ஆற்றாமை

0
(0)

சூரியன் தன் சுடும் விரல்களுக்கு மருதாணி பூசும் நேரம். மணி நாலு. மதிய உணவு இடைவெளி அமைதிக்குப்பின் அந்த மாநகராட்சி பேருந்து நிலையம் சோம்பல் முறித்து இயங்கத் தொடங்கியது. வெளியூர்ப் பயணிகள் பேருந்து வரத்தும் போக்கும் கூடின. வெயிலின் கடுமை குறைய குறையப் பயணிகள் கொத்து கொத்தாய் வரத் தொடங்கினர்.

தனலட்சுமி அப்போதுதான் கட்டி வந்த மல்லிகைப் பூச்சரங்களை நீளவட்டத்தில் சுற்றி வைத்து தண்ணீர் தெளித்தாள். அப்போதுதான் அரும்பிய மொட்டாய் அழகழகாய்த் தொடுக்கப்பட்ட மல்லிகை மலர்கள் மீது பனித்துளிகள் போல் தண்ணீர் அரும்பி குமிழ்ந்திருந்தன. போகும் வரும் பெண்களின் தலை பார்த்து “அக்கா பூ வேணுமாக்காப் பூவு. வாங்கக்கா மலிவாத் தாறேன்” இதமாய் ஈர்ப்பான குரலில் அழைத்துக் கொண்டிருந்தாள். ஒரு இளஞ்சோடி வந்தது.

“ஐநூறா, ஆயிரமாக்கா… நூறு நூலு ரூவா. மொத ஏவாரம். உங்களுக்காக மூணு ருவாய்க்குத் தாறேன் வாங்கிக்கங்கா!:”

தன்னைவிட மூனு நாலு வயசு குறைவா 18, 19 வயசுத் தானே இருக்கும். படிக்காம நல்ல வாழ்க்கை அமையாம பூ விக்கிறாளே….? என்று இரக்கம் சுரக்க அந்தப் புதுப்பெண் பூக்கடையோரம் வந்தாள்.

“ஐநூறு போதும் நல்லா எண்ணிக்குடு. குறையக்கூடாது.”

“ஒரு பூ கூட குறையாதுக்கா. நீங்க வேணும்னா எண்ணிப் பார்த்துக்குங்க.” என்றபடி நூறு பூ எண்ணி வைத்திருந்த அளவு சரத்தைக் கொண்டு ஐந்து முறை எண்ணி எடுத்துக் காட்டினாள்.

வெண்பச்சை நிறத்தில் மல்லிகைச் சரம் புன்னகை ஒளிர்ந்தது.

15 ரூபாய் கொடுத்தான் மாப்பிள்ளை தனலட்சுமி சுடி அந்தக் காசை வாங்கி கல்பலகையில் வட்ட வட்டமாய் சுற்றியிருந்த பூக்களை இடவலமாய் ஒரு சுற்று சுற்றி விரலால் நெரித்து கும்பிட்டு டப்பாவில் போட்டுக் கொண்டாள். ஐநூறு எண்ணிய பூச்சரத்தை காட்டி “அக்கா கட்டித் தரவா, இப்போ தலையில வச்சுக்கிறிங்களா?” நயமாய் கேட்டாள்.

“அப்படியே கொடு” என்றதும் கண்களில் நன்றியை மலரவிட்டு சரத்தை கொடுத்தாள். அந்தப்பெண் சரத்தை இரண்டாக மடித்து கரும் பின்னலை மையமாகப் பிரித்து பின்னலுக்கு இணையாகச் செருகி தொங்கவிட்டாள். கைகளால் சரிபார்த்து கணவனோடு நகர்ந்தாள். அவனது பார்வை பளிச் சிட்டது.

அவர்கள் நகர்ந்ததும் அவளையும் அறியாமல் தனலட்சுமி பெருமூச்சு விட்டாள். அடுத்த நொடியே இயல்பாகி, “அக்கா பூ வேணு மாக்கா, வாங்கக்கா மலிவாத்தாறேன்” என்று வயிற்று பாட்டைத் தொடர்ந்தாள்.

ஒரு தாயும் மகளும் வந்தனர். மகளுக்கு 20 வயதிருக்கும். அம்மாவிடம் பார்வையாலே “பூ வேண்டும்” என்றாள். அம்மா தயங்கி கடையோரம் நின்றாள்.

“என்னக்கா பூ தரட்டுமா, நூறு நாலு ரூவா. ஐநூறு தரவா”

“இந்தா, நூறு ரெண்டார் ரூவாண்ணு அஞ்சு ரூபாய்க்கு ஏரநூறு குடு”

“அக்கா கட்டாது, நூறு நாலு ரூபான்னு இப்பத்தான் அவகளுக்கு ஐநூறு பூ கொடுத்தேன். உங்களுக்கு வேணும்னா மூணு ருவாய்க்குத் நூறுண்ணு தர்றேன்” தனலட்சுமியின் கறார் பேச்சும் பார்வையும் தாயைச் சுட்டது. யோசிப்பது போல் முணங்கினாள். மகள் சிணுங்கினாள். “கும்பிக்கு கஞ்சி இல்லை கொண்டைக்கு பூ கேட்குதாக்கும்…” தாய் புலம்பினாள்.

“அக்கா பூ வாங்கி குடுங்கக்கா. அந்த அக்காவோட வட்ட முகத்துக்கு பூ வச்சா மகாலட்சுமியாட்டம் லட்சணமா இருக்கும்க்கா.” தனலட்சுமியின் வார்த்தைகள் அந்தத்தாயை நங்கூரமிட்டு திருப்பியது.

“சரி நூறு குடு”

“நூறு போதுமா”

“ம்ம்” ஒற்றை முனகல் பதிலாக வந்தது.

‘இதுக்கு மேல இது தேறாது’ என்றெண்ணி நூறு பூ கொடுத்தாள்.

“எண்ணிக்கை சரியாக இருக்கும்ல்ல! சின்ன நூறாட்டம் இருக்கு.”

“அக்கா சந்தேகம்னா எண்ணி பார்த்துக்குங்க! நூலு நாலா 25 கண்ணி இருக்கு பாருங்க. நூறுண்ணா நூறுதாம். சின்ன நூறு பெரிய நூறுண்ணு இல்ல! நெருக்கமா கட்டினதால் சரம் சின்னதாத் தெரியும் அவ்வளவுதாம்!

“ஆத்தாடி பேச்சில வித்தாரம்தான்” என்று சிரித்தபடி மூன்று ரூவா கொடுத்து பூ வாங்கி நகர்ந்தார்கள்.

தனலட்சுமிக்கு சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. அவளது அம்மாவும் அடிக்கடி இந்த வித்தாரம்கிற வார்த்தையை சொல்வதுண்டு. ஞாபக மொட்டுகள் மலர்ந்து விரிந்தன.

தனலட்சுமி ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பூக்கட்டிக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டாள் “யேம்மா நமக்கு சோறு போடறது பூ தானே. ஏம்மா எனக்கு ரோஜான்னோ, மல்லிகான்னோ பேரு வச்சிருக்கலாமில்ல! அழகா இருக்குமில்ல. தனலட்சுமின்னு பத்தாம் பழசா வெச்சுருக்க.”

“அடப்போடி, நாம பூக்கட்டி வயிற்றை நனைக்கிறோம் நிசந்தாம், ஒரு நாளாவது நீயோ நானோ தலை நிறைய பூ வக்க முடிஞ்சுதா? அட ஆசைக்காவது ரெண்டு கண்ணி தலையில் சொருகிக்க வாய்க்குதா? அத விற்றாவது ரெண்டு ரூவா கிடைக்குமான்னுதாம் பொழப்பு ஓடுது. கட்டின பூ தேங்காம ஒடினாவே கும்பிடற தெய்வம் கும்பியை நனைச்ச மாதிரி. நமக்கு வாச்சது அம்புட்டுதாம்”

“என்னம்மா புலம்பற”

“இது தாண்டி பிழைப்பு! உழுது விவசாயம் செய்யறவங்க எல்லாம் தம் பிள்ளைகளுக்கு நெல்லு மணி, சோளமணி, கம்பு கேவுருன்னா பேரு வைக்க முடியும்! பாவம் வெயிலு மழைன்னு பார்க்காம உழைச்சு வௌஞ்சதை தன் வீட்டுச் சோத்துக்கு கூட வச்சுக்க முடியாம வித்துக் கடனை அடைச்சு அடுத்த வெள்ளாமைக்கு ஏங்குற பொழப்புதான் அவனுக்கு.

