அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்ததும் இராமநாதனுக்கு வெறிகொண்ட உத்வேகம் பொங்கியது. ‘தலைப்பிள்ளை! அதுவும் ஆண்பிள்ளை! அவனைக் கலை, கல்வியில் இசையில் மேதையாக, ஆளுமை பெற்றவனாக உருவாக்க வேண்டும்! இந்த உலகமே அவனை ஆச்சரியத்தோடு பாராட்டிப் புகழ வேண்டும்!’… ஆசைப் பறவை உயர உயர சிறகசைத்தது.
மாநிலம் முழுவதும் அலைந்து தேடி, பிரபல ஜோதிடர்களை, மனோதத்துவ நிபுணர்களைக் கலந்தார். திட்டங்கள் செயலாயின.
அரண்மனை போன்ற வீட்டில், ஆறுமாதக் கர்ப்பிணி கவிதா நடக்கும்போது சுற்றிலும் மென்மையாக இன்னிசைப்பாடல்கள், கீர்த்தனைகள் ஒலிக்கும். புழுங்கும் ஒவ்வொரு அறைகளிலும் வீடியோவில் அழகான ஆண்கள் கம்பீரமாக நடப்பார்கள். சாதனைகள் சாகசங்கள் செய்வார்கள்.
தூங்கும்போது தலைமாட்டில் மெல்லிய ஸ்தாயியில் அறிவார்ந்த குட்டிக் கதைகள், விவாதங்கள், அரிய அறிவியில் தத்துவங்கள் எளிய மொழியில் விளக்கங்கள் ஒலிக்கும். இப்படி தாயின் செவி வழி, கண்வழி கலையும் கலாச்சாரக் கல்வியும் வயிற்றுச் சிசுவுக்கு ஊட்டப் பட்டு வந்தது.
சந்தன நிற கவிதாவுக்கு பாலில் குங்குமப் பூவும், பேரீச்சம் பழமும், ஆப்பிளும் என பழவகைகள் கலந்த போஷாக்கான உணவு வீட்டில் அதிராமல் அலுங்காமல் அலங்காரப் பதுமையாக நடந்தாக வேண்டும்.
ஒன்பதாம் மாதம் வளைகாப்பு ஏகத் தடபுடல் அலங்காரம். சந்தோஷ பரிவர்த்தணைகள், வகை வகையான உணவுப் பரிமாற்றங்கள் – இராமநாதன் செலவிலேயே நடந்தன. தாய் வீட்டார் அழைத்தனர். அவளுக்கு தாய் வீட்டிற்குச் செல்ல ஏக்கம். வசதி குறைவாயினும் தாய் வீட்டில் உலாவ வேண்டும். தாய், அவள் தலை வருடி பேன் பார்க்கும் போது பக்கத்து வீட்டு, அண்டை வீட்டு நடப்புகளையும் மனிதர்களின் சுக, சோகங்களையும் பரிமாறிக் கொள்ள வேண்டும். அவள் அம்மாவுக்கு பேன் பார்க்கும்போது அவளது புகுந்த வீட்டு நிறை குறைகளை, உணர்வுகளை அம்மாவிடம் இறக்கி வைக்க வேண்டும். தாயின் மடியில் அரவணைப்பில் இந்தத் தாய்மை ஓய்வு பெறச் சபலம். நீர்ச்சலனமாய் நினைவில் சுற்றி சுற்றி வரும் ஏக்கம்!
மாமனார் இராமநாதன் ஒரே பேச்சில் முடித்துவிட்டார். “கவிதாவுக்குப் பிரசவம் இங்குதான். அவளது ஒவ்வொரு அசைவிலும் எனது பேரனது கெட்டிக்காரத்தனத்துக்கானதாக இருக்கணும்! கவிதாவின் அம்மா வேண்டுமானால் இங்கேயே வந்திருந்து இந்தச் சூழலிலேயே கவனித்துக் கொள்ளட்டும். பிறக்கப் போகும் பேரன் சகலகலாவல்லவனாக இருந்தால் பாட்டிக்கும் சந்தோசம்தானே.”
எல்லோருடைய வாயும் அடைபட்டு விட்டது. கவிதாவின் கணவன் கண்ணனும் “அப்பா சொல்றதும் நல்லதுத்தானே.” – பின்பாட்டுப் பாடினான்.
இந்தத் தந்தக் கூண்டில் அடைபட்டு தங்கத் தட்டில் உண்ணுவது உப்பில்லாத ஊறுகாயை சுவைத்தது போல, இனிப்பில்லாத அல்வாவை ருசித்தது போல ஒப்பவில்லை. உமட்டும் உணர்வுதான் வந்தது!
ஒவ்வொரு நிமிடமும் இயல்புக்கு மீறித் தாங்கினார்கள். அவளுக்குக் கூச்சமும், அச்சலத்தியும் அவதியுமாய் இருந்தது.
பெண் மருத்துவரிடம் மாதாந்திரப் பரிசோதனை. “குழந்தை போஷாக்காக இருக்கிறது. அநேகமாய் அக்டோபர் 11 அல்லது 12ல் பிரசவம் ஆகலாம்.
கவிதா அம்மா, மாமியார் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, மாமனார் மருத்துவரிடம் சொன்னார்.
“அம்மா, என் மருமகளுக்கு பிரசவ நாளை அக்டோபர் 11 என்பதை அக்டோபர் 5ல் வருமாறு பாருங்கள். அன்று விஜயதசமி. எல்லா கிரகங்களும் நல்ல நிலையில் சுபப் பார்வையில் கூடும் நல்லநாள்!”
“அய்யா, தயவு செய்து கேளுங்கள். ஒரு வாரம் முன்னதாக பிரசவிக்கச் செய்யறதால தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்திருக்கு.“
“அம்மா இந்த மாநிலத்திலேயே நீங்க பெரிய சிசேரியன் எக்ஸ்பர்ட்! உங்களால முடியாட்டா வேற யாரால முடியும் உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தர்றேன். உங்க கைராசியில் பிறக்கப்போற என் பேரன் பெரிய கெட்டிக்காரனாக வரப்போறது உங்களுக்கும் பெருமைதானே! தயவு செய்து மறுக்காதீங்க!”
“இல்ல சார், குழந்தை பொஷிஷன் சரியாக வரணும். கொம்பில் கனியாத காயை பறித்தால் சுவைக்காது. உடல் ரீதியாகப் பனிக்குடம் இளகி நெகிழ்ந்து பிரசவிக்க வலி தர வேண்டும். இது பொம்பளைங்க விஷயம். இருந்தாலும் சொல்றேன்! தயவு செய்து புரிஞ்சுக்குங்க!”
பெரிய மனிதர் வளைந்து குழைந்து கெஞ்சினார் “கைராசி டாக்டர்” “சிசேரியன் எக்ஸ்பர்ட்டு”ன்னு புகழ்மாலை பொழிந்தார்.
“நல்ல சமூக அந்தஸ்த்தில் உள்ள பிரமுகர். இவருக்கு இந்த பிரசவத்தை வெற்றிகரமாக முடித்துத் தந்தால் உனக்கு நல்ல பேரும் விளம்பரமும் கிடைக்குமே….!” மருத்துவர் இசைந்த பின்னரே அவர் அசைந்தார்.
அக்டோபர் 5 காலை 7 மணி. கவிதாவுக்கு சிசேரியன்! மகப்பேறு அறையின் வெளியே எல்லோரும் மூச்சை கண்ணில் நிறுத்தி காத்திருந்தனர். இதற்கிடையில் பிறக்கப் போகிற பேரனுக்கு அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள். அன்றைய நட்சத்திரம் பேரில் நடத்தப்பட்டது.
சிசேரியன் வெற்றி! மருத்துவர் வெளியே வந்து கவிதாவின் தாயையும், மாமியாரையும் மட்டுமே உள்ளே சென்று பார்க்க அனுமதித்தார். இராமநாதன் கடிகாரத்தை கணக்கிட்டார். “நல்ல நேரத்தில் சுபஹோரையில் அழகிய ஆண் குழந்தை!”
ரோஜா நிறத்தில் கூரிய மூக்கு, அடர்ந்த முடி இன்றும் திறக்காத கண்ணில் கனவுகள். காதைப் பொத்தியபடி பிஞ்சு கைகள்.
“ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரசவம் ஆகிவிட்டதாக குறைந்தது மூன்று நாட்களாவது இன்குபேட்டரில் வைத்து காப்பாற்றினால்தான் குழந்தை ஆயுளுக்கு உத்தரவாதம்,” மருத்துவர் கண்டிப்பாகச் சொன்னார்.
“நல்ல நேரத்தில் பூமிக்கு வந்து விட்டான். மூணு நாளென்ன ஒரு வாரம்கூட இன்குபேட்டரில் இருக்கட்டும்!” இராமநாதன் குதூகலத்துடன் சொன்னார்.
எல்லோரும் சந்தோஷத்தோடு கலைந்தார்கள்.
ஐந்தாம் நாள் குழந்தை இன்குபேட்டர் மடியிலிருந்து தாய் மடிக்கு வந்தான். தாத்தா முதற்கொண்டு எல்லோரும் ஆவலோடு பார்த்தார்கள்.
குழந்தையின் சிறு கைகள் காதுகளைப் பொத்தியபடி இருந்தன. இடதுபுறம் கழுத்தை சாய்த்தபடி மாறு கண் பார்வையில் மலங்க மலங்க விழித்தான். அழத் தெரியவில்லை. காதுகளை பொத்திய கைகளை மெல்ல எடுத்துவிட்டால் தன்னிச்சையாக கைகளால் காதுகளைப் பொத்திக் கொண்டான்.