இரண்டு மூட்டை நெல்

5
(1)

கோபாலைப் பொருத்தவரை அன்றைய பிழைப்பிலும் மண் விழுந்தார்போல்தான். அந்தக் கிராமத்தில் நுழைந்தது பெரிய ரோதனையாய்ப் போயிற்று. மனசின் எரிச்சல் கப கபத்துக் கொண்டிருந்தாலும் மௌனமாய் அங்கு நடக்கும் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தான். தரகர் கருப்பையாவும் தன் வழக்கமான வழவழப்பையெல்லாம் அந்த வேளையில் மூட்டை கட்டிக் கொண்டு அமைதியாயிருந்தார்.

ஒரு புறம் கிழடு தட்டிப்போன கலப்பைகளும், மண்வெட்டியும், நார்க்கூடைகளும், மற்றும் சில எளிமையான விவசாயச் சாமான்களுமாய்க் கிடக்க, அதை ஒட்டினாற்போலிருந்த சிறிய கட்டுத் தரையில் ‘களை’யில்லாத இரண்டு காளை மாடுகள் அசைபோட்டுக் கொண்டிருந்தன. அந்தச் சிறிய வீட்டின் முன்புறமிருந்த இரண்டு சிறிய திண்ணைகளில் ஒருபுறத் திண்ணையில் கோபாலும் தரகர் கருப்பையாவுமாய் அமர்ந்திருக்க, மறுபுறத் திண்ணையோரமாய் இரண்டு மூட்டை நெல் போடுவதற்காக அமந்திருந்த வீட்டுக்காரனுடன், வீட்டுக்காரம்மாள்-அவன் மனைவி- ஆக்ரோஷமாய்ச் சண்டை செய்து கொண்டிருந்தாள்.

“என்ன நெனைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்றே? எல்லாம் உன் இஷ்டத்துக்கு அலையுறியா? இங்க பாரு கப்பலு ஓடுதுன்னா கஞ்சிக்கிருந்த நெல்லப் போடணும்னு ஆளக் கூட்டியாந்திருக்க…?” அநீதியைத் தட்டிக் கேட்பதைப் போல் அவள் ஆவேசமாய்க் குரல் விடுத்தாள்.

வீட்டுக்காரன் கொஞ்சம் அமைதியானவன் போலும். வுpட்டுக் கொடுக்கும் சுபாவம் அவனுள் நிறையவே இருந்தது. ‘அசிங்கம்’ பண்றாளே என்ற படபடப்பும், நாலு பேர் முன் எடுத்தெறிந்து பேசுகிறாளே என்ற குறுகுறுப்புமாய் தணிந்து தணிந்து பதில் கூறிக் கொண்டிருந்தான்.

இத்தனை சண்டைக்கும் சலனமில்லாமல், தனக்கே உரித்தான பாணிபோல் இரண்டு சிறுவர்கள் ஒழுகிய மூக்கை துடைத்து விட்டபடி, கேப்பைக் கூழில் கவனம் செலுத்தினர். பருவமடைந்தவள்போல் தோன்றிய ஒரு பெண், கட்டுத்தரையின் கீழ் பதனமாய்ப் பாத்திரம் தேய்ப்பதிலிருந்தாள். அம்மாவும் அய்யாவுமாய் சண்டை செய்வதில் கூச்சமுற்றிறுந்தாள் போலும். அவளுடைய அங்க நெளிவுகளே அவள் இந்தக் களேபரத்தை விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டிற்று.

“ஏன் இப்படிக் கூச்சல் போடுறே…? கஞ்சிக்குத்தான் இப்ப போடுறது போக, ரெண்டு மூட்’டை நெல்லு மிச்சமிருக்கே! அதோட இன்னம் ரெண்டு மாசத்துல அறுவடை நெல்லு வந்துருமில்ல…” அவளுக்குப் புரியாத உண்மையைத் தெளிவாக விளக்குபவன் போல் பதட்டமின்றிக் கூற முனைந்தான் வீட்டுக்காரன்.