வெளைய வைக்கிறவனுக்கு அந்தப் பொருளால லாபம் கிடைக்கிறதில்லை. வகுத்துப் பாட்டோடு அவன் பொழப்பு முடிஞ்சிருது. தரகு ஏவாரிக்குத்தான் லாபமும் சொத்தும் சேருது. இதுதான் உலகம். நம்ம கிட்ட தனம் இல்ல பேரை வச்சாவது தனம் தானியம் லவிக்காதான்னு நப்பாசை தான். உன் காலத் திலாவது இது மாறாட்டும். சரி. வறட்டு வித்தராம் பேசாமப் போய் படிக்கிறதைப் பாரு!”

…ம்ம் அம்மா சொன்னது சரியாகத்தான் இருக்கு!” நமக்கு முடி கருகருன்னு சுருண்டு நீளமாத்தான் இருக்கு.. இம்புட்டுப் பூ விற்கிறமே, ஒரு நூறு பூவாவது தலையில் வைக்க வாய்க்கிறதா? என்று பின்னால் கிடந்த பின்னலை முன்னால் இழுத்து ஒரு தடவு தடவிப் பார்த்து பின்னால் விட்டாள். பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு தனது முன்னால் கிடந்த உதிரி அரும்புகளை வாழை நாரில் வேக வேகமாய்த் தொடுத்தாள். இரு பட்டுப்பூச்சிகள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொஞ்சுவது போல் விரல்கள் லாவகமாய் வேகமாய் பூக்களைத் தொடுத்தன.

“ஏ, லூசு! என்ன மறை கழண்டு போச்சா? நீயா சிரிக்கிற, நீயா பேசிக்கிற, என்னாச்சு?”

குரல் கேட்டு நிமிர்ந்தாள். பக்கத்து இனிப்புக் கடை பையன் தான் கத்துறான் என்பதறிந்து முறைத்தாள்.

“ஏய். என்ன நீ தான் லூசாட்டம் கத்தறே” என்றாள்.

“அட என்ன, நீயாப் பேசி, நீயா சிரிக்கிற எங்ககிட்ட சொன்னா நாங்களும் சிரிப்போம்ல்ல…!”

“அட லூசு, உன்னையும் உன் கடையையும் பத்திதான் நினைச்சு சிரிச்சேன்”

“என்னையும் என் கடையையும் பத்தியா..

அட என்ன? சொல்லு, சொல்லு!

“அட ஒண்ணுமில்ல! நீயும் கடை நெறைய லட்டு ஜிலேபி, அல்வா, மைசூர்பாகு, கேக்கு அது இதுன்னு விதவிதமா பலகாரம் வச்சுருக்க! எப்பவாச்சும் ஆற அமர ஒன்னை முழுசா எடுத்து வாயில போட்டு ருசி பார்த்திருக்கியா? சும்மா உதிர்ந்தது, ஒடைஞ்சதுன்னு எடுத்து அரக்கப் பரக்க வாயில போட்டு முழுங்கிற! நாம விற்கிற பொருளை நாம அனுபவிக்க முடியுதா? நான் விற்கிற பூவை நான் தலையில் வச்சுப் பார்க்க வாய்க்குதா? இத நினைச்சுத்தான் சிரிக்கிறேன்.”

“ஆமா, ஆமா, நம்ம பொழப்பு அப்படித்தான்! ஊருக்கு மணக்குறோம். ஊருக்கு இனிக்கிறோம்.”

ஒரு போலீஸ்காரர் வந்தார். “ஏய் புள்ளே ஒரு ஐநூறு பூ கொடு புள்ளே, சீக்கிரம் கொடு” என்றவாறு இனிப்புக் கடைப் பக்கம் போனார்.

ஏட்டையா, ஐநூறு பூ. இருவது ரூவா கட்டத்தானே?”

“அட, காசைப்பத்தி என்ன புள்ள. முதல்ல பூவைக்கட்டு” என்றபடி இனிப்புக் கடைமுன் நின்றார்.

“டேய் தம்பி, அரைக் கிலோ அல்வா புதுசா இருந்தாக்க கொடு”

பையன் வேகமாய் நிறுத்தி பொட்டலமிட்டு. காரம் எதுவும் வேணுமா சார்” என்றான்

“காரமா……. ….. சரி அந்த முந்திரி பக்கோடாவில் ஒரு நூறு குடு.”

“நூறுகிராம் போதுமா சார்”

“போதும் கொடு”

“சார் இந்தாங்க சார். நூத்திப் பத்து ரூவா ஆச்சு சார்!”

அவர் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு, அறுபது ரூபாய் கொடுத்தார்.

“சார் என்ன சார், பாதிக்கு பாதி குடுக்கீறிக! கட்டாது சார். ஓனர் திட்டுவார் சார். வேலையில் இருந்து விரட்டிடுவார் சார்” பையனுக்குக் கண்ணீர் பொங்கியது.

“ஏட்டையா இவ்வளவுதான் கொடுத்தாருன்னு சொல்லு! நான் பேசிக்கிறேன் ஓனர்கிட்டே”

“சார் ஓனர் வைவார் சார்!”

“டேய் சொல்லிக்கிட்டே இருக்கேன். கேட்க மாட்டேங்கிறியே. நியூசென்ஸ கேஸ்ல போட்டுடுவேன் பார்த்துக்க!”

பையன் மூச்சடைத்துப்போனான்.

“ஏய் புள்ளே என்ன பூவை நல்லா கசங்காம கவர்ல போட்டுக்குடு” பூவை வாங்கிக் கொண்டு பத்து ரூபாயை நீட்டினார்.

“ஏட்டய்யா இருபது ரூவா பூவுக்கு பத்து ரூவா குடுக்கிறீக.. பூ

விலைக்கும், கட்டு கூலிக்கும் கூட கட்டாதுங்கய்யா!”

“ஏய் சும்மா வச்சுக்க புள்ள. நா என்ன ஓசியாவா வாங்கறேன்”

“இல்லைங்கய்யா, கட்டாதுங்கய்யா…”

“ஏய் என்ன புள்ளே நா சொல்றேன் நீ பாட்டுக்கு கேட்காம பேசிக்கிட்டே போறே.. என்ன நினைச்சுகிட்டுருக்க?”

“நெசமாத்தான்யா, விலை கட்டாதய்யா.”

“இந்தா ஆள் நடக்கிற வழியில் கடை போட்டுகிட்டு திமிரு பண்றியா? ஒரு எத்து விட்டா பூ மேசை, கல்லெல்லாம் பறந்திரும் தெரியுமில்லே .”

“அய்யா கார்ப்பரேஷனுக்கு மகமை குடுத்துதான் கடை வச்சிருக்கோம்ய்யா” என்று விரலை நெட்டி முறித்தாள்.

“ஏய், என்ன புள்ளே விரலை நெட்டி முறிச்சி நாசமாப் போகங்கிறியா?” நாளைக்கு நீ இங்க கடை வக்கிறதைப் பார்த் திருவோமா?”

“இல்லைங்கய்யா, பூ கட்டி கிட்டே இருந்த விரலு மொடு மொடுன்னு வலிச்சது சொடக் கொடுத்தேன்.”

“நா லத்தியை எடுத்தேன்னா உடம்பு பூரா சொடக்கெடுத் திருவேன் சாக்கிறதை! “திரும்பி பார்க்காமல் நடந்தார் ஏட்டையா!

தனலட்சுமி மீண்டும் விரலை மடித்து நெட்டி முறித்தாள் சீனி வெடி சத்தமாய் மனசில் ஆற்றாமை ஒலித்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top