உதிர்வதற்கல்ல முதுமை

0
(0)

“கேஸ் ஸ்டவ் ரிப்பேர், மிக்சி ரிப்பேர், டேபிள்பேன் ரிப்பேர், என்று திரும்பத்திரும்ப ஒலி எழுப்பியபடி ஒரு சிறு வண்டி வந்து வாசல் முன் நின்றது. லட்சுமி சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பதினொன்று. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி வாரத்திற்கொருமுறை இவ்வளவு சரியாக இவர்களால் வர முடிகிறது! என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள்.

டிவிஎஸ்எக்ஸெல் வண்டியில் அமைக்கப்பட்ட அந்த மூன்று சக்கரவண்டியிலிருந்து வயதான அம்மா இறங்கினார். தன்னோடு ஒரு பெரிய கித்தான் பையை இறக்கினார். அப்பையில் ஊறுகாய் பாட்டில்கள் பத்து பனிரெண்டு இருக்கும். வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. லட்சுமியின் வீடு அத்தெருவில் மையமாக அமைந்திருந்தது. விரிந்த வேப்பமரம் வெயிலை உறிஞ்சி நிழலை பரப்பியது அதன் கீழ் ஒதுங்கி பத்துபேர் நின்றாலும், அத்தெருவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத தெரு. அவ்வீட்டின் முன் அமைந்த சிறுதோட்டம் குளிர்ச்சியையும், மன அமைதியையும் ஏற்படுத்தியது.

வயதான பெண் இறங்கியதும் வண்டியை ஓட்டி வந்த வயதான பெரியவர் மீண்டும் ஒலிநாடாவை ஒலிக்கச் செய்தார் “கேஸ் ஸ்டவரிப்பேர், மிக்சி ரிப்பேர், டேபிள் பேன் ரிப்பேர்,” என்று தொடர்ந்து மும்முறை முழங்கியது அதனைத் தொடர்ந்து “மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், ஆவக்காய், நார்த்தங்காய். நெல்லிக்காய் ஊறுகாய்,” என்று ஒலிக்கச்செய்தார் பெரியவர். பின்னர் வண்டியை இயக்கி சத்தமாக மேற்சொன்னபடி ஒலிக்கச் செய்தபடியே அந்தத் தெருவின் தெற்கு முனைவறை சென்று, திரும்பி வடக்கு முனைவரை சென்று பின் அத்தெருவின் நடுவிலுள்ள அந்த வேப்பமரநிழல் முன் ஓரமாய் நிறுத்தினார் பெரியவர். அதற்குள் அந்த பாட்டி அம்மாள் கீழே சிந்தியிருந்த வேப்பஞ்சருகுகளைக் கூட்டி ஒரு பையில் அள்ளினார். பக்கத்திலிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து பரவலாக தெருவில் தெளித்தாள் புழுதி அடங்கிய மண் மணந்தது! தன்னிடமிருந்த மடக்கு அலமாரியினை விரியச் செய்து அதன் நான்கு அடுக்குகளிலும் ஊறுகாய் பாட்டில்களை அடுக்கியிருந்தார்.

அந்த 65 வயதான பெரியவர் மிடுக்காக இறங்கி டவலால் முகம் துடைத்து லட்சுமியின் வீட்டின் வாசலருகே நின்று லட்சமிபேத்தி வணக்கம், சமையல் எல்லாம் முடிந்ததாஞ்” என்று குரல் கொடுத்தார் தாத்தா. இவர்கள் வந்ததை முன்னரே அறிந்த போதும், தாத்தாவின் குரலுக்காக, உள்ளே வேலை செய்வதுபோல் பாவனையில் உள் கதவை மூடி இருந்தாள். பெரியவரின் குரல் கேட்டதும், லட்சுமி அரக்க பரக்க கதவைத் திறப்பது போல் திறந்து எட்டிப்பார்த்தாள் “வாங்க தாத்தா, வாங்க பாட்டி, குடிக்கத் தண்ணீர் தரவா’ ஆமாம்மா, மகராசியாய் இருப்ப! செம்பில் கொஞ்சம் தண்ணீர் தாம்மா.” எவர்சில்வர் செம்பும் டம்ளரும் பளபளக்க லட்சுமி தண்ணீர் கொண்டு தந்தாள். தாத்தா டம்ளரில் தண்ணீரை ஊற்றி “இந்தா முத்து, தண்ணியைக்குடி! வெயில் என்னமா கொளுத்துது, சித்திரை வைகாசியைத் தாண்டி வறுத்தெடுக்குது. புண்ணியவதி வீட்டு முன்னால் குளுகுளுன்னு வேப்பமரம் வச்சிருக்காங்க ஞ்?” என்று சொல்லி சுந்தரம் தாத்தா செம்புத்தண்ணீரை அண்ணாக்க குடித்தார். தண்ணீர் குடித்தவர்கள் உடல் குளிர்ந்ததோ இல்லையோ லட்சுமியின் மனசு குளிர்ந்தது.

