உடைப்பாள்

0
(0)

 

“இது ரொம்ப அநியாயம் பெரிசு.. ஏதோ பத்து இருவது கேட்டா பரவாயில்ல ! ஒரேடியா நூர்ரூவா எச்சா கேக்குறியே.. ஓம்மனச்சாச்சிக்கே சரின்னு படுதா”

சொன்னதற்கு முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்காமல் தன் ஆயுதங்களான கல்உளி, பட்டைஉளி, சம்பட்டி, சுத்தியல்களை ஒருமிக்க துவண்டுபோன கோனிச்சாக்கில் உருட்டி சுற்றிக்கொண்டிருந்தார் பெரிசு ராசய்யா!

கொத்தனா், சித்தாள், நிமிந்தாள் வரிசையில் கட்டுமானத் தொழிளாலர்களில்  உடைப்பாள்-க்கும் முக்கியப்பங்ண்டு. சீலிங் கொத்து வைப்பது, வயரிங் பிளம்பிங் பைப்புகளுக்காக சுவர் மற்றும் தளங்களில் காடி உடைப்பது, தேவையற்ற, தவறுதலாய் கட்டப்பட்ட சுவர், காங்கிரீட்டுகளை உடைத்தெடுப்பது என்று பழைய புதிய கட்டிடங்களிலெல்லாம் இவர்களின் கைவண்ணம் நிறையவே இருக்கும்.

என்னுடைய வேளையிலும்கூட அவ்வப்போது உடைப்பாள் தேவைப்படுவதுண்டு. ‘லட்சுமிபுரத்திலே’ டாக்டர் வீடு ஒன்று கடந்த வாரம் காண்டிராக்டிற்கு வந்தது. முப்பது வருட பழமையான கம்பீர மாளிகை. தரை முழுவதும் கிரே-கலர் மொசைக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நன்றாகத்தான் இருந்தது. இருப்பினும் இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ப அவைகளை அப்புறப்படுத்திவிட்டு கிரானைட் பதிக்கும்படி முடிவாகிவிட்டது.

அந்த பழைய தளத்தை உடைத்தெடுக்க உடைப்பாள்  தேவைப்பட்டார். கட்டிடத்தொழிளாலர்கள் கூடும் தியேட்டர் வளாகத்திற்கு காலையில் சென்றோமானால் சித்தாள், நிமிந்தாள் என நிறையபேர் ‘’ண்ணேய் நா வரவா, நா வரவா..” என்று சோத்துச்சட்டியும் மண்வெட்டியும் தொடுக்கிக்கொண்டு சுற்றிவளைத்து விடுவார்கள்.

அவர்களைத்தாண்டி பக்க வாட்டில் பிரியும் தபால்நிலைய வீதியில் முகம் காட்டினால் இரண்டு மூன்று பட்டறைகன் அனல்பறக்க ஆப்புகளை அடித்து பதப்படுத்திக்கொண்டு இருக்கும். அங்கேதான் உடைப்பாள்களும் கூடுவார்கள்.முதல்நாள் நிலுவையில் உள்ள வேலைக்குச் செல்பவர்களும், புதிய வேலையை எதிர்நோக்கியிருப்பவர்களும் ஆவலாகவே கிடப்பர்.

இவ்வேளைக்கு வந்த ஆரம்ப காலங்களில் ‘உடைப்பாள்’ என்றால் எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கும்; ‘உடைப்பாளா அது என்னய்யா.. உளி-சுத்தியல குடுத்தா யாரு வேன்னாலும் உடைச்சிட்டுப்போறாங்க.. இதுக்குன்னு தனியாவேற ஆளு இருக்காங்களோ..’ என நினைப்பதும் சொல்லுவதும் உண்டு.

அஸ்திபாரத்தைக் கூட அல்வா போல பிய்த்தெரியும் நுனுக்கங்களையும், உடைப்பில் மற்றவர்களைவிட வேகத்திலும், தெளிவிலும் முன் நிற்கும் அனுபவத்தையும் கானும் போது காலப்போக்கில் அவர்களை தானாகவே மனம் அங்கீகரித்ததுமன்றி இக்கட்டான நிலைகளில் கட்டிடஸ்தர்களிடம் அவர்களை பரிந்துரைக்கவும் செய்தது.

