உச்சிக்கருப்பு

0
(0)

இன்றைக்கு வெள்ளிக்கிழமை…

திருப்பரங்குன்றம், சந்திராபாளையம், ஆர்விப்பட்டி, தேவிநகர், திருநகர், தனக்கன்குளம் சுற்று வட்டாரத்தின் ஆண்கள் பெரும்பாலும் உச்சிக் கருப்பணசாமி கோயிலில் கூடியிருப்பார்கள். அவரவர் சக்திக்கேற்ப வாழைப்பழங்களை தார்களாகவும் சீப்புகளாகவும் வாங்கிக் கொண்டு கோயிலுக்கு வந்து கனி மாற்றி உச்சிக் கருப்பணணை விழுந்து கும்பிடுவார்கள். புதிதாக வாகனம் வாங்கியவர்கள் சாவியை வைத்து படையலிட்டு வணங்கி எலுமிச்சைப் பழங்களை வாகனச் சக்கரத்தினடியில் வைத்து நசுக்கி கிளம்புவார்கள். செவ்வாய் & வெள்ளிகளில் ஜெகஜோதியாய் இருக்கும் கோயில்.

ஸ்ரீ உச்சிக் கருப்பணசாமி வீற்றிருப்பது தனக்கன்குளம், சாலையில் செவக்காட்டில் சுக்காம் பாறைக் கூட்டத்தின் நடுவே கிடங்கை ஒட்டி……

ஒரு ஆள் இடுப்பளவுக்கு பீடம். இரண்டு கல்தூண்கள். நடுவே பதினோரு அடிக்கு இரண்டு பெரிய வீச்சரிவாள்கள். இரண்டு கல்தூண்களையும் இணைக்கும் படிக்கு ஒரு இரும்புக்கம்பி. கம்பி முழுக்க வெண்கல மணிகள். உபயம் ஊரின் ஒவ்வொரு வகையறாவும்.

உச்சிக்கருப்பணன் கோவிலுக்கென்று சில சட்டதிட்டங்கள் உண்டு. ஆண்கள் தவிர பெண்கள் யாரும் உள் நுழையக்கூடாது.

இங்கே இட்டுக்கொள்ளும் திருநீற்றை வெளியே செல்கையில் அழித்து விட வேண்டும். இங்கே படைக்கப்படும் பிரசாத கனிகளை இங்கேயே உண்ண வேண்டும். வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. தனக்கன்குளம் மந்தையில் பச்சக்குதிர ஆடிக் கொண்டிருந்த கருத்தக் கண்ணன் தான் ஆரம்பித்தான்.

டேய் உச்சையா கோயிலுக்குப் போவமா? அதைக்கேட்ட விருமாண்டிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆமாண்டா இன்னிக்கு வெள்ளிக் கெழம. போனமுன்னா நல்லா வயிறு பொடைக்க வா-ழைப்பழம் திங்கலாம்.

கருத்தக்கண்ணனும் விருமாண்டியும், சொல்வதைக் கேட்ட பாண்டிக்கும் உச்சையாக் கோயிலுக்குப் போக ஆர்வம் மேலிட்டது. அவன் இதுவரை அந்தக் கோயிலுக்குப் போனதே இல்லை.

உச்சிய்யா கோயிலுக்கா?

சரிடா வாங்கப் போலாம்

மூன்று பேரும் கிளம்பிவிட்டார்கள். தனக்கன்குளம் மந்தையிலிருந்து சாவகாசமாய் நடந்தால் கூட அரைமணி நேரத்திற்குள் கோயிலுக்குள் போய்விடலாம். உச்சிக் கருப்பணசாமி குடிகொண்டிருக்கும் மொட்டை மலையிலும், அதற்கு சற்று தள்ளியிருக்கும் பர்மா காலனி, எம்.ஜி.ஆர்.காலனி, விளாச்சேரியிலும் குடிசைப் போட்டுக் கொண்டு குடியிருக்கும் பாமரசனங்கள் ஏதேனும் வம்பு வழக்கு என்றால் உன்னையெல்லாம் அந்த உச்சிய்யா தான் கேக்கணும்.

அவன் எல்லையில் எவன் அடாதுடி பண்ணாலும் பொட்ட மண்ணாப் போய்டுவானுக என்பார்கள். விதவிதமான பிராதுகளோடு உச்சிக்கருப்பண சாமியிடம் முறையிடுவார்கள்.

பெண்கள் கோயில் பக்கமே தலைகாட்டக்கூடாது என்றாலும் அவர்கள் அவன் வீற்றிருக்கும் திசை நோக்கி தெண்டனிட்டு வணங்கத் தவறுவதில்லை. ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளைப் பத்திக்கொண்டுப் போகையில் ஒண்ணு ரெண்டு ஆடுகள் வழி தவறிப் போய்விட்டாலும் உச்சிய்யா சூதானமாக் கொண்டு வந்து சேத்துடுவான் என்பார்கள்.

பொழுது இருட்டி விட்டிருந்தது…

கருங்கும் மென்றிருந்தது பாதை. கருத்தக் கண்ணனும் விருமாண்டியும், பாண்டியும் கோயில் எல்லைக்கு வந்துவிட்டார்கள். ஆட்கள் உள்ளே போவதும் வெளியே வருவதுமாய் இருந்தார்கள். குத்துக்கற்கள் தான் எல்லையாக இருந்தன. கதவும் இல்லை. சுற்றுச்சுவருமில்லை. அத்துவான வெளியில் பீடம், பீடத்தின் மீது வீச்சரிவாள்கள். இரண்டு தூணையும் சேர்த்தாற்போல கனத்த மாலை தொங்கியது. கற்பூரங்களின் ஒளி கார்த்திகையை ஞாபகப்படுத்தியது. கதம்பப் பூக்களின் வாசனையும், ஊதுவத்திகளின் நறுமணமும் சுழன்றடித்தது. பீடம் முழுக்க புகை மண்டலமாயிருந்தது.

படையலில் வாழைக் கனிகளும், சுருட்டுகளும் வெற்றிலைப் பாக்கு, பன்னீர் டப்பாக்களும் இருந்தன. ஒருவர் கனிமாற்ற பின்னொருவர் கனிமாற்றவென தொடர்ந்து கனிமாற்றுதல் நிகழ்ந்து கொண்டிருந்தது. பீடத்திற்கு சற்றுதள்ளி வா-ழைத் தொளிகள் சகட்டு மேனிக்குக் கிடந்தன. அரசமரத்தினடியில் அமர்ந்திருந்த சிறுபையன்கள் போட்டிபோட்டு வாழைப்பழம் தின்று கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கும்மரிச்சம் அதிகரிக்கும் பொழுதெல்லாம் பீடத்தில் அமர்ந்திருந்த கிடாமீசைப் பெரியாம்பளை ஒருவர் கைகளைநீட்டி சைகையால் அமட்டினார். அவரின் சிவந்த விழிகளும், அடர்ந்த புருவமும் கன்னங்கரேலென்ற கிடாமீசையும் சிறுபையன்களை அச்சுறுத்துவதாய் இருந்தது.

சற்றுமுன் கனிமாற்றிய ஒரு எளந்தாரிப் பயல் பழங்களைத் தாரிலிருந்த பிய்த்து ஒவ்வொருவருக்கும் நீட்டிக் கொண்டிருந்தான்.

கருத்தக்கண்ணன், விருமாண்டி, பாண்டி மூவரும் பழங்களை வாங்கிக் கொண்டனர். முதல் சுற்றைத் துவக்கி… மூன்றாவது சுற்றை கடந்திருந்தார்கள்.

முக்கனிகளில் ஒன்றான வாழைக் கனிக்கு இந்தக் கோயிலில் அப்படியொரு மவுசு. நாடன், பூவன், ரஸ்தாலி ரகம் ரகமாய் குவியும், பச்சைப் பழங்கள் அதிகம் மாற்ற மாட்டார்கள். பிரசாதப் பழங்களை சாப்பிட முடியாத ஆட்கள் அப்படியே வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். பழங்களை வாங்கி வாங்கி சாப்பிட்ட மூன்று பேருக்கும் வயிறு புடைத்துவிட்டது. எப்பேர்ப்பட்ட தாழி வயிறு படைத்தவனானாலும் ஒரு அளவுக்கு மேல் வாழைப்பழம் சாப்பிட முடியாது. வயிற்றைப் பிசைய ஆரம்பித்து விடும்.

அடுத்த சுற்று ஆரம்பமானது.

பெரியாம்பளை ஒருவர் பழங்களைக் கொடுத்தார். கருத்தக்கண்ணன் வாங்கி கீழே வைத்துவிட்டான். விருமாண்டியும் வாங்கி வேறொரு பையனுக்குக் கொடுத்துவிட்டான்.

பாண்டி ஒன்றுக்கு இரண்டு பழங்களை வாங்கி டவுசர் பைக்குள் திணித்தான். அதைப்பார்த்த விருமாண்டி ஏலே பழத்தத் தின்னு இல்ல இங்கயே வச்சிடு. வீட்டுக்குல்லாம் கொண்டு போவக்கூடாது என்றான்.

இல்லடா… என் தம்பிக்கும் தங்கச்சிக்கும் பழம் கொண்டுபோலாம்ன்னுப் பார்த்தேன், கோயிலின் சட்டதிட்டம் தெரியாத பாண்டி பரிதாபமாய் சொன்னான்.

சரி… பழத்தைக் கீழ வையி… வா… போவம்,

உச்சியா கண்ணைக் குத்தி கெடுத்துருவாருடி…

மூவரும் கிளம்பினார்கள்.

மூவரும் தனக்கன்குளம் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள்.

டேய்… மணி எத்தினிடா ஆவுது? இம்புட்டு நேரம் எங்கடாப் போயி சுத்திட்டு வரன்னு எங்கப்பா வைவாரு, வாடா வெரசாப் போவம்.

கருத்தக்கண்ணன் விருமாண்டியிடம் பேசியபடியே வேக் வேக் கென்று நடந்தான்.

சீதாலட்சுமி மில் பின் கேட்டைக் கடக்கையில் பாண்டி வயித்தைப் பிடித்துக்கொண்டு

டேய்… நீங்க போங்கடா, எனக்கு வயித்தக் கலக்குது… நான் ரெண்டுக்குப் போய்ட்டு வர்ரேன் என்றான். பார்த்தியா? பாத்தியா? பழத்தக் கொண்டி பையில வச்சதுக்கே உச்சியா வேலையைக் காமிச்சுப்புட்டாரு பார்த்தியா? என்று விருமாண்டி எக்காளச் சிரிப்பு சிரித்தான். ஆமாடீ… உச்சிய்யா கோயில்ல சுருட்டுக்கட்டை யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வந்து வீட்லவச்சி குடிச்ச முனியாண்டிக் கெழவனுக்கு ஒரு வாரத்துல கை காலு வௌங்காமப் போயிருச்சுடி. கருத்தக்கண்ணனும், விருமாண்டியும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள்.

சரி நீ ரெண்டுக்குப் போய்ட்டு வா, நாங்கப் போறோம், இரண்டு பேர் மட்டும் நடந்தார்கள். அவர்கள் போவதையே நின்று பார்த்துக் கொண்டிருந்த பாண்டி மீண்டும் கோயிலை நோக்கி நடந்தான். வந்துவிட்டான் கோயிலுக்கு.

ஆட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பீடத்தைப் பார்த்தான். ஒரு சீப்பு நாட்டுப்பழம் துண்டாக இருந்தது.

எட்டு அல்லது பத்துப்பழம் இருக்கும். வெளிச்சம் மங்கலான இடத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் நம்மைப் பார்க்கிறார்களா? யாரும் அப்படி பார்ப்பதாய் தெரியவில்லை. புள்ளைத் தாச்சியைப் போல சன்னமாக நடந்து கோயிலுக்கு வெளியே வந்தான்.

உச்சிய்யா கண்ணைக் குத்திக் கெடுப்பராம்ல? கெடுக்கட்டும்… கெடுக்கட்டும்.

தனக்குத்தானேப் பேசிக்கொண்டு ஒத்தையாளாய் தனக்குன்குளம் பாதையில் நடந்தான்.

கால்சராயின் இருபுறமும் மொந்தென்று புடைத்திருந்தன.

இருபது கோடைகள் கடந்துவிட்டன. துடியான உச்சிக்கருப்பணசாமி பாண்டியின் கண்களைக் குத்திக் கெடுக்கவில்லை. அப்படிக் கெடுத்திருந்தால் இப்போதும் வெள்ளி, செவ்வாய்களில் நண்பர்களோடு கனிமாற்றச் செல்லும் அவனால் இக்கதையை தன் கைப்படவே எழுதியிருக்க முடியாது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top