இருள்விலக்கம்

0
(0)

“சுபா . .யே சுபா, அடியே . ” — கிழவியின் கூப்பாடு துவங்கிவிட்டது. .

“அந்த சன்னல்க் கதவ இழுத்து மூடுங்க. ச்செ இந்த கெழவி என்னிக்கித் தெருவக் காலி பண்ணிட்டுப் போகப் போவுதோ அன்னைக்கித்தான் மனுசமக்களுக்குப் பகல் ஒறக்கம் வாய்க்கும் போல” மனைவி சகுந்தலா என்னை எதிர்பார்க்காமல் தானே எழுந்து சன்னலைத் தாளிட்டாள்.

“கூப்புடுறது காதுல விழலியாடி எந்திரிச்சி வந்தேன்னா வெளக்கமாறு பிஞ்சிபோகும். கத்த வைக்காம வாடி” கிழவி தொடர்ந்து சத்தம் கொடுத்துக்கொண்டேதான் இருந்தார்.

உண்மையில் எனக்கும் உறக்கம் கலைந்துதான் போனது. மதியம் கடையை அடைத்துவிட்டு இரண்டு இரண்டரைக்கு வீட்டுக்கு வந்தால் மூன்று மணிக்கு மதிய உணவு. நான்கு நான்கரை மணிவரையிலும்  டிவி பார்த்தல், பிறவிசயங்கள் பேசுதல் அப்படியே ஒரு சிற்றுறக்கம். இதில் சகுந்தலாவுக்கு பாதிச்சாப்பாடு தட்டில் உள்ளபோதே உறக்கம் கண்களைச் சுழற்றும். கைகழுவியதும் படுக்கை விரித்துப் படுக்கவும் அவகாசமில்லாமல் அப்படியே தரையில் சாய்ந்து விடுவாள்.

அதிகாலை ஐந்து மணிக்கே விழித்து வேலையைத் துவக்குவதால் வருகிற அசதி என்பதை உணர்ந்து நானும் வீட்டில் இருக்கிற நேரத்தில் முடிந்தவரை அவளுக்கு ஒத்தாசை செய்வேன். சாப்பிட்டவுடன் சிதறிக்கிடக்கிற பாத்திரங்களை உரிய இடத்தில் எடுத்துவைப்பது, கவழுப்பட வேண்டிய பாத்திரங்களை எடுத்து தொட்டியில் போட்டு நீர் தெளித்து ஊறவைப்பது, மீந்ததை சரியாக மூடி ஃப்ரிட்ஜில் அடைப்பது. இப்படி சின்னச்சின்ன வேலைகளை செய்வதில் சுணக்கம் காட்டுவதில்லை. சிலசமயம் சமையல் செய்த பாத்திரங்களை சோப்புப் போட்டுக் கழுவியும் வைப்பேன்.

ஆனால் இன்றைக்கு நானும் சிறிது கண்ணசந்துவிட்டேன். அந்த நேரத்தில்தான் கிழவியின் கூப்பாடு.

“மணி நாலா . .?” – சகுந்தலா கண்களை மூடினபடியே கேட்டாள்.

“ஆமாம்மா”

“பள்ளிக்கூடத்திலருந்து பிள்ளைகள் வந்திருக்கும் இனி, ராத்திரித் தூங்கறவரைக்கும் கெழவிக்கு வாய் ஒயாது. என்னாதேந் தொண்டையோ . .!”

