ஈரமனம்

0
(0)

ரங்கட்டி ரங்கட்டின்னு கொட்டுக்காரங்க வெளுத்து வாங்கிக்கிட்டு இருந்தாங்க கடலாடி கொட்டுன்னா சும்மாவா பக்கத்து ஊருக மட்டுமல்லாம் பக்கத்து மாவட்டங்கள் வரை அப்படி ஒரு மவுசு மரிப்பயலுகளா வந்து சும்மா பின்னி எடுத்துடுவாங்கள்.

தொடை தெரிய கட்டி கை-யும் மழிக்கப்படாத மூஞ்சியுமாய் மூர்த்தியும், பாண்டியும் தங்கு தங்குன்னு குதிச்சு ஆடிக்கிட்டு இருந்தாங்க. உடம்பெல்லாம் வியர்வை ஆறாய் ஓட கிட்ட நெருங்க முடியாத அளவு “தண்ணி’ வாடை ஊருக்குள்ள எந்த வீட்டுல் துஷ்டி ஆனாலும் மொத ஆளாய்ப் போயி நிக்குறது மூர்த்திதான் பொணத்தைக் குளிப்பாட்டுறதுல இருந்து நல்ல வேட்டி சட்டை மாத்தி படிச்ச ஆளாய் இருந்தால் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து கண்ணாடி இருந்தா அதையும் மாட்டி வடக்க பாத்து உட்கார தோதா ஒரு நாற்காதேடி ஊரெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு ஒன்னும் கிடைக்கலேன்னா பள்ளிக் கூடத்துல போயி ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வந்து கோளாறா உட்கார வச்சுட்டு நிமிந்தான்னா உள்ள போன ஒரு குவார்ட்டரும் போன மூலை தெரியாது. சொந்த பந்தங்கள் எல்லாம் தூரத்துல இருந்து வந்துதான் எடுக்கனு முன்னா மறு நாள் வரை தாங்காது வாடை வந்துருமுன்னு சொல் – பக்குவப்படுத்த ஐஸ் மண்ணெண்ணெய் எல்லாம் வாங்கனும் நானும் பாண்டியும் போயி உடனே வாங்கிட்டு வந்துடுறோம் அப்படின்னு சொல் – அதுலயே ஆஃபுக்கும் அடிப்போட்டுருவான் பெத்த அப்பா அம்மா செத்தாக்கூட தொட்டுத் தூக்கவோ, குளிப்பாட்டவோ மாச்சப்பட்டுக்கிட்டு இருக்கிற காலத்துல மூவேலையையும் திரியுற திரிச்சலையும் பார்த்துட்டு கணக்குப் பார்க்காம செலவோட செலவா கேக்குறத கொடுத்துடுவாங்க. இதுலையும் கொஞ்சநாள் சீக்குல படுத்துருந்து போனவங்களா இருந்தா இவன் வச்சதுதான் வரிசை ரெண்டு நாளைக்கு ‘தண்ணி’ யிலதான் குளிப்பு இந்த விசயத்துல கணக்குப்பாக்காம செலவழிச் சாங்கன்னாத்தான் தூக்குற கட்டாப்புல கூடமாட இருந்து நல்ல விதமா அடக்கம் நடக்க ஒத்துழைப்பான். ஏதாவது திண்டுக்கு முன்டா நடந்து இவனைக் கவனிக்காமல் விட்டுட்டாங்கன்னா போதும் சும்மா இருக்க மாட்டான். சிலுகச் சண்டை இழுக்க எவன்டா கிடைப்பான்னு திரிவான். எழவுக்கு வந்தவங்க கிட்ட ஏழரை இழுத்துடுவான் வந்தவுங்களும் லேசா ஒரு மப்புல தான் இருப்பாங்க. இவம் பேசுற பேச்சை எவ்வளவு நேரம்தான் கேட்டுக்கிட்டு இருப்பாங்க. ஒருத்தருக்கொருத்தர் பேச்சு நீண்டு சுதி கூடி தன் உசார் கெட்டு மல்லுக்கட்டி தெள்ளுத் தெரிச்சு நல்ல பொணத்தை நாறப்பொணமா ஆக்கிடுவாங்க. இந்தச் சமயத்துல மூர்த்திகிட்ட யாரும் நெருங்கறது இல்லை . பயந்து இல்லை ஒரு அசிங்கத்தை கண்டு ஒதுங்குற மாதிரிதான்.

