அவளும் பொய் சொன்னாள்

0
(0)

மாத்திரையை கரைத்து‍ சங்கில் வைத்துப் புகட்டினாள் அவள். குழந்தை முகச்சுளிப்புடன் விழுங்கியது, விழுங்கிய அடுத்த விநாடி‍ ‘கே…’ என மருந்தின் கசப்பு தாளாது‍ அழுதது.

 

“சரிச்சர்ரீ….என் அம்மால்ல….கண்னுல்ல….அழுவாதடி‍ அழுவாத….அழுதா வாந்தி வந்துரும்….” சொல்லிக்கொண்டே குழந்தையின் நெஞ்சை நீவி விட்டாள், குடித்த மாத்திரை வயிற்றுக்குள் இறங்கட்டுமென.

 

ஆனால் அவளது‍ கவனிப்பையும் மீறி குழந்தை வாந்தி எடுத்துவிட்டது, அவளது‍ மடியிலும் தரையிலுமாய் உள்ளே புகட்டிய மாத்திரை, சளியோடு வெளிவந்தது.

 

“சொன்னா கேட்டாத்தானே…மாத்தர குடிக்கிறப்ப அழுவாத அழுவாதன்னா…வெட்டியா பத்துரூவா காசு‍ வீணாப் போச்சு….” குழந்தையை திட்டிக்கொண்டே அதனை தரையிறக்கி உட்காரவைத்து‍விட்டு‍ வாந்தியைச் சுத்தப்படுத்தினாள்.

 

அம்மாவிடமிருந்து‍ இறக்கிவிடப்பட்ட குழந்தை தனிமையுணர்ந்து‍ அழுகையைத் தொடர்ந்தது.

 

“ரைட்டு‍ அழுவுறத நிறுத்து….இல்ல அம்மா அடிச்சுப்போடுவேன்….அதேன் குடிச்சதப்பூராம் வெளீல கொட்டீட்டல்ல…அப்புறமென்ன ஆங்காரம்….” சொல்லிக்கொண்டே சேலையைக் கழுவ வெளியில் சென்றாள்.

 

குழந்தையும் எழுந்து‍ அவளது‍ பின்னாலேயே வந்தது. வெளியில் கணவன் நின்று‍ பீடி‍ புகைத்துக் கொண்டிருந்தான். வீட்டுக்குள்ள புகைக்கக்கூடாது‍ என்பது‍ அவளது‍ கட்டளை.

 

“ஏண்டீ‍ இப்பிடி‍ வாருவாருனு‍ பிள்ளைய அழு‍வ விடுவ….” புகையை ஊதியவாறே இருவருக்கும் அன்மையில் வந்தான்.

 

“ந்தா…பொகையை அங்குட்டு‍ ஊது….கருமம் கருமம்….” அவனைத் தள்ளிவிட்டு‍ சேலையை அலசினாள்.

 

பீடியைத் தூர எறிந்துவிட்டு‍, வாயிலிருந்த புகையை ஊதித் தள்ளிவிட்டு‍க் குழந்தையை தூக்கினான், குழந்தையின் மேனி சுட்டது.

 

“இப்பிடி‍ ஏட்டிக்கு‍ போட்டியா பேசிக்கிட்டே இரு….குடும்பம் கோபுரமா ஏறி நிக்கிம்….”

 

“பின்ன என்னா….கொஞ்சங்கூட புல்லரிக்காம பேசற….”

 

“புல்லரிப்பு செல்லரிப்புன்னு‍ வார்த்தய நிப்பாட்டுடீ….எனக்கும் பேசத்தெரியும்….”

 

“பேச வேண்டியதான…..பேசாம கமுக்கமா இருந்தேல்ல காரியஞ்‍ சாதிக்கிற…”

 

“வேணாம், கோவத்த கௌப்பாத….”

 

“கோவம் வந்தாப்ல…சடக்குனு‍ புள்ளைய தூக்கிட்டுப் போயி மருந்து‍ வாங்கிட்டு‍ வந்துரப் போறியா….நாய் கொலச்சாப்ல நாலு‍ கத்துகத்துவ மிஞ்சிப்போனா….என்னைய ரெண்டு‍ சாத்து‍ சாத்துவ….வேற என்ன செய்யும் ஓங்கோவம்….”

 

குழந்தைக்கு‍ அதற்குமேல் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்கிற அவளது‍ கையறுநிலையும், கணவனால் எந்த பிரயோசனமும் இல்லை என்கிற கோபமும் அவளை சுருதி சேர்த்‌து‍ பேசவைத்தது.

 

“இன்னும் காச்ச விடல போல….” என்றவன், “ஏண்டி‍ ரெண்டு‍ நாளா புள்ளைக்கு‍ தொயந்து‍‍ காச்சலடிக்குது…வெறும் மாத்தரைய மாத்தரைய வாங்கி குடுத்துட்ருக்க….ஆஸ்பத்திரில போய் ஊசியப் போட்டு‍ வரலாம்ல….”

 

 

“யே…அம்புட்டு‍ காசல மயிரு‍ இருந்தா….நீ ஆசுபத்திரிக்கு‍ தூக்கிப் போக வேண்டியதான”

 

அவனுக்கும் இக்கட்டான நிலை, என்ன செய்தாலும் அவள் சொன்ன படி‍ செய்தா ஆகிவிடும். அடித்தாலும் ஏசினாலும் நாந்தாஞ்சொன்னேன்ல…என்பாள். குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டவன் விறுவிறுவென வீதியில் இறங்கினான்.

 

“யே…சாயந்தர நேரம்…..உடம்புக்கு‍ முடியாத பிள்ளைய எங்குட்டு‍ தூக்கிட்டுப் போற….” அவள் கத்தகத்த அவன் வேகமாய் நடந்தான். குழந்தைகூட அவளது‍ சத்தத்திற்கு‍ தலை நிமிர்த்‌துப் பார்க்கவில்லை. அப்பாவின் தோளில் தலைவைத்து‍ கண் விழித்தபடி‍ இருந்தது.

 

அப்பாவின் கைப்பிடியில் குழந்தை அப்பிடியே அவனது‍ தோளில் தலை சாய்த்துக் கொண்டது. அழுகை அடங்கி விசும்பல் மட்டும் நீடித்தது.

 

குழந்தையின் முதுகில் வலதுகையை அணைவாக வைத்துக் கொண்டு‍ நடந்தான். தெருமுனையைத் தாண்டியதுமே குழந்தை எழுந்து‍ கொண்டது. தெருவைப் பராக்குப் பார்த்து‍க் கொண்டு‍ வந்தது. “அப்பா….எங்க போற…? ஆசுபத்திரிக்கா….” ஒரு‍ கணம் குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தான். பதிலை அங்கே தேடுவதுபோல.

 

“இல்ல…கடவீதீக்கு….”

 

சரி என்பதைப்போல தலையை அங்குமிங்கும் ஆட்டி‍ மறுபடி‍ தோளில் சாய்ந்துகொண்டது.

 

அவனுக்கும் பத்து‍ நாளாக வேலை இல்லை. வெறுமனே வீட்டைச் சுற்றுவதும், ரோட்டைக் காப்பதுமாக அலைந்து‍ கொண்டிருக்கிறான். பீடிக்குக்கூட வழியில்லாமல் பழகியவர்களிடம் ஓசி வாங்கிப் புகைத்துக் கொண்டிருக்கிறான். வெள்ளையடிப்புத் தவிர வேறு‍ வேலைகள் பழகாததால் ஒரு‍ கொத்தனாரையே நம்பி ஓட்ட வேண்டியிருக்கிறது. அவரும் தனக்கு‍க் கீழ் இருக்கும் இருபது‍ பேருக்கு‍ வேலை தரவேண்டும், சுழற்சி குறைதான்.

 

அவளும் கூலி வேலைதான். சித்தாள் கணக்கு. கட்டிட வேலையானாலும் சரி, பஞ்சு‍ மில்லில் பருத்திபொறு‍க்க….அரவைக்குக் கூப்பிட்டாலும் சமையல் வேலைக்கு‍ இலை எடுத்துப் போடக்கூடிய வேலையானாலும் தயாராக இருந்தாள். தவிரவும் அதிகாலையில் மூன்று‍ கடைகளுக்கு‍ வாசல் கூட்டிப் பெருக்கி சாணம் தெளிக்கும் வேலையும் பார்த்தாள். கடைக்கு‍ மாதம் 120 ரூபாய் சம்பளம். அதனால் அவள் பெரும்பாலும் வீட்டில் இருக்க முடிவதில்லை.

 

அதனால் அவளுக்கு‍ வேலைச்சுமை கொஞ்சம் ஜாஸ்தி. அவனைக் காட்டிலும் காசுப் புழக்கமும் இருக்கும். அவள்தான் ரெண்டு‍ நாளாய் குழந்தைக்கு‍ மெடிக்கலில் மாத்திரை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். ஊசி போட பணமில்லையாம். ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துவிட்டால் நூறு‍ ரூபாய்த் தாள்தான் செல்லுபடியாகும். டானிக்கு‍ வாங்கி இருந்தாக்கூட ஓரளவு கேக்கும், ஊசி மருந்து‍ மாத்திரைகள அவ்வளவா கேக்காதுன்னு‍ யாரோ சொன்னாங்களாம். “இல்லாத கொடுமைக்கு‍ எல்லாப் பேச்சுமே நல்ல பேச்சாத்தான படுது…அதனால் அவளும் அப்பைக்கப்ப அஞ்சு‍ ரூபா பத்து‍ ரூபாய்க்கி மாத்திரைய வாங்‌கி ஊத்திக்கிட்டிருக்கா…”

 

“அப்பா”

 

கடைவீதீக்குள் நுழைந்ததும் குழந்தை அவனது‍ கன்னத்தில் பிராண்டி‍ கூப்பிட்டது.

 

குழந்தையின் கலைந்த முடியை ஒதுக்கிவிட்டவாறு‍‍ கேட்டான், “என்னா”

 

கட்டை விரலை வாயில் வைத்து‍ “தண்ணி” என்றது‍.

 

“பசிக்கிதா….” வயிறை தொட்டுப் பார்த்தான், இலவம் பஞ்சுபோல மிருதுவாய் இருந்தது.

 

அதற்கும் தலையாட்டியது‍ குழந்தை.

 

மாலைநேர கடைவீதி அத்தனை பரபரப்பாய் இல்லை. காரும் பஸ்சும் வாகனங்களும் மட்டுமே இடையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தன. டீக்கடை தவிர மற்ற கடைகளில் கூட்டம் இல்லை. வாடிக்கையாய் டீ‍ சாப்பிடும் கடைக்கு‍ வந்தான். மரப் பெஞ்சில் குழந்தையை உட்காரச் செய்தான். தண்ணீர் கேட்ட குழந்தைக்கு‍ காப்பி வாங்கித்தர முடிவு செய்தான். கடைக்காரர் காப்பி கடன் தருவார். மற்ற பீடி‍ சிகரட்டோ, தின்பண்டமோ ரொக்க வியாபாரம்தான்.

 

“காப்பி குடிக்கிறயா”

 

அதற்கும் தலையாட்டிய குழந்தை, பெஞ்சில் நன்றாக தன்னை நிலைப்படுத்தி உட்கார்ந்து‍ கொண்டது. புத்துணர்ச்‌சி பெற்றதுபோல பார்வையை தெம்பாய் நாலாபக்கமும் வீசியது.

 

அது‍ அவனுக்கு‍ ஒரு‍ அச்சத்தை உண்டாக்கியது, “பயபுள்ள வேறெதாச்சும் தீம்பண்டம் வேனும்னு‍ கைய நீட்டுனா ரெம்ப கஷ்டம்…” சடாரென குழந்தையின் பக்கமிருந்து‍ விலகி கடைக்காரரிடம் நகர்ந்தான். “ஒரு‍ டீ‍ ஒரு‍ காப்பி போடுண்ணே, காப்பி வட்டக் கப்புல போடுங்க, கொழந்தைக்கி….”

 

“ஆத்தீரவா…?”

 

“ஆத்தீருங்க….”

 

டீயும் காப்பியும் கைக்கு‍ வந்தபோது, “அக்கவுண்டா…?” எனக் கேட்டார் கடைக்காரர்.

 

“ஆமாண்ணே…நாளநிண்டு‍ முடிச்சரிலாம்”

 

“பாத்துக்கப்பா….கடந்தானன்னு‍ லிமிட்ட தாண்டாத, அப்புறம் பிரியங்கெட்டுப்போகும்….”

 

“அப்டியெல்லாம் ஆகாதுண்ணே… “கடைக்காரருக்கு‍ உத்திரவாதம் தந்துவிட்டு‍ குழந்தைக்கு‍ காப்பியை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக்கொடுத்தான். வீட்டைத்தாண்டி‍ வெளியில் வந்து‍ சாப்பிடுகிற மகிழ்ச்சியில் குழந்தையின் உடம்பில் பரவசமும் பரபரப்புமாய் குடித்தது.

 

“என்னா…புள்ளகுட்டியோட கடைக்கு‍ வந்துட்ட….” சக பெயிண்டர் ஒருத்தன் பக்கத்தில் வந்து‍ கேட்டான்.

 

“வா ப்பா….ச்சும்மா பிள்ளைக்கு‍ மேலுக்குச் சேட்டமில்ல….பெராக்கு‍ காட்டலாம்னு‍ வந்தே” பேச்சோடு‍ அப்படியே வேலை நிலைமையை விசாரித்தான். அந்த பெயிண்டரும் தான் ஒரு‍ புதிய வேலை பேசியிருப்பதாகவும் அதில் சம்பளத்தைப் பார்க்காமல் வந்தால் பங்கு‍ தருவதாகவும் வேலையின் தன்மை பற்றிச் சொன்னான்.

 

தனது‍ கொத்தனாரிடம் கேட்டுச் சொல்வதாக அவன் சொல்ல, உடனே செல் போனில் கொத்தனாரைப் பிடித்துக் கொடுத்தான் அந்த பெயிண்டர். கொத்தனாரும் ஒரு‍ வாரத்திற்கு‍ வேலை இல்லை எனவும், தேவைப்பட்டால் நேரில் வந்து‍ கூப்பிட்டுக் கொள்வதாகவும் பதில் சொன்னார்.

 

“சரி போவோம்” என்று‍ சொன்னான்.

 

“ரைட்டு, சரக்கு‍ சாமான்கள ரெடி‍ பன்னிட்டு‍ சொல்றே, முடிச்சுட்டு‍ வந்துருவோம்…. அட்வான்ஸ் வேனுமா…?”

 

சிரித்தான்.

 

“குடுத்தா நல்லது, பிள்ளைக்கு‍ ஒரு‍ ஊசிய போட்றலாம்”

 

நூறு‍ ரூ பாய் கொடுத்தான்.

 

“பத்தாதே…. வீட்டுக்கு‍ தரனும், வேலைக்கு‍ கூப்புட்ட ஒன்னைய சும்மா அனுப்பக் கூடாதுல்ல….”

 

“வாங்கிக்க…” என்று‍ நாக்கைச் சப்புக் கொட்டியபடி‍ தாராளமாய் இருநூறு‍ தந்தான்.

“இரு…குழந்தையை வீட்ல விட்டுட்டு‍ வந்துர்ரேன்….”

 

கடையில் அந்த பெயிண்டரின் பில்லுக்கும் சேர்த்து‍ பணம் கொடுத்துவிட்டு‍ குழந்தைக்கென ஒரு‍ பெரிய பிஸ்கட் பாக்கெட் வாங்கிக்கொண்டான்.

 

வீட்டில் அவளால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. கையில் காசில்லாமல் வாயில் வீம்பு மட்டுமே வைத்துக்கொண்டு‍ குழந்தையை தூக்கிப்போன கணவனை கரித்துக்கொண்டிருந்தாள். எப்பிடியானாலும் இன்னைக்காவது‍ ஊசி போட்டுவிட்டால் நிம்மதியாய் தூங்கலாம்.

 

அப்போது‍ கடவுளாய் வந்தார் கவுண்டரம்மா…சமையல் வேலை கங்காணி. பிரச்சனையைச் சொன்னதும் பின்வாங்கினார். “ஊரெல்லா ஏங்காசு‍ சீரழியிது, இனியும் கடந்தர ஏங்கிட்ட தெம்பில்ல” என்றவர், “வேனும்னா நாள்வட்டிக்கு‍ வாங்கிக்க, மூனே நாள்தே….திருப்பி குடுத்துர்னும், இல்லாட்டி‍ பண்ட பாத்தரத்த வந்து‍ தூக்கிக்கிருவேன்….”

 

நாள்வட்டி‍ என்பது‍ நூறு‍ ரூபாய்க்கு‍ ஐந்திலிருந்து‍ பத்துவரை வட்டி. கவுண்டரம்மா அவளுக்காக இரங்கி ஏழு‍ வட்டிக்கு‍ மூனுநாள் வட்டி‍ கழித்து‍ எழுபத்தொன்பது‍ ரூபாய் கொடுத்தாள். அந்தம்மாவுக்கு‍ கலர் வாங்கித்தர பக்கத்துவீட்டுப் பையனை அழைத்துக் கொண்டிருந்தபோது‍ அவன் குழந்தையை வீட்டில் இறக்கிவிட்டான்.

 

“ஆஸ்பத்திரில இன்னும் டாக்டர் வல்ல” கூசாமல் பொய் சொன்னவனை குழந்தை கூப்பிட்டது.

 

“அப்பா நானும் கடைக்கு…..”

 

“ஒரு‍ வேலைக்கு‍ அட்வான்ஸ் வாங்கனும், பிள்ளையப் பிடிச்சுக்க…”

 

வேகமாய் மறுபடி‍ வெளியேறினான்.

 

அவளுக்கு‍த் தெரியும் அட்வான்ஸ் பணம் எங்கே போய்ச் சேரும் என்று. குழந்தையைத் தூக்கிக்கொண்டு‍ அவள் ஆஸ்பத்திரிக்கு‍ புறப்பட்டாள். குழந்தை அவளிடமிருந்து‍ விசும்பிக்கொண்டு‍ கேட்டது.

 

“எங்கம்மா….ஆஸ்பத்திரிக்கா….”

அவளும் பொய் சொன்னாள், “இல்ல….கடவீதிக்கு‍……”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top