எங்கள் வீட்டு கொள்ளைப்புரத்தில் உதியமரம் ஒன்று இருந்தது. எங்கள் வீடு சுற்றுச் சுவர் கொண்டதால் நீண்டு நெடிய அந்த மரத்தின் மீது ஏறிப்பார்த்தால் தெரியாத பக்கத்து வீட்டு இடமெல்லாம் தெரியும். அதில் எனக்கும் என் தங்கைக்கும் ஒரு மகிழ்ச்சி. இரவுநேரங்களில் பார்ப்பதற்கு உயர்ந்த அந்த மரத்தின் தோற்றம் ஒருவித அச்சத்தைத் தரும். காலையில் சூரியஔியின் காரணமாக மரத்தின் நிழல் எங்கள் வீட்டுக்குள் தெரியும் அதிலும் மரத்தில் காக்கையோ குருவியோ கிளைகளில் அமர்ந்து ஏதோ ஒரு ராகத்தைப் பாடிவிட்டுச் செல்லும் அதன் நிழலும் வீட்டுக்குள் தெரியும் அப்போது எங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.ஏனென்றால் அந்த நிழலை கையில் பிடிக்கும் போது பறவைகள் கையில் வந்து அமருவதைப்போல ஒரு உணர்வு.இப்படியாக விடுமுறை நாட்களில் ஏறியும் குதித்தும் உதியமரத்தோடு நாங்கள் விளையாண்ட தருணங்கள் மறக்கமுடியாதவை.
தாவரங்கள் துளிர்க்கும் காலங்களில் உதியமரத்தின் இலைகள் சிவப்பும் மஞ்சளும் இணைந்து வண்ணமாக துளிர்விடும், காண்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதன் மேலே தொட்டுப் பார்த்தால் பளபளப்பாகவும் பஞ்சுபஞ்சாகவும் இருக்குமதை சீனஇளவரசி சைலிங்சி இருந்திருந்தால் பட்டுக்குப் பதிலாக ஆடையாய் தரித்திருப்பாள்.
பக்கத்து வீட்டுப் பாட்டியொருத்தி ஆறாதபுண்ணிற்கு உதியமரத்துப் பட்டையை வைத்து கட்டினால் ஆறுமாம் என்று ஒரு அரிவாளோடு வந்து அவ்வப்போது மரத்தின் பட்டையை வெட்டிச் செல்வாள்.எங்களுக்கோ எங்களின் கைகள் வெட்டப்பட்டதுபோலவே இருக்கும்.ஒருநாள் அதேபோல் அரிவாளோடு வந்தவளை வீட்டிற்குள் நுழையவிடாமல் நாங்கள் தடுத்ததும் அதனால் எங்கஅம்மா எங்களை அடித்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
ஒருநாள் பள்ளிசென்று சாயங்காலம் வீடுதிரும்பும் போது ஒரு வெறுமையாக காட்சியளித்தது வீடு.ஆம் கொள்ளைபுரத்து உதியமரம் மழைகாலங்களில் வீட்டின்மேல் விழுந்தாலும் விழுந்துவிடும் என்று வெட்டிவிட்டார்களாம்.நாங்கள் அழுதுதவிச்ச ஆத்திரத்தை தீர்க்கமுடியாது ஆற்றித் தேற்றமுடியாததாகவும் இருந்தது.
அந்த உதியமரம் இருந்த இடத்தில் ஒரு வேப்பஞ்செடி வளர்ந்து மரமாக நிழல் தந்துகொண்டிருக்கிறது.காலமாற்றத்தால் வீடும் வீட்டு வாசற்படியும் மாற்றியமைக்கப்பட்டதில் இந்த வேப்பமரம் வீட்டிற்கு முன்னாக அமர்ந்து நிழல் தந்து கொண்டிருக்கிறது.இதையும் எங்க அம்மா கூட்டித்தள்ள முடியவில்லை இலையை உதிர்க்கிறது.
மழைகாலங்களில் காற்றில் சவலுகிறது வெட்டிவிட வேண்டியதுதான் என்கிறாள் இம்முறை நாங்கள் அப்படி ஏமார்ந்து விட்டுவிடமாட்டோம்.