இவம் பின்னால் ஒரு கூட்டமே சேர்ந்துடுச்சு கூடப் போனால் தண்ணீ’ உறுதி எந்த வீட்டுல துஷ்டி’ ஆனாலும் சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்ல ஆள்போகுதோ இல்லையோ “டாஸ்மாக்” போயி ஒரு பெட்டி வந்து இறங்கிடுது.

மூர்த்தி பாண்டியோடு சேகரும் சேர்ந்து கொண்டு கொட்டுக்காரங்களக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவங்களும் வ- தெரியாம – ருக்க ரெண்டு ‘கிளாஸ்’ உள்ள போன வேகத்துல இவங்க ஆட்டத்துக்கு தோதா சுழன்று சுழன்று அடித்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்தப் பொசகெட்ட நாயி ரெண்டு நாளா கொல பட்டினியோடு இப்படி திரியுதேன்னு மனசுக்குள்ளேயே வஞ்சிக்கிட்டு மூர்த்தியின் தாய் பொன்னம்மா கையில் செம்போடு வந்து எவ்வளவோ கெஞ்சிப் பார்த்து விட்டான். ஊஹூம் அவன் இருக்குற வேகத்துல நீச்சத்தண்ணியாவத குடிக்கிறதாவது. வாய்க்கு வராத வார்த்தையெல்லாம் பேசி திட்டி விரட்டி விட்டான். பாவம் அவளுந்தான் என்ன செய்வாள்.

ஆதரவாய்ப் பேச ஒரு நாதி இருக்காது வேனாக் கொதிக்கிற வெயில்ல வம்பாடு பட்டு கஞ்சித் தண்ணி காய்ச்சி வைத்தால் அதை ஒழுங்காய் சாப்பிடாமல் குடிச்சுக் குடிச்சு கொடல் வெந்து போய் இப்படி தறுதலை நாயா அலையுதேன்னு மனசுக்குள்ளேயே புளுங்கிப்போய் இடத்தை விட்டு நகர்ந்தாள். எல்லாம் முடிந்து வந்து படுத்தான்னா ரெண்டு நாளைக்கு எழுந்திருக்காமல் சுருண்டு கிடப்பான் . முழிக்குற சமயத்துல மெல்ல ஆரம்பிபாள் “ஏய்யா நீயும் ஆளோட ஆளா வேலை வெட்டின்னு போனாத்தானேய்யா ஊருக்குள்ள மனுசன்னு மதிப்பான்’ இப்படி பேச்சை ஆரம்பித்தாலே போதம் தையா தக்கான்னு குதிப்பான் கொஞ்சம் அதட்டி உருட்டி பேசுனான்னாக்க ரெண்டு நாள் வீட்டுப் பக்கமே வராமல் குடிச்சுப் போட்டு மடத்துல மல்லாந்து கிடப்பான். அப்பவும் பொன்னம் மாவுக்கு மனசு கேக்காது தேடிக் கண்டுபிடித்து தயனாத்து பண்ணி வீட்டுக்கு கூட்டி வந்து சாப்பாடு போடுவாள். அதையும் ஆயிரம் நொட்டை சொல் – ஒழுங்காய்ச் சாப்பிடாமல் திரிவான். ரெண்டு நாளாய் குட்டி போட்ட பூனை மாதிரி அந்தத் தெருவையே சுத்திச் சுத்தி வந்தான். பாண்டி அப்பப்ப வந்து இப்ப எப்படி இருக்குதாம்’ என்று எலக்சன் ரிசல்ட் மாதிரி விசாரித்துச் சென்றான். கடந்த ஒருவாரமாய் காரை வீட்டு கருப்பசாமி இந்தா அந்தான்னு இழுத்துக்கோ பரிச்சுக்கோன்னு இருக்கார். எப்படா கதை முடியம்னு வீட்டுக்காரங்களைக் காட்டிலும் இவனுக்குத்தான் ரொம்ப எதிர் பார்ப்பு நல்லா தண்ணியடிச்சு பத்து நாளைக்கு மேல ஆச்சுது. ஒரு குளிப்பு குளிச்சுடுலாமுன்னு பாத்தா இவர். இன்னும் போக மாட்டேன்னு வதச்சுக்கிட்டு இருக்காரேன்னு சுத்திசுத்தி வந்தான். இன்னைக்கு நெற அம்மாவாசை ராத்திரி பொழுது தாங்காது அப்படீன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க கை காலெல்லாம் நடுக்க மெடுத்துத் திரிஞ்சான். எப்படா அந்த வீட்டுல் இருந்து அழுகைச் சத்தம் வருமுன்னு எதிர்பார்த்து உலாத்திக்கிட்டு இருந்தான்.

மூர்த்தியண்ணே, மூர்த்தியண்ணே ஒரு காலை இழுத்துக் கொண்டு ரவி அவயக்குரல் கொடுத்துக் கொண்டு ஓடிவந்தான். இந்தச் சாவட்டை நாயிக்கு நேரங்காலமே தெரியாது சத்துக் கொண்டே வெறித்துப் பார்த்தான். “அண்ணே, அம்மா தண்ணிப்பானை தூக்குறப்போ வழுக்கி விழுந்துட்டாங்கண்ணே மூச்சுப் பேச்சில்லாம மயங்கிக் கிடக்குறாங்க சீக்கிரம் ஓடி வாங்கண்ணே “அம்மா எப்படி இருக்காங்கடா’ கேட்டுக் கொண்டே அரக்கப்பரக்க எழுந்து ஓடினான். மயங்கி விழுந்த பொன்னம்மா எழுந்திருக்கவே இல்லை. கிட்ட வந்து பார்த்த மூர்த்திக்கு ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மலங்க மலங்க விழித்தான். அம்மா அம்மா என்று பிதற்றினான். அழுதான், புரண்டான். வாழ்வில் முதன் முதலாய் ஒரு பெரிய சோகத்தைக் கண்டு வாயடைத்து மூலையில் உட்கார்ந்தவன் எழுந்திருக்கவே இல்லை. கூட்டங் கூட்டமாய் வந்து இவனைக் கட்டிப் பிடித்து அழுதார்கள். நம் துக்கத்தோடு உறவினர்களும் உள்ளூர்க்காரர்களும் சேர்ந்து கண்ணீர் விடுவதைக் கண்டவன் பொங்கிப் பொங்கி அழுதான். அழுதழுது உடலும் உள்ளமும் சோர்ந்து எழுந்திருக்கவே திராணியற்றவனாய்க் கிடந்தான். எல்லாச் சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்தது இறுதிப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தது. கைத்தாங்கலாய் ரெண்டு பேர் மூர்த்தியை வீட்டிற்கு வெளியே கூட்டி வந்தார்கள். பாண்டியும் சேகரும் தொடை தெரிய கட்டிய கை-யோடு கொட்டுக்காரங்களுக்கு ஈடு கொடுத்து ஆடிக் கொண்டு இருந்தார்கள் அவர்களைக் காணவே பிடிக்கவில்லை. சே என்று மனசு அடித்துக் கொண்டது பார்க்கப் பார்க்க வெறுப்பாய் இருந்தது. தலையைக் குனிந்து கொண்டான் கடலாடிக் கொட்டுக்காரங்க சும்மா ரங்கட்டி ரங்கட்டின்னு விடாம அடிச்சுக்கிட்டு இருந்தாங்க.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top