நாங்கள் வைத்திருக்கும் உளியும்-சுத்தியலும் அவர்களது ஆயுதங்களை கண்டாலே பயந்து படுத்துக்கொள்ளும். ஒருவர் குறைந்தது பத்து பொருட்களையாவது கைவசம் வைத்திருப்பார். எல்லாமே இரும்புதான்.

‘கல்உளி’- நீண்டு மேல்பகுதி சுத்தியலில் அடிபட்டு மளுங்கியும் கீழ்பகுதி அடித்து கூர்மையாக்கி ஊசிபோலவும் காட்சியளிக்கும். அதிலே சிறியது பெரியது உன மூன்று-நான்கு கிடக்கும். இது கான்கிரீட் மற்றும் கடினப்பகுதிகளை உடைத்தெடுக்க அதிகம் பயன்படும்.

‘பட்டைஉளி’- இதுவும் அதேபோல் நீண்டு தலைப்பகுதி  மளுங்கியிருந்தாலும் மறுமுனை ஒரு அங்குலத்திற்கும் மேலாக சப்பட்டை வாக்கில் அடித்து கத்திபோல பதமாயிருக்கும். உடைப்பிற்கும் இது அத்தியாவிசயமானது. அதிலும் ரகம் வாரியாய் வைத்திருப்பார்கள்.

‘கொத்து சுத்தியல்’- ஒருபகுதி சுத்தியல் போலவும் மறுபகுதி சுவற்றை கொத்தி காயப்படுத்துவதற்கு ஏற்ப கூர்மையாகவும், நடுப்பகுதி கைபிடி பொருத்தி வு வடிவத்திலுமிருக்கும.; டைல்ஸ் ஒட்டுவதற்கும், சீலிங் மற்றும் பூச்சிற்கு பழைய புதிய சுவர்களை கொத்துவதற்கும் இது தோதானது.

‘சுத்தியல்’- இரண்டுராத்தல் மூன்றுராத்தல் என்று அளவுவாரியாய் வேலைக்கு ஏற்பவும், தேவைப்பட்டால் சம்பட்டி எனப்படும் ராட்சத சுத்தியல்களையும் கட்டிடத்திற்கு எடுத்து வருவார்கள்.

அவர்களது பொருட்கள் ஒவ்வொரு நாளும் பட்டறையில் பதம்பார்த்தே வெளியேற்றப்படும்.

மற்ற வேளையாட்களைவிட அவர்களது வேலைநேரங்கள் சற்று குறைவுதான். சில சமயம் ஒரே நேர வேலையாக மூன்று மணிக்குள்ளாகவே முடித்துவிட்டுப்போவார்கள். நிமிந்தாள்களைவிட சம்பளமும் அதிகம்தான். கடும் பாறையைக்கூட நொருக்கி எறியும் லாவகத்தை கற்றிருப்பார்கள்.

சில சமயம் நானும் அங்கே போய் உடைப்பாள் கூப்பிடுவதுண்டு. “என்னப்பா தளம்பேத்து எடுக்கனுமா.. எத்தன சதுரம் நாலா..? மூனுபேரு வேனும்ப்பா. எதுல காங்கிரீட்டுல ஓட்ட போடனுமா.. எங்க எந்த ஏரியா..” என நம் பேச்சிலிருந்தே பதில் சொல்லித் தயாராவார்கள்.

பயணக்கட்டணம், டீ-வடை செவவு போக சொன்ன வேலை ஒரு மணிநேரத்தில் முடிந்தாலும் முழுச்சம்பளத்தையும் கொடுத்துவிட வேண்டும். ஒருவர் நன்றாக வேலை செய்வார், இன்னொருவர் பிடிக்காதவராயிருப்பார். உடைப்பதும் உடைப்பதுபோல் பாசாங்கு செய்வதும்.. ‘இவன் எதையாவது திருடிச்சென்றுவிடுவானோ’ என மன உளைச்சல் தரும்படி ஒருவர் நடப்பதும்.. இன்னொருவர் நம்பிக்கைக்கு பாத்திரமாய் நடப்பதும், பீடி சிகரெட்டை ஊதி தள்ளுவது தண்ணியடித்துவிட்டு வருவது என்று எல்லா மனிதர்களைப்போலவே இவர்களும் ஏற்ற இரக்க குணமுடைய மனிதர்களாகவும் இருப்பார்கள்.

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் விருப்பு வெருப்புகளுடன் பலமுறை உடைப்பாள் கூப்பிட்டு நானும் வேலை பார்த்ததுண்டு.

இப்படி இருக்கையில்தான் கடந்த ஆண்டு ‘ஜேம்ஸ்’ என்ஜினியரிடம் கிரானைட் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது  அந்த கட்டிடத்தின் சில உடைப்பு வேலைகளுக்கு ‘ராசய்யா’ வந்தார்.

நல்ல வளர்த்தி- ஒல்லியான உடம்பு- கருந்தோல்- பாதி நரைத்தும் நரைக்காத தலைமுடி- நீண்ட மூக்கு- உள்வாங்கிய கண்கள்- கூர்மையான நீண்ட மீசை- நரம்புகள் புடைத்து மேலெலும்பிய கை கால்கள்- நைந்துபொன டீ சர்ட்டும்- இக்காலத்து இளைஞனின் தொலதொலத்த அரைக்கால் டவுசரும் அணிந்து உளி சுத்தியல் கொண்டு லாவகமாய் முன்புற படி ஒன்றை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார். வயது அருபதுக்கும்மேல் இருக்கும்.

அடிக்கடி ‘கோல்டு பில்டர்’ ஊதுவார். என்ஜினியர் என்ற நினைப்பு இன்றி அவரிடம் நாட்டு நடப்பு பேசுவார். மற்ற தொழிலாளர்களிடமும் நன்றாகவும் நையாண்டியாகவும் பேசுவார். சொன்ன வேலையை கச்சிதமாகவும் செய்து முடிப்பார்.

“பாக்கத்தான்யா கெழவெம் மாதிரி தெரியுராப்ல.. வைரம் பாஞ்ச கட்ட. ஒடப்புல மன்னன். எவ்வளவு கடுசா குடுத்தாலும் பஞ்சு முட்டாய பிக்கிறது போல பிச்சு எரிஞ்சிடுவாப்ல. என்னைக்கி ராசய்யா நம்ம கிட்ட வேலைக்கி வந்தாப்லயோ அப்பவே பிடிச்சிக்கிருச்சு. அப்பயிருந்து இவருதே நம்மலுக்கு ஒடப்புக்கெல்லாம். ஓனக்கு தேவைப்பட்டாக்கூட கூப்புட்டுக்க.. கட்டடத்த நம்பி ஒப்படைச்சுட்டுப் போகலாம்..” ஜேம்ஸ் சார் சொல்லுவார்.

அதன்பிறகு ராசய்யாவுக்கும் எனக்குமான நட்பு என் கட்டிடங்களில் உடைப்பு வேலை வரும்போதெல்லாம் தொடர்ந்தது. இவரும் மற்ற உடைப்பாள்களைப்போலவே தியேட்டரின் பக்க வாட்டில் பிரியும் தபால் நிலைய வீதியிலிருக்கும்  பட்டறையில்தான் தினமும் கூடுவார். முதல்நாள் வேலை மிச்சம் இருக்குமானால் சிலசமயம் நேரடியாக அங்கேயே சென்றுவிடுவார்.

என்னை எங்கு பார்த்தாலும் ‘டீ சாப்புடு’ என்று வற்புருத்துவார். சற்று நேரம் கூட நின்றாலோ அல்லது கட்டிடங்களில் வேலை நிமித்தமாக சந்திக்க நேர்ந்தாலோ அரசியல் பற்றியும் அகில உலக நடப்பு பற்றியும் பேசாமல் இருக்க மாட்டார்.

