவுக்கும் அண்ணனுக்கும் ஆதரவாய்க் குரல்கள் மோதின.

தங்கராசு முன்னே வந்தான். அப்பா இருந்த திசையைக் கையெடுத்துக் கும்பிட்டான். அன்பரசனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினான். பூங்கொடியின் கையைப் பிடித்துக் கொண்டு சசிகலாவும் பின்தொடர்ந்தாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top