வண்டியின் முன்பகுதியில் வைத்திருந்த சிறிய மடக்கு மேஜையையும், அலுமினிய மடக்கு ஸ்டுலையும், சமமான இடத்துல போட்டு விட்டு, ரிப்பேர் பார்க்கும் கருவிகள் அடங்கிய பையை அதன் மீது வைத்தார். நெற்றி வியர்வை வழிந்த கண்ணாடியைக் கழற்றி தனது கைத்துண்டால் துடைத்து நெற்றிக்கு மேல் தூக்கிப்பார்த்து மீண்டும் ஒரு முறை துடைத்து மாற்றினார். ஒளிக்கேற்ப தானாக நிறம்மாறும் கண்ணாடியின் கறுப்பு நிறம் தாத்தாவின் முதிய முகத்திற்கு இளமையைத் தந்தது. எதிர் வரிசையில் முன்றாம் வீட்டிலிருந்து முருகேஸ்வரி மிக்சியையும் குக்கர்கைப்பிடியையும் கொண்டு வந்து கொடுத்து சரிசெய்து தருமாறு சொன்னாள்

சுந்தரம், குக்கரின் கைப்பிடியை கழற்றி மறையில் இருந்த அழுக்கை ஒரு சொட்டு எண்ணெய் இட்டு ஊற வைத்து கைத்துணியால் துடைத்து பின் மறையை பொருத்தினார். கைப்பிடியில் ஆட்டம் இல்லை கிச்சென்று இருந்தது. மிக்சியின் ஒவ்வொரு பொருத்துவையும் கழற்றி தூசி, துரு அகற்றி துடைத்து பின்னர் ஒவ்வொன்றாக பொருத்தி தன்னிடமிருந்த பேட்டரியில் இணைப்பைக் கொடுத்து இயக்கச் செய்து பார்த்தார். சரியாக இயங்கியது முருகேஸ்வரியின் முகத்தில் முறுவல் திருப்தியை வெளிப்படுத்தியது. இதேபோல் கேஸ்டவ்வை பழுது பார்க்கும் போது ஒவ்வொரு எரிகுமிழையும் தனித்தனியே கழற்றி ஊதி இலேசாக எண்ணெய் தடவி துரு நீக்கி அடைப்பை எடுத்து சுட்சுகளின் மறைகளை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் பொருத்தும் லாவகம் இப்படி. சுந்தரம் தாத்தா வேலை செய்வது ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாகவும், அழகாகவும், இருக்கும். அவரது கையசைவும், ஒவ்வொரு பணியின்போதும் முக பாவமும் வயிப்பும் எதோ ஒரு கலைப்படைப்பை செய்வது போல் அம்சமாகத் தென்படும்.

சுந்தரம் தாத்தா பழுது நீக்கும் பணிகள் பார்த்துக் கொண்டிருக்கும் போது மறுபக்கம் முத்துலட்சுமி பாட்டி பழுது பார்க்க வரும் பெண்களிடம் ஒவ்வொரு வகையான ஊறுகாய்யிலிருந்து ஒரு பத்தை எடுத்துக் கொடுத்து ருசி பார்க்கச் செய்வார். உப்பும் காரமும் புளிப்பும் துவர்ப்பும் கச்சிதமாகக் கலந்த ஊறுகாயை வாயருகே கொண்டு செல்லும் போதே வாயூறும்! ஒவ்வொரு ஊறுகாய்க்கும் உள்ள மருத்துவ குணமும் பாட்டி சொல்ல பத்தியக்காரர்கள் கூட நாக்கை சொட்டான் போட்டு வாங்குவர்.

முதலில் சுந்தரம் தாத்தாவும் முத்துலட்சுமி பாட்டியும் இந்தத் தெருவுக்கு வாரத்திற்கு இரண்டு நாள் வந்தனர். இப்பொழுதெல்லாம் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருகின்றார்கள் பிற நாள்களில் வெவ்வேறு பகுதிக்குச் செல்வர் இவர் பழுது பார்த்த அனைத்து பொருள்களிலும் பழுது பார்த்த நாள் கைபேசி எண் குறித்து ஒட்டு வில்லை இருக்கும். ஒரு சாதாரணத் தொழிலைக்கூட இவ்வளவு சிரத்தையொடு செய்கிறார்களே. இவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும் என லட்சுமிக்கு ரொம்ப நாள் ஆசை