“பாத்தியா மறுபடியும் நேத்து நைட்டு பெட்ரோல் வெலைய ஏத்திட்டாங்ஙல்ல..”

“ஏ பெரிசு பெட்ரோலுக்கும் ஒனக்கும் என்னா சம்பந்தமிருக்குது.. டவுன் பஸ்ல வர்ற போற.. இதெல்லாம் ஒனக்கெதுக்கு”

“யாரப்பா நீ புரியாமப் பேசுற.. இன்னைக்கி பெட்ரோல் டீசல் வெல ஏறுச்சுன்னா நாளைக்கு பஸ் டிக்கட்டு வெலய கூட்டுவாங்ஙே. அப்பரும் ஒவ்வொன்னா ஏறும்.. கடைசியில நம்மல மாதிரி கூலிக்காரெங்ஙேதானப்பா சாகுறாங்ஙே.. பரம்பரை பணக்காரனையும், லஞ்சம் வாங்குறவனையும், கொள்ளை அடிக்கிறவனையுமா பாதிக்குது..”

“பெரிசு நீயெல்லா சட்ட சபைக்கு போகவேண்டிய ஆளு..! இப்பிடி உளி சுத்தியல தூக்கிட்டு ஒடைக்க வந்துட்ட..”

“சட்டசபைல போயி பேசுறதவிட இப்பிடி நம்மலமாதிரி நாலு பேர்கிட்ட பேசுறதுதான்யா பிரயோசனமா இருக்கு.. அப்பத்தான அடுத்து தேர்தல் வரும்போது யாருக்கு போடனும் போடக்கூடாதுன்னு ஒரு தெளிவு கெடைக்கும்.  ரெண்டாவது நம்ம பயலுக ஆயிரஞ் சொன்னாலும் திருந்த மாட்டாய்ங்ஙே.. ஆயிரம் ஐநூருன்னு பாத்துட்டா கண்ண மூடிட்டு ஓட்டு போட்டுர்றாங்ஙே..”

அந்தக்காலத்திலேயே ஐந்தாவது படித்தவராம் பெரிசு. காமராஜரில் இருந்து உள்ளுர் கவுன்சிலர்  முதல் ஒபாமா-விலிருந்து ஒசாமாபின்லேடன் வரைக்கும் அனுதினம் செய்திகள் மூலம் கரைத்துக்குடித்தவர்.

பேச்சுத்திறன் மட்டுமின்றி உடைப்பிலும் அசாதாரணத்திறன் உள்ளவராதலால் உடைப்பு என்றாலே ராசய்யாவைத்தான் மனசு கூப்பிடும். பட்டறைக்கு நேரடியாகச் செல்லா விட்டாலும் அவரின் பாக்கெட்சைஸ் சைனா மொபைலுக்கு ஒரு அழைப்பு விடுத்தால் ஓடோடி வந்திடுவார்.

அவ்வப்போது சரியாக வேலைக்கு வந்துவிடும் பெரிசு இந்தமுறைதான் நான்கு நாட்கள் தாமதப்படுத்திவிட்டார். லட்சுமிபுரம் டாக்டர் வீட்டிலே பழைய மொசைக் கற்களை பெயர்த்தெடுக்க வேண்டும். வேறு உடைப்பாள்களைவிட மனதில்லை. எதிர்பார்த்தபடி வேலை நடக்காது. இரண்டு-மூன்றுபேர் ஜோடி சேர்ந்து வரவேண்டுமென்பார்கள். பழைய வீடு என்பதால் பழக்கமில்லாதவர்களை நம்பி விடவும் முடியாது.

லட்சுமிபுரம் பாக்டர் அனத்துகிறார். வைகாசி மாதம் முடிவதற்குள் வீட்டு வேலை முடிந்து பால் காய்ச்ச வேண்டுமாம். புதிய கட்டிடமாக இருந்தால் வேலைகள் மடமடவென்று முடிந்துவிடும்.

