அவன்

0
(0)

கடை வீதியில் நின்றவர்கள் பார்த்தும் பார்க்காதது போல் நின்றார்கள். சிலர் வேறு பக்கம் பார்ப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டார்கள். பெட்டிக்கடை மைதீன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.

வாழை இலைக்கட்டை தோளில் சுமந்து கொண்டு அகமது வந்தான். கைலி மடித்துக் கட்டியிருக்க வலது கையை வீசி நடந்தான்.

அவன் கடந்த பிறகு, உற்றுப் பார்த்தார்கள். திருந்தி விட்டானா…..? நம்ப முடியாமல் பார்த்தார்கள். நடை நேராக இருந்தது. சட்டையும் கைலியும் சுத்தமாக உடுத்தி இருந்தான். முன்பு மாதிரி என்றால் வாழைக் கட்டே அம்மணமாக இருந்திருக்கும்.

ரிட்டையரான அசன் வாத்தியார் வந்து கொண்டிருந்தார். இவன் படிக்கும் போது விலங்கு போட்டவர். ஒரு காலில் விலங்கு மாட்டி விட்டால் விலங்கோடு ஒரு நீண்ட சங்கிலி, சங்கிலியோடு ஒரு பெரி கட்டை, கட்டை கனமானது. அத்தனையும் தூக்கி சுமக்க வேண்டும். ஒரு கையால் தூக்க முடியாது. தரையில் போட்டு இழுத்துக் கொண்டு போக முடியாது. இரண்டு கையாலும் தூக்கி சுமக்க வேண்டும். கை வலித்தால் தோளுக்கு மாற்றி நடக்க வேண்டும். எங்கு போனாலும் கட்டையோடு தான் போக வேண்டும்.

அந்த விலங்கை உடைத்து, சங்கிலியை சட்டையோடு சுற்றி, அந்த அசன் வாத்தியார் வீட்டுக்கு மேலேயே தூக்கிப் போட்டு விட்டான். அது ஓட்டு வீடு. ஓட்டை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்தது. பெண்டு பிள்ளைகள் அலறியடித்து வெளியில் ஓடினார்கள். இவன் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்று அவர் மாட்டிய விலங்கு அது.

அந்த அசன் வாத்தியார் இவனை உற்றுப் பார்த்தார்.

“சலாம் …. சார் … அகமது …. அகமது சார் …”

“அகமதா ? …. நல்லாருக்கியா ?”

“இருக்கேன் சார் …”

நின்று பதில் சொன்னான்!

“என்ன வாழ எலயா? … எங்க தூக்கிட்டுப் போற?”

“தூக்கிட்டுப் போகல சார் …. அதெல்லாம் முன்ன … இப்ப வெலக்கி வாங்கிட்டுப் போறேன் ….. எங்க அண்ணே மகளுக்கு கல்யாணம் வந்துருங்க …. சொல்லி விட்டு நடந்தான்.”

அவரும் நம்ப முடியாமல் பார்த்தார். கடை வீதி கடந்து தெருவில் நுழைந்து. வீட்டுக்குள் போகும்வரை ஒருவர் விடாமல் பார்த்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் திண்ணை. திண்ணையை அடுத்துத் திறந்த வெளி. அதில் பந்தல். திண்ணைக்கும் வெளிக்கும் இடையில் திரை, வெளியை அடுத்து சமையல் அறையும் மற்ற அறையும். திண்ணையில் மாப்பிள்ளை வீட்டாரோடு அண்ணன் பேசிக் கொண்டிருந்தார். நாளைக்குத் திருமணம். அது விசயமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள். திரையை விலக்கிக் கொண்டு இலைக் கட்டை உள்ளே கொண்டு போய் வைத்தான். பந்தலடியில் சமையல் பாத்திரங்கள் கிடந்தன. அடுப்பு வைக்க பெரிய கற்களை எடுத்துப் போட்டிருந்தான். இனி தண்ணீர் பிடிக்க ட்ரம் கொண்டு வர வேண்டும். வாழைமரம் வரவும் தெருப் பந்தலில் கட்ட வேண்டும்.

திண்ணைக்கு வந்து பேசிக் கொண்டிருந்த மாப்பிள்ளை வீட்டாரை “வாங்க” “என்றான். அவர்களும் சிரித்து தலையை ஆட்டினார்கள்.”

இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் ஒருவரை இவன் பார்த்திருக்கிறான். மாப்பிள்ளைக்கு அண்ணன் வேண்டும் இன்னொருவர் யாரென்று தெரியவில்லை.

“இப்ப எதுக்கு வாழக்கட்டு …. நாளக்கித்தேன் எல்லாம் மொத்தமாப் பேசிருக்குள்ள?” “அண்ணன் கேட்டார்.”

“என்னமோ … மச்சாதேன் வாங்கச் சொல்லுச்சு,”

“எதுக்கு வாங்கச் சொன்ன?” உள்ளே சத்தங்குடுத்தார்

“முர்தாக்க பாத்தியா ஒதணும்ல?”

பதில் வந்தது.

முர்தாக்கள் என்றால் முன்னோர்கள் மூதாதையர்கள். குலதெய்வத்திற்கு பொங்கல் வைப்பது, மூதாதையர்களுக்கு படைப்பது என்று இந்துக்கள் செல்வார்கள். முஸ்லிம்கள். முர்தாக்கள் பெயரில் பாத்திஹா ஓதி உறவினர்களுக்கு விருந்து வைக்கிறார்கள்.

ஆரத்தி சுற்றுவது தாலி கட்டுவது, தாலி அறுப்பது, வெள்ளைச் சேலை கட்டுவது, சீர் செய்வது என்று இந்தியக் கலாச்சாரங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கும் உண்டு. இதில் ஒரு விசேசம் குத்துவிளக்கு. சாமிக்கு தீபம் ஏற்ற, தெய்வ வழிபாட்டிற்கு என்று இந்துக்கள் பயன்படுத்தும் குத்துவிளக்கு. சில முஸ்லிம் வீடுகளில் பெண்ணுக்குக் கொடுக்கும் சீர் வரிசையில் பண்ட பாத்திரங்களோடு சேர்த்து குத்து விளக்கு கொடுப்பது இன்றும் உண்டு.”

“அதுக்கு ஒரு கட்டாடா … வேணும்?” என்ன வெலக்கி வாங்குன?

“வெலச் சொல்லவே பயப்படுறானுகண்ணே … பாதிக்கட்டு கேட்டா அப்படியே தூக்கிட்டுப் போயி மிச்சமிருந்தா கொண்டாங்கறானுக….. அம்பது ரூவா குடுத்துருக்கேன். எனக்கு வெலக் கொறைக்கிற தெல்லாம் புடிக்காது. மிச்ச எலய குடுத்துட்டு பாக்கிய வாங்கிருவோம்…”

அண்ணனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இந்த அளவுக்காவது இருக்கிறானே என்று நினைத்துக் கொண்டார்.

“சரி ….. வாழ மரம் வரணும் ….. அதப் பாரு …. அப்படியே பக்கீர் முகமது வீட்ல இருந்தார்னா கல்யாணத்துக்குச் சொல்லிரு.

“அவருக்கு நேத்தே சொல்லிட்டேன். வீட்ல இருந்தாரு. வந்துருங்க மச்சேன்னு சொன்னேன். மச்சேந்தான வேணும்? அப்படியே தங்கச்சியையும் வரச் சொல்லிருங்கன்னு சேத்துச் சொல்லிட்டன்.”

“தங்கச்சி இல்லடா … மக வேணும். முத்தலிபு பெரியத்தா வோட பேத்தி … சரிபு அண்ணே மக ….. சரிசரி இனி வேற யாரும் விட்டுப் போகலையே ….. ?”

“நம்ம வஹாபு இருக்கார்ல …. அவரக் கூப்புட்டேன். வெளியே வந்துட்டு இருந்தாரு. அப்படியே வீட்டுக்குள்ள தள்ளிட்டுப் போயி எல்லாரையும் வரச் சொன்னேன். ஒக்காரச் சொல்லி வேணா வேணாங்க காப்பி போட்டுக் குடுத்தாங்க …..”

இவன் காப்பி டீ குடிக்கும் போது பின்புறச் சுவரையும் பார்த்துக் கொண்டான். அரிசி முட்டையை அதில் தான் கடத்தினான். யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை

ஒரு வாரம் கழித்து இவனையும் காணவில்லை. பிறகு கண்டு பிடித்தார்கள். எங்காவது தூரம் தொலைவுக்குப் போக வேண்டும் என்றால் இப்படித் திருடுவது இவன் பழக்கம். மற்றபடி யாரும் கையும் களவுமாக ஆதாரபூர்வமாக கண்டு பிடித்தது கிடையாது.

“சரி … வாழ மரத்தப் பாத்துட்டு வா …”

“வாழ மரம் ராத்திரிக்குள்ல வந்தா போதும்ல? இப்ப தண்ணீர் பிடிக்க ட்ரம் வேணும்னாங்க …. அதக் கொண்டாரேன்.”

வாடகை பாத்திரம் வைத்திருக்கும் இப்ராகீம் பள்ளி வாசல் தெருவில் இருந்தார். அவரிடம் தள்ளு வண்டியும் இருக்கும். ட்ரம்மை வைத்து லேசாகத் தள்ளிக் கொண்டு வந்து விடலாம்.

இவன் போன போது தள்ளுவண்டி இல்லை. வெளியில் போயிருந்தது. கடை வீதிக்கு வந்து கேட்டான். அங்கும் வண்டியில்லை. இந்த நேரத்தில் வண்டி கிடைப்பது சிரமம். எதாவது திரும்பிவந்தால் உண்டு. யாராவது கொண்டு போனாலும் வழி மறித்து வாங்கி விடலாம். அப்படியும் வரவில்லை.

மறுபடியும் பாத்திரக்கடைக்கு வந்தான். இனி வேறு வழியில்லை. உருட்ட வேண்டியது தான். ட்ரம்மை எடுத்து வைத்து உருட்டினான். தெருவில் தட….. தட… வென்று உருண்டது. கொஞ்ச தூரம் சென்றதும் சாக்கடையை அள்ளிப் போட்டது வரிசையாகக் கிடந்தது. இனி உருட்டினால் சாக்கடை தட்டும் தண்ணீர் பிடிக்கும் ட்ரம் அசிங்கம் ….. நின்று பார்த்தான். ட்ரம்மை தூக்கி தலையில் வைத்து நடந்தான். சாக்கடை அசிங்கமும் ஒட்டவில்லை, தடதடச் சத்தமும் வரவில்லை. ஆனால் …… வீட்டை அடைந்த போது அங்கு சத்தம் வந்தது.

“எங்க கவுரவம் என்ன ஆகுறதுங்க?” மாப்பிள்ளை வீட்டுக்காரர் வேகமாகப் பேசிக் கொண்டிருந்தார். அண்ணன் துவண்டு போய் இருந்தார். திரைக்குப் பின்னால் மச்சான் நிற்பதும் தெரிந்தது.

இவன் உள்ளே போய் ட்ரம்மை வைத்துவிட்டு முகத்தைத் துடைத்தான். மச்சானைப் பார்த்து சைகையில் கேட்டான். பொறு என்பது போல் மச்சான் கையை காட்டினார்.

சரி… எதற்கும் நிற்போம் என்று அண்ணனுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டான்.

“சொன்னதுக்கு மேலேயே செஞ்சிருக்கோம், நீங்களும் ஒவ்வொன்னா கூட்டிக்கிட்டே போறீங்க …” அண்ணன் பரிதாபமாகச் சொன்னான்.

“ஏற்பட்டதத்தாங்க சொல்றோம். எங்க சொந்தத்துல இவ்வளவு கொறச்சலாக் கட்டுனா ரொம்பக் கேவலங்க..”

முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்ட மாப்பிள்ளையின் அண்ணன் சொன்னான்.

இவர்களுக்கு அசிங்கப்பட்டது போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு அண்ணன் பேசினார். “பேசும் போது மிக்ஸியயல்லாம். பேசலிங்கன்னோம் …. இப்ப மாப்பிள்ளைக்கும் செயின் போடச் சொல் றீங்க… கல்யாணத்த நாளக்கி வச்சிக்கிட்டு இப்படிச் சொல்றீங்களே”

குரலில் லேசான தடுமாற்றம் இருந்தது.

“இந்தா பாருங்க …. ஒங்களால முடிஞ்சாச் செய்யுங்க …… நாங்க கட்டாயப்படுத்தல. நீங்க முடியும்னாத்தேன் கல்யாணம். இல்லன்னா அல்லா எப்படி எழுதி வச்சிருக்கானோ அப்படித்தேன் நடக்கும் …. வாங்க போகலாம்…” முடிவாக எழுந்தார்கள்.

ஏதோ திட்டமிட்டே வந்திருக்க வேண்டும். அண்ணன் ஆடிப்போனார். அகமதுவுக்கு விசயம் விளங்கியது. அப்படியென்றால் மகளின் கல்யாணத்தை நிறுத்தப் போகிறார்களா? இவ்வளவு பாடுபட்டது, அண்ணன் கஷ்டப்பட்டது எல்லாம் வேஸ்ட்டா ? மகளுக்கும் குடும்பத்துக்கும் கேவலமாப் போகுமே!

உடம்பு கொதிக்க, ஆத்திரம் தலைக்கு ஏற ஆவேசம் வந்து காலை தூக்கி ஒங்கி ஒரு எத்து விட்டான். அந்த ஆள் தலை குப்புற விழுந்தார்.

புரோட்டா கடை வைத்துக் கொளுத்துப் போன அப்துல் காதரின் நெஞ்சில் பத்து வருடங்களுக்கு முன்பு விட்ட எத்து இது. அவரும் இப்படி தலைகுப்புற விழுந்தார். அந்த பலம் குறையாமல் அப்படியே இருந்தது

அடுத்த காலைத் தூக்கவில்லை. பழைய அகமதாக இருந்தால் பந்தாடி இருப்பான். இனி, காரியம் இருக்கிறதே!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top