ஆபீசும் ஆபீசரும்

0
(0)

பட்டாளத்து ராவுத்தர் திண்ணையில் உட்கார்ந்தார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஒடிவந்தார்கள். வேப்ப மரத்திலிருந்தும் தொப் தொப்பென்று குதித்து வந்தார்கள்.

பட்டாளத்து ராவுத்தர் ஓய்ந்த நேரங்களில் இப்படி உட்கார்வார் இவருக்கென்று வேலை ஒன்றும் கிடையாது. யார், எந்த வேலைக்கு கூப்பிட்டாலும் போவார். பல ஊர்களுக்கும் அலைந்து நிறைய ஆட்களைப் பழகி இருந்தார். அதனால் ஏதாவது காரியம் ஆவதற்கும் இவரைக் கூப்பிட்டுப் போவார்கள்.

வெளியூர் போய் வந்த பிறகு இப்படி உட்கார்வார். ஊர்க்கதைகள் அது இது என்று சொல்வார். கொஞ்சம் கற்பனையும் உண்டு. கணக்கும் போடுவார். விடுகதையும் வைப்பார். சரியாகச் சொன்னவனுக்கு ஆரஞ்சுமிட்டாய் கிடைக்கும். ஊரிலிருந்து வரும்போதே மடியில் கட்டிவருவார். கரும்பு தின்னக் கூலி கொடுத்தது போல் கதைசொல்லி மிட்டாயும் கொடுப்பார்.

இன்று கதையா, விடுகதையா அல்லது மனக்கணக்கா என்று தெரியவில்லை. எல்லோரும் ராவுத்தரை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். ராவுத்தரின் “மூடு” எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்தபடி கதையோ கணக்கோ இருக்கும். சமயத்தில் ரேடியோவில் நேயர் விருப்பம் வருவது போல் சிறுவர்கள் கேட்கும் கதையும் சொல்வார்.

ராவுத்தர் பொழுதைப் பார்த்தார். பொழுது மேற்கு மலையில் விழுந்து கொண்டிருந்தது. நிமிர்ந்து உட்கார்ந்து தொண்டையைச் செருமினர். லேசாக கரகரத்தது.

“இந்தா …… சொம்புல தண்ணி கொண்டா …. உள்ளே திரும்பி சத்தங்குடுத்தார்.”

உள்ளே இருந்து பதில் வந்தது, “வந்து குடிச்சிட்டுப் போங்க …… நா வேலையா இருக்கே …..”

ஒரு பையனை அனுப்பி வாங்கி வரச் சொன்னார். தண்ணீர் வந்ததும் இரண்டு வாய் குடித்து, சொம்பை ஓரமாக வைத்தார். பையன்களை ஒரு நோட்டம் விட்டார். கேட்காமலே கதை சொல்லப் போகிறார் என்பதைப் புரிந்து, வாயை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

“இன்னக்கி ஒரு கத ஆபீஸ் கத ….” சொல்லிவிட்டு மீண்டும் மேற்கு மலையைப் பார்த்தார். யோசிப்பது போல் இருந்தது. சூரியன் இன்னும் மறையவில்லை. மேக மூட்டம் சூரியனை மறைத்து மங்கலாகக் காட்டிக் கொண்டிருந்தது. குளிர்ச்சியான காற்று லேசாக வீசியது.

“நம்ம ஊருக்கு தெக்க ஈ.பி. ஆபீசு இருக்குல்ல …… அங்க போயிருக்கீங்களா?”

“ஓ….. போயிருக்கோம். சுடுகாட்டுக்குப் பக்கத்துல இருக்கு” பெரிய பையன்கள் சொன்னார்கள்.

“அது மாதிரி ஒரு ஆபீசு… அது நம்ம ஊர்ல மாதிரி சுடுகாட்ல இல்ல….. மொட்டக்கரட்டுல இருக்கு. ஊர விட்டு ரொம்ப தூரம் ….. நல்லாக் கவனிங்க …. எனில் கேள்வி கணக்கெல்லாம் வரும்.

” சிறுவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள்.

“கரண்ட பிரிச்சு அனுப்புறது, ரெண்டு பேசு மூணு பேசுன்னு மாத்துறது, திடீர்னு நிப்பாட்றதுன்னு எல்லா வேலையும் இங்க தான் செய்வாங்க”

“அங்க வேலை பாக்ற வங்களுக்கு அங்கயே வீடு இருக்கு, குவாட்டர் சுண்ணு பேரு. ஆபீசும் வீடும் கொஞ்சந் தள்ளித் தள்ளி இருக்கு. அங்க ஒரு இஞ்சினியரு அவர்தான் ஆபீசர். அவருக்கு கீழ ஒரு போர்மேன். அதுக்கு கீழ வேலபார்க்க நாலுலைன் மேன் ரெண்டு ஹெல்பர் அப்புறம் காவல் காக்கன்னு ரெண்டு வாட்சுமேன் இவங்க எல்லாருக்கும் ஒவ்வொரு வீடு தனித் தனியா இருக்கு.”

“நல்லா கவனிக்கிறீங்களா? இப்ப கேள்வி கேக்கப் போறேன். மூணுவது படிக்கிற சலீம் அன்வரு நாலாவது படிக்கிற சுல்தான் மட்டும் பதில் சொல்லணும் அஞ்சாவது ஆறாவதெல்லாம் பேசாம இருக்கணும் ….. என்ன?”

“சரி ….. என்றார்கள்.”

“அங்க மொத்தம் எத்தன வீடு இருக்கு? சொல்லுங்க பார்க்கலாம்.”

“மூவரும் யோசித்தார்கள். சரியாக கவனிக்கவில்லை போலிருக்கிறது.”

“கதைய இன்னொருக்கா சொல்லுங்க…. நல்லாவே சொல்லல …” சலீம் கேட்டான்.”

ராவுத்தர் சிரித்துக்கொண்டு மீண்டும் சொன்னார். சொல்லச் சொல்ல கூட்டினார்கள்.

பத்தூ …. எல்லோரும் கோரசாகச் சொன்னார்கள். கூட்டத்தில் யார் சொன்னது, சொல்லாதது என்று தெரியவில்லை. ஆறாவது படிக்கிறவர்களும் சேர்ந்து சொல்லி இருப்பார்கள் போலிருக்கிறது.

“இப்படியெல்லாஞ் சொல்லக் கூடாது. கேக்றவன் மட்டுந்தான் சொல்லணும் இனிமே …. ஆமா.”

எல்லோருக்கும் மிட்டாய் கிடைத்தது. கதையும் தொடர்ந்தது.

“அங்க ஒரு நா ராத்திரில் ஒரு வாட்சுமேனும், சிப்ட்டுக்கு ஒரு லைன் மேனும் ஆபீசுல இருந்தாங்க. வாச்சுமேன் பேரு வேலு, லைன் மேன் பேரு முத்துச்சாமி.”

ராவுத்தர் சொல்வது ஒவ்வொன்றையும் கவனமாகக் கேட்டார்கள். கேள்வி எதில் வரும் என்று தெரியாது. எப்பொழுது வேண்டுமானலும் கேட்பார். மடியைப் பார்த்தார்கள். மடிநிறைய மிட்டாய் இருந்தது. கேள்வி அடிக்கடி வரும்.

“வாட்சுமேனுக்கு மணி அடிக்கிறவேல. ஒரு மணிக்கு ஒருக்கா அடிக்கணும். எட்டு மணி ஆச்சுன்னா எட்டு அடிக்கணும். ஒம்பது ஆச்சுன்னா ஒம்பது. இப்படி ராத்திரி எட்டுல இருந்து மறுநாள் காலை ஆறுவரை அடிக்கணும்.”

பையன்கள் சுதாரித்துக் கொண்டார்கள். கணக்குப் போடுவதற்கு இது சரியான இடம். அதற்குத்தான் இவ்வளவு விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பையன்கள் நினைத்தது சரியாக இருந்தது.

ராத்திரி எட்டு மணிலிருந்து காலை ஆறுமணி வர மணிக்கு ஒருக்கா அடிச்சா எத்தனை தரம் அடிக்கணும்? யார் வேணுனாம் பதில் சொல்லலாம் …. எங்க தெரிஞ்சவெ கைய தூக்கு ….. ?

எல்லோரும் விரல்விட்டு எண்ணினார்கள். முணுமுணுத்தனர். மூனாவது நாலாவது பையன்கள் புரியாமல் உட்கார்ந்திருந்தார்கள். “ஒரு மணிக்கு ஒண்ணுன்னு கணக்குப்பாருங்க…..”

இரண்டு பேர் மட்டும் கையைத் தூக்கினார்கள். ராவுத்தருக்கு திருப்தி இல்லை .

“நல்லா கூட்டிப் பாருங்க ….. ராத்திரி எட்டுலருந்து காலைல ஆறு வர எத்தன மணி”

இப்பொழுது மீண்டும் கூட்ட ஆரம்பித்தார்கள். கையை தூக்கிய பையன்களும் கையை கீழே போட்டு விட்டு கூட்டினார்கள். கூட்டி முடித்து ஒவ்வொருவராக கையைத் தூக்கினார்கள். இப்பொழுது ஐந்து பேர் இருந்தார்கள். பாக்கி மூன்று பேரும் மூன்றாவது, நாலாவது படிக்கும் சலீம் அன்வர் சுல்தான். அதனால் போட்டு விட்டார்.

“ஒவ்வொருத்தராச் சொல்லுங்க…”

“ஒம்போது”

“பதினொன்னு”

“பத்து”

“பதினொன்னு”

“பதினொன்னு”

ஒரு ஒன்பதும் ஒரு பத்தும் மூன்று பதினொன்றும் இருந்தன. பதினொன்று சொன்னவர்களுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு, மற்றவர்களை மீண்டும் கூட்டச் சொன்னார். சரியாக கூட்டிய பிறகு எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்தார்.

“இப்ப இன்னொரு கேள்வி ….. நல்லாக் கவனிங்க. எட்டு மணிக்கு எட்டு அடிக்கணும். ஒன்பது மணிக்கு ஒன்பது. இப்படியே அடிச்சு ….. காலை மறுபடியும் ஒன்னு, ரெண்டுன்னு அடிச்சுவந்து, கடைசியா ஆறு அடிக்கணும் …… அப்படின்னா மொத்தம் எத்தன அடி அடிக்கணும்?”

விரலில் கூட்ட ஆரம்பித்தார்கள். கூட்டிக் கொண்டே இருந்தார்கள். கொஞ்ச நேரம் பார்த்தார். முடியவில்லை. சிரமப்பட்டு முழிச்சு முழிச்சுப் பார்த்தார்கள்.

“சரி ….. இப்ப கூட்ட வேணாம். நாளக்கி சிலேட்ல இல்லன்னா நோட்ல கூட்டிச் சொல்லுங்க இப்ப கதயக் கேளுங்க….. வேற கேள்வி இருக்கு.”

விடுபட்டது போலிருந்தது. எழுதிக் கூட்டினால் கண்டு பிடித்து விடலாம். நாளையும் மிட்டாய் கிடைக்கும்.

கதைல மணி பத்தாச்சு, பத்து அடிக்க வாட்சுமேன் புறப்பட்டாரு, அப்ப கூட இருந்த முத்துச்சாமி பத்துக்குப் பதிலா பதினொன்னு அடின்னாரு. ஆனா வாட்சுமேனு இஷ்டப்படல சும்மா அடி வேற யாராச்சும் கவனிக்கிறாங்களான்னு பாப்பம். கவனிச்சாங்கன்னா ஒரு டீ கூட வாங்கிக் குடுப்பம் அப்ப ஒனக்கு டீன்னு சொல்லி அடிக்கச் சொன்னாரு.

வாட்சுமேனு அரமனசா போயி பதினோருமணி அடிச்சிட்டு இங்க வந்தாரு.

“அங்க இருக்கவங்கள்ல சுருளிக்கு இதெல்லாம் புரியாது. பாண்டிக்கு கணக்குத் தெரியாது. சன்னாசி சிவகாமி அப்புறம் மத்தவங்கள்லாம் நல்லா தூங்கி இருப்பாங்கன்னு முத்துச்சாமி நெனக்காரு.”

“அப்ப இஞ்சினியரு வீட்ல லைட் எரிஞ்சிச்சு, இவங்களுக்கு கொஞ்சம் திடுக்குன்னு இருந்துச்சு அதுக்கு அடுத்து போர்மேன் வீட்ல எரிஞ்சிச்சு, அதுக்கு அப்புறம் யார் வீட்லயும் எரியல.

“இதுக்குள்ள கைலியும் பனியனுமா ஒரு துண்ட போத்திக்கிட்டு எஞ்சினியரு வந்தாரு. பத்துக்குப் பதிலாக பதினொன்று அடிச்துல அவருக்கு கோவம். இங்க வந்தா காச் மூச்சுன்னு கத்துனாரு. ஏன் அடிச்சேன்னாரு. வாட்சுமேனும். முத்துச்சாமியும் பயந்து போயி கையகட்டி நின்னாங்க. இப்படி நடக்குமுன்னு நெனைக்கல இதுக்குப் போயி இப்படி கோவிப்பாங்களா?”

“எதுக்கு அடிச்சேன்னு கேட்டதுக்கு சும்மா கவனிக்கிறாங்களான்னா …. வாட்சுமேன் அரகொறயா ஒளருனாரு. ஆபீசருக்கு கோபங் கூடப்போச்சு, நீயெல்லாம் ஆபீசரா? எங்கள கவனிக்கீறிகளோ! அது இதுன்னு சத்தம் போட்டாரு. ஒன்னைய என்ன செய்றோம் பாருன்னு சொல்லிட்டு வேக வேகமா வீட்டுக்குப் போயிட்டாரு.

“அவரு போனப் பெறகும் குச்சிக்கைய ஆட்டி ஆட்டி, தட்டக் குச்சி ஓடம்ப எக்கி எக்கிப் பேசுனது கண்ணுக்குள்ளயே நின்னு இவங்களப் பயங்காட்டிச்சு. எதுவும் பேச முடியல நாளக்கி என்ன செய்வாரோங்ற கவல வேற”

கதையை நிறுத்தி விட்டு ராவுத்தர் தண்ணீர் குடித்தார். அன்வர் வேகமாகக் கீழே இறங்கினான். “கொஞ்சம் பொறுங்க இந்தா வந்துர்ரேன்.”

கதையை சொல்லி விடுவாரோ என்ற அவசரத்தில் வேகவேகமாக ஓடி வேப்ப மரத்தடியில் ஒன்னுக்கு அடித்துவிட்டு அதே வேகத்தில் திரும்பி வந்தான்.”

“ஆபீசரு என்ன செய்வாரு? சலீம் கேட்டான்.”

“ஆப்சண்டு போடுவாரு ….. இல்லாட்டி பைன் கட்ட சொல்வாரு ….. அன்வர் பதில் சொன்னான்.”

“போடா …… இது என்ன பள்ளிக்கூடமா பைன் கட்ட ? ஆபீஸ்லயெல்லாம் வேலயத்தா நிப்பாட்டு வாங்க ….. இல்லையா”

வாட்சுமேன் மேல் எல்லோருக்கும் அனுதாபமாக இருந்தது.

“வேலய நிப்பாட்டுனா சம்பளம் வராதுல்ல …..?”

“ஆமா …. வராது.”

“ஐயோ பாவம் …. அதுக்குப் பதுலா வேற எதாச்சும் செய்ய மாட்டாங்களா?”

“அந்த இஞ்சினியரு சுத்த மோசம் இதுக்குப் போயி இப்படி கோவிக்கிறாரே …… அந்த மணி என்ன ஒடஞ்சா போச்சு …. இது என்ன பெரிய தப்பா ? ”

ஆளுக்கு ஒன்றாகச் சொல்லி ஆபீசரின் மேல் வெறுப்பை காட்டினார்கள். ராவுத்தாரிடமும் கேட்டார்கள்.

“இந்த மாதிரி ஆபீசருங்க நெறைய பேரு இருக்காங்க ….. சின்ன விசயத்துக்கெல்லாங் கோபிப்பாங்க. ஒரு உதாரணத்துக்குத்தே இத ஒங்களுக்கு சொல்றேன்…… கதைய கவனிங்க.”

“சிறுவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு கதையைத் தொடர்ந்தார்.”

“ஆபீசரு போனப் பெறகு இவங்க ரெண்டு பேரும் பேசாம ஒக்காந்திருந்தாங்க. நாளக்கி என்ன செய்வாரோங்கற கவல. இதுல ஒரு அடி கூட அடிக்கச் சொன்னது முத்துச்சாமி. ஆனா மாட்டிக் கிட்டது வேலு. பாவம் இதெல்லாம் முத்துச்சாமியால வந்தது. இத நெனச்சு முத்துசாமியுங் கவலப்பட்டாரு.”

“வேலுவ சமாதானப்படுத்தினாரு. தப்பு என்பேர்ல தான் இருக்கு நாளக்கி ஆபீசர்ட்ட சொல்லிக்கிறலாம். கவலப்படாத அப்படி சொல்லி சமாதானப்படுத்தி, கொஞ்ச நேரம் வீட்டுக்குப் போயிட்டு வா காப்பி கீப்பி குடிச்சிட்டு வான்னு அவர கட்டாயமா எந்திரிக்க வச்சு வீட்டுக்கு அனுப்புனாரு. அப்பயாச்சும் மனசு மாறும்ல.”

“மேலும் வீட்டுக்குப் போனாரு. அப்பயும் முத்துச்சாமிக்கு சமாதானமாகல இஞ்சினியர்ட்ட சொல்லணும் சமாதானப்படுத்தணும் வேலுவ சிக்க வைக்கக் கூடாதுன்னு நெனச்சாரு.”

“இந்த நேரத்துல வேலு வீட்டிலிருந்து சத்தம் வந்துச்சு, ஐயோ …. ஐயோ என்று வேலு சம்சாரம் சத்தம் போட்டாங்க. பாம்பு ….. பாம்பு …… ஓடியாங்க …… ஓடியாங்க …… என்னு கத்தினாங்க. அவ்வளவுதான் எல்லார் வீட்லயும் லைட் எரிஞ்ச்சு, எல்லாப் பேரும் அங்க ஓடுனாங்க.”

கதையை நிறுத்தினார் ராவுத்தர். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். எல்லோரும் கவலையாக இருந்தார்கள். ஏற்கனவே அந்த ஆபீசர் சத்தம் போட்டுப் போனது. அதோட அவர் என்ன செய்வாரோ என்று கவலைப்பட்டது. இப்பொழுது பாம்பு வேறு கடித்து விட்டது. என்று இரட்டிப்புக் கவலையில் இருந்தார்கள்.

“எல்லாம் ரெடியா இருந்துக்கங்க …… இப்ப ஒரு கேள்வி கேக்கப் போறேன்.” இரண்டுவாய் தண்ணீர் குடித்தார். பையன்கள் யோசித்தார்கள். என்ன கேள்வி கேட்பார் என்று யாருக்கும் புரியவில்லை. எந்தப் பிடியும் கிடைக்கவில்லை. இதில் கணக்குப் போட முடியாது. மணி கேட்க முடியாது. கடித்தது பாம்பா, தேளா? அல்லது நண்டா, நட்டுவாக்கானியா? என்று கேட்கலாம். பாம்பு என்றால் என்ன பாம்பு என்றும் கேட்கலாம்.”

நல்ல பாம்பு, சாரைப் பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மலைப்பாம்பு என்று பலமாதிரி யோசித்தார்கள்.

“என்ன கேக்கலாமா? ….. கேக்கப் போறேன். பதில் வரவில்லை. ஒரு சிலர் மட்டும் லேசாகத் தலையை ஆட்டினார்கள்.”

“சத்தங் கேட்டதும் எல்லாரும் அங்க ஒடுனாங்க…… ஆனால் …… ஒருத்தர் மட்டும் போகல …. அது யாரு? ”

“யாரு? …… அந்த ஆபீசருதான் போகமா இருப்பாரு. இது கூட தெரியாதா? அந்த ஆளு சுத்தமோசம்! எல்லோரும் சொன்னார்கள்.”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top