ஆற்றாத அழுகை

0
(0)

வீடு முழுதும் துக்கம் விரவியிருந்தது. வீட்டில் யாரும் இறக்கவில்லை. எவரும் கவலைக்கிடமாகப் படுத்துக் கிடக்கவுமில்லை. ஒருத்தர் முகத்திலும் சிரிப்பில்லை. உதடுகள் வறண்டு போயிருந்தன. யாரும் உரத்த குரலில் பேசிக்கொள்வதில்லை. பேசும் சில வார்த்தைகளிலும் சலிப்பும் சிடுசிடுப்பும் தொனித்தன. ‘பெரியவீடு’ என்ற பெயருக்கேற்ப அந்த ஊரில் அந்த வீடு ஊரின் நடுநாயகமாக கம்பீரமாக இருந்தது. வீடு முழுக்க ஆண்பிள்ளைகள். கலகலப்பாக இருக்கும். ஒரே ஒரு பெண்பிள்ளை தான்! அக்கம்பக்கத்து பெண் பிள்ளைகள் எல்லாம் இந்த வீட்டின் கொல்லையில் குழுமி அவர்களுக்கான விளையாட்டும், கேலியும் கிண்டலுமாய் கடந்த ஒரு வருஷம் வரை இருந்தது.

அந்தப் பெண்ணின் பெயர் கலைவாணி பெயருக்கேத்த அழகும் தெளிவும் இருந்தது. பெரிய வீட்டின் மூத்தவர் தவமிருந்து பெற்ற ஒற்றை பெண் பிள்ளை. இளைய தம்பிகள் மூவர் வீட்டிலும் பெண் பிள்ளைகள் இல்லை. நாலு குடும்பத்திற்கும் ஒற்றை ரோஜாவாக செல்வச் செழிப்பில் வளர்ந்தது. அந்தப் பெண் உள்ளுரில் பள்ளிக்கு போகும் போது அந்தத் தெருப்பிள்ளைகளே திரண்டு கூடப் போகும்.

கடந்த மூன்று தலைமுறையாய் அந்த வீட்டில் ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை. அந்த வீட்டில் நான்கு ஆண்கள் மூத்தவருக்கு மட்டும் கல்யாணமாகி இருந்தது. மற்ற மூன்று ஆண்களுக்கும் பெண் தர யாரும் முன்வரவில்லை. இத்தனைக்கும் அவர்களுக்கு அந்த ஊர் சுற்றி நஞ்சை, புஞ்சை நிலங்கள் நிறைய, கிணற்றில் தண்ணீர் குறைவில்லை. நல்ல மகசூல்! பணத்துக்கு பணம் சேர்ந்திருந்தது. பையன்கள் மசமசவென்று இருந்தாலும். நடதையில்! கோளரில்லை! அந்த வீட்டில் பெண்குழந்தைகள் விருத்தியில்லை. சாபம் பிடித்தவீடு’ என்று பெயர் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. தம்பிமார்களுக்கு வசதியில்லாத குடும்பத்து பெண்களை நிறைய நஞ்சை புஞ்சைகளை எழுதி வைத்துதான் மணம் முடிக்க வேண்டியதிருந்தது. அவர்களுக்கும் பிறந்தது ஆண் குழந்தைகள் தாம். பெரியவருக்கும் இரு ஆண்பிள்ளைகள். ஜோசியம் பார்த்தார்கள். பரிகாரம் செய்து பார்த்தார்கள். நவீன வைத்திய முறையில் பெண்பிள்ளைகள் பிறக்க வைக்க முடியுமா என்றெல்லாம் முட்டி மோதி ஒரு பலனும் இல்லை. பெரியவருக்கு மட்டும் இருபையன்களுக்குப்பின் ஒரு பெண் குழந்தை மூத்தவருக்குப் பிறந்த அந்த பெண்குழந்தையை தமது குலதெய்வமாய் மனதில் மரியாதையுடன் பார்த்தார்கள். மூன்று சித்தப்பன் சித்திமார்களும் தம் பிள்ளையாய் பாவித்து ஒவ்வொரு பருவத்திலும் விதவிதமாய் ஆடைகள் நகைகள் வாங்கிப் போட்டு அழகு பார்த்தார்கள். நான்கு வீடுகள் தனித்தனியாய் இருந்தாலும் கலைவாணி படிக்கும் நேரம் தவிர விளையாடும் நேரம் தவிர அவளைச் சுற்றி சுற்றி குழுமினார்கள். ஒவ்வொரு மாதம் 15 ஆம் தேதியும் அவளுக்கு பிறந்த நாளாகக் கொண்டாடப்பட்டது. கலைவாணியின் மகிழ்ச்சியைப் பகிர அவளது தோழிகளுக்கெல்லாம் இனிப்புகளும், பலகாரங்களும் கொடுக்கப்படும். அந்த ஊரில் படிக்கும் எல்லாத்தெரு பெண்பிள்ளைகளுக்கும்; நோட்டு புத்தகம் துணிமணிகள் வாங்கித் தந்தார்கள்.

