இளங்கன்று பயமறியும்

0
(0)

கரும்புத் தோட்டம் மாதிரி இருந்தது கம்பங்காடு. ஆள் போனால் தெரியாது. கம்பங்கதிர் நன்கு மணிப்பிடித்து தீங்கதிர் பருவத்தில் இருந்தது. ஊடுபட்டம் போட்டிருந்த செஞ்சோளப் பயிர் ரெண்டு அடித் தூக்கலாக வளர்ந்திருந்தது. நுனியில் கட்டியிருந்த வெள்ளைத் துணி காற்றில் வெஞ்சாமரம் வீசி கொண்டு இருந்தது. காக்கை குருவி விரட்ட மூலையில் சின்ன பரண் நல்ல வெயில் கம்பஞ்சோகை தலை வாடியிருக்க செல்லையாவும் பரமசிவமும்.

கம்மங் கதிர்களை நிலக் கசக்காய்க் கசக்கி கொம்மையை ஊதி ஊதித் தின்று கடை வாயெல்லாம் வத்தது. நாக்கு காரிப் போய்விட்டது. உதடுகள் வெள்ளை பூத்து இருக்க டவுசர்பை நிரம்பி வழிந்தது. “டேய் செல்லையா வீட்டுக்குப் போவோமாடா’ அடிக்குரலில் மெதுவாய்க் குசுகுசுத்தான் பரமசிவம்.

“எனக்கு அப்பதையே புடுச்சு தண்ணித் தாகமா இருக்குடா’ ஒரு பக்கமாக இழுக்கும் டவுசர் பையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டான் செல்லையா.

“நான் கருவக் காட்டுக்குள்ள பூந்து அப்பிடியே ரோடேறி வீட்டுக்குப் போறேன்டா. நீ எப்படிப் போறே”

“கம்மாக் கரையைச் சுற்றி வீட்டுக்குப் போயிருவேண்டா’

“சரிடா நாளைக்கு ஸ்கூல்ல பாப்பம்” ரெண்டு பேரும் ஒருவர் கண்ணிலும் படாமல் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டில் பரமசிவத்தின் அப்பா வெள்ளைச்சாமியுடன் இரண்டு பேர் பேசிக் கொண்டு இருந்தனர்.

“நீங்க சொல்றது வாஸ்தவம் தான்யா. ஒரு காலத்துல நம்ப சாதி சனம் பேரச் சொன்னா ஒரு அரணை இருந்துச்சு. இப்ப அப்பிடியா இருக்குது. வெள்ளவாட்டா திரிய ஆரம்பிச்சுட்டானுக. நேருக்கு நேரா நின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு மட்டு மருவாதி இல்லாம போச்சுல்ல”.

“இருக்கலாம்ப்பா. பல எடத்துல அப்பிடித்தான் இருக்கானுவ. அதுக்காக நானும் அப்படியே சொரணை கெட்டத்தனமா வாழ்ந்துட மாட்டேன். இப்பக் கூட கீழத் தெருக்காரனுவ நம்ம தெருவுக்குள்ள வரமுடியாது தெரியுமில்ல….” நிமிர்ந்து உட்கார்ந்து மீசை மேல கைபோட்டார் வெள்ளைச் சாமி.

“ஒங்களப் பத்தி தெரியாதாய்யா. சுத்துப் பட்டியில் உள்ள நம்ப எனத்துக்கு நீங்கதானே அருணிப்பா இருக்கீங்க. அவ்வளவு ஏன் இந்த ஏரியாவுல தாட்டியத்தோடு இருக்குறது நீங்க மட்டுந்தானய்யா.

”எல்லாஞ் சரிதான். ஆனா நம்ம பயலுகள கட்டுப்படுத்துறதுதான் ரொம்பச் செரமம். ஒரு நாளைக்கு வன்னிப்பட்டியான் சரக்கு அஞ்சு – ட்டர் கா-யாகுதுன்னா பாத்துக்குங்களேன். ரெண்டு நாளைக்கு இல்லேன்னாக்கூட நம்பள யாரோ மாதியில்ல பாக்குறான். ஏதோ அந்தக் காலத்துல பாட்டன் பூட்டன் சேதது வச்ச சொத்து இருக்குறதால கெத்தோட இருக்கேன் இல்லாட்டி நம்ப பயலுகளே மதிக்க மாட்டானுவ’ ச-த்துக் கொண்டார்.

