இது ஒரு ரவிச்சந்திரனின் கதை (சுகந்தியின் கதையும் கூட)

0
(0)

இதோ இரவு ஒரு மணிக்கு தன் வீட்டு வாசல் முன்பு நிற்கக்கூட முடியாமல் போதையில் தடுமாறிக்கொண்டு, “சுகந்தி” என்று குழறிக்குழறி தன் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் இந்த ரவிச்சந்திரனை கதைசொல்லி உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறார்.

நாற்பது வயதான ரவிச்சந்திரன் தன்னை ஒரு கிரிமினல் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொள்வதில் பெருமையடைபவன். மரியாதைக்குறைவாக ரவிச்சந்திரனை அழைக்க வேண்டும் என்று கதை சொல்லி நினைக்கவில்லை. கதை சொல்லியைவிட ஏழு வயது சிறியவன் என்ற முறையிலேயே இந்த உரிமையை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு அவர் உங்களைக் கேட்டுக் கொள்கிறார். ரெவினியூ டிபார்ட்மெண்டில் குமாஸ்தா உத்தியோகம் பார்ப்பதாகச் சொன்னாலும் அவன் நாள் முழுவதும் இருப்பது சூதாட்ட விடுதிகளில்தான். சுற்றிலுமிருக்கிற எல்லா மனமகிழ்மன்றத்திலும் அவன் வருகை புரிந்து பல நாட்கள், சில நேரம் பல வாரங்கள் கூட குடியிருந்திருக்கிறான். இதுநாள்வரை அவனுடைய மனைவி குழந்தைகளை மட்டும்தான் சூதில் பணயம் வைக்கவில்லை. இதனால் தன்னை தர்மரை விட உத்தமன் என்றும் சொல்லிக்கொள்வான். ரவிச்சந்திரன் இல்லையென்றால் சூதிற்கும் மதுவுக்கும் வாழ்வே கிடையாது.

சாதாரணமான உயரமும் மென்மையான முகமும் கொண்ட அவன் யாருடனும் மிகச்சுலபமாக பழகிவிடுவான். சூரியனுக்குக் கீழே உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவான். தன்நுட்பமான மதியினால் எல்லோரையும் வசியம் செய்யவும், அவர்களை அவனுடைய திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் செய்வான் ரவிச்சந்திரன். அவனுடைய அத்துமீறல்கள், அவன் அவர்களை அநியாயமாகப் பயன்படுத்துவது எல்லாம் தெரிந்தாலும் அவனுக்கு எதிரே அவனை மீறியோ எதிர்த்தோ எதுவும் பேசமாட்டார்கள். அப்படி ஒரு வசீகரமான மொழி ஆளுமையும் உடல்மொழியும் கொண்டிருந்தான். ஏனென்றால் இந்தக் கதைசொல்லியே பலமுறை விருப்பமின்றியே அவனுடைய விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை கதைசொல்லி முன் உணர்ந்தே இதையும் குறிப்பிட விரும்புகிறார்.

ஏற்கனவே நீங்கள் இந்தக் கதைசொல்லியைப்போல ஏமாந்திருந்தாலோ அல்லது கடன் கொடுத்திருந்தாலோ அதற்கு கதைசொல்லி பொறுப்பாக முடியாது என்பதை அறிவிக்க விரும்புகிறார். ஆனால் ஒருவேளை அவனிடம் ஏமாந்த பணத்தை வசூலிப்பதற்காக நீங்கள் அவனைத் தேடிக் கொண்டிருந்தால் அதற்கு வேண்டுமானால் இந்தப் பிரதியின் வழியாக உதவ முடியும். அதற்கு நீங்களும் இந்தப் பிரதியினுள்ளே கதைசொல்லியின் வரிகளூடே அலைய வேண்டும். அப்படி அலையும்போது வேண்டுமானால் நீங்களும் அவனும் சந்திக்கிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதனாலெல்லாம் அவனிடமிருந்து கொடுத்த கடனை வாங்கிவிடலாம் என்று தப்புக் கணக்கு போடக் கூடாது. அதே நேரம் நம்பிக்கையிழக்கவும் கூடாது என்று கதைசொல்லி சொல்வதைக் கேட்டு நீங்கள் குழம்பிப் போய்விடக் கூடாது. ஏனென்றால் கதைசொல்லியே கொஞ்சம் குழம்பித்தான் போயிருக்கிறார்.

ஒரு வேளை நீங்கள் இந்தப் பிரதிக்குள் வர விரும்பாமலேயே அவனைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசையுள்ளவரானால் அதற்கும் கதைசொல்லியிடம் பதில் இருக்கிறது. ஆனால் அந்தப் பதில் உங்களுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம், என்று கதைசொல்லி உங்களிடம் முன்னெச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்.

ரவிச்சந்திரன் கடன் வாங்குவதில் மட்டுமல்லாமல் யாரைப் போல் வேண்டுமானாலும் கையெழுத்து போடும் வல்லமை உள்ளவன். பெங்களூரில் இவனால் வசியப்படுத்தப்பட்ட ஒரு வங்கி மேலாளர் இவனுடன் சேர்ந்து காசோலை மோசடி செய்ய முயற்சித்து போலீஸில் மாட்டிக்கொண்டார். அரசு உத்தியோகத்திலிருப்பவர்களிடம் உள்ள மிகப் பிரதானமான பலகீனம் அவனுக்குத் தெரியும். எவ்வளவுதான் சம்பளம் கிடைத்தாலும், சரி. இனாமாக, அன்பளிப்பாக, லஞ்சமாக ஒரு ரூபாய் கிடைத்தால் போதும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. இது ஏதோ கதைசொல்லியின் மிகைப்படுத்தல் என்று நினைக்க வேண்டாம். ரவிச்சந்திரனே கதைசொல்லியிடம் சொல்லிய விவகாரங்கள்தான் இவை.

ரவிச்சந்திரன் நான்குமுறை போலீஸில் சிக்கியிருக்கிறான். இரண்டு முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறான். ஆனால் எல்லாமே சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் அவ்வளவுதான். இதுவரை எந்தப்போலீசும் அவனை ஒரு அடி கூட அடித்ததில்லை. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. இதே போல்தான் கதைசொல்லிக்கும் இருந்தது.

நீதி வழுவாத நம் நீதித்துறையிலுள்ள ஒரு நீதிபதிக்கு ஐம்பத்தியாறு அங்குல திரை கொண்ட தொலைக்காட்சிப் பெட்டியை அன்பளிப்பாகக் கொடுத்து, ஒரு முன்னெச்சரிக்கை சான்றிதழ் வாங்கி வைத்திருந்தான். அதில் நூறு ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துப் பெற்ற மருத்துவச் சான்றிதழும் இணைந்திருக்கும். அவை இரண்டும் அவன் ஒரு இதய நோயாளியென்றும், உடல் ரீதியான எந்தத் துன்புறுத்தலும் கூடாது என்றும் முரசறைந்து கொண்டேயிருந்தன.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. இப்படித்தான் அவன் அனைத்துப் புகார்களிலிருந்தும் வழக்குகளிலிருந்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தான். பெரும்பாலான அவனுடைய வாழ்க்கை சூதாட்ட விடுதிக்குள்தான் கழிந்தது. ஒருமுறை உள்ளே சென்றால் குறைந்தது மூன்று நாள் தங்கியிருப்பான். குறையக்குறைய போதை ஏற்றிக்கொண்டே விளையாடுவார்கள். அவனும் தோற்போ ஜெயிப்போ எல்லாப் பணத்தையும் அங்கேயேதான் சூறை விடுவான். திடீர் திடீரென்று உடம்பில் கொஞ்சம் தினவு எடுத்தால் ஞாபகம் வந்த மாதிரி வீட்டுக்கு வருவான்.

இதையெல்லாம் வாசித்தவுடன் அவன் மனைவியையும் குழந்தைகளையும் பற்றிய உங்கள் யோசனையை கதைசொல்லி வரவேற்கிறார்.

வங்கியில் வேலை பார்க்கும் சுகந்தி திருமணம் முடிந்த புதிதில் கண்ணுக்கே தெரியாமல் விரித்து வைத்திருக்கிற வசிய வலைக்குள் அப்பாவியாய் விழுந்து தன்னுடைய சம்பளம் முழுவதையும் அவனிடம் கொடுத்தாள். ஒரு குழந்தையும் அவனுக்காக அவள் வாங்கிய சில லட்சங்கள் கடனும் மீந்தபோதுதான் சுதாரித்தாள். கையில் வாங்கும் சம்பளத்தை முடிந்தவரை குறைத்துக்கொண்டு எல்லாவித சேம பாதுகாப்பு நிதித்திட்டங்களிலும் பணத்தைச் சேமித்தாள். அவனுடைய ஸ்டைலிலேயே பொய்களை, புனைவுகளையும் கற்றுக்கொண்டு அவனை ஏமாற்றினாள். போதையேறி திடீர்திடீரென்று வீடு திரும்பும் கணவனின் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதை மட்டும் தவிர்க்க முடியவில்லை. நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று புரிகிறது. கதைசொல்லியும் இந்த மாதிரியான கேள்விகளை இந்தப் புனைவில் எழுப்ப விரும்பியவர்தான். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட விவாகரத்து செய்து கொள்ளலாமே என்று.

சுகந்தியும் சில காலம் முன்புவரை விவாகரத்திற்கான முயற்சி எடுத்தவள்தான். அவளுடைய குடும்பத்தினர் அந்த முயற்சிகளை, அவளால் தனித்து வாழ முடியாது என்றும் சமூகம் குரூரமானது என்றும் அறுதப் பழசான அம்புகளெய்தி விவாகரத்து முயற்சிகளை வீழ்த்தினர். அவளும் எத்தனை சுழல்களில் சிக்கி எதிர்நீச்சல் போடமுடியும் என்று கொஞ்சம் தயங்கிவிட்டாள். அதனால் பல நேரங்களில் ரவிச்சந்திரன் சந்தர்ப்பவசத்தாலோ அல்லது அசந்தர்ப்பமாகவோ இறந்து போக எல்லாக் கடவுள்களிடமும் பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை எந்தக் கடவுளின் காதிற்கும் எட்டவில்லை என்பது வேறு விஷயம்.

ஓ… சரி… சரி, இன்னும் வாசலிலேயே நின்று தள்ளாடிக் கொண்டிருக்கும் ரவிச்சந்திரனை நினைவுபடுத்துகிறீர்களா. உண்மைதான். கதைசொல்லியின் நிகழ்கால போதம் கொஞ்சம் பலவீனமானதுதான். அதற்காக அவரைக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார் அவர்.

இன்றும் திடீரென தினவெடுத்து பெண்ணுடல் ஞாபகம் வந்ததும்தான் சூதாட்ட விடுதியிலிருந்து கிளம்பி வந்திருந்தான் ரவிச்சந்திரன். ஐந்து நிமிடக் கூவலுக்குப் பின் முன்வாசல் விளக்கு எரிந்தது. சுகந்தி கதவைத் திறக்கவா வேண்டாமா என்று யோசித்தாள். அழுது அழுது வீங்கியிருந்தது அவள் முகம். இன்றைக்கு அவள் பட்ட அவமானம். அவனுக்குக் கடன் கொடுத்த இரண்டு பேர் வந்து கடனுக்கு ஈடாக அவளை வரச் சொல்லி அடாவடித்தனம் செய்தனர். அவளுடைய ஆவேசம், ஆக்ரோஷம் எல்லாவற்றையும் அவர்கள் அலட்சியம் செய்தனர்.

அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியினால்தான் இன்று அவள் மானம் பிழைத்தது. ஆளுக்காள்… அவளிடம் யோசனை சொன்னார்கள். பச்சாதாபப்பட்டார்கள். அவள் யாரிடமும் எதுவும் பேசவில்லை. மேலும் மேலும் அழுது கொண்டேயிருந்தாள். அழ அழ மனசில் ஒரு வைராக்யம் உறுதியாகிக்கொண்டே வந்தது. இனி உயிர் வாழ வேண்டாம். எதைப் பற்றியும் கவலையில்லை. எங்கு திரும்பினாலும் முட்டிய மாதிரி இருக்கிற இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற வழி அவளுக்குப் புலப்பட்டுவிட்டதுபோலத் தோன்றியது.

கடிதங்களைத் தனித்தனியே அவளுடைய பெற்றோருக்கு, போலீஸிற்கு, வங்கி மேலாளருக்கு எழுதி முடித்தாள். ஒரு நயா பைசாகூட ரவிச்சந்திரனுக்குச் சென்றுவிடக்கூடாது என்று கவனமாக எழுதி வைத்திருந்தாள். எழுதி முடித்ததுமே ஏதோ எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்த மாதிரியான ஒரு உணர்வு தோன்றியது.

இந்த இடத்தில் நீங்கள் பதற்றத்துடன் கைகளை நீட்டி என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்று ஏற்கனவே தனக்குத் தெரியும் என்பதை கதைசொல்லி உங்களிடம் சொல்லிக் கொள்கிறார். ஏன் சுகந்தியை இந்த அகோரமான முடிவை நோக்கி இழுத்துச் செல்கிறீர்கள். இப்படியே அவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்காவது ஓடிப்போனால்கூட பிழைத்துக் கொள்ளலாமே. வாழ்வதற்காகத்தானே வாழ்க்கை. நீங்களும் இப்படி கோழைத்தனமான முடிவெடுக்க உங்கள் புனைவின் மூலம் மெனக்கெடுகிறீர்களே…

இப்படியெல்லாம் கதைசொல்லியை நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் இல்லையா.

இதற்குக் கதைசொல்லி சொல்ல விரும்புவது என்னவென்றால், இன்னமும் நமது வீட்டுப் பெண்களுக்கு அந்த மனோபலம் வரவில்லை. படிப்பு, வேலை, சம்பாத்தியம், புத்திசாலித்தனம் இவையெல்லாம் இருந்தாலும் நமது நாட்டுப் பெண்களை இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்தே ஆணுடைய அதிகார பீடத்தின் கீழ் பலியாடுகளாய், வாழ்வின் லட்சியமே ஆணை அண்டி வாழ்வது என்கிற மாதிரியான எண்ணங்களையும், கற்பு, பெண்மை, மாதரசி, பெண்ணரசி, கற்புக்கரசி, தெய்வநிலை என்று ஏராளமான கான்செப்ட்டுகளை பொய்யான புனைவுகள் மூலம் உருவாக்கி மூளைச்சலவை செய்த மாஸ்டர் பிரெய்ன் கொண்ட மனு என்கிற பிரகிருதி மனிதகுல வரலாற்றில் ஒரு கறையாகிவிட்டான்.

இந்த சதிவலைக்குள் சிக்கிய பெண்கள் தங்கள் வாழ்வுரிமை இழந்து தவிக்கிறார்கள். இந்த வலையைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஆணும் மனுவின் மறு உருவமாக அலைகிறான். இதில் பெரிய வேடிக்கை ஆண்கள் தங்களுடைய கொள்கை பரப்பு செயலாளர்களாக பெண்களையே நியமித்திருக்கிறார்கள்.

எனவேதான் பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்கிற தைரியம் இல்லாமல் தங்கள் வாழ்வினை முடித்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தங்கள் வரை இல்லாமல் ஆக்கிவிடலாம் என்று நினைக்கிற பெண்களில் சுகந்தியும் ஒருத்தி.

சரி… சரி… இந்த உரைவீச்சினால் நீங்கள் முகம் சுளிப்பதைக் கதைசொல்லி உணர்ந்துவிட்டார். அதோடு கதையை இறுதிவரை படிக்குமாறும் அவர் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறார்.

குழந்தைகள் சாப்பிட்டு படுத்தபின்பு அவளுக்கு மிகவும் பிடித்த நீலநிற பொடிக்கட்டம் போட்ட காட்டன் சாரியை எடுத்துப் பிரித்து, மின்விசிறியில் போட்டுச் சுற்றி சுருக்கு முடிச்சு போட்டு கழுத்தில் மாட்டுவதற்கு தோதுவாக்கி, கழுத்திலும் மாட்டிப் பார்த்தாள். பின்பு அப்படியே தரையில் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்தாள். ஆயாசமாக இருந்தது. உடலில் சக்தியே இல்லாத மாதிரி எதையோ யோசித்தாள். ஆனால் என்ன யோசித்தாள் என்று அவளுக்கே தெரியாது. இருந்திருந்தாற்போல எழுந்து பீரோவிலிருந்து போட்டோ ஆல்பங்களை எடுத்து அங்குமிங்குமாய் புரட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஆல்பங்களைப் பார்க்கப் பார்க்க ஏக்கம் கூடியது. ஒரு கணம், தான் தவறான முடிவெடுக்கிறோமோ என்றுகூட தோன்றியது. வேறு ஏதேனும் வழியிருக்கிறதா என்றுகூட யோசித்தாள். காலை எழுந்தவுடன் குழந்தைகள் அம்மா என்று கூப்பிடும்போது… நினைத்தவுடன் கண்ணீர் பொங்கி வழிந்தது. அப்படியே ஆல்பங்களை வைத்துவிட்டு எழுந்து சென்று ஹாலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளின் முகத்தைப் பார்த்தாள். அருகில் அமர்ந்து அவர்களின் நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டாள். அப்படியே அசங்காமல் சிறிது நேரம் அந்தக் குழந்தைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் கதவைத்தட்டுகிற அந்த சத்தம் கேட்டது.

அவன் குரலைக் கேட்டதுமே கொஞ்சம் இளகியிருந்த மனம் கல்லாய் இறுகியது. தட்டட்டும் கொஞ்ச நேரம் என்று பேசாமலிருந்தாள். அவனுடைய குரலிலும், தட்டலிலும் வேகம் கூடிய பிறகே எழுந்து கதவைத் திறந்தாள். அவன் தடுமாறிக்கொண்டே உள்ளே நுழைந்தான். அவள் திரும்பி அவனுக்கு வழிவிட்டு வாசல் கதவை பூட்டித் திரும்புவதற்குள் அந்த இடைவழியில் அவளை மறித்து நின்றுகொண்டு விகாரமாய் பல்லை இளித்தான். அவளுக்கு இரத்தம் தலைக்கேறியது. அவனை வேகமாகத் தள்ளிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்து, அவன் பின்னால் வருவதற்குள்ளாகவே கதவைச் சாத்தி தாழ்ப்பாளிட்டாள். அவன் நாக்குழறிக் கொண்டே,

“கதவைத் திற… சுகி… கதவைத் திற சுகி…” என்று கூப்பிட்டான். அவன் இடைவெளி விட்ட நேரத்தில் உள்ளேயிருந்து அழும் சத்தம் கேட்டது. அவன் கொஞ்சம் நிதானமடைந்து, சாவித்துவாரத்தின் வழியாகப் பார்த்தான். எல்லாவற்றையும்.

அதிர்ந்து போன அவன் அப்படியே உட்கார்ந்துவிட்டான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலகீனமாய் சிலமுறை,

“வேண்டாம் சுகி… கதவைத்திற… வேண்டாம் சுகி…”

என்று கூப்பிட்டுக் கொண்டேயிருந்தான். அப்படியே எவ்வளவு நேரம் போயிற்று என்று தெரியவில்லை. இரவின் விசித்திரமான மாயா உலகத்தில்தான் மனதின் அத்தனை புதிர்களும், சுழல்களும், மர்மங்களும் அவிழ்கின்றன. புதிய புதிர்களும் வாழ்வின் கொடிகளிலிருந்து மொக்கு விட ஆரம்பிக்கின்றன. விந்தையான உணர்வுகள் தங்களுடைய விந்தையான செயல்களுக்கு இரவையே தேர்ந்தெடுக்கின்றன. ஏன் என்று யாருக்குத் தெரியும்?

நீங்கள் பொறுமையிழந்து கொண்டிருப்பது தெரிகிறது. கதையின் முக்கியமான திருப்பத்தில் இத்தகைய தத்துவ விசாரங்கள் தேவையா என்று கேட்கிறீர்கள். கதை சொல்லியை நீங்கள் நினைப்பதற்கும் ஒரு தருணம் வேண்டுமல்லவா, என்று கதைசொல்லி நினைக்கிறார். அவ்வளவுதான். இதோ விடிந்துவிட்டது.

அழைப்பு மணியின் ஓசை வெகுநேரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. முழிப்பு தட்டியது சுகந்திக்கு. கண்களைத் திறந்தாள். தூக்குக் கயிறாகத் தொங்கிய சேலை அவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. அப்போது அடித்த அழைப்புமணியின் ஓசை இப்போது நினைவுக்கு வந்தது. அவள் எழுந்து படுக்கையறைக் கதவைத் திறந்தாள். அங்கே வேட்டியில் தூக்கு மாட்டி ரவிச்சந்திரன் தொங்கிக் கொண்டிருந்தான். அவள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை.

நீண்ட பெருமூச்சு விட்டாள். பின்பு அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து தொங்கிக் கொண்டிருந்த அவனைப் பார்த்தபடியே தன் சிந்தனைகளை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.

பலர் அதிருப்தியுடன் கதைசொல்லியிடம் முறையிடலாம். இந்த முடிவு யதார்த்தமாக இல்லையே என்று முணுமுணுக்கலாம். அவர்களுக்கு கதைசொல்லி சொல்வது வாழ்க்கையே யதார்த்தமாக இல்லையே என்றுதான். மேலும் இந்த விதமாக அதிருப்தி தெரிவிப்பவர்கள் ஒருவேளை ரவிச்சந்திரனுக்கு கடன் கொடுத்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறார். இருந்தாலும் புனைவுகளின் புதிர்வழிகளில் இரண்டு விதமான சாத்தியங்களை வாசகர் முன்னால் வைக்க முடிவு செய்கிறார் கதைசொல்லி.

அழைப்பு மணியின் நீண்ட ஓசைதான் ரவிச்சந்திரனை எழுப்பியது. எழுந்தவுடனே மூளையில் பொறி தட்டிய மாதிரி நேற்று இரவு பார்த்த அந்தக் காட்சி. உடனே படுக்கையறை கதவின் சாவித்துவாரத்தின் வழியே பார்த்தான். சுகந்தியின் உடல் நீலநிற காட்டன் சேலையில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் மூளை சுறுசுறுப்படைந்தது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று சில நிமிடங்கள் யோசித்தான். பின்பு தொலைபேசியை நோக்கிச் சென்றான்.

போலீஸ் விசாரணையை அவனுடைய பாணியில் எப்படி சுமூகமாக முடிக்க வேண்டுமோ அப்படி முடித்துக் கொண்டான். வயிற்றுவலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக சுகந்தி எழுதிய மாதிரி ஒரு கடிதம் தயாரித்து அதில் சுகந்தியின் வாழ்க்கையையும், மரணத்தையும் ஒளித்து வைத்தான். குழந்தைகளை சுகந்தியின் பெற்றோர் அழைத்துக்கொண்டு போய்விட்டனர்.

மீண்டும் ரவிச்சந்திரன் சூதாட்ட விடுதிகளில் அலைந்தான். இப்போது உடல் தினவெடுக்கும்போது எங்கேயாவது பாலியல் தொழிலாளியைத் தேடிப் போவது வாடிக்கையாகி விட்டது. என்றாலும் அவனுக்கென்று ஒரு வீடு அங்கே ஒரு பெண் உடல் அவனுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று நினைத்தான். அவனைப் பற்றி நன்றாக விசாரித்துத் தெரிந்துகொண்ட பிறகும் அவனிடம் பெண்ணைத் தள்ளி விட தயாராக இருந்தனர் பல பேர்.

சிம்பிளாய் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவனுக்குக் காய்ச்சல், இருமல் என்று உடல்நிலை சரியில்லை. சாதாரண மருத்துவர்களின் எந்தப் பிரயத்தனங்களுக்கும் நோய் மசியவில்லை. ஒரு மருத்துவரின் சந்தேகத்தினால், அவனுக்கு முற்றிய ஹெச்.ஐ.வி. கிருமிகளினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அவன் அதையும் அவனுடைய வீரச் செயல்களுக்குக் கிடைத்த கௌரவப் பட்டம்போல எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திரிந்தான். இந்தக் கதைசொல்லியைப் பார்த்தபோதுகூட, “நாளைக்கு ராத்திரி 11 மணிக்கு பொதிகை பாருங்க சார்… எய்ட்ஸ் பற்றி பேட்டி கொடுக்கிறேன்…”

என்று சிரித்தபடியே சொன்னான். ஆனால் எல்லாம் இரண்டு மாதம்தான். திடீரென ஒரு பத்து நாட்களாக அவனைப் பார்க்க முடியவில்லை. விசாரித்தபோது ஒரு வாரம் முன்புதான் பொது மருத்துவமனையில் இறந்து போய்விட்டான் என்று இந்தக் கதைசொல்லிக்குத் தெரியவந்தது.

இந்த முடிவிலும் கதைசொல்லி பாரபட்சமாக நடந்திருப்பதாக நீங்கள் நினைத்தால் கதைசொல்லி ஒரு ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறார்.

அவரும் ரவிச்சந்திரனுக்கு நூறுரூபாய் கடன் கொடுத்திருக்கிறார் உங்களைப் போலவே. அதனால் எப்படியாவது அவனை உயிரோடு உலவ விடவேண்டும் என்றுதான் அவரும் ஆசைப்பட்டார். அவன் உயிரோடு இருந்தால் என்றாவது ஒருநாள் கொடுத்த கடனை அவனிடமிருந்து வாங்கிவிடலாம் என்று பேராசைகூட இருந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. கதைசொல்லியின் கையை மீறிவிட்டது விஷயம். ரவிச்சந்திரன் தன் வழியை தானே தேர்ந்தெடுத்துக் கொண்டதால் அதைக் கதைசொல்லியால் தடுக்க இயலவில்லை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறார்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top