இனி

0
(0)

பந்தலில் கட்டியிருந்த வாழை மரத்தை வெட்டி எறிந்தார் இப்ராகீம். மகனையே வெட்டியது போல் தலைவேறு முண்டம் வேறாக விழுந்தது.

“இவனுக்கெல்லாம் ….. ஒரு கல்யாணம் ……?”

அடுத்த மரத்தையும் வெட்டினார். தோரணங்களைப் பிடித்து கோபமாக இழுத்தார். பந்தலைப் பிய்த்துக் கொண்டு வந்தது.

“எல்லாம் இவளால வந்தது…. சாகறதுக்குள்ள அரும மகனுக்கு கல்யாணத்த பாக்கணுமா?…… பாத்துட்டீல்ல?…. போ……. போயிச்சா…”

சத்தம் வீடு முழுக்கக் கேட்டது. உள் திண்ணையில் உட்கார்ந்திருந்த வர்கள் தரையைப் பார்த்தும், சுவரைப் பார்த்தும் உட்கார்ந்திருந்தார்கள். மூத்த மகன் அப்துல் சலாம் விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்திருந்தார். அவருக்கு இதில் கொஞ்சம் இஷ்டமில்லை. எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். கடைசியில் கட்டாயத்தில் வேண்டா வெறுப்பாக வந்தார். இவரது மனைவி நஜ்மா கடைசி வரையிலும் சம்மதிக்கவில்லை. கொழுந்தன். கல்யாணத்திற்கு வர விட்டால் நன்றாக இருக்காது. வீட்டு மருமகள் இல்லாமல் கல்யாணம் நடப்பது வீட்டுக்கு அசிங்கம் என்று கூப்பிட்டு வந்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு குழந்தை பிறந்த ஒரு வருடம் கழித்து அண்ணன் மகளைப் பார்க்க என்று இவன் போயிருக்கிறான். நல்ல வேட்டி சட்டை உடுத்தி, கையில் ஒரு பையோடு போயிருக்கிறான்.

குழந்தையை தூக்கிக் கொஞ்சினான். பையைத் திறந்து கவுனை எடுத்து குழந்தைக்குப் போட்டு விட்டான். பிஸ்கெட் பாக்கெட்டை கையில் கொடுத்தான்.

இவர்களுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. திருந்தி விட்டானா என்பது தெரியவில்லை. திருந்தி வந்தால் நல்லது தான். வெறுப்பாக நடந்து கொள்ள வேண்டாம். ஆனாலும் இவன் அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடும் ஆளும் கிடையாது. அப்துல் சலாமுக்கு ஒரே குழப்பம் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

மதியம் சாப்பிட்டு விட்டு குழந்தையுடன் விளையாடினான். வெளியில் தூக்கிக் கொண்டு போனான். கடை வீதியில் சுற்றி இருப்பான்

போலிருக்கிறது. வெகு நேரம் கழித்து கையில் ஒரு பொம்மையுடன் திரும்பினான். குழந்தையும் அவன் தோளில் தூங்கி விட்டிருந்தது.

குழந்தையை வாங்கி தொட்டிலில் போட்டு நஜ்மா ஆட்டி விட்டாள். குழந்தை சுகமாகத் தூங்கியது.

சாயந்திரம் ஆனதும் சினிமாவுக்கு கிளம்பினான். கொண்டு வந்த பையில் நடு துண்டை மட்டும் எடுத்து, பெரிய டேபிளில் வைத்து விட்டுப் போனான்.

தம்பி திருந்தி வந்திருப்பது மதிழ்ச்சியாக இருந்தது. அவன் வந்த பிறகு சேர்ந்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று காத்திருந்தார்கள். மணி ஒன்பது, ஒன்பதரை ஆகியது. பத்தும் ஆகியது. தம்பி வரவில்லை. நேரம் ஆக ஆக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பதினொன்றும் ஆகியது. நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.

அப்துல் சலாம் பையை எடுத்துப் பார்த்தார். அதில் ஒரே ஒரு பையிருந்தது. வைத்து விட்டு உலாவினார். லேசாக ஒரு பொறி தட்டியது. தொட்டிலுக்குப் போய் கவுனை விலக்கி குழந்தையின் இடுப்பை பார்த்தார். இடுப்பு மொட்டையாக இருந்தது. கட்டியிருந்த தங்கக் கொடியைக் காணவில்லை. இரண்டு பவுனில் செய்தது. குழந்தையை தூக்கி தொட்டிலை உதறிப் பார்த்தார்கள். கிடைக்கவில்லை திடுக்கென்று இருந்தது. இருவரும் பேயடித்தது போல் நின்றார்கள்.

அது இன்று வரையிலும் வலித்தது. அதை என்ன செய்தான் எங்கு போனான் என்பதும் தெரியவில்லை. நாலைந்து வருடம் கழித்து அம்மாவுக்கு கடிதம் எழுதினான். இந்த அம்மா மூக்கை சிந்திப்போட்டு எழுது புலம்பியது.

பிய்த்துப் போட்ட தோரணங்களும், வெட்டிப் போட்ட வாழை மரங்களும் கிடக்க இப்றாகீம் ராவுத்தர் வெளித் திண்ணையில் உட்கார்ந்தார். மொட்டைத் தலையிலும், தாடியிலும் வேர்வை வடிந்தது. மூக்கு நுனியில் சொட்டாய் விழ பெரு மூச்சு உஷ்ணமாய் வெளிப்பட்டது.

“அவன ராத்திரியே வெட்டிப் போட்டிருக்கணும். இவ்வளவுஞ் செஞ் சதுமில்லாம புதுப் பொண்ணுட்ட வலயலக் கேட்டு வம்பு பண்ணியிருக்கானே …… என்ன கொழுப்பு? ……. பித்தலாட்டம்?…. விடியங்குள்ள எந்திரிச்சு என்ன பண்ணிப்புடுவேன்னு நிக்கிறானே ….. எல்லாம் அவ குடுத்த செல்லம் …. மொதல்ல அவள வெட்டணும்.”

ஆத்திரத்தில் உடம்பு ஆடியது. அரிவாளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

இனி வரட்டும் அவெ …. ஒரே வெட்டா வெட்டிப் போடுறேன்….

என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டு மருமகள் அசரப் தலை கவிழ்ந்து இருந்தாள். தப்பை சொல்லவும் கண்டிக்கவும் முடியாத நிலை. தப்பு என்று பார்த்தால் இந்தக் கல்யாணமே தப்பு தான். இவர்களின் மகனைத் திருத்த இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இதை யார் சொல்வது? கல்யாணப் பெண்களைப் பற்றி யார் கவலைப் படப்போகிறார்கள். இவர் பேசுவதோ தவறை சொல்வதோ கௌரவமாக இருக்காது. வாய் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

இந்த மருமகள் திருமணக் கோலத்தில் இருக்கும் போது அவன் திடீரென்று தங்கையின் கல்யாணத்தை கேள்விப்பட்டாலும். புது வேட்டி சட்டை எடுக்கப் பணம் கேட்டான். பள்ளி வாசலிலும் நிக்காஹ் நடக்கும் பெரிய வீட்டிலும் இவர்கள் வேலை மும்முரத்தில் இருந்தார்கள். வீட்டைப் பூட்டி விட்டு எல்லோரும் இங்கு வந்து விட்டதால் இவனைக் கவனிக்க முடியவில்லை.

எல்லாம் நடந்து விருந்து பரிமாறும் போது இவனும் புது வேட்டி சட்டை உடுத்தி வந்தான். அதைப் பார்த்தவுடன் அண்ணன் அப்துல் சலாத்திற்கு திடுக்கென்று இருந்தது. வேலை அவசரத்தில் அப்புறம் உடுத்திக் கொள்ளலாம். என்று இருந்திருக்கிறார். அதை இவன் போய் மாட்டிக் கொண்டு வந்திருக்கிறான்.

“ஏண்டா வீடு பூட்டி இருக்கே எப்படிடா எடுத்த?” நெஞ்சு பதறக் கேட்டார்.

“அது என்ன தேசிங்கு ராசன் கோட்டையா? எனக்கு மேல ஒரு பாத இருக்கு…. கீழ ஒரு பாத இருக்கு.” சொல்லிவிட்டு விரைப்பாக நடந்து. போனான். பக்கத்தில் இருந்தவர்கள் சிரித்தார்கள்.

விருந்து முடிந்து பெண் மாப்பிள்ளையை அனுப்பி வைக்கும் நேரம். அவசரமாக நடுவர் வந்து இப்றாகீம் ராவுத்தரை கூப்பிட்டுக் கொண்டு போனார். போய் பார்த்ததும் இப்றாகீம் ஆடிப்போனார். சாக்கடையில் இவன் விழுந்து கிடந்தான். சாராயவாடை மூக்கை துளைத்தது. சட்டை கிழிந்து, உடம்பெல்லாம் காயம். வாயிலும் ரத்தக் கழிவு. கூப்பிட்டு வந்தவர் அவனை இழுத்துப் போட்டு, துடைத்து, சந்து மறைவில் படுக்க வைத்தார். பெண் மாப்பிள்ளையை அனுப்பி வைத்து விட்டு, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லி காரியத்தைப் பார்த்தார்கள். இதெல்லாம் இந்த மருமகனுக்குத் தெரியாது.

“என்னையே குத்திப் போடுவீன்ல நின்னான்? இவன

வளத்ததுக்குக் தண்டன! அல்லா ஹத்தாலா இப்படியெல்லாம் எழுதி வச்சிருக்கானே !”

வீட்டுக்கு உள்ளே இருந்து மூக்கைச் சிந்தும் சத்தம் மட்டும் கேட்டது. திரைக்குப் பின்னால் எந்த அசைவும் தெரியவில்லை. எல்லோரும் கொலை பட்டினியில் கிடந்தார்கள். கல்யாண வீடு மையத்து வீடு போல் ஆகியிருந்தது. திண்ணையில் உட்கார்ந்திருந்த ஏழெட்டுப் பேரும் யோசனையில் மூழ்கி அசையக் கூட மறந்து இருந்தார்கள்.

வீட்டுத் திரை லேசாக அசைந்தது. இவர்கள் அரைக் கண்ணில் பார்த்தார்கள். திரை விலகி புதுப்பெண் வெளியில் வந்தாள். எல்லோருக்கும் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் இப்படி வருவது கிடையாது. ஆண்கள் கூடியிருக்கும் இடத்தில் ஏதாவது சொல்ல வேண்டும். என்றால் திரைக்குப் பின்னால் நின்று பேசுவார்கள். புதுப் பெண் இப்படி வருவது நடக்கக் கூடியதல்ல.

வீட்டுக்குள்ளேயே நடக்கவும் வெட்கப்பட்டு முக்காட்டில் முகம் மறைத்து, அதுவும் பத்தாது என்று தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பது வழக்கம். அடக்க ஒடுக்கமான பெண் என்று பெருமை பேசிக் கொள்வார்கள். புதுப்பெண் எனப் பணிவிடை செய்யவும் மற்ற பெண்கள் இருப்பார்கள். கைபிடித்துக் கூப்பிட்டுப் போவார்கள்.

ஆண்கள் நன்றாகப் பார்த்தார்கள். புதுப்பெண் தான் துப்பட்டா போர்த்தாமல் பட்டுச் சேலையில் முக்காடு போட்டு நின்றிருந்தாள்.

வாழ்க்கையைப் பறிகொடுத்து, வாழாமலேயே பறி கொடுத்து விட்ட அவலம். இது ஆண்களுக்கு உறைக்க நெஞ்சு ட….. டப்…… என்று அடித்துக் கொண்டது.

முக்காடு மூடியிருக்க தலையை உயர்த்தினாள்.

மீண்டும் பரபரப்பு. ஏதாவது கேட்டால் யார் பதில் சொல்ல முடியும்? என்ன கேட்கப் போகிறாளோ? அரண்டு போய் பார்த்தார்கள்.

“மாமு …… எனக்கு என்ன செய்யப் போறீங்க?”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top