இவரு ஏன் இப்படி பேசுறார்?

0
(0)

உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் அந்தப் பெரிய தொழிற்சாலையிருந்து மின்வாரிய ஜீப் வெளியில் வந்தது. அந்த நெடுஞ் சாலையில் சிறிது தூரம் சென்ற பிறகு, வயர்மேன் பாண்டியனை சாலை ஓரமாக இறக்கிவிட்டு, மீண்டும் சென்றது. நெடுஞ்சாலையிருந்து பிரிந்து செல்லும் வண்டிப் பாதையில் பக்கத்துக் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அந்த தொழிற்சாலையில் பராமரிப்பு வேலைகளை முடித்த பிறகு அந்த முதலாளியிடம் மின்வெட்டு விசயமாக ஏ.இ. பேசியது நினைவிற்கு வந்தது. அதோடு பக்கத்துக் கிராமத்திலுள்ள சிறு விவசாயிகளும் நினைவிற்கு வந்தார்கள். மின் அழுத்தத்தில் உயர்வு, தாழ்வு என்று இருப்பது போல் மின்வெட்டிலுமா இருக்க வேண்டும்? எல்லாவற்றிலும் தானே இருக்கிறது.

கிராமப்புறங்களில் வேலை பார்ப்பதால் அந்த வயர்மேனுக்கு விவசாயிகளின் கஷ்டங்களும், மின்வெட்டால் ஏற்படும் நஷ்டங்களும் தெரியும். அதே சமயம் பெரிய தொழிற்சாலை முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. அதிலும் சிறு விவசாயிகளை நினைத்துக் கவலைப்பட்டார். இவர்கள் எவ்வளவு விசயங்களைத் தெரியாமலிருக்கி றார்கள்? நமக்குத் தெரிந்த விசயங்களையாவது சொல்லிப் பார்ப்போம். புரிந்து கொண்டால் தானே கஷ்டங்களுக்கு வழி பிறக்கும். அதனால் முதலில் புரிய வைப்போம். நேரடியாகச் சென்னால் புரிந்தாலும் மனதில்படாது. அதனால் மனதில் படும்படியாக வேறுமாதிரி சொல்ல வேண்டும் கொஞ்சம் சங்கடப்படும் படியாக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி யோசித்துக் கொண்டே வயர்மேன் நடந்தார்.

உயர் அழுத்த மின்சாரம் பெறக்கூடிய அந்த முதலாளியிடம் ஏ.இ. பேசிய விசயங்களையெல்லாம் நினைத்துக் கொண்டார். காலையில் பழைய சாதம் சாப்பிட்டதால் இந்த வெயிலில் நடப்பது அவ்வளவு கஷ்டமாகத் தெரியவில்லை என தனக்குள் பேசிக்கொண்டே அந்தக் கிராமத்தை அடைந்தார்.

அடைக்கப்பட்ட கதவைப் பார்த்து தோட்டத்திற்கு சென்று விட்டார்களோ என்ற சந்தேகத்தோடு தட்டினார். பலமுறை தட்டிய பிறகு இவர் திரும்பிவிட நினைத்தவுடன் கதவு லேசாகத் திறக்கப்பட்டது. கதவுகளின் சிறிய இடைவெளியில் சிறு விவசாயி மருதமுத்து லேசாக எட்டிப் பார்த்தார் வயர் மேனைப் பார்த்த பிறகு அவர் முகத்தில் இருந்த பய உணர்வு நீங்கி, சிறிது கேள்விக் குறியுடன் கதவை நன்றாகத் திறந்தார்.

“என்ன — ஏதோ பயந்து போன மாதிரில இருக்கீங்க?”

“வேற ஒன்ணுமில்லங்க – ஜப்தி பன்றதுக்கு கதவத் தட்டுரீங்களோன்னு நெனச்சேன. நல்லவேள நீங்க வந்திருக்கீங்க பீசப் புடுங்கத்தானே வருவீங்க ஜப்திக்கெல்லாம் வர மாட்டீங்கல்ல”

“மோட்டாரு ஓடல, பீசு போயிருச்சு வந்து போடுங்கன்னு ஒங்க பையன் ஆபீசுல சொன்னாரு. வாங்க போவம்.”

வெளியில் வந்து சுற்றிலும் பார்த்து விட்டு வயர்மேனோடு மருத முத்து நடந்தார். வழியில் உள்ள கடையில் டீ சாப்பிட்டு விட்டு தோட்டத்தை நோக்கி நடந்தார்கள். நடக்கும் பொழுதே ஏ.இ. பேசியது வயர்மேன் நினைவுக்கு வந்தது. அவரது எண்ணத்தை நிறைவேற்ற ஆரம்பித்தார்.

“இனிமே முப்பது பெரசண்டு மின்சார வெட்டுங்க அதனால ஒங்க மோட்டார்கள்ல முப்பது பெரசண்ட கொறச்சு ஓட்டுங்க”

மருதமுத்துவுக்கு சரியாகப் புரியவில்லை மின் வெட்டைப் பற்றி சொல்கிறார். அதனால் தெளிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும் என நினைத்தார்.

“ஏங்கிட்ட மூணு ஆர்ஸ்பவர் மோட்டார் ஒன்னுதாங்க இருக்கு, இதுல எப்படிங்க மோட்டாரக் கொறைக்கிறது?”

“அப்படியா? கூடுதலா மோட்டார்கள வச்சு ஓட்றதா மேலே இருந்து எங்களுக்கு தகவல் வந்திருக்கு. அப்படி இருந்துச்சுன்னு ஒடனே எழுதிக் குடுத்திருங்க பவர்கட்டு இருக்கிறதால அனுமதிக்க மாட்டாங்க சீக்கிரமா எழுதிக் குடுத்திட்டு கவனிச்சுட்டீங்கன்னா மூணு மாசத்துக்கு முன்னாலேயே அனுமதி கொடுத்த மாதிரி காண்பிச்சிருவாங்க.”

“கூடுதலா மோட்டார் வச்சுக்கிறதுக்கு கெணத்துல தண்ணியுமில்ல ஏங்கிட்ட நெலமுமில்லங்க உள்ள மோட்டாருக்கு ஒழுங்காக் கரண்டு வந்தாலே போதுங்க.”

வயர்மேன் மனம்விட்டுப் பேசுகிறார். அதனால் மின்வெட்டால் ஏற்படும் கஷ்டங்களை சொல்லி ஏதாவது யோசனை கேட்கலாம் என்று மருதமுத்து ஆரம்பித்தார்.

“கரண்டு கட்டுனால எங்களப் போல விவசாயிக்கு ரொம்பக் கஷ்டங்க. கரண்டு வர்ர நேரமே தெரியலங்க. கரண்டு வராதுன்னு வீட்டுக்கு வந்துட்டா, கரண்டு வந்துருதுங்க வேக வேகமாக ஓடி தோட்டத்துக்கு போறதுக்குள்ள கரண்டு நின்னு போயிருது. இதுக்காக எப்பவும் மோட்டாருக்குப் பக்கத்திலேயே ராத்திரியும் பகலும் ஒக்காந்திருக்கோம். கட்டாயமா எல்லோரும் டார்சுலைட்டு வச்சிருக்கோம். அதுக்கு பேட்ரிக்கட்ட வங்குறது. கரண்டு பில்லு மாதிரி செலவாகுது. மோட்டாரு ஓடி கொஞ்ச நேரத்துல தீடீர்னு நின்னு போது. பாதி நெலத்துல கூட தண்ணீ பாஞ்சிருக்காது அப்பறம் மோட்டாரு நின்னு நின்னு ஒடுது. கொஞ்சம் அசந்தம்னா எருஞ்சு போயிருது. ரொம்பக் கேவலப்பட்ட பொலப்புங்க.”

வயர்மேன் ஏ.இ. சொன்னது போல் சொன்னார்.

“நீங்க முப்பது பெரசண்டு மோட்டாரக் கொரச்சு ஓட்டுனாலே போதும் ஒங்களுக்கு வர்ர கரண்டு தொடர்ச்சியா வரும். ஏதாவது அவசரத்துக்கு நிறுத்தனும்னா. ஒங்கள்ட சொல்லாம நிறுத்த மாட்டோம். அப்படியே ஏதாவது பால்ட் ஆயி கரண்டு அதாவே நின்னு போனாக்கூட, எவ்வளவு நேரத்துல திரும்பவும் வரும்ங்கிறதக் கூட ஓடனே ஒங்களுக்குச் சொல்லிருவோம். அதனால கவலப்பட வேண்டாம்.”

அந்த விவசாயிக்கு வயர்மேன் மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது. கஷ்டத்தைச் சொல்லி யோசனை கேட்டால் இப்படி பேசுகிறரோ. கேலி செய்து வேதனையைத் தூண்டுகிறாரா? அல்லது இவருக்கே ஏதாவது ஆரம்பமாகி இருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டவுடன் கொஞ்சம் விலகியே நடக்க ஆரம்பித்தார். குறுகலான வரப்புக்களில் வயர்மேனை முன்னால் நடக்க விட்டு, இவர் பின்னால் சென்றார். எதற்கும் ஜாக்கிரதையாக இருந்து கொள்வோம் என நினைத்து பேசாமல் நடந்தார்.

மீண்டும் ஏ.இ. நினைவிற்கு வர வயர்மேன் தொடர்ந்தார்.

“ஓங்கல மாதிரி வசதியானவங்க பணங்கட்டாம பாக்கி நெறையா இருக்குங்க. தமிழ்நாடு பூராவும் கணக்குப் பாத்தா கோடிக் கணக்குல பணம் பாக்கி நிக்கிதுங்க மேலேயிருந்து அடிக்கடி பிரசர் குடுக்குராங்க கொஞ்சங் கொஞ்சமாவது கட்டுங்க. பாக்கி சேராமலாவது இருக்கும். முடிஞ்ச அளவு கொஞ்சமாவது பணங்கட்டுனா கேள்விக்கு எடமில்லாம போயிரும். தயவு செய்யுங்க எங்களுக்கும் பிரச்சன கொறையும்.”

சிறு விவசாயி மருதமுத்துவின் சந்தேகம் வலுப்பட்டது. பணத்தக் கட்டலனா பீசப் பிடிங்கிட்டு போயிர்றாங்க. அவராதங் கட்டி திரும்பக் கரண்ட வாங்கிக்கிட்டு இருக்கோம். இவரு லூசு மாதிரில பேசிக்கிட்டு வறாருக. நமக்கும் நேரஞ்சரியில்ல, அவருக்குஞ் சரியில்ல, என்று நினைத்துக் கொண்டு, எப்படியாவது இவரிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்தார். அதோடு பணம் விசயமாக பேசியதால் ஜப்தியின் நினைவு வர பயமும் சேர ஆரம்பித்தது.

“வயர்மேன் சார், ஊருக்குள்ள எல்லாரும் ஜப்திய நெனச்சுப் பயந்துக்கிட்டு இருக்கோம். வீட்டுல சின்னஞ் சிறுசுகளை விட்டுவிட்டு வந்திருக்கேன் அத னெனச்சு கவலையாயிருக்கு தயவு செஞ்சு நீங்களாப் போயி பீசப்போட்டுருங்க. நான் ஊருக்குள்ள போயி மத்த விவசாயிங்களையும் பாத்து பேச வேண்டியிருக்கு. நான் வரட்டுங்களா? என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் தப்பித்து ஓட முயன்றார்.”

நில்லுங்க-கிறுக்குத் தனமா பேசிட்டு வரேன்னு ஓடப்பாக்குறீங்களா? வேணும்னு தான் அப்படி பேசுனே.”

மருதமுத்து தன் முயற்சியை கைவிட்டு வயர்மேனைப் பார்த்தார் அவரது சிரித்த முகமும், பேச்சு மாறிய விதமும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனாலும் ஏனென்று புரியவில்லை.

“பயப்படாதீங்க எனக்கு ஒன்னும் ஆயிரல – வேற எடத்துல பேசுனத ஓங்ககிட்ட சொன்னதால என்னத் தப்பாப்பாக்குறீங்க”

“என்ன சொல்றீங்க ? …… புரியுறாப்ல சொல்லுங்க”

“பெரிய பெரிய தொழிற்சாலைங்க வச்சிருக்க மொதலாளிங்க கிட்ட எங்க அதிகாரிங்க இப்படி பேசுவாங்க. அத அப்படியே சொன்னா ஒங்களுக்கு மனசுலபடாது. சங்கடமா இருந்தாலும் பரவாயில்லன்னு தான் இவ்வளவு நேரம் பேசிட்டு வந்தேன். இதுக்கு முன்ன நான் சொன்னதெல்லாம் யோசிச்சுப்பாருங்க புரியும்.”

இதுவரையிலும் நடந்ததை நினைத்து மருதமுத்துவுக்கு சிரிப்பு வந்தது. விசயங்கள் புரியப் புரிய யோசனைகள் அதிகமாகியது வயர்மேனோடு நெருக்கமாக நடக்க ஆரம்பித்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top