இருட்டைக் கிழித்து ….

0
(0)

கோட்டைச் சுவரே தான்! பரந்து விரிந்த பிரதேசத்தை, சுற்றி வளைத்து நின்றது. “குமரேசன் மில்ஸ் (பிரைவேட்) லிமிடெட்” என்ற பெயர் பலகை மட்டும் இல்லாதிருந்தால், ஈட்டியோடு காவல் நிற்கும் இரண்டு சிப்பாய்களைத் தான் நுழைவாயிலில் எதிர்பார்க்க வேண்டும்.

வாட்ச் மேன் அறையை அடுத்து, பாதையின் வலப்புறத்தில், அழகே உருவான அளவான கோயில், தெய்வீக மணம் கமழ்கிறது. பலிபீடம், உண்டியல் போன்ற கோயிலுக்கே உரிய அவயவங்களோடு நின்றது. இடப்புறமாக, நீண்ட வரிசையில் நிற்கும் சைக்கிள்களை மூன்று ஷிப்டால் பெருக்கினால் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கும்.

பெரிய பெரிய கட்டிடங்களும் ஏராளமான மரங்களுமாக அந்த வெளி முழுவதும் நிறைந்திருக்கிறது. தொழிலாளர்களில் சிலர் பல இடங்களில் எதையோ சுமந்து கொண்டு, அங்குமிங்கும் போய்க் கொண்டிருக்கிறர்கள்.

பாதையின் இருபுறமும் தென்னை மரங்கள். பலவிதமான மரங்கள் பரவலாக நிறைந்திருக்கிறது. எல்லாம் பலன் தரும் மரங்கள். தென்னங் கன்றுகளும் வைத்திருக்கிறார்கள். வாய்க்காலின் வழியாகப் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர், சற்று உடைத்துக் கொண்டு, வெளியே பாய்ந்தது.

அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பெரியவர் இதைப் பார்த்து விட்டு, சற்றுத் தள்ளிக் கிடந்த மண் வெட்டியை எடுத்தார். தூரத்திலுள்ள தொழிலாளர்கள் சிலர் இவரை நோக்கி ஓடி வந்தார்கள். அதற்குள் வாய்க்காலை சரியாக்கி விட்டு நிமிர்ந்தார். தூய வெள்ளை ஆடையில் சிவப் பழமாக இருந்தார்.

“என்னாங்க மொதலாளி – ஒரு சத்தம் போட்டா ஓடி வரமாட்டமா? நீங்க போயி … இந்த வேலையைச் செய்யலாமா?” தொழிலாளர்கள் சங்கடப்பட்டார்கள். மில் அதிபர் குமரேசன் புன்னகை புரிந்தார்.

“இதுல என்னாப்பா இருக்கு, யாரு செஞ்சா என்ன, இதுக்கெல்லாம் மொதலாளி தொழிலாளின்னு பார்த்துக்கிட்டு”

எதிரே நிற்கும் தொழிலாளர்களில் ஒருவன் மீது நட்புணர்வோடு தோளில் தட்டிக் கொடுத்து விட்டு, மில் அலுவலகத்தை நோக்கி புன் முறுவல் மாறாமல் நடந்தார்.

“நம்ம மொதலாளி மாதிரி எத்தன பேரு ஊரு ஒலகத்துல இருப்பாங்க இவ்வளவு சொத்து பத்து இருந்துங் கொஞ்சங் கூட கர்வமில்லை. வித்தியாசமில்லாம பழகுறாரு”

“இதுக்கெல்லாம் மனசுல சுத்தமிருக்கனும், சாமி காரியத்துக்குச் செய்றதும் பக்தியுந்தாம்பா காரணம். ஊருக்குள்ள மொதலாளிக்கு இருக்கிற பேரென்ன கவுரவமென்ன, மனுசன்னா இப்படில இருக்கணும்.

பேசிக்கொண்டே கேன்டீனை நோக்கிச் சென்றார்கள். டீக்குச் சொல்லி விட்டு அங்குள்ள மற்ற தொழிலாளர்களோடு அமர்ந்தார்கள்.

“என்ன சம்முகம் – கம்முன்னு ஒக்காந்திட்ட …. என்னா கவல?” “ஒன்றுமில்ல — கோபாலு”

“சும்மா சொல்லு…..எங்க கிட்ட சொல்றதுக்கென்னா?”

“எம்மகனுக்கு காலேசுல பீசு கட்டணும் மத்த செலவுமிருக்கு, பணத்துக்கு என்ன பண்றதுன்னு புரியல்ல”

“அட்வான்சு, லோனு ஏதாவது வாங்கிக் கட்டிரு”

“அதெல்லாம் அப்பவே வாங்கியாச்சு”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சன்னாசி, “பேசாம படிப்ப நிறுத்தி, வேலக்கி அனுப்பிரு. பொலப்பு நடக்குறதே பெரும் பாடாயிருக்கு கலெக்டறாவும், டாக்டராவும் படிக்க வெக்க நெனச்சா முடியுமா?”

“அப்படிச் சொல்லாத சன்னாசி, நேரங்காலஞ் சரியா இருந்தா தானா நடக்கும். குடுக்கற தெய்வம் கூரைய பிச்சுக்கிட்டு குடுக்கும்பாங்க, அந்தச் சாமி நெனக்கனும்”

இதைக் கேட்டவுடன் போன வாரம் இவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து ஒரே நாளில் சுமார் நூறு ரூபாய் வருமானத்தோடு திரும்பிய, அந்த ஜோசியர் சொன்னதை சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த மாதம் சம்பளம் வாங்கியதும், முதல் வேளையாக அந்த தோஷத்தைக் கழித்து விட வேண்டும். ஐம்பதோ நூறோ செலவானாலும் பரவாயில்லை என்று முடிவு செய்தான்.

2

ஓட்டு வீடு, கூரை வீடு, தகர வீடு என நெருக்கமாகவும், குறுகிய தெருக்களுடனும், நகரத்தை ஓட்டியும் அமைந்திருந்தது. மில்லுக்குப் பக்கமாக இருப்பதால் குமரேசன் மில் தொழிலாளர்களில் பெரும் பாலோர் இங்கு வசித்தனர்.

மாட மாளிகைகளையும், மாபெரும் ஆலைகளையும், மானிடர்களின் தேவைகளையும் படைத்த களைப்பு அங்கு தெரிந்தது. சிலர் படுத்திருந்தனர். சாய்ந்தும் உட்கார்ந்துமிருந்தனர். களைப்பைப் போக்கி மீண்டும் படைப்பதற்காக செல்வங்களுக்கெல்லாம் ஊற்று இங்கே ஊறிக்கொண்டிருந்தது. விற்பனைக்காக.

மனோகரன் மில் தொழிலாளர்கள் அக்கினி ராசு, மாரியப்பன், செல்லமுத்து மற்றும் இருவருமாக ஐந்து பேர்கள் அங்கு சென்று கொண்டிருந்தார்கள். செம்மண் பாதை. இவர்கள் நடப்பதற்காக சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பது போல் இருந்தது.

இவர்கள் அங்கு சென்றவுடன் ஏதோ விசயமாக வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்த அங்குள்ள தொழிலாளர்கள் சற்று விசாலமான இடத்தில் கூடினார்கள். ஆரம்ப விசாரிப்புக்கள் முடிந்த பிறகு.

“நாலஞ்சு பேரா வந்திருக்கீங்க ….. என்ன விசயமுன்னு சொல்லுங்க — அக்கினி”

“எல்லாம் நம்மளப் போல தொழிலாளிங்க விசயந்தான். நாளக்கி சாயந்தரம் நம்ம சங்க கூட்டம் நடக்கப் போகுது. நம்ம மாநிலத் தலைவரு வராரு நீங்க எல்லாரும் அவசியம் வரணும்”

“எங்க மில்லப் பொருத்து எந்தப் பிரச்சனையுமில்லங்க சங்கம் அது இதுன்னு எதுக்குங்க”

“அப்படிச் சொல்லாதிங்க சம்முகம். பிரச்சனன்னு பாத்தா எல்லாருக்கும் ஒன்னு தாங்க இதுல ஒங்கமில்லு வேற எங்க மில்லு வேறன்னு பாக்காதிங்க”

“அப்படிச் சொல்லாதிங்க மாரி, எங்க மொதலாளி தங்கமான ஆளு வித்தியாசமே பார்க்க மாட்டாரு. அவரப் பத்தி ஒங்களுக்கு தெரியும். எல்லா மில்லு மாதிரி எங்க மில்லுல பிரச்சனயில்ல”

“பிரச்சன இல்லன்னு சொல்லாதீங்க கோபாலு. நீங்க பாக்காம இருக்கீங்க, பழைய சம்பளம் முடிஞ்சு மூணு மாசமாச்சு புதுசா ஒப்பந்தம் போடாம, இழுத்துக்கிட்டு போருங்க, வெலவாசியெல்லாங் கூடிக்கிட்டுப் போகுது. தாங்க முடியல”

“வெலவாசி கூடுறதுக்கு எங்கமொதலாளி என்ன செய்வாரு. நம்ம தலவிதிய நாம அனுபவிக்கிறோம். இதுக்காக எங்க மில்லுலயுஞ் சங்கம் வெச்சு எங்க மொதலாளிக்கு தொல்ல குடுக்குறது ஞாயமில்லங்க.”

பேச்சின் முக்கியத்துவம் புரிந்து பக்கத்தில் மரத்தையொட்டிக் கட்டியிருக்கும் மேடையில், தாயக்கட்டம், ஆடுபுலி ஆட்டம் விளையாடு வதற்கு வரைந்துள்ள கட்டங்களின் மேல் உட்கார்ந்தார். கண் சோடா வாங்கிக் கொடுத்தார்கள். சுற்றி நின்ற சிறுவர்களை விரட்டி விட்டார்கள்.

“எங்க மில்லுக் கேன்டீன்ல காபி முப்பது காசு, சாப்பாடு ரெண்டு ரூபா, ஒங்க மில்லுக் கேன்டீன்ல காபி அம்பது காசு, சாப்பாடு மூன்று ரூபா, இதுக்கு என்ன சொல்றீங்க.”

“கேன்டீன் நடத்துறவரு அந்த விலைக்கி விக்கிறாரு. வெளிலேயும் இதே விலை தான். இதுக்கு எங்க மொதலாளி என்ன செய்வாரு.”

“எங்க மில்லுலையும் ஆரம்பத்துல இதே நிலைமைதான். நாங்க சங்கம் வச்ச பிறகு கேன்டீன காண்ட்ராக்டுக்கு விடக் கூடாது, மில்லு மூலமாவே நடத்தி, விலையைக் கொரச்சுக் குடுக்கனும் சங்கத்து மூலமா பிரச்சனையாக் கொண்டு போனம். தொழிலாளிக ஒன்னாச் சேர்ந்த பிறகுதான் மொதலாளியே கேன்டீன் நடத்துறாரு. ஆனால் ஒங்க மொதலாளி காண்ட்ராக்டுக்கு விட்டு பணத்த வாங்குறத புரியாம இருக்கீங்க”

சண்முகமும், கோபாலும் சன்னாசியும் மற்றவர்களும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். முதலாளியைப் பற்றி தவறாகப் பேசினால் நாக்கு அழுகிவிடும் என்ற அவர்களது நம்பிக்கை லேசாக ஆட்டம் கண்டது.

3

மில் அதிபர் மனோகரன் காரை விட்டு இறங்கி, அதிபர் குமரேசனின் தனியறையை நோக்கி நடந்தார். கதவைத் திறந்தவுடன் இதமான குளிர்ச்சி இருந்தது. குளிர் சாதனம் பொருத்தப்பட்ட விசாலமான அறை. பெரிய மேஜை சுற்றிலும் நவீன நாற்காலிகள் இன்ன பிற வசதிகள்.

வந்தவரை வரவேற்று பியூனை குளிர்பானத்துடன் வரவழைத்தார். மற்ற பானங்களுக்கு இந்த இடத்தில் அனுமதியில்லை என்பது மனோகரனுக்குத் தெரியும் அயோக்கியமானதையும் யோக்கியமாகச் செய்ய வேண்டும் என்று குமரேசன் சொன்னதை நினைத்துக் கொண்டார்.

குமரேசனுக்குப் பின்னால் சற்று மேலே தேசத்தலைவர்களின் படங்கள் இருந்தன. அதில் வாரிசுகளும் இருந்தது. எதிரேயுள்ள சுவரில் சாமி படங்கள் மாலைகளோடு இருந்தன.

“ஒங்க மில்லுல எப்பவும் லேபர் ப்ராப்ளமாவே இருக்கே! வளர்க்காமா ஆரம்பத்திலேயே சரிபண்ணிடுங்க”

ஆமாங்க – ஏதாவது செய்யணும் ஒங்க மில்லுல எந்தப் ப்ராப்ளமும் இல்லையே என்ன செஞ்சீங்க?

குமரேசன் லேசா சிரித்துக் கொண்டார். “நம்ம நட்சத்திர ஹோட்டல் திறப்பு விழாவுக்கு நீங்க வந்தப்ப ஒரு கேள்வி கேட்டீங்களோ ஞாபகமிருக்கா ?” “ஞாபகமில்ல ……. சொல்லுங்க”

“இவ்வளவு வசதியிருந்தும் பேரு இருந்தும் தொழிலாளிகளோடு வித்தியாசமில்லாம பழகுறீங்க. அவனுங்க செய்ற வேலைங்களைக்கூட செய்றீங்க. நம்ம கவுரவும் என்னாகுறது? இது மாதிரி ரொம்ப சங்க மா கேட்டீங்க”

மனோகரனுக்கும் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஏன் இதைச் சொல்லுகிறார் என்பது புரியவில்லை.

“அப்ப சொன்னதற்கும் இப்ப நான் கேட்பதுக்கும் என்ன தொடர்பிருக்கு”

“நிறைய இருக்கு … ஒங்க கேள்விகளுக்கும் பதிலிருக்கும்.”

“புரியவில்லையே”

“தொழிலாளிகளோட வித்தியாசமில்லாம பழகுறதால என்ன உயர்வா மதிக்கிறாங்க நல்ல மனுசன் அப்படி இப்படின்னு அவங்க. நினைக்கிறாங்க. கோயில் கொளத்துக்குச் செய்யறதும் அவங்க புரிஞ்சுக் கிற மாதிரி சின்னச் சின்ன தனிப்பட்ட உதவிகளைச் செய்றதும் நல்ல பலனக் கொடுக்குது. இது தான் லேபர் ப்ராப்ளம் வராம இருக்கிறதுக்குக் காரணம். உயர்வா நெனைக்கிறவங்களச் சந்தேகப்பட மாட்டாங்க. கண்ணுக்குத் தெரியிற மாதிரி செய்யிற சின்ன உதவிங்க கையெடுத்துக் கும்பிட வைக்குது. இந்த நிலமய காப்பாத்துற வரைக்கும் ப்ராப்ளமே வராது”

“புரியுதுங்க”

“ஆடுற மாட்ட ஆடிக் கறக்கணும், பாடுற மாட்ட பாடிக் கறக்கணும்?”

“சரியாச் சொன்னீங்க – இப்ப எங்க மில்லு ப்ராப்ளத்துக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்க”

குமரேசன் சிறிது நேரம் யோசித்தார்.

“ஒங்க மில்லுல வேல பாக்குற லேபர்கள் சாதிக்கு எத்தன பேருன்ணு கணக்கெடுங்க எத்தன சாதி இருக்குங் கிறதயுங் கணக்கெடுங்க. அப்புறம் மைனாரிட்டியையும் மெஜாரிட்டியையும் மோத விடுங்க.”

“நல்ல ஐடியாங்க …… இதே மாதிரி இன்னொரு ஐடியாவுஞ் சொல்லுங்க”

“லேபருங்க சங்கத்துக்கு தலைவனுக்கு யாரு?”

“அக்கினி ராசு, மாரியப்பன், செல்லமுத்து இப்படி நாலஞ்சு பேரு இருக்கானுங்க”

“அவனுங்கெல்லாம் எப்படிப்பட்டவனுங்க? நடத்தையும் குடும்ப நிலமைகளும் எப்படியிருக்கு”

“பொதுவா லேபருங்க குடும்ப நிலமதாங்க இவனுகளுக்கும் நடத்தையிலயும் மத்த எதுலயும் எந்தத் தப்புமில்ல. வெளில் ஏதாவது தப்பா நடந்தா போலீஸ்ல மாட்டி விடலாம்னா அதுக்கும் வழியில்லங்க”

“அவனுங்கள தனித்தனியா யாருக்குந் தெரியாமக் கூப்பிட்டு கொஞ்சம் பெரிய தொகையாக் குடுத்துப் பாருங்க”

பழைய சம்பவம் நினைவுக்கு வந்து பயத்தை ஏற்படுத்தியது. மனோகரன் அதை மறைத்துக் கொண்டு, “போன வருசமே இதச் செஞ்சு பார்த்தீங்க வேற ஏதாவது செய்யனும்”

“கொஞ்சம் விசுவாசமா இருக்கிறவனக் கூப்பிட்டு பேசுங்க. பணத்தக் குடுத்து அந்த நாலஞ்சு பேருமேல ஏதாவது சொல்லி தகராரு செய்யச் சொல்லுங்க. அதோட முடிஞ்சா சாதியையுங் கலந்து விடணும். போட்டிச் சங்கத்த உருவாக்குங்க. ஒங்க பேரு வெளிய வரக்கூடாது.”

“இந்த இரண்டு ஐடியாக்கல்ல ஏதாவதொன்ன உடனே செய்றீங்க”

“மில் ஓனர்கள் கூட்டத்த கூட்டிப் பேசுவோம். உங்களுக்கு சப்போர்ட்டுக் குடுக்கணும். ஒங்க மில்லுல இருக்கிற சங்கம் வளர்ந்தா, அது மத்த மில்களுக்கும் பரவும். அதனால் இத நாம பொதுவானதா பார்க்கணும். அந்த ரெண்டு ஐடியாவையும் ஒன்றாவே செய்யுங்க.”

4

மனோகரன் மில்லை அடுத்து, சாலை ஓரமாக உள்ள பெட்டிக் கடைகளுக்குப் பின்புறமாக, சிறிது தூரத்தில், மண் சுவர்களுக்கு மேல் கூரை வேயப்பட்ட சங்க அலுவலகம், கொஞ்சம் விஸ்தீரணமாக இருந்தது. சங்கக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. தலைவர் பேசிக் கொண்டிருந்தார்.

சண்முகத்தோடு வந்திருந்த பத்துப் பேரும் ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தார்கள். சங்க அலுவலகம் முழுவதும் தொழிலாளர்கள் நிறைந்திருந்தார்கள்.

“ஒரு பக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் தொழிலாளர்களின் வறுமை அதிகரிக்கிறது. விலை அதிகரிப்பதால் தொழிலாளர்களும் நம்மைப் போன்ற ஏழை எளிய மக்களும் தான் பாதிக்கப்படுகிறார்கள். முதலாளிகளுக்கு எந்த விதமான பாதிப்புமில்லை. அவர்களும் விலையை ஏற்றி விடுகிறார்கள். கொள்ளை லாபம் அடைகிறார்கள். கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் தலைவிதியல்ல. முதலாளிகளின் கொள்ளை லாபம் தான் காரணம்”

குமரேசன் மில்லில் நடைபெற்ற பல கூட்டங்களில் விழாக்களில் கலந்து கொண்ட அமைச்சர்களையும், எம்.எல்.ஏ., எம்.பி., போன்ற தலைவர்களையும் பார்த்த சண்முகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குத் தலைவர் என்று சொல்கிறார்கள். ஆனால் சாதாரணத் தொழிலாளி போன்று தான் இருக்கிறாரே! பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு சந்தேகத்தை நீக்கிக் கொண்டான்.

“தொழிலாளர்களிடம் ஒற்றுமை குறைவாக இருப்பதால் தான் அதிகச் சம்பளம் வாங்க முடியவில்லை. இது முதலாளிகளுக்கு நல்லதாக இருக்கிறது. மேலும் மேலும் சொத்துக்களை பெருக்கிக் கொண்டே போகிறார்கள் உங்களது உழைப்பு எங்கு போய்ச் சேர்ந்து கொண்டே யிருக்கிறது என்பது உங்களுக்குப் புரியவில்லையா? முதலாளிகளுக்கு மட்டும் தான் கடவுள் கொடுப்பார் ஏழைகளுக்கு கொடுக்க மாட்டாரா? இதையெல்லாம் யோசித்துப் பார்த்தீர்களோ?”

சண்முகம் சுற்றிலும் பார்த்தான். பல மில் தொழிலாளர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மனோகரன் மில் தொழிலாளர்கள் தான் அதிகம் இருந்தார்கள். தலைவர் சொல்வதிலும் பல உண்மைகள் இருக்கிறது. அவர் நியாயத்தைத் தான் சொல்கிறார் என நினைத்துக் கொண்டான்.

“நான் இங்கு வந்தவுடன் இங்குள்ள மில்களின் நிலைமை பற்றிச் சொன்னார்கள். குறிப்பாக மனோகரன் மில் பற்றிச் சொன்னார்கள். அந்த மில் தொழிலாளர்களைப் பார்த்துக் கேட்கிறேன். பழைய சம்பள ஒப்பந்தம் முடிந்து மூன்று மாதங்களாகிறது. இன்னும் ஏன் உங்கள் மில்லில் புதுச் சம்பளம் கொடுக்கவில்லை? சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம் பழைய சம்பளமே போதும் என்று சொல்லி விட்டீர்களோ? உங்களது வறுமை நீங்கி விட்டதா? அவர்மட்டும் தனியாக சம்பளத்தை கூட்டிக் கொடுக்கமாட்டார். ஏனென்றால் அவரும் முதலாளிகளில் ஒருவர் தான். நமது சங்கத்தின் போராட்டங்களால் தான் பழைய சம்பளத்தைப் பெற்றோம். அதே சம்பளத்தைத் தான் இவரும் கொடுத்தார். இதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

சண்முகத்தைப் போன்று கோபாலும் சன்னாசியும் மற்றவர்களும் யோசிக்க ஆரம்பித்தார்கள். இப்படி ஒவ்வொரு விசயமாக தலைவர் பேசப் பேச இவர்களின் சிந்தனையும் அதிகரித்தது. பிரச்சனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் இதுவரையிலும் அவர்கள் நம்பிவந்த காரணங்கள் பொய்யாகத் தெரிந்தது.

5

அந்தத் தொழிலாளர்களின் எண்ண ஓட்டங்கள் பலவிதமாக இருந்தது. எதையும் சரியாக தீர்மானிக்க முடியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. சண்முகமும், கோபாலும் சன்னாசியும் சக்திவேலும் இன்னும் பத்துப் பதினைந்து பேர்களும் அமைதியாக அந்த மரத்தடி மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல், பலபக்கங் களிலும், மேலேயும், கீழேயும் பார்த்தார்கள். அவர்கள் வழக்கமாக ஓய்வு நேரங்களில் அமரும் இடம்தான். அவர்களின் சிந்தனைகளில் ஏற்பட்ட குழப்பம் செய்கைகளில் தெரிந்தது. ஆனால் யாரும் வாய்விட்டு எதையும் பேசவில்லை. வழக்கமாக இந்த நேரத்தில் வேடிக்கையாகவும் பந்தயம் கட்டியும் விளையாடும் தாயக் கட்டம், ஆடுபுலி ஆட்டங்களையும் கூட விளையாடவில்லை. அவர்களுக்கு அந்த சிந்தனையே ஏற்படவில்லை. அவர்களுக்கே இந்த நிலைமை புதிதாகத் தெரிந்தது.

புதிய சிந்தனைகளும் பழைய நம்பிக்கைகளும் மோதிக் கொண்டிருந்தது. ஆலமரம் போல் ஓங்கி வளர்ந்து விழுதுகள் விட்டு அசையாது நிற்கும் பழைய நம்பிக்கையை இவர்களது புதிய சிந்தனைகளால் அதனால் ஏற்பட்ட கேள்விகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் பழைய நம்பிக்கையே மேலோங்கி நின்றது. ஆனாலும் கேள்விகள் வந்து கொண்டே இருந்தது. அவர்களது குழப்பத்திற்கு இதுதான் காரணம்.

முதலாளிமேல் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கை மதிப்பு இவைகளின் மேல் வாழ்க்கைப் பிரச்சனைக்கான காரணங்களை ஏமாற்றப்படுகிறோமோ? என்ற சந்தேகத்தை மோத விட்டுப் பார்த்தார்கள். சிவப்பழமாக இருக்கும் முதலாளியின் தோற்றமும். பின் சிரிப்பும் தான் மேலோங்கி நின்றது.

“என்ன எல்லாரும் புதுப் பொண்ணு மாதிரி ஒக்காந்திருக்கீங்க?”

“புதுப் பொண்ணுன்னா கல்யாண வீடுல்ல இங்க எழவு விழுந்த மாதிரில ஒக்காந்திருக்காங்க’

வெளியூர் சென்று திரும்பிய சாமிக்கண்ணும் ரத்தின வேலும் அங்கு வந்தார்கள். சிலர் அரைகுறையாகச் சிரித்துக்கொண்டு, இவர்கள் உட்கார இடம் விட்டு, சற்று நகர்ந்து உட்கார்ந்தார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. அவர் சொல்லட்டும் இவர் சொல்லட்டும் என்று எல்லோரும் பேசாமல் இருந்தார்கள்.

“இன்னக்கி என்ன எல்லோரும் மவுன விரதமா இருக்கீங்க – என்ன சண்முகம் விசயத்தச் சொல்லு?”

சண்முகம் குழப்பமாக நெளிந்தான். தவறாகச் சொல்லி விடுவோமோ என்று பயந்தான். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என குழம்பினான்.

“என்னத்தச் சொல்றதுன்னு புரியல. மனோகரன் மில்லுக் காரவங்க கூப்பிட்டாங்கன்னு அவங்க சங்கக் கூட்டத்துக்கு நேத்து போயிருந்தோம் அங்க தலைவரு பேசுனதக் கேட்ட பிறகு நம்ம மொதலாளியைப் பத்தி நினைத்துப் பார்த்தா ஒரே யோசனையாயிருக்கு”

“புரியிற மாதிரிச் சொல்லு”

இவர்கள் புரிவதற்காக கோபாலும் சன்னாசியும் ஆளுக்குக் கொஞ்சமாகச் சொன்னார்கள்.

“தலைவரு பேசுனதா நீங்க சொல்றதும் நம்ம கஷ்டம் கொறயணும், சம்பளங் கூட வாங்கணும் அப்படிங்கிற தெல்லாம் யாரு வேணாம்னா? எல்லாருக்கும் போல தானே நமக்குங் குடுப்பாங்க. இதுல புதுசா என்னத்த புரிஞ்சுக்கிட்டு இப்படி ஒக்காந்திட்டீங்க?”

“எல்லா மொதலாளியுங் குடுக்கிறத தானே ஒங்க மொதலாளியுங் குடுக்கிறாரு. அவரு நல்லவரு ஒங்க கஷ்டத்தப் புரிஞ்சவருன்னா அவரு மட்டும் சம்பளத்த ஏன் கூடக் குடுக்கலன்னு கேக்குறாங்களே!”

“பழைய சம்பளம் முடிஞ்சு மூணு மாசமாச்சு புதுச் சம்பளம் போடாம மத்த மொதலாளிகளோட சேர்ந்து இவரும் பேசாம இருக்காரே தங்கமான ஆளுன்னு எதவச்சு சொல்றீங்க? ஒங்க கஷ்டத்தப் புரிஞ்சிருக்காரா? அல்லது மொதலாளிங்க லாபத்தப் புரிஞ் சிருக்காரா?

இந்தக் கேள்விகள் அந்த இருவரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தது

“அதனால எல்லா மொதலாளியும் ஒன்னுதான் ஒங்க மொதலாளி மட்டும் பெரிய தர்மபிரபு மத்த மொதலாளிங்க மாதிரி இவரு இல்ல, ரொம்ப நல்ல மனுசன் அப்படி இப்படின்னு சொல்றதெல்லாம் ஒங்களையே ஏமாத்திக்கிறீங்கன்னு கேட்டாங்க”

“இன்னும் நிறையச் சொன்னாங்க நம்ம மொதலாளியப் பத்தி இப்படியெல்லாம் கேக்கப் போயி எங்களுக்கு ஒரே சங்கடமாப் போச்சு, அவங்களுக்கு பதிலச் சொல்றது இருக்கட்டும் இப்ப நம்மளும் கொஞ்சம் யோசிக்கணும் போல இருக்கு. அவங்க கேக்கும் போது நமக்கு ஆத்திரமா வந்தாலும் இங்க வந்த பிறகு யோசனையா இருக்கு.”

“மனோகரன் மில்லுல இருக்கிற வசதிங்களப் பாத்த பிறகு ஒவ்வொரு யோசனையா வருது. சங்கம் வச்சு எல்லா வசதியும் வாங்கி யிருக்காங்க”

கேன்டீனை காண்ட்ராக்டுக்கு விட்டது மில் வேலைகளையும் பார்த்து விட்டு, இவர்களாக விரும்பி, முதலாளியின் நல்ல மனதிற்காக அதிமாக உழைத்து வளர்த்த மரங்களின் பலன்களை வெளியாட்களுக்கு ஏலத்திற்கு விட்டது. மில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அதிக நேரம் வேலை வாங்கி ஓவர் டைம் சம்பளம் கொடுக்காமல் வடை, டீ போன்றவைளைக் கொடுத்தது: மில்லின் வளர்ச்சிக்கும் இயந்திரங்களின், வேலைகளின் அதிகரிப்பிற்கும் தகுந்தாற்போல் புதிய ஆட்களை எடுக்காமல் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த ஆட்களை வைத்தே வேலை வாங்குவது, ஒய்வு பெற்றவர்கள், இறந்தவர்களுக்கும் பதிலாக புதிதாக வேலைக்கு ஆள் எடுக்காதது: மில் விபத்தில் மரணமடைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு வெறும் ஐந்து ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து சரிக்கட்டியது.

இப்படி இவர்கள் மில்லில் நடந்த பல விசயங்களை விளக்கியும், மற்ற மில்களில் இவைகளுக்கெல்லாம் என்ன செய்திருக்கிறார்ள். எப்படி அந்த பலன்களையும், வசதிகளையும் அடைந்தார்கள் என்பதையும் விளக்கிய பிறகு, இதனால் யாருக்கு லாபம், நன்மை என்றெல்லாம் அந்த சங்கக் கூட்டத்தில் கேள்வி கேட்ட பிறகு தான் இவர்களுக்கு சிறிது குழப்பம் ஏற்பட்டது.

“நீங்க சொல்றதுயெல்லாம் ஒத்துக்கிறேன். இதுல மொதலாளிய கொற சொல்றது தான் எனக்கு சங்கடமா இருக்கு நாம ஏதாவது கேட்டு அவருஇல்லேன்னு சொல்லியிருந்தார்னா அவரக்கொற சொல்லலாம்.”

“நாம கேட்டாத்தானே அவரு இல்லேன்னு சொல்றதுக்கு. நாம எதுவுங் கேக்குற தில்லையே”

“சங்கத்துல ஆயிரஞ் சொல்லு வாங்க, அத வச்சு நம்ம மொதலாளிய கொற சொல்லக் கூடாது அதுக்காக சங்கத்துல சொல்றதெல்லாம் தப்புன்னு நாஞ் சொல்லல”

“நீ என்ன சொல்றேனு புரியல, இருக்கிற கொழப்பம் பத்தாதுன்னு நீ வேற கொழப்புற, மொதலாளியும் நல்லவருங்கிற, சங்கத்தில சொல்றதும் உண்மைதாங்கிற. ஆனாச் சங்கம் மொதலாளிய கொற சொல்லுது இத புரிஞ்சுபேசு.”

“சண்முகம் …… கொழப்பத்துக்குக் காரணத்த நல்லாச் சொன்ன. இதுக்கு என்ன செய்யனுங்கிறதையுஞ் சொல்லு, இரண்டுங் கெட்டானா இருக்கோம்.”

“சங்கத்துல சொன்தை யாரும் மறுக்கல, மொதலாளியையும் யாருங் கொற சொல்ல முடியல, இதுக்கு ஒரே வழி நாம மொதலாளிட்ட ஏதாவது கேட்டுப் பார்த்து அதுக்குப் பிறகு முடிவு செய்வோம்”

“எல்லோரும் அமைதியாகக் கவனித்தார்கள். தனிப்பட்ட விசயமாயில்லாம, சம்பளப் பிரச்சன பொதுவாகவும் முக்கியமாவும் இருக்கு நம்ம மொதலாளி கிட்ட எல்லாருக்குஞ் சம்பளத்த அதிகமாக் கேப்போம். என்ன சொல்றீங்க?”

“சண்முகஞ் சொல்றது நல்ல யோசன”

“நாளைக்கே எல்லாரும் ஒன்னாப் போயி கேப்போம்.”

“எல்லாரும் ஒன்னாப் போறத விட மூணுநாலு பேருங்க மட்டுங் கேக்கிறது நல்லது. அதுக்குப் பிறகு எல்லாருங் கூடி முடிவு செய்வோம்.”

6

மரங்களும் தென்னங்கன்றுகளும், எல்லாமும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால் …… ஆனால்; சொல்லத் தெரியாத ஒரு மாற்றம், மாற்றமா? அல்லது மாற்றத்திற்கான அறிகுறியா? இந்த அறிகுறி எதற்கோ கட்டியங் கூறுவது போல் இருக்கிறதே!

எப்பொழுதும் போல் தான் தொழிலாளர்கள் அங்குமிங்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் சுபாவங்கள், சின்னச் சின்ன அசைவுகள் எப்பொழுதும் போல் இல்லையே! எதைச் செய்தாலும் எங்கு சென்றாலும் மில் அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள அந்த மரத்தடியைத் தான் பார்த்துக் கொண்டார்கள்.

சண்முகமும், கோபாலும், சன்னாசியும் அந்த மரத்தடியில் நின்று மெதுவாகப் பேசிக் கொண்டிருத்தார்கள். எவ்வளவு கேட்பது? எப்படிக் கேட்பது? அலுவலகத்திற்கு உள்ளேயே சென்று, முதலாளியின் தனியறையில் வைத்துக் கேட்பதா? அல்லது வெளியில் வரும்போது கேட்பதா?

அந்த மூவருக்கும் இந்தக் கேள்விகள் தான் எழுந்தன. இந்த மூவர் மட்டும் கேட்பது என்று முடிவு செய்வதற்கு முன்போ அல்லது இங்கு வந்து நிற்பதற்கு முன்போ இந்தக் கேள்விகள் எழவில்லை. யாருக்கு யார் வழி காட்ட முடியும்? மூவருமே அப்படித்தான்.

அப்படியே கேட்ட பிறகு முதலாளி ஏற்றுக் கொண்டால் நல்லது. ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை .

மற்ற தொழிலாளர்கள் இவர்களைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு மேலும் சங்கடப்படுத்தியது. தாகத்திற்கு சிறிது. தண்ணீரும் அப்படியே கேன்டீனில் டீயும் குடித்து விட்டு வந்து விடலாம் என நினைத்தார்கள். இங்கு வருவதற்கு முன்பு டீயெல்லாம் குடித்து விட்டதால், மீண்டும் சென்றால் மற்ற தொழிலாளர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் வந்ததும் அந்த நினைப்பும் கைவிடப்பட்டது.

குமரேசனின் கார் வந்து வட்டமடித்து சற்றுத்தள்ளி நின்றதும், இவர்களுக்கு சிறிது உற்சாகமேற்பட்டது. கார் வந்து நிற்பதால் முதலாளி சிறிது நேரத்தில் வெளியே வருவார், இங்கே கேட்கலாம் என்று தங்களைத் தயார் செய்து கொண்டார்கள்.

குமரேசன் வெளியில் வந்தார். எப்போழுதும் போல் சுற்றிலும் பார்த்தார். இவர்களையும் பார்த்தார். கழுகுக்கு மூக்கில் வேர்க்கும் என்பார்களே, அதுபோல் இவருக்கும் வேர்த்தது.

இவர்களைப் பார்த்ததால் புன்சிரிப்போடு இவர்களை நோக்கி வந்தார். இவர்களும் சற்று முன்னால் வந்து,

“மொதலாளி…. வந்து…..”

“சொல்லுங்க …… என்ன விசயம் சண்முகம்.”

“சம்பளங் கூட வேணுங்க”

தலையைச் சொரியாமல் நேராகவே விசயத்தை சண்முகம் சொல்லவும், மூக்கில் வியர்த்த காரணம் அவருக்குப் புரிந்தது. புரியாதது போல் ‘என்ன சொல்ற சண்முகம்’ எனக் கேட்டார்”

“முணு மாசமாகுது – இன்னும் புதுச்சம்பளம் போடல எல்லாருக்குஞ் சம்பளத்தக் கூட்டி புதுச் சம்பளத்த ஐயா…..சீக்கிரமா குடுக்கணும்னு கேக்கலாம்னு வந்திருக்கோம்.”

அப்படியும் அவருக்கு புன்சிரிப்பு மாறவில்லை. அத்தனை பேரும் ஆடித்தான் போய் விட்டார்கள். ஒரு வேளை முதலாளியைத் தவறாகத் தான் நினைத்து விட்டோமா? எப்பொழுதும் போல் புன்சிரிப்பு மாறாமல் தானே இருக்கிறார்?

“அதெல்லாம் நான் யோசிக்கலன்னு நெனக்கிறீங்களா? இப்பக்கூட இது விசயமாப் பேசத்தான் ஓனர்ங்களோட கூட்டத்துக்குப் புறப்பட்டேன். இதுக்காக எதுக்கு எல்லாருஞ் சேர்ந்து வர்றீங்க. ஒங்க கஷ்டத்தப் புரிஞ்சு நல்லது தான் செய்வோம். சந்தோசமாய் போயிட்டு வாங்க.”

“மத்த மொதலாளிங்க மாதிரி நீங்க இல்லன்னுதான். ஒங்க கிட்ட கூடுதலா கேக்கிறோம். மத்தவங்களவிட நீங்க சம்பளத்த கூடுதலா குடுக்கணும்.”

மெதுவாக, நட்புணர்வோடு சண்முகத்தின் தோள் மீது கைபோட்டு காருக்குப் பக்கமாக அழைத்துச் சென்றார். மிகவும் தாழ்ந்த குரலில், “சண்முகம்………. ஒனக்கு ஏதாவது கஷ்டம்னா தனியா வந்து கேட்டா இல்லேன்னா சொல்லுவேன்? ஓம் மகனுக்கு காலேஜ்ல பணங்கட்ட கஷ்டப்படுறதாச் சொன்னாங்க. எவ்வளவு வேணும் கூசாமக் கேளு.

“அதெல்லாம் எதுக்குங்க …… இப்ப நாங்க அதுக்காக வரலைங்க.”

“அப்படியெல்லாம் பேசாத சண்முகம். ஒன்னப் பத்தி எனக்கு தெரியாதா? நான் என்ன வித்தியாசமாகவா பழகுறேன். ஏங்கிட்டப் போயி இப்படி பேசுறியே. அந்தக் காலத்துல நாங் கஷ்டப்படப் போயித்தான் ஓங்க கஷ்டத்தப் புரிஞ்சு பேசுறேன். நல்லா யோசிச்சுப் பாரு. நமக்குன்னு ஏதாவது வசதி இருந்தாத்தான் நாம வாழ முடியும். பொதுவாப் பேசுறதெல்லாம் வாழ்க்கைக்கு ஒதவாது. ஓங்கஷ்டத்த நீக்கப்பாரு இப்ப எனக்கு நேரமாயிருச்சு. சாயந்தரமா நம்ம பங்களாவுக்கு வா, யாருக்குத் தெரியவேணாம்.” என்று சொல்லிட்டு சற்றுத் தள்ளி நின்ற கோபாலையும், சன்னாசியையும் பார்த்து. அதே புன் சிரிப்போடு,

“எல்லாரும் திருப்திப்படுகிற மாதிரி சம்பளத்த கூட்டித்தருவேன். கவலப்படாம போயிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு காரில் சென்று விட்டார்.

சண்முகத்தின் தன் மானத்திற்கு ஒரு சவால் அவனது வறுமை விலை பேசப்பட்டது. விலை என்பதை விட பிச்சை போடுவது என்றால் சரியாக இருக்கும் எவ்வளவு கேவலமான வார்த்தையை மிகவும் நாசூக்காக, மனிதாபிமான உணர்வு போல் சொல்லிவிட்டார். எல்லோருக்கும் சம்பள உயர்வு கேட்கும் பொழுது மகனின் படிப்புச் செலவுக்குப் பணம் தருவதாகச் சொன்னால் என்ன அர்த்தம். அதுவும் தனியே வந்து பங்களாவில் பார்க்க வேண்டுமாம். எவ்வளவு வேண்டுமானாலும் கூசாமல் கேட்க வேண்டுமாம். யாருக்கும் தெரியக்கூடாதாம். மிகவும் கேவலப்படுத்தியதாக அவமானப் படுத்திவிட்டதாக நினைத்தான். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, வெளிக்காட்டி விடாம லிருக்க முயற்சித்தான். அவனுக்குள் ஒரு போராட்டம் மனப் போராட்டம் நடந்தது.

புடம் போடப்படுகிறது என்பார்களே, அதுபோல் இருந்தது, மனக் கொந்தளிப்பை அடக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

முதலாளியின் மேல் வைத்திருந்த மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் தூள் தூளாகியது. அவரைப் பற்றி நினைத்ததெல்லாம் பொய்யாகிவிட்டது. எல்லாம் ஏமாற்றமாகத் தெரிந்தது. தொழிலாளர்கள் ஒன்று படும்போது, ஒரு சிலருக்கு ஆசை காட்டி, விலைபேசி, கருங்காலிகளாக துரோகிகளாக மாற்றிவிட முதலாளிகள் முயற்சிப்பார்கள் என்று தலைவர் எச்சரித்தது நினைவுக்கு வந்தது. தெய்வமாக நம்பிவந்த முதலாளி தன்னை கருங்காலியாக துரோகியாக மாற்ற முயற்சி செய்தார் என நினைத்தவுடன் முதலாளி துரும்புக்குச் சமமாக, கேவலமான பிறவியாகத் தெரிந்தார். அடக்கமுடியாத அளவிற்கு கோபம் ஏற்பட்டது.

“கால நெலய மறந்து சிலது

கம்பயுங் கொம்பயும் நீட்டுது

புலியின் கடுங் கோபம் தெரிஞ்சிருந்தும்

வாலப் புடிச்சு ஆட்டுது.”

பட்டுக்கோட்டையின் சினிமாப் பாட்டுக்கு சரியான அர்த்தம், இப்பொழுது சண்முகத்திற்கு புரிந்தது.

ஏதோ பேச முயன்ற கோபாலையும் சன்னாசியையும் பார்த்து,

“இங்க எதுவும் பேச வேண்டாம் நம்ம எடத்துக்குப் போயி

எல்லாரையும் வச்சு பேசிக்குவோம்.”

சண்முகத்தின் முகத்தோற்றமும், சொல்லிய முறையும் அவர்களுக்கு ஏதோ ஒன்றைப் புரிய வைத்தது. எதுவும் பேச முடியவில்லை . பக்கத்திற்கு ஒருவராக நின்று கைளைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நகர்ந்தார்கள். அமைதியாக நடந்தார்கள்.

7

நடந்ததைச் சொல்லும் பொழுது, நேரடியாகப் பாதித்த விசயத்தை விவரித்த போது சண்முகத்தால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்து முடியவில்லை, அவனுக்குள் நடந்த மனப் போராட்டத்தை, எண்ண ஓட்டங்களை அத்தனையும் சொன்னான். முதலாளியை சரியாக அம்பலப்படுத்தினான். தன்னைக் கருங்காலியாக, துரோகியாக மாற்ற அவனது வறுமைக்கு விலை பேசியதை சொன்னான். ஒரு தலைவனாக பரிணமித்தான்.

இந்த அனுபவத்தின் மூலமாக எல்லோரும் பாடங் கற்றுக் கொண்டார்கள். முதலாளியைப் பற்றி இவன் வந்த முடிவிற்குத் தான் அப்பா மற்றவர்களும் வந்தார்கள். எல்லோரையும் கேவலப்படுத்தியதாக நினைத்தார்கள். சண்முகத்திற்கு ஏற்பட்ட உணர்வு மற்ற தொழிலாளர்களுக்கும் பரவி, கோபமாக வெளிப்பட்டது.

“எளிய மக்கள் தலையில் காசு

ஏறி மிதிக்குது அதை எண்ணியெண்ணி

தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது”

என்ற பட்டுக்கோட்டையின் பாடல் சரியாக இருந்தது.

“ராப் பிச்சகாரன் மாதிரில நெனச்சு வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கான். நாம என்ன பிச்சையா கேட்டோம்.”

எல்லோரின் சார்பாக அந்த மூவரும் பேசச் சென்று, அதனால் ஏற்பட்ட நிலைமையை பாதிப்பை, எல்லோருக்கும் ஏற்பட்டதாக நினைத்தார்கள் அந்த உணர்ச்சிகள் எல்லோரையும் மேலும் ஒற்றுமைப்படுத்தியது.

“எல்லா மொதலாளியும் ஒன்னுதான்னு தலைவரு சொன்னது சரியாப் போச்சு. மத்த மொதலாளிங்களோட பேசப் போறதா இவருஞ் சொல்றாரு. இவர மட்டும் நாம எப்படி உயர்வா நெனச்சோம்.”

அந்த மரத்தடி மேடையில் அங்குள்ள தொழிலாளர்கள் அத்தனை பேரும் இருந்தார்கள் கோபித்தார்கள் விவாதித்தார்கள்.

“தலைவரு பேசுன தெல்லாம் நெனச்சுப் பார்த்தா இப்ப நெறய விசயம் புரியுது.. நாம ஒழைக்காமலா நம்ம மொதலாளிக்கு இவ்வளவு சொத்து சேந்துச்சு, நச்சத்திர ஓட்டலு அது இதுன்னு எவ்வளவு சொத்து சேந்திருக்கு, என்னமோ தர்ம பிரவு மாதிரி என்னென்னமோ செஞ்சாரே! அதெல்லாம் எங்கெயிருந்து வந்துச்சு, எல்லாம் நாம ஒழைச்சதில இருந்து செஞ்சு, நம்ம கிட்டயே பேரு வாங்கிட்டாரு.”

“வெந்தத தின்னு விதி வந்தா சாவோம்னு இருந்துட்டோம். ஒரு வெவரமும் புரிஞ்சுக்காம கூமுட்டத்தனமா இருந்துட்டோம்.”

“சின்னப் புள்ளைங்களுக்கு மிட்டாயக் குடுத்து ஏமாத்தின மாதிரில இவ்வளவு நாளும் நம்மள ஏமாத்தியிருக்கான்.”

“நம்ம மில்ல விட மனோகரன் மில்லுல நெறய வசதி செஞ் சிருக்காங்களே ஏன்னு கூட யோசிக்காம இருந்துட்டோம்.”

“அட போப்பா …. என்னமோ அந்த மொதலாளியே செஞ்சு குடுத்த மாதிரில பேசுற. சங்கத்துல பேசி வாங்கியிருக்காங்க. நாமதான் மொதலாளி தோள் மேல கைபோட்டு பேசிட்டார்னா உச்சி குளுந்து போயி எதையும் யோசிக்கிறதில்லையே.”

“நம்ம மில்லுலயும் விழா நடத்துனாங்க. பெரிய பெரிய தலைவருங்க பகட்டா வந்து, மால மரியாதயோட பேசுனாங்க. ஆஹா – ஓஹோன்னு பேசி நம்மல ஏமாத்திட்டுப் போயிட்டாங்க. ஆனால் நம்ம தலைவரப் பாத்தா, நம்மள மாதிரியே இருக்காரு உள்ளதப் பேசுனாரு. நம்ம வாழ்க்கையில் முன்னேற வழியச் சொன்னாரு இவ்வளவு நாளும் ஆளப் பாத்து ஏமாந்தோம். இனி ஏமாறக் கூடாது.”

விமர்சனங்களும், சுய விமர்சனங்களும் நடந்தது. எதிர்காலப் பாதையை நோக்கி அடியெடுத்து வைத்தார்கள். “நடந்தது நடந்ததா இருக்கட்டும் அதிலிருந்து இப்ப நெறயா தெரிஞ்சுக் கிட்டோம். இனிமே நடக்கப் போறதப் பேசுவோம். என்னா செய்யலாங் கோபாலு?”

“இனிமே நல்லா யோசிச்சுத் தான் எதயுஞ் செய்யணும். அவசரப் படக்கூடாது ஆத்திரப்படக் கூடாது. நீ நெனக்கிறத சொல்லு சண்முகம்.”

“இது நமக்கு மட்டுமுள்ள பிரச்சனயில்ல. சம்பளங்கிறது. எல்லா மில்லுக்குமுள்ள விசயம். நாம மட்டும் பேசி, அதுபடி ஏதாவது செஞ்சு நடக்காம போயிருச்சுன்னா அது எல்லாரையும் பாதிக்கலாம். இது நல்லதில்ல …. நீங்களெல்லாம் என்ன நெனக்கிறீங்க?”

“நீ சொல்றது ரொம்பச் சரியாயிருக்கு, என்னாப்பா சொல்றீங்க?….” என்று எல்லோரையும் பார்த்து சன்னாசி கேட்கவும், மற்றவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

“அதனால இந்த விசயம் பொதுவா இருக்கிறதால இதப்பத்தி சங்கத்தில் பேசி முடிவு செய்யணும். எல்லாரும் சங்கத்துக்குப் போயி, நடந்த விசயத்தச் சொல்லுவோம். நமக்கு இப்ப கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி, அடுத்து என்ன செய்றதுண்ணு புரியாம இருக்கு எல்லா மில்லுத் தொழிலாளிங்களையும் ஒன்னாச் சேக்கணும். அதுக்கு சங்கத்துல பேசுறது தான் சரியானது. இனிமே எதாயிருந்தாலுஞ் சங்கத்தில் தான் பேசணும். நமக்குள்ள கட்டுப்பாடா இருக்கணும்.”

விவாதத்திற்கு இடமின்றி, ஏகோபித்த கருத்தாக இதை ஏற்றுக் கொண்டார்கள் ஆத்திரமும், கோபமும், கொந்தளிப்பும் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு சரியான திசை வழியில் அடியெடுத்து வைத்தார்கள். தத்தக்கா புத்தக்கா நடை பயிலும் குழந்தை கீழே விழுந்து மீண்டும் எழுந்து, பக்கத்திலுள்ள சுவரைப் பிடித்தேனும் நடக்க முயற்சிப்பதைப் போல் இவர்களும் சங்கத்தை நோக்கி, அந்த செம்மண் பாதையில் நடந்தார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top