பழைய வீடு என்பதால் ஏற்கனவே இருக்கும் தளத்தை அப்புறப்படுத்தி விட்டு மட்டம் கட்டுவதற்கு தாமதமாகிறது. இந்த ராசய்யா வேறு நிலைமைக்கு ஏற்ப வராமல் இழுத்தடிக்கிறார்.

“அலோ பெரிசு.. என்னா வர்றேங்குறியா வரலைங்குறியா.. இந்தா அந்தான்னு இழுக்குற..”

“யேய் காலம்பர வெள்ளன வந்துர்ரனப்பா.. நைட்டுத்தா மெட்ராஸ்லயிருந்து வந்தேன். ஒரே அலுப்பா இருக்கு. நாளைக்கு வேலைக்கு வந்துர்ரேன்.. நீ என்னா சொல்றியோ க்ளீனா செஞ்சு தர்ரேன்.   ஆனா…”

“என்ன ஆனா ஆவன்னா! வர்ரைல அப்பறும் என்னா!”

“வேலைக்கு கண்டிப்பா வந்துர்ரனப்பா ஆனா சம்பளம் மட்டும் கொஞ்சம் சேத்து குடு. எல்லா பக்கமும் ஏறிப்போச்சு..”

“அட வாய்யா பெரிசு. அஞ்சு பத்து கூட கொறையா ஆயிட்டுப்போகுது. வாய்யா மொதல்ல” அலைபேசியிலே உறுதிப்படுத்தியபிறகுதான் நேற்று சற்று நிம்மதியாக இருந்தது.

சொன்னது போலவே காலையில் உளி-சுத்தியல் கொண்ட கோணிச்சாக்கு பண்டலோடு வந்தார்.

“நாலே நாள்ல ஒனக்கு அம்புட்டு கல்லையும் அலுங்காம எடுத்து குடுத்துர்றேன்.”;

முப்பது வருடத்திற்கு முன் முத்திரை பதித்த மொசைக்கற்கள் ராசய்யாவின் உளி சுத்தியல் கை வரிசையில் தூரில் கலவை ஒட்டியபடி அப்பளம்போல பெயர்ந்து வரத்துவங்கியது.

உடைப்பாள் உடைப்பாள்தான்! இதையே நம்மிடம் வேலை பார்க்கும் நிம்ந்தாள்களை வைத்து உடைத்தாள் துளிகூட அசையாது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதரும். கூலிக்கு பிடித்த கேடாய் முடியும்.

ராசய்யா உடைக்க உடைக்க .. சித்தாள் பெண்கள் இருவர் உடைந்த கல், முழுக்கல், கலவைக்கட்டிகள் அத்தனையும் அப்புறப்படுத்தி கற்களை வெளி கொட்டத்தில் அடுக்கினர்.

டீ-வடை வாங்கி கொடுத்தாயிற்று. மதிய உணவிற்கும் பணம் கொடுத்தாயிற்று. இனி பயணக்கட்டணம் சம்பளம் தந்துவிட வேண்டியதுதான். ஐந்து மணிவாக்கில் பெரிசு வேலையை முடித்துவிட்டு கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தார்.

“நல்லா சிமிண்ட அள்ளிபோட்டு பதிச்சிருக்காங்ஙே போல.. இரும்பா இருக்குய்யா. கையெல்லாங் கடுக்குது. இன்னக்கி கட்டிங் போட்டாலும் தாங்காது. கோட்ரு அடிச்சாதாந் தூக்கம் வரும்..” கை கால் முகம் கழுவிக்கொண்டே புலம்பினார்;.

“பெரிசு சேந்தாப்புல வந்து ஒடைச்சு குடுத்துறு.. லீவ கீவ போட்றாத..”

“சரியப்பா  சரியப்பா”

சட்டையை மாட்டிக்கொண்டிருந்தவரிடம் பணத்தை நீட்டினேன்.

“ஐநூரு.. ஒரு இருவது.. என்னப்பா இம்புட்டுத்தே இருக்கு..”

“ஆமா பெரிசு. மொதல்ல பஸ்க்கும் சேத்து ஐநூர்வா வாங்குவ. இப்ப தனியா ஒரு இருவதுரூவா சேத்து குடுத்துருக்கேன்..  வச்சுக்க..”

சிரித்தார் “என்னப்பா நீ  இன்னோ அந்தக்காலத்துலயே இருக்கியே. சம்பளம் அறநூர்வாயா ஏறிப் போச்சுப்பாச்சு..”

“என்னா பெரிசு. ஐநூர்வா சம்பளம் ஆகி இன்னே ஒரு வருசம் கூட ஆகல அதுக்குள்ள அறநூருங்குறியே”

“ஆமாப்பா.. பட்றைலகூட கேட்டுப்பாரு அறநூர்வாய்கு கொறைஞ்சு யாரும் ஒடப்புக்கு வர்ரதில்ல..”

“வருசத்துக்கு வருசம் நூரு நூரா சம்பளம் ஏத்துனா ரொம்ப நல்லாயிருக்கும்! காண்ட்ராக்ட் எடுக்குறவங்களெல்லாம் குண்டா சட்டிய அடகு வைக்கனும் போலருக்கு!

இது ரொம்ப அநியாயம் பெரிசு.. ஏதோ பத்து இருவது கேட்டா பரவாயில்ல ! ஒரேடியா நூர்ரூவா எச்சா கேக்குறியே.. ஓம்மனச்சாச்சிக்கே சரின்னு படுதா”

“………………”

“என்னா பெரிசு பேசாம இருக்க?”

“நா என்னா பொய்யாப்பா சொல்றேன். நீயும் ஒரு வேலக்காரன் நானும் ஒரு வேலக்காரன். ஓ வயித்துல அடிச்சு புடுங்கனும்னு எனக்கென்ன ஆசையா.. நாட்டு நடப்பு அப்புடி போய்க்கிட்டு இருக்கு. அம்புட்டு பொருளும் தாருமாறா வெல ஏறிப்போச்சு. ஒன்னுங் கட்டுபடியாகமாட்டேங்குது.” கோனிச்சாக்கை உருட்டி கட்டிய ராசய்யா சங்கடத்தோடு பேசினார்.

“ஆமா சாமி. நேத்தே கேக்கனும்டு நெனச்சோம்..” நெற்றியில் வியர்வை வடிய சுமாடுக்கு வைத்திருந்த குற்றாலந் துண்டினால் துடைத்தபடி சித்தாள் பெண்கள் பின்னிருந்து முன்னே வந்தனர்.

“ம் ஒங்களுக்கென்னம்மா வேணும் !”

“ஐயா சொல்றது வாஸ்தவமான பேச்சு.. போன வருசம் வாங்குன அரிசி பருப்பு வெலையெல்லாம் இந்த வருசம் டபுள் மடங்கா ஏறிப்போச்சு. வீட்டு வாடகைலயிருந்து கரண்டுபில்லு, பால், தண்ணி, பஸ் டிக்கட்டுன்னு அம்புட்டும் உச்சானியில  போயி ஒக்காந்து கெடக்கு. எங்களுக்கும் பத்து இருவது சேத்து குடு ராசா”

“ஆமாம்மா இதுல நீங்க வேறயா”

இருபுறமும் இடி விழுந்த மத்தளம் போலிருந்தது எனக்கு.

நினைத்துப்பார்க்கையில் தாருமாறாய் ஏறிப்போன விலை உயர்வுக்கு மத்தியிலே இந்த கூலிக்காரர்களின் கோரிக்கை நியாயமும், மறுக்கவும், தட்ட முடியாததுமாய் பட்டது மனதுக்கு.. அதே நிலையில் ஒரு கட்டிடம் ஒப்பந்தம் ஆனபின்பு ஏறும் சம்பளம் விலை உயர்வுகளெல்லாம் என்னைப் போன்ற ஒப்பந்ததாரர்களையும் பாதிக்கத்தான் செய்கிறது.;

“என்னப்பா யோசிக்கிற”

“யோசிக்க என்னா இருக்குது. நானும் ஒரு காலத்துல கூலிக்காரனா இருந்து வந்தவன்தான.. நாளுக்கு நாள் வெலவாசி ஏறும்போது வாங்குற கூலியும் கட்டனும்ல , என்னா நீங்க வேலைக்கிப்போர எடத்துல சம்பளம் கட்டலன்னு கேட்டு வாங்கீர்ரிங்க.. ஆனா எங்களுக்கு அப்டியில்ல..

இன்னைக்கி தொழில்ல ஒன்னுக்கு நூரு பேரு போட்டியில நிக்குறாங்க.. எங்களுக்கு கட்டடத்துல ரேட்டு ஏறுரது குதிரைக்கொம்பா இருக்கு. வெலவாசி ஏறும்போதெல்லா எங்களுக்குங் கஸ்டமாத்தா இருக்கு”

“………………………..”

“சம்பளம் சேத்து கேக்குற உங்கள மாதிரி வேலைக்காரங்கள்ல இருந்து கட்டிங்மிசின், பிளேடு, சாணைக்கல், எமர்சீட்அட்டை, பாலீஸ், கலர்ஆக்ஸைடு-ன்னு வேலைக்கு வாங்குற பொருள் முதற்கொண்டு எல்லா வெலயும் ஏறிப்போகுது. எல்லாத்தையும் சமாளிக்கனும், எங்களுக்கு வேலை குடுக்குற பெரிய கொத்தனார்கள், எஞ்சினியர்களுக்கும் பாதிப்பு வராத அளவுக்கு ரேட்டு பேசனும்.. நாங்களும் ந~;டப்பட்றக்கூடாது. இப்ப இந்த கட்டடத்துல பேசியிருக்க ரேட்டுக்குள்ள வேலையவும் செஞ்சு முடிக்கனும்ல.. அதான்..! எக்ஸ்ட்ரா சம்பளம் குடுத்தா கைய புடிச்சிருமோன்னு பாத்தேன்”

“அதெல்லாங் கைய புடிக்காது சாமி. ஒனக்கு நஷ்டம் வராத அளவுக்கு நாங்க சூட்டிக்கா வேலைய பாத்து தர்ரோம்” -சித்தாள் பெண்கள்.

“ம். பாரப்பா.. நீயே இம்புட்டு தூரம் சொல்ற. பத்துபேர வச்சு வேலை பாக்குற ஒனக்கே இம்புட்டு செரமமிருந்தா அந்நாடம் கூலி வாங்கி பொளப்பு நடத்துற நாங்க எங்க போயி சொல்றது? வேல குடுக்குற ஒங்களமாதிரி ஆளுகள்டத்தானப்பா கேக்க முடியும், பேச முடியும்.  சித்தாளுக சொன்ன மாதிரி ஒனக்கு நட்டம் வராதப்பா. நாங்க இருக்கம்ல.!”

“ம்..நீங்க சொல்றதும் சரித்தேன். அம்பது நூரு சேத்து வாங்கிட்டுப்போயி கோட்டையா கட்டப்போரிங்க.. உங்களுக்கும் கட்டனும்ல. சரி வாங்கிக்கங்க! இனி அடுத்த கட்டடத்துல இன்னைக்கி நிலவரப்படி ரேட்டு பேசவேண்டியதுதான்.  இங்க டாக்டர்-கிட்டயும் கேட்டு பாப்போம் வேற என்னா செய்ய முடியும். சம்பளம் சேத்து வாங்குறிங்கன்றதுக்காக அளவுக்கு மேல உங்க கிட்டயும் வேலை வாங்குறதும் நல்லாயிருக்காது”

மூன்று தொழிலாளர்களின் ஒருமித்த குரலுக்கு கிட்டிய சிறுவெற்றி அவர்களின் முகத்தில் பெருமகிழ்ச்சியை ஊற்றியது.! மேற்கொண்டு நீட்டிய நூருரூபாயை வாங்கி மடித்து சட்டைப்பையில் வைத்த ராசய்யா “இப்ப சொல்றியே இது வாஸ்தவமான பேச்சு. சரி காலம்பர வந்துர்ரனப்பா. சங்கடப்படாத..” என்று சொல்லிவிட்டு வேகமாய் வெளியேறி நடந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top