ஆடுடா ராமா… ஆடு

0
(0)

முன் வராண்டாவில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். தாத்தா அன்றைய தினசரி செய்தித்தாள்களைப் படிப்பதும் குழந்தைகள் ”வியாபார விளையாட்டு” விளையாடுவதைப் பார்ப்பதுமாக இருந்தார்.

வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இருந்த மாமரத்தின் மீது இரு அணில்கள் ஏறி, இறங்கி ஓடுவதாக இருந்தன. சுற்றுச்சுவரின் மீது ஒரு ஓணான் தலையை ஆட்டியாட்டி பார்த்துக்கொண்டிருந்தது.

”வியாபார விளையாட்டில்”  காய் உருட்டிய அம்மு ”ரேணு, இந்த பத்தாயிரம் டாலர்! நான் இந்த அசோகா ஓட்டலை வாங்கிக்கிறேன்”

அடுத்த காய்களை உருட்டி ரேணு ” ஹை, இந்த ஐம்பதாயிரம் டாலர், நான் இந்த பெட்ரோலியம் பாக்டரியை வாங்குறேன்.”

”சபாஷ், காலத்துக்கேத்த விளையாட்டு!” என்றார் தாத்தா.

” என்ன தாத்தா சொல்றீங்க? !”  அம்மு கேட்டாள்.

தாத்தா செய்தித் தாளில் மடித்து வைத்துவிட்டு சொன்னார். ”ஆமாம் அம்மு. அந்தக் காலத்தில மனுஷன் உணவுக்காக வேட்டையாடிய காலத்துல ஓய்வா இருந்தப்ப ஆடு-புலி ஆட்டம் விளையாடினாங்க. அப்புறம் நாடு பிடிச்சு அடிமைகளைச் சேர்த்த காலத்தில் பல்லாங்குழி விளையாட்டு புழக்கத்துக்கு வந்துச்சு. அரசரை சூழ்ச்சி பண்ணி ஜெயிச்ச காலத்தில் சதுரங்கம் – அதுதான் செஸ் விளையாட்டு நடைமுறைக்கு வந்தது. இப்படியே வந்து இன்னைக்கு உலகமய வியாபார யுகத்தில் வியாபார விளையாட்டை உங்கள் தலையில் கட்டியிருக்காங்க!” தாத்தா நக்கலாகச் சிரித்தார்.

”போங்க தாத்தா, நல்ல இன்ட்ரஸ்ட்டா விளையாடிகிட்டு இருக்கும்போது குறுக்கே குறுக்கே பேசுறீங்க!”  அம்மு கோபமாக கடிந்தாள்.

”சரி தாயி, நீங்களாச்சு, உங்க விளையாட்டாச்சுடு

தாத்தா மறுபடியும் செய்தித்தாளில் சஞ்சரித்தார். பிள்ளைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பத்து நிமிஷம் கழிந்திருக்கும் மீண்டும் தாத்தா கடகடவெனச் சிரித்தார். விளையாட்டில் மூழ்கியிருந்த குழந்தைகள் திடுக்கிட்டு பார்த்தனர்.

”என்ன தாத்தா நீங்களா சிரிக்கிறீங்க! அப்படி என்ன நியூஸ்?

”இல்லப்பா, ரோட்டோர குடிசைங்க, கோயில்களை எல்லாம் இடிக்கிறாங்க!   படத்தோட செய்தி வந்திருக்கு!”

அய்யய்யோ, கோயில் இடிச்சா சாமி கண்ணை குத்திரும்ல தாத்தா?”  மற்ற பிள்ளைகளும் கண்களை கைகளால் மூடி காதுகளை விரித்துக் கேட்டனர்.

தாத்தா மீண்டும் கெக்கலியிட்டுச் சிரித்தார்.

”இது தப்பில்லையா தாத்தா? இதைப்பார்த்து ஏன் சிரிக்கிறீங்க? சாமி கோவிச்சுக்கமாட்டாரா தாத்தா?”

அம்முவின் சிந்தனை தேங்கிய முகத்தைப் பார்த்து தாத்தா சிரிப்பை அடக்கிக் கொண்டார். ஆனாலும் முகத்தில் சிரிப்பின் சுவடுகளை மறைக்க முடியவில்லை.

”என்ன தாத்தா, உங்களுக்கு என்ன ஆச்சு? கேட்டதுக்கெல்லாம் சிரிக்கிறீங்க? நான் கேட்டது தப்பா? சாமிக்குக் கோபம் வராதா?”

”அம்மும்மா, நீ கேட்டது தப்பில்லை! நியாயமான கேள்விதான்!   எந்த சாமியும் நடைபாதையில் கோவிலைக் கட்ட சொல்லவுமில்லை. அதை இப்படி திடீர்னு இடிக்கவும் சொல்லலை.”

”அப்போ சாமிக்கு கோபம் வராதா? இதை எல்லாம் பார்த்துகிட்டு சும்மா இருக்குதே? ரேணுகா கேட்டாள்.

தாத்தா மௌனமாக சிரித்தபடி, ”அது அப்படித்தாம்மா இருக்கும். ஒரு நம்பிக்கையை வளர்க்கிறதும், தகர்கிறதும் ஆள்றவங்களோட வேலை.”

”என்ன தாத்தா, நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலை.”

தாத்தா மவுனமாகச் சிரித்தபடி வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவினார். பிள்ளைகளுக்குத் தெரிந்துவிட்டது. தாத்தா இன்றைக்கு ஒரு கதையை அவிழ்த்துவிடப்போகிறார். வாயில் சீவலைப் போட்டு மென்று சாரை விழுங்கிச் செறுமினார். தாத்தா முகத்தில் மஞ்சள் வெயிலின் சாயல். குரலில் பெருமிதம். “வியாபார விளையாட்டை” விட்டுவிட்டு உற்சாகமாக பிள்ளைகள் சூழ்ந்து கொண்டனர்.

சுதந்திரம் அடையறதுக்கு முந்தி.. நம்ம நாட்டில் ஒரு சின்ன சமஸ்தானம்; அந்த சமஸ்தானத்தில் ஒரு வெள்ளைக்காரரை திவானாக ஏற்றிருந்தார் ராஜா. எல்லாம் வெள்ளைக்கார சக்கரவர்த்தியை திருப்திப்பபடுத்தத்தான்.

ராஜாவுக்கு அந்த சமஸ்தான தலைநகரை நவீனப்படுத்தணும்னு ஆசை வந்தது. திவான்கிட்டே சொன்னார். திவானும் திட்டம் தீட்டினார். அரண்மனையை மையமாக வைத்து நாலாதிசையிலும் சச்சதுரமா அகல அகலமா வீதிகள். வீதிகளில் வரிசை வரிசையாய் வீடுகள். திட்டம் செயல்படத் தொடங்கியாயிற்று.

முதலில் ராஜவீதியை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தார்கள். அந்த வீதியில் ஒரு பிரமாண்டமான கோயில் இருந்தது. ராஜகுடும்பத் தாரும், மக்களும் பயபக்தியோடு கும்பிடும் காட்டுப்பெருமாள் கோயில்.

“ஏன் தாத்தா, காட்டுப்பெருமாள் கோயில்ன்னா காட்டில் இல்ல இருக்கணும். ஏன் ஊருக்குள்ளே இருக்கு?” அம்மு கேட்டாள். “ஆமாம், ஏன் தாத்தா” – மற்ற பிள்ளைகள் ‘ஆமாம்’ பாடினார்கள்.

இந்த கேள்வி அந்த வெள்ளைக்காரத் துறைக்கும் வந்தது. கோயிலை இடிச்சு வீதியை அகலப்படுத்த உத்தரவு போட்டார்.

ராஜ விசுவாசிகள் கொந்தளித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜாவைப் பார்க்கத் திட்டமிட்டனர். ஆனால் அவர்களுக்கும் ஒரு பயம்.. ராஜா சமீப காலமாக. அந்த வெள்ளைக்காரத்துரை சொல்றதுக்கெல்லாம் தலையாட்டறார். அவர் பேச்சுப்படியே நடக்கிறார். இந்த சமஸ்தானத்தை ஆளுவது ராஜாவா, வெள்ளைக் காரனா, என்ற கோபம் இருந்தது. ராஜ விசுவாசிகள் மெல்லக் குடிமக்களைத் தூண்டிவிட்டனர். குடிமக்கள் கொந்தளித்து பேஷ்காரைப் பார்த்து முறையிட்டனர்.

பேஷ்காரும் ராஜாவைப் பார்த்துப் பேசினார். அந்தக் கோவில் உருவான கதையைச் சொன்னார்.

“இது என்ன தாத்தா, கதைக்குள்ளே ஒரு கதையா?” அம்மு கேட்டாள். “புத்திசாலிப் பொண்ணு. அப்படிக் கேளு.”

“இந்த ராஜாவோட தாத்தா ராஜாவாக இருக்கும்போது, காட்டுக்கு வேட்டையாடப் போனாராம். சரியான வேட்டை அமையல. மான், புலின்னு விலங்குகளைத் தேடி காட்டுக்குள்ளே ரொம்பதூரம் போயிட்டாராம். வெயில் கடுமை; தண்ணீத் தாகம்; கொண்டு வந்த பழரசமெல்லாம் தீர்ந்துபோச்சு. கூட வந்திருந்த மெய்க்காப்பாளர்கள் எல்லாம் தண்ணீரை, பழங்களைத் தேடி நாலா திசையும் போயிட்டாங்க. ராஜாவும் உதவியாளும் மட்டும் இருந்தாங்க.

கருங்கும்முன்னு அடர்ந்த காடு, சூரியன் வெளிச்சம் படாத புதர்கள், அடர்த்தியான காட்டு மரங்கள். சிள் வண்டுகள் ‘ங்கீ.. ங்கீன்’னு கோரஸ் பாடிக்கிட்டு இருந்தன. எங்கிருந்தோ மரங்கொத்திகள் ‘டொக் டொக்’குன்னு மரத்தை கொத்திக்கிட்டு இருந்தன. நிசப்தம் அசாதாரண பயத்தை தந்தது.

ரொம்பத்தூரம் நடந்து வந்த களைப்பு; பசி, தனிமையான சூழல்; எல்லாம் சேர்ந்து ராஜாவுக்கு ஒரு கிறக்கத்தை உண்டு பண்ணிவிட்டது.. கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க புதரில்லா புல்வெளி தேடி நகர்ந்து கொண்டிருந்தார். ராஜா ஒரு புதரை கடக்கும் போது ‘உர்ர்ர்’ரென்று சீற்றத்தோடு ஒரு புலி, தன் குட்டிகளை விட்டுவிட்டு ராஜா மீது பாய்ந்தது.

புலியின் முன்னங்கால் நகம்பட்டு முகத்தில் ரத்தம் பீறிட ராஜா கீழே விழுந்தார். மயங்கினார். ராஜாவை காப்பாத்த வந்த உதவியாளர் மீது புலி பாய்ந்து புரட்டி அவரை இழுத்துப் போனது.

‘அச்சச்சோ.. அப்புறம் தாத்தா, ராஜா செத்துட்டாரா, மற்ற ஆளுக எல்லாம் என்ன ஆனாங்க?” பிள்ளைகள் கோரஸாக கேட்டார்கள்.