உள்ளுரில் பனிரெண்டாம் வகுப்பு முடித்தாகிவிட்டது. மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தில் மதிப்பெண்கள் பெற்றதால் உள்ளூர் தொலைக்காட்சி ஊடகங்கள் எல்லாம் படை எடுத்து வந்தன. கண்ணுபட்டுப் போகும் என்று தொலைக்காட்சிகளில் முகம்காட்ட பெரியவர் மறுத்துவிட்டார். சித்தப்பன்மார்களும் அண்ணன் வார்த்தையை மறுக்கவில்லை. சித்திமார்களுக்குத்தான் கொஞ்சம் வருத்தம். கலைவாணிக்கு இனிப்பு கொடுக்கும் சாக்கில் தொலைக்காட்சிகளில் தம் முகம் காட்ட வாய்ப்பில்லாமல் செய்துவிட்டதற்கு முனங்கினர். “பனிரெண்டாம் வகுப்போடு போதும்! கல்லூரிக்கெல்லாம் அனுப்ப வேண்டாம்”, என்று சித்தப்பன்மார்கள் வாதிட்டனர்.

“நம்ம வீட்டில் சரஸ்வதியே வந்து பிறந்திருக்கு அது எவ்வளவு படிக்கணுமோ படிக்கட்டும். நாம் வேணும்னா காலேஜ் பக்கத்திலேயே ஒரு வீட்டை வாங்குவோம் அங்கிருந்தபடியே படிக்கட்டும். நாம் வாரம் ஒரு குடும்பம் இருந்து பார்ப்போம். படிப்பு முடிந்ததும் நமக்கு தகுந்த அந்தஸ்த்தில் நல்ல குடும்பத்தில படிச்ச மாப்பிள்ளையா பார்ப்போம்”. என்று பெரியவர் சொன்னதுக்கு மறுபேச்சில்லாமல் உடன்பட்டார்கள். மாதம் ஒருவாரம் நகர வாழ்க்கை அவர்களுக்கும் ஈர்ப்பைத் தந்தது.

கலைவாணி, மகளிர் கலைக்கல்லூரியில் தான் படித்தாள். குடும்பத்தை பெருமைப்படுத்தும் விதமாக படிப்பிலும் சரி, கவின்கலை, ஆடல், பாடல், ஓவியம், பேச்சு என அனைத்திலும் சிறப்புகள் பெற்று பதக்கங்களையும், கோப்பைகளையும் வீட்டை அலங்கரிக்கச் செய்தாள். பல்கலைக்கழகத்தில் முதல் தரத்தில் பட்டம் பெற்றது பத்திரிக்கை செய்திகளில் உலாவந்தது. மூன்று தலைமுறையாகப் பெண்ணே பிறக்காத குடும்பத்தில் நம்ம குலதெய்வமே வந்து பிறந்து பாட்டன் பூட்டன் கவலையெல்லாம் தீர்த்து வருகிறது என்று பெரியவர் மனைவியிடம் சொல்லி அன்னம்பாரித்துப் போனார்.

