இருட்டு

0
(0)

வக்கீல் பத்மனாதன் சொன்ன விஷயத்தை கணேசனால் இன்னும் நம்ப முடியவில்லை. மாதத்திற்கு ஒரு முறை வழக்கம் போல் வக்கீலை பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்த இடத்தில் பொசுக்கென்று அந்த விஷயத்தைச் சொல்லி விட்டார் பத்மனாதன். போனமுறை கணேசன் வந்த போதே ஒரு யோசனை சொல்லியிருந்தார். கோர்ட்டு, கேசு என்று அலைவதை விட, வருகிறவரை வரட்டுமென்று பேசிமுடித்து விடலாமென்பது தான் அந்த யோசனை. கணேசனுக்கு இதில் நம்பிக்கை இல்லையென்றாலும் கூட, சும்மா தலையாட்டி வைத்தான். இப்போது என்னடாவென்றால் ‘நமக்கு சாதகமாகவே பேசி முடித்து விட்டதாக’ச் சொல்கிறார் பத்மனாதன் என்பது தான் கணேசனின் வியப்புக்கு காரணம்.

“என்ன கணேசா… பேச்சயே காணோம்…” பத்மனாதனின் குரல் கேட்டு, யோசனையிலிருந்து விடுபட்டான் கணேசன்.

“ஒண்ணுமில்லீங்கய்யா… இப்படி படார்னு நா இப்ப இருக்கிற வீடு, பரம்பரையா வந்த வம்ச வீடு எனக்கேதான்னு சொன்னீகளே… அதான்… ஒண்ணுமே புரியலீங்க… “

“கணேசா… இப்ப நீ குடியிருக்கற குடிச வீடு ஒனக்கும், ஒங்கய்யா காலத்திலர்ந்து சுருளிப்பட்டி திராட்சத் தோட்ட வேலயோட காண்ட்ராக்டு ஒங்கண்ணணுக்கும்னு பேசி முடிச்சாச்சு. ஒனக்குத்தான் நீ இப்ப பாத்துக்கற கூலி வேலயே போதுமில்ல. நிம்மதியா ‘உஸ்’சுண்ணு உக்கார குடிச கெடக்கிறது பெரிய விஷயந்தே…” எங்கே பேச்சை வேண்டாமென்று விடுவாரோ என்ற பயத்தில் அவசரமாய் மறுத்தான் கணேசன்.

“அத நா குத்தஞ் சொல்லலீங்கய்யா… ஒங்களுக்கு புண்ணியமாப் போகும். எம் மகன், எம் பொஞ்சாதி எங்க வம்சமே ஒங்கள கும்புடும்யா. ஆனா… இந்த விசயத்த மாத்திப்பேச மாட்டாங்கெ அப்புடிங்கற என்ன நிச்சயம்ங்கறதுதான் என் சந்தேகம்…”. “அதப்பத்தின கவலய விடு கணேசா… நாந்தே எழுதி அவுக வக்கீலு முன்னாலயே கைநாட்டு வாங்கி வச்சிருக்கேல்ல. அந்த பேப்பரு பத்தரமா என்ட்ட இருக்கு. அந்தக் குடிச இனிமே கணேசனுக்கு, இத யாராலயும் மாத்த முடியாது. நீ தைரியமா போயி ஆக வேண்டியத பாரு…”

கணேசனுக்கு உற்சாகம் பொங்கி வழிந்தது. எப்போதோ காணாமல் போன விலையில்லாத பொருள் திரும்பிக் கிடைத்து விட்ட சந்தோசம். வக்கீல் போனது கூடத் தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

அப்படியே காற்றில் மிதப்பது போலிருந்தது. மகன் கண்ணன் பத்தாவது படிக்கிறான். தினமும் எங்காவது தெருவிளக்கின் கண்சிமிட்டுகிற வெளிச்சத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பான். வயதுக்கு மீறின அறிவு, கண்ணனை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைத்துவிட வேண்டுமென்பது கணேசனின் கனவு. இப்போது தானே வீடு சொந்தமாகி இருக்கிறது. இனிமேல் நாம் சம்பாதிப்பதையெல்லாம் கண்ணணுக்கே செலவழிக்க வேண்டும்!..

“ஒரு பான்பராக் கொடுங்க…” பக்கத்துப் பெட்டிக்கடையில் கேட்ட இளைஞனின் குரல் கணேசனைக் கலைத்தது. திரும்பிப் பார்த்தான். பெட்டிக்கடைக்காரர் ‘திரு திரு’ முழியோடு அங்குமிங்கும் தேடி, ஒரு மூலையிலிருந்து தகர டப்பாவிலிருந்த பான்பராக்கை கவனமாக கையால் மூடி நீட்டிக் கொண்டிருந்தார்.

கணேசன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். இருள் கப்பிக் கொண்டு வந்தது. தேனிப் பக்கம் மழை பெய்யும் போல, கம்பத்தில் அடிக்கிற குளிர் சொல்லியது.

“மணி ஆறுக்கும் மேல ஆயிருக்கும் போல…” கணேசன் முணுமுணுத்தவாறு நடந்தான். மனசுக்குள் இன்னும் மத்தாப்பாய் எண்ணச் சிதறல்கள், வீட்டில் ஒரு சின்ன பல்பு எரிந்தால் கண்ணணுக்கு உதவியாயிருக்கும். முதல் வேலையாக ஈபிக்கு போயி குடிசைக்கு கரண்டு இழுக்க வேண்டும். அப்புறம் போன வந்த பூச்சு வேலைகளெல்லாம் செய்ய வேண்டும். அதெல்லாம் விட மாசிக்குள்ள சுடலைமாடனுக்கு ஒரு கிடா வாங்கிவிட வேண்டும். ஆட்டின் விலை சட்டென நினைவுக்கு வர… இல்லையில்லை ஒரு சேவலாவது வாங்கி விட வேண்டும்…. நினைவுகளோடு தன் தெரு வந்து விட்டதை பார்த்தான் கணேசன். கண்ணணுக்கு எதாவது வாங்கிப் போக வேண்டுமே, சட்டைப் பாக்கெட்டில் கிழிந்த ஐந்து ரூபாய் பல்லிளித்தது. சரி வேண்டாம்; கரண்டு வரப் போவதை சொன்னாலே விடியும் வரை குதிப்பான் பிள்ளை. சிறிதும், பெரிதுமான வீடுகளுக்கிடையில் இருட்டுக்குள் குடிசை கண்ணில் பட்டது. இது என் வீடு எனக்கென்று ஒரு வீடு, நினைத்துப் பார்க்கவே இனித்தது.

அன்று இரவு முழுவதும் கண்ணன், வரப்போகிற கரண்ட்டையும், பல்பையும் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.

மணி எட்டாகி விட்டிருந்தது. இருப்பதிலேயே நல்ல சட்டையாகத் தேர்வு செய்து உடுத்திக் கொண்டான் கணேசன். கட்டம் போட்ட கைலி வேட்டியின் கிழிசலை, உள்பக்கமாக மறைத்துக் கட்டினான். கண்ணன் பள்ளிக்கூடம் போவதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் புகை மூட்டத்துக்கு நடுவே சுப்பு, சோற்றை கிளறிக் கொண்டிருந்தாள்.

“கண்ணா .. நாம் போயி கரண்டாபீசுக்கு எழுதி குடுத்துப்புட்டு வாரேன். நீ பள்ளிக்கொடத்துக்கு போயிட்டு வா.” கணேசன் சொல்லவும், கண்ணன் தலையசைத்தான். “நா கௌம்புறேன்” புகையைப் பார்த்து சத்தமாய் சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திராமல் சர சரவென்று நடந்தான் கணேசன்.

என்றைக்கும் இல்லாம் ஈபி ஆபிஸ் இன்று கூட்டம் இல்லாமல் கிடந்தது. கவுண்ட்ட ர் வரிசையில் ஒன்றிரண்டு பேர் மட்டும் நம்பரை சொல்லி பணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். கணேசனும் மூன்றாவது ஆளாய் வரிசையில் நின்று கொண்டான். புதியதாக கரண்டு இழுக்க யாரைப் பார்க்க வேண்டும் என்பது தெரியவில்லை. பணம் வசூலிப்பவரிடமே கேட்கலாமென்று தான் வரிசையில் நின்றான். முன்னாலிருந்த பெரியவர் கவுண்டருக்குள் கை நீட்டினார். கணேசனுக்கு ஒரே பதட்டமாக இருந்தது. என்ன சொல்வாரோ? எப்படியும் யாரையாவது பிடித்தாவது கரண்டு இழுத்தே ஆக வேண்டும். பெரியவர் நகர்ந்ததும், கணேசன் கவுண்ட்ட ருக்குள் குனிந்தான்.

“அய்யா… காளவாசத் தெருவுலர்ந்து வர்ரேங்க. வூட்டுக்கு புதுசா கரண்டு இழுக்கணும்ங்க…” உள்ளிருந்து வழுக்கைத் தலைக்காரர் உற்றுப் பார்த்தார். “வீட்டு வரி ரசீது இருக்கா?” கணேசன் பாக்கெட்டில் கைவிட்டு, துளாவி நைந்து போன ஒரு ரசீதை எடுத்தான்.

“கெஸ்தி ரசீது தானுங்களே… இருக்குங்க…” கவுண்ட்டருக்குப் பின்னாலிருந்து சத்தமாய் சொன்னார். “பின்னாடி சுத்தி ஆபீசுக்கு உள்ள வாய்யா…” கணேசனுக்கு சிலிர்த்தது. உடனே உள்ளே கூப்பிடுகிறார். கரண்டு எப்படியும் வாங்கி விடலாம். கண்ணன் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வரவேண்டும். எவ்வளவு பணம் செலவானாலும், கிடைக்க போகிற கரண்ட் மட்டுமே கணேசனுக்கு பெரிய எதிர்காலமாகத் தோன்றியது.

அலுவலகக் கட்டிடத்தின் முன்புறம் எதற்கோ தோண்டிப் போட்டிருந்தார்கள். மாதக் கணக்கில் மூடப்படாத பள்ளம் போல மண் சிதறி தூர்ந்து போயிருந்தது. கவனமாய்க் கடந்து அலுவலக முன் வாசலில் நுழைந்தான் கணேசன்.

உள்ளே ஒரு சில மேஜைகளில் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்து. வெளியில் ஜன்னலிருக்கும் திசையை மனதில் கணக்குப் பார்த்து, அந்த வழுக்கைத் தலைக்காரரை கண்டுபிடித்தான். ஆட்களுக்கிடையில், ஒரே மாதிரி மேஜைகளோடு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒன்றிரண்டு டேபிள்கள் காலியாகவும் இருந்தன. கணேசன் தயங்கி, தயங்கி தனக்குத் தெரிந்த ஒரே முகத்தை நோக்கி நடந்தான். பக்கத்து வீட்டு கொத்தனார் முருகனின் ஒன்றுவிட்ட சித்தப்பா இங்குதான் இருப்பதாகச் சொன்னார். இத்தனை பேரில் யாரென்று எப்படித் தெரியும்? யாரும் கணேசனை நிமிர்ந்து பார்க்கத் தயாராக இல்லை போலிருந்தது. வழுக்கைத் தலைக்காரர் மட்டும் அவ்வப்போது யாரையோ திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். கணேசன் அவர் முன்னால் பார்வைபடும்படி நின்றான். அப்பா… பார்த்துவிட்டார்.

“பேரென்ன?”

“கணேசனுங்க..” – அரும்பிய வியர்வையை புறங்கையால் தள்ளினான்.

“வீடு எங்கேன்னு சொன்ன..?”

“பஸ்டாண்டுக்கு புறத்தால… காளவாசல் தெருவுங்க..” அவருக்கு விளங்க வைக்கும் வேகம் கணேசனின் கையசைப்பில் தெரிந்தது.

“அப்ப சரி… அந்த ஏரியாவுல ஏற்கனவே நெறய்யா போஸ்ட் இருக்கு கரண்ட் எடுப்பதில் கனெக்சன் பிரச்சனை இல்ல…”

கணேசனுக்குள் இப்போதே பல்பு எரிந்தது. அவரே தொடர்ந்தார்.

“இங்கயிருந்து அதோ… அந்த ரெண்டாவது மேசை.. ஏ.இ… சொக்கலிங்கம்னு பேரு.. ரொம்ப தங்கமான மனுசன்… இப்ப வந்துருவாரு… அப்படி போயி அந்த பெஞ்சியிலே ஒக்காரு…” அவர் கை காட்டிய திசையில் நீளமான பெஞ்ச் ஒன்று தனியாக கிடந்தது. “சரிங்கய்யா..” ஏ.இ. மேஜையையே பார்த்தவாறு, நகர்ந்து போய் அதில் உட்கார்ந்து கொண்டான். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது.

கணேசனுக்கு அத்தனை ஃபேன் காற்றிலும் வியர்த்தது. இந்த மாதிரியெல்லாம் உட்கார்ந்து கணேசனுக்குப் பழக்கமில்லை. ஆபிஸை பார்க்க, பார்க்க எழுதிக் கொண்டிருப்பவர்களில் ஒருவனாக கண்ணனை ஆக்க வேண்டும். இந்த வாரம் சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையில் சண்முகம் வாத்தியாரிடம் இந்த வேலை பற்றி விசாரிக்க வேண்டும்.

கணேசனின் மனசு கிடந்து அடித்துக் கொண்டது. “சுடலமாட சாமீ… இந்த காரியம் மட்டும் நல்லபடியா முடிஞ்சா ஒண்ணுக்கு, ரெண்டு சேவலா நேந்து விடுறேன்…” கடிகார முட்களையும், மேஜையையுமாக மாற்றி, மாற்றி பார்த்துக் கொண்டேயிருந்தான் கணேசன்.


இருட்டுகிற நேரமாகியும் அப்பாவை இன்னும் காணவில்லை. கண்ணன் குடிசை வாசலிலேயே உட்கார்ந்திருந்தான். பத்து முறைக்கும் மேலாக அம்மாவிடம் கேட்டு, கேட்டு சலித்துப் போயிருந்தான்.

“அம்மா …”

“என்னடா…” சுப்பு உள்ளேயிருந்து பேசினாள்.

“அப்பாவ. ஏம்மா இன்னும் காணோம்?..” அம்மாவின் கோபம் உருள்கிற பாத்திரங்களில் தெரிந்தது.

“இப்ப சும்மா இருக்கியா… இல்ல பூச வேணுமா?” கண்ணன் திரும்பவும் தெருவை கவனிக்க ஆரம்பித்தான். இருட்டில் கணேசன் நடந்து வருவது தெரிந்தது.

“மா… அப்பா வந்தாச்சு…” கண்ண ன் குதித்தபடி தெருவுக்கு ஓடினான். கணேசன் களைத்துப் போய் சோர்வாய் இருந்தான்.

“அப்பா… கரண்டு என்னைக்குப்பா வரும்?” ஆவலாய் கேட்ட கண்ணனை பார்த்தவாறே வாசலில் அமர்ந்தான் கணேசன்.

“கரண்டு வெலயெல்லாம் கூடப் போகுதாம்பா… இன்னுங் கொஞ்ச நாளக்கி நீ சீமண்ணை வௌக்கிலே படி. அப்புறமா பார்க்கலாம்…” கண்ணன் முகம் வாடிப்போனது. கணேசனுக்கு மட்டும் கரண்ட் கொண்டு வராமல் விட ஆசையா என்ன? ஆபீஸில் கணேசன் பார்த்துப் பேசிய விஷயம் மீண்டும் நினைவிற்கு வந்தது.


அப்படி, இப்படி என்று ஏ.இ. சொக்கலிங்கம் வர மணி மூன்றாகியிருந்தது. சுடலைமாடசாமி தவிர கணேசனின் “நேத்திக்கடன்கள்” பிள்ளையாருக்கும், மாரியம்மனுக்கும் சமர்ப்பிக்கப்பட. ஏ.இ. வந்து நாற்காலியில் அமர்ந்ததும் கணேசன் அவர் முன்னே பணிவோடு நின்றான் “என்ன” என்பது போல் பார்த்தார்.

“புதுசா கரண்டு இழுக்கணுங்க…”

எதிரேயுள்ள நாற்காலியில் கணேசனை உட்காரச் சொன்னார் சொக்கலிங்கம். கணேசன் கூசியபடி நாற்காலியில் நுனியில் அமர்ந்தான்.

“சொல்லுங்க…” கணீர் குரல் சொக்கலிங்கத்திற்கு. “எம் பேரு கணேசனுங்க… கெழக்க காளவாசத் தெருவுல வீடு. ரொம்ப நாளா வம்பு வழக்குன்னு இழுபறில இருந்த வீடுங்க. எங்க அப்பாரு கட்டுனது. இப்பத்தான் எனக்குன்னு ஆச்சுங்க. கரண்டு வசதி தந்தீங்கன்னா எம்புள்ள படிப்புக்கு ஒதவியா இருக்கும்… பின்ன ஐயாதான் சொல்லணும்..” கணேசனுக்கு சுமை இறங்கி விட்டார்போல இருந்தது.

சொக்கலிங்கம் நிமிர்ந்து உட்கார்ந்தார்.“எல்லாம் சரி… கணேசன் வீட்டு வரி ரசீது இருக்கா?” கந்தலாகி பத்திரப்படுத்தியிருந்த ரசீதை, பூவைத் தாங்குவது போல நீட்டினான். அதனை வாங்கி சரிபார்த்தார்.

“சின்னச்சாமி… யாரு?” ரசீதைப் பார்த்துக் கேட்டார் சொக்கலிங்கம். “எங்கப்பாருங்க” கணேசனின் பதிலில் பெருமை பொங்கியது. அதற்குள் பக்கத்து டேபிளின் ஒல்லியான ஆபீஸர் சொக்கலிங்கத்தை கூப்பிட்டார்.

“சார்… உங்களுக்கு போன்… சீனியர் என்ஜீனியர் லைன்ல இருக்கார்..” – சொக்கலிங்கம் பதற்றமாய் எழுந்து ரிசீவரை வாங்கி, ஆங்கிலத்தில் பேசினார்.

கணேசனுக்கு தஸ் புஸ்ஸென்று பேசுவது புரியாவிட்டாலும், ஏதோ முக்கியமான விசயம் என்பது மட்டும் அவர்கள் பதற்றத்தில் விளங்கியது. ரிசீவரின் வாயைப் பொத்திக் கொண்டு கணேசனைப் பார்த்தார் சொக்கலிங்கம்.

“நீங்க போயிட்டு… நாளக்கி காலையில வாங்க… அது யாரு சீனிச்சாமியா, சின்னச்சாமியா அவரையும் கையோட கூட்டிட்டு வாங்க… அவரு கையெழுத்து இருந்தாத்தான் கனெக்சன் கொடுக்க முடியும்…” மீண்டும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் சொக்கலிங்கம்.

கணேசனுக்கு தலை சுற்றியது. இறந்து இருபது வருடமான அப்பாவை அழைத்து வருவதா? சொக்கலிங்கத்தையே உற்றுப் பார்த்தான் கணேசன்.

மீண்டும் ரிசீவரை மூடிவிட்டு திரும்பினார்

“இன்னும் என்னய்யா…?”

“இல்லீங்க… அப்பாரு செத்து ரொம்ப வருசமாச்சுங்களே..” சொக்கலிங்கத்துக்கு பற்றிக் கொண்டு வந்தது கோபம்.

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? அந்தாளு கையெழுத்து இல்லன்னா… ஒனக்கு கரண்டும் இல்ல… போயி ஆக வேண்டியதப் பாரு…”

“அது… அய்யா…” கணேசன் பேச ஆரம்பிக்குமுன்பே கையை நீட்டி வாசலைக் காட்டியபடியே, சொக்கலிங்கம் போனில் ஆழ்ந்தார்.

கணேசனுக்கு காலிற்கு கீழே பூமி நழுவுவது போலிருந்தது வெளிச்சத்தைத் தேடிய கணேசனின் கண்கள், இருட்டிக் கொண்டு வந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top