“இருங்க, இருங்க, கதையைக் கேளுங்க. அந்த நேரம் மரத்தில தேன் எடுக்க வந்த காட்டுவாசி ஒருத்தன் அம்பு வீசி புலியை விரட்டினான். கொஞ்ச தூரம் ஓடி ஒரு புதர் மறைவில இருந்த சுனைத் தண்ணியை ஒரு குடுவையில் மொண்டு வந்து ராஜா முகத்தில் தெளிச்சு, எழுப்பினான். ராஜாவுக்கு முதலில் தண்ணீர் குடிக்கக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினான். தான் எடுத்த தேனடையில் இருந்து தேனைப் பிழிஞ்சு கொடுத்தான். தெம்பூட்டிய பிறகு பக்கத்தில் சென்று மூலிகைகளைப் பிடுங்கி கசக்கி அந்தச் சாற்றை ராஜா முகத்தில் நோகாமல் பூசிவிட்டான். ராஜாவுக்கு இதமாக இருந்தது. இதேபோல அந்தப்புலி இழுத்துப் புரட்டிப்போட்ட உதவியாளரையும் காப்பாற்றித் தெம்பூட்டினான்.

ராஜா, “அந்தக் காட்டுவாசி பேரு என்னன்னு கேட்டிருக்காரு. அவன் ‘பெ.. பெ….’ என்று குரல் கொடுத்து காட்டுக்குள்ளே ஓடி விட்டானாம்.

‘பெ.. பெருமா.. ஆஹா அந்த பெருமாளே காட்டுக்குள்ளே வந்த நம்மளைக் காப்பாற்றிட்டு மறைஞ்சிட்டாரன்னு “உயிர் காத்த காட்டுப்பெருமாளு”ங்கிற பேர்ல அரண்மனை வீதியில் ஒரு கோயில் கட்டிக் கும்பிட்டு வந்தாராம்.

அந்த சமஸ்தான ஜனங்களும் தமது ராஜாவை காத்த தெய்வம்னு பக்தியோடு வெகுபிரபலமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. சின்னக் கோயில் பெரிய கோயிலா மாறிப்போச்சு. கோயிலைச் சுற்றி கடைகளும் வீடுகளும் பெருகிப்போச்சு.

பேஷ்கார் இந்தக் கதையைச் சொல்லி முடிக்கவும், ராஜா மெய்சிலிர்த்துப் போனாராம். “சரி, இந்த வெள்ளைக்கார துரை பிடிச்சா முதலைப்பிடியா இருக்கானே. இவனையும் சமாளிக்கணும் கோயிலையும் காக்கணும், ஜனங்களையும் சமாதானப்படுத்தணும். என்ன.. செய்யறது?” கையைப் பிசைஞ்சார் ராஜா.

அப்புறம் சொன்னார், “பேஷ்கார், நீரே நல்ல யோசனை சொல்லுங்கோ….” என்றார். பேஷ்காரும் யோசனை சொன்னார். “பேஷ், பேஷ்!” துள்ளிக் குதித்தார் ராஜா.

“அப்படி என்ன யோசனை தாத்தா?”

“அட இருபுள்ளே அவசரப்படாதே, தாத்தாதான் சொல்றாரில்லை.”

தாத்தா இந்த இடைவேளையில் எழுந்துபோய் வெற்றிலை எச்சில் துப்பி, வாய்கொப்பளித்துத் தண்ணீர் குடித்து வந்தார்.

“என்ன தாத்தா யோசனை?”

“கேளு, மறுநாள் காலையில ஊர் முழுவதும் தண்டோரா போடப்பட்டது. “நேற்று இரவு அருள்மிகு காட்டுப்பெருமாள் சாமி நமது வீரதீர, பராக்கிரம, தயாள சீல ராஜா கனவுல வந்தாராம்.

“காற்றோட்டமா இருந்த தன்னை ஜனப்புழுக்கத்தில் மூச்சுத் திணற இருக்க வச்சிருக்கேளேன்னு காட்டுப்பெருமாள் சங்கடப் பட்டாராம். ஆகவே நமது பக்திமான் ராஜா தமது அரண்மனை நந்தவனத்தில் காற்றோட்டமாக வடக்கோரமாக கிழக்குப் பார்க்க காட்டுப்பெருமாளை பிரதிஷ்டை செய்ய உத்தரவு போட்டுள்ளார். ஆகவே பொது ஜனங்களே நாளை காலை பத்து மணிக்கு சுப வேளையில் மேளதாளம் முழங்க மந்திரங்கள் ஒலிக்க காட்டுப் பெருமாள் சாமி ராஜவீதியில் இருந்து அரண்மனை நந்தவனத்திற்கு குடியேறப் போகிறார். ஆகவே பொதுஜனங்களே, இந்த மங்கள விழாவில் எல்லாரும் கலந்துக்கொண்டு அருள் பெறணும்னு நமது ராஜாவின் சார்பாக அறிவிக்கப்படுகிறது. டும்.. டும்.. டும்…”