லட்சுமி, பாட்டியிடம் சொன்னாள் “பாட்டி, பாத்ரூம் போகனும்னாலோ, கொஞ்சம் ஓய்வெடுக்கணும்னு நினைச்சாலோ தயக்கமில்லாம் விட்டுக்குள் வாங்க” வெயிலில் வந்த ஆயாசம், ஜில்லுன்னு இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தது எல்லாம் சேர்ந்து பாத்ரூம் போய் வந்தால் தேவலை. நெருக்கடியும் ஆயாசமும் தீருமென்ற நினைப்பு வந்த தருணம். லட்சமியின் வார்த்தைகள் பாட்டிக்கு இதமாக இருந்தது. தாத்தாவிடம் மெல்ல கிசுகிசுத்துவிட்டு, பாட்டி லட்சுமியுடன் வீட்டுக்குள் போனார் தக்க நேரத்தில் மலஜலம் கழிப்பது கூட சுமை இறக்கிய மன ஆசுவாசமும், சுகமும் இருக்கத்தான் செய்கிறது.

“பாட்டி இன்னிக்கு எங்க வீட்ல சாப்பிடுங்க.”

“சந்தோஷம்பா, நாங்க ரெண்டு பேரும் சாப்பாடும் டீயும் சூட்டடுக்கில் கொண்டு வந்துவிடுவோம், ” நாங்க யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. எங்களால் யாருக்கும் உதவி செய்ய முடிஞ்சா, சந்தோசப் படுவோம்”

“பாட்டி கோவிச்சுக்காதிங்க ரொம்ப நாளாகக் கேட்கனும் நினைக்கிறது, சந்தர்ப்பம் வாய்க்கலை இந்த வயசிலியும் இப்படி வேலை பார்க்கிறீங்களேஞ் உங்களுக்கு பிள்ளைக இல்லையா?”

“ஒருத்தரைப்பத்தி ஒருத்தர் கேட்டு தெறிஞ்சிக்கிறதுல என்ன கோவம்? அது தப்புமில்லை! ஒருத்தரைபத்தி ஒருத்தர்ப்பகிர்ந்து கிட்டாத்தான் சுமை குறையும் அனுபவம் கூடும்! அவருக்கு ஒரு மகள்!; எனக்கு ஒரு மகளும் மகனும் உண்டு !

” அய்யயோஞ் என்ன பாட்டி, அந்த தாத்தாவும் நீங்களும் வேற வேறையா? கோவிச்சுக்காதீங்க பாட்டி!”

அவிழ்ந்த முடியைக் கோதி இறுக்கமாக கொண்டைபோட்டபடி முகக்சுருக்கம் விரிய சிரித்தபடி, “பேத்தி ஆணும் பெண்ணும் சேர்ந்து வந்தால் புருஷன் பொண்டாட்டின்னு நினைக்கிற புத்தி எல்லாருக்கும் இருக்கு. அது உன் தப்பில்லை நம்ம புத்தியை அப்படி அமைச்சுட்டாங்க!

சுந்தரம் அண்ணனும் நானும் இன்னும் பலபேர் ஒரு முதியோர் இல்லத்தில் இருந்தோம். சுந்தரம் அண்ணணுக்கு ஜெர்மனியில் மகள் இருக்கிறது அது இப்போது புருஷனோடு இருக்கு அதுக்கு ரெண்டு பிள்ளைக. சுந்தரம் அண்ணன் மனைவி இறந்த பிறகு மகளோடு வெளிநாட்டில் போய் இருக்க முடியாத நிலை. அங்குள்ள குடியேற்ற கெடுபிடி குளிர் தாங்க முடியாத உடல் தளர்ச்சி அதனால் இங்கே இருந்த வீட்டை விற்று தனக்குத் தேவையான பணத்தை தன் பேரில் பேங்கில்; போட்டு மீதியை மகள் பேரில் போட்டுட்டார். அவர் அந்த முதியோர் இல்லத்தில் வந்து தங்கினார்

எனக்கு ஒரு மகன், ஒரு மகள், இருவருக்கும் கல்யாணம் ஆகி ஆளுக்கொரு மகள், மகன் இருக்கிறார்கள் அவர்கள் இருவர் குடும்பமும் அமெரிக்காவில் வெவ்வேறு பகுதியில் இருக்கிறார்கள். பிரசவத்திற்கு வந்தார்கள். நான் அப்போது தெம்பாக இருந்தேன். அவர்களுக்கு எல்லா பண்டுதமும் பார்த்து அனுப்பிவச்சேன். அதற்குப் பின் என் வீட்டுக்காரர் இறந்ததற்கு வந்தவர்கள் என்னை அழைத்துப் போக முடியவில்லை என்று என்னை அந்த முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர். மாதாமாதம் முதியோர் இல்லத்திற்கு பணம் அனுப்புவார்கள். எப்பவாவது தீபாவளி, பொங்கல்னு போசுவாங்க.

