இடம்பெயர்த்தல்

0
(0)

சுவரெங்கும் சிறுபூச்சிகள் கரும்புள்ளிகளாய் ஒட்டிக்கிடந்தன். இரவில் விளக்கைப் போட்டதும் எங்கிருந்தோ ஓடிவந்து விடுகின்றன. அதிலும் ட்யூப்லைட்டைக் குறிவைத்தே – அந்த வெம்மையை விரும்பிய்து போல அதன் பட்டியைச் சுற்றிலும் வந்து குவிகினறன. அவைகளைப் பிடிக்க, இதுவரை எங்கே  இருந்தன என தெரியாத பல்லிகள் — குறுக்க்ப்பட்ட முதலைகளைப் போல —  வாய்திறந்தபடி கழுத்திலிருக்கும் சுவாசப்பை ஏறி இறங்க, ஒவ்வொரு பூச்சியாய் குறிவைத்துப் பிடிக்கின்றன.

 

“மொதல்ல வீட்டுக்குப் பின்னால இருக்க மரத்தக் காலிபண்ணணும். நானுஞ் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்ட்டே.. பகல் பூராம் காக்கா குருவின்னு வந்து வீடுவாசல்லாம் பேண்டு நாறவச்சிட்டுப் போயிடுதுக… ராவானா இங்கிட்டு கொசுச் ச்னியங்க  தொந்தரவு..!” அடுக்களையில் கருத்தம்மாள் புலம்பிய வண்ணம்  வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஒருகாலை மடித்து இன்னொருகாலை நீட்டி குப்புறப் படுத்தபடி பாடப்புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்த பாபு, சுவரில் பல்லியின் வேட்டையாடலை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். பல்லியின் குணம் தெரியாமல் பூச்சிகள் வந்து அதன் அருகமர்வதும்  கணநேரம் கற்சிலையாய் அமைதிகாக்கும் பல்லி, ஒருகட்டத்தில் குபீரெனப் பாய்ந்து பூச்சியின் தலைப்பகுதியைக் கவ்விப்பிடிப்பதும், கொஞ்சங் கொஞ்சமாய் இழுத்து வாய்க்குள் அதக்கி அரைத்து விழுங்கி வயிற்றைப் பெருக்க வைப்பதுமாய் காட்சி நிகழ்ந்து கொண்டிருந்தது.

 

இப்போது பெரிய சிறகுள்ள ஒரு பூச்சியைப் பிடித்துவிட்டது பல்லி. அதனை உடனடியாய் விழுங்க முடியாமல். திணறியது, அதனிட்மிருந்து பூச்சி விடுபடப் போராடியது.  பல்லியும் சற்று பதறுவதைக் கண்ட பாபு, பதட்டத்திலும் உற்சாகத்திலும் அந்தக் காட்சியைக் காண்பிக்க  அய்யாவை கூப்பிடலானான் :”யய்யா.. யய்யா.. “ அய்யாதான் அவனுக்கு பொறுப்பாய்ப் பதில் கூறுவார். அம்மா சிடுசிடுக்கும்.

 

வாசலில் இரும்பு மடக்குச் சேர் போட்டு உட்கார்ந்து கோயில்கணக்கை எழுதிக் கொண்டிருந்த முருகேசன், மகனின் முதல் குரலுக்கு ’ம்’ என்றும், அடுத்த சத்தத்திற்கு ‘ ந்தா வாரஞ் சாமி.. ‘ என்றும் பதிலளித்துவிட்டு, கணக்கு நோட்டை மூடினார். ’எழுத என்ன இருக்கிறது .எல்லாமே செலவுகணக்குத்தான். கோயில் நிர்வாகஸ்த்ர்கள் யாரும் வந்து கணக்கை வாங்கிக் கொள்வதில்லை. வலியப் போய் நீட்டினாலும்,”இருக்கட்டும் பாப்பம்” என்று நகர்த்தி விடுகிறார்கள். ஆனாலும் சொந்தஜாதியில் ‘மருதையன் வகையறா’ விற்கு ஒருசொல் வந்துவிடக்கூடாது.

 

“என்னா சாமி..” மகனை கூப்பிட்டபடி வீட்டுக்குள் நுழைந்தவர். கணக்குநோட்டை அலமாரியில் வைத்து பத்திரப்படுத்தினார்.

 

அதற்குள் பல்லியின் வேட்டையாடலில் கிளைமாக்ஸ் முடிந்துவிட்டிருந்தது பூச்சியின் துடிப்பு அடங்கி பல்லி சாப்பிட்டு முடித்து நாக்கைநீட்டி வாயைத் துடைத்துக் கொண்டிருந்தது. ஏப்பம் விடாத குறைதான்.

 

“என்னா சாமி, என்னா விசியம்..?”  மகனின் அருகில் வந்து உட்கார்ந்தார். கோயில் மட்டுமல்லாது ஊருக்குள் எல்லோரையும் கூப்பிடுகிற வழக்கத்தில் வீட்டில் மனைவி, மக்களையும் ‘சாமி’யாக்கியே கூப்பிடப் பழகிப் போனது.

 

“ ப்போய்…யா  ” அலுத்துக் கொண்டவனாய் பழையபடி புத்தகத்தில் விழுந்தான்.

 

“ சொல்லுசாமி.. என்னா கூப்ட்ட..?”

 

“ நா எந்நேரம் கூப்டேன்.. நீ இப்ப வார..” என்றவன், “ மேல பாருமே..!”  பல்லியைக் காண்பித்தான்.

 

அப்போதும் பல்லியைச்சுற்றி பூச்சிகள் பறந்தும் சுவரில் நடந்தும் மொய்த்தும் கொண்டிருந்தன. “ இவ்ளோ பெரிய்ய பூச்சி ய்யா…”  சுட்டுவிரலும் கட்டைவிரலும் கொண்டு கண்கள்விரிய அதன் பருமனை காட்டினான். “றெக்கைய்ம் பெருஸ்ஸ்சு.. அதப் புடுச்சுருச்சுய்யா.. அந்த பல்லி..! ரெண்டுக்கும் நல்ல பைட்டு.. நீ தேம் பாக்கல..” சொல்லிமுடிந்ததும் கண்கள் இயல்புக்கு திரும்பியது பாபுவுக்கு,

 

சுவரின் இன்னொரு மூலையில் கடுகிலும் சிறுபூச்சிகளை கண்ணிமைக்கும் பொழுதில் கபளீகரம் செய்து கொண்டிருந்தது அங்கொருபல்லி . வழக்கமாகக் காண்பதுதான் என்றாலும் இன்றைக்கு என்னவோ அந்த நிகழ்வு முருகேசன பூசாரிக்கு ஏதோ ஒன்றை உணர்த்துவதுபோல – வயிற்றுப்பகுதியில் ஒரு பெரும்பள்ளம் உருவாகி துக்கம் மேலிடுவதாக உணர்ந்தார்.  சடாரென மகனிடமிருந்து எழுந்து கொண்டார்.  தன்னை யாரோ கபளீகரம் செய்யக்காத்திருப்பதாக உணர்ச்சி மேலெழுந்து உடல் படபடத்தது. நெற்றியில் லேசான வியர்வையும், தட்டுப்படது.

 

“ந்தா.. படிக்கிறபெய கிட்டக்க ஒக்காந்து என்னத்த நோண்டிக்கிடிருக்க.. ஒறக்கம் வந்தாக்க ஓரமாப் போய்ப் படு.. அவனத் தேடிப்புடுச்சு அவெங் கையில புஸ்தகத்த திணிச்சி ஒக்காரவக்கெ மின்ன நாம்பட்டபாடு எனக்குல்ல தெரியும். நீ வாட்டுக்கு என்னத்தியாச்சும் பேசி அவன வெரட்டி விட்றாத….!”  நறுக்கிய வெங்காயத்தை அள்ளி வடசட்டியில் கொட்டி எண்ணெய் ஊற்றி வதக்கலானாள் கருத்தம்மாள்.

 

நெற்றியைத் தேய்த்தபடி வெளியில் வந்தவர், ஏதோ ஞாபகம் வந்தவராய் அலமாரிக்குள்ளிருந்து மறுபடியும் கோயில் நோட்டை எடுத்து வைத்து அதே இரும்புச்சேரில் உட்கார்ந்து தாளைப் புரட்டினார்.

 

நோட்டின் கடைசிப்பக்கத்தில் மார்கழி மாதத்திற்கான கட்டளைதாரகள் பெயர்ப்பட்டியல் இருந்தது. மறுபடியும் மறுபடியும் வாசித்துப் பார்த்தார் இன்றையதினம்வரைக்கும் பொழுது ஓடிவிட்டது. நாளைக்கும் ஓடிவிடும். இன்னமும் பதினெட்டு நாளைக்கான கட்டளைதாரர்களைக் கண்டுபேசவேண்டும். மூன்று பெயர்கள் மனதில் நின்றன. அவர்களை வீட்டில்போய்ப் பார்த்தால் கட்டளைக்கான பணத்தை வாங்கிவிடலாம். ஆனாலும் வீட்டுக்குப்போய்ப் பார்க்க கூச்சமாய் இருந்தது. தெய்வகாரியம். கேட்டவுடன் உற்சாகமாய் ஒத்துக்கொண்டு கையில் ரொக்கம் கொடுத்தால் அது பெருமை.

 

முன்னெல்லாம் மார்கழிமாசம் பிறந்து விட்டால் முதல்வாரத்திலேயே முப்பதுநாளைக்கு மான கட்டளைதாரர் பெயர்கள் நோட்டில் நிரம்பிவிடும். அதற்கும்மேல் உபரியாக வருவதும் உண்டு. கைக்காசுக்குச் செலவில்லாமல் கோயிலில் வெள்ளி செவ்வாய் விளக்கெரியும். தவிர விசேசகாலங்களில் தினசரி சாயங்காலம்  விளக்கெரிகிற வழக்கமும் இருந்தது. அதோடு பித்தளையில் குத்துசட்டி ஒன்று எப்போதும் நிரம்பிய எண்ணையோடு கருவறையில் அம்மன் சிலைக்கு பின்புறமாய் நிற்கும்   இப்போதும்கூட அது இருக்கத்தான் செய்கிறது.  திறவையாய் வைத்தால், கரப்பான் , பல்லி என்று ஏதாவது பூச்சிகள் விழுந்துகிடக்கும் என்ற அச்சத்தில்  கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கிறது. சாசே பாக்கட்டுகள் வந்துவிட்ட்தில் அரைலிட்டர்….. இருநூறுமில்லி…என ஆரம்பித்து  நூறு…..ஐம்ப்து என, பாக்கட்டுகளின் அளவுகள் குறைந்துபோய் சாம்பிள் பாக்கட்டுகளில் வந்து நிற்கிறது. அதற்கும்கூட ஜாதி பொறுப்பாளர்களிடம் காசுவாங்க கர்ணமடிக்க வேண்டியிருக்கிறது. விபூதித்தட்டில் விழும் காணிக்கைக் காசை ஒருநாளும் வீடு கொண்டுவந்து சேர்க்கமுடியவில்லை.

 

“கோயிலு கோயிலுன்னு விழுந்தடிச்சு வேல பாக்கறியே.. அங்க என்னா மாசாமாசம் சம்பளமா எண்ணித்தர்ராக..? ஒண்ணுக்கும் ஆகாதுன்னுதான ஓன் அண்ணந்தம்பியெல்லா இத ஓங்கிட்ட தட்டி விட்டுட்டுட்டாங்க.. அதப் புரிஞ்சிக்காம நிய்யும் என்னத்தியோ பொதயலக் காக்குறமாதிரி பேயா அலஞ்சி, பெருச்சாளியா கொடஞ்சிக்கிட்டிருக்க.”  கருத்தம்மாளின் பாட்டு ஓயாதொலித்தது.

 

அவளைப்போல பூசாரிவேலையை அத்தனை அலட்சியமாய் போட்டுவிட்டுப் போய்விட முடியாது. ஜாதிக்குச் சொந்தமான கோயில்தான் என்றாலும், கருவறைக்குள் நுழைய தன்குடும்பம் தவிர யாருக்கும் பாத்யதை இல்லை. பங்காளிகள் வந்து போகலாம். ஆனால் தனக்கு இருக்கும் உரித்து யாருக்கும் கிடையாது அந்த ஒருபெருமைதான் முருகேசனை பம்பரமாய் ஆட்டுகிறது.

 

முருகேசனுக்கு உள்ளூரில் அரிசி அரவைமில்லில் மெசின் ஓட்டுநராக வேலை. வியாபரிகளுக்கான மொத்தஅரவைக்கு முருகேசனைத்தான் தேடுவார்கள். அதற்கு தனிபயிற்சி வேண்டும். பெரும்பாலும் அது இரவில்தான் நடக்கும் ஒருகாலத்தில்  நெல்அரவை மட்டுமே ஓடிக்கொண்டிருந்த நிலை மாறி, இப்போது மாட்டுத் தீவனத்திற்காக சோளம், வரகு, மக்காச்சோளம் என்று எதைஎதையோ மாவாக்கித் தள்ள வேண்டியிருக்கிறது.   .

 

என்னவேலை இருந்தாலும், வெள்ளி செவ்வாயில் மதியத்துக்கு மேல் கோயிலுக்கு வருகிறார் போல வேலை அமைத்துக்கொள்வார். கோயிலை கூட்டுவதில் துவங்கி, அம்மனுக்கு அலங்காரம், பூசைவரை ஒற்றை ஆளாய் நடத்தவேண்டும். சாமிகும்பிடக்கூட வெளிஆட்கள் வருவது அரிது. சாதிக்கான கோயில்என்ற அடையாள்ம் அப்படி ஆக்கியிருந்தது. அந்ததோற்றத்தை மாற்ற் புதிதாய் பிள்ளையார் சிலை ஒன்றை தூக்கிவந்து நட்டார். அதன் பலனாய் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும்,  பெரியவர்களுக்கு திதி கொடுக்கும் நாளில் நெய்விளக்கேற்ற பொதுஜனங்களும் வந்து போனார்கள். தவிர வருசத்தில் நாலைந்து தரம் பௌர்ணமி கிழமையில் பெரியகோயில்களில் நடைபெறுகிற விளக்குபூசை  ஒன்றை காப்பியடித்து பெண்களை வரச் செய்து ’சொந்த மக்களுக்கு’ கோயிலின் ஞாபகத்தை உருவாக்கினார். அதன் தொடர்ச்சியாகத்தான் மார்கழி முப்பதும் திருப்பாவை பாடி பொங்கலும் பூசையும் அதிகாலையில் நடத்த முடிந்தது. அது சிலபேருக்குப் பொறுக்கவில்லை.

 

“இல்லாத வழக்கத்த ஆரம்பிக்கிற..!” என்றனர்.

 

“காவு குடுத்து கறி படைக்கிறதுதே நம்ம வழம… தெரியாதா?..”

“ரோட்டுமேல கோயில வச்சுக்கிட்டு ஆள்வராம வவ்வால் அடைஞ்சி கெடக்கே..சாமி..! ”

 

“சரிப்பா…… பூசாரிக்கி பொங்கதிங்க  ஆச வந்திருச்சு..”

 

“ஆனா இதுக்கெல்லா சமுதாயத்துல இருந்து படி குடுக்க முடியாது முருகேசா. அம்புட்டு வசதி நம்மட்ட கெடயாது. தெரியும்ல..”

 

“அத நாம் பாத்துக்கறே..சாமி ஒங்க பிள்ளைகள மட்டும் கோயிலுக்கு  தவறாம  அனுப்பிச்சு விடுங்க..” –  என்று எதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார்.

 

“பனிக்காலத்தில அவெவெ வேலவெட்டிக்கி வெளியேறவே நேரமில்லாமத் திரியிறாங்கெ.. நீ என்னமோ பகுமானமா பஜனைக்கி வாப்பா…ங்குற….ம் ?”

 

ஆனாலும் படித்த, அரசு வேலைபார்க்கிற சிலபேர் முருகேசனுக்கு ஒத்துழைப்புத் த்ந்தார்கள். அவர்கள்தான் மார்கழி பஜனைக்கு மைக் வைக்கச்சொன்னார்கள். அதுஒரு பெரியசெலவாக இருந்தாலும் முருகேசனால் சமாளிக்க முடிந்தது. மைக் வந்ததும் திருப்பாவையும் திருவெம்பாவையும் வேற’ஆளுக’ வந்து படித்தால் நன்றாக இருக்கும் என போஸ்ட்டாபீஸில் வேலைபார்க்கும் நாகராசனின் சம்சாரம் பிரியப்பட்டது.

 

எதோ ஒரு உள்ளுணர்வில் ‘அதுக்கெல்லா தோதுப்படாது’ என பலமாய் மறுத்த முருகேசன் தானே படிக்க ஆரம்பித்தார். புத்தகம் வாசித்து பிற்பாடு பூசையும் நடத்துவது கொஞ்சம் சிரமமாய்த்தான் இருந்தது. எப்படியோ அந்தம்மாள் கொஞ்சநாளில் ஒரு குருக்களை அழைத்து வந்துவிட்டார். அவர் வந்ததில் முருகேசனுக்கு ஒருவகையில் வசதியாய் இருந்தது. அவர் பாசுரங்கள் படிக்கிற நேரத்தில் பொங்கல் வைத்துவிட்டு அம்ம்னுக்கு அலங்காரம் முடித்துவிடலாம்.

 

 குருக்கள்வந்து ராகம்போட்டு திருப்பாவை – திருவெம்பாவை படித்ததில் கூடுதலாய் ஒரு கூட்டம் வந்து சேர்ந்தது. தினமும் சர்க்கரைப் பொங்கல் என்ற தளுகை மெனுவில் மாற்றம் உண்டாக்கினார் குருக்கள். திருவாதிரைக்கு அரிசிக்களியும், கூடார வெள்ளிக்கு புளியோதரையும், வளர்பிறை தேய்பிறை கிழமைகளைக் கணக்கிட்டு வெண்பொங்கல் முதலான பிரசாதங்கள் புதுபுதுசாக உருவாகின. அப்போதுதான் முருகேசனுக்கு ஒருபயம் கவியத் துவங்கியது. விதவித மான பிரசாதத் தயாரிப்பில் தான் தோற்றுவிடக் கூடாதே என்பதற்காக கருத்தம்மாளிடம் வந்து யோசனை கேட்கலானார்.

 

அவளுக்குக் கடுப்பாகிப் போனது ‘’ ந்தா, கூட்டுச்சாறு, கோழிச்சாறு, கறிக்கொழம்பு, கருவாட்டுக்கொழம்பு இப்பிடி எதியாச்சும் தெரிஞ்சதக் கேளு.. சும்ம்ம்மா.. வெம்பொங்களு வேகாதபொங்களு.. தேங்காசோறு, மாங்காசோறுன்னு உயிர வாங்காத..”

 

நல்லவேளையாய் அந்தமாதிரியான தளுகை மெனுக்களை குருக்கள் தானே பொறுப்பேற்றுச் செய்து கொண்டார். அவர்செய்து எடுத்துவருகிற பண்டங்களெல்லாம் கையில் ஒட்டாமல் எண்ணெய் பிசுபிசுக்க வாயில் போட்டதும் தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு சென்றது.

 

வீட்டில் கருத்தம்மாளுக்கேகூட அது பிடிக்கவில்லை. “சோறுன்னா கையில ஒட்டிப் பொலங்கணும். வாயில அள்ளிப் போட்டாலும் பல்லுல நின்டு அரபட்டு தொண்டக்குள்ள எறங்கணும். அப்பத்தே எதியோ திண்டமாதிரி இருக்கும் .அதவிட்டு கொக்கு முழுங்குனாபல் விழுக்கு விழுக்குனு இப்பிடியா வழுகும்…! வெரல்ல ஒட்டி அத நக்கித் தின்னாத்தே ருசி. இத என்னாண்டுதே முழுங்கி செமிக்கிறாகளோ..”

 

திடீரென ஒருநாள் குருக்கள்,   ஒரு ஓவியரைக் கூட்டிவந்தார் கோயிலின் தெற்குப் பார்த்த சுவரில் இரண்டு ஓவிய்ங்களை  வரையச் செய்தார். பாம்புப்படுக்கையில் சயனம்செய்யும் பெருமாளும், இடப்பக்கம் பெருமாளைத் தொழுதபடி நிற்கும் சாய்ந்த கொண்டை அணிந்த ஆண்டாளும் ஆளுயரத்திற்கு சுவரை வியாபித்து காட்சிரூபம் தந்தனர். இரண்டு ஓவியத்திற்கும் தனித்தனி ட்யூப் லைட் அமைத்து கோயிலையே வெளிச்சமாக்கிவிட்டார். அந்தப்படத்தை வேடிக்கை பார்க்க என்றே புதிதாய் ஒருகூட்டம் வந்துபோனது.

 

“நாம மார்கழி மாசம் முழுக்க படிக்கிற பாராயணம் இந்த பகவானுக்குத்தே.. அத பாடிவச்சது அவெம் பக்கத்தில இருக்க இந்த கோதை நாச்சியார்ங்கற ஆண்டாளம்மா..தேன்” பரவசம்பொங்க குருக்கள் பக்தர்களிடம் சொன்னார்.

 

“அப்ப இத்தினி நாளு நாம படிச்சதுபூராம் இவகளுக்கா..? காளியாத்தாளுக்கு இல்லியா.. “ போஸ்டாபீஸ் அம்மா நாடியில் விரல்வைத்துக் கேட்டார்.

 

“ஒருவகைல பாத்தா அப்படித்தான். ஆனா எல்லா தெய்வங்களும் வேறவேறன்னு பாக்க கூடாது..” குருக்கள் சமாளித்தார்.

 

“ஊரா பிள்ளைக்குத்தான் நாம இத்தினி நாள் ஆராரோ பாடிட்டு இருந்தமா..” இன்னொரு பெண்ணும் போஸ்டாபீஸ் அம்மாளை ஒத்துப் பேசினார்.

 

“அப்பிடிஇல்ல, இதுவரைக்கும் வெறுந்தொட்டிலுக்கு லாலி பாடிட்டுருந்தம். இப்ப தாயும் பிள்ளையுமா சன்னதிக்கு  வந்து சேந்துட்டாக…..” என்று திருத்திய குருக்கள் அந்த ஓவிய தெய்வங்களுக்கு தானே தனியே தளுகை போட்டு பூசைசெய்ய ஆரம்பித்தார். நைவேத்தியத்தின்போது மறைப்பு வேண்டும் என்று சுவருக்கு முன்னால் துணியால் ஒருதிரையை இழுத்துக்கட்டி பாராயணம் முடிந்தது.ம் திரைக்குள் போய் இருந்துகொள்வார்.

 

ஒருகோயிலில் இரண்டு பூசைகள் நடந்தன.

 

திரையை விலக்கி வெளியில்வந்ததும் அடுத்தொருதரம் தீபாராதனை காட்டிவிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்தார். அது முடிந்ததும் காளியம்மனுக்கு சூடம் காண்பிக்க முருகேசன் பக்தர்களை  தன்பக்கம் அழைக்க வேண்டியிருந்தது. பக்தர்களிடம் ஒரு தேக்கம் எழுந்தது.

 

அதிலிருந்து முருகேசனும் காளியம்மனுக்கும் ஒரு திரை ஏற்பாடு செய்தார். கற்பூரச் செலவு ரெட்டிப்பாகியது. அதுகூட அணா பைசா கணக்குத்தான். ஏதேனும் ஒருநாளில் தீர்ந்துவிடும். ஆனால் ஒருகோயிலில் ரெண்டுபேர் மணியடிப்பதுதான். முருகேசனின் அடிவயத்தில் பெருத்த சலசல்ப்பை உண்டு பண்ணியது. அதற்கேற்றார் போல கோயிலுக்கு எதிர்புறம் இருந்த ரைஸ்மில் ஓனர் தங்ககலர் பிரேமிடப்பட்ட சிவபார்வதி படமும், விஷ்ணு மகாலட்சுமி படமும் கொண்டுவந்ததோடு மரத்தாலான சிறுபீடமும் அமைத்துக் கொடுத்தார். அதில் படத்தை ஏற்றிவைக்க அத்தனை அம்சமாய் இருந்தது.

 

அதன்பிறகு ஒவ்வொரு பௌர்ணமியும் திருவிளக்கு பூசையை வழக்கமாக்கினார் குருக்கள்.  கோயிலை அடக்கி கூட்டம்வர ஆரம்பித்தது. பூசைக்குவருகிற பெண்கள் ஐந்துமுக விளக்கும், பஞ்சுத்திரியும், எண்ணெயும், கொண்டு வரவேண்டும் பூசை துவங்குவதற்கு முன்பு குருக்கள் எழுந்துவந்து அத்தனை விளக்கிற்கும் சந்தனகுங்குமம் இட்டு தன் கையாலேயே விளக்கேற்றி வைப்பார். “பகவான் திருநாமம் சொல்லி உங்களோட விளக்க நா ஏத்தி வைக்கிறேன்.. அத அணையாம வளத்து, காத்து பூசைக்குப் பிறகு வீடுசேக்க வேண்டியது ஒங்க பொறுப்பு. “ என்று பிரசங்கத்தின் ஆரம்பத்தில் சொல்லுவார்.. ஆண்கள்  நுழைய முடியாத அளவுக்கு கோயிலில் பெண்கள் குவியலாயினர்.

 

. பிரசாதத்திற்கான பொங்கல்சமைக்க பெரியசமையல் பத்திரம் ஒன்று வெளியிலிருந்து வாடகைக்கு எடுக்க வேண்டியதாயிற்று. பூசை நிறைவுற்றதும் விளக்கு நாச்சியார்களுக்கு – பூசைக்கு வருகிற பெண்களை குருக்கள் அப்படித்தான் அழைப்பார். – சுடர் அணையாமல் குத்துவிளக்கை வீட்டுக்கு உடனே கொண்டு செல்லவேண்டி இருப்பதால் – பொங்கல் பிரசாதத்தை அவரவர் இருப்பிடத்துக்கே சென்று சேர்க்கச் சொல்லி இருந்தார் . அதனால் பொங்கல் சமைத்ததும் கூடுதல் வேலையாய் தளுகைக்கு மட்டும் கொஞ்சம் தனியே எடுத்துவைத்துவிட்டு மீதியை பொட்டலம்போடுகிற வேலையும் சேர்ந்து கொண்டது. முருகேசனுக்கு. பூசைமுடியும் முன்பே பொட்டலங்கள் தயாராக இருக்கவேண்டும்.

திருவிளக்கு பூசை முடிந்ததும் ஒவ்வொரு விளக்கிற்கும் பொங்கல் பிரசாதம் தருவதும், பூசைக்கு முன்னால் உதிரிப்பூ கொடுப்பதும் முருகேசனுக்கான  முழுநேரப் பணியாயிற்று.

 

 

தொடர்ந்து பிரதோசகால பூசையும் ஏற்பாடுசெய்தார். பூசைக்கு முன்பதிவுகூட  நடந்தது. பதிவுக்கான கட்டணத்தை முதலில் குருக்கள் முருகேசனிடமே ஒப்படைத்திருந்தார். பின்னால் அதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்ட முருகேசன் அன்றைய செலவுக்கான பணத்தை மட்டும் பெற்று அதறகான கணக்குளை மட்டும் அவ்வப்போது பார்த்துக்கொண்டார்.

 

வ்வொரு வருசமும் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் அய்யப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள் வீட்டில் படுப்பதில்லை. விரதம் என்பதைக் காட்டிலும் வீட்டில் இடவசதிப் பிரச்சனை முக்கியமாயிருந்தது. பெண்டுபிள்ளைகளோடு சேர்ந்து படுக்க  அய்யப்பனுக்கு ஆகாது  ஆகவே கார்த்திகை மார்கழி இரண்டு மாதமும் கோயிலில் ஆண்களின் கூட்டம் ஜேஜே என இருக்கும். அதுவும் குருக்களின் வருகைக்குப்பின் அய்யசாமியின் படம் வைத்து தினசரி இரவு பஜனையும்   ஆரம்பித்தனர்.

 

சிவசக்தி, விஷ்ணு – ம்காலட்சுமி வீற்றிருக்கும் மரபீடத்தில் அய்யப்பனின் படத்தை வைத்து பஜனை செய்ய குருக்களிடம் அனுமதி கேட்டனர். ”ஆகா இதென்ன கேள்வி..? அய்யப்பன் யாரு..? மாயாவதாரன் விஷ்ணுவான ஹரிக்கும் பரமேஸ்வரனான ஹரனுக்கும் பிறந்த புத்திரன் தானே அவக இடத்தில புள்ளயவச்சு சேவிக்க யார்கிட்ட நீங்க அனுமதி கேக்க வேணும்..?. தாராளமா செய்யுங்க நானே சொல்லணும்னு இருந்தேன்” என்று பச்சைக்கொடி காட்டினார்.

 

அந்த இரண்டுமாதம் அறுபதுநாளும் தினசரி மாலையில் கோயிலை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் முருகேச பூசாரிக்கு உருவாகியது.. அதனால் படித்துக்கொண்டிருந்த மகன் பாபுவை கோயில் திறந்து வைத்து விளக்கேற்றச் செய்தார், சமயத்தில் கருத்தம்மாளும் வந்து அவருக்கு உதவினாள். ஆனால் அந்த காலத்தில் விளக்குச் செலவு எப்போதும் இல்லாத அளவு வந்தது, அதனை ஈடுகட்ட சாதிப் பெரியவர்களை அணுகினால் வழக்கம் போலவே வருத்தம் மிகவே பேசினார்கள்.

 

“அம்புட்டுப் பெரிய கோயிலக் கட்டி காபந்து பண்ணக் குடுத்திருக்கு இன்னமும் போயி எண்ணெ வாங்கக் காசு, எலுமிச்சம்பழம் வாங்க துட்டுன்னு கேக்க நல்லாவா இருக்கு..முருகா? .

 

“அது வழக்கமா எண்ண்ச்செலவுக்கு தார பழக்கந்தான..”

“வழக்கமான்னா எப்ப..?அது ங்கொய்யா காலத்து வழக்கம்.. வீதில ஆள் நடமாட்டம் காணாம நரியோடிக்கிருந்த காலம். இப்பத்தே தெனமும் வீரவாண்டித் திருவிழா கணக்கா கோயில்ல கூட்டம் மோதுதில்ல எத்தன பேர் என்னென்ன கொண்டுக்குவாராங்க அதில எண்ணெ எலுமிச்சம்பழம் வராதா…~”

 

“அட வரலேன்டே வையிப்பா  காணிக்க காசில ஒரு அஞ்சு பத்துரூவாய ஆத்தாளுக்காகச் செலவழிக்ககூடாதா..?”

 

அதற்கும்மேல் பேச வெட்கமாய் இருந்தது. வருகிற கூட்டமெல்லாம் குருக்கள் பக்கம் என்றால் இன்னமும் கேவலம்.

 

”நேத்துவந்த குருக்களப் பாரு.. கோயிலவே வெளிச்சமாக்கிட்டாரு.. நம்மாளுகதே இருக்கறதச் சொரண்டுவீக.. வீட்டுல எதும் மொடக்கடியா.. “ வீம்பாய்வருகிற பேச்சில் முகமெல்லாம் சிவந்துபோகிறது. ’பேசாம பூசாரிப் பொழப்ப ஒதறிவிட்டு பொண்டாட்டி சொல்றதப் போல சொந்தப் பொழபப பாக்கலாமா.. என்ற் நினைப்பெல்லாம் வந்தது. பரம்பரை மரியாதையைக் காகக வாழ்க்கையைப்  பணயம் வைக்கலாம்.. மானத்தை பறிகொடுக்கலாமா ..!

 

பொறிவானம் போல வீட்டுக்குள்ளேதான்  பொறிந்து அடங்க முடிந்ததுமுருகேசனால்..

 

“என்னத்துக்கு வள்ளு வதக்குன்னு கண்டத நெனச்சு ஆவியக் கொறச்சுக்கற..கீழ ஊத்தற தண்ணிய எம்மேல  ஊத்து….ங்கற மாதிரி நிய்யாத்தான அந்த குருக்களக் கொணந்து வச்ச. இப்ப முட்டுது மோதுதுன்னா பட்டுத்தேந்…தீரணும்… “ என்ற கருத்தம்மா , “ ஏ.. ஒன்னால அந்தாள வெரட்ட முடியாதா..? ”  எனக் கேட்டாள்.

 

உதட்டைப் பிதுக்கினார் முருகேசன்.

 

“அவுருதே எங்கியோ போயி பூசாரிப் படிப்பு படிச்சுவரச் சொல்றாராமே.. போய்ட்டு வரலாம்ல..”

 

பூசைகள் நடத்தும் போது குருக்கள் எதையோ கடமொட வென்று வாயில் வார்த்தைகளை உருட்டி மந்திரம் சொல்லி பூப்போடுவார். அவர் பெருமாளுக்கு மந்திரம் சொல்கிற அதேவேளை யில்  காளியம்மனுக்கும் உதிரிப்பூவை காலடியில் ஒவ்வொன்றாய் போடச் சொன்னார்.. குருக்கள் செபிக்கிற மந்திரத்தின் பலன் அம்மனுக்கும் பலிக்குமாம்.

 

தட்டுநிறைய சூடத்தைப் பொருத்தி ஜெகஜோதியாய் அம்மாளை பாதத்திலிருந்து உச்சந்தலைவரைக்கும் இடமும் வலமுமாய் தீபம்காட்டி ஜொலிக்கின்ற அந்த முக அழகை கண்டு கும்பிடுகிறபோது பெத்தவளைக்கண்டு பேசுகிற திருப்தி. – பரவசம்,  அதைவிடுத்து நொய்யி நொய்யினு முனகியபடி காலடியில் பூப்போட்டுக் கும்பிடுவதில் கிட்டவில்லை.

 

“இங்காரு….ழா.. ஏஞ்..சாமிக்கி – என்னப் படச்சவளுக்கு எப்பஎப்ப என்னஎன்னா செய்யணுங்கறத எங்க தாத்தெம் பாட்டெங் காலத்திலருந்து சொல்லித்தந்திருக்காஙெ.. வெள்ளி செவ்வாய்க்கி எப்பிடி, மாசிப்ங்குனில என்ன செய்யணும்.. அரக்குப் பொங்கலு, பல்லயம், கரகம், பட்டக்காரன எந்தமாதிரி அழச்சிட்டுவரணும்.. எல்லாம் அறியாம இல்ல..எங்கியோ ஒருஎடத்துல பூசாரித் தனத்த பள்ளிக்கொடம் நடத்தி சொல்லித் தருவாங்களாம்… அங்கபோயி தலயத் தொங்கப் போட்டு ஒக்காந்து கேட்டுகிட்டுவந்து நாங்க பூச நடத்தணுமாம். இதெல்லாம் தானா வரணும்.. ஆத்தா பிள்ளைக்கி பால்தார மாதிரி..”

 

குருக்கள் இதைத்தான் ஜாதிப் பெரியவர்களிடத்தில் புகாராய்  ஒப்பித்தார். அவர்களுக்கும் குருக்களின் கூற்று விளங்கவில்லை.

 

“புள்ளபெத்த மனுசனப் போயி படிக்க அனுப்பவா.. அந்தாளு மகன வேணா ஏற்பாடு செய்யலாம்ங்களா..” எனக் கேட்டனர்.

 

’’பூசாரிக சங்கத்திலயாச்சும் சேரச் சொல்லுங்க..அப்பப்ப கூட்டம் நடக்கும். புதுசா நெறய விசியங்கள் சொல்லுவாங்க. “ என்றார்.

 

“செய்யிறம் சாமி..”

 

ன்றைக்கு அதிகச் சிகப்பும் , அதிக வழுக்கையும் கொண்ட ஒருமனிதரைக் குருக்கள் கோயிலுக்கு அழைத்து வந்தார். கைகளைமூடி தொடைவரைக்கும் நீண்டிருந்த தொளதொளத்த ஜிப்பா அணிந்திருந்தார். யாருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. அவரோ அங்கேயிருந்த அத்தனைபேரையும் தெரிந்தவரைபோலப் பேசினார். குறிப்பாக குருக்களை ரெம்பவும் பாராட்டினார். ’குருக்கள் எங்கேபோனாலும் அந்தஇடம் பிரபலமாகிவிடுவதாகச் சிலாகித்தார். “இந்த ஆலயம் மட்டும் ஏன் இன்னமும் பேமஸ் ஆகாம நிக்கறது .? இத்தனைக்கும் மெயின் ரோட்டுல நிக்கித கோயில்..?”

 

”எளிய சனங்களோட கோயில்னு கூட , வாறவங்க யோசிக்கலாம்..”

 

“தெய்வ சன்னதியில அந்த பாகுபாடு கூடவா வரும..?”

 

“அததவிர உடல் சுத்தம் பழக்கவழக்கம்.. இதெல்லாம் சேரும்ல..”

 

“ம்ம் அப்பிடிவேணா சொல்லுங்க..”

 

“ சாமீ..! இப்ப இங்க அய்யப்ப பக்தர்கள் கூடுதலா வாராங்க.. ஒரு அய்யப்பன் சிலை கிடைச்சா நடைல வச்சு பிரதிஷ்டை செஞ்சுறலம்னு ஒரு சின்ன ஆசை.”

 

“ஆமாமா இந்த ஏரியாவிலேயே.. அய்யப்பனுக்கு சிலை ரூபமான கோயில் கிடையாதுல்ல..”

 

“எல்லா இடத்திலயுமே படம் வச்சுத்தான் கும்பிடுறாங்க…”

 

“நல்ல யோஜனை.. மூணு அடி உயரத்தில ஒரு ஐம்பொன் சிலை என்னோட ஏற்பாடு.”

 

“அப்பறமென்னா .? எஞ்சீனியரக் கூட்டிட்டுவந்து பிளானப் போடுவம். நீங்க முன்கை எடுத்த பிறகு காரியம் நிக்கவா போகுது.?”  குருக்கள் ஹஹ்ஹஹ்ஹா வென சிரித்தார்.

 

சாதிப்பெரியவர்கள் கண்ணை மூடித்திறந்து பார்த்துக்கொண்டிருக்க பெரிய அளவிலான ரோலிங் டேப்புகளைக் கொண்டுவந்து கோயிலைச் சுற்றிசுற்றி அள்ந்து குறித்தார்கள். இப்போதிருக்கும் அம்மன் கோயில் அப்படியே இருக்க, சற்று கிழக்கே இழுத்து புதுக்கோயில் கட்ட திட்டம் உருவானது. இரண்டு கோயிலுக்கும் பொதுவான நடைமேடை, ஐந்து விமானம்… என குருக்கள் சாதிப்பெரியவர்களீடம் மடைதிறந்த வெள்ளமாய் ஒப்பித்துக்கொண்டிருந்தார்.’’மொத்தம் எட்டுலச்சம் எஸ்டிமேட்.. உங்கனால முடிஞ்சத குடுங்க முடியாட்டியும் பாதகமில்ல..

“எவெ எடத்துல யார்வந்து வானந்தோண்டுறது…? .”

 

“சாமியார்கள மட்டும் என்னிக்கிம் நம்பிடாதீக..”  சாதி கூட்டத்தில் எதிர்ப்புக்குரல்கள் வந்தன.

 

“யார்வந்து கட்டுனாலும் காலிஎடம் நம்மளுது ஆக, கட்டடமும் நமக்குத்தே சொந்தமாகும்.. எதோ ஒரு கிறுக்குல செய்றாக.. செய்யட்டுமே.. நம்மள உள்ளரவரக் கூடாதுனு சொல்லீர முடியுமா..? பட்டா நம்ம பேர்லதான இருக்கு..!”

 

“ஆனாலும் சுத்தடியா அவுகளயே செல்வு பண்ணச் சொன்னாலும் ஏதாச்சும் பிரச்சன பின்னும் பெறகு வரலாம். அதால கட்டுமானத்துல நாமலும் எதுனாச்சும் குடுத்தர்றதுதான் நமக்கு நல்லது.”

எடுபிடிவேலைகளுக்கான ஆட்களும்,  தண்ணீர்ச்செலவும் சாதியிலிருந்து அளிப்பதாக ஒப்புக்கொண்டார்கள். கூடவே கோயில் மொத்தமும் சுத்துச் சொவரெழுப்பி காம்பவுண்டாக்கிட்டா பாதுகாப்பாவும் இருக்கும்’ என்று கூடுதல் கோரிக்கை வைக்க அதுவும் ஓக்கே ஆனது.

 

அஸ்திவாரத்துக்காக பில்லர்க் குழி தோண்டுகிறபோது பழையகோயிலில் கீறல் விழுந்தது. அப்போது உடனிருந்த குருக்கள் எதையோ கண்டுபிடித்துவிட்ட பதட்டத்தில் முருகேசனிடம் கேட்டார், ” இது சுடுகாட்டு பத்தர காளியா..?”

 

“ஆமாங் சாமி…….! ”

 

“ஊருக்குள்ள வச்சிருக்கீங்க..? ”

 

“முன்னாடி  இங்கனதான சுடுகாடு இருந்திச்சு..சாமி  ரோடு வந்ததால சுடுகாட்ட மாத்திட்டாக ”

 

றுநாள் சாதியாட்களைப் பூராவும் தங்களது ஆன்மீக அலுவலகத்திற்கு வரச்சொன்னார் குருக்கள்.

 

அலுவலகம் ஊரின் மேட்டுப்பாங்கான இடத்தில் அமைந்திருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய பங்களாக்கள். ஒவ்வொருவீட்டின் மாடியிலும் தண்ணீர்தொட்டியும், சில வீடுகளில் மொட்டை மாடியில் தோட்டமும் கூட போட்டிருந்தனர்.

 

அலுவலகம் ஒரு பங்களாவின் மேல்மாடியில் இருந்தது. கீழேயே செருப்பைக் கழட்டிவிட்டு மாடிப்படியேறினர்.

 

சுவரெல்லாம் கைபட்டால் வழுக்கியது. தொட்ட இடமெல்லாம் குளிரடித்தது.

 

”உள்ள வாங்க “

 

அலுவலகத்தின் தரை முழுவதும் கண்ணாடியாய் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. கால்பதித்து மிதிக்கக் கூச்சமாய் இருந்தது.

 

கோயில் முழுசும் இடிக்கப்பட்டு மொட்டையாகிக் கிடக்கிறது. இடித்த மண்குவியலை அள்ளிப்போடக்கூட ஆள்வரவில்லை. இந்த நேரத்தில் திடீரென அழைப்பு. ஒருவேளை பணம் பெயரவில்லை என கை விரித்துவிடுவார்களோ.. வீட்டுக்குவீடு வரிப்போட்டுக் கட்டிக்கங்க என சொல்லப் போகிறார்களோ.. பலவிதமான குழப்பங்கள் எல்லோரது மனசிலும் அலையலையாய் மிதந்த கலக்கம் தெரிந்தது.

. அந்த அறையில் சேரோ பெஞ்சியோ இல்லை. வந்திருந்த அத்தனைபேரும் தரைவிரிப்பில் அமர்ந்தனர் அலுவலகத்தாருக்கும் கூட விரிப்புத்தான். ஆனால் தடிமனானதும் ஒரு தூக்கலான மேடைவடிவத்திலானதுமாக அமைத்திருந்தார்கள். அங்கிருந்த எல்லோரும்  ரெம்பவும் அமைதியாய், சாந்தமான குரலிலேயே பேசினார்கள்.

 

“ஒங்க தெய்வத்துக்கு பலி குடுக்கிற வழக்கமெல்லாம் உண்டா..?”

 

“பலி..ன்னா.. காவு தான.. அதெல்லாங் குடுப்பம்ங் சாமி..”

 

“வேற..? “

 

“வே…ற..யாராச்சும் நேந்துக்கிட்டாங்கன்னா..சாவ… கோழி ..அறுப்பாங்க..”

 

“கோயிலுக்கு ஏடு வாசிச்சிருக்கீங்களா..? ‘

……… ……….. ……….

“மனுசரப்போல கோயிலுக்கும் ஏன் வீடுகளுக்கும் கூட தொட்ர்ச்சி இருக்கு… ஊர் மாற்றம் கண்டதிலிருந்து ஒங்க தெய்வம் பசியோட அலையுது அது யாருக்காச்சும் தெரியுமா..? அதனோட இயல்பான சக்தி பாதிக்கப் பட்டிருக்கு, பவர் இல்லாம பாவமா நிக்கிது. அதனால சமுதாயத்துல பொறுப்பில இருக்கவங்க குடும்பத்தில சேதாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஏற்பட்டிருக்கலாம். “ ஏதோ ஒரு ஏட்டுசுவடியை கையில் வைத்துக்கொண்டு பேசினார்கள்.

 

அவர்கள் சொல்வது பூராவும் வாஸ்தவமாகவே இருந்தது. போன மூணாம்மாதம் தலைவராய் இருந்த கருப்பன் லாரியில் லோடுஇறக்கிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி வந்து துள்ளத்துடிக்கச் செத்துப்போனார். முதல்வருசம் கைகால்வராமல்போன பெரியதனம்  இன்னமும் வீட்டில் முடங்கிக்கிடக்கிறார். நாட்டாமை சுகர் பிரசர்னு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமாய் அலைகிறார். இப்படி பெருசுகள் பூராவும் விழுந்துகிடப்பது இதனால்தானா…! தரைவிரிப்பில் உட்கார்ந்திருந்த அத்தனைபேருக்குமே கவலை அதிகரித்தது.

 

’’ஒங்களப் பயமுறுத்தறதுக்காகச் சொல்லல.. எங்களுக்கு சொல்லப்பட்டதச் சொல்றம்..”

 

“சுடுகாட்டு அம்பாளுக்கு பொணவாடைதான் சுவாசம். நீங்க சுவாசத்தத் தடை பண்றீங்க.. அதனால ஒங்க அம்பாள் மூச்சுத் திணறிக்கிட்டிருக்கா..”

 

உட்கார்ந்திருந்தவர்களுக்கு மூச்சுமுட்டுவது போலிருந்தது..

 

இருதரப்பிலும் அமைதி ஊடாடியது.

 

“அப்பன்னா  ஆத்தாள  கொண்டுக்குப் போயி சுடுகாட்ல வச்சிரணுமா..” உட்கார்ந்திருந்தவர்களில் ஒருகுரல் அவசரமாக ஒலித்தது.

 

“அதுக்கு எடம் இருக்கா.” பீடத்தில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்தும் ஒருகுரல் அவசரமாய் வந்தது.

 

“அதுக்காக ஆள் பேர்வராத எடத்திலயா போயா சாமிய வப்பாக..? பொண்ணுபொடுசுக போய்வரவேணாமா..” கீழிருந்தே ஆட்சேபமும் எழும்பியது.

 

“நமக்காக தெய்வத்த அலக்கழிக்கக் கூடாது..”

 

“பேசாம இப்ப இருக்க கோவில்லயே ஒருபலிபீடத்த கட்டி வக்கெக்கலாம்ல..”

 

“அது முடியாது. “ குருக்கள் கொஞ்சம் பலமாய் குரல் உயர்த்திச் சொன்னார்.,” அய்யப்பனுக் கான ஆலயத்த உருவாக்கியாச்சு. அவருக்கான ஆச்சாரமும் அனுஷ்டானமும் எல்லாருக்கும் தெரியும். பலிங்கற வார்த்தையே அய்யப்பனுககு ஆகாது அப்பறம் ஒங்க இஷ்டம்..”

 

“அப்ப….? “ ஏதோ முட்டுச்சந்தில் சிக்குண்ட ஆட்டுமந்தைபோல அத்தனை பேரும் பரிதவித்தனர்

 

“ஒண்ணும் பாதகமில்ல ”  முழுக்கை ஜிப்பாக்காரர் அமைதிப்படுத்தினார்.”திட்டப்படி அய்யப்பனுக்கான ஆல்யம் அற்புதமா எழும்பட்டும். அதேசமயம் அம்மனுக்கான ஒரு புதுக்கோயில் ஒண்ணும் அவருக்கு பிரியமான எடத்துல பீடத்தோட எழுப்பி, நல்லநாள் ஒண்ணுபாத்து அம்மன பெயர்த்தெடுத்து அங்க பிரதிஷ்டை பண்ணீருவம் “

 

“அப்ப்டீன்னா இவங்க சமுதாயத்துக்கு ரெண்டு கோயில் கணக்காகுது.”

 

”அது ஆண்டவன் சித்தம்.”

 

ப்படித்தான் கோயிலைக்கட்ட இத்தனை பணம் சேர்ந்ததெனத் தெரியவில்லை. மடமடவென கட்டிடம் எழும்பி குறிப்பிட்ட நாளில் இரண்டுகோயிலுக்கும் கும்பாபிசேகமும் நடந்து முடிந்தது.

 

அய்யப்பனின் ஆலயத்திற்கு குருக்களோடு மேலும் இரண்டு விடலைப் பையன்கள் பூணூல் போட்டுக்கொண்டு பூசைநடத்தி நுனிவிரலில் விபூதி குங்குமப் பிரசாதம் விளம்பிக் கொண்டிருநதார்கள்     .

 

நல்லவேளையாய் முருகேசனுக்கு  காட்டுப்பத்ரகாளி கோயிலில்   பூசாரி பதவி பறிபோகவில்லை. அந்தத் தெம்புடனே நாளைய மார்கழி பஜனைக்கான கட்டளைதாரரைத் தேடி நடந்து கொண்டிருந்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top