இரு வேறு….

0
(0)

ஞாயிற்றுக்கிழமைக்கு என்று வெயில் கடுமையாக அடிக்குமா. காலை பத்து மணிக்கே வெயில் மண்டையை பிளந்தது வங்கி மேலாளர் கூப்பிட்டார் என்று உடனே கிளம்பி வந்துவிட்டார் சீனிவாசன். இவர் ஒரு தேசிய வங்கியில் மூத்த கணக்காளராக உள்ளார். மேலாளருக்கு அடுத்த நிலையில் உள்ளதால் அவர் இவரிடம் சற்று மரியாதையாக இருப்பார். சீனிவாசன், ‘எங்கே, எதற்குப் போகிறோம்’… என்று கேட்க முடியவில்லை எதுவும் தவறாக நினைத்து விடுவாரோ… என்ற அச்சம். இவர் மேலாளர் பணி உயர்வு பட்டியலில் முதல்நிலையில் உள்ளார் நிர்வாகத்தில் நல்ல பெயருடனும், நிர்வாகத் தலைவருக்கு நெருக்கமாக இருப்ப தாலும் அவர் மூலமாக இதே மாவட்டத்திற்குள் ஒரு கிளையில் மேலாளர் பணி உயர்வு பெற்றுவிடவேண்டும். அதற்காக அவர் சொல்லும் பணிகளைத் தட்டாமல் செய்து தருவார். நெருப்பில் குளிர்காயும் தூரத்தில் நெருங்கியும் போகாமலும் விலகியும் போகாமலும் நடந்து கொள்ளுவார்.

இவர்கள் பயணம் செய்து வரும் பேருந்து அந்த சிறு நகருக்குள் நுழைந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு முந்திய நிறுத்தத்திலேயே இறங்கிக்கொண்டனர். சீனிவாசனுக்கு ஏமாற்றமாக இருந்தது. பேருந்து நிலையத்தில் இறங்கியதும் கழிப்பறைக்குச் சென்று சிறுநீர் கழித்து வரலாம் என்று எண்ணியிருந்தார். அடிவயிற்றில் சுமை அழுத்திக்கொண்டிருந்தது. அவர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழித்தாகவேண்டும். இவ்வகையில் பெரும் அவஸ்தை தான். எந்த நேரத்தில் என்ன நேருமோ என்ற அச்சமே நரகமாக வருத்திக் கொண்டிருந்தது.

மேலாளர் முதன் முதலாய் வாய் திறந்தார். அவரது அக்காள் மகனுக்கு அவரது அண்ணன் மகளை திருமணம் செய்து வைத்தார் களாம். இருவரும் கணிணி மென்பொருள் பொறிஞர்கள். பெங்களூரில் இருவரும் வேறு வேறு நிறுவனத்தில் பணிபுரி கிறார்கள். மாதம் அறுபதாயிரத்துக்கு மேல் சம்பளம். இருவருக்கும் வெவ்வேறு காலசுழற்சியில் பணி கணவனுக்கு காலை நேரம் பணியென்றால் மனைவிக்கு இரவு பணி. ஒருவர் பணி முடித்து வரும்போது இன்னொருவர் பணிக்கு புறப்பட்டுக் கொண்டிருப் பார். சில நாள்களில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டாது. அந்த நாட்களில் கணிணி மூலம் சம்பிரதாய விசாரிப்புகளைத் தான் இருவரும் பறிமாறிக் கொள்வர். ஞாயிற்றுக் கிழமைகளில் பாதிநாள் தூக்கம் பாதிநாள் துணி துவைத்தல், தேய்த்து வைத்தல் மாவரைத்தல் என பணி நெருக்கடி. அன்று மட்டும் சேர்ந்து சாப்பிட வாய்க்கும். அந்த நேரங்களில்கூட சகபணியாளர்களைப் பற்றி பேச்சு வரும். அலுவலகப் பணி யாளர்ளின் ஒழுக்கம், பழகும் பாங்கு பற்றி பேச்சு வரும். இச்சமயங் களில் ஒருத்தரை ஒருத்தர் தவறாக எண்ணி வார்த்தை பரிமாறல்கள் கானல்வரிப் பாடல்போல் வம்பில் முடியும்.

இப்படியான ஒரு பொழுதில் வாய்ச்சண்டை முற்றி கைகலப்பு ஆனது. அண்ணன் மகள் வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு ஊருக்கு வந்துவிட்டாள். சொந்தத்தில் கல்யாணம் பண்ணி வைத்தால் அவரவர் தன்னலம் பாராமல் விட்டுக்கொடுத்து போவார்கள் என்று தான் எண்ணியிருந்ததும் தப்பாக போயிற்று. பேசி சமாதானம் செய்யலாம் என்று போகிறோம். நீங்கள் மூத்தவர் நீங்களும் கொஞ்சம் எடுத்துச் சொல்வீர்கள். உங்கள் முன்னால் விவாதம் மட்டுப்படும். இத்தனை நாள் தனிமை ஒரு சுய சிந்தனையை உருவாக்கியிருக்கும் என்றார் மேலாளர் மெய்யப்பன்.

அந்த ஊர் கோவில் நகரமாக இருந்ததால் ஜனங்களில் போக்குவரத்து நிறைய இருந்தது. சீனிவாசன் பவ்யமாக தலை யாட்டிக் கேட்டுக்கொண்டே வந்தார். வெயில் உச்சிக்கு நெருங்கியது. முத்துக் கோர்ப்பது போல வியர்வை சரம்சரமாக உருண்டு கொண்டிருந்தது. அவர் முன் எப்படி துடைப்பது என்று ஒரு எட்டு பின் தங்கினார் சீனிவாசன்.

மேலாளர் ஒரு வேப்பமரத்தடியில் இளநீர் விற்பவர் அருகில் நின்றார். தண்ணீர் நிறைய இருக்கிறமாதிரி ரெண்டு இளநீர் வெட்டுப்பா என்றார். இடது கையில் இளநீரும் வலது கையில் அரிவாளுமாய் இளநீர்காரர் வெட்டும் லாவகம் பம்பரத்தைச் சுழற்றி இடது உள்ளங்கையில் ஏந்தி ரீங்காரமாய் சுழலவிட்டது போல் இருந்தது.

ஏற்கனவே அடிவயிறு கனத்து சிறுநீர் முட்டுவதுபோல இருக்கிறது. இதில் இளநீர் குடித்தால் அவ்வளவுதான் பேண்ட் நாசமாகி மேனேஜர் முன் அவமானப்படும் சூழலை நினைக்கவே சாவதுபோல் இருந்தது சீனிவாசனுக்கு!

வலப்புறம் ஒரு சந்துபோல் ஒரு வாசல் பழைய நாட்டு ஒடு வேய்ந்த இருவீடுகள் புழுதி பூத்திருந்தன. ஆள் புழக்கம் தென்படவில்லை. நிச்சயம் ஒரு கழிப்பறை இருக்கும். மேலாளரிடம் எப்படிச் சொல்லிச் செல்வது. செல்பேசியில் பேசுவதுபோல பாவனை காட்டி திடுதிடுவென அந்த வாசல்வழியாக விரைந்தார். இருவீடுகளும் கிழக்குப் பார்த்த வீடுகள். முதல் விடு பூட்டியிருந்தது. இரண்டாவது வீடு திறந்து கிடந்தது. இருண்டு ஆளரவம் இல்லாமல் இருந்தது. அதையும் தாண்டி மேற்கு பார்த்த ஒரு சின்ன அறை சுற்றுச்சுவர் ஒட்டி இருந்தது. கதவைத் திறந்தார். அது கழிப்பறைதான்! அப்பாடா என்று பெருமூச்சு விட்டபடி சுமை இறக்கியபின் வெளியே வந்தார். இப்படி வயிற்றுச் சுமை இறக்கிய அந்த நொடி கூட ஒரு பேரின்பமாகத்தான் இருக்கிறது. ஒரு மணி நேரம் சிறுநீரை அடக்க முடியாமல் இந்தப்பாடு பட்டோமே அம்மா எப்படி பத்துமாதம் சுமந்து பாடுபட்டு பிரசவம் ஆனதும் எப்படி நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார் என்று நினைத்தபடி பேண்ட்டை சரிபார்த்து வெளியே வந்தார்.

யாரோ ஒரு சிறுமி இவரது கையை பிடித்தாள். இவர் நடுங்கிப் போனார். சிறுமியிடம் கழிப்பறைக்கு அவரசரமாய் போனதைச் சொல்ல வெட்கமாய் இருந்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வார்த்தை வரவில்லை. கழிப்பறையை காட்டினார். அந்த ஐந்து வயது சிறுமி சிரித்தாள். அகன்ற கண்கள் ஒளி மங்கி இருந்தன. கன்னக் கதுப்புகளில் கண்ணீர் தாரைகள் நத்தை நகர்ந்த தடமாகத் தெரிந்தன. அவள் பேசும் திறனற்றவள். சைகையால் பேசினாள். அவளும் தம்பியும், அப்பாவும் ரெண்டு நாளாக சாப்பிட வில்லை என்று சைகையில் சொன்னாள். சீனிவாசனது இதயத்தை வெடுக்கென்று பறித்து எறிந்தது போல் உணர்வு. சட்டைப் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு நூறுரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார்.

சிறுமி வாங்கியதும் தெருக்கடைப் பக்கம் ஓடினாள். மெல்லிய செறுமலோடு வீட்டுக்குள் இருந்து ஒரு கட்டையை ஊன்றியபடி ஒருவர் நடந்து வந்தார். தேன்மொழி எங்கே போறே! என்று கேட்டபடி வெளியே நிற்கும் சீனிவாசனை பார்த்து கைகூப்பினார். சந்திர கிரகணம் கவ்வியது போல் சிரைக்கப்படாத முடிகள் முகத்தில் கருத்து அடர்ந்திருந்தன. அவர் கட்டை உதவியால் மெல்ல மெல்ல நகர்ந்து வருவதைப் பார்த்து சீனிவாசனுக்கு இரக்கத்தை ஏற்படுத்தியது. அவரது கண்களிலும் ஒளி இல்லை. ஒரு வகை பயம் கவ்வியிருந்தது. சீனிவாசன், முன்நகர்ந்து போய் அவரது தோளில் ஆறுதலாய் தொட்டார். அவர் நெஞ்சு பதறி பதறி கேவினார். வறண்ட தொண்டையில் சத்தமில்லை. கண்களில் நீர் ததும்பி நின்றது. நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு பேசினார்.

‘அடுத்த மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரத்தில் சிற்றுந்து (மினி பஸ்) ஓட்டுநராக இருந்தேன். பக்கத்து கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலைக்கு செல்லும் மீனா என்னுடைய மினிபஸ்ஸில் தான் காலையிலும் மாலையிலும் வரும். அவளுக்கு இடம் போட்டுக் கொடுப்பேன். ஒரு ஊரு ஒரு ஜாதி. தூரத்து சொந்தம் என்ற விதத்தல் பழக ஆரம்பித்தோம்.

நாங்கள் பழகுவதைக் கேள்விப்பட்ட மீனாவின் பெற்றோர், ஒரு வசதியான நிலக்கிழார் மகனுக்கு மணம் பேச முயன்றனர். மீனா, வாய்க்கால் கரை மணலில் விழுந்த மீன்போல் துடித்து துடித்து அழுதாள். இருவரும் வெளியூர் போய் முருகன் கோவிலில் மணம் முடித்துக்கொள்வதென்று முடிவெடுத்தோம். அதற்கு முன் மீனாவின் அப்பாவை சந்தித்து பேசி பார்ப்பது, சம்மதிக்கவில்லை என்றால் மீறுவது என்று முடிவெடுத்தோம். நானும் மீனாவின் சொந்தக்காரனான பழனிவேலுவும் மீனாவின் அப்பாவை சந்தித்துப் பேசினோம். ‘மகளைக் கண்ட துண்டமாக வெட்டி எறிவேன் ஒழிய, நிலம் நீச்சு இல்லாத வக்கற்ற பயலுக்கு கட்டி வைக்க ஒரு காலும் சம்மதிக்க மாட்டே’னுட்டார்.

அப்புறம் ஒரு வெள்ளிக்கிழமை மீனா வேலைக்குப் போவது போல வந்தது. நண்பர்கள் சாட்சியாக முருகன் கோயிலில் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஏழு வருசம் பறந்தோடியிருச்சு. ஒரு பெண், ஒரு பையன் இரண்டு குழந்தைகள். நான் தனியார் பஸ்ஸில் டிரை வராக ஓடிக்கொண்ருந்தேன். அந்த வேலையும் பழக்க வழக்கங் களும் எனக்கு பிடிக்கலை. இப்போ ஒன்றரை வருஷமாக ஒரு பேங்குக்கு கார் டிரைவராக ஓடினேன்.

ரெண்டு மாசத்துக்கு முந்தி நடந்த விபத்தில் எனது வலதுகால் முறிஞ்சிருச்சு. கூட வந்த மேனேஜருக்கோ எந்த ஆபத்தில்லை. எதிரே வந்த கார்காரன் தான் மோதிட்டான். நான் தற்காலியமாக டிரைவராக இருந்ததினால் பேங்கில இருந்து எனக்கு உதவித்தொகை எதுவும் கொடுக்கலை. மேனேஜர் உள்ளிட்ட பேங்கு பணியாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு பதினைந்தாயிரம் கொடுத் தாங்க. காலில் லேசான முறிவுதான். உடனே நடக்கவோ வேலை செய்யவோ முடியாது. அந்த ரூபாயை வச்சு இந்த ரெண்டு மாசத்தை ஓட்டினோம். சோற்றுக்கு வழியில்லை. அப்பாவிடம் சொல்லி ஏதாவது பணம் வாங்கி வர்றேன்னு என் சம்சாரம் போச்சு. ரெண்டு நாளாகப் போகுது. அவளுக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு தெரியலை.’ என்று வற்றிப்போன வறண்ட குரலில் சொன்னார் சுந்தரம்.

சீனிவாசனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியலை. மேனேஜர் காத்துக்கிட்டிருக்கிறார். அவர் என்ன சொல்லப் போறாறோ என்ற பீதி வயிற்றை கலக்கியது. பாக்கட்டில் கை விட்டார். ஒரு 100 ரூபாயும் சில்லறைக் காசுகளும் இருந்தன. நூறு ரூபாயை சுந்தரிடம் கொடுத்து, ‘இதை வச்சு பிஜீள்ளைக வயிற்றுப் பசியைத் தீருங்க. உங்க பொண்ணு தேன்மொழி கிட்டவும், ஒரு நூறு ரூபாய் கொடுத்துள்ளேன். இந்தாங்க என் போன் நம்பர் உங்க சம்சாரம் வந்தவுடன் போன் பண்ணிட்டு வாங்க. அந்த வங்கியில இருந்து நஷ்ட ஈடும், ஏதாவது ஒரு சிறு வேலையும் வாங்கித்தர ஏற்பாடு பண்ணுறோம்’ என்றபடி மேனேஜரை நினைத்து வாசல் நோக்கிப் பறந்தார். சுந்தரம் அவர் போன திக்கு நோக்கி ஒருகும்பிடு போட்டார். அவர் கண்ணில் மிரட்சி இல்லை ஒரு தெளிச்சி தெரிந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top