“வந்திட்டியாடி, இப்பதான இங்கன இருந்த, அதுங்குள்ள ஒன்னய ஆரு வெத்தலபாக்கு வச்சு அழச்சாகன்னு அவதியும் பெருங்காத்துமா ஓடுனவ . ? ம் ? பள்ளியொடத்துப் பைக்கட்ட எங்கன தூக்கி எறிஞ்சி விட்ருக்க, பாரு, வெக்கிற எடத்தில வச்சாத்தானடி சொல்லிவச்ச மாதரி எடுத்துப்போக முடியும்.! காலம்பற ஓம் புருசனா வந்து தேடி எடுத்துக் குடுப்பான் .? இந்த வயசுலயே இம்புட்டுச் சோம்பேறித்தனமா ?. எல்லாத்தியும் நானே உங்களுக்கு செஞ்சு அழுகணுமாடி . ! ஆண்டவா ! ”

சகுந்தலா சொல்வதுபோல கிழவிக்கு பெருத்த குரல்தான். அசப்பில் கே.பி.சுந்தராம்பாளை நினைவுபடுத்தும் சாரீரம். ‘தகதக தகதக வென ஆடவா’’ என்று பாடினால்கூட பொருத்தமாக இருக்கும்போலத் தோன்றியது. அவரைப்போலவே பளபளப்புமிக்க பழுத்துக் கனிந்த தேகம். சிவப்பென தனித்துச் சொல்ல முடியாத வெண்மை கலந்த நிறம். வழுக்கைத் தலையர்கள் பொறாமைப்படுமளவு அடர்த்தியான வெளுத்த கேசம். பின்கொசுவம் வைத்து கணுக்கால் தெரியக் கட்டிய சேலையும், தளர்வாய் ஜாக்கெட்டும் அணிந்திருப்பார்.

நான்குமாதத்திற்கு முன்புதான் எங்கள் தெருவில் வந்து குடியேறினார்கள். எங்களது வீட்டின் பின்பக்கத்துச் சன்னலில் அவர்களது வீட்டு வாசல்தெரியும். இரண்டு வீடுகளுக்கும் இடையில் ஐந்தடி அகலமுள்ள சந்து ஓடுகிறது. பெரும்பாலும் அவர், தனது வீட்டின் வாசலிலேயேதான் உட்கார்ந்திருப்பார். வயது எழுபதைத் தொடலாம். வீட்டில் அவரும், அவரது மகனும் – ஆறு பிள்ளைகளில் இவர்தான் கடைசி மகனாம் – மகனின் குழந்தைகள் இருவர். சுபா – சிவா, எட்டு – ஆறுவயது. ஆக நான்குபேர் மட்டும் குடியிருக்கிறார் கள். மருமகள் இல்லை. மகனிடம் கோபித்துக்கொண்டு போய்விட்டாளாம். நாலுவருசம் ஆகியும் இன்னும் திரும்பவில்லையாம்.

அந்தப்பெண் வேறொரு ஆணுடன் ஓடிவிட்டதாக சகுந்தலா சொன்னாள். “ ஓடுன பொம்பள, பொட்டப் பிள்ளயத் தூக்கிக்கிட்டுப் போயிருக்கணும். என்னாதேன் அப்பான்னாலும் அம்மாவுக்காகுமா. பாவம் அந்தப் பொட்டக்கழுத” என சுபாவின்மேல் பச்சாதாபப்பட்டாள். “வயசு எட்டானாலும் ஒரு வெவரமும் தெரியலங்க. தெருவில யார் என்னவேல சொன்னாலும் தட்டாம செய்றா, சரியா ஜாக்கெட் போடத்தெரியல. இடுப்பில பாவாடைய இறுக்கமாக் கட்டி முடிச்சுப்போடத் தெரியல. ஆனா தனக்குத்தானே தலையச் சீவி இழுத்துப் பின்னல் போட்டு ரெட்டச்சடை வேற போட்டுக்கறா, அது நல்லாருக்கா இல்லியாங்கறது வேற. கெழவி வாய்க்குப் பயந்து செய்றான்னா பாருங்களேன்.”

“அந்தப் பொம்பள எதுக்கு ஓடிப்போனாளாம் .?”

“அந்தாளப் பாத்திருக்கீங்களா . ?”

சகுந்தலாவின் எதிர்க்கேள்விக்குப் பிறகுதான் அந்தநபரைப் பற்றி யோசித்தேன். மடித்துக்கட்டிய வேட்டியும்  அரைக்கைச் சட்டையும் அரசல்புரசலாய் ஞாபகத்திற்கு வந்தது. அதுவும் அந்நபரின் பின்பக்கத்து அடையாளம் அது. கடைக்குப் புறப்படுகிற சமயம் எதேச்சையான பார்வையில் பதிவான பிம்பம். பக்கத்து வீட்டில் குடியிருப்பவரின் முகம் ஞாபகம் வரவில்லை என்றால் எந்தமாதரியான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ? என்மீது எனக்கே அசூயை கிளம்பியது

“ ஏன், அவருக்கென்ன . ?” யோசிப்பதைக் கைவிட்டு சகுந்தலாவிடம் சரணடைந்தேன்.

“ப்பா . . தாடியும் மீசையும், முட்டக்கண்ணும் முழியும். பாக்கவே பயம்மா இருக்கும் இப்பிடிப்பட்டவனோட எப்பிடி ஒருத்தி ஒப்பிக் குடும்பம் நடத்துவா ?”

“ ரெண்டு கொழந்தைக வேற பொறந்திருக்கில்ல.?”

“அதுக்காகவே இவெ, அந்தப் பொம்பளைக்கிக் கோயில் கட்டிக் கும்பிடணும். !”

“என்ன வேல ?”

“ பெயிண்டராம். வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிக்கப் போவானாம்.”

“சரித்தேன். சுண்ணாம்பில வேல செய்ற ஆள் அப்பிடித்தே இருக்க முடியும் !” என்றேன்.

“அதெப்படி ?”

“சாதாரணமா வெத்தலைக்கி விரல்ல இழுகற சுண்ணாம்புக் கறையை நம்மனால சட்டுன்னு கழுவிட முடியுதா ? நாள்முழுக்க கொதிக்கும் சுண்ணாம்பச் சுமந்து உச்சி வெய்யில்ல நின்னுகிட்டு வேல பாக்கற மனுசனுக்கு தோல் உரியும். மூஞ்சி மொகறையெல்லாம் திட்டுதிட்டா கறை இருக்கும். சிலபேர் அதுக்கு லோசன், தேங்காயெண்ணெய் தடவி மறச்சுக்கிடுவாங்க. சிலர் என்னத்த மறைக்க, நாளைக்கிம் இதத் தொடத்தான போறம்னு அசால்ட்டா இருப்பாங்க. இந்தாள் அசால்ட்டுப் பேர்வழிபோல.”

“ஊர்ல எத்தனபேர் வெள்ளையடிக்கிறாங்க ? எல்லாரும் இப்பிடியா, நம்ம ராமகிருஷ்ணே சுண்ணாம்பு அடிக்கிறவன் தான ? அவெ எப்பிடி இருக்கான் ? ஒரு தொழில் செய்ற மனுசன், கொஞ்சமாச்சும் உடல் சுத்தம் இருக்கவேணாமா ?”

“அதனால பொண்டாட்டி ஓடிப்போய்ட்டாளாக்கும் .?”

“அதுமட்டுமில்ல குடி. நெதமும் நிக்கமுடியாம தள்ளாடித்தான் வருவான். வந்ததும் எதியாச்சும் பேசி பிள்ளைகளப் போட்டு அடிக்க, கெழவிய கண்டமானைக்கி அசிங்கசிங்கமாத் திட்ட, ராத்திரி ஏழுமணியானா இவக புராணத்தத்தான் எல்லாரும் கேக்கமுடியும். நிம்மதியா டிவி யெல்லாம் பாக்க முடியாது. மொதல்ல வீட்டுக்கார அம்மாகிட்டச் சொல்லி இவகளக் காலிபண்ணச் சொல்லணும்”

“சரி, இம்புட்டுப் பஞ்சாயத்துல கெழவி எதுக்கு இங்க இருக்கணும். வேற சொந்த பந்தமில்லியா . ?”

“அதெல்லா நெறையா இருக்காங்க. கூடப்பொறந்த அக்கா தங்கச்சி, மக ரெண்டுபேரு; இந்தம்மாதேன் பிள்ளைகள அநாதையா விட்டுட்டுப் போகமாட்டேங்கிது.”

“ஏலெ , நீ என்னா இவ்வளவு லேட்டு ? பள்ளியொடம் விட்டு அல்லாப் பிள்ளியளும் வீடு வந்து எத்தன நாழியலாச்சு ? ஒனக்குமட்டும் ஏறிவர காரு கெடைக்கலியாக்கும் ?” ஆறுவயது சிவா, அப்போதுதான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்திருப்பான் போலிருக்கிறது.

“ஸ்கூல்ல வெளாண்ட்டுட்டு வந்தேம் பாட்டி” தன்மையாகத்தான் பதில் சொன்னான்.

“அங்க வெளயாடாட்டி இங்க வந்து வெளாண்டா வேணாங்குதா ? மொளச்சு மூணு எலவிடல அதுங்குள்ள அடங்காமத் திரியற, ங்ஙொப்பெ வரட்டும் கால ஒடிக்கச் சொல்றேன்.”

“லூசுப் பாட்டி. சார்தே வெள்ளாடச் சொன்னாரு. அவர்ட்டப் போய்க் கேளு.” பையைத் தூக்கி எறிந்திருப்பான் போலிருக்கிறது மெல்லிய சத்தம் ஒன்றும் கேட்டது.

“ஆமாடா நா லூசுதேன். லூசா இருக்கப் போய்த்தேன் காலம்போன கடசீல கோயில் கோயிலாச் சுத்தி போறவழிக்குப் புண்ணியம் தேடுறதவிட்டு, ஓடுகாலிக்குப் பொறந்ததுகள ஓட்டிமேய்க்கிறேன் பாரு, நான் லூசுதேன்” எனப் புலம்பிய கிழவி, “யே அவனப் பிடிடி, லே, நாறப்பயலே எங்கடே ஓடுற . . இப்ப ஓடுறவெ ஒம்பது மணிக்கித்தே வீட்டுக்கு வந்து அடைய வருவ. ம் ? ஒரு நாழிகை வீடு தங்க மாட்டேங்கிறானே . வாடா வா. அந்தக் குடிகாரப்பய வரட்டும் இதுக்கு இன்னிக்கி ஒரு பைசல் பண்ணாம விடப்போறதில்ல நானு . . சிவா, லே காப்பியக் குடிச்சிட்டாச்சும் போய்த் தொலடா ”

“காப்பியக் குடிச்சிட்டான் பாட்டி “ சுபா பொறுப்பாய் பதில் சொன்னது.

“குடிச்சிட்டானா . அக்காக்காரி அக்கறையாக் குடுத்தியாக்கும் . ? எல்லாரும் ஒரு செட்டாத்தே இருக்கீங்க. அப்பெங் குடிகாரன்னா அவனுக்குப் பொறந்ததுக அதுக்குமேல வரும்போல. உங்களுக்கெல்லா அவயம்னு கத்திக்கத்தி சீவனத்தொலச்சி, நானு கடையழிஞ்சிதேன் போகப்போறேன்.”

அதற்குமேல் நிற்க நேரமில்லை. கடைதிறக்க வேண்டும்; கிளம்பினேன்.

வீட்டின் வாசலை விட்டிறங்கியதும் கண்கள் பின்புறம் திரும்பின. தன் வீட்டு வாசலின் நடுப்படியில் உட்கார்ந்து, கீழ்ப்படியில் பாதத்தை ஊன்றி, மேல்ப்படியில் முதுகைச் சாய்த்து, கைகளிரண்டையும் தலைக்குமேல் கோர்த்துக் கொண்டு பாதையை மறைத்து அமர்ந்திருந்தார் கிழவி. கூண்டுக்குள் அடைபட்ட கிளியைப் போல சுபா, மலங்க மலங்க விழித்துக் கொண்டு பாட்டியின் பின்னால் நின்றபடி வீட்டுக்குள் சிறைப்பட்டிருந்தாள்.

மாலை சுமார் ஆறுமணி இருக்கும், கடையின் உள்விளக்குகளை எறியவிட்டு, வெளிவிளக்கினைப் போடுவதற்காக இருள்கவியக் காத்திருந்தேன். பக்கத்துக்கடையில் இருந்து அகர்பத்தியின் மணம் காற்றில் மிதந்து வந்தது. ஃபைனான்ஸ் கடை என்பதால், ஐந்தாறு சாமிகளை வைத்து பூவும், பொட்டும், சந்தனமும், சாம்பிராணியும் சவ்வாதும் குழைத்துப் பூசி, பூசிப்பார்கள். கடை கமகமக்கும்.

திடீரென உள்ளிருந்து பழக்கப்பட்ட, புதிய குரல் கேட்டது. பக்கத்துவீட்டுக் கிழவியின் குரலா .? மெதுவாக எழுந்துவந்து எட்டிப்பார்த்தேன்.

“உள்ள வாங்கண்ணே .,” என்னுடைய தலையைக் கண்டதும் பைனான்சியர் அழைப்பு விடுத்தார். கூடவே கிழவியும் “வாங்கய்யா” என்றார்.

“ச்சும்மாதேன் . .நீங்க பாருங்க .” வாசல்படி ஏறாமலேயே பதிலளித்தேன். ஆனாலும் அழைப்பு தொடர்ந்தது. வாடிக்கையாளர் உள்ளிருக்கும்போது ஃபைனாசியர் வலுக்கட்டாயமாக நம்மை அழைக்கிறார் என்றால் அவருக்கு பார்ட்டியை பிடிக்கவில்லை என அர்த்தம். லோன் போடக்கூடிய பார்ட்டி என்றால் இந்நேரம் நம்மைக் கண்டுகொள்ளமாட்டார். முக்கியமான வேலையாய் உள்ளே நுழைந்தாலும், “அஞ்சு நிம்சம் கழிச்சு கூப்பிடுறேன் ணே” என வாய்தாக் கேட்டு கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாகக் கிளப்பிவிடுவார்.

“வீட்டுல காத்தாடி சுத்த மாட்டேங்குதுய்யா, புதுசு ஒண்ணு மாத்தணும் அதேன், தம்பிகிட்ட ஒரு ஆயிரம் ரூவா கந்து கேட்டுவந்தேன்.” என்னிடம் ஒப்பித்தார். கிழவி பேசுவதைப் பார்த்தால் நான் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டும்போல இருந்தது. ‘சிக்கலில் மாட்டிக்கொள்ளாதே பங்காளி’ என உள்மனது எச்சரிக்கை செய்தது.

“ஏங்கெழவி ? ஃபேன் வாங்க கந்தா ? ஒம்மகெ ஒருநாள் சம்பளம் போதுமே, அறநூறு வாங்குவான்ல. அந்த ஒருநாள் சம்பளத்த எங்கிட்டக்கக் குடுக்கச் சொல்லு, நானே புது ஃபேன் வாங்கித்தாரேன்.” ஃபைனான்சியர் கிழவியிடம் இயல்பாய்ப் பேசலானார். கிழவியின் மகன் அவருக்கு நல்ல பழக்கமாம். ஆரம்பத்தில் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கும் போல.

“அப்படியாப்பட்ட ஆளா இருந்தா எனக்கு ஏன்யா இம்பிட்டு இம்சை ? ஒருநாள் ஒருபொழுதும் ஒரு நூறுரூவாத் தாளக் கண்ணுல காட்டமாட்டேங்கிறானே . !”

“எல்லாம் ஒன்னாலதேங் கெழவி. நீ மட்டும் அவனத் தாங்காம இரு, வழிக்கு வந்திருவான். சின்னவயசில  “பொன்னுபிள்ள பொன்னுபிள்ள’ ந்னு செல்லங்குடுத்துக் கெடுத்த, இப்பவும் எங்குட்டோ போடான்னு உருவிவிடாம பக்கத்திலயே இருந்து நீதான் கெடுக்கற.”

“எனக்கென்னா ஆசயாய்யா, போனதடவ அப்பிடித்தே நீ சொன்ன மாதிரி எங்குட்டோ போங்கடான்னு விட்டுட்டு திருச்சியில இருக்க மகவீட்டுக்குப் போய்ட்டேன். நாலுநாள்தான். பிள்ளைகளப் பூராவும் அடிச்சு சித்ரவதை பண்ணி, வீட்ல பாத்தரம் பண்டங்கள ஒடச்சு .! காத்தாடிய நெளிச்சது ஆரூ . .? பச்சப் பிள்ளைகளப் பாக்கவேண்டி இருக்கேய்யா . . எதோ கண்ணுள்ள மட்டும் பாப்பம்”

அவ்வளவுக்குப் பிறகு ஆயிரம் ரூபாயெல்லாம் கடன் தருவதில்லை என்றும் குறைந்தபட்சம் பத்தாயிரம் இலக்கு என கையை விரித்து விட்டார் ஃபைனான்சியர். ஆனாலும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல மகனுடன் வருவதாகச் சொல்லிவிட்டு நகர்ந்தார் கிழவி.

“கடன் வாங்குனா கட்டீருவானா ?” கிழவி ஃபைனான்சுக்கு வந்த கதையை சகுந்தலாவிடம் சொன்னேன்.

“சம்பளம் வாங்குறான்ல ? இல்லாட்டி, கெழவி முதியோர் பென்சன்ல கட்டும்”

“ஒர் நிம்சம் உள்ள வாங்கய்யா . .” – மதியச்சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்துகொண்டிருந்தவனை, தன்வீட்டு எல்லையில் நின்றபடி வழிமறித்து அழைத்தார் கிழவி.

“சொல்லுங்மா .” என்றபடி அவரது வீட்டினுள் நுழையாமல் வாசலில் நின்றுகொண்டு உள்ளே பார்த்தேன். காலிசெய்யப்பட்ட வீடுபோல நான்கு சுவர்கள் மட்டுமே நின்றிருந்த மூளியான வீட்டை அப்போதுதான் பார்க்கிறேன். மெத்தையில்லாத இரும்புக் கட்டில் ஒன்று ஆயிரம் நெளிசல்களுடன் சுவரோரமாய்க் கிடந்தது. நின்ற இடத்திலிருந்து எதோ ஒரு சுவிட்சைப் போட்டார். ”ர்ர்ர்ர்ர்ருர்ர்ரும்” வினோதமான மிருகத்தின் முனகலைப் போல ஒரு சத்தம் கேட்டது.

“இப்பிடித்தான்யா, காத்தாடியப் போட்டா வெறுஞ் சத்தந்தே வருது. கொசுக்கடியில கண்ணப் பொட்டுன்னு மூடி உறங்க முடியல. எங்களக்கூட விடுங்க. குடிகாரப்பய குடிச்சிட்டு வந்தான்னா காத்தாடி ஓடுனா கம்முன்னு ஒறங்கறான். காத்து வரலேன்னதும் நடுச்சாமத்தில எந்திரிச்சு உசிர வாங்கறான். முக்காவாசி அந்தப் பெயலுக்காகத்தான் கேட்டேன்.”

மேலே அண்ணாந்து பார்த்தபோதுதான் சிதிலமடைந்த நிலையில் ஒரு மின்விசிறி கட்டைவண்டியின் இரும்புப் பட்டா கழன்ற சக்கரம்போல கோணல்மாணலாய்ச் சுழன்று கொண்டிருந்தது.

“இதப்போயி எப்பிடி ஒடச்சாப்ல “சகுந்தலா பின்னால் வந்து நின்றது தெரியவில்லை எனக்கு. குரல்கேட்டு வந்திருக்கலாம். தொடர்ந்து,” ஏம் பாட்டிம்மா, சின்னப்பிள்ளைங்க இருக்க வீட்ல, ஒரு டி விப் பொட்டி இருக்க வேண்டாமா ? ஐநூறு ரூவாய்க்கி கலைஞர் டிவி வாங்கமுடியாதா ? அது இருந்தா பிள்ளைக படிதாண்டுமா”

“எல்லாமே இருக்குமா. .பெரிய பொட்டியே இருக்கு, பெரிய கண்ணாடிவச்ச பீரோ, இன்னொரு கட்டிலு மெத்தை . இந்த ஆடுகாலிப் பயலவச்சுக்கிட்டு காவக்காக்க முடியுமா ? அடிக்கடி வீடு மாத்தவேண்டி இருக்கு, தூக்கிக்கிட்டு அலயிற வயசா ? இந்தப் பிள்ளைக்கி பதினோருவயசில குரு, உச்சத்துக்கு வாராரு. அதுந்தண்டியும் பல்லக்கடிச்சுக்கிருக்கணும்மா. நீங்க கொஞ்சம் சொல்லி காத்தாடிக்கி ஏற்பாடு செஞ்சீங்கன்னா, தங்கச்சி(சகுந்தலா)கிட்ட நெதமும் காசக் குடுத்துருவேன்.”

தேவையில்லாமல் ஃபைனான்சில் ஜாமீன்போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாமென சகுந்தலாவும் நானும் முடிவெடுத்தோம். கடையில் ஒருபழைய சீலிங்ஃபேன் உபயோகமில்லாமல் கிடக்கிறது. அதனை கிழவிக்கு இனாமாகத் தந்துவிடலாம் என முடிவுசெய்தோம். ஆனாலும் உடனடியாய்த் தருவதைவிட ஒருவாரம் கழித்துத் தரலாமென சகுந்தலா சொன்னாள். “தருவதென முடிவான பிறகு தாமதம் எதற்கு ?” என்றேன். “ஒங்களுக்கு ஒண்ணும் தெரியாது.” என பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்

அன்றுஇரவு வழக்கம்போல கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, தெருவின் திருப்பத்தில் போலீஸ் வாகனம் ஒன்றும், இன்னொருஅரசு  வாகனமும் நின்றிருக்கக் கண்டு நடையை எட்டிப்போட்டேன். கிழவியின் வீட்டில் போலீஸ் மற்றும் குழந்தைநல பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர். சுபாவும், சிவாவும் வீட்டினுள் இரும்புக்கட்டிலில் அமர்ந்திருக்க, முகமெல்லாம் அழுதுவீங்கி கண்ணீர் வடிந்த தடம் தெரிந்தது. பக்கத்தில் கிழவி. கலவரமான முகக்குறிப்பிலிருந்தார். அவரும் அடிவாங்கி இருக்கலாமெனத் தொன்றியது. வீட்டில் தட்டுமுட்டுச் சாமான்கள் சிதறிக்கிடந்தன. பெயிண்டர், அதிகாரிகளின் கேள்விகளுக்கு குழறிக்குழறி பதில் சொல்லிக் கொண்டிருந்தான். பக்கத்துவீட்டு மீனாதான் இருதரப்பிற்கும் பாலமாய் நின்று பேசிக்கொண்டிருந்தார். சத்துணவுக்கூடத்து டீச்சர்.

“சரிம்மா, நாளைக் காலை பதினோறு மணிக்கு ஆபீசுக்கு அழச்சிட்டுவாங்க. ஃபைனல் தகவல் சொல்லுங்க”

அதிகாரிகள் கிளம்ப, கும்பல் கலைந்தது.

கிழவி ஃபைனான்ஸ்சுக்குப் போனது தொடர்பாக பெயிண்டர் சண்டைபோட்டு பிள்ளைகளையும் கிழவியை யும் துவம்சம் செய்ததாகவும், மீனாவும் அக்கம்பக்கத்தாரும் 1098 க்கு போன் செய்து அதிகாரிகளை வரவழைத்தார்களாம். குழந்தைகள் தினசரி சித்ரவதைக்குள்ளாவதாகவும் அவர்களை ஏதாவது காப்பகத்தில் சேர்த்து காப்பாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் பெற்றவர்கள் இருக்கும்போது அவர்கள் சம்மதமில்லாமல் சேர்க்க முடியாதென்றும், பெயிண்டர் குடித்து இருப்பதனால் அவன்மீது தற்சமயம் நடவடிக்கை எடுக்க இயலாது என்பதால் எச்சரித்துவிட்டுக் கிளம்பினர். “அவெ நல்ல நெலமையில இருக்கும்போது கூப்புடுங்க வரோம்”

“இப்பிடீ த்தாம்மா, தெரு தெருவுக்கு அசிங்கப்பட்டு அலய வேண்டியிருக்கு. நா என்னாதேஞ் செய்வேன்” ஃபேன் வாங்க வந்த கிழவி, சகுந்தலாவிடம் அழுதார்.

“இந்தவயசில ஒனக்கு எதுக்கு இந்தத் தொரட்டு. பிள்ளக்காரனுக்கு பிள்ளயப்பாக்கத் தெரியாதா ? சாகப் போற காலத்தில நிம்மதியா மகவீட்டுல இருந்து காலத்தக் கழி பாட்டி. ஆள் இல்லாட்டிதே பொறுப்பு வரும்”

“அதெல்லாம் பொறுப்பானவன் தாம்மா, வீட்டுக்கு வேணுங்கறத வாங்கிப் போடறான்ல, அறிவுக் கூறானவன்மா. குடிகாரனா இருந்தாலும் மெய்னான வேலைக்கி ஆள்த்தேடி வந்திடுறாங்கள்ல ? சின்னவயசில அவெ இருந்த இருப்பப் பாத்தேன்னா நீயே நம்பமாட்ட. வேலைக்கின்னு போனான். எந்தப்பய ஆரம்பிச்சு வச்சானோ குடிகாரனா மாறி கொணங்கெட்டுப் போய்ட்டான். கொண்டவ இருந்து திருந்த வழி சொல்லணும். அவளும் நாசமாப் போய்ட்டா. எப்பிடியாச்சும் குடிய நிப்பாட்டணும். ஒரு ஆஸ்பத்திரியில  சேத்துவிட்டேன்னா, நல்லவழிக்கு வந்திருவான். போடியில மருந்து தாராகளாம்ல அங்க கூப்பிட்டுப் போகலாம்னு இருக்கேன்.” கிழவியின் கண்களில் ஒளி மின்னியது.

“எப்பிடி பாட்டி இவ்வளவு இம்சப்பட்டும் திருந்தமாட்டேங்கற. ஒருநாளாச்சும் சந்தோசம் வேணாமா .”

“என்னா சந்தோசம் ? ஏழுபிள்ளயப் பெத்து ஒண்ணச் சாகக்குடுத்தேன். ஆறுல அஞ்சு கூடுசேந்து போச்சு. கடசி கடசீன்னு பொறந்தது. இப்பிடி தள்ளமாறி நிக்கிது. ’துன்பத்தப் பாத்து பயக்கறவனுக்கு சந்தோசத்தக் கொண்டாட உரிம கெடையாது’ன்னு எங்க வீட்டுக்காரரு சொல்வாரு. இன்னிக்கி நான் கஷ்டப்பட்டாலும் நாளைக்கி எம்பிள்ளைக சந்தோசமா இருந்தாச் சரித்தேன்.”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top