உதவி

0
(0)

தோளிலே ஒரே கொத்தாய் தொங்கிய பெல்ட்டுகளைத் தவிர பைக்கட்டிலும் ஒரு சுருள் இருந்தது. அதுபோக சதுரம, செவ்வகம, வட்டம, நீள்வட்டம் என பல வடிவங்களில் பித்தளை சில்வருமான சாவியுடன் கூடிய புத்தம் புதிய பூட்டுக்களையும் அவன் வைத்திருந்தான்.

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவன் போல..! நல்ல உயரம், சிவந்த முகம், செம்பட்டை தலைமுடி, ஒரு காதில் மட்டும் கம்மல், விளிம்புகளெல்லாம் கரையேறிய பற்கள், அதோடு வாயில் பான்பராக் மென்றுகொண்டுமிருந்தான். பச்சை நிறத்தில் அலுக்கு அப்பிய டி-சர்ட்டும், வெலுத்துப்போய் துவண்ட சாக்கு போன்ற ஜுன்ஸ்-ம், கட் சூ-வும்  அணிந்திருந்தான்.

தோளிலே தொங்கிய பெல்டுகளை இரு கைகளிலும் பிடித்து மேலும் கீலும் சுருக்கி சுருக்கி இழுத்தான். ‘டப்-டப்’-என ஓசை எழும்பின. வெயிலில் அழைந்து கிரங்கியிருந்த முகத்தில் கண்கள் மட்டம் பளபளத்தன. ஒருவித ஏக்கமாய்!

“வாங்குற மாதிரி வெலச் சொல்லு”

“கூடச்சொல்லலே.. கரெக்டான ரேட் ..நூத்தி அம்பதுதான்”

“சும்மா சொன்னதவே சொல்லாத.. குடுக்குற மாதிரி சொல்லு”

அவன் அதற்கு பதில் சொல்லாமல் பக்க வாட்டில் நின்றிருந்தவர்களிடம் தன் பொருட்களை நீட்டினான். ‘’பூட் பாக்கறியா.. பெல்ட் வாங்கிக்கோ..’’

‘’ஆமா நீ ஒன்னுக்கு வெலக்கேட்டா உங்கிட்ட இருக்குறதுக்கெல்லாம் சேத்துல்ல வெலச் சொல்ற..  நூத்தம்பது எறநூருன்னு..’’ டீக்கடையே சிரித்தது.

அவன் அதற்குக்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. இளைஞனாக இருந்தாலும் முதிர்ந்த வியாபாரியாகவே தன்னைக் காட்டிக்கொண்டிருந்தான்.

“ம்.. சொல்லி குடு..’’ அரைமணி நேரமாக ஒரு பெல்ட்டை குறிவைத்து பேரம்பேசி பொழுது போக்கிக்கொண்டிருந்த கந்தசாமி மீண்டும் கேட்டான்.

“அதான் சொல்லிட்டனே நீ எவ்ளோ தர்றே.. கேளு”

பெல்ட்டை ரொம்ப நேரமாக முன்னும் பின்னும் பார்த்துவிட்டு ‘’இருவது ரூவா.. ம் ”

“என்னா சொல்ற..’’ எனக் கேட்டான்.

“இருபது ரூபாய்க்கு நீ எனக்கு பெல்ட் வாங்கி தர்றியா.. நூத்தி அம்பது சொன்னத இவ்ளோ கம்மி பண்ணி கேக்குறியே.. பத்து ரூபா குறைச்சுக்கோ இந்தா..’’ கந்தசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இவனும் விடவில்லை. விற்றுவிட வேண்டுமென்ற நோக்கில் இறங்கிக் கொண்டேயிருந்தான்.

அவன் நமது தாய்மொழியை பேசுகிற தொனியை பார்க்கையில் அடிக்கடி தமிழ் நாட்டிற்கு; வந்து போயிருப்பான் போல..! சமீப நாட்களாகவே இவனைப் போன்ற பலர் ஊருக்குள்ளே வியாபாரிகளாய்த் திரிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒன்றிரண்டு தடவையாவது வேறு மாநிலத்தவர்கள் இவ்ஊருக்கு பிழைப்பை ஓட்ட வந்து விடுகிறார்கள். கார்ப்பரேசன் அலுவலக வெளியிலும், புறவழிச்சாலையிலும், பழனிசெட்டிபட்டி போகிற வழியிலும் மையக்கூடாரங்கள் போட்டு வியாபாரத்தை துவக்குவார்கள்.

சிறியவா், பெரியவர், பெண்கள், குழந்தைகள், என குடும்பங்களாகவும் நண்பர்களின் குழுமங்களாகவும் வரும் இவர்கள் சனல் கம்பளிகள், கண்ணாடி விளக்குத்தோரணங்கள், பிளாஸ்டிக் பூச்செடிகள், ஸோபா செட்டுகள், பெல்ட், பூட்டு விற்பவர்களாகவும், சிறிய ரக வெள்ளை பொம்மைகள் தயாரிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

சிறுவயது முதல் இவர்களிடம் நான் ஒரு பார்வையாளனாய் இருந்தேனே தவிர ஒருமுறையேனும் நுகர்வோராய் மாறியதில்லை.

அறநூரு ரூபாய் சொல்லும் கம்பளியை நமது ஜனங்கள் பேரம் பேசி வெறும் என்பது ரூபாய்க்கு வாங்கி விடுவார்கள். நான்காயிரம் சொல்லும் ஸோபக்கள் கூட வெறும் ஆயிரத்தில் முடிந்துவிடும். ஆரம்பத்தில் அதிக விலைக்கு விற்கும் வெள்ளை அச்சுப்பொம்மைகள்கூட நாள் போக்கில் பிழைப்பு ஓட்டவேண்டியதன் காரணமாக தெருத்தெருவாக அழைந்து அஞ்சுக்கும் பத்துக்கும் விற்பார்கள். நாடோடிகளாய் அழையும் இவர்களது பொருட்களுக்கு மதிப்பு அவ்வளவுதானோ!

“என்பது ரூபா குடு.. இந்தா வாங்கிக்கோ..’’ பாதிவரை இறங்கி பெல்ட்டை திணிக்காத குறையாக நீட்டினான்.

“சும்மா கசகசன்னு பேசாத. ஒரே முடிவா நாப்பது ரூவா.. தர்ரியா தள்ளியா.?’’

“இவ்ளோ கம்மி பண்றியே.. பாதிக்கு பாதியாவது வேண்டாமா..! அறுபது குடு இந்தா..’’

இருவருக்கமிடையேயான தர்க்கம் சுற்றியிருந்தவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காயிருந்தது. கிந்தியில் ஒன்றிரன்டு வார்த்தை தெரிந்தவர்கள் கூட “துமாரா நாம் கியாகே..? சோ மச் ருப்பியா..?’’ என கலாய்த்தார்கள். “சும்மா குடுத்துட்டுப்போப்பா.. இது என்ன தோல் பெல்ட்டா அட்டதான.. தெருத்தெருவா அழைஞ்சுட்டு சும்மா போறதுக்கு குடுத்துட்டுப்போப்பா” இதோடு மட்டுமின்றி “இவ்வளவு வெல கம்மியா தர்ரானே ஒருவேள கடத்தல் சரக்கா இருக்கமோ..’’  என்றும்; வெட்டிப்பேச்சக்கள் கொட்டின.

“வாங்குறதுன்னா வாங்குங்கப்பா ..இல்லாட்டி அனுப்சுவிடுங்கப்பா.. வேகாத வெயில்ல அந்தப்பயல வெட்டியா நிக்கவச்சுப்பேசிக்கிட்டு..’’ கதர் வேட்டி, சட்டையும் குள்ளாவும் அணிந்து படியில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.

‘’பெரிசு .. நாங்க வாங்கிக்கிறோம். நீ கம்முன்னு இரு. இதுதாண்டா சான்ஸ்னு உபதேசம் பண்ண ஆரம்பிச்சுடாத..’’ இள வயசுக்காரர்களின் பேச்சு பெரியவரை வாயடைத்தது;;

“என்னப்பா சொல்ற நாப்பது ரூவாய்கு தர்ரியா இல்லிய” கந்தசாமி கேட்டான்

“அம்பது ரூபா குடு’’ இருதிப்பேரம் நடந்தது.

“அதெல்லாம் முடியாது.. இந்த பெல்ட்டுக்கு அவ்வளவுதேன்..’’

“மொதல்கூடே கட்டாது. அஞ்சுரூபா சேத்து குடு.’’

“நாப்பதுதே. என்னா சொல்ற?’’

‘’டேய் கந்தசாமி அஞ்சுரூவாய்ல என்னடா ஆகப்போகுது! சேத்து குடுத்துட்டு படக்குன்னு பெல்ட வாங்குடா.. சும்மா வள வளன்னு பேசிக்கிட்டு’’ நான் கூட சலித்துவிட்டேன்.

“என்க்கே கட்டாது” அறைமணி நேர போராட்டத்தில் தோற்றவனாய் அந்த வேற்று மாநிலத்தான் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

“பெல்ட பாத்துக்கிட்டே டீ சாப்ட வந்தத மறந்தாச்சு..’’

“ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போடுங்ணே..  வடையெல்லாம் விருவிருன்னு இருக்கே.. இன்னைக்கு போட்டதுதானா..!’’

“ஏய் சும்மா எடுத்து சாப்டப்பா. கிந்திக்காரெம் போய்ட்டயான்னு நம்மகிட்ட லந்து பண்றியா..’’-டீக்கடைக்காரர்

சற்று நேரம் கழித்து டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவன் தன் பொருட்களோடு மீண்டும் வந்தான்.

“இந்தா வச்சுக்கோ. நாப்பது ரூபாயே குடு”

கந்தசாமி கிராக்கியாய் இருந்தான். “நீ அப்பவே குடுத்துருக்கனும். இப்ப ரூவா இல்லையே. டீ வடையெல்லாம் சாப்டாச்சு.. பெல்ட் வாங்குற அளவுக்கு இல்லை.. போய்ட்டு வா . இன்னோருநாள் பாப்போம்..’’

கெஞ்சிப்பிரயோஜனம் இல்லை. ஏமாற்றம் தழுவியவனாய் தலை குனிந்து பைக்கட்டை தூக்கிக்கொண்டு கிளம்பினான்.

“பெல்ட்டு இங்க வா.. இந்தா ஒரு பெல்ட்டு குடு..’’ சட்டைப்பாக்கெட்டில் விரல் நுழைத்தபடி படியில் அமர்ந்திருந்த பெரியவர் அவனை கூப்பிட்டார்.

ஆச்சரியமாயிருந்தது ‘பெரிசுக்கு பெல்ட் எதற்கு’ நாற்பது ரூபாயை வாங்கிக் கொண்டு பெல்ட் ஒன்றை கொடுத்து விட்டு உற்சாகமாய் நடந்தான்.

“ஏ பெரிசு ஒனக்கு எதுக்கப்பா பெல்ட்டு..! கதர் வேட்டிய கழட்டிட்டு ஜீன்ஸ் போடப் போரியா”  கந்தசாமி  நக்கலடித்தான்.

“நா பேண்ட் போடுறேன், வேட்டி கட்டுறேன், இல்ல கோமணங்கூட கட்டிட்டுப்போறேன். அது ஒனக்கு வேண்டியதில்ல. ஒனக்கு பெல்ட் வேனும்னா அவெங்கிட்ட பேரம் பேசியிருக்கனும்.. பாவம் அசலூர்க்காரன் எங்கயோ இருந்து நம்மள நம்பி இங்க பொளைக்க வந்திருக்கான். அரை மணி நேரம் வெட்டியா நிக்க லச்சு ஆளாளுக்கு லகல பண்ணி அனுப்புரீங்களே.. அவன் என்ன நெனப்பான்..’’

“பெரிசு இப்ப முடிவா என்னா சொல்லற..’’

“வந்தாரை வாழவைக்கிற தமிழ் நாடுப்பா இது! இந்த பெல்ட வாங்கி நா ஒன்னும் அழகு பாக்கபோறது இல்ல, நான் குடுத்த நாப்பது ரூவாய வச்சு அவன் ஒன்னும் கோட்டை கட்டப்போறதும் இல்ல. அவனுக்கு என்னா கஸ்டமோ இந்த நாப்பது ரூவாய்க்காக திரும்பி வந்து ஒங்கிட்ட கெஞ்சுறான். நீ வாங்கள .. அதான் அவனுக்காக நா வாங்குனேன். இந்த மட்ட மதியானத்துல அது ஒரு வேளை கஞ்சிக்காவது அவனுக்கு உதவும்ல.  நம்மல தேடி வந்தவங்கள ஆதரிங்கப்பா.  நம்ம தமிழர்களும் எத்தனையோ நாடுகள்ல வாழ்றாங்கள்ல..’’

கதாநாயகனாய் பேசிய பெரியவரின் முகத்தை பார்க்க வெட்கப்பட்டு சுவரையே பார்த்துக்கொண்டிருந்தான் கந்தசாமி.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top