ஆட்டக்காரி

5
(1)

பெரியோர்களே..தாய்மார்களே நமது ஊரில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரியகுளம் பிச்சையம்மாள் குழுவினரின் கரகாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் திரளாக வந்து, ஆட்டத்தைக் கண்டு களிக்குமாறு விழாக்குழுவின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.“

யாரோ கரகரத்த தொண்டையில் பேசிக் கொண்டிருந்தார். பதினைந்து வருசம் கழித்து உள்ளூர் திருவிழா பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. கிராமங்களில் திருவிழா என்றாலே ஒரு தனி ‘களை’ கட்டிவிடும். அதுவும் பங்குனித் திருவிழாவைப் போல விமரிசையாய் எந்த விழாவையும் மக்கள் கொண்டாடமாட்டார்கள். பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கரகாட்டமும், புதன்கிழமை ராஜா ராணி வேசமும்தான் நடக்கும். இளைஞர்களெல்லாம் ஒவ்வொரு வருசமும் ”இனிமே இதுவேணாம்.. பாட்டுக்கச்சேரி போடணும், ஆடலும் பாடலும் போடணும்”ன்னு  முரண்டு பிடிச்சாலும் கரகாட்டம்தான் இருக்கணும் என்ற முடிவில் எப்போதும் பெரியவங்க மாறமாட்டாங்க.

 

இதுக்குன்னே ஒரு பதில் ரெடியா இருக்கும்.  ”நாம செய்யும் சாமி பூங்கரகம் தான். பூங்கரகம் பவனி வர்றப்ப பொன் கரகம் ஆடிவரணும். அதனால கண்டிப்பா கரகாட்டம் நடக்கும். ”பாக்க பிரியம் இருந்தாப் பாரு. இல்லையின்னா பேசாமப் பொத்திட்டு படு.” லிங்கையா வாத்தியாரு சத்தம் போட்டுச் சொன்ன உடனே கப்சிப்னு கூட்டம் அடங்கிப் போயிரும்.

 

கரகாட்டக்காரங்களையும், வேசக்காரங்களையும் பார்த்துப் பேசி வருவதுல தங்கையா பெரிய கில்லாடி.. ஊர் ஊராய்ப் போய்ப் பார்த்து எங்கேயும் ‘வேசம்’ அமையலேன்னா தஞ்சாவூரு, புதுக்கோட்டையின்னு ஜில்லா விட்டு ஜில்லா போயிக்கூட கூட்டிட்டு வருவாரு. அட்வான்ஸ் குடுத்திட்டு வந்து ரெண்டு நாளைக்கு ஆட்டக்காரங்களோட ‘அருமை’யைச் சொல்லிச் சொல்லியே ஜனங்க மனசில ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுவார். சில நேரம் அவர் சொல்லுறத விட நல்லாவும் அமையும், மோசமாவும் போகும். எது எப்பிடி நடந்தாலும் கரகம், வேசம், கொட்டு கூப்பிட தங்கையாதான் போகணும் என்ற எழுதாத விதி உண்டு.

 

பெரியகுளம் பிச்சையம்மாள் குழுவினர் கரகாட்டம் ஆடத் தயாராய் இருப்பதால் மேளக்காரர்கள் உடனடியாய் வருமாறு அழைக்கப் படுகிறார்கள்”. மீண்டும் அந்தக் கரகரத்த குரல் உறுமியது.

 

பெரியகுளம் பிச்சையம்மாள் கரகாட்டத்தில் கொடிகட்டிப்  பறந்தவள். பதினைந்து வருசத்திற்கு முன்பு நாங்க சிறுபிள்ளைகளாய் இருக்கும்போதே தங்கையா கூட்டி வந்திருக்கிறார். பிச்சையம்மாள் வந்தாலே திருவிழா களை கட்டும். பிச்சையம்மாளும் அவளது தங்கச்சி புஷ்பவள்ளியும் சேர்ந்து கரகமாடுவார்கள்.ரெண்டு பேருக்கும்ரெம்ப சின்னவயசு. பபூனாக வடகரை ராஜேந்திரன் இருப்பான். சந்திரபாபு சாயலில் இருந்துகொண்டு விடியவிடிய ஜனங்களைச் சிரிக்க வைப்பான்.