இந்த மாதிரி தண்டோரா ஊர் முழுதும் போடப்பட்டது. ராஜா கனவுல காட்டுப்பெருமாள் நேரடியாகப் பேசும் அளவுக்கு பக்தியும் நெருக்கமும் இருப்பது கேட்டு ஊர் ஜனங்கள் உணர்ச்சி பொங்கவும் புளங்காதிதத்தோடும் கூடிக் கூடிப் பேசினர்.

ஜனங்களில் சிலர் கேட்டனர், “காத்தோட்டமான இடத்துக்கு காட்டுப்பெருமாள் சுவாமி குடி அமர்த்தச் சொன்னபோது, அவர் கோயிலைச் சுற்றிக் குடியிருக்கும் எங்களுக்கும் காற்றோட்டமாக இடம் ஒதுக்கச் சொல்லியிருப்பாரே…?”

இந்தக் கேள்வியும் அரண்மனை வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது. இந்த மாதிரி தண்டோரா போடும்போது மக்களோடு மக்களாக நின்று வேவு பார்க்கும் அரசாங்க உளவாளிகள் பேஷ்கார் காதுக்கு மக்களின் கேள்விகளைக் கொண்டு சேர்த்தனர்.

பேஷ்கார் கையை உதறிக் கொண்டு ராஜாவிடம் ஓடினார். இருவரும் யோசித்தனர் ‘ஜனங்கள் இவ்விஷயத்தில் கிளர்ச்சி, கலாட்டா அப்படி இப்படின்னு இறங்கிடக் கூடாது. அப்படி எதுவும் ஏடாகூடம் நடந்துவிட்டால் வெள்ளைக்காரன் நம்மை கேவலமா நினைச்சிருவானே’ன்னு கவலைப்பட்டனர். ஒரு முடிவுக்கு வந்தனர்.

மறுநாள் காலை பத்துமணி அளவில், தாரை தப்பட்டை மேள தாளங்கள் முழங்க மந்திரங்கள் உச்சாடனம் ஒலிக்க தங்கப் பல்லக்கில் ஏறி காட்டுப்பெருமாள் சாமி அரண்மனை நந்தவன வளாகத்தில் எழுந்தருளினார். கோவிலைச் சுற்றிக் குடியிருந்த மக்களுக்கு நகருக்கு கிழக்கே புதுக்குளக் கரையோரம் தண்ணீர் வரத்து இல்லாத மேட்டுப் பகுதியில் குடி அமர்த்துவதாக அறிவிக்கப் பட்டது. காட்டுப்பெருமாளின் அருளையும், ராஜாவின் தயாள குணத்தையும் மக்கள் சொல்லிச் சொல்லிப் பூரித்தனர்.

தாத்தா கையை உதறி நெட்டி முறித்தார்.

“ஏன் தாத்தா அப்போ நம்ம ஊர்ல இடிபட்ட வீடுகளுக்கும், கோயில்களுக்கும் பதிலா புதுசாக் கட்டித் தருவாங்களா?” அம்மு கேட்டதும் தாத்தா கெக்கலி போட்டுச் சிரித்தார்.

“அம்மு மணி ரெண்டாகிறது. பசிக்கலையா, சாப்பிட வாடி” அம்மாவின் குரலில் கண்டிப்பு தெரிந்தது.

“ஆஹா, மணி ரெண்டாச்சு. அவங்க அவங்க வீட்டுக்கு அவரக்காச் சோத்துக்கு, ஓடுங்க. சாப்பிட்டுட்டு வாங்க.” தாத்தா சொல்லிவிட்டு மவுனமாய்ச் சிரித்தார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top