மனிதனையும் மரத்தையும் இணைக்கும் ஒரு அழகான கதை ” உதியமரம் “.
என் பால்ய காலத்திற்கு கொண்டுசென்ற முந்தைய கால கெடிகாரம். இன்றும், நான் விளையாடிய மாமரம் வெட்டபட்டத்தை மறக்க முடியவில்லை. அந்த மரம் காய் சரியாக காய்க்க வில்லை என வெட்டிவிட்டார்கள். இந்த கதையில் வருவதுபோல் இன்று நானும் அப்படித்தான். மரத்தை வெட்ட எங்கள் வீட்டில் அனுமதி இல்லை.
இன்றுள்ள பிள்ளைகளுக்கு இப்படி பட்ட உறவை ஏற்படுத்த வேண்டும் என்னும் பெரிய ஆசையை வெளிப்படுத்துகிறது எழுத்தாளர் சந்தி மாவோ வின் எழுத்துக்கள்.
ஒரு சிறிய கதைக்குள் மருத்துவ தகவல், வாஸ்து சாஸ்திரம், அன்பு என பல தகவலை உள்ளடைக்கி எழுதியிருப்பது சிறப்பு.
சிற்பிக்குள் முத்தான சிறுகதை உதியமரம் மிகுந்த மகிழ்ச்சியையும், நினைவுகளையும் தந்தது. சந்தி மாவோ விற்கு என் வாழ்த்துக்கள்.
ஜோ. அருணா,
காரைக்கால்,
9791303327.
சந்தி மாவோ என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட எந்த உதிய மரம் என்ற கதை மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன் . கதை மிகவும் மேலோட்டமாகவும் சாதாரண நடையிலும் அமைக்கப்பட்டிருக்கிறது . . . இதற்கு அடிப்படை ஏதாவது இருக்கிறதா என்று கூகிளில் சந்தி மாவு என்ற பெயரை போட்டு தேடிப்பார்த்தேன் . ஒன்றும் வரவில்லை .கதையின் நோக்கம் வாழ்வில் நடந்த ஒரு ஞாபகத்தை குறிக்கிறது .மரம் வெட்டப் படுதல் அதை காணுதல் என்பது எல்லோருடைய வாழ்விலும் நிச்சயமாக இருக்கும். ஏழு வருடங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் இருந்து நாங்கள் இன்னொரு வீட்டிற்கு மாறுதல் செய்தோம். அங்கு எல்லோர் வீட்டிலும் ஒரு முருங்கை மரம் நின்றது . . அந்தத் தெரு முழுக்க இப்படி இருந்தது அதைக் காணும் பொழுது மிகவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இரண்டு வேப்பமரமும் ஒரு முருங்கை மரமும் இருந்தது அதைக் காணும் பொழுதெல்லாம் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது எங்கள் வீடு குளிர்ச்சியாக இருப்பதற்கு அதுவே காரணம் என்று நான் நினைத்தேன் எங்கள் சொந்தக்காரர்களுக்கு வேப்பங்குச்சியை வேப்ப இலையை தேவைப்படும் என்றால் நான் அவர்களிடமிருந்து அவ்வப்போது வாங்கி கொடுப்பேன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு எல்லாம் நான் இந்த மரத்தை அறிமுகம் செய்வேன் அது எப்படி இருக்கும் என்றால் அது என்னுடைய வீட்டில் நான் வளர்க்கிற மரம் போல் அறிமுகம் செய்வேன் அந்த வீட்டில் எப்பொழுதும் பங்காளிகளுக்குள் சொத்து தகராறு இருந்து கொண்டே இருந்தது கடைசியில் அது பாகபிரிவினை செய்யப்பட்டது அந்த சொத்தில் இரண்டு அண்ணன்களும் ஒரு தங்கையும் இருந்தனர் அதில் ஒரு அண்ணன் தனது பங்கில் கொடுக்கப்பட்ட அந்த இடத்தில் வீடு கட்ட ஆசைப்பட்ட ஒரு மரத்தை வெட்டிவிட்டு வீடு கட்டினார் அது எனக்கு பெரிய பாதிப்பை தரவில்லை. இரண்டு வருடம் கழித்து இன்னொரு அண்ணனும் இன்னொரு வேப்ப மரத்தை வெட்டி விட்டார் தலையில் இடி விழுந்தது போல் இருந்தது நாங்கள் இவ்வளவு காலம் வெயில் காலத்திலும் கூட குளிர்ச்சியாக இருந்தோம் அவ்வப்போது தேவைக்கு அம்மரத்தின் பட்டைகளையும் இலைகளையும் குச்சிகளையும் பயன்படுத்தினோம் எல்லாம் ஒரே நாளில் சூனியமாய் போனது சிங்கிள் வருத்தத்தை மட்டும் அவர்களிடம் தெரிவித்தோம் அவர்களும் வருவதாகவே சொன்னார்கள் என்ன கூறி என்ன பயன் எல்லாம் முடிந்துவிட்டது அப்போது ஒரு முடிவு செய்தேன் நான் எனக்கா சொந்தமாக ஒரு வீடு வாங்கும் பொழுது அது எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் ஒரு மரத்தையாவது நட்டு விட வேண்டும் அதற்கான இடத்தை விட விட வேண்டும் என்று முடிவு செய்தேன் இப்படி எல்லோர் வாழ்விலும் ஒரு கதை இருக்கத்தான் செய்யும் அது அவர்களுடைய சொந்த மரமாக இருக்கும் இல்லை பக்கத்து வீட்டு மரமாகவும் இருக்கலாம் இப்பொழுதெல்லாம் ரோட்டில் மரம் வெட்டப்படுவது அல்லது கிளை வெட்டப்படும் வருகிறது என்றால் போர்டு மறைக்கிறது என்பதற்காகவே வெட்டுகிறார்கள் மரத்தினுடைய அருமை தெரியாத மனிதர்கள் என்று தோன்றுகிறது மரத்தின் உள் எவ்வளவு உயிர்கள் வாழ்கின்றன ஒரு மரம் பலருடைய வீடுகளாக இருக்கின்றது பறவைகள் எறும்புகள் வண்டுகள் இப்படி ஏராளமான உயிர்களுக்கு அது வீடுகளாக இருக்கிறது அதைப் பற்றி நாம் சிந்திக்க விட்டாலும் நமக்கு அது வருடம்தோறும் குளிர்ச்சியை தருகிறது ஏப்ரல் மே மாதங்களில் நாம் வெப்பத்தினால் படும் கஷ்டங்களை சொல்லி மாளாது ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் இருப்பது போல் போலவே நாம் உணர்கிறோம் அதிலிருந்து பெரும்பகுதியை இந்த மரம் நம்மை காப்பாற்றுகிறது என்ற உணர்வு கூட இந்த மனிதர்களுக்கு இல்லையே இன்னும் எதிர்த்த வீட்டில் ஒரு கதை நடந்தது அவர்கள் வீட்டில் முருங்கை இருந்தது நான் அவர்களிடம் ஒருபோதும் முருங்கை காயோ அல்லது முருங்கை இலைகளையும் வாங்கினது கிடையாது இருந்தும் ஒரு நாள் முழுவதுமாக வெட்டி விட்டார்கள் அந்த அனைத்து கிளைகளையும் வெட்டிவிட்டு அந்த நடுப்புற தண்டை மட்டும் விட்டு விட்டார்கள் ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் கூறியது மிகவும் வியப்பாக இருந்தது அது அந்த மரத்தில் ஒரு ரயில் பூச்சி எனப்படுகிற ஒருவிதமான பூச்சி ஒரு காலங்களில் வரும் அது மிகையாகா மரம் முழுவதும் இருக்கும் அதிலிருந்து வீடு முழுவதும் பரவுகிறது என்று கூறினார்கள் நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் அதை எவ்வளவு வெட்டினாலும் உடனே துளிர்த்து கொண்டு வந்துவிடும் என்று ரொம்ப லேசாக கூறினார்கள் இவ்வளவு காலம் எத்தனை வருடம் அந்த மரத்திலிருந்து இலைகளையும் காய்களையும் கொத்துக்கொத்தாக அனுபவித்திருப்பார்கள் அதைவிட எப்படித்தான் இவர்களுக்கு மனம் வந்ததோ என்று எண்ணத் தோன்றியது பூச்சி வருகிறது என்றால் அதற்கான வழிகள் எவ்வளவோ இருக்கின்றன இதெல்லாம் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள் அப்படித்தான் இந்த ஊதிய மரத்தின் கதையும் இருக்கிறது முதலில் அந்த மரம் மழைக்காலங்களில் விழுந்துவிடும் என்று எண்ணி செய்தது ஏதோ ஒருவிதத்தில் அதை ஏற்றுக் கொள்ளலாம் பிறகு அந்த வேப்ப மரத்தையும் வெட்டிவிட காரணம் அதிலிருந்து விழும் இலைகளை கூட்டி தள்ள முடியவில்லை என்பது மிகவும் அபத்தமாக தெரிகிறது இந்தக்கதையின் விமர்சனத்தை நான் எழுத ஆரம்பிக்கும் பொழுது இதில் சிறு பிள்ளைகளுக்கான கதை என்றேதோன்றியது ஆனால் என்னுள்ளும் இவ்வளவு நினைவுகளை அது அள்ளிக்கொண்டு வந்து இருக்கிறது என்பதை நினைக்கையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மாவு எழுத்து நடையில் மிகவும் எளிமையாக இருந்தாலும் அவர் எடுத்துக் கொண்ட கருத்து எல்லோர் மனதிலும் இப்படி ஒரு நிகழ்வையோ நிச்சயம் அது அவர்களுடைய நினைவலையில் இருந்து எடுத்துக் கொண்டு வரும் என்பதற்கு நானே ஒரு உதாரணம் இருக்கிற மரங்களை காப்பு காக்க ஏதாவது ஒரு சிறிய முயற்சியாவது மேற்கொண்டிருக்க வேண்டும் நாம் சாவதற்குள் ஒரு பத்து மரத்தையாவது நம் சொந்த முயற்சியில் நம் கைகளாலேயே வளர்த்து இருக்க வேண்டும்
சிபானா
7395915560
அனிதா,
7867962744.
உதிய மரம் உத்தரத்திற்கு உதவாது. ஆனால், அதில் செய்யும் பலகை உடலுக்குக் நல்ல குளிர்ச்சி தரும். வீட்டிற்கு அருகில் இருந்தால் நல்ல குளிர்ச்சியான காற்று கிடைக்கும் என்று என் தந்தை சொன்ன நினைவுகள், கதையை படித்தவுடன் வந்து போனது.
மனிதன், இயற்கையை விட்டு விலக விலக எவ்வளவு இன்னல்கள், மட்டுமல்லாமல் உயிர் வாழ்வதே கடினம் என்று, இந்தச் சுற்றுசூழல் மாசடைந்த தருணத்தில், இக்கதையை படிக்கும் போது நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை எனத் தோன்றுகிறது.
நாம் நேசித்து வளர்த்த மரத்தை வெட்டும் போது, நம் வீட்டில் உள்ள உறவில் ஒருவரை இழப்பது போன்ற உணர்வுதான் .ஆம் , வீட்டில் அது ஒரு உயிர்போல் தான் நாம் எண்ணுவோம்.
அருமையான கதை, ஆனால் எழுத்து நடையில் சற்று உயிரோட்டம் குறைந்ததாக நான் உணர்ந்தேன். காரணம் மொழிப்பெயர்ப்பாக இருக்கலாமோ எனத் தோன்றியது. புதுமையாக இருந்தது. எழுத்து நடையில் கிராமத்து வாசனை இல்லாத ஒரு உணர்வு ஏற்பட்டது.
ஒரு சிறுகதைக்குள் ஆத்மார்த்தமான பழைய நினைகளை கொண்டு வருவதோடு, மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர வைத்த கதாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
நன்றி.