அவள் இன்னும் வேகமாக இடைமறித்தாள். “நீயெல்லாம கறிபுளி பாத்துக் கொழம்பு வச்சுக் குடும்பம் நடத்துனாவுல்ல தெரியும். ரெண்டு மாசத்துல நெல்லு வரப்போகுதாம்… அது வரைக்கும் ரெண்டு மூடை போதுமாம். இருக்கிற புள்ள குட்டிகளோட வேற செலவுகளும் இருக்கேங்கிற நெனப்பிருந்தா இப்படி நெல்லுக்கு ஆளக்கூட்டியாந்திருப்பியா? நெல்லு வித்துக் காசக் கைல முடிஞ்சுக்கிட்டு ஒண்ணு ரெண்டா போட்டுத் தள்ளலாம்னுதான துடிச்சிட்டிருக்க… எதனாச்சும் ஒண்ணுக்கு ரெண்டா பெருக்கியிருந்தாவுல்ல ஒனக்கு அருமை தெரியும்” சுற்றுச் சூழலையே மறந்த வண்ணம் அவள் காளியாகிக் கொண்டிருந்தாள். கணவனுக்கு குடும்பப் பொறுப்பே இல்லையென்பது போல் அங்கே பறை சாற்றிக் கொண்டிருந்தாள். அங்கே அவளுடைய ராஜாங்கம் தானோ என்று கோபாலும் நினைத்தான்.

தரகர் கருப்பையா, ஊடே புகுந்து கத்தினார். “இப்ப ஒங்க ராமாயணத்தைக் கேக்குறதுக்கு நாங்க வரல. இப்ப நெல்லு போடப் போறீங்களா இல்லியா? அதச் சொல்லுங்க மொதல்ல. அப்புறம் நாங்க போனப்புறம் நீங்க தொயந்து சண்ட போடுங்க…” பொறுமையிலந்து போயிருப்பதை அவரது சொற்கள் புலனாக்கினாலும், அதனூடே அவர்கள் நெல் போட வேண்டுமே என்ற ஆதங்கமும் படிந்திருந்தது.

தரகர் கருப்பையாவின் பேச்சு வீட்டுக்காரம்மாளுக்கு பேச்சு உணர்வைத் தூண்டியதோ தெரியவில்லை, வேகமாய் நகர்ந்து வந்து அவருக்கும் கோபாலுக்கும் மையமாய் நின்று கொண்டு, “என்ன கருப்பையா அண்ணே நீங்க சொல்றது…! வெவரம் புரியாம நீங்களும் கோவிக்கிறீங்களே…!” என்றவள் கோபாலைப் பார்த்து “தம்பி! நீங்களே சொல்லுங்க. இருக்கிறது நாலு மூட்ட நெல்லு இனி வர்ர போகத்த நம்பி இதுலயும் ரெண்டு மூட்டைய வித்துட்டு அப்புறம் நெல்லுக்குத் தொணாந்து கிட்டிருக்கவா…? என்ன தம்பி நாஞ் சொல்றது? நா இல்லாம அவரு பேசிட்டாருங்கறதுக்காக இப்ப ஒங்களுக்கு அளந்து விட்டுட்டு நாளைக்கு ஒங்களத் தேடி வந்து வீட்டுக்கு ரெண்டு மூட்ட நெல்லு வாங்கித் தாங்கன்னு அலையத்தான் முடியுமா? நெல்லு இருந்தாலாச்சும் ரெண்டு கஞ்சித் தண்ணிய காய்ச்சியாவது பொழுத ஒப்பேத்தலாம். வித்துப் போட்டு என்ன செய்ய?” என்றவள் கோபாலை இன்னும் தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டு, கொஞ்சம் சாந்தமாகவும் சரிக்கட்டுவது போலவும் சொன்னாள். “தம்பீ! இப்ப எப்படியோ நடந்து போச்சு. ஒங்க வேல வெட்டியக் கெடுத்தாப்ல கூட இருக்கும். ஆனா ரெண்டு மாசத்துல அறுக்கறப்ப வீட்டுக்குப் போக சேர்றத ஒங்களக் கூப்பிட்டே போடுறேந்தம்பி! கொஞ்சம் பொறுத்துக்கங்க. அந்த மனுசனுக்கும் ஒரெழவும் புரிய மாட்டேங்குது. வேட்டி, துணி உடுத்து மாத்துக்கு இவருக்கு மட்டுமா இல்ல… எல்லாத்துக்கும் அந்த நெலமதா… ரெண்டு எடுத்துப் போடலாம்னுதா நெல்லு விய்க்கணும்னுக்கிட்டிருந்தாரு…” என்று நிறுத்தியவள் கொஞ்சம் விகசிப்புடன், “ஒரு குழி நெலத்த வச்சு ஆறு ஜீவனுக பொழப்போட் வேண்டியிருக்கு தம்பி! இதுல நெதானமில்லாட்டி என்னாகுறது தம்பீ! சமைஞ்ச பொண்ணுக்கும் ஒரு சீர் செனத்தின்னு பாக்க முடியாட்டியும் அபப்ப்ப உடுத்துமாத்துக்காச்சும் ஒரு சேலை துண்ன்னு எடுத்துப் போட வக்கில்ல…” அவளால் மேற்கொண்டு பேசமுடியில்லை. பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அவளது பெண் புறமாய்த் திரும்பிக் கொண்டு லேசாய் விசும்பினாள். அவளின் இமையோரங்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தது. தேய்த்து முடிந்த பாத்திரங்களுடன் அந்தப் பெண் வீட்டிற்குள் போகையில் ஆங்காங்கே கிழிசலாகி விட்டிருந்த அவளின் சேலையும் ரவிக்கையும் கோபாலின் கண்களையும் உறுத்தியது. வருத்தமாய்த் தலை தாழ்த்திக் கொண்டான்.

அன்றைக்கு அவர்கள் போடுவதாயிருந்த இரண்டு மூட்டை நெல்லை வாங்கிப் போனால் அவனுடைய அன்றைய வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியான மாதிரிதான். விலைபேசி ‘அட்வான்ஸ்’ கொடுத்து விட்டதற்காக அவன் தன் பக்கம் நியதயம் இருப்பதாய்ப் போராடி நெல்லை அளந்து கொண்டு போகலாம். ஆனால் அவர்களுக்குள் மேலும் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே செல்வதற்கு தானும் காரணமாகி விடுவதா என்று யோசித்தான்.

தரகர் கருப்பையாவிற்கு இத்தகைக்குப் பிறகும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையிருந்தது. நெல்லை அளந்து விடுவார்களென்று. நெல்லும் அருந்தலாகி விட்டது. வியாபரிகளும் இந்த ஒருமாத காலமாக வராமல் அவரும் ரொம்பத்தான் திண்டாடிப் போயிருந்தார். இன்றைக்குத்தான கோபால் வந்தான். ரெண்டு மூட்டை நெல்லும் போடுவதாகத் தகவல் வந்தது. அளந்து விட்டால் அவருக்கு அதிகபட்சம் மூன்று ரூபாய் வரை கிடைக்கலாம். அன்றைய செலவைச் சரிக்கட்டுவதற்கு ஏதுவாகும். மதில்மேல் பூனையாகிவிட்ட அந்தச் சூழ்நிலைக்காக அவர் வருந்திக் கொண்டிருந்தார்.

கோபாலைப் பற்றி இன்னும் சொல்லப் போனால் சின்னதான நெல் வியாபாரம்தான் அவனுக்கும் அவனது விதவைத் தாய்க்குமாய் உதவி வருகிறது. தினமும் ஒன்றிரண்டு மூடைகள் வாங்கிப்போய் தாயிடம் ஒப்படைத்தாள் அவள் அதை வீட்டிலேயே வேக வைத்துத் தருவாள். இவன் அதை அரிசியாக்கிக் கடைகளில் அல்லது தெருக்களில் திடீர் கடைவைத்து விற்றுக் காலம் போயிற்று. ஆனாலும் இந்த ஒரு மாத காலமும் நெல்லுக்கு ரொம்பவும் தான் அருந்தலாய்க் கழிந்தது. நாளுக்கு இரண்டு மூடையாய்க் கிடைத்து வந்த நிலைமாறி வாரத்திற்கு இரண்டாய்க் கரைந்தது. பெரிய ‘முதலை’களுக்கு முன் இந்தக் ‘கொசுறு’கள் எம்மாத்திரம்? அந்த வகையில் பத்து நாட்களுக்குப் பின் இன்றைக்கு இரண்டு மூட்டைகள் கிடைத்தது பற்றி கொஞ்சம் கூடுதலாகச் சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தான். ஆனால், எதிர் மாறான நிலைமை.

வீட்டுக்காரன் முழுசாய் முகத்தைக் தொங்கப் போட்டுக் கொண்டு திண்ணையில் சாய்ந்திருந்தான். அவர்கள் முன் தன்னை மனைவி நன்றாய் மூக்கறுத்து வட்டதாய் வேதனை. அத்தோடு, தான் இத்தனை உழைத்தும் தனக்குக் குடும்பப் பொருப்பில்ழல என்று சாடி வழட்டாளே என்ற கவலை. கோபாலையும், தரகர் கருப்பையாவையும் நிமிர்ந்து நோக்கும் திறனின்றி அவர்களுக்கெவ்வித முகாந்திரமும் சொல்ல இயலாதவனாய்க் குறுகிப் போயிருந்தான். தான், நெல் பேசி ஆட்களை அழைத்து வந்ததற்து மதிப்பில்லாத போது, இனி எல்லாவற்றையும் மனைவியே முடித்துக் கொள்ளட்டும் என்பது போல் அவன் நிலை.

“சரிங்கம்மா, அப்ப நாங்க கௌம்புறோம். ஏதும் பின்னால போடுறதா இருந்தா கருப்பையாண்ணேங் கிட்டச் சொல்லி விடுங்க…” என்றவாறு எதையும் மனதில் போட்டுக் கொள்ளாதவன் போல் திண்ணையை விட்டு எழுந்து கொண்டான் கோபால். சுpக்கல் லேசாய் அவிழ்வதாய் வீட்டுக்காரன் கொஞ்சம் தலையை நிமிர்த்தினான். அவன் முகத்தில் கொஞ்சம் பிரகாசம் இழையோடத் துவங்கிற்று.

தரகர் கருப்பையாவிற்கு கோபாலின் நிலை உடன்பாடற்றதாய்த் தோன்றியது போலும். அவருமட எழுந்து கொண்டு வீட்டுக்காரனையும் அவன் மனைவியையும் உஷணமாய்ப் பார்த்தவாறு, “ஏய்யா சுப்பு இப்படியெல்லாம் பண்ணுவேண்ணு நா நெனைக்கலே… வேற வேலை வெட்டியில்லாமலா நாங்க அலைறோம்? இப்படி ரெண்டு பேரையும் இழுத்தடிச்சுட்டியே! இப்ப அட்வான்ஸ் பண்ணுணதுக்கு வேற யாருமுன்னா விட்டுட்டுப் போக மாட்டாங்க… இங்க பெரிய கலாட்டாவே..” –அவர் முடிக்குமுன் கோபால் வேகமாக குறுக்கிட்டான். அவன் கண்களில் கோபம் மின்னியது. தேவையற்றதைப் பேசுவதாய் அவர் மேல் வெறுப்புக் கொண்டு “சரிதே விடுங்கண்ணே பெரீய்ய கலாட்டாவக் கண்டீங்க… எல்லாம் சூழ்நிலை சரியாயிருந்தா இம்புட்டும் நடக்காது. பண்ணையாரு மாதிரி அடுக்கி வச்சுக்கிட்டா போடலேங்கிறாங்க… நீங்க வேற… குடும்பக் கஷடம் தெரியாம… வாங்க போவோம்..” என்றபடி வீட்டுக்காரம்மாளிடம் அடவான்ஸ் தொகை ஐந்து ரூபாயைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, வெளியேறினான். துரகர் கருப்பையாவும் மேற்கொண்டு பேசாமல் அவனைத் தொடர்ந்து வீதியில் இறங்கினார்.

இன்னும் கொஞ்ச நேரம் வேண்டுமானால் வீட்டுக்காரம்மாள் இது விஷயமாய்க் கணவனுடன் சண்டை போடலாம். ஆனால் அது நீடிக்காது என்று நினைத்த போது கோபலின் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இரண்டு மூட்டை நெல்”

  1. Sakthi Bahadur

    எருது நோய் காக்கைக்கு தெரியாது என்பது பழமொழி.
    ஆம் கழுத்து ஓடிய நுகத்தடியை தாங்கி வண்டி இழுத்து அதில் ஏற்பட்ட புண்ணை கொத்திக் குதறி தின்னும் காக்கைக்கு அந்த எருதின் வலி தெரியுமா என்ன…?

    ஒன்றை ஒன்று ஒன்று அழித்து வாழ்வது ஐந்தறிவு சீவன்களுக்கு வேண்டுமானால் வாழ்வியலாக இருக்கலாம்.

    ஆனால் ஆறறிவு மனிதன் ஒருவனை ஒருவன் கொத்தி குதறி வாழ்வது எப்படி வாழ்வியலாக இருக்க முடியும்…? ஏழ்மையிலும் சகமனிதனின் வறுமையை நிலையை ஏற்றுகொள்ளும் நெல் வியாபாரி கோபால் மனிதத் தன்மைக்கு ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: