உறவுப் பாலங்கள்………

5
(2)

நான் வாக்கப்பட்டு வந்த காலத்தில் ஊர்ல கண்டதுல பாதி ஆளுக இந்த ஆட்டு ஒரல்லதான் மாவாட்டுவாங்க. நல்ல நாள், திருநாள்னு வந்துட்டா நாங்களே ஆட்ட முடியாது. நானும் எங்க மாமியாளும் ஆட்டி முடிக்க தலைக்கோழி கூப்புட்டிரும்…. ஹிம்… இப்பெல்லாம் எவ ஆட்டுறா…….. இப்பிடி கரண்டு கிரண்டு இல்லாத நாள்லதான் ஆட்டொரலு அரும தெரியும்” ஆட்டிய மாவை அள்ளிப் போட்டவாறே பழம்பெருமை பீத்தினாள் பின்னியம்மா கெழவி.

 

மாமியார் என்ன சொன்னாலும் தலையைத் தலையை ஆட்டுவாள் மருமகள். மாமியாருக்கு சந்தோசம் என்றாலும் கோபம் என்றாலும் இந்த மருமகளிடம் தான். சாதாரணமா கோபம் வராது. வந்தால் ஆங்கார ஓங்காரமாய் கொப்பளித்துக் கொண்டு வரும்.

 

நல்ல தண்ணிக்குழாய்….. உப்புத் தண்ணிக்குழாய் என எல்லா இடத்திலும் சண்டை போட்டு கடைசியில் மருமகளை ஒரு முட்டு முட்டிய பிறகே கோபம் மலையேறும். ரெண்டு நாளைக்கு பேச்சு வார்த்தையே இருக்காது. பிறகு சாடை மாடையாய் தொடங்கி அடுத்த நாள் சாவகாசமாய் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் .

பின்னியம்மா கெழவிக்கு ஐந்து பிள்ளைகள். எல்லாருமே ஆண்பிள்ளைகள். ஆண்பிள்ளைப் பெற்ற கர்வம் பின்னியம்மாளுக்கு. மாமியார் உயிரோடு இருந்த காலத்திலேயே மாமியாரிடம் நல்ல செல்வாக்கு. மாமியார் போய் சேர்ந்த பிறகு இந்தம்மா தான் நாட்டாமைத்தனம். இந்தம்மா தான் மூன்று தோட்டத்திற்கும் வேலைக்கு ஆள்அனுப்பி, வீட்டுல கஞ்சி காய்ச்சி, பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி தானும் தோட்டத்திற்கு போகும். ஒரு நாள் ஒரு பொழுது ஓய்வு எடுத்தது கிடையாது வெள்ளாமை வரும் காலங்களில் செங்கமல்லான நேரத்தில் தொடங்கி, நடுச்சாமம் வரையில் புருசனோடு தோட்டத்தில் இருந்து வெள்ளாமையைக் கொண்டு வருவாள்.

 

வீட்டுக்காரர் சாகும்போது பெரியவனுக்கு பதினேழு வயது. பனிரெண்டாவது படித்துக் கொண்டிருந்தான். சின்னவன் நாலாவது படித்துக்கொண்டு இருந்தான்.  ”புருசன் செத்த பிறகு நண்டும், சுண்டக்காயுமா இருந்த பிள்ளைகள படிக்கவச்சு, வாலிபமாக்கி, கலியாணம் முடிச்சு கவுரவமா ஆளுக்கொரு வேலையில ஒக்கார வச்சிருக்கால்ல.. பெறகு திமிரா பேசமாட்டாளா” என்று தண்ணிக் குழாயிலும், தோட்டக்காடுகளிலும் பின்னியம்மாவைப் பற்றி பேசுவார்கள்.

 

மூத்தவன் திருச்சிக்கு பக்கத்துல வாத்தியாரா இருக்கிறான். இரண்டாவது மகன் பட்டாளத்துல இருக்கான். நடுவுலவன் ஒழுங்கா படிக்காம கிழவி கூடவே வெவசாயத்தப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். நாளாவது ஆள் கோயம்புத்தூர் மில்லில் மேனேஜர். கடைசி ஆள் சென்னைவாசி. கெழவி யார் வீட்டுக்கும் போக மாட்டாள். பெரியவன் பொண்ணு வயசுக்கு வந்த நேரத்துலதான் திருச்சிக்குப் போனாள். ரெண்டுநாள் இருந்து, கொள்ளிடம், கல்லணை, மலைக்கோட்டை எல்லாம் பார்த்திட்டு வந்தாள். அவளோட எல்லா நெனப்பும் மூணாவது மகனும் மருமளும் தான்.  ”ஏள மாட்டாதவன்…. இவனுக்கு வக்கப்பட்டவளும் வாய்செத்த கழுத. இதுக தணியாபோயி என்னத்தப் பொழைக்கும்?” என்று கரிசனத்தோடு சொல்வாள்.

 

வைகாசி மாசம் நடக்கும் காளியம்மன் திருவிழாவுக்கு எல்லோரும் வந்தாகணும். இது கிழவியின் கட்டளை. நாளைக்குத்தான் பொங்கல். விருந்தாளிகளுக்கு இட்லி சுடுவதற்காகத்தான் மாமியாரும் மருமகளும் மாவாட்டினார்கள். கரண்ட் வந்து ரேடியோ பாடிக்கொண்டிருந்தது. பொழுது அடிசாயத் தொடங்கிய நேரம். திருவிழாவுக்கு விருந்தாளிகள் வரத்தொடங்கினார்கள். பின்னியம்மாள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வடக்கு நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மிலிட்டரிகாரன் பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வருவது தெரிந்தது. ஓடிப்போய் பேரனைத் தூக்கினாள் ”என்னத்தா மெலிஞ்சு போயிட்டே”என்று வழக்கம்போல் கேட்டான். ஆத்தாளும் மகனும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த கொஞ்ச நேரத்துலேயே திருச்சிக்காரனும், கோயம்புத்தூர்க்காரனும் வந்து சேர்ந்தார்கள். தனது வம்சத்தின் முதல் பிள்ளையான மூத்தவன் மகள் நல்ல்ல வளத்தியாய் சுடிதாரில் நின்றதைப் பார்த்து கெழவிக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாயும் பிள்ளைகளும் திண்ணையில் பேசிக் கொண்டிருக்க வீட்டுக்குள் மருமக்களின் சிரிப்பொலி கேட்டது. உள்ளூர் பேரன்களும், வெளியூர் பேரன்களும் ”பந்தல்ல போயி வெளையாடுறோம்”ன்னு சொல்லிவிட்டுச் சென்றார்கள். ”இன்னக்கி  நடுச்சாமத்துக்கு மேல சாமி தூக்கப் போவாங்க. செங்கமங்கல நாம மாவௌக்கு எடுத்துட்டுப் போகணும்” கிழவி மருமகள்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

கோயம்புத்தூர்காரியும், உள்ளுர்க்காரியும் பச்சரிசி இடித்துக் கொண்டிருந்தார்கள். வாத்தியார் பொண்டாட்டியும், மிலிடரிக்காரன், பொண்டாட்டியும் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். மகன்கள் வேடிக்கை பார்க்கப் போய்விட்டார்கள் சென்னைக்காரன் குடும்பம் மட்டும் காலையில் வருவதாய் போன் செய்துள்ளான்.

தன்னோட பேரப்பிள்ளைகளின் பேச்சையும் விளையாட்டையும் பின்னியம்மா ரசிச்சுப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாத்தியார் மகள் கிழவியின் மடியில் வந்து படுத்துக்கொண்டாள். பேத்தியின் தலைமுடி கோதியவாறு  ”எங்க மாமனும், மாமியாரும் கலியாணம் முடிச்ச புதுசுல தேனியில போயி போட்டா புடிச்சாங்க. சின்ன வயசுல எங்க மாமியா ஒன்ன மாதிரியே இருந்தாங்க” என்றாள்.

”ஒங்க மாமியா எனக்கு என்ன முறை வேணும் பாட்டி” பேத்தி கேட்பாள்.

”எங்க மாமியா ஒங்க அப்பனுக்கு பாட்டி,  ஒங்களுக்கு பூட்டி!”

”பூட்டின்னா.. ?”

”பூட்டின்னா.. பூட்டிதே… பாட்டிக்கு முன்னால பூட்டி!”

”போங்க பாட்டி, ஒங்களுக்கு நல்லா விளக்கம் சொல்லத்தெரியலை” என்று சொல்லிக் கொண்டே எழுந்து வீட்டுக்குள் சென்று தன் தாயிடம் கேட்டாள்.

 

றுநாள் விடிந்தும் விடியாத நேரத்துல் மாவிளக்கு எடுக்க எல்லோரும் தயாரானார்கள் ”இந்த வருசம் எம் பேத்திதான் மாவௌக்கு தூக்கணும்”என்று பின்னியம்மாள் சொல்லிவிட்டாள். மிலிட்ரிக்காரன் பொண்டாட்டியும், கோயம்புத்தூர்காரியும் பட்டுச்சேலைகளும் நகை நட்டுகளுமாய் பளபளத்தனர்.

வாத்தியார் பொண்டாட்டி தன் மகளுக்கு பட்டுச்சேலை கட்டி விட்டு நகைகள் பூட்டி விட்டாள். அடுப்படியில் வேலை செய்துகொண்டிருந்த உள்ளூர்க்காரியிடம்,  ”நீ போய் மொதல்ல குளி. நா அடுப்பப் பார்த்துக்கிறேன்.” என்றுசொல்லி அனுப்பினாள்.

குளித்துவிட்டு வந்தவள் பழைய சேலை ஒன்றை எடுத்துக்கொண்டு உள்வீட்டுக் சென்றாள். இதைப் பார்த்த வாத்தியார் பொண்டாட்டி ”நல்ல நாளும் அதுவுமா நீ ஏன் பழைய சேலையக் கட்டுறே.. இந்தா இதக்கட்டு” என்று தனக்காக வாங்கியிருந்த புதுச் சேலையைத் தந்தாள். ”ஒங்களுக்கு ஆசையா வாங்குனது. நீங்க கட்டுங்கக்கா” என்று மறுத்தாள். ”ஆமாடீ…. வயசுக்கு வந்த புள்ளய வச்சிருக்குற நான் புதுச் சேலை கட்டணும். கொஞ்ச வயசுக்காரி நீ பழைய சேலை  கட்டணுமாக்கும்…. இந்த சேலை உன்ன நெனச்சுத்தான் வாங்கினேன் என்னவிட ஒனக்குத்தான் நல்லா இருக்கும்” என்று சொல்லிவிட்டு ”உள்ளுர்க்காரி வெறும் கழுத்தோட இருந்தா ஒரு மாதிரியா பேசுவாங்க. இந்த செயினைப் போட்டுக்கோ” என்று கழுத்தில் கிடந்ததைக் கழற்றிக் கொடுத்தாள். ”அக்கா ஒங்க கழுத்து சும்மா இருக்கே.” என்று தயங்கினாள். ”’அடியே நான் டவுன்ல இருந்து வந்திருக்கேன். எப்பிடி இருந்தாலும் மாடல்தான். எங்க நாலு பேர்முன்னால நீ வேறும் கழுத்தோட நின்னா அத்தை சங்கடப்பட மாட்டாங்களா… நீ நல்லா இருந்தாத்தாண்டி இங்க வந்து போற எங்களுக்கும் மரியாதை”  என்று சொல்லிக்கொண்டே பூவை எடுத்து அவள் தலையில் வைத்தாள்.

 

எல்லோரும் சாமி வீட்டுக்குள்   சென்றார்கள். பெரிய பித்தளைத் தட்டில் மாவை வைத்து, அதில் வட்டமாய் குழி வைத்து, நல்லெண்ணையை பின்னியம்மாள் ஊற்றினாள் தன் குல தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு குத்துவிளக்கை ஏற்றி, அதிலிருந்து ஒளி எடுத்து  மாவிளக்குத் திரிகளில் பற்ற வைத்தாள். மருமகள்களும் மாமியாருக்கு உதவி செய்தார்கள். மாவிளக்கு சுமக்க மட்டுமே பயம்படுத்தும் வெள்ளைத் துண்டை மரப்பெட்டியில் இருந்து எடுத்து சுருமாடு கூட்டி பேத்தியை இரண்டு கைகளையும் நீட்டச் சொல்லி சுருமாட்டை அதில் வைத்து மாவிளக்குத் தட்டைத் தூக்கி வைத்தாள். மாவிளக்கு ஒளியில் மின்னிய தனது  பேத்தியின் முகம் பார்த்துப் பார்த்து பின்னியம்மாள் ஆனந்தப்பட்டாள். மாவிளக்கு எடுத்த எல்லாப் பெண்களும் ஒன்று சேர ஜெகஜோதியான வெளிச்சத்தில் மாவிளக்கு ஊர்வலம் நகர்ந்தது.

 

மாவிளக்கு எல்லாம் எடுத்து முடித்துவிட்டு, எல்லோரும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது மெட்ராஸ்காரனும், பொண்டாட்டி பிள்ளைகளும் வந்து சேர்ந்தனர். மதியம் எல்லோருக்கும் கிடா கறியும் சோறும் ஆக்கப்பட்டது. கறிக்குழம்புக்காக மசால் எல்லாவற்றையும் பின்னியம்மா தனி ஆளாய்  வறுத்து அரைத்து குழம்பு வைத்தாள். எலும்புகளைத் தனியாய் பிரித்து பேரப்புள்ளைகளுக்கு சூப் போட்டுக் கொடுத்தாள்.

 

சமையல் வேலையெல்லாம் முடிந்த பிறகு குளித்து விட்டு மெட்ராஸ்காரனின் பொண்டாட்டி தந்த புதுச் சேலையைக் கட்டிக் கொண்டாள்.

 

”என்ன பாட்டி நீங்க மட்டும் பரவை முனியம்மா ஸ்டைல்ல சேலை கட்டுறீங்க” என்று பேத்தி கேட்டாள் ” இது பின் கோசுவம் வச்சு கட்டுற பழக்கம். இப்பிடி கடடுனாத்தான் ஓடியாடி வேலை செய்யிறப்ப கால் தட்டாம இருக்கும்” என்றாள்.

”என்னைய மாதிரி சுடிதார் போட்டா இன்னும் வசதியா இருக்குமே”

”போடலாம்…. ஒங்கப்பன் ஒனக்கு சுடிதார் வாங்கிக் குடுத்த மாதிரி எங்கப்பன் எனக்கு வாங்கிக் குடுக்கலையே…….”  ரெண்டுபேரும் பேசுவதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.

மிலிட்ரிக்காரன் மெல்லப் பேச்சை எடுத்தான்.

”நாளைக்கு காலையில நாங்க கௌம்புறோம்.”

ஒருத்தரும் பேசாமல் இருந்தார்கள். கிழவி தொண்டையைச் செருமிக்கொண்டு பேசினாள். ”வந்ததும் சுட தண்ணிய கால்ல ஊத்துனமாதிரி கௌம்பாட்டி, ரெண்டு நாளைக்கு இருந்துட்டுப் போனா என்ன?”

”இல்ல ஆத்தா….. லீவு முடியப்போகுது. நாளைக்குப் போயி அப்பிடியே கௌம்பணும்.”

”சரி பெறப்படத் தயாராகு” என்று சொல்லி முந்தானையை உதறி எழுந்தவளை, ”ஆத்தா.. குத்தகைப் பணம்….”’ என்று தயங்கிய குரலில் கேட்டான். உள்ளூர்காரனுக்கு இப்போது ‘சுருக்’ கென்று தைத்தது. ஆளுக்கு ஒரு ஏக்கர் என்று பங்கு போட்டபின் எல்லா நிலத்தையும் இவனே குத்தகை கொடுத்து விவசாயம் பார்க்கிறான். இந்த வருடம் விளைச்சலே சரியில்லை. ஊருக்குள் வாங்கிய கடனுக்கே வட்டி கட்ட முடியாமல் கிடக்கும்போது குத்தகை எப்படி கொடுப்பது?

 

”நெலத்தை யாருக்காவது குத்தகைக்கு விட்டுட்டுப் போங்க. என்னால குத்தகை குடுத்து விவசாயம் பண்ண முடியல. என் பங்கையும் ஒத்திக்கோ, குத்தகைக்கோ விட்டுட்டு நான் குடும்பத்தோட திருப்பூருக்குப் போகலாம்னு இருக்கேன்.  எனக்கு பணம் கெடச்சா ஒங்களுக்குத் தரவேண்டிய பணத்தை மொத்தமாக் குடுக்குறேன்” தொண்டையைச் செருமிக்கொண்டு தலைகுணிந்தவாறே பேசினான்.

 

அந்த ஒரு நிமிடத்தில் குடும்பத்தின் மொத்தக் கலகலப்பும் நொறுங்கிப்போனது. அவரவர் வேலைகளைப் பார்க்கப் போனாலும் பின்னியம்மாள் உட்கார்ந்த இடத்தை விட்டு எழவேயில்லை. தான் பெத்த பிள்ளைகளில் ஒருவன் மற்றவர் முன் தலைகவிழ்ந்து நின்றதும், மருமகள் வீட்டுக்குள் உட்கார்ந்து விசும்பி விசும்பி அழததும், ஒன்றும் புரியாமல் பேரப்பிள்ளைகள் பேந்தப் பேந்த விழித்ததும் பின்னியம்மாளின் சந்தோசங்களையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டது.

 

இரவு சாப்பாட்டுக்கு வாத்தியார் பொண்டாட்டி அரிசி கழுவிக் கொண்டிருந்தாள்.  அம்மாவிடம் உட்கார்ந்த வாத்தியார் மகள், ”ஏம்மா நம்ம நடு சித்தப்பா மட்டும் எப்பவுமே சோகத்தோட இருக்காரு” என்று கேட்டாள். மதியம் நடந்த விசயங்கள் தன் மகளையும் பாதித்திருக்கலாம் என எண்ணிய வாத்தியார் மனைவி, ”மத்த நாலு பேரும் நல்லா படிச்சு நிரந்தரமான வேலையில இருக்காங்க. பாவம் அவரு படிக்கல. விவசாயமும் சரியில்லை. அதனாலதான் கவலையோட இருக்காரு” என சமாதானம் சொன்னாள்.

 

”நடுச் சித்தப்பாவை மட்டும் பாட்டி ஏன் படிக்கவைக்கலை?”

”பாட்டி எல்லாரையும்தான் படிக்க வைச்சாங்க. அவரு மட்டும் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டு விவசாயம் பார்க்கப் போயிட்டாரு.”

”நம்ம தம்பி அடுத்த வருசம் டென்த் படிக்கலைன்னு சொன்னா நீங்களும் அப்பாவும் சும்மா இருப்பீங்களா?”

இந்த கேள்விக்கு வாத்தியார் பொண்டாட்டியால் பதில் சொல்ல முடியவில்லை.

”தாத்தா இறந்த சமயத்துல வெவசாயம் பார்க்க ஒரு ஆள் தேவைப்பட்டுச்சு. அதுக்கு நடுச்சித்தப்பா பயன்பட்டாரு. மத்தவங்க படிக்க இவரு உழைச்சாரு. ஆனால் இப்ப  இவரு கஷ்டத்துல இருக்குறப்ப  அவரால படிச்சவங்க யாரும் இவருக்கு  உதவல. ஆர்மி சித்தப்பா குத்தகப் பணம் கேட்டப்ப, அவரு மனசு பட்டபாட்ட நான் நேர்ல பார்த்தேம்மா. எனக்கு மனசு கேட்கலம்மா.. பாவம் சித்தியும் சித்தப்பாவும்…” அழுது கொண்டே கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

 

இரவுச் சாப்பாடு முடிந்ததும், ”எல்லாரும் கொஞ்சம் உட்காரலாம். ஒரு முக்கியமான விசயமாப் பேசணும்” என்றாள் மெட்ராஸ்காரி. எல்லோரும் உட்கார்ந்தார்கள். வாத்தியார் பொண்டாட்டி தான் பேசினாள். ”மத்தியானம் நெலத்து குத்தகை சம்மந்தமா எல்லாரும் பேசுனதை நானும் கேட்டேன். விவசாயம் சரியில்லை. அதுக்கு நடுவுலவர் என்ன செய்வாரு?. மத்த நாலு பேரும் நல்லாத்தானே இருக்கோம். இந்தக் குத்தகைப் பணத்தை வாங்கித்தானா நாம் பொழப்பு நடத்தணும்? குடும்பத்துக்காக கஷ்டப்பட்டவரு நடுவுலவரு. அவரை குடும்பத்தோட பஞ்சம் பொழைக்க திருப்பூருக்கு அனுப்பிட்டு நாம எப்பிடி நிம்மதியா இருக்க முடியும்?  அதனால  இனிமேல் யாரும் குத்தகைப் பணம் கேட்கக் கூடாது. அவருக்கு எவ்வளவு கடன் இருக்கோ அதை மத்த நாலுபேரும் சேர்ந்து அடைச்சிடணும். பூர்வீக மண்ணுங்கிற ஒரு பந்தத்துல நாம எல்லாரும் இங்க வந்து போறதுக்கு நடுவுலவரும் புஷ்பமும் பாலமா இருக்காங்க. அந்த நன்றிக்கடனுக்காகவாவது நாம் இதைச் செஞ்சே தீரணும். இன்னொரு பிறவியில இப்பிடி ஒண்ணாவா பெறக்கப்போறோம்?. சித்தப்பா… சித்திங்ற பந்தம் அடுத்த தலைமுறைக்கு வாய்க்குமா?  வாழற காலத்துல ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து சந்தோசமா வாழலாமே” வாத்தியார் பொண்டாட்டி பேசப் பேச பின்னியம்மாளுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

(கல்கி சிறுகதைப் போட்டி-2013ல் பிரசுரிக்கத் தேர்வானது)

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 thought on “உறவுப் பாலங்கள்………”

  1. ந.ஜெகதீசன்

    இந்த சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புலம்பெயர்ந்து பொருளாதாரத்தில் சிறப்பாக விளங்கும் சகோதரர்கள் தங்களது உடன்பிறந்த ஏழ்மையான சகோதரர்களை எப்படி அணுகவேண்டும் என்று முத்தாய்ப்பாக சொல்லப்படுகிறது.

    கதையில் எதார்த்தத்தை சொல்லும் கதாசிரியர் தமது உள்ள விருப்பத்தைக் கொண்டு கதையை முடித்திருப்பது சிறப்பு. என் விருப்பமும் அதுவே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: