இருள்

3
(3)

விடியற்காலையில் இருந்தே அல்லோலகல்லோலப்பட்டது அந்த ஊர். வீடுகளில் ஒரு வேலையும் நடக்கவில்லை. பசுஞ்சாணி எடுத்து முத்தம் தெளிக்கவில்லை. வீடு வாசல் கூட்டவில்லை. பத்து பாத்திரம் துலக்கவில்லை ஏன் இன்னும் உலைகூட வைக்கவில்லை. பெண்கள் எல்லோரும் தெருவில் முக்குக்கு முக்கு உட்கார்ந்து கூடிக் கூடி பேசிக் கொண்டிருந்தனர். ஆம்பளைங்கள் எல்லாம் கண்மாய்க் கரையில். எளவட்டங்கள் அவ்வப்போது வீடுகளுக்கு ஓடி வருவதும் கம்பு கத்திகளைச் சரிபார்ப்பதுமாய் இருந்தனர். ஊரே ஒருவித பரபரப்பிலும் படபடப்பிலுமாய் இருந்தது. கோவிந்தன் நாட்டுக் கருவேல மரத்திலான தீட்டுக் கட்டையை வாசலில் போட்டு உள்ளங்கையில் மணலைத் தெள்ளிவாகாக கட்டையில் போட்டு கொடுக்கருவாளை தீட்ட ஆரம்பித்து விட்டான். பெருவிரலால் அவ்வப்போது கூர்பார்த்து இரண்டு பக்கமும் பளபளவென தீட்டியபின் ஒரு துணியை வைத்த துடைத்துவிட்டு உறைக்குள் போட்டு எடுத்துக் கொண்டு கண்மாயை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ராஜபாண்டியன் மனைவி வேலுத்தாயின் கண்களில் சாரை சாரையாய் கண்ணீர். அடக்க மாட்டாத கோபம். மண்ணை வாரித் தூற்றிக் கொண்டிருந்தான். அவங்க வௌங்குவாங்களா… தொலங்குவாங்களா … வெள்ளிக் கிழமை சுடுகாட்டுல சாம்பலாப் போக…. ஏ காளியாத்தா நீ மட்டும் நெசமான சக்தியுள்ளவளாய் இருந்தால் அவங்க குடும்பம் மண்ணோட மண்ணாப் போகட்டும் …. கண்ணு அவிஞ்சு போக நாசமாப் போற பயலுக….

பொறுங்க மதினி. ஏன் இப்படி ஆவேசப் படுறீக. அதான் ஊர்ல உள்ள அம்புட்டு ஆம்பளைங்களும் கம்மாக் கரையில் கூட்டமாக கூடி இருக்காகள்ல. எப்படியாச்சும் கண்டு பிடிச்சு கொண்டு வந்துடுவாக.

காலுக்குள் வந்த நாயை வௌக்கு மாத்தால் ஒரு போடு போட்டாள். அது ஈ ஈ என்ற ஈனஸ்வரத்தில் கத்திக் கொண்டு ஓடியது.

அதையேன் போட்டு அடிக்கீறீக. வந்தவன் மொதல்ல அதுவாயத்தானே கட்டியிருப்பான். இல்லாட்டி அது சும்மா இருந்திருக்குமா.

அந்தத் தொழுவம் வெறிச்சோடிப்போய் இருந்தது. முன்னந்தியில் போட்ட சாணி லேசாய் காய்ந்து போய் இருந்தது. காடிக்குள் கொஞ்சமாய் கூளம் கிடந்தது.

இந்தப் பாதகத்தி உசாரு கெட்டுப்போய் இருந்துட்டேன். நடுக்குடுச் சாமத்துல ஒரு கொடங்கை கூளம் போட்டுட்டு வந்து படுத்தவள் அசந்துட்டேன். பாவிப் பயலுக ஒரு சத்தங் காட்டாமல் எப்படித்தான் கொண்டு போனாங்களோ. மூக்கைச் சிந்தி சேலையில் இழுவிக் கொண்டாள் வேலுத்தாய். சுற்றிலும் உள்ள பெண்கள் பரிதாபப் பார்வையோடு ‘உச்’ கொட்டிக் கொண்டிருந்தார்கள். மனதினுள் கோபம் வேகம் பரபரப்புடன் ஆண்கள் காத்திருக்க மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார்கள் முருகனும் கண்ணனும்.

மாதலப்புரம், பூதலப்புரம் மாவிலோடை வரைக்கும் போய் விசாரிச்சுட்டு வந்துட்டோம் யாரும் தட்டுப்பட்டதாய் சொல்லலை. லாரி வச்செல்லாம் ஏத்தியிருக்க மாட்டாங்க. நடுக்காட்டு வழியேதான் போயிருக்கனும். எப்படியும் மூனாஞ்சாமத்துல அவுத்துருந்தாக் கூட இந்நேரம் ஊரை எட்டிப் போயிருப்பாங்க.

“எவ்வளவு தைரியம் துணிச்சல் இருந்தால் நம்ப ஊர்ல கைவச்சு இருப்பாங்க. ஆட்டை கடிச்சு, மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிச்ச கதையாவுள்ள ஆயிடுச்சு.

“ஊரோட கெளம்புவோம். கீகாட்டின் பொன்னுச்சாமிதான் இந்த வேலையைச் செஞ்சிருக்கனும். வேற யாரும் இம்புட்டு துணிச்சலோடு நம்ப ஊர்ல கை வச்சிருக்க முடியாது”

அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் அடிமடியில் கை வச்ச கதையாவுள்ள இருக்குது. இவங்களை எல்லாம் எனத்தான்னு சொல்லுறதே கேவலம்.

“போன மாசம் தூவல் ராமசாமி கொடுத்தாலே கொடுன்னு அவ்வளவு ஆசையாக கேட்டார். ரேஸ்ல பழக்க கேட்டாரு. ரெண்டு மாசம் தாண்டி கொடுக்குறதா இராஜபாண்டி அனுப்பி வச்சுட்டான். இல்லாட்டி அப்பவே வெல தெகஞ்சுருக்கும்.

கீ காட்டுல மழை இல்லேன்னா இந்த பொழப்பை ஆரம்பிச்சுடுறாங்க. மானங்கெட்ட பயலுக. எங்க கை வக்கிறதுன்னு ஒரு வெவஸ்தை. வேண்டாம் ஈனப்பயலுக.

வக்காளி போன மாசம் வந்து மாமன் மச்சான்னு உறவு கொண்டாடி பெரிய வீட்டுல கறியும் சோறும் தின்னுட்டுப் போனான். திருட்டுப்பய. கோட்டம் பாக்குறதுக்குத்தான் வந்திருப்பான் போல.

ஏன் வெட்டிப் பேச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க. வீட்டுக்கு ஒரு ஆள் போவோம் இன்னையோட அவன் இந்தத் தொழிலையே மறக்கனும். சென்னம் பட்டியான்னா என்னான்னு காட்டிட்டு வருவோம். எளவட்டங்கள் மூக்கணங்கயிறு இல்லாத கன்னுக்குட்டியாய் திமிறிக் கொண்ட இருந்தார்கள்.

அவனவன் படிச்சு என்னென்னவோ வேலைக்கு போயிக்கிட்டு இருக்காங்க. இந்த முட்டா நாயிங்க இருந் ஈனப் பொழப்பை விடாம புடிச்சுக்கிட்டு இருக்காங்க.

பெரிய தம்பி கண்கள் சிவக்க அனைவரையும் பார்த்துக் கொண்டு இருந்தார். இது அவருக்கு வந்த கேவலமாய்ப்பட்டது.

என்ன மாமா ஏதாவது சொல்லுக இப்பவே கெளம்புனாத்தானே உச்சி வெயிலுக்காவது கீகாடு போக முடியும் கணபதி கையில் வேல் கம்புடன் குறுக்குப் பாதையில் உச்சி நத்தம் கந்தசாமிபுரம் வழியாப் போனா அதைவிடச் சுருக்காப் போயிடலாம். மாரியப்பன் கையில் விச்சரிவாள்.

எனத்தான்னு பாத்து லேசுபாசா நடந்ததுக்கு கடைசியில் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் பண்ணுனவனைச சும்மா விடக்கூடாது சோலையப்பன் கையில் குத்தீட்டியுடன்.

இன்னைக்கு நம்மளா அவனான்னு பாத்துடனும் அவங்களை காவுவாங்காமத் திரும்புனா நம்மள மாதிரி ஈனப்பயலுக ஒலகத்துலயே இருக்க மாட்டானுக. கோவிந்தன் சட்டைக்குள் கொடுக்கருவாள்.

பெரிய தம்பியின் ஒரு வார்த்தைக்காக அத்தனை பேரும். ஊரில் தாட்டியமானவர் மட்டுமல்லாது சுத்துப்பட்டியில் எல்லாம் கொஞ்சம் செல்வாக்கோடு வலம் வருபவர்.

ம்…. ஹம்…. என்ற செருமலுடன் ஆரம்பித்தார் எனத்தான்தான் இந்த வேலையை அதுவும் கீகாட்டான்தான் இதைச் செஞ்சிருக்க முடியுமுன்னு நீங்கலெல்லாம் சந்தேகப் படுறீங்க. ஊரோட போனா கொம்பு சுத்தி அடிச்சுடலாம். ஆனா உருப்படிகளை கொண்டு வரமுடியுமா? இத்தனை பேர் கொண்டு போறதைப் பார்த்தால் எப்படியும் மாட்டப் பதுக்கிடுவான். அப்புறம் எனக்குத் தெரியாதுன்னு கொலசாமி மேல சத்தியம் கூடச் செய்வான். சும்மா வரிச்சிக் கம்பு மாதிரி அதுகளைப் பார்த்த தூவல்க்காரனே ஒத்தக்கால்ல நிக்காத கொறையா முப்பத்தைஞ்சு வரைக்கும் வெல வச்சான். இந்த எடத்துல நம்ப கோபத்தைக் காட்டுனா மொதலை இழந்துடுவோம். அதனாலே ஒரு ரெண்டு மூனு பேர் மட்டும் போகலாம். அவன் ஒன்னும் கட்டுப்படாதவன் இல்ல. நம்மிடம் எப்படி உரிமையோடு வாரானோ அதமாதிரி நாமளும் போவோம். நமக்குத் தேவை நம்ம சொத்து.

ஆளாளுக்குச் சலசலப்பு. நாம இப்படி குட்ட குட்ட குனியுறதாலதான் ஏறி மேயுறான். இன்னும் பனிஞ்சு போனா நல்லாத்தான் இருக்கும். எளவட்டங்கள் ஆத்திரம் கொப்புளிக்க கொம்பு மண் எடுத்தனர்.

பெரியவர்கள் தயனாத்துப் பண்ணி எளவட்டங்களை அடக்கினார்கள். கடைசியில் கத்தி கம்பு அரிவாள் எல்லாம் பழைய இடத்திற்கு சென்றது. பெரியதம்பியும் இராஜ பாண்டியும் செல்வது என்று முடிவானது.

‘டேய் எவன்டா ஆட்டுக்காரன் ஏம்லே சத்தங் குடுக்குறது காதுல விழ-யா” செம்மறி ஆட்டுக் கூட்டம் மதிய வெயிலுக்கு தாகத்தில் ஓடிவந்து கண்மாயில் தண்ணீர் குடித்தது. குளித்துக் கொண்டிருந்த பொன்னுசாமி மீண்டும் குரல் கொடுத்தார். ‘டேய் கூப்புடுறது காதுல விழ-யா ஆட்டுக்காரன் ஓடி வந்தானன் ”ஐயா கூப்புட்டீங்களா” “டேய் எந்தூருக்காரன்டா நீ” “கொக்காடிங்க பக்கத்தூருல கிடை போடுறோம். மேச்சலுக்கு வந்துட்டு அப்படியே தண்ணி காட்டிட்டு போகலாமுன்னு ….. “ஏன்டா அடுத்த வாக்காரன் புஞ்சையில் புழுக்க போட கொக்காடி குருவாடிக் காரனுக்கு எங்க கம்மாத்தண்ணிதான் கிடைச்சுதா “ஐயா இன்னைக்கு ஒருநாத்தான் நாளப்பின்னே வராதுய்யா. சரி சரி குடிச்சது போதும் ஆட்டைக் கிளப்பு” வேறு வழியில்லாது தண்ணீர் குடித்தும் குடிக்காமலும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு போனான் அந்த வரத்தாட்டுக்காரன். அதுவரை தண்ணீருக்குள் நின்றிருந்த பொன்னுச்சாமி காலடியில் மிதித்து கரையேறினார். தண்ணீர் குடித்து வயிறு உப்பி செத்துப் போயிருந்தது அந்த செம்மறிப் புருவை.

”வாங்க மச்சான் வாங்க. ஏது இம்புட்டுத் தூரம் வழிதப்புனாப்புல. ஏத்தாயாரு வந்திருக்காக பாரு நம்ம சென்னம் பட்டி மச்சான் . காதில் தொங்கிய பாம்படம் ஆட கண்ணைச் சுருக்கி அடையாளம் பார்த்து முடியாமல் குத்து மதிப்பாய் வாங்கப்பூ என்றான். முகமெல்லாம் சுருக்கம் விழுந்த கிழவி. ஏய் கிறுக்குக் கழுத அந்தப் பாயை எடுத்துப் போடு வீட்டினுள் குரல் கொடுத்தார்.

“மாப்ள ஒரு விசயமா ஒங்களைப் பாத்து பேசலாமுன்னு வந்தோம்”

”வராத விருந்தாளி வந்திருக்கீக. மொதல்ல கால் கை கழுவுங்க. எதாயிருந்தாலும் மொதல்ல சாப்புட்டுட்டு பேசலாம். செம்மறிப் புருவையின் கறிவாசம் வாசல் வரை வந்தது.

‘மச்சானுக்கு இன்னும் கொஞ்சம் எடுத்து வை. அந்த எலும்புத் துண்டை போடு. மச்சானுக்கு பல்லு கெதிதான். போதும் போதும் என்று சொல்லுமளவிற்கு கறிசோறு. வந்த வேகம் சிறிது மட்டுப்பட்டது. இப்ப சொல்லுங்க மச்சான்

“என்னது நம்ம ஊர்லயே கை வச்சுட்டாங்களா! சித்த உக்காருங்க விசாரிச்சுட்டு வாரேன்.

திரும்பி வரும் போது வாயி – ருந்து நீசத்தனமான வார்த்தைகள். கண்ட மானிக்கு வஞ்சுக்கிட்டு வந்தார். சின்னப் புள்ளைகளை விட்டு கெள்ளுத் தெறிக்குறதுன்றது சரியாத்தான் இருக்கு.

“என்ன மாப்ளே துப்புக் கெடைச்சுதா”

“ம் இருந்தது ஆனா….”

‘சொல்லுங்க

பத்தாயிரம் கேக்குதான் அஞ்சுபேர் ஆளுக்கு ரெண்டாயிரம் கூட இல்லாம எப்படி திருப்புற துன்றானுக யாருட்ட வாங்குறதுன்னு ஒரு தரா தரம் இல்ல. மீண்டும் வாயிலிருந்து நாராசரமாய் வார்த்தைகள் வந்து விழுந்தன.

“எனத்தானுக்குள்ள இப்பிடி எல்லாம் கேக்கலாமா. ஒரு ரெண்டு ரூவா வேணா …….

“என்னப்பூ சின்னப்புள்ளதனமா இருக்கு. எங்க புள்ளைங்க இருட்டுன்னு பாக்காம காட்டுக்குள்ளே கல்லுமுள்ளு பாம்பு பல்லின்னு பாக்காம எம்புட்டுத் தூரம் வந்திருக்காக. இடையிலே ஏதாவது ஒன்னு ஆயிருந்துச்சுன்னா என்ன ஆயிருக்கும் ரெண்டு ஓவாய் கொடுக்குறாகளாம்” திண்ணையில் இருந்த கிழவி.

செஞ்சது திருட்டு அதிகாரமாய் பேசுறதைப் பாரேன் என்று பெரியதம்பி மனதிற்குள் “சும்ம இரு ஆத்தே. நாங்கதான் பேசிக்கிட்டு இருக்கோமுள்ள. மச்சான் கள்ளவிலைக்கு பத்துனாக்கூட முப்பதுக்கு போகுமுன்னு சொல்றானுவ. ஒரு அஞ்சு மட்டும் கொடுங்க மிச்சத்த நான் அவங்ககிட்ட பேசிக்கறேன்’

புள்ளிக்காரன் இவன்தானோ பணம் கறக்க மத்தவங்களைத் திட்டுற மாதிரி நடிக்கிறதப் பாரு. யோக்கியன் மாதிரிப் பேசுறான் பேச்சு. வந்ததும் வராததும் சோத்தப் போட்டு பேச விடாம மழுங்கடிச் சுட்டானே. மனதினுள் கறுவிக் கொண்டே இராஜபாண்டியிடம் ஐயாயிரம் வாங்கி கொடுத்தார் பெரியதம்பி.

இவருக்கும் பொன்னுச்சாமிக்கும் இடையில் ஏதாவது கசமுசா இருக்குமோ ஏதோ இவங்ககிட்ட இருந்து மாடு வாங்குற மாதிரியில்ல இருக்குது. பெரிய மனுசன்னு இவரைக் கூட்டிட்டு வந்தால் ரெண்டு பேரும் நல்லா நாடகம் போடுற மாதிரியில்ல தெரியுது. பணம் கைமாறும் போது இராஜ பாண்டியின் மனதில் எண்ண ஓட்டங்கள்.

“மாப்ள நாங்க கெளம்பவா’

“நீங்க கெளம்புங்க. உங்க முன்னாடி மாடுங்க வந்து நிக்கும்.”

கண்மாய்க் கரை தாண்டி ஒத்தையடிப் பாதைக்கு வரும்போது வேப்ப மரத்தடியில் கயிறு போன்ற வாளிப்பான இரண்டு மயிலைக் காளைகள் வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இருள்”

  1. “இதில் களவானி யார் பொன்னுசாமியா பெரியதம்பியா”… என்ற போது இராஜ பாண்டியின் எண்ண ஓட்டத்துடன் முடியும் கதை. கிராமத்தின் காதல் கதைகளுக்கு மத்தியில் அரிதான களவு கதை சிறப்பு தோழர்.

  2. ஜெகநாதன்.வீ 9789177991

    எத்தனை வருடங்கள் எத்தனை தலைமுறை கடந்தாலும் எவ்வளவுதான் நாகரீகம் வளர்ந்துவிட்டதாகச் சொல்லிக் கொண்டாலும் இன்றும் மாறாத மக்களின் மனங்களை துள்ளியமாகப் படம் பிடித்து காட்டுகிறது இருள்.

    இனம் மொழி பேதமின்றி இன்றளவும் நடக்கும் திருட்டுகள் ஏராளம். அதன் ஒரு பகுதியை நாம் தெரிந்து கொள்ள இந்தக் கதை உதவுகிறது.

    மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதாக வாக்கு சேகரிக்கும் கூட்டம் இந்த இருளில் ஒளிந்து கொள்கிறது. தனக்கும் இதுதான் வசதி என்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: