அவளும் அவனும்!

1
(1)

நெருதூளிப் பட்டது கூட்டம். பஸ் நிரம்பி வழிந்தது. இறங்குவதற்குள் ஏறுபவர்கள் அவசரப் பட்டார்கள். பெண்டு பெரிசு என்று பார்க்காமல் இளந்தாரிகள் முண்டியடித்தனர். நானும் சரளாவும் இறங்குவதற்குப் பெரும்பாடு பட்டுப் போனோம். பஸ்கம்பியை இறுக்கிப்பிடித்து, முழங்காலால் எம்பித் தள்ளிக் கூட்டத்தை விலக்கிப் பாதை அமைத்து இறங்கினோம். முகூர்த்தநாள் என்பதால் எல்லா வண்டிகளுமே நிரம்பித் ததும்பின.

மனித வெக்கை சரளாவுக்குச் சேரவில்லை போலும். மேமூச்சு கீமூச்சு வாங்கினாள். நெஞ்சு ஏறி இறங்கி இளைத்தது. கண் இமைகள் சோர்ந்து துவண்டன. கழுத்து ஒருபக்கமாய்ச் சாய்ந்து நடை துவண்டபோது ஒரு கடைவாசலில் உட்கார்ந்துவிட்டாள்.

பயந்து போனேன். என்னமோ ஏதோ என்று மனம் துடித்தது. கல்யாணநாள் நெருங்கிவிட்டது. எல்லா வேலைகளையும் சரளாதான் பார்க்கவேண்டும். இந்த நேரத்தில் இப்படி ஒரு தடுமாற்றம்!

“என்னம்மா செய்யிது?” எனக் கேட்டபடி நெற்றியில் கைவைத்துப் பார்த்தேன். ஜுரம் இல்லை.

“சலசலன்னு வேர்க்குது: சலவ போட்டு மூடுது: எங்குட்டாச்சும் படுக்கலாம்னு படுது.”

“ஐய்யயோ! படுத்துட்டா எப்படி? தலமேல காரியங்கெடக்கே.”

“ஷ்…….அப்பாடி!” எனப் பெருமூச்சு விட்டபடி பக்கத்தில் இருந்த தூணில் சாய்ந்தாள். முகம் கொராவிப் போனது.

“தண்ணி குடிக்கிறியா?” என்றேன். சரி என்பதுபோல் தலையாட்டினாள்.

ஜுஸ்கடை, டீக் கடை நிறைய இருந்தும் தண்ணீர் தர யாரும் முன்வரவில்லை.

“தண்ணி வேணும்னா பதினஞ்சு ரூபா: கூல்டிரிங்ஸ் பத்து ரூபா. நல்லா வாங்கிச் சாப்பிடு.” ஒரு கடைக்காரன் கிண்டல் தொனியில் பேசினான்.

எனக்கு அருவருப்பாய் இருந்தது. பிளாஸ்டிக் சீசாவில் தண்ணீர் அடைத்துக் காசுக்கு விற்கிறது வணிக உலகம். “தண்ணியும்பண்ணும் தவுத்து மற்றதெல்லாம் வெலகுடுத்து வாங்க வேண்டியிருக்கு” என்று ஒருகாலத்தில் அம்மா அங்கலாய்த்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. டீக் கடைக்காரனும் தண்ணீர் தர மறுத்துவிட்டான். ‘கோடகாலத்தில டீ போடவே தண்ணி கெடக்ய மாட்டேங்குது” என்று சொல்லிவிட்டான்.

ஈவு இரக்கம் என்பதெல்லாம் வெறும் அகராதி வார்த்தைகளாய் அமுங்கிப் போய்விட்டன. பணமும் லாபமும் வெப்பச் சுடராகி மனித ஈரத்தை அபகரித்துக் கொண்டுவிட்டன. இறுதியாக ஃப்ரூட்டி வாங்கிக் கொடுத்துக் குடிக்கவைத்தேன். வரவு செலவு சிட்டையை எடுத்து ஃப்ரூட்டி வாங்கியதை செலவுப் பகுதியில் எழுதிக் கொண்டேன்.

“போகலாமா?” என்றாள் சரளா. களைப்பு நீங்கி முகம் தெளிச்சி அடைந்திருந்தது.

“இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கயேன்.”

“வேணாம்: மார்க்கட வேலய முடிக்யணும்: வீட்டுலயும் ஏகப் பட்ட ஜோலி கெடக்கு.”

நாளைமறுநாள் தம்பிக்குக் கல்யாணம். பொருட்களை வேகவேகமாய்ச் சேகரிக்க வேண்டி இருந்தது.. சமயல்காரர் எழுதிக் கொடுத்த காயாகறிச் சிட்டை, பலசரக்குச் சிட்டை, புரோகிதர் கொடுத்த மணமேடைச் சிட்டை ஆகியவற்றை எடுத்துப் பார்த்தேன்.

காய்கறிச் சிட்டையில் ‘மஞ்சள்’ என்று முதலில் எழுதப் பட்டிருந்தது. பலசரக்குச் சிட்டையில் உப்பு என்றும் மணமேடைச் சிட்டையில் சந்தனம் என்றும் முதல் பொருட்களாய்க் குறிக்கப் பட்டிருந்தன. மங்கலப் பொருளே முதல் பொருளாய் முன்நின்று முகம் காட்ட வேண்டுமாம்.

சரளா எழுந்து நின்றாள். சாக்குப் பைகளையும் துணிப் பைகளையும் தூக்கித் தலையில வைத்துக் கொண்டாள். பஸ்டாண்டைவிட்டு வெளியே வந்தோம்.

சாலையெல்லாம் ஜனக்காடு தத்தளித்தது. கடைகளில் வாங்குவோர் கூட்டம் முண்டியடித்தது. சாலையோரக் கடைகளில் அதிகக் கூட்டம்! பூக்கடை, பழக்கடை, சந்தனக் குங்குமக் கடைகள், தேங்காய்பழக் கடைகள் என சகல கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சாலையோரத்தில் பழக்கடைகள் ரம்மியமாய்க் காட்சியளித்தன. பட்டுச் சேலைக்கு ஜரிகை போட்ட மாதிரி நகரப் பொலிவிற்குப் பழக் கடைகள் அழகு செய்தன. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை, கொய்யா, சப்போட்டா என்று ஒவ்வொரு பழ வகைக்கும் தனித் தனிக் கடைகள்! வேறுவேறு பழங்கள் வேறுவேறு நிறங்களில் மின்னின. நிறங்கள் கண்ணைக் கவர்ந்தன. வாசனை நாசியில் ஏறி நாக்கில் சுவை ஏற்றியது. உமிழ்நீர் சுரந்து வாயெல்லாம் சலசலத்தது.

பலசரக்குக் கடைநோக்கி நடந்தோம். முக்குத் திரும்பி சாலையைக் கடந்தபோது வரிசையாய் வாழைப் பழக் கடைகள்! ரகரகமாய், விதவிதமாய் வாழைத் தார்கள்! அவை நெடுகநெடுகமாய்த் தொங்கவிடப் பட்டிருந்தன. சில தள்ளுவண்டிகளில் சீப்பு சீப்பாய் அடுக்கப் பட்டிருந்தன. பூவன், மொந்தன், மோரிஸ், ரஸ்தாளி, நாடு, சக்கை, மலைவாழை, செவ்வாழை, நாளிப்பூ ஆகிய விதவிதமான ரகங்கள் இனிமையும் செழுமையும் நிறைந்து காட்சியளித்தன.

வீதி இரைச்சலைத் தோற்கடித்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணைக் கூந்தலைப் பிடித்து இழுத்து அடித்துக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன். அவளின் ஒரு கையில் குடையும் இன்னொரு கையில் வாழைப் பழ சீப்பும் இருந்தன. கண்ணாடி அணிந்த ஒருவர் கடையருகே நின்றிருந்தார். சரக்கு வாங்குபவராக இருக்கக் கூடும்.

“என்னடி ஒனக்கு அம்புட்டுத் திமுரு?” கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

“பாவி சண்டாளா! பேசாமப் போறியா இல்லயா?” மற்றவர்களைப் போல் நானும் அந்தச் சண்டையை நின்று பார்த்தேன்.

“வாங்க போகலாம்” என்றாள் சரளா.

“பொறு போவோம்.”

அவன் உடம்பைவிட அவள் உடம்பு தாட்டியமாய் இருந்தது. திரும்பி அடித்தாள் என்றால் அவன் தடுமாறிப் போவான். தட்டைக் குச்சி மாதிரி மேனியும் சிவந்த கண்களுமாய் இருந்த அவன் அத்தனை பெரிய உடம்புக்காரியை அடிப்பது என்றால்….. அவன் மீது கோபமும் அவள்மேல் அனுதாபமும் உண்டாயின.

“வர மனசில்லையா?” சரளா மீண்டும் கூப்பிட்டாள். மனசில்லைதான். ஒரு பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்துக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்தும் பாராமல் போவது எப்படி சரியாய் இருக்கும்? அவனை ஓங்கி அறைய வேண்டும்போல் இருந்தது.

“இது யாரு வீட்டுச் சொத்துடி?” விரல்களை மடக்கித் தலையில் குட்டினான்.

“அய்யோ: அம்மா!” அவளால் அழவும் அலறவும் மட்டும்தான் முடிந்தது. என் உதடுகள் துடிதுடித்து முனங்கின. ‘நீயும் திருப்பி அடி!’

“மனுஷியா, மாடா? ஏன் இப்படிப் போட்டு மொத்துற?” கண்ணாடிக்காரர் அமட்டினார்.

“ஏ பெரிசு! ஒஞ்சோலியப் பாத்துக்கிட்டுப் போ. எங்குடும்பத்துல நீ ஏன் மூக்கு நொழக்கிற?”

‘மட ராஸ்கல்’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன். கண்ணாடிக்காரர் அவனை அடித்து உதைக்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர் ‘போடா நாயே’ எனத் திட்டியபடி நகர ஆரம்பித்தார்.

அடடா என்றிருந்தது. பேசாமல் நகர்கிறாரே: குறைந்தது விலக்கியாவது விட்டிருக்கலாம். ஆனால் அவர் திரும்பிக் கூட பார்க்காமல் நடந்துகொண்டே இருந்தார்.

அந்த இளம்பெண் அவரைக் கூப்பிட்டாள். “வாங்கய்யா: வந்து சரக்க வாங்கிட்டுப் போங்க” என்றாள். குடையைக் கீழே போட்டுவிட்டு பழ சீப்பை இடது கைக்கு மாற்றி வலது கையால் எண்ண ஆரம்பித்தாள்.

“வேணாம்மா: நான் பெறகு வாரேன்” என்றவரை மறித்து வியாபாரம் கொடுத்து அனுப்பினாள்.

வியாபாரம் முடியும் வரை பேசாமல் இருந்த இளைஞன் கண்ணாடிக்காரர் நகர்ந்த பிறகு “என்னடி: நாங்கேட்டது என்னாச்சு?” என்றான்.

அவள் பதில் பேசாமல் உலைந்துகிடந்த பழ அடுக்கைச் சரிசெய்துகொண்டிருந்தாள்.

“என்னா? நாங்கேட்டுக்கிட்டிருக்கேன்: நீபாட்டுக்கு உம்முன்னு கெடக்க?”

அதற்கும் அவள் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

அவனுக்குக் கோபம் கொப்புளித்தது: முகம் விடைத்து விம்மியது. அவள் இடுப்பில் தொங்கிய சுருக்குப் பையைப் பிடித்து இழுத்தான்.

விடவில்லை. இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவன் நெஞ்சில் முழங்கையை ஊன்றி நெட்டித் தள்ளினாள்.

மல்லாக்கச் சரிந்தான் அவன். முகத்திலும் கைகளிலும் புழுதிமண் அப்பியது. எழுபது வயசுக் கிழவனைப் போல தள்ளிமுள்ளி எழுந்தான். தள்ளுவண்டியைப் பிடித்து நின்றபடி “என்னளா?” என்றான். பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களை வார்த்தைகளாக்கித் திட்டினான்.

“அப்பாத இருந்து கேட்டுக்கிட்டிருக்கேன்: பேச மாட்டேங்குறியே: திமுரா?” குடையைப் பிடுங்கி ஒடித்துக் கீழே எறிந்தான். அவள் உட்கார்ந்திருந்த ஸ்டூலை எட்டி உதைத்தான். அவள் மல்லாக்க சரிந்தாள்.

“மனுசந்தானா அவன்?” என்றாள் சரளா. பரவாயில்லை: இவளுக்கே கோபம் கொப்புளித்துவிட்ட விறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை: வேகம் கூடியது. சாலையைக் கடந்து நடந்தேன்.

இளைஞன் பெண்ணை துவம்சம் செய்தான். அவள் சேலையெல்லாம் முகமெல்லாம் மண்புழுதி! பக்கத்துக் கடைக்காரர்கள் பார்த்துக் கெகாண்டு மட்டும்மதான் இருந்தனர்.

விலக்கி விடுவதற்காக அவனைப் பிடித்து இழுத்தேன். எதிர்ப்பக்கம் இழுவை இல்லாத டக்கஃபார் கயிறு மாதிரி கையோடு வந்தான். வெறும் எலும்புக் கூடாய் இருந்தான் அவன். இவனுக்கா இவ்வளவு வேகமும் திமுரும்?

“ஏய்! யார்ரா?” என்றான்.

எனக்கு எப்படியோ இருந்தது. இப்படித்தான் விலக்க வந்த மற்ற கடைக்கரர்களையும் விரட்டியடித்திருப்பான் போலும். இருந்தாலும் மனசைத் திடப் படுத்திக் கொண்டு அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன்.

தள்ளாடிப் போனான். மனசில் லேசான பயம் விழுந்திருக்கக் கூடும். சமாளித்துக் கொண்டு “எதுக்குடா அடிக்கிற?” என்று கத்தினான்.

மீண்டும் ஓர் அறை! எதிர்பாராத சம்பவத்தால் மேலும் வலுவிழந்து நின்றான். முகம் சுருங்கி விரிந்தது. பயத்தை மனசுக்குள் அமுக்கிக் கொண்டு மீண்டும் கத்தினான். “ஏலே வெண்ண” என்றபடி கையை ஓங்கிக் கொண்டு வந்தான்.

கையைப் பிடித்து முறுக்கி முதுகில் ஒரு குத்துவிட்டேன்.

அவன் மனபயம் மேலும் கூடியது. தனது மூர்க்கமான வார்த்தைவீச்சை விட்டுவிட்டு இறங்கி வந்து பேசினான். “அவ என்னா செஞ்சா தெரியுமா?” என்றான். அந்தக் கேள்வியில் குரல் நடுக்கம் இருந்தது.

“என்னடா செஞ்சுச்சு?” என்று கேட்டபடி பக்கத்துக் கடைக்காரர் ஓடிவந்தார். இந்நேரம்வரை அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவர். இப்போது கண்டனக் குரல் கொடுத்தார். எனது வருகையால் அவர் தைரியம் அடைந்திருக்கக் கூடும்.

“நாலு சாத்து சாத்துங்கப்பா” என்றபடி அடுத்த கடை அக்காவும் எழுந்து வந்தது. “நித்தம் இதே பொழப்பாப் போச்சு.”

“பேசாமப் போங்கக்கா” என்று முறைத்தான்.

“எதுக்குடா போகணும்?” அந்த்த அக்காவின் கண்களில் கோபம் தெறித்தது.

சாலையோரக் கடைக்காரர்கள் அத்தனைபேரும் எழுந்து வந்தனர்.

“ஏலே முருகா! ஏண்டா இந்த அநியாயம் பண்ற?” யாரோ ஒருவர் அவனை அமட்டினார்.

“இவ என்னா  செஞ்சா தெரியுமா மாமு?”

“என்னடா செஞ்சுச்சு?”

“ஊருல இருந்து வந்த அவுக அண்ணனுக்கு அம்பது பழம் ஓசியாக் குடுத்து விடுறா. நாங்காசு கேட்டா மட்டும் தரமாட்டேங்குறா.”

“பொய் சொல்லாதடா.” அடுத்த கடை அக்கா அவன் கன்னத்தில் லேசாக இடித்தது.

“இப்படித்தாங்க்கா, என்னய ஆத்தித் தூத்தி அம்பலத்துல வக்கிறாப்ல.” ஸ்டூலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அவன் மனைவி எழுந்து நின்று குற்றம் சாட்டினாள். அழுதழுது அவள் முகம் வீங்கி இருந்தது. கண்ணீர் வழிந்த தடம் கன்னத்தில் கோடுமாதிரி படிந்திருந்தது. கூந்தல் இடுக்கில் மண்புழுதி!

“இந்த யாவாரத்த வித்து வீட்டு வாடக குடுத்து, மூணு புள்ளைகளப் படிக்ய வச்சுக் குடும்பத்த ஓட்டிக்கிட்டிருக்கா: இவன் என்னடான்னா, குடிச்சுக் குடிச்சு அம்புட்டையும் தொலச்சிட்டிருக்யான்: சீக்கிரமாவே அவள சுடுகாட்டுக்கு அனுப்பிருவாம்போல.” இது அடுத்த கடை அக்காவின் அங்கலாய்ப்பு.

இந்தப் பிரச்சணையை எப்படித் தீர்க்க முடியும்? குடிப்பதற்கு அவனுக்கும் குடும்பத்தை நடத்த அவளுக்கும் காசு வேண்டும். அவனிடம் அடி உதை வாங்கி அல்லல் படுகிறாள் அவனையும் சேர்த்துக் காப்பதற்காக.

“மூஞ்சியத் தொடச்சுக்கம்மா” என்று சொல்லிவிட்டு அவன் பக்கம் திரும்பி “டேய்! நான் யாரு தெரியுமா?” என்றேன்.

திருதிருவெவன விழித்தான்.

“போலிஸ் ஏட்டு: அந்தப் பிள்ளய இனிமே அடிச்சைன்னா உள்ள தள்ளி கம்பி எண்ண வச்சுப்புடுவேன்: ஜாக்கிரத.”

எப்படித்தான் இந்தப் பொய்யைச் சொல்லத் தோன்றியதோ தெரியவில்லை. மனமலையில் இருந்து தடங்கலின்றிச் சரிந்தது வார்த்தை அருவி.

அவளும் நான் போலிஸ்தான் என்று நம்பிவிட்டாள் போலும். என்னுடைய ஓங்குதாங்கான உடம்பும் முடிவெட்டும் அப்படி நினைக்கத் தோன்றியிருக்கக் கூடும். “இனிமே அடிக்ய மாட்டாக சார்: நீங்க போங்க.”

பாவமாய் இருந்தது. இத்தனை அடிகளையும வாங்கிக் கொண்டு அவனுக்காகப் பரிந்து பேசினாள். தன் கணவனைப் பாதுகாப்பது குடும்பத்தையே பாதுகாப்பதற்குச் சமம் என்று நம்புகிற பெண்மைத்தனம் இன்னும் செழுமையாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பண்பைக் கண்டு சிலாகிப்பதா சிரிப்பதா என்று தெரியவில்லை. அவனை எச்சரித்துவிட்டு நகர்ந்தேன்.

காய்கறிச் சிட்டை, பலசரக்குச் சிட்டை, பூஜைப் பொருள் சிட்டை என அனைத்தையும் நிறைவு செய்ய ஐந்துமணிநேரம் ஆனது. கடைசியாகப் பழவகை வாங்க வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை, மாதுளை, அனாசி, ஈத்தம்பழம்.

பழக்கடைக்கு வந்தபோது சரளா மீண்டும் மயக்கமடைந்தாள். ஒரு நகைக் கடைப் படிக்கட்டியில் உட்கார வைத்தேன்.

“சனக்காடு சாஸ்தி: மனுஷ வெக்க ஒத்துக்கிடல’ என்றாள் சரளா. மயங்கிச் சரிந்தது கழுத்து.

“ஒக்காரு: தோ வாரேன்” என்று சொல்லிவிட்டு பெட்டிக் கடைக்குப் போய் சோடா வாங்கி வந்தேன்.

என்ன ஆச்சர்யம்! காலையில் கணவனிடம் அடிவாங்கிய அந்தப் பெண் தன் முந்தானையால் சரளாவின் வேல்வையைத் துடைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அவள் கணவன் நின்றிருந்தான்.

“இப்படியா மசமசன்னு நிக்கிறது? ஓடிப் போயி தண்ணி கொண்டுவாங்க.”

இளைஞன் ஓடினான். அதற்குள் நான் கொண்டு வந்த சோடாவை வாங்கி, கையில் வாங்கி முகத்தில் தெளித்தாள்.

“எனக்கு ஒண்ணுமில்ல: விடும்மா” என்றாள் சரளா.

“இது பசிமயக்கம் இல்ல்ண்ணே: புள்ள மயக்கம்” என்று சொல்லிவிட்டு லேசாகப் புன்னகைத்தாள். எனக்கு சந்தோஷமாக இருந்தது.

இளைஞனட தண்ணீர் பாட்டிலோடு ஓடிவந்தான். மூடியைத் திறந்து “குடிங்க்கா” என்றான்.

சரளாவுக்கு மயக்கம் தெளிந்ததும் அந்தக் கடையிலேயே வாழைப்பழம் வாங்கினோம். இருவரும் இணைந்தே விலைசொல்லி விற்றனர்.

“என்னம்மா இது?” என்றேன்.

“ரெம்ப நல்லவருண்ணே: குடிவெறி வந்தாத்தான் கண்ணு மண்ணு தெரியாது.”

சிலிர்த்துப் போனேன். அடிதடி, வன்முறை, அன்பு, வரட்சி அனைத்தையும் கடந்த ஓர் அன்யோன்யம் எல்லா இதயங்களையும் ஊடுகோடாய் நின்று இணைக்கிறது. அதன் வழியாய்ப் பயணம் போகிறது மனிதம்.

“நல்லாருப்பா” என்று வாழ்த்தியபடி ஆப்பிள் கடைநோக்கி நகர்ந்தேன். சரளாவும்தான்.

 

செம்மலர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 1 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top