நாங்கள் பிள்ளைகளை விட்டு பிரிந்திருந்தாலும், ஒருத்தருக்கு ஒருத்தர் சுக துக்கங்களைப் பகிர்ந்து, நோய் நொடிகளின் போது ஆறுதலாய், ஆதரவாய் இருந்தோம். இப்படி மூன்றாண்டு காலம் போச்சு. அந்த முதியோர் இல்லத்தில் நிர்வாகிகளும் ஆரம்பத்தில் நன்றாக கவனித்துக் கொண்டனர். அவரவர்களுக்கு பிடித்த தெய்வவழிபாடு, மனதை மகிழச்செய்யும் விழாக்கள் வயசுக்கேத்த உணவு என வசதி செய்து கொடுத்தார்கள். அந்த இல்லத்திற்கு அரசிடமிருந்து நிறைய சலுகைகளர் விருது, பாராட்டு என்று நன்றாகத்தான் இருந்தது. நகரின் நடுவில் இருந்த அந்த முதியோர் இல்லத்தின் சொத்து மதிப்பு அதிகரிப்பு, அவர்களிடமிருந்த சேவை மனப்பான்மை குறைந்து ரியல் எஸ்டேட், அபார்ட்மெண்ட் கட்டும் ஆசை அடுக்கடுக்காய் வளர்ந்தது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் வந்த பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகளிடமிருந்து பணம் தாமதமாக வருவது. இதெல்லாம் சேர்ந்து முதியோர் இல்லத்தை நடத்துவதில் சிரம்மாக இருக்கிறது என்று பொய்யான காரணத்தைச் சொல்லி தீடீரென்று இல்லத்தை மூடப்போகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.

வேறபோக்கிடம் இல்லாத சகுந்தலா என்ற அம்மா தூக்க மாத்திரைகளை நிறைய விழுங்கி உசுரை விட்டுருச்சு. போலீஸ் கேஸ் இல்லாம நிர்வாகம் கமுக்கமா அடக்கம் பண்ணிருச்சு, அந்த அம்மாவின் வீடியோபடத்தை பார்த்து அமெரிக்காவில் உள்ள பிள்ளைகள் போனில் கதறினார்கள் இந்த சம்பவம் கலக்கத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. வசதியான பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை வேறு இல்லங்களில் சேர்த்துவிட்டனர். நானும், இன்னும் என்னைப் போன்ற பாட்டிமார் நாலுபேர் ஆக ஆறு பேர் போக திக்கு திசைதெரியாமல் தவித்து நின்றோம். சுந்தரம் அண்ணன் தான் பேங்கில இருந்த தனது பணத்தை வச்சு புதுநகரில் ஒரு வீடு பிடிச்சு எங்களைத் தங்கவச்சார். வயிற்று பிழைப்புக்கும் மருந்து மாத்திரைக்கும் பணம் வேணுமே என்ஜினியராய் இருந்த சுந்தரம் அண்ணன், வயசான காலத்தில் சுலுவா குடும்பப் பெண்களுக்கு உதவும் தொழிலாக இருக்கனும்னு இந்த வேலையைச் சொன்னார். நாங்க ரெண்டு பேரு மட்டும் வேலை செஞ்சு மத்தவங்க நாலுபேரும் சாப்பிடுறதில் அவங்க மனசு ஒப்பலை! அவங்க நாலு பேரும் ஊறுகாய் போடற யோசனை சொல்லி நல்ல பக்குவமாய் செஞ்சாங்க. இதை எல்லாம் வச்சு உன்னை மாதிரி மகராசிகள் புண்ணியத்தில் நல்லா பிழைப்பு ஓடுது. வருஷத்துக்கு ஒருதரம் ஏழைப்பிள்ளைகளைக் கண்டு பிடிச்சு படிப்புச் செலவுக்கு கொடுத்தும் உதவுறோம்….”

முத்துலட்சுமி பாட்டி சொல்லி முடிக்க லட்சுமி குமுறி குமுறி அழுதாள். “ஏம்மா இ ஏன் அழுகிற? வயசாகிறது சாகிறதற்கல்ல வாழ்க்கையை அனுபவிக்கிறதுக்கு! வாழ்க்கைன்னா போராடியாவது வாழ்ந்துதானே ஆகனும்! அதுதானே மனுஷத்தன்மை!

“இல்ல பாட்டி, நான் ஒரு தப்பு செய்ய இருந்தேன் பாட்டி! வருகிற ஒண்ணாம் தேதி மகள் வீட்ல இருந்து வரும் என் மாமியாரை எங்க விட்டுக்காரர்கிட்ட சொல்லி முதியோர் இல்லத்தில் சேர்க்கலாம்னு இருந்தோம், நல்ல வேளை, உங்க கதை என் கண்ணை திறந்திருச்சு.”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top