நீங்க சொல்றதும் சரிதான். ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டைப்பாடிக் கறக்கணும்கிறது ஒங்களுக்குத் தெரியாததா…. நம்ப சங்க வேலையா வந்தோம். பாத்தாச்சு நாங்க கௌம்பவாய்யா”

“என்ன வந்த காலோட கெளம்புறீங்க. இருந்து சாப்புட்டுதான் போகணும். நீங்க வந்த ஒடனே வெடக்கோழி அடுப்புக்கு போயிருச்சுல்ல”.

“நாங்க அதுக்காக சொல்லலீய்யா…”

“இருங்க நீங்க என்ன தெனசரியா வந்துக்கிட்டு இருக்கீங்க. நம்ப சாதிசனத்துக்காக பாடு படுறவங்களுக்கு நான் இதுகூட செய்யலீன்னா பாக்குறவன் காறித் துப்பிடமாட்டானா?”

“அய்யா வீட்டுல சாப்புடாத சாப்பாடா. சீக்கிரம் போனாக்க இன்னும் ரெண்டு பேர பாக்கலாமேன்னு ….”

“நீங்க ஒன்னும் பேசக்கூடாது. மில்ட்ரி சரக்கு ஓடைக்காம வச்சிருக்கேன். சாப்புட்டுத்தான் போகணும்.”

“ஹி… ஹி….. ஒங்கள பாக்க வந்துட்டு தப்பிச்சுப் போயிடமுடியுமா”.

அதன்பின் வீராவேசமாய்ப் பேசிக் கொண்டார்கள். உளறிக் கொண்டார்கள். மறுநாள் காலையில் வந்தவர்கள் இல்லை. அவர்களில் ஒருவர் கட்டியிருந்த பச்சைக்கரை போட்ட வேட்டி மட்டும் மூலையில் கிடந்தது அனாதையாய்.

பள்ளி மைதானத்தில் வேப்ப மரத்தடியில் செல்லையாவும் பரமசிவமும் அவிச்ச மக்காச் சோளத்தை ஒவ்வொன்றாய்ப் பிய்த்துத் தின்று கொண்டு இருந்தார்கள்.

“டேய் பரமசிவம். நாம் இப்படி ஒன்னா திரியுறத ஒங்க அப்பா பாத்தா என்னையுஞ் சேத்து பின்னிடுவார்டா”

“டேய் எங்க அப்பா பள்ளிக்கூடம் பக்கமே வரமாட்டார்டா’

“எதுக்குடா?”

உள்ளூரில் படிப்பு முடிந்து புதூரில் ஒம்பதாம் வகுப்பில் சேர வீட்டில் ஒரு போராட்டமே நடந்தது அவனுக்கு மட்டுமே தெரியும். இங்கிலீஸ் வாத்தியாரோட அப்பா பரமசிவத்தின் வீட்டில் ஒரு காலத்தில் மாடு மேய்த்தவர்.

“நம்ம வீட்டுல மாடு மேச்ச பயபுள்ள அவன்கிட்ட போயி எம்புள்ள கையக்கட்டி நிக்கணுமா?” வெள்ளைச்சாமி வானத்துக்கும் பூமிக்குமாய்க் குதித்தார்.

“என்னங்க வம்ச வம்சமா தற்குறியா இருக்குற நம்ம குடும்பத்துல இவந்தான் மொத மொதல்ல படிக்கணும்னு ஆசைப்படுதான். அவம் படிச்சா ஒங்களுக்குதான் பெரும். வாத்தியாரு கீச்சாதிங்கறத மனசுல வச்சுக்கிட்டு இவம் படிப்பைப் பாழாக்கிடாதீங்க’ – மகனுக்காக கெஞ்சிக் கூத்தாடினாள் தாயம்மா.

நீண்ட…. போராட்டத்துக்குப் பின் சம்மதித்தார். ஆனால் பள்ளிக்கு வரவில்லை. தாயம்மாள்தான் மகளை பள்ளியில் சேர்த்து விட்டாள்.

‘அய்யா பரமு அப்பா கொணத்தப்பத்திதான் ஒனக்குத் தெரியுமில்ல பாத்து சூதானாமாய் நடந்துக்கய்யா. அவரு சாதி சாதின்னு இன்னும் வெறிபுடுச்சு அலையுறாரு நீ நல்லா படிச்சு பெரிய ஆளாவந்துதான் எல்லாத்துக்கும் முடிவு கட்டணும். இங்கிலீஸ் வாத்தியார் ரொம்ப நல்லவரு. ஏதாயினும் வேணுமின்னா அவருட்ட கேட்டுக்கய்யா’ – தாயம்மாள் அன்றைக்கு வந்துவிட்டுப் போனவள்தான் அதன்பின் யாருமே பள்ளிக்கூடம் பக்கம் வந்ததில்லை.

அன்று மதியமே பள்ளி முடிந்து சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.

“டேய் செல்லையா இந்தக் தூக்குச் சட்டி அங்குட்டும் இங்குட்டும் லப்பிக் கிட்டு வருதுடா பேசாம புளிய மரத்து ஊருணியில் சாப்புட்டுப் போவோமாடா’.

“சாப்புடலாம்….. ஆனா யாராவது வந்துட்டா ‘

“இந்த மத்தியான நேரத்துல யாருடா வரப் போறாங்க. வாடா பசி வயித்தைக் கிள்ளுது.”

ஊருணியில் கெத்துக் கெத்துன்னு தண்ணீர் இருந்தது. இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

“டேய் அந்த மகிளி கீரையை இன்னுங் கொஞ்சம் குடுடா சூப்பரா இருக்கு”

“போடா உங்க வீட்டுல வச்ச உருளைக் கிழங்குதான் நல்லா இருக்கு”.

இருவரும் சாப்பாட்டை மாறி மாறிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது யாரோ ஒருவர் சைக்கிளை நிறுத்தி விட்டுத் தண்ணீர் குடிக்க ஊருணிக்கு வந்து கொண்டு இருந்தார். பரமசிவம் பார்த்தான். ஆ ….. அன்றொருநாள் அப்பாவிடம் பேசிக் கொண்டு இருந்தவர். கீழத்தெரு செல்லையாவுடன் தான் சாப்பிடுவதை அப்பாவிடம் சொல் – விட்டால் .. அவ்வளவுதான் முதுகுத் தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார். ஒருமுறை கீழத் தெருவில் விளையாடியைதைப் பார்த்த அப்பா புளிய விளாறால் இழுத்ததில் நாலு நாள் காய்ச்ச-ல் படுத்திருந்தது ஞாபகம் வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை . பயத்தில் ஒன்னுக்கு வந்தது. அவர் பக்கத்தில் வந்து விட்டார். மூஞ்சியெல்லாம் வேர்த்துக் கொட்டியது.

செல்லையாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த ஆள் நம்மூர் இல்லையே. இவன் ஏன் இப்படி பேந்தப் பேந்த முழிக்குறான். அவர் பரமசிவத்தைப் பார்த்துவிட்டார்.

“என்ன தம்பி ஸ்கூலுக்குப் போயிட்டு வர்றியா’

“ஆ… ஆமாம்” நா மேலெழும்ப மறுத்தது.

“அப்பா ஊர்ல இருக்காரா’

“இரு.. இருக்கார்’ வார்த்தையை மென்று முழுங்கினான்.

ஊருணியில் இறங்கி தண்ணீர் குடித்துவிட்டு வந்தார்.

”அப்பாவைக் கேட்டதாகச் சொல்லு” இவன் தலையாட்டினான். அவா சைக்கிளை நோக்கி நடந்தார்.

அப்பாடா சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாப்பிடக் குனிந்தான்.

“தம்பி ….” போனவர் திரும்ப அழைத்தார்.

“கூட சாப்புடுற பையன் யாரு?” ‘திக்’ கென்றது பரமசிவத்துக்கு திகைத்துப் போனான். என்ன சொல்வதென்று ஒரு கணம் நிதானித்தான். படாரென்னு ‘எங்க மாமா பையன்’ சொல் – விட்டு தலை குனிந்து கொண்டான். சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தான். அவர் தூரத்தில் போய்க் கொண்டு இருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top