காரில், கல்லூரிக்கு சான்றுகள் வாங்கி வரப்போனாள். அண்ணன் வெளியே காத்திருந்தான். ஒரு மணி கடந்து மதியமும் நகர்ந்து மாலை வந்தது. போன தங்கை வரவில்லை. அண்ணன் பதறிப்போய் முதல்வர் அலுவலகத்தில் கேட்டான். காலையிலேயே வந்ததும் மார்க்சர்டிபிகேட், டி.சி எல்லாம் வாங்கிட்டு போயிருச்சே என்றனர். பதறினான். அப்படி எங்கே, போனது, பக்கத்தில் ஹோட்டல், சினிமா தியேட்டர் எல்லாம் தேடினான். ‘வீட்டிற்கு வந்ததா எனத் தயங்கி தயங்கித் கேட்டான். ‘வரவில்லையே என்றதும் நாலு வீட்டாருக்கும் பயம் பற்றிக் கொண்டது. நாலாதிசையிலும் சினேகிதிகள், பேராசிரியர்கள் வீடெல்லாம் பதற்றத்தை தம்முள் புதைத்து கேட்டு திரும்பினர். காவல்நிலையத்துக்கு போனால் அசிங்கமாகிடுமே என்று தயங்கினர்.

பெரிய வீட்டில் பெண்கள் முந்தாணையால் வாயைப் பொத்திக் கொண்டு கேவினர், புலம்பினர். ஆண்கள் புழுவாய்த் துடித்தனர். ‘யாரோடும் பழகுறதாக சந்தேகமே இல்லையே! யாரும் காசுக்காகத் கடத்திட்டாங்களோஞ் என்னமோ எதோ, வாழைத்தண்டாட்டம் இருந்த பிள்ளை எங்கே, யாருகிட்டே சிக்கிகிட்டு வாடுதோஞ் சாப்பிட்டதோ, சாப்பிடலையோஞ்” என்று புலம்பல்கள் திசையிழந்த கருவண்டு போல நாலு சுவருக்குள் சுற்றி சுற்றி வந்தது. கலைவாணி காணாமல்போன விஷயம் ஊருக்குத் தெரிவதற்குள் எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து வீட்டிற்குள் அழைத்து வந்து விடவேண்டுமென்ற எண்ணம் அலைக்கழித்தது. மனக்குமுறலையும் ஆதங்கத்தையும் வார்த்தைகளில் வெளிப்படுத்த இயலாத மவுன அழுத்தம், புற்றிலிருந்து வெளிவரும் பாம்பின் மூச்சாக வெப்பபெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தனர்.

பெரியவரின் அலைப்பேசி ஒலித்தது. வீட்டிற்குள் இருந்த பனிரெண்டு பேரும் உயிர்மூச்சை காதுக்குள் நிறுத்தி படபடப்பும் பரபரப்புமாக நின்றனர். மாவட்டக் காவல்துறை அலுவலர் பேசினார். “கலைவாணி ஒரு இளைஞனுடன் வந்து தஞ்சம் புகுந்திருக்கிறாள் மாலை மாற்றி கல்யாணக் கோலத்துடன் இருக்கிறாள். நீங்கள் கிளம்பி வாருங்கள் பேசிக் கொள்ளலாம்”. மூன்று கார்களில்; போனார்கள். நாற்பது நிமிடப் பயணம். குடும்ப மானம், சாதி, கௌரவம், இனமானம், வளர்த்த வளர்ப்பு, காட்டிய பிரியம் எல்லாம் சொல்லி எரிமலைக் குமுறலாக சொந்தளித்தனர். யாரும் எதுவும் பேசி குழப்ப வேணாம். அங்கே போய் சூழ்நிலைக்கேத்தவாறு சாந்தமாய்ப் பேசுவோம். பிள்ளையைக் கூட்டிட்டு வர பார்ப்போம்’