 

பிச்சையம்மாள் நல்ல செகப்பு. கட்ட சைஸ் பொண்ணு. ஊதா கலர் பாவாடையும், சட்டையும், மல்லிகைப்பூக் கொண்டை போட்டு, பச்சை றெக்கை மொளச்ச கிளி உட்கார்ந்த கரகத்தை தலையில சுமந்து ஆடுவா. புஷ்பவள்ளி கருப்பு நெறம். செகப்புக் கலர் பாவாடையும், சட்டையும், கனகாம்பரம் கொண்டையுமா  கரகம் தலையில வச்சு ஆடுவா.

 

அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒண்ணாச் சேந்து ஆட ஆரம்பிச்சா, வாசிக்க முடியாம மேளகாரங்க திணறிப்போவாங்க. பலபேரு இவங்களுக்கு வாசிக்க பயந்துக்கிட்டே ”வேற ஊர்ல வாசிக்கக் கூப்பிட்டாங்க”ன்னு பொய் சொல்லிருவாங்க. அந்தளவுக்கு ஆட்டத்துல ‘பொம்பளப் புலிகளா’ கொடி கட்டிப் பறந்தாங்க.

 

இவங்களையும் ஒரு கை பாக்குற ஆள் இருந்தான். பேரு வேதமாணிக்கம். ஊரு எழுமலை. நாதஸ்வரம் வாசிக்கிறதுல பெரிய வித்துவான். வேதமாணிக்கம் வந்தாலே நாதஸ்வர மேளம் மட்டும் தனிக் கச்சேரியா ஒரு மணி நேரம் நடக்கும். அந்தப் பாட்டு வாசி… இந்தப் பாட்டு வாசின்னு… ஜனங்களோட அன்புத் தொல்ல கூடிக்கிட்டே போகும். ”சிங்கார வேலனே…வா….‘, ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே….’ இப்பிடியாக இவனது ஹிட் சாங்ஸ் வரிசை நீளும். வாசிச்சு முடிச்சவுடனே நாதஸ்வரத்துல பத்து ரூபா நோட்டுகள் தொங்கும். வேதமாணிக்கம் வாசிப்புக்கு ஆட முடியாம பல ஆட்டக்காரங்க திணறுவாங்க. பிச்சையம்மாளும், வேதமாணிக்கமும் ஒரு சேர அமைஞ்சா, அந்த ஊர்ல தான் கூட்டம் பயங்கரமா கூடும். எங்க ஊர்ல நெறைய வருசம் இப்பிடி அமைஞ்சிருக்கு. எனக்கு நல்லா நினைவிருக்கு. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால இதே மாதிரி பொங்கல். பிச்சையம்மாளும், புஷ்பவள்ளியும் வந்திருந்தாங்க.

 

அந்த வருஷம் வேற வேஷக்காரங்க அமையாததால செவ்வாய், புதன் ரெண்டு நாளைக்கும் சேர்த்தே பிச்சையம்மாள புக் பண்ணியிருந்தாங்க. புதன்கிழமை பகலெல்லாம் தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, சேத்தாண்டி வேஷம் அப்பிடி இப்பிடின்னு நேர்த்திக்கடனெல்லாம் முடிஞ்ச பெறகு மேலத்தெரு நாயக்கமாரு தேவராட்டத்தோட அபிஷேகம்  செஞ்ச பெறகு கரகாட்டம் ஆரம்பமாச்சு. மறுநாள் காலையில அஞ்சு மணிக்குத்தான் நல்ல நேரம். அதுக்கப்பறம் தான் மொளப்பாரி, கரகம் எல்லாம் கலக்கணும். அதுவரைக்கும் கரகாட்டம்தான்.

 

ஆட்டக்காரங்க வருவதற்கு முன்னாடியே வேதமாணிக்கம் ஒரு பாட்டம் வாசிச்சு முடிச்சுட்டான். பிச்சையம்மாளும், புஷ்பவள்ளியும் உள்ளே நுழையும் போது பலத்த கைதட்டல். தெய்வ கடாட்சம் நெறஞ்ச முகத்தோட பிச்சையம்மா எல்லாத்தையும் கும்பிட்டாள்,  நாதஸ்வரம்,தவில்,பம்பை, உறுமி,கிணிமிட்டி இப்பிடியாக எல்லா வாசிப்பாளரையும் கும்பிட்டு மண்ணைத் தொட்டு வணங்கி, கரகத்தைத் தூக்கி தலையில் வைத்து வணங்கி ஆடத் தயாரானாள்.

 

வேதமாணிக்கம் வாசித்தான். ”தன னான னான னான னானை…..” என்று நாதஸ்வரம் ஓசை எழுப்ப…. டுமட்ட டடீம்… டும்ட்ட டடிம் என்ற தவிலின் ஓசைக்குப் போட்டியாக கால் சலங்கை ஒலியை பரப்பிக் கொண்டு சகோதரிகள் ஆடினார்கள்… மஞ்சள் ஜிப்பாவும் பச்சைக் கரைபோட்ட வேட்டியும் பட்டுச் சால்வையை இடுப்பில் சுற்றிக்கொண்ட வேதமாணிக்கம் கொஞ்சங்கொஞ்சமாய்த் தனது ராஜாங்கத்தைத் திருவிழா கூட்டத்துல புகுத்தத் தொடங்கினான்.

 

இப்படி மும்முரமான ஆட்டத்திற்கு நடுவுல சின்னச்சாமித்தேவர் நுழைஞ்சாரு. வாசிப்பை நிறுத்திவிட்டு வேதமாணிக்கம் அவரை வணங்கினான். . பிச்சையம்மாளும் வணங்கினாள். பதிலுக்கு வணக்கம் சொல்லிட்டு மைக் முன்னாடி நின்னு, ”இன்னக்கு புதுசா ஒரு ஆட்டத்த நமக்கு இவங்க தரப்போறாங்க. பிச்சையம்மாள் நல்ல ஆட்டக்காரி வேதமாணிக்கமும் நல்ல கலைஞன் வேதமாணிக்கம் தில்லானா வாசிக்க பிச்சையம்மாள் அதுக்கு ஆடப்போகுது. தயவுசெஞ்சு அமைதியா இந்த நிகழ்ச்சியக் கண்டுகளிக்க வேண்டுகிறோம்” எனறு சொல்லிட்டு தொங்கிட்டு இருந்த மைக்கை விட்டுட்டு அவரு போயிட்டாரு . பிச்சையம்மாள் வேதமாணிக்கத்தை ஒரு பார்வை பார்த்தாள். ஒன்னால முடியுமா? என்று கேட்பது போலொரு ரோஷத்தை உசுப்பி விடுகிற பார்வை. வேதமாணிக்கம் தன் குழுவினருக்கு சைகையால் உத்தரவு போட்டு விட்டு வாசிக்க ஆரம்பிச்சான்

ஒரு பெரிய்ய ஆட்ட யுத்தமே ஆரம்பமாச்சு. பிச்சையம்மாள் சளைக்காமல் சுத்திச் சுத்தி ஆடினாள். கண்ணால பேசினாள்… விரல்களில் அபிநயம் புடுச்சு கால்களில் தூள் பரத்தினாள்….

”பத்மினியே நேர்ல ஆடுற மாதிரி இருக்கு……”

கூட்டத்துல யாரோ டைமிங் கமாண்ட் அடிக்க.. புன்சிரிப்பால் நன்றி சொல்லி மீண்டும் மீண்டும் ஆடினாள். தவில் சத்தத்தோடு மேளநாதத்தின் ஓசைக்கு முகப் பாவனையும் விரல் அபிநயமும் பிடித்தாள்.

”இவனென்ன வேதமாணிக்கமா? நாதமாணிக்கமா? தில்லானாவ சிவாஜி கணேசன் ஜந்து நிமிஷத்துல முடிச்சிட்டாரு. இவன் அம்பது நிமிஷத்துக்கு மேல போயும் நிறுத்துறதாத் தெரியலையே… அவன் வகுத்துல ராகங்களைக் கரைச்சா குடிச்சிருக்கான்… தாயோ….மகன் இந்த வாசிப்பு வாசிக்குறானே…”  ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி நல்லையா வேதமாணிக்கத்தை பாராட்டிக்கொண்டே நிகழ்ச்சியை ரசித்தார். கண்ணை மூடி முழிக்க மறந்திட்டு கூட்டம் முழுக்க பிச்சையம்மா மேலேயும் வேதமாணிக்கம் மேலேயுந்தான் கண் பதிச்சுக் கெடந்திச்சு. நேரம் நகர நகர ஜனங்களுக்கு  ரசிப்புத்தன்மை மாறி ஒரு வகையான திகில் தன்மை வந்திருச்சு.

 

சினிமாவுல பத்மினி கால்ல ரத்தம் கசிய.. சிவாஜி வாசிப்ப நிறுத்த அதே நேரத்துல ஒருத்தன் விஷக் கத்தி வீச.. இப்பிடி ஏதாவது நடக்குமோ.. இல்ல ரெண்டு பேருமே மயங்கி விழுவாங்களோ… வேடிக்கை பாத்துக்கிட்டிருந்த ஜனங்க பல மாதிரியான கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் கலந்த வேதனையில் இருந்தாலும் பிச்சையம்மாளோ, வேதமாணிக்கமோ யாருக்கு யாரும் சளைக்கவில்லை அப்பிடிங்கிற எண்ணத்தில் இருந்த நேரத்துல தவில் வாசிச்ச சுப்ரமணி மயங்கி கீழே விழுந்துட்டான்.

 

சுப்ரமணி விழுந்த மாத்திரத்தில அவனைத் தூக்க மற்ற மேளகாரங்க விரைய. வாசிப்பு தடைபட.. சுற்றிச் சுற்றி ஆடிய ஆட்டத்தை நிறுத்த முடியாமல் பிச்சையம்மா தடுமாறி விழ…. திருவிழா கூட்டமே அல்லோல கல்லொலப்பட்டுப்போச்சு. ஒரு மணி நேரம் கழிச்சு மீண்டும் வந்த போது பிச்சையம்மாவை ஆட வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் மயில் வேஷம் போட்டு வந்து புஷ்பவள்ளிய முருகனா நெனச்சு தூக்கிச் சுமந்துக் கிட்டு விடிய விடிய பிச்சையம்மா ஆடினாள்.

 

பதினஞ்சு வருஷத்துல எவ்வளவு மாற்றம்…  நல்ல நாதஸ்வரக் கலைஞன் வேதமாணிக்கம் குடிச்சுக் குடிச்சே செத்துப் போயிட்டான். புஷ்பவள்ளிக்கு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வருசமே அவளும் போயிட்டாள். பதினைந்து வருஷமா எப்பிடியெப்பிடியோ பொழப்பு நடத்தி கடைசியில் பழைய தொழிலுக்கே பிச்சையம்மா வந்தாலும் பழைய மாதிரி இல்லை. யாரோ புதுசா ஒருத்தன் நாதஸ்வரம் வாசிக்கிறான். ரொம்ப சாதாரணம். அதுக்குக்குக்கூட அவளால ஆட முடியல நின்னு நின்னு ஆடினாள். பழைய நெனப்பு மனசுல வந்துபோய் இருக்கணும் ஆடி ஆடிப்பாத்தா….. முடியலே. வயதாகிப் போனதாலேதானா, வேற எதையும் தொலைச்சிட்டாளா,

 

ஒரு வழியாய் நேரம் நகர. சாமி தூக்கச் சென்றார்கள். வழியெங்கும் அவள் ஆடவேயில்லை “பிச்சையம்மா ஆடு….. என்ன பேசாம வர்ற…… ஆடாட்டி எப்பிடி துட்டு கெடைக்கும்..“ இன்னும் என்னன்னமோ நா கூசும் வார்த்தையெல்லாம் வந்து விழுந்தது. கூட்டத்தைப் பார்த்தாள்.. பெரியவங்களைப் பார்த்தாள்….. பொங்கிவந்த  கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். பிச்சையம்மாள் யாரோடும் ஏதும் பேசாமலும் ஆடாமலும் கையைக் கையை மட்டும் ஆட்டிக்கொண்டே நேரத்தைக் கடத்தி நடந்தாள்.

 

அம்மன் பவனி முடிந்து சாமி கோவிலில் உட்கார்ந்த பின்பு பிச்சையம்மாள் வேசம் கலைத்து வந்து சாமி கும்புட்டாள்.. கண்ணீர் மல்க அழுதுகொண்டே உருகினாள்.. திட்டுத்திட்டாய் இதயத்தின் அடியாழத்தில் படிந்திருந்த இயலாமையின் வேதனைகள் கண்ணீராய் கரைந்தன. பூசாரியின் காலில் விழுந்து வணங்கி விபூதி வாங்கினாள். ஊர்ப் பெரியோர்களின் கால்களிலெல்லாம் விழுந்து விழுந்து விபூதி வாங்கினாள். சின்னச்சாமித்தேவர் முன் நின்றாள். அவரைக் கூர்ந்து கண்ணீர் மல்கப் பார்த்தாள் கோவென்று கதறியவாறே அவர் தோளில் சாய்ந்தாள்.  வாக்கப்பட்ட இடத்தின் கொடுமையைத் தாங்கமுடியாமல அழுகின்ற மகளின்  முன் நிற்கும் இயலாமை நிறைந்த தந்தையைப் போல தேவரும் கண்ணீர் விட்டார். எல்லோரையும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு பிச்சையம்மாள் கிளம்பினாள்

 

“”இந்தப் பாவி மகளுக்கு அந்தப் பய வேதமாணிக்கத்தை கல்யாணம் பண்ணனும்னு ஒரே ஆசை. ஒரே கிறுக்கு. அவன் மனசுலேயும் அந்த நெனப்பு இருந்திச்சு. ரெண்டு பேரும் தெறமையானவங்க.ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு மரியாதைஅதிகமாகி அது ‘பழக்கத்துல‘ முடிஞ்சிருக்கு. அதனால தான் எந்த ஊருல ஆடக் கூப்பிட்டாலும் ரெண்டு பேரும் ஜோடியாப் போனாங்க. பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் போட்டிபட பாட்டுக்கு ஆடுனாங்கில்ல…. அன்னக்கி விடியக்காலையில ரெண்டு பேருமே எங்கிட்ட மனசொப்பிச் சொன்னாங்க. நானும் நிச்சயமா பேசி முடிக்கிறேன். அடுத்த பொங்கலுக்கு புருஷன் பொஞ்சாதியா வருவீகன்னு வாக்குக் குடுத்தேன். நானும்…..எம்புட்டோ சொல்லிப் பாத்தேன். வாதாடிப் பாத்தேன்.  ஆனா வேதமாணிக்கத்தோட அப்பன்  பிச்சையம்மாள  கல்யாணம் முடிக்கக்  கூடாதுன்னு ஒரேயடியா சாதிச்சுட்டான். பிச்சையம்மா ஆட்டக்காரி. அவ ஆத்தாளும் அப்பிடித்தான். ஆட்டக்காரிக குடும்பத்துக்கு ஆகமாட்டாங்கன்னு சொன்னதோட அக்கா மகளையே மகனுக்கு கட்டி வச்சிட்டான். இந்தப் பயமக பிச்சையம்மாளுக்கு  கல்யாணமே ஆகலே. ஒரு பயலும் பொண்ணுக் கேட்டு வரல. சும்மாவே ஆட்டக்காரிய கட்டுறதுக்கு யோசிப்பாங்க. இவளைக் கட்டுறதுக்குக் கடைசி வரைக்கும் யாருமே வரலே. இவுக. ரெண்டு பேரும் சேந்து ஆடுன ஆட்டமும் நடத்துன கூத்தும் ஊரறிஞ்ச கதையாச்சே….அதாலே..”.“ தேவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே….திடீர்னு கரண்ட் நின்னிடுச்சு. திருவிழா பந்தல் முழுக்க மாவிளக்கு வெளிச்சம் ஜெகஜோதியாயிருந்தது. அது தற்காலிகமான வெளிச்சம்தான். இப்ப எல்லா மாவிளக்கும் ஒவ்வொன்றாய் வெளியேறிப் போயிருச்சு. பந்தல் முழுக்க மீண்டும் இருட்டு. இன்னும் கரண்ட் வரல.  விடிய  ரொம்ப நேரம் இருக்கு.

(1999- செம்மலர் பொங்கல் மலர்)

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “ஆட்டக்காரி”

  1. ந.ஜெகதீசன்

    எங்கள் ஊர் திருவிழா காலங்களில் சேலத்திலிருந்து ஆட்டக்காரர்களை அழைத்துவந்து ஆடல் பாடல் கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். வெளியில் பலரை மகிழ்விக்கும் ஒரு ஆட்டக்காரரின் நிஜவாழ்வு எவ்வளவு துன்பமயமானது என்பதை இந்த சிறுகதையை உணர்த்துகிறது. இது ஒரு கண்ணீர் படைப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: