இறகுகள் இருந்தும்…

0
(0)

கார் விரைந்து கொண்டிருந்தது. பிரியா ஜன்னல் வழியே பார்த்தாள். மலைத்தொடர்களும் மரங்களும் நகரும் ஓவியங்களாக ஓடிக்கொண்டிருந்தன. மனமும் நிலைகொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் இந்தப்பகுதிக்கு வரும்போதும் போகும் போதும் குளிர்ந்த நேரத்தில் நீலமாகவும், வெயில் நேரத்தில் பச்சையாகவும் மரிமரித் தோன்றும் மலைகளைப் பற்றி வியப்பு எழும். ஆனால் இன்று நிறம் மாறும் மலை மீதான வியப்பை விட வீட்டுக்கு விரைந்து போக வேண்டும் என்ற தவிப்பே மேலோங்கி இருந்தது. நல்லவேளை, கணவனை நல்லபாம்பு கடித்திருந்தால் என்னவாகியிருக்கும் இந்தக் கற்பனையே நரகவேதனையாக இருக்கிறது. வாட்ஸ்அ ப்பில் கணவன் அனுப்பிய அந்த படமெடுத்த பாம்பின் சீற்றம் ! அது பறவைக்கூண்டிற்குள் நுழைந்து ஒரு காதல் பறவையை விழுங்கிவிட்டது. கூண்டு துவாரத்தில் நுழைந்த பாம்பினால் விழுங்கிய இரையால் ஊதிய வயிற்றுடன் வெளியேற முடியாமல் கூண்டுக்குள் சிக்கிக் கொண்டது. பாம்பின் சீறல் சத்தத்தில் சக காதல் பறவைகளின் கதறலில் கூண்டை வந்து எட்டிப்பார்த்த சமையல்காரருக்கு அதிர்ச்சி. வீட்டுக்காவல்காரர், முகாம் அலுவலக உதவியாளர்கள் என்று எல்லோரும் கூடிவிட்டனர். நல்லவேளை அந்தநேரம் கணவன் குமார் ஆதிவாசிகளின் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இருந்தார்.

முகாமில் இருந்த கணவருக்கு தகவல் சொல்லப்பட்டது. பாம்பினை கைபேசியில் படம் எடுத்துக் கொண்டு பாம்பினைக் கொல்லாமல் வனத்துறையினர் மூலம் காட்டுக்குள் விட உத்தரவிட்டார் குமார்.

கணவர் குமார் ஐ.ஏ.எஸ் அலுவலர் அந்த மலைப் பகுதியில் ஆதிவாசி நல அலுவலராகப் பணியாற்றி வருகிறார். மனைவி பிரியா, 400 கி.மீ தொலைவில் தலைநகரத்தில் நகரத்திட்ட அலுவலராக இருக்கிறாள். இருவரும் உயர்நிலை அதிகாரிகள். பணி நிமித்தம் வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் வாராந்திர தம்பதியர். கணவர் மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் இருப்பதால் சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லை. மனைவிதான் கணவனை வாரம் இருநாள் சந்திக்க வரவேண்டிய பணிநிர்பந்தம். நட்சத்திரங்கள் அழகாகத்தான் மின்னுகின்றன. அவற்றின் ஒளிர்வினூடே வெளிவரும் பெருமூச்சுக்களை யார் உணர்வார்.

கார், கலெக்டர் முகாம் வீட்டிற்குள் நுழைந்தது. வாயிற்காவலர் வணக்கம் வைத்து கதவைத்திறந்தார். பெரிய தோட்டம் சூழ்ந்த வீடு. பகலில் பச்சைப்சேல் என்று இருக்கும் பலவகை மரம், செடி தாவர வர்க்கம் இருட்டு சூழ இளம்பனியில் மவுனித்துக் கிடந்தன. அங்கங்கே மின்விளக்குகள் ஒளியை பனியோடு பங்கிட்டு மயங்கி நின்றன. பலவகைப் பூக்களின் மணம் அவளது முகத்தை தாக்கின. கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் ஊட்டுவதாக இருந்தது. வீட்டிற்குள் நுழைந்து கணவனைக் கட்டித் தழுவி அழ வேண்டும் போலிருந்தது. நிகழ்ந்த விபத்தைவிட நிகழாத கற்பனையான விபத்தும், துயரமும் வலிமையானது. கார் சத்தம் கேட்டு சமையல்காரர் கதவைத் திறந்தார். இளம்சூட்டில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“அய்யா முகாம் போயிருக்கிறார். இன்னும் அரைமணியில் வந்துவிடுவார். திடீரென்று வந்து இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டுமென்று அவள் முன்னதாக கணவனிடம் தகவல் சொல்லவில்லை. வீட்டில் கணவன் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. வீட்டிற்குள் ஒவ்வொறு அறையில் ஒளிரும் விளக்குகளும் பரிகசித்து சிரிப்பதாகப் பட்டது. நேராக வீட்டின் பின்புறம் சென்றாள். பறவைக் கூண்டினைப் பார்த்தாள். காதல்கிளிகள் நான்கில் மூன்று தான் இருந்தன. இரண்டு பச்சை, ஒன்று நீலம், இன்னொரு நீலம் பாம்பின் வாயில் எசமானி பறவைக்கூண்டு முன் நிற்பதைக்கண்ட சமையலர் அன்று நடந்த நிகழ்வுகளைச் சொன்னார். அவர் சொன்னவற்றுக்கு தலையாட்டி கேட்பது போல பாவித்தாள் ஒழிய, அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் கவனத்தில் தங்கவில்லை. அவள் நினைப்பு எல்லாம் அந்த ஐந்தடி நீள விஷப்பாம்பு கணவனின் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கற்பனை பிம்பங்கள் அவளை உறைந்துப் போகச் செய்திருந்தது. வாசலில் கார்சத்தம் கேட்டு உயிர்த்தாள்.

“என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கிறாய்?’, “நான் இன்னும் உயிரோட இருக்கிறேனா என்று கேளுங்க” “என்ன ஆச்சு ஏன் இந்த பதற்றம், கோபம்” என்றபடி அவளது கன்னத்தை கிள்ளி அவளை அரவனைத்து அமைதிப்படுத்த முயன்றார்.

“அந்த வாட்ஸ்அப் படத்தைப் பார்த்தும் நான் பட்டபாடு எனக்கில்ல தெரியும். ரெண்டு நாளா ராத்திரி தூக்கமில்லை. ஆபிஸ்ல பைலை பிரித்தால் படமெடுத்து நிற்கிற அந்த பாம்பு படம் தான் தெரிகிறது. வெள்ளிக்கிழமை எப்படா வரும்னு வண்டி பிடித்து பறந்து வர்றேன். நீங்க அப்படி ஒன்றுமே நடக்காத மாதிரி சிரிக்கிறீங்க! இப்படியா பாம்பு நுழையிர மாதிரி வீட்டை வச்சிருக்கிறது?

அவர் அவளது தோளில் தட்டி ஆறுதல் படுத்த முயன்றார். பாம்பு வாழுற இடத்தில் நாம் வீட்டை கட்டிகிட்டு அதன் வாழ்விடத்தை பிடுங்கிட்டோம். அது இடத்தில் அது வருது நாம் தான் கவனமா இருக்கணும்! இங்கபாரு பாம்பு வீட்டுக்குள்ளே மட்டுமல்ல இந்த தோட்டம் பக்கமே வராம இருக்க நேற்றுதான் கினிகோழிகள் ஆறு வாங்கி இருக்கோம். நாலு வான்கோழிகள் கூட வாங்கச் சொல்லி இருக்கேன். இனிமே பாம்பு பற்றிய பயமே வேண்டாம். எல்லாம் அந்தக் கோழிகள் பார்த்துக் கொள்ளும் உனக்கு இனி பாம்பு பற்றி எந்தக் கவலையும் பயமும் வேண்டாம். வா குளிச்சிட்டு சாப்பிடுவோம்”.

சாப்பாடு முடிந்தது. வரவேற்பறையில் குமார் உட்கார்ந்தார். அலுவலகத்திலிருந்து வந்த கோப்புக்கட்டுகளைப் பிரித்தார். “சாப்பிட்டதும் பைலை விரிச்சாச்சா. என்னடா அஞ்சு நாளா பிரிஞ்சு இருந்தவ வந்திருக்காளே, ஏதாவது அனுசரனையா பேசுவோம் என்று என்னைப் பற்றி அக்கறை எதுவும் இருக்கா” “பிளிஸ் முக்கியமான விஷயம் பைலை பார்த்துட்டு வர்றேன். அப்புறம் நம்ம விடிய விடிய பேசுவோம்.

இந்தா நீ டீவியைப் பார்” என்று தொலைக்காட்சியை இயக்கினார். ஆருயிர் தோழி, கேளடி ஒரு சேதி.. இதுவா உன் மன்னனின் நியதி…” என்ற பாடல் ஒலித்தது… அந்த அலைவரிசையை மாற்றினார். “வாளின் ஓசை கேட்கும் உனக்கு என் வளையல் ஓசை கேட்கலையா…” என்று இன்னொரு பாடல். “ச்சே எல்லாம் உனக்கான பாட்டுகளாகவே வருது. இந்தா காமெடி பார்” என்று நகைச்சுவை அலைவரிசையை இயக்கினார். அவளுக்குள் பொங்கிய ஆத்திரமும், ஆவேசமும் கண்களில் மின்னின. நீங்க அலுவலக பைலையே கட்டிகிட்டு குடும்பம் நடத்துங்க” என்று படக்கென்று எழுந்து படுக்கை அறையில் போய் விழும் சத்தம் கேட்டது.

காலை 6 மணி. மனைவியை எழுப்பி நடைபோக அழைத்தார். அவள் அலுப்பாக இருக்கிறது என்று முனங்கினாள். அவர் நடை பயிற்சி போய் வந்தார். தோட்டத்தில் உட்கார்ந்து காலை செய்தித்தாள்களை தேநீர் குடித்தபடியே மேய்ந்தார். மனைவி வந்தாள் தேநீர் குடித்தபடியே பார்வை பறவை கூட்டிற்குப் போனது.

ஆமாம் பாம்பு விழுங்கியது ஆண்கிளியையா, பெண் கிளியையா? கூண்டுக்கு அருகில் இருவரும் போனார்கள்.

“பெண் கிளியை”

“அய்யோ அங்கேயும் பெண்களுக்குதான் ஆபத்தா! சரி இதில் எது ஆண்கிளி, பெண்கிளின்னு எப்படி கண்டுபிடிக்கிறது?”

“இங்கே பாரு ஒல்லியா இறகு நீண்டு, அழகா இருக்கிறது ஆண் கிளி. வயிறு திரண்டு இறகு சிறுத்து இருப்பது பெண்கிளி”,

“எப்பவும் பெண்தானே அழகாய் இருக்கும்?” “ஆம் நம் மனிதர்களில் பெண்கள் அழகானவர்கள். மிருகங்களில் ஆண்கள் தான் அழகானவை. ஆண்சிங்கம், ஆண் மயில், சேவல் இப்படி நிறைய சொல்லலாம்”.

“பாருங்க அந்த நீலக்கிளி ஆண்கிளிதானே. துணையை பிரிஞ்சு இருக்கிறதை பார்த்தாப் பாவமாக இருக்கில்ல?”

“ஆமா என்னைப் போல!’ ‘ஆமாம் உங்களுக்கு துணை இருக்குன்னு நினைப்பிருந்தா நான் பக்கத்திலிருக்கும் போது என்கிட்ட பேசாமல் ராத்திரியிலும் பைலைக்கட்டி அழுவிங்களா?”

“சரி இந்தக் கிளிகளை சுதந்திரமாகத் திறந்து விட்டுறலாம்னு பார்த்தா அதுவும் முடியலை!”

“ஏன் திறந்து விட்டா பறக்காதா? இறக்கைகள் இருக்குல்ல?

“ஆமாம் அவைகளுக்கு இறக்கைகள் இருக்கு பறக்கத் தெரியாது. பறக்க பழகிக் கொடுகணும்? இனப்பெருக்கமும் செய்யத் தெரியாது’ “ஏன் அப்படி?”

“இக்கிளிகள் செயற்கையாக மரபணுக்கள் மாற்றத்தால் உருவாக்கப்பட்டவை. இவற்றின் மரபணுக்கள் கூண்டு பறவைகளிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஆகவே அவை பறக்ககமறந்த பறவைகளாகிப் போயின… அவற்றிற்கு பறக்க பழகித்தரணும்….” என்று சொல்லிவந்த குமார். “ஹைய்யா” என்று இருகைகளை உயர்த்தி குதித்தார். வாயும் விழிகளும் விரிய பார்த்துக் கொண்டுடிருந்த அவளது கன்னத்தை அவள் கிள்ளவும் அவர் விலகி நகர்ந்து கொண்டாள்.

“என்னங்க என்ன ஆயிற்று?” ஏன் இப்படி ஆர்கிமிடீஸ் மாதிரி குதிக்கிறீங்க

“சரியாய் சொன்னாய் நான் இப்போது ஆர்க்கிமிடீஸ் தான்”

“அய்யோ , உங்களுக்கு என்ன ஆயிற்று?”

“ஒன்றுமில்லை!” என்றபடி கைபேசியை இயக்கினார். மறுமுனையில் நேர்முக உதவியாளர் தொடர்பு கொண்டார். “இந்தப்பகுதியில் புறா வளர்ப்பவர்கள் யாரும் இருந்தால் அவர்களிடம் நல்ல புறாக்களாக பத்து புறாக்கள் இன்றைக்கே வாங்கி நம்ம முகாம் வீட்டிற்கு கொண்டுவரச் செய்யுங்கள்”.

“ஏங்க, இருக்கிற கிளிகளை பாதுகாக்க முடியலை. இன்னும் புறாக்கள் வேறையா? சுதந்திரமாக திரியறதை இப்படி அடைத்து வைக்கலாமா. இந்தக் கிளிகளை பறக்க விட நினைக்கிறப்ப நீங்க பலதை அடைக்கப் பார்க்கிறீங்களெ?”

“இல்ல, எனக்கு ஒரு வாரமா சரியா தூக்கம் வரலை. இந்த பழங்குடியின சிறுவர் சிறுமிகளை படிக்க வைக்க பலவகையான முகாம்கள் நடத்தினோம். அவர்கள் மரமேறி தேன் எடுக்கவும், பழம் பறிக்கவும், கிழங்குகள் தோண்டவும், ஓடுகாலில் மீன் பிடிக்கவும், மாடுகளை ஆடுகளை மேய்க்கவுமே ஓடுகிறார்கள். பாம்புகளோடும், விலங்குகளுடனும் திரிகிறார்கள் தாம் மனிதர் என்ற உணர்வில்லை. படிப்பதும் நாகரிகமாய் இருப்பதும் தெய்வகுற்றம் வரும் என்கிறார்கள். ஒரு இடத்தில் உட்கார்ந்து படிக்கவும் முன்னேறவும், அந்தப்பகுதி மக்கள் முன்னேற வழி அமைச்சுக்க கத்துக்க வரமாட்டேன்கிறாங்க எவ்வளவோ முயற்சி பன்றோம். துணிமணிகள் புத்தகங்கள், கொடுத்தால் அவை அப்படியே கிடக்கின்றன”.

“சரிங்க, புறாவை பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது பழங்குடியின சிறுவர்களைப் பற்றி பேசுறீங்க, அஞ்சாறு நாளாய் பிரிந்திருந்த பொண்டாட்டி வந்திருக்கேன். நம்மலை, நம்ம குடும்ப பிரச்சினைகளப் பற்றி பேசாம எந்த நேரமும் அலுவலகப் பிரச்சினைகள் தானா…”

“என்ன பிரியா புரியமப்பேசுற? காதல் பறவைகளை பறக்க விடனும்னு யோசனை சொல்லி இன்ஸ்பைர் பண்ணின நீயே இப்படி பேசுற?”

“நான் இன்ஸ்பைர் பண்ணினேனா…. என்னமோ என்னை உயர்த்திப் பேசினால் நான் குளிர்ந்து விடுவேனென்று சொல்றீங்க”. “இல்லை உண்மைதான் சொல்றேன். வளர்கிற இடத்திலே இருந்து புறாக்கள் பல இடங்களுக்கு பறந்து சென்று இரை தேடித்தின்று மாலையில் மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேரும் குணம் உண்டு. இந்தக்கூண்டுக் கிளிகளை புறாக்களோடு பழகவிட்டால், அவற்றை பார்த்து இவைகளும் பறக்கப் பழகும், நாளாக நாளாக பறக்கும். வெளியே சென்று மீண்டும் வரும் இல்லையா…”

பிரியா அண்ணாந்து யோசித்தாள் வளைந்த புருவங்கள் நிமிர்ந்து வளைந்தன.

“சரி, ஆதிவாசி சிறுவர் சிறுமிகளை எப்படி இங்கே இணைக்கிறீங்க?”

சிலு சிலுத்து வீசிய காற்றில், படிந்த கேசங்கள் எழுந்து ஆடின. நெற்றியில் படர்ந்தன. முடியை ஒதுக்கியவாறு சொன்னார் குமார்.

கொஞ்சம் படிப்பறிவும், நாகரிகமும், சமூக முன்னேற்றத்தில் ஆர்வமும் உள்ள பழங்குடியின சிறுவர் சிறுமிகளோடு, இந்த பழங்குடியின் சிறுவர் சிறுமிகளையும் ஒரே இடத்தில் தங்கி, உண்டு படிக்க வாய்ப்புகள் செய்து கொடுத்தால் முடங்கிய சிந்தனைகள் சிறகாக விரியுமல்லவா. அவர்களுக்கும் வெளியுலகம் தெரியவருமல்லவா. தனது கூட்டை சுத்தம் செய்வது போல தாம் வாழும் பகுதியை மேம்படுத்த உந்துதல் வருமல்லவா….” அன்று முழுதும் இந்த சிந்தனைகள் உரையாடலாக தொடர இருவரும் பரிமரிக் கொண்டனர்.

அன்று மாலை ஒரு காரில் ஒரு கூண்டு நிறைய புறாக்கள் வந்து இறங்கின. அடுக்கடுக்காய் இருந்த அந்தக் கூண்டில் குடியேறின. அன்று இரவெல்லாம் புறாக்களின் கமறலும், கொக்கரிப்பும் குதுகலிப்புமாக இருந்தன. அந்த முகாம் தோட்டத்தில் புது பரிமானம் பரிமளிப்பும் மகிழ்வும் தவழ்ந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top