“ஆமாம் அண்ணன், அன்னைக்கே மேலே படிக்க வைக்க வேணாம்னு சொன்னோம். நீங்க கேட்கலை இப்பவும் எங்களை பேசவிடாம வாயை அடைக்கிறிங்க” அண்ணி தலையிட்டாள் “தம்பிகளா நமக்குள்ள எது வேணுமாலும் பேசிக்கிலாம். போலீஸ்ஸ்டேஷன்ல போய் ஆளுக்கொன்னா பேசினா நமக்குத்தான் அசிங்கம் அவரு ஒருத்தரே பேசட்டும். நடக்கிறது நடக்கட்டும் யாரும் நிதானத்தை விட்டுற வேணாம்” அவர்கள் தங்களுக்குள் மவுனப்பார்வையை பரிமரிக் கொண்டனர்.

காவல் நிலையத்துக்குள் நுழைந்தனர். புதுத்தம்பதிகள் சட்டென்று எழுந்து கையெடுத்துக் கும்பிட்டனர். ஈரம் உலர்ந்த நாக்கில் அம்மா, அப்பா என்று கலைவாணி சொன்னாள். குரல் எழவில்லை. பெரியவர் அவர்களை சுட்டெரிப்பது போல் பார்த்தார். தன் பார்வையின் வெக்கையை உணர்ந்த அவர், காவல்துறைக் கண்காணிப்பாளரை நோக்கி பவ்யமாகக் கும்பிட்டார். அம்மா, சித்திகள், சித்தப்பா, அண்ணன்கள் அவர்கள் இருவரை நேரடியாக பார்ப்பதைத் தவிர்த்து தமது கோபத்தை இறுகிய முகங்களில் வெளிப்படுத்தினர். அம்மா கண்ணீரைத் துடைப்பது போல் முந்தாணை நுனி மறைவில் பார்த்தாள். பையன் கருப்பாக இருந்தாலும் களையாகத் தெரிந்தான்.

கண்காணிப்பாளர், கலைவாணியை அழைத்து “ஏம்மா, நீ உங்க அப்பா அம்மாவோட பேரியாஞ்.” “இல்லங்க சார், நான் மனசு விரும்பிதான் இவரோட போனேன். எங்க அம்மா, அப்பா நல்லா வளர்த்தாங்க அவங்கமேல் எனக்கு ரொம்ப பிரியமும் மரியாதையும் உண்டு. ஆனால் இந்தக் கல்யாணத்தை அவங்க விரும்ப மாட்டாங்க எங்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு வேண்டும். அதனால்தான் நான் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி செய்தேன். அதற்காக நாங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்டுக்கிறோம்,” என்று சொல்ல, இருவரும் தரையில் விழுந்து கும்பிட்டு எழுந்தார்கள். கண்ணீர் திரையிட, கோபம் கொப்பளிக்க பெரியவர் முதற்கொண்டு எல்லோரும் முகத்தை சுவற்றுப் பக்கம் திருப்பிக் கொண்டார்கள். அம்மாவின் கண்கள் ஊற்றெடுத்து வழிந்தது. அழுத்தமான மௌனம் கோபத்தின் உச்சத்தைக் காட்டியது.

கண்காணிப்பாளர் கேட்டார். “நீங்கள் புகார் எதுவும் கொடுக்க விரும்புறிங்களாஞ்” பெரியவர், தம்பிகள், கொழுந்திகள், மகன்கள் முகங்களை பார்த்தார் அவர்களது இறுகிய உதடுகளுக்குள் எழும் கோபக்குமுறல்கள் முகங்களில் கோரமாய் நிழலாடின. “அய்யா, நாங்க புகார் கொடுத்து என்ன செய்ய? பெத்து, இருபது வருஷமா வளர்த்து ஆளாக்கின எங்களை நொடியில் தூக்கி எறிஞ்ச பின்னே என்ன செய்யிறது. அவ இஷ்டம் போல வாழ்ந்துட்டுப் போகட்டும். ஆனா ஒன்னு. சொந்தம் பந்தம், சொத்து சுகத்தை விட்டு உதறிட்டு வந்த கலைவாணியை அந்தப் பையன் கண்கலங்க வச்சுதுன்னா நாங்க சும்மா விடமாட்டோம். இதை மிரட்டலா சொல்லலை. பெத்த பிள்ளை கண்கலங்கக் கூடாதுங்கிற ஆதங்கத்தில் சொல்றேன். கோவிச்சுக்காதீங்க அய்யா!”

காவல்துறைக் கண்காணிப்பாளர் கலைவாணியையும் கணவனையும் பார்த்தார். “இந்த மூன்று வருஷம் நாங்க ரெண்டுபேரும் வேறுவேறு கல்லூரிகளில் படித்தாலும், கவிதை, பாட்டு, பேச்சுப் போட்டிகளில் சக போட்டியாளர்களாக கலந்து கொண்ட போதுதான் சந்தித்தோம். மனசை பரிமரிகிட்டோம். சாதிப்பிரச்சினை வரும்னு நான் முதலில் மறுத்தபோதும் என்னை நம்பி வந்த கலைவாணியை எனது உயிராகப் பாதுகாப்பேன். இதை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடமாட்டேன் சார்”. என்றபடி கலைவாணியின் முகத்தைப் பார்த்தான். அவள் மளமளவென்று கழுத்தில், காதில் போட்ட நகைகளை எல்லாம் கழற்றி காவலரிடம் கொடுத்தாள். “நான் சொந்த முயற்சியில் என் மனைவிக்கு நகைகள் வாங்கித்தருவேன்” என்று சொல்லி எல்லோரையும் பார்த்து கும்பிட்டான்! கடல்கரையில் கவலை தொலைக்க அலை பார்த்து நிற்கையில் கால்களுக்கு கீழே மணலை அலை பறிப்பது போலுணர்ந்து முகத்தை இறுக்கி கால்களை உதறி வலுவாக ஊன்றி நிற்பதுபோல நின்றனர். கண்களில் நீர்தாரைகள் மின்னின. கண்காணிப்பாளர் பெண் தரப்பாரின் கடுகடுத்த முகங்களை ஊடுறுவி பார்த்தார். “சரி, அய்யா, ஒரு தாளில் எங்களால் இந்தப் பெண்ணுக்கோ பையனுக்கோ பாதிப்பு வராதுன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போங்க” “சார், அவளுக்குப் போட்ட நகைகளை அவளே கொண்டு போகட்டும். எங்களுக்கு வேண்டாம். எங்கே இருந்தாலும் அவளால் எந்த அவச்சொல் எங்களுக்கு வரக்கூடாது. எங்கபேர் இழுபடக்கூடாது’ என்று மூத்த சித்தப்பா சொன்னார். பெரியவர் நெகிழ்ந்து தொண்டையை கணைத்து சரி செய்து கொண்டு காவலர் கொடுத்த தாளில் எழுதிக் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு துண்டை உதறினார். எல்லோரும் பெருமூச்சுவிட்டபடி காவலரை கும்பிட்டுவிட்டு மகள் பக்கம் திரும்பாமல் வெளியேறினர். “எளிய சாதிக்காரனோடு ஓடிப்போயிட்டா, சுரணை இல்லாம் எழுதிக் கொடுத்திட்டு வர்றிகளே” என்று மூத்த சித்தப்பா முனங்கினார். “யாரும் எதுவும் பேசவேணாம். சாதிக்கௌரவத்தை நாங்க நல்லா, அனுபவிச்சிட்டோம்! இதுக்கு மேலபேசினா நடக்கிறது வேறஞ்ஞ் என்றார் பெரியவர்.

அவர்கள் வெளியேறியதும் கண்காணிப்பாளர் அரைமணிநேரம் புத்திமதிகள் சொல்லி ஒரு காவலர் துணையோடு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.

அன்று இருண்டவீடு தான். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்றுவரை மீளவில்லை.

***

காலை பதினோருமணி வாக்கில் அலைபேசி சினுங்கியது. பெரியவர் எடுத்தார். புது எண்கள் மினுமினுத்தன. யாரென்று விசாரித்தார். ‘அப்பா’ அவரது உடல் நடுங்கியது. மீண்டும் யாரென்றார். அப்பா என்ற நெகிழ்வான குரல் சொன்னதை எல்லாம் இறுக்கமான உடலோடு கேட்டார். கண்கள் பொலபொலவென்று நீரை உருட்டின. அலைப்பேசியை அணைத்து விட்டு வீட்டுக்குள் வெகு நாளாகத் திறக்காத அறையைத் திறந்தார். இதை எல்லாம் கவனித்த அவரது மனைவி தனது மூத்தமகனிடம் அப்பாவின் விசித்திரப் போக்கை சொன்னாள். அவன் தனது சித்தப்பாமார்களிடம் சொன்னான். அவர்கள் எதேச்சையாக முற்றத்தில் அமர்ந்திருப்பது போல் வீட்டுக்குள் நடப்பதை எல்லாம் காதுகளால் கூர்ந்து கவனித்தார்கள் பெரியவர் கையில் ஒரு பையோடு வெளிவந்தார். ‘பையில் என்ன, ஏது என்று பார்வையால் கேட்டாள் மனைவி. “என்னோடு கிளம்பி வா” இறுக்கமான குரலில் சொன்னார். சேலையை சரிசெய்து கொண்டு பின் தொடர்ந்தாள். முற்றத்தில் மகன்களும் தம்பிமார்களும் குழுமியிருப்பதை ஓரக்கண்ணால் கவனித்தவர், காணாதது போல் செருமியபடி டிரைவரை அழைத்து காரை எடுக்கச் சொன்னார். வண்டி நகர்ந்தது. தம்பிமார்களும் மகன்களும் பெரியவரின் விசித்திரப் போக்கை பார்த்து “எதோ விபரிதம் நடக்கப் போகுதோஞ்” என்று அவர்களும் கார்களில் தற்காப்பு ஆயுதங்களுடன் பின்தொடர்ந்தனர்.

ஒருமணிநேரப் பயணம் கணவனும் மனைவியும் வாய் திறக்கவில்லை. மனைவி கணவனை பார்வையால் கெஞ்சினாள். அவர் வாய் திறக்கவில்லை அவர்மனதில் பழங்கதை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.

***

மூன்று தலைமுறைகளுக்கு முன் அவரது பூட்டன் காலத்தில் பூட்டன்களுள் ஒருவர் தன் பண்னையில் வேலைபார்த்த சேரிப்பெண்ணோடு ஓடிப்போய் விட்டார். அவருக்கு ‘சொத்தில் பங்கில்லை சொந்த பந்தம் அறுந்து போச்சு’ என்று மிரட்டிப் பார்த்தார்கள். அவர் மசியவில்லை!. சேரிப் பெண்ணை கைவிட்டு விட்டு வர மறுத்துவிட்டார். சொத்தும் சொந்தமும் வேண்டாமென்று மறுதலித்து விட்டார்! தம் பெண்ணோடு வந்தவருக்கு எந்த நேரத்திலும் ஆபத்தென்று ராத்திரியில் சேரி ஆண்கள் எல்லாம் அவருக்கு பாதுகாப்பாக ஒரு குடிசையில் படுத்துக் கிடந்தனர். தன் குடும்ப கௌரவத்தை கெடுத்தவன் நம் முன்னால் இருக்கக் கூடாதென்று அந்தக்குடிசைக்கு தீ வைத்து விட்டனர். சேரியில் பதினாறு ஆண்கள் கருகிய நிணவாடை சுற்றுக் கிராமங்களுக்கெல்லாம் பரவியது. பதினாறு விதவைகளின் ஓலமும் கதறலும் அந்தப்பகுதியை கலங்க வைத்தது. வயிறு எரிய என்ன சாபம் விட்டார்களோஞ் நியாயம் கேட்க எவரும் வரவில்லை.

ராப்பகலாய் கதறியழுத சேரிப்பெண்கள் எட்டாம் நாளன்று தீ வளர்த்து குதித்தனர். மற்றவர்கள் இடம் பெயர்ந்தனர். சேரியே சுடுகாடாக நிணம் நரியது. சேரி நாய்கள் எல்லாம் ஊரைப் பார்த்து குரைத்து குரைத்து உயிரை விட்டன.

***

கார் நகரின் ஒதுக்குப் புறத்திலிருந்து அரசு மருத்துவமனை முன் நின்றது. பெரியவரின் மனது சொல்லவொண்ணா துயரத்தில் துடித்தது. என்ன ஆயிற்றோ ஏது ஆயிற்றோ. வாயில் சேலையை வைத்து மனைவி கேவினாள். பெரியவர் சற்று இறுக்கம் தளர்ந்து அவளைப் பார்த்தார் கணக்கு நேர் ஆயிடுச்சு’ என்று முனங்கினார். அவளுக்கு புரியவில்லை . பதற்றம் கூடியது. அவர் விரைப்பாக கைப்பையோடு நடந்தார். அவள் ஓட்டமும் நடையுமாய் பின் தொடர்ந்தாள்.

மருத்துவ மனையின் வலப்புறம் சவக்கிடங்கு அருகில் காவலர்கள் கூட்டமாய் நின்றிருந்தார்கள் சோகத்தோடும், கதறலோடும் பெண்கள், பெரியவர்கள் நின்றிருந்தனர். பெரியவர் இடப்புறம் நேரே உள்ளே போனார். ஒரு நர்சிடம் விசாரித்தார். அவர் உள்பக்கமாக கைநீட்டி இடப்புறம் திரும்பச் சொன்னார். பெரியவரின் நடை வேகம் கூடியது. அவள் பின்னால் ஓடினாள். மகப்பேறு பிரிவில் நுழைந்தனர். கலைவாணியின் கணவன் சோர்ந்த முகத்துடன் நின்றிருந்தான். இவர்களை பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டான். அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை அவன் அவரைக் கடந்து கையைக் காட்டியபடி முன்னால் ஓடினான்.

அந்தப் படுக்கையில் துவண்ட செடியாக கலைவாணி படுத்திருந்தாள். பக்கத்தில் இளம் ரோஜாவாக ஒரு பெண் குழந்தை! பெரியவரைப் பார்த்ததும் ‘அப்பா, அம்மா’ என்ற மெல்லிய குரலில் சொல்லி எழ முயன்றாள். பெரியவர், அவளை கையமர்த்தி படுக்கச்சொல்லி கேவிகேவி அழுதார். பிள்ளையைத்தடவிப் பார்த்தார். மகளின் தலையைக் கோதினார். அம்மா மகளின் கன்னத்தை தடவி நெட்டிமுறித்தாள். பெண்குழந்தை முனங்கி தன் இருப்பைக் காட்டியது. பின்னால் ஓடி வந்த சித்தப்பாமார்கள் “பொம்பளைப் பிள்ளை! பொம்பளைப் பிள்ளை!” என்று சந்தோஷ குரல் கொடுத்தனர். சுற்றி இருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்த னர்.

பெரியவர் கலைவாணியின் கணவனைப் பார்த்தார். அவன் சொல்லவியலா உணர்ச்சியில் நெகிழ்ந்து நின்றான். மாப்பிள்ளை “கணக்கு நேராயிருச்சு” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கணவனும் மனைவியும் அவன் சொன்னதின் அர்த்தம் புரியாமல் விழித்தனர். “மாப்பிள்ளை டவுனுக்குள்ளேயே வீடு பாருங்க! நாங்களும் பேத்தியோடே இருக்கோம். இந்தாங்க வாணிக்கு சேரவேண்டிய பரம்பரை நகைகள்!”

பின் தொடர்ந்து வந்தவர்கள் நெகிழ்ந்துபோய் வாணியின் படுக்கையைச் சூழ்ந்து கொண்டார்கள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top