ஆரோகணம்

0
(0)

வீட்டுக்குள் அப்பா வெறிபிடித்து ஆடிக்கொண்டிருந்தார். அம்மா, வார்த்தைகளில் பம்பரம் விட்டுக்கொண்டே வீட்டுவேலைகளிலும் கவனமாய் இருந்தது. அண்ணன்கள் கோவிந்தும் ரெங்கனும் ஆளுக்கொருபக்கமாய் சுவரில் சாய்ந்துகொண்டு கைகளையும் கால்களையும் உதறிய வண்ணம் தங்களது ஆத்திரத்தைக் கொட்டிக்கொண்டிருக்க அத்தனைக்கும் மூலகாரணமான கமலா அக்காவோ உள்வீட்டுக்குள் அடைந்து கொண்டு தேம்பிக்கொண்டிருந்தது. சாரதிமட்டும் எப்போதும்போல மடியில் புத்தகத்தை வைத்துப் புரட்டிக்கொண்டிருந்தான்.அவ்வப்போது எழும் அக்காவின் விசும்பல் சத்தம் அவனது பாடத்தை தொந்தரவு செய்ததது

 

ப்ளஸ்டூ முடித்ததும் அடுத்த வருசம் சாரதியை கோயம்புத்தூர் காலேஜில் சேர்த்துவிடுவதாக அக்கா அவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தது. “”ஆனா நீ மெரிட்ல பாஸாகிடணும் தம்பி . .அக்காவால டொனேசனெல்லாம் தரமுடியாதுப்பா .. சரியா..? “” சொல்லியபோது அக்காவின நீளமான கண்கள் அகலவிரிந்து அழகு காட்டின. .

 

அக்கா நர்ஸிங் கோர்ஸ்முடித்து பெரியகுளத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கிறது. அக்காவுக்கும் சாரதிக்கும் பன்னிரண்டுவயசு வித்தியாசம். அதனால் சின்னவயசிலிருந்தே சாரதிக்கு அக்காதான் எல்லாமும். அக்காவின் மடியிலேதான் அவனது வாசம். அக்காவுக்கு கலியாணம் ஆகிறவரைக்கும் ராத்திரி உறக்கம்கூட அக்காவோடுதான். சாரதிமேல் அக்காவின் அக்கறை பார்த்து எல்லோரும் கேலிபேசுவார்கள். ‘’ கமலா , தம்பியக்கொண்டு பிள்ள வளக்கப்பழகிக்கிட்டா…போறஎடத்தில மாமியாக்காரிக்கு ஒருபாடு மிச்சம்.”

 

“”கமலா என்னைக்கி சாரதிய தம்பியாப் பாத்தா… ஆத்தாக்காரி என்னைக்கி பெத்து எறக்கிவிட்டாளோ  அன்னைலருந்து தாம் பெத்தது போலத்தான சீராட்றா..””

 

அக்கா கலியாணம் ஆகி வீட்டைவிட்டுப் போனபிறகுதான் சாரதிக்கு கஷ்டமாய் இருந்தது. எது ஒன்றுக்கும் அம்மாவை நாடவேண்டி வந்தது. அக்காளிடம்போல அம்மாவிடம் அடம்பிடித்து எதையும் கேட்கமுடியவில்லை

 

“”இந்த கொஞ்சல் குலாவல் எல்லாம் எங்கிட்டச் செல்லாது மக்னே..! என்று அம்மா கண்டிசன் போட்டுப்பேசியது. அப்போதிருந்தே சாரதிக்கு வீடு உறுத்தலாய்த் தெரிய ஆரம்பித்தது. அக்காவைப் பார்க்க அக்காளோடு பேச, அக்காளோடு இருக்க இன்னமும் ஆவல் மேலிட்டது சாரதிக்கு.

 

க்காவை பக்கத்துத் தெருவில்தான் க்ட்டிக்கொடுத்திருந்தார்கள். அங்கே அடிக்கடி போகக்கூடாதென அப்பா கண்டித்துச் சொல்லி இருந்தார். “”கொண்டாங் குடுத்தான் வீட்டுக்கு கூப்புடாமப்ப்போறதுக்கு நீ என்னா பிச்சக்காரனாடா..?’’ எனவும் கேட்டார்.

 

அதுவரை பிச்சைக்காரர்களைக்கண்டு ஒதுங்கிப் போய்க்கொண்டிருந்தவன் அன்றிலிருந்து அவர்களை உற்றுப் பார்க்கத் துவங்கினான்.

 

உண்மையில அவர்கள்தான் பாக்கியவான்களாய்த் தெரிந்தனர். யார்வீட்டுக்கும் எப்போது வேண்டுமானாலும் எந்தநேரமும் யாருடைய தலையீடுமில்லாமல் போகலாம் வரலாம்.

 

ஒருநாள் சாரதி தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த சமயம் வீதியில் ஒருபிச்சைக்காரத் தாத்தா கண்தெரியாம்ல் தடுமாறிக் கொண்டிருந்தார். வீடுஎது வாசல் எதுவென புரியாமல் சாக்கடைப்பகுதியிலும் சந்துக்குள்ளுமாய் நின்று பிச்சை கேட்டுக்கொண்டிருந்தார். “”கண்ணுல வெளிச்சம் இல்ல சாமி..” சாரதிதான் அவரது கோலைப்பிடித்து ஒவ்வொரு வீட்டின் வசலிலும் சரியாக நிறுத்தினான்.”கண்ணுல்லாத சீவாத்திக்கு கொஞ்சம் பழசு இருந்தா ஊத்துங்க தாயி. உங்க புள்ளகுட்டிக நல்லாருக்கும்” எல்லாவீட்டுக்கும் ஒரேமாதிரியாகவே பிச்சைகேட்டார். அப்படியே நடத்தி அடுத்த தெருவிலிருக்கும் அக்கா வீடுவரைக்கும் கூட்டிவந்தான்.

 

அக்காவுக்கானால் சாரதியைக்கண்டதில் வாய்கொள்ளாத சந்தோசம் “”வாடா எம் பிச்சக்காரா..”  அப்படியே அவனை நெஞ்சோடு கட்டிக்கொண்டது.

 

கொஞசநாளில் அக்கா வீட்டுக்கு வந்துவிட்டது. அது வந்தநாளிலிருந்து வீட்டில் ஒரே களேபரம்தான். அக்காவைப்பற்றியோ மாமாவைப்பற்றியோ ஏதாவது பேச்சுவந்தால் போதும், அப்பாவிலிருந்து அண்ணன் அம்மா என அத்தனைபேரும் குதித்துத் தீர்ப்பார்கள். அக்கா அழும். சாரதிக்குப் பாடம் கெடும். பள்ளிக்கூடத்தில் அறைவாங்கி சாரதிக்குக் கன்னம் வீங்கும்.

 

மாமா நல்லவர்தான். தேனியில் தட்டச்சுப்பள்ளி வைத்து சொந்தமாக நடத்தி வருகிறார். அது அவரது அப்பா ஆரம்பித்தபள்ளி. வீட்டுக்கு ஒரேபிள்ளை என்பதால் அதனை விடாமல் பராமரித்து வருகிறார்.  கூடிய சீக்கிரத்தில் கம்ப்யூட்டர் மெசின்களை இறக்கி ‘நெட்கபே’ வாக மாற்றப் போவதாய்ச் சொன்னார்..  ஊரில் பத்தாம்வகுப்பு, பிளஸ்டூ முடித்த பிள்ளைகள் இடைக்காலத்தில் இஙுகுவந்துதான் டைப்ரைட்டிங் கற்றுக்கொள்வார்கள். சாரதியும் கூட பத்தாம்வகுப்பு முடித்த நேரத்தில் அவரிடம்தான் டைப்பிங் பழகினான்.

 

அந்த இன்ஸ்டிட்யூட்டில் ஏழெட்டு மெசின்கள். எந்தநேரமும் ச்சடச்சடவென இரைச்சலை விதைத்தபடி இருக்கும். பேச்சரவம் எழும்போது வாயசைவு மட்டுமே தெரியும் சத்தமாய்ப் குரல்விடுத்தால்தான் பிரயோசனம். ஆனால் டைப்பிங் நேரத்தில் பேசக்கூடாது. அதுவும் மாமா இருந்தாரென்றால் இன்னமும் கறார்தான். ஆண்பையன்களை பெண்பிள்ளைகளோடு சேர்ந்து உட்கார வைக்க மாட்டார். ஆணும் பெண்ணும் தவறியும் பேசிடக்கூடாது. “”இது பள்ளிக்கூடம். பார்பர்சாப் கிடையாது.கோயிலக்காட்டியும் அமைதியா சுத்தபத்தமா நடந்துக்கணும். சந்தேகம் கேக்கணும்னா இன்ஸ்ட்ரக்டர் கிட்டத்தான் கேக்கணும்.”” என்பார்.

 

A S D F  H J K L 

 

என டைப்பிங்கில் முதலடி எடுத்துக்கொடுப்பதில் துவங்கி, இறுதிக்கட்டமான Essay speed முடிப்பதுவரை அவர்தான் எல்லோருக்கும் பொறுப்பாய் இருந்து சொல்லிக்கொடுப்பார்.

 

மாமா, தலையை மழுங்கச்சீவி நேர்வகிடெடுத்து இரண்டுபக்கத்து முடிகளையும் சுருள்சுருளாக சுருட்டி டிசைன் செய்ததுபோல தொங்கவிட்டிருப்பார். அது பிடரிவரை ஒரேமாதரி சுருண்டுகிடக்கும். நெற்றியில் பெருவிரல் கொண்டு நீளமாய் திலகம் இழுத்துவிட்டிருப்பார்.அது தீச்சுடர்போல நிழலிலும் ஜொலிக்கும். ஏனோ மாமாவை எல்லோரும் இட்லர் என்றே கூப்பிட்டார்கள். ’அவரவர்க்கான வேலை, வேலைக்குண்டான பேச்சு, பேசுவதற்கான இடம், பொருள், காலம் என அத்தனையும் சரியாகப்  பொருந்தி இருக்கவேண்டும் என விரும்புவார். அதேபோலத்தான் வீட்டிலும் வைத்துக்கொள்வாராம் கொஞ்சம் மாறினாலும் குடும்பம் கெட்டுப்போகும் என்கிற பயம் என்றார்கள்.

 

ஆண்மை = பெருக்கம்

 

பெண்மை = ஒடுக்கம்

 

மெய்மை = சுவர்க்கம்

 

இந்த வாசகத்தை பெரிதாக அச்சடித்து வீட்டின் மைய ஹாலிலும், டைப்பிங் சென்டரிலும் எல்லோரும் பார்க்கும்படியான இடத்தில் ஒட்டி இருந்தார்.

 

வீட்டிலும் இன்ஸ்டிட்யூட்டிலும் கத்தரிக்கோலாய்த் தெரிகிற மாமா, வீதியில் சாரதியைப்பார்த்தால் மட்டும் குழைவார். “ஏ மாப்ளேய் .. அட்ஜேய்.. யேம்ளா, வக்காள்ளி..” என சீண்டி உருகுவார். அவனைக்கேட்காமலேயே அவனுக்கு கடைகளில் தின்பண்டம் வாங்கித் தருவார்.’’செலவுக்கு வேணும்னாக் கேள்றீ..”” என்று ஐந்து, பத்துரூபாய்த் தாள்களை சாரதியின் சட்டைப்பையில் திணித்து விடுவார். அதே மாமா வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், என்சிசி கேம்பஸ் போல ஒரே விறைப்புத்தான். பேச்சுக்கள் அத்தனையும் சட்டமாகவே. முளைவிடும்.

 

“அன்னைக்கே தலதலயா அடிச்சுக்கிட்டே எவெஒருத்தெ பொட்டச்சிகணக்கா உச்சி வகிடெடுத்துத் திரியிறானோ அவன நம்பக்குடாது. ஊரக்கெடுத்த பொண்டுகப் பயலுக. மீறிப்போயி செகப்புத்தோலுன்னு மயங்குனீக. இப்ப..? தொவட்டிக்கிட்டு அடிக்கிறான்..னா பெத்துக்கங்க..” ரெங்கா அண்ணன் சினிமா நடிகரைப்போல கண்களைப்பிதுக்கி உடம்பைத் திருகிக்கொண்டு பேசியது.

 

“வீட்டப்பத்தியோ வீட்டாளுகாளாப் பத்தியோகூட ஆயிரம் சொல்லித் தொலயட்டும். பேச்சோட நிக்காம பொட்டப்பிள்ளைய கைநீட்றான்னா… அவெந்தே ஆம்பள மத்த எல்லாரும் சேலயச் சுத்திகிட்டுத் திரியறம்னு நெனப்பு அவனுக்கு.” கிட்டத்தட்ட முன்னூறுதரம் இதையே சொல்லி இருப்பார் அப்பா.”இருவத்தஞ்சு வருசமா கிளிக்கூண்டுல வச்சுக் காப்பாத்துன மாதிரி வெய்யில்படாம வளத்தபிள்ளய இப்பிடி ’வாருவாறா’ அடிச்சு கொடுமப் படுத்தறானே…! “

 

அந்தவார்த்தையை அப்பா சொல்லிமுடித்ததும் அக்கா ரெம்பவும் அழுதது. நகக்கீறல்களும், பல்தடமும் படிந்த கைகளையும், கால்களையும் தடவித்தடவி வேதனைப்பட்டது.

 

“வக்காளவோலி அந்த இட்லர் தேவிடியாப்பயலுக்கு ஏங்கையாலதேஞ் சாவு. நாயத்துக் கெழமச் சந்தையில அவனுக்குன்னு தேடிப்பிடிச்சு வாங்கி வச்சிருக்கே சூரிக்கத்தி….” கருப்புப்பிடிபோட்ட முனைசிறுத்த நீளமான சூரியை தனது பேண்ட் பாக்கட்டிலிருந்து எடுத்துக் கண்பித்தான். கோவிந்தண்ணன். “தாயளி, ஒரே குத்துத்தே குத்தி இழுத்தா கொடலு குந்தாணியிலருந்து, ஈரலுகீரலுன்னு அவக ஆத்தகிட்ட குடிச்ச பாலுவரைக்கும் அத்தனையும் சப்சாடா இழுத்துகிட்டு வந்துரும். ஆ..மா…” கண்களில் வெறியேற எல்லோரும் பார்க்க சூரியை அடுப்படி சன்னல் கட்டையில் வைத்தான்.

 

சமையல் செய்துகொண்டிருந்த அம்மா அண்ணனின் கர்ஜனையில் குடுகுடுவென ஓடிவந்து சூரியை கீழே.தள்ளிவிட்டது. “வாணாண்டா கோய்ந்து. முள்ளங்கி மாதரி முழுசா மூணுபிள்ளைகளப் பெத்தவெ.. நீவாட்டுக்கு குத்துவேங் கொதறுவேன்னு கூறுகெட்டதனமா பேசீட்டுத்திரியாத.. பிள்ளகுட்டிக பேதலிச்சுப் போகும்.” என அவனுக்குப் புத்திசொல்லிவிட்டு, “கேவலப்பட்டபயலுக்கு பிள்ளயக்குடுத்து எங்குடும்பத்த இப்பிடி முச்சந்தில நிறுத்திப் பொலம்ப விட்டுட்டானே பாவி.” என அம்மாவும் தன் பங்குக்கு மாமாவைத் திட்டியது.

 

வீட்டில் அம்மாவிலிருந்து அப்பாவிலிருந்து எல்லோருமே சாரதியை அதட்டுவார்கள். அதும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுகூட தொட்டுக்க என்ன இருந்தாலும் ஊறுகாய் இல்லாவிட்டால் கடைக்குப்போய் வாங்கிவர சாரதிதான் போக வேண்டும் சாப்பிட்டுமுடித்துப்போகிறேன் என்றாலும் சம்மதிக்காது. அசிங்க அசிங்கமாகத் திட்டும். அந்தமாதரி வார்த்தைகளைக் கேட்கவே சாரதிக்கு பிடிக்காது. பள்ளிக்கூடத்தில் கூட அந்தமாதரிப்பேசுகிற பையன்களோடு சேரமாட்டான். அதனாலேயே வீட்டில் சண்டை என வருகிறபொழுதெல்லாம் ஒன்று வெளியில் எழுந்து போய்விடுவான். அல்லது காதுகளை இறுகப் பொத்திக்கொள்ளுவான். யாரிடமும் அந்தநேரம் பேச்சுக்கொடுக்க மாட்டான். தவிர தன்னை எதுகுறித்தாவது ஒப்பிட்டு ஒரு வார்த்தை நாரசமாகப்பேசினாலும் சாரதிக்கு முணுக்கென கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டுவந்துவிடும். சமயத்தில் அழுதும் விடுவான்.

 

அந்த நேரம் அக்கா அருகிலிருந்தால் சாரதியின் முகத்தை இருகைகளாலும் ஏந்தி தன்முகத்தோடு ஒட்டவைத்துக்கொள்ளும். “அழாத அழாதடா தம்பி…” சாரதியின் கண்களில் இருந்து வழியும் நீர் இருவரது கன்னங்களையும் நனைத்து கீழே சொட்டும். பஞ்சுத்தலையணையாய் அக்காவின் இடுப்பைச் சேர்த்துக்கட்டிக்கொள்ளுவான். அக்காவும் அவனது முதுகைத்தடவிக்கொடுத்து த்ன்னோடு சேர்த்தணைத்துக்கொள்ளும்.

 

அதேபோல அக்கா பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியில் வரும்போது சாரதி இருந்தானென்றால் தன் ஈரக்கைகளை அவனது கன்னத்தில் பதிக்கும் அதுஅவனுக்கு ரெம்பவே பிடிக்கும் அக்காவின் உள்ளங்கையின் குளிர்ச்சி ஜிலுஜிலுவென கன்னமெல்லாம் குளிரும். அப்போது அக்காவின் கையில் மஞ்சள் பூசியிருக்கும். குளிக்கிறபோது அக்கா முகத்துக்கு மட்டுமல்லாது கெண்டங்கை, பாதமெல்லாம் மஞ்சள் தடவிக்கொள்ளும். அப்போதுதான் ஆண்களைப்போல முடிவளராதாம். அக்காவின் கைகள் கரண்டுக்கம்பிபோல வழுவழுவென வழுக்கும். ‘’கமலாவப் பாக்கணும்னா அவ மஞ்சத்தேச்சுக் குளிச்சுவாரப்ப பாக்கணும். தகதகன்னு மீனாட்சியம்மனப்போல தங்கமா மின்னுவா பாரு.” என்று ராஜேஸ்வரி சித்தி சொல்லும்.

 

இப்போதெல்லாம் அக்கா உடம்பு முழுக்க மூடுகிறமாதிரி சுடிதார் ஒன்றைப் போட்டுக்கொள்கிறது. கழுத்தும் முகமும் மட்டும் வெளித்தெரிகிற பாணியில் முழுக்கைச்சட்டை அணிந்து வடநாட்டுப்பெண்ணைப்போல நடமாடுகிறது. வீட்டில் அப்பாவோ அண்ணன்மாரோ இல்லாத சமயத்தில்தான் அம்மா, அக்காவை குளிப்பு ரூமுக்குக் கூட்டிச்செல்லுகிறது. உள்ளேபோய் வெளியே வருவதற்குள் அக்காவிடமிருந்து ஆயிரம் விம்மலும் விசும்பலும் கேட்கும்.

 

அம்மாவின், ’பொறுத்துக்க பொறுத்துக்கம்மா’ என்கிற சமாதானப் பேச்சும், அண்ணிகளின் உச்சுக்கொட்டுகிற ஓசையும் வெளிப்படும். அது சாரதிக்கு அரைகுறையாய் புரிந்தும் புரியாமலும் இருக்கும்.

 

“ஓரோரு மனுசெ ஓரோரு பெறவின்னு சொல்லக் கேவிப்பட்டிருக்கம். கமலாவுக்கு புருசெ நாயாவோ நரியாவோதான் உதிச்சிருப்பாம் போல.…”

அண்ணி சொல்லுகிறபோது,

 

“அந்தளவுக்கு ரெண்டுங்கெட்டானா இல்லாம வாச்சிட்டான்ல அதுபோதும்” அண்ணிகளுக்கு அம்மா சமாதானம் சொல்லும்.

 

“ரெம்ப இம்சயா இருக்கும்மா… பொறுக்க முடியல்.. பொழுது விழுந்து ராத்திரி வந்தாலே பயம்மா இருக்கு. “

 

“என்னிக்கும்போல மஞ்சள அரச்சுத் தேச்சிக்குளிச்சிரு. சித்த சுர்ருன்னு எரிஞ்சாலும் புண்ணுகிண்ணு இருந்தா அந்தவாக்கில பட்டுப்போகும்.”

 

“கூடப்படுக்கிற பொண்டாட்டிய எப்பிடித்தே ஒரு மனுசனுக்கு கடிச்சுக் கொதற மனசுவருதோ…நாயும் நரியும் கூட அடுத்ததுகளத்தான் பிடுங்கும். ” பெரியண்ணன் சம்சாரம் பவித்ரா அண்ணி ஒருநாள் இரவு சாரதி உறங்கி விட்டான் என நினைத்து அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தது.

 

“அதத்தான் நா அன்னிக்கே சொன்னேன். அவெ ஆம்பளகெடையாது. ஒருநல்ல ஆம்பளப்பய இந்தமாதரி வேலயெல்லஞ் செய்யவே மாட்டான். அவெ ஒரு பொட்டபய. எங்க தன்னோட வகுசி தெரிஞ்சிடுமோன்னுதே இப்பிடி ரணகளப்படுத்தறான். கலியாணம் முடிச்சி ஒருவருசத்துக்கு மேல ஆச்சு. அவெம் பேரச் சொல்றமாதரி கமலா வகுத்துல ஒரு சங்கதியும் காணாமில்ல.”

 

ஒருநாள் அக்காவுக்கு ரெம்பவும் முடியவில்லை. ஆஸ்பத்திரிக்கிக் கூப்பிட்டுப் போனார்கள். ஆஸ்பத்திரியில் அக்காவைப் பரிசோதித்த டாக்டரம்மாவும் மாமாவைத்திட்டினார்கள். “இது அப்நார்மலாத்தான் தெரியுது. ஒருநாளைக்கி இதுவே பாய்ஸனா மாறிட்டா ரெம்பச்சிக்கலாயிரும். யாராச்சும் பெரியவ்ங்க ரெண்டுபேரை வச்சுப்பேசுங்க. இல்லாட்டி அவரை ஒரு சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கச் சொல்லுங்க,” என்றார். மாமா அந்த டாக்டரம்மாளை ‘முண்டச்சி: என ஏகவசனத்தில் [பேசினார்.

 

அன்னிக்கித்தான் ரெங்கா அண்ணன் அக்காவின் வீட்டில்நுழைந்து ரகளை செய்து டிவிபெட்டி வாசிங் மெசின்,என கண்ணில்சிக்கிய பொருள்களைப் போட்டு உடைத்து துவம்சம் செய்துவிட்டு வந்தது. எல்லோரும் மாமாவைப் போலீசில் பிடித்துக்கொடுக்கச் சொன்னார்கள். அம்மாதான் வேணாமென தடுத்துவிட்டது. “புள்ளவாழ்க்கபோலீஸ் ஸ்டேசன்லயே அடஞ்சு போகும் ”

 

அதற்குள் மாமா ரெங்கா அண்ணன் மீது புகார் கொடுத்துவிட்டார். ‘ஆளில்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்து விலையுயர்ந்த பொருட்களை சேதம் விளைவித்ததாகவும், பீரோவில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயை காணவில்லை எனவும் புகாரில் சொல்லி இருந்தார்.

 

சாரதி உட்பட வீட்டிலிருந்த அத்தனை பேரையும் போலீஸ்வந்து அழைத்துப் போனது. ஸ்டேசனில் மாமா எல்லோர்மீது குற்றம் சொன்னார். அக்காவைத் தன்னோடு வீட்டுக்கு அனுப்பாமல் அக்காவின் சம்பாத்தியத்தை அனுபவிப்பதற்காகவே த்ன்னைக் கெட்டவனாகச்  சித்தரிப்பதாகச் சொல்லி அழுதார். ஊருக்குள்ளிருந்து நாலைந்து பெரிய மனிதர்களைக் கூப்பிட்டுவந்து தனக்குச் சாதகமாகப் பேசவைத்தார். ஸ்டேசனில் அக்காவை மாமாவோடு சேர்ந்து வாழச்சொன்னார்கள். அக்கா போகமாட்ட்டேன் என அங்கேயே ஆணித்தரமாகச் சொன்னது. அண்ணன்மார்கள் அக்காளின் உடம்பிலிருந்த காயததைசொல்ல, மாமா அவர்களை  அக்காவுக்கு ரெண்டாவது மூணாவது புருசன் என கேவலமாய்ப் பேசிவிட்டார். உடனடியாய் ஸ்டேசனுக்குள்ளேயே பெரிய சண்டைவந்துவிட்டது. உடனிருந்த பெரியாட்கள் தடுத்து பிரச்சனையை சாதிப் பஞ்சாயத்தில் பேசி சமாதானம் செய்து வருவதாக ஸ்டேசனில் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார்கள். கடேசியில் சாதிக்கூட்டத்துக்கும் மாமா வரமாட்டேன் எனச் சொல்லிவிட்டார்.

 

மனைவியைக்கடத்திக்கொண்டு போய்விட்டதாக குடும்பத்திலிருக்கும் அத்தனை பேர்மீதும் அடுத்தொரு கேஸ் போடப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

 

“அவெ உசுரோட இருந்தாத்தான கேஸ் போடுவான். நாம நேரடியாச் செஞ்சம்னா அவெ புண்ணியம் பெத்து சொர்க்கத்துக்குப் போயிருவான். ஆள் பேரு தெரியாம ஆளவச்சு காணாப்பொணமா அக்கிட வேண்டியதுதான். “ என்று பேச்சை முடிவுக்குக் கொண்டுவந்த கோயிந்தண்ணன் உள்வீட்டுக்குள் நுழைந்து அக்காவைத் தேற்றியது. ”என்னத்துக்கு நாயி கண்ணக் கண்ணக் கசக்கிக்கிட்டிருக்க  வருசெமெல்லா நாம அழுதுக்கிட்டிருக்கணுங்கறதுதே அவெந்திட்டம். நாம என்னா அவனமாதரி அவத்தப் பயலா.. ஒனக்கொரு பொழப்பிருக்கு பஞ்சபாண்டவர் மாதரி அண்ணந்தம்பி நாங்க இருக்கம். நீ எந்திரிச்சு எப்பவும்போல வேலைக்கிப்போம்மா.. அவெம் முன்னால நின்னு சாதிக்கணும்.. லே சாரதி.. அக்காவ பஸ் எத்திட்டு வாடா…”

 

அக்காவுக்கு வேலையில் டூட்டி மாறிமாறிவரும். சாரதி வீட்டில் இருந்தால் அவன்தான் பஸ் ஏத்திவிடுவான். அதேபோல அக்கா வரும் நேரம்பார்த்து போய்க் கூப்பிட்டும் வருவான்.

 

“கெளம்பும்மா..” அதட்டிப்பேசிய அண்ணன் சாரதி பக்கமாய் வந்தது.“இவனப் போல தனி ஆளா இருந்தா இந்நேரம் போடான்னு அவனப் போட்டுத்தள்ளீட்டு ஒனக்கு வேறோரு கலியாணத்தப் பண்ணி வச்சிருப்பேன்…””என வருத்தப்பட்டது.

 

அக்கா உடைமாற்றிக் கிளம்பியது.  சாரதியின் கையைப் பற்றிக்கொண்டது. கை வழவழப்பில்லாது சப்பென்றிருந்தது. அக்காவின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தான். மனசு என்னமோ மாதரி இருந்தது. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வருவதாகச் சொல்லி  அறைக்குள் வந்தான். அண்ணனின் சூரிக்கத்தி சமையல் கட்டில் அனாதையாய்க் கிடந்தது. எடுத்து டவுசர் பாக்கட்டில் திணித்துப் பார்த்தான்.பைக்குள் அடங்க மறுத்தது.

 

வழியில் மாமா ஒரு டீக்க்டையில் நின்றிருந்தார்.”அட்ஜேய் மாப்ளய்…” குடித்துக்கொண்டிருந்த தம்ளரை உயர்த்திப்பிடித்தபடி அவனை அழைத்தார்.

 

“பாக்காத மாதரி வா..” அக்கா கிசுகிசுத்தது. ப்ஸ் ஏறியதும் ,வந்தவழியா  போகாத வேற பக்கம் சுத்திப்போ..” அக்கா அவனிடம் எச்சரித்து அனுப்பியது.

 

சாரதி அக்காவின் பேச்சை கேட்கவில்லை இறுகிய முகத்துடன் வந்த வழியில்தான் திரும்பினான்..

 

மாமா அதே கடையில்தான் நின்றிருந்தார்..

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top