இரண்டாம் சாமத்துக் கதை

0
(0)

அவனது மீசையில் நரை விழுந்திருப்பதை அப்போதுதான் கவனித்தான் இவன். ஒன்றல்ல இரண்டுமட்டுமல்ல நாலைந்து ஏழெட்டு பத்துப்பன்னிரண்டு அதற்கும் மேலிருக்கலாம்.

அந்நரையினக் கண்டதும் ஏனோ அவனை அடிக்கத் தோன்றவில்லை இவனுக்கு. முகத்தில் குத்திய தனது முஷ்டியை அப்படியே தளர்த்தி விரலகளை நிமிர்த்திக் கொண்டான். கொத்தாய்ப் பிடித்திருந்த அவனது தலைமுடியிலிருந்து தனது இடது கரத்தினையும் விடுவித்துக் கொண்டான்.

அப்போதும் அவன், இவனைவிட்டு நீங்கவில்லை. நின்ற இடத்திலேயே நிலைத்திருந்தான். இன்னமும் பணி நிறைவடையவில்லை எனக்காத்திருப்பது போன்ற அவனது அந்தக் கோலம் இவனை அங்கே அதற்குமேல் நிற்கவொட்ட வில்லை. தோவியுற்றவனின் மனநிலையில் இவன் அவ்விடத்திலிருந்து நகர்ந்தான். இவன் திரும்பமாட்டான் என உறுதிசெய்ய சில கணம் காத்திருந்த அவன், தான் வழக்கமாய் உட்காருகிற தெருமுனையிலிருக்கும் அந்தப் பெரிய குத்துக்கல்லில் சென்று  அமர்ந்து கொண்டான். அடிவாங்கிய இடங்களை விரல்களால் தட்டிவிட்டும், துடைத்துக் கொண்டும், தோல் பெயர்ந்த இடத்தில் எச்சில்தொட்டு வைத்தபடியும் தனது இருக்கையில் புட்டம் நன்கு பொருந்த உட்கார்ந்து கொண்டான்.

வீடுநோக்கித் திரும்பிய இவனுக்கு, அவனது எதிர்வினையற்ற அந்தப்போக்கு மிகுந்த ஆயாசத்தையும் ஒருவிதமான மனக்கிலேசத்தையும் உருவாக்கியது. எப்படி இத்தனை பலவீனனாய் ஆகிப்போனோம் ? வீட்டுக்குள் நுழைய முடியாமல் மனம் பேதலித்தவன் போல எதோ உளறினான். வாசல் கதவுவரை சென்றவன் திரும்பி அவனைப் பார்த்தான். அவன் வழக்கம்போல தனது ஆசனத்தில் அமர்ந்தபடி கைவிரல்களைத் திருகிக்கொண்டும் தனக்குள் உரையாடியபடியுமிருந்தான். அவனது தன்னிரக்கமிக்க அச்செய்கை இவனை மென்மேலும் இம்சித்தது. யாரிடமோ காட்டவேண்டிய வீராப்பையும் கோபத்தையும் இந்தபூச்சியிடமா செலுத்தினோம் ? பொறுக்கவில்லை; நின்று நிதானித்தான். செய்த தவறுக்கு என்ன பிராயச்சித்தம் ? மன்னிப்புக் கேட்டாலோ காலில்விழுந்தாலோ அவனுக்கு விளங்கப் போவதில்லை. ஒரேவழி பணம்தருவதுதான் அதைமட்டுமே அவனால் உணரமுடியும். சட்டென சட்டைப் பைக்குள் கைவிட்டு மீதமிருந்த ஐம்பது ரூபாய்த்தாளை எடுத்துக்கொண்டு மறுபடி அவனிடம் வந்தான்.

இவனது வருகையைக் கண்ட வினாடியில் அவன் இருக்கையை விட்டு எழுந்து நின்றான். இவன் அருகில் நெருங்க நெருங்க தனது உடம்பை அவன் இறுக்கிக் கொண்டு, சற்றே வளைந்து நின்று  முதுகைத் திருகி அடிவாங்க ஏதுவாக நின்று கொண்டான்.

“என்னசார், இன்னிக்கி ஒங்க முறையா . .! நடக்கட்டும் நடக்கட்டும் “ மாடிவீட்டு பால்பண்ணைக்காரர் பைக்கில் இவர்களைக் கடக்கும்போது வண்டியை நிறுத்தி சொல்லிவிட்டுக் கடந்தார். பின்னால் உட்கார்ந்திருந்த அவரது மனைவியோ “ஊரே சேந்து அடிச்சாலும் ஒக்காந்த எடத்தவிட்டு நகர மாட்டேங்கிறானே..!” என புலம்பினார்.

“மொதல்ல ஆ ஊ ன்னு அலர்றானா ன்னு பாரு . .” அவர்களின் பேச்சு தொடர்ந்து காற்று வெளியில் பயணித்தது.

இவன் அருகில் வந்ததும் அவனது தோள்ப்பட்டையினைத் தொட்டுத் திருப்பினான். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் முன்பக்கமாய்த் திரும்பினான். அவன். முகத்தில் அறைவிழுமா, அல்லது அடிவயிற்றில் குத்தப்போகிறானா இல்லை மர்ம ஸ்தானமா . எதுவென்றாலும் சரியே .என்பதுபோல உடலை லகுவாக்கிக் காத்திருந்தான்.

அவன் எதிர்பாத்தபடியே கன்னத்தில் முதல் அறையினை துவக்கினான் இவன். ஆனால் அது தொடரவில்லை. அடியும் பலமாயில்லை செல்லமான ஒருதட்டுப் போலவே விழுந்தது. அடுத்து அவனது சட்டைப் பையை விரித்து, கொண்டுவந்த ஐம்பது ரூபாயைத் திணித்தான். பைக்குள் சில்லரைக்காசுகளும் சிறுசிறு கற்களும் கிடந்தன. பணம் கீழே விழாதிருக்க உள்புறமாய் ஒருவிரலால் அழுத்தித் திணித்தபோது சுளீரென விரலில் ஏதோ தைத்தது. பையை விரித்துத் துழாவினான். உள்ளே முழு பிளேடு ஒன்றும் கிடந்தது.

அவன் பூர்வீகம் யாரும் அறியாதது. அவனே அறிவானா என்பது கேள்விதான். இவன் இந்தத் தெருவிற்குக் குடிவந்த நாளிலிருந்து அந்தக் குத்துக்கல்தான் அவனது இருப்பிடம். மழை, பனி, வெய்யில் என முக்காலத்துக்கும் இடம் பெயரக் கண்டதில்லை. அதுபோல வெய்யிலில் வாடுவதோ, பனியில் நடுங்கியோ எவரும் பார்த்ததில்லை. மழைக்குக்கூட எதையும் போர்த்துவது கிடையாது. அதிகபட்சமாய் கைகளிரண்டையும் மார்பின் குறுக்காகப் போட்டுக்கொள்வான்.

ஒருசில நாட்களில் அவன் காணாமல் போவதுண்டு. ஒருநாள் அல்லது இரண்டு நாள்தான் வந்துவிடுவான். அப்படியான சமயங்களில் அவனது போக்கிடம் சம்பந்தமாக தெருவிற்குள் சர்ச்சை எழும். ’சுடுகாட்டில் போய் படுத்துக்கொள்கிறான். என்பது சிலரது கணிப்பு. நகராட்சி குப்பைக்கிடங்கே அவனது வாசஸ்தலம்  அங்கே போய் கழுதையைப்போல புரண்டு கிடப்பான் எனச்சிலர். மேற்கே மலையடிவாரத்தில் குகை ஒன்றில் குடியிருப்பதாக இன்னும்சிலர்.  அதெல்லாம் கிடையாது தெற்கே கொட்டக்குடி ஆற்றில் மணல்படுகையில் பள்ளம் பறித்து யாருமறியாமல் ஒரு பெண்ணோடு குடித்தனம் நடத்துவதாகவும் கதைகள் பரப்பினர்’. ஆனால் யாரும் அவனை அப்படிப்பட்ட இடங்களில் கண்ட சரித்திரமில்லை சாட்சியுமில்லை.

அவன் யாரிடத்தும் வாய்பேசியது கிடையாது. அவனுக்கு பேச்சு வருமா என்பதே எவருக்கும் தெரியாது. வீதியில் சிறுபிள்ளைகள் விளையாடுகிறபோது விளையாட்டில் அவன்மீது கல் எறிந்து விளையாடும் ஆட்டமும் ஒன்றை உருவாக்கினார்கள். அந்த ஆட்டத்தில். அவர்கள்தான் அவனைப் பேசவைப்பதற்காக ஆளுக்கொரு பாஷையில் அழைப்பார்கள். “ஏய் கிறுக்கா, “ என ஆரம்பித்து. “டொங்கா, டுபாங்கா, சட்டி, சவுண்டி, டிவிண்டி என விதவிதமாய்ச் சீண்டுவதும், கல்லால் அடிப்பதும், இன்னமும் சில தைரியசாலிகள் அவனுக்குப் பக்கமாய் வந்து அவனைக் கிள்ளுவதும், உதைப்பதும்கூட உண்டு. எந்தஒரு செயலுக்குமே பெரிதாய் அவனிடமிருந்து எதிர்வினை வராது. உடல்மொழியின் வழியாகவும், கண்களில் ஒளியினைக் கூட்டியும் குறைத்தும் காட்டி தன்னுடைய மொழியினை வெளியிடுவான். இன்னும் சில அரிதான போதுகளில் தனது மஞ்சள்கறை ஏறிய பற்களை ஈ எனக்காட்டி இளிப்பான் அவ்வளவுதான்.

அக்ரஹாரத் தெருவில் வசிக்கும் பிச்சாண்டி பாகவதர்தான் அவன் பேசுவது மட்டுமல்ல, பாடுவதாகவும் புரளியினை பரப்பினார்.

மாசத்தில் பலநாள் வெளியூர்களுக்கு சென்று காலட்சேபம் செய்பவர் அவர். அப்படி ஒவ்வொருநாளும் கச்சேரி முடித்து ஊர் திரும்ப இரண்டாம் ஜாமம் துவங்கிவிடும். பஸ்சை விட்டிறங்கி ஒருபர்லாங்தூரம் நடந்து வந்து வீடு நுழையவேண்டும். முன்னெல்லாம் நாய்களின் தொந்தரவு அதிகமாய் இருக்குமாம். அதற்காகவே கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார். அது ஏதோ ஒரு ஊரில் யாரோஒரு ஆச்சாரியார் மறந்து வைத்து விட்டுப்போனது என பாகவதருக்குக் கொடுத்தார்களாம். கடைசல் செய்து பித்தளைப் பூண் அணிந்து நல்ல கனமாகவும் ஒருஅங்குல சுற்றளவில் தடிமனாகவும் கைக்கு அடக்கமாயும் இருந்தது.

அது கைக்கு வந்ததிலிருந்து பாகவதருக்கு நாய் பயம் கிடையாதென்றார். தண்டம் கைப்பிடியிலிருந்தாலே ராஜநடைதான். அப்படியொரு கம்பீரமும் தேஜசும் வந்து சேர்ந்து விட்டது அவருக்கு.

“நைட் நேரத்தில நடந்து வராட்டி ஆட்டோ பிடிச்சு வரலாம்ல சாமி . உசுருக்கும் உடைமைக்கும் எதுக்கு ரிஸ்க்கு . .?“

“அய்யோ .  ஆட்டோக்காரன் என்னோட ஒருநாள் கச்சேரி பணத்த கொடக் கூலியாவுல்ல கேக்கறான். அடியேன் , ஏழை பாகவதன் .”

மேலும் ”தண்டம் கைலிருப்பதால் ஒருநாய்கூட தன்னை விரட்டுவதில்லை” என்றார்,

“சாமி, இப்பத்தான் நகராட்சியிலருந்து தெருவில திரியற அத்தன நாய்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு செஞ்சுட்டாங்களே . ! “ என சில இளவட்டங்கள் அவரோடு வம்பிழுப்பார்கள்.

“படவா, மனுசா என்ன செஞ்சாலும் அதுக்கு ஆப்போசிட்டா அல்லது ஈக்குவலா பகவானும் ஒருவழி வெச்சிருப்பான். நாம ஒருகாரியத்த முடிச்சிட்டம்னு காலரத் தூக்கிவிட்டுத் திரியப்படாது அதத்தான் பெரியவா ஒருகதவச் சாத்துனா இன்னொண்ணு ஓப்பனாகும்னு சொல்வா “ என்றவர், ”நான் சொல்லவந்ததே வேற , ஊருக்குள்ள அத்தன நாய்களும் திரியுதுகள். ஆனா அந்த குறிப்பிட்ட நாழிமட்டும் ஏந்திரிச்சு அவன்ட்டப் போயிருதுகள்.” என அவனைப்பற்றி யாரும் அறியாத சேதியினைச் சொல்லலானார். அவர் வருகிற அந்த நேரத்தில் நாய்களோடு அவன் அளவளாவிக் கொண்டிருப்பா னாம். ” அந்தக் கோலத்தப் பாக்கணுமே . அடஅட, குத்துக்கல் மேல அவன் ராஜாதி ராஜனப்போல அட்டணக்கால் போட்டுருக்கான். மொகத்தில அவ்வளோ களை – தேஜஸ். கையிலே புல்லாங்குழல் இல்லாத ஒண்ணுதான் குறை. இருந்தா சாட்சாத் கிஷ்ணபரமாத்மாதான். அவனுக்குக் கீழே வட்டமா கோபிகா ஸ்திரிகள் போல இந்த நாய்கள் படுத்துக் கிடக்குதுகள். அப்போதான் அவன் அதுகள்கிட்ட பேசறான். பெருஞ் சத்தமெல்லாங் கிடையாது. ஸ்படிகமான மொழி. சுவர்க்கோழி பேசுமே கீசுகீசுன்னு அதக் கேட்டவா ளுக்குப் புரியும். அப்படியொரு சன்னமான பேச்சொலி. ‘க்ருஷ்ணாங்கறான், பரதாங்கறான், தர்மான்னு உருகறான்’ தெருவில யார்வரா, போறா, என்ன நடக்குது எந்தப் பிரக்ஞையும் கிடையாது. அப்படியொரு இன்வால்மென்ட் . . அத கேக்கற நமக்குத்தான் ஒரு நடுக்கம் வரது. நானே ஒருநாள் நமஸ்கரிச்சேன்னாப் பாருங்களேன். “ உள்ளம் பூரிக்கச் சொன்னார்.

“அப்படின்னா அவனை ஒம்ம கச்சேரிக்கு அழச்சிட்டுப் போலாமே . .” என அவரது மொழியிலேயே பேசியவர்கள், ‘எங்குட்டோ சாமி ஒத்தைல வந்து அவன்ட்ட சிக்கி, ஒண்ணுக்குப் போயிருக்கார். அத பாலீசா பேசறார்’ என தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.

பாகவதரோ இன்னும் சீரியசாக, “எல்லோரையும் எல்லாத்துக்கும் இட்டுண்டு போகமுடியாதே சாமி. “ என பதில் சொன்னார். கச்சேரியில் அவர் பார்க்காத கிண்டலா, கேலியா . .

அப்படி பிரமித்துப்பேசிய அவரே ஒருநாள் போலீசை அழைத்து வந்து அவனை போலீஸ் ஸ்டேசனுக்கு இழுத்துச் சென்றார்.

“கச்சேரிக்கு அவரோட பாகவதம் பண்ண கூட்டிப்போவார்னு பாத்தா வெலங்கு மாட்டி இந்தக் கச்சேரிக்கு அனுப்பிட்டாரே . சாமிகிட்ட முழிப்பா இருக்கணும்”

முந்தினதினம் வழக்கம்போல பாகவதர் கச்சேரி முடித்து பஸ்சைவிட்டு இறங்கி ஊருக்குள் நுழைகையில் தெருவில் அவன் பிறந்தமேனியோடு நின்றிருந்தானாம். அதுமட்டுமில்லாது அந்தக் கோலத்துடனேயே அவரை வீடு வரையிலும் விரட்டிச் சென்றானாம்.

“அப்பறம் ? வேற எதும் செய்யலியா .” வழக்கம் போல இளவட்டம் அவரிடம் கேள்வி கேட்டது.

“யேண்டா . நட்ட நடுச்சாமத்தில ஓடஓட வெரட்டினான்னு சொல்றேன், இதுக்கு மேல என்ன பண்ணனும். .? வீடு பக்கத்தில இருக்கப்போய் தப்பிச்சேன் . ! “

“அதுக்கெல்லா இவர் சரிப்படமாட்டார்னு விட்டுட்டான் .போல “ அவர்கள் எதையோ       சொல்லி சிரித்துக் கொண்டார்கள்.

போலீஸ் வந்து அவனுக்கு உடையணிவித்து விட்டார்களாம். அவர்கள் ஸ்டேசனுக்கு அழைத்தபோது எந்தவித முரண்டும் பண்ணாது ஆட்டுக்குட்டி போல நடந்து சென்றானாம்.

பாகவதர் ’அவனொரு முஸ்லீம் தீவிரவாதி’ என புகார் தந்திருக்கிறார். அதனாலோ என்னவோ அவனை பிடித்த இடத்திலேயே ஆளுக்கு நாலுபோடு போட்டனர். ஸ்டேசனில் வந்து பெயரைக் கேட்டு அடித்தபோதெல்லாம், விழுகிற ஒவ்வொரு அடியையும் உள்வாங்குவதுபோல ’தம்’ கட்டி உடம்பை சுருக்கிக் கொண்டானாம். அடியை நிறுத்திய சமயத்தில் ஹூங்காரமாய் ஒலி எழுப்பி பதிலளித்திருக்கிறான். அந்த மொழியை உள்வாங்கும் திறன் அங்கிருக்கும் எவருக்கும் இல்லை.

ஒருவாரத்தின்பின் பழையபடி குத்துக்கல்லில் தனது ராஜ்ய பரிபாலனத்தைத் துவக்கி விட்டான். அதற்குள் பாகவதர் தெருவைக் காலி செய்து விட்டு வீடுமாறிப் போயிருந்தார்.

அவன்மீது பரிதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ, அச்சப்பட்டோ, தன் வீட்டில் வீணாகிறதே என கவலைப்பட்டோ அல்லது அவனுக்குத் தருவதன்மூலம் கிட்டுகிற தர்மசீலன் எனும் பெயருக்கு ஆசைப்பட்டோ தம்வீட்டில் மீந்ததை அங்கிருக்கும் அனைவரும் அவனுக்கு உண்ணத்தருவார்கள். அவன் எப்போதுமே யார் எது கொடுத்தாலும் வேண்டாமெனச் சொன்னது கிடையாது, (அடி உட்பட) அதுபோலவே வருகிற அத்தனை பொருட்களையும் வாங்கி தெருவில் பரப்பிவைத்துக் கொள்வான். அவற்றை நாய், கோழி மட்டுமல்லாது பன்றிகளும் வந்து கும்மாளமிட்டு பங்கிடுகிற போது வீதியே மாறிப்போகும்.. அததனை ஜீவன்களுக்கும் அன்னாதாதாவாக நிற்பான். அவன் எப்போது சாப்பிடுவான் என்ன சாப்பிடுவான் என்பதும் புதிராகவே இருந்தது. பணத்தை மட்டும் சட்டைப்பையில் வைத்து கொள்ளத் தெரிந்திருந்தது.

இந்நிலையில்தான் அவன் ஞானியாயிருக்கலாமோ எனும் சந்தேகமெல்லாம் வந்தது. ஞானிகளுக்குத்தான் உண்பது உறங்குவது என்ற பிரச்சனை இல்லையே.

“ நல்லகடை ஒண்ண பாத்து வச்சிருப்பான்போல,”

“ ஒரு நேரம் சாப்பிட்டா, பலநாள் பசியாத உணவா இருக்கும்போல . .”

“ புலி சிங்கம் மாதரி மாமிசப் பட்சினியா இருப்பானோ. . “

“ ஆ மா, பல்லெல்லாம் பாரேன், ஊசிஊசியா கூராத்தான இருக்கு . .”

அதுமட்டுமல்லாது முகத்தில் மீசைமட்டும் வளர்ந்து, தாடிவளரப் பார்த்ததும் இல்லை. இது ஒரு அதிசயம். தாடிவளரா சாமியா . அல்லது சட்டைப் பையிலிருக்கும் பிளேடால் தினமும் சவரம் செய்து கொள்கிறானா. .?

சட்டைப் பையிலிருக்கும் பணம்,காசை மட்டும் அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும், அதில் எதோ கறை இருப்பதுபோல ஒவ்வொரு நாணயத்தையும் எடுத்துத் துடைத்துத் துடைத்து பையில் போட்டுக் கொள்ளுகிற விசித்திரமான செயலும் அவனிடம் இருந்தது. ரூபாய்த்தாளைக்கூட உள்ளங்கையில் எடுத்து அதனை பிருஷ்டத்தில் வைத்துத் தேய்தேய் என தேய்த்ததில் தாள்கள் கிழிந்துபோயின. சிலவற்றை எச்சில் துப்பியும் துடைப்பான். அது ஏதோ ஒருநேரமென்றால் பரவாயில்லை. அவனுக்கு அதுதான் வேலை என்பதுபோல பலநேரம் அதுதான் நடக்கும். ஊரெல்லாம் நின்று வேடிக்கை பார்த்தாலும் அதுபற்றி விசனம் கொள்வதில்லை. யாரும் பறித்துக் கொள்வார்களோ என்ற பதட்டமும் கிடையாது.

அந்த நேரம் யாராவது கைநீட்டி காசைக்கேட்டால் முதலில் கேட்டவரை முறைத்துப் பார்ப்பான், எதிராளி அவனைவிட பலமாய் முறைத்தால் கொடுத்து விடுவான். பெரியவர்கள் யாரும் அப்படிச் செய்யமாட்டார்கள். சில சுட்டிப்பையன்கள்தான் அடிப்பது போலவும் குத்திவிடுவது போலவும் மிரட்டுவதுண்டு. இரவு நேரத்தில் அவனிடம் ஒருசில குடிமகன்களும், போக்கிரிகளும் அபகரிப்பதுண்டு. அந்தசமயம் அவனும் மூர்க்கமாய் எதிர்ப்பான் போலிருக்கிறது. பணம் அபகரிக்கப்பட்ட நாளில் அவனுக்கு உடம்பில் காயமோ, வீக்கமோ இருக்கக் காணலாம்.

அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் ஏதேனும் ஒருகாரியமாய் வெளியில் செல்லும் போது ஆண்களாயிருந்தாலும் பெண்களாயிருந்தாலும் சரி, அவனுக்கு கையில் இருப்பதை தந்துவிட்டுப் போவது வழக்கமாகி இருந்தது. ராசிக்காகவா, அல்லது தர்ம சிந்தனையா, போகிற காரியம் சிறக்கவேண்டும் என்கிற வேண்டுதலா . அப்படியுமில்லாமல் போகிற போக்கில் கைநீட்டி தடை போல தானாய்க் கேட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வா . .? எந்தக் கோணத்திலோ அது பழகிப்போனது.

இவனும் அதுபோலவே வெளியில் இறங்குகிறபோது அவனைச் சந்திக்க மறப்பதில்லை. அது வேலைக்குப் போவதாயிருந்தாலும், விருந்தாடியாய் வெளியூர் செல்வதானாலும் சுங்கச்சாவடியில் செலுத்துவதுபோல கையிலிருப்பதை தந்துவிடுவான். வாங்கிப் பழக்கப்பட்ட கையாதலால் இவன் வீட்டுவாசலைவிட்டுக் கீழிறங்கும்போதே அவன் தனது ஆசனத்திலிருந்து இறங்கித் தயாராய் நிற்பான்.. இருவரது முகமும் வெட்டிக்கொள்வதுபோல மின்னிமறையும். இன்று ஏனோ அவனது முகம் இவனை எதோவொரு இடத்தில் குத்திக் கிழித்தது. அதுதான் ஆவன்மீதான கோபத்திற்குக் காரணமோ . . ? . .

சமீபகாலமாக இவனது வீட்டில் மின்சாரத்தின் தேவை அதிகரித்து விட்டிருந்தது ஆரம்பத்தில் வெறும் விளக்குகளும் மின்விசிறியும் மட்டுமே இருந்தகாலத்தில் இணைப்பு வாங்கியது. இப்போது மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், வாஷிங்மெசின், தவிர மின்சார அடுப்பு, தேய்ப்புப்பெட்டி, சவரம் செய்வதுவரை எல்லாமே மின்மயமாகி இருந்தபடியால் கூடுதலாய் ஒரு மின் இணைப்பு வாங்கவேண்டிய தேவை வந்தது.

அயல் தேசத்திற்குக் கூட தனியாளாய்ச் சென்று வந்துவிடலாம். அரசு அலுவலகத்திற்கு அப்படிச் செல்லும் தைரியம் இன்னும் மக்களுக்கு வரவில்லை . . அந்த நியமத்தின்படி இவனும் நண்பர் ஒருவரை துணைக்கு வைத்து விண்ணப்பம் ஒன்றை எழுதினான். ஆனால் அதனை அலுவலகத்தில் சேர்ப்பிக்கத்தான் முடியவில்லை. ஒருமாதமாகியும் வாங்குவதற்கு காலம் தாழ்த்தினார்கள். ’ஏ ஈ. லீவு, கிளர்க் டேபிள் காலி, ஆட்கள் கேம்ப், எல்லோரும் இருந்தால் கம்யூட்டர் ரிப்பேர்.’ கடைசியில் இவனது மாமனார் ஒரு அனுபவசாலியை அனுப்பிவைத்தார். அவர் அங்கிருந்த ஒரு கடைநிலை ஊழியரைப் பிடித்தார்.

அவர் வந்ததும் இவன்மேல் முதலில் பரிதாபப்பட்டார். “ பாவமா இருக்குசார், ரெம்பநாளா அலயறீங்க . .! “ இவன் அலுவலகம் நுழைந்த நாள் முதல் வேவுபார்த்திருப்பன் போலத் தெரிந்தது.

“ ஆ மா தலைவா, நீங்க பாத்து முடிச்சு விடுங்க . .” அனுபவசாலி கடைநிலை ஊழியரின் தோள்மீது கைபோட்டார். “ ஓரமாப் போய்ப் பேசுவம்” ஊழியரை கண்சிமிட்டி அழைத்தார்.

“ சார், இதில ரகசியமே கெடையாது. சிங்கிள்பேஸ்க்கு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கி ரசீது போடணும், ஏஈ க்கு ஐநூறு, கிளர்க் டேபிளுக்கு, உள்ளேயிருக்க நாலுபேருக்கு, அப்பறம் மீட்டர் மாட்ட வாரப்ப ஹெல்ப்பர், லையன்மேன், ஃபோர்மேன்  .என்று இயல்பாயும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் யாரையும் தவறவிட்டு விடாமலும் பட்டியல் சமர்ப்பித்தான்.

அனுபசாலிக்கு பொறுமை இல்லை. இதுபோல இன்னும் பலகாரியங்களுக்கு அவர் உதவி செய்யப் புறப்பட வேண்டியிருந்தது. “ மொத்தமா அமௌண்ட் சொல்லீடு தலைவா, கையெழுத்து வாங்கறது அதுஇது எதுன்னாலும் ஒம்பொறுப்புத்தான்.”

“ சார், எல்லார்ட்டயும் அஞ்சாயிரம் வாங்குவம். சார் அப்பிராணி ஆளாத் தெரியராரு.. அவருக்காக ஒரு எறநூரு கொறச்சி நாலு, எட்டுநூறு குடுத்துருங்க . .” கொஞ்சமும் தயக்கமில்லாமல் சொன்னான்.

“அநியாயமா இல்லியா .. ஆபீஸ்ல கட்டவேண்டியதக் காட்டியும் மூணுமடங்கு லஞ்சமா  .” இவன் குமுறினான்.

“ லஞ்சம்னு சொல்லக்கூடாது சார். .செலவு. ரெண்டே நாள்ல வீட்ல லைட் எரியும் சார் ”

இவனிடம் அப்போதைக்கு அத்தனை பணம் இல்லை எனத்தெரிந்ததும், கடைநிலை ஊழியரை இவனது வீட்டில் போய்ப் பார்க்கச் சொன்னார் அனுபவசாலி.

“ வீடு தெரியுமா     ” இவன் அயர்ச்சியுடன் கேட்டான்.

“ சார் நீங்க மலைமேல குடிசைபோட்டுக் குடியிருந்தாலும் ஷார்ப்பா வந்து நிப்பார் பாருங்க . .”

சொன்னது போலவே சரியான நேரத்துக்கு வீட்டுக்குவந்து பணத்தைப் பறித்துக் கொண்டார். பின்னும் தாகம் அடங்கவில்லை போலும் குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டார். குடித்துவிட்டு படியிறங்கியவர், ” சார் ஒரு அம்பதுரூவா சேன்ஞ்ச் இருக்குமா . வண்டிக்கி பெட்ரோல் தீந்திருச்சு . “ விரைப்பாய் நின்று கேட்டார்.

இவனுக்கு வந்த ஆங்காரத்திற்கு அளவில்லை. கையை ஓங்கியவன் பைக்குள்விட்டு பணத்தை எடுத்து நீட்டினான்.

“ நாளைக்கு வயர இழுத்துக்கட்டி உடனே சர்வீஸ் குடுத்தரலாம் சார் . “

மனசெல்லாம் புண்ணாய்ப் போக இற்றுப்போன தக்கையாய் வெளியில் வந்த இவன், புகைவிட்டு ஆற்ற கடைக்கு நடந்தபோதுதான் தற்செயலாய் அவனை அடிக்க நேர்ந்தது.

மறுதினம், இவன் காசுதர, அவனும் வாங்கி பையில் போட்டுக்கொண்ட நிகழ்வில் சராசரி இந்தியப் பிரஜைகளைப் போலவே அடிவாங்கிய அவனும் அடிகொடுத்த இவனும் ராசியாகிப் போனார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top