அறுந்து போகும் தொடர்புகள்

0
(0)

அந்தப் பெரியவர் மின்வாரிய அலுவலகத்தில் நுழைந்தபோது அங்கு நிலவிய அவசர நிலை அவரை ஸ்தம்பிக்க வைத்தது. எல்லோரும் அங்குமிங்குமாய் ஓடியும் ஓடாமலும் சென்று சாமான்களை சேகரித்துக் கொண்டிருந்தார்கள்.

“மாணிக்கம் – புல்லியையும் ரோப்பையும் எடுத்து வையி… சீக்கிரம்…. ரெண்டு ஸ்டேராடையும் எடுத்துக்க, போர்மேனின் அவசர உத்தரவுகள் பறந்தன. அவருடைய அவசரத்தில் பீடிகூட குடிக்க முடியவில்லை.

இரவு பெய்த மழையும், வீசிய காற்றும் ஒட்டு மொத்தமாக ஒரு தென்னை மரத்தில் நிலை கொண்டதாலோ என்னவோ, அந்த மரம் பக்கத்தில் நின்ற மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. நல்லவேளை அதன்மேல் நிலை கொள்ளாமல் ஒரு பக்கமாய் சரிந்து கீழே விழுந்து விட்டது. அதனால் அந்தக் கிராமத்து வயல் வரப்புகளில் செல்லும் அந்த மூன்று மின்கம்பங்களும் நேராக நிற்காமலும் கீழே சாயாமலும் இரண்டுங் கெட்டான் நிலையில் இருந்தன. அறுந்த மின்கம்பிகள் கீழே கிடந்தன.

தெரு விளக்குகளை ஆப் செய்துவிட்டு இந்த வழியாகத் திரும்பிய வயர்மேன் மாணிக்கம் இதைப் பார்த்து விட்டு ஓடோடிச் சென்று ட்ரான்ஸ் பார்மரில் சுட்சை ஓப்பன் பன்னி கரண்டை நிறுத்தி விட்டார். இல்லையென்றால் இரண்டு உழவு மாடுகளாவது அல்லது காலைக் கடனை கழிக்க வந்த நாலைந்து சிறு விவசாயிகளாவது கழிந்து போயிருப்பார்கள்.

அந்த நிமிடமே சைக்கிளில் பறந்து வந்து நிலைமையைச் சொன்ன பிறகு இந்த அலுவலகமே அவசரசக் கோலமாய் இயங்க ஆரம்பித்து விட்டது. பூமி ஈரமாயிருப்பதாலும், லயன் திரும்பிச் செல்லுமிடத்தில் ஸ்டே வயர் அறுந்திருப்பதாலும் எப்போதும் மின் கம்பங்கள் கீழே சாய்ந்து விடலாம்.

பக்கத்து கிராமங்களிலுள்ள வயர்மேன், ஹெல்பர்கள் எல்லோரும் வழக்கம் போல் காலையில் அலுவலகத்திற்கு வந்து விட்டதாலும், ஆள் பற்றாக் குறைக்கு கிராமத்திலுள்ளவர்களையும் உதவிக்கு கூப்பிட்டுக் கொள்ளலாமென்ற நம்பிக்கையும் போர்மேனுக்கு தெம்பைக் கொடுத்தன.

இந்த நிலையில் தான் அந்தப் பெரியவர் அவர் கிராமத்து வயர்மேன் சின்னையனைத் தேடிக் கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இவரது பேத்தியை பெண் பார்க்க வந்திருந்தார்கள். படாதபாடுபட்டு இந்த மாப்பிள்ளையை ஏற்பாடு செய்திருந்தார். பல சிபாரிசுகளோடு கொஞ்சம் பணம் செலவானாலும் நல்ல மாப்பிள்ளையாக இருந்தது பெரியவருக்கு திருப்தியாக இருந்தது. வெளித்திண்ணையிலும் வீட்டிலுமாய் மாப்பிள்ளை வீட்டார்கள் அமர்ந்து சம்பிரதாயத்திற்காக பெண் பார்த்து விட்டு அங்கேயே முடிவு செய்ய காத்திருந்தார்கள். உள் அறையிலிருந்து பெண்ணை அழைத்து வரும் நேரத்தில் திடீரென்று கரண்டு ஆப் ஆகிவிட்டது.

“என்னப்பா ….. இது….. கெட்ட சகுனமா இருக்கு” என்று ஒரு கிழடு ஆரம்பிக்க, முணுமுணுப்புக்கள் பரவி, மாப்பிள்ளையின் பெற்றோர் வெளியில் வந்து கிசுகிசுத்த பிறகு, “இப்ப நேரஞ் சரியில்லை. அதனால் இன்னொரு நாளைக்கு வாரோம்.” என்று இரண்டே வார்த்தைகளில் காரியத்தை நிறுத்தி விட்டுச் சென்று விட்டார்கள். காலையில் பார்த்தால் இந்த வீட்டுக்கு வரும் வயர்மட்டும் அறுந்து சனியனாய்த் தொங்கியது.

இரண்டு நாட்களாக கிராமத்தில் வயர்மேன் சின்னையனைப் பார்க்க முடியவில்லை. காலையில் இங்கு வருபவர் நன்றாக இருட்டிய பிறகு தான் கிராமத்துக்கு வருவதாகக் கேள்வி. காரணம் பெரிவருக்குப் புரியவில்லை.

அவர் தேடிவந்த சின்னையன் நான்கு இன்சுலேட்டர்களை ஒருகையிலும் இரண்டு ஸ்டேராடுகளை இன்னொரு கையிலும் பிடித்த படி லாரியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெரியவருக்கு வயர்மேன் அவர் கிராமத்துக்கு வராத காரணம் புரிந்தது. வேறு வேலைகளுக்கு அனுப்பினால் அவர் கிராமத்து வேலைகளை யார் செய்வது?

இந்தக் கேள்விகளும் அங்கு நிலவிய அவசர நிலையும் இவரது வீட்டு வயர் அறுந்து தொங்குவதும் சேர்ந்து பெரியவரைக் குழப்பியது. அப்படிக் குழம்பிய மனநிலையோடு வயர்மேனிடம் சென்றார். இவரைப் பார்த்த வயர்மேனும் புன் சிரிப்போடு வியர்வையைத் துடைத்துக் கொண்டே வந்த விபரம் கேட்டார்.

“வீட்டுக்கு வர்ற வயரு அறுந்து தொங்குது ரெண்டு நாளாச்சு, ஒங்கள பார்க்க முடியல. பேத்திக்கு பொண்ணு பேச வந்த நேரம் பாத்து கரண்டு நின்னதால நல்ல காரியம் தடபட்டுப் போச்சு, ரொம்ப மனசு ஒடஞ்சு போச்சுங்க” பெரியவர் பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

“எப்படியாவது வந்து வயர சரியாக்கி லைட்ட எரிய வையுங்க நாளைக்கி நிச்சியம் பண்ண வாராங்க.”

பெரியவரை பாக்க வயர்மேனுக்கு பரிதாபமாக இருந்தது. என்ன சொல்வதென்று புரியவில்லை ஆனாலும் சிரமப்பட்டு அங்குள்ள அவசர நிலையைப் புரியும்படி சொன்னார். பெரியவரது வீட்டில் ஏற்பட்ட பாதிப்புக்கும் வருத்தப்பட்டு ஒரு வழியாக சூழ்நிலையை விளக்கி, “ஏ.இ.யிடம் சொல்லுங்க எப்படியும் சீக்கிரமா வந்து பாக்குறேன். இப்ப அவசரத்துல வரமுடியாது அதனால ஏ.இ. சொன்னார்னா சாயந்தரமாவது வந்து சரியாக்கிரலாம்.”

பெரியவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வயர்மேன் சொல்வதும் அங்குள்ள நிலையும் அவருக்கு மேலும் கவலையளித்தது. ஏ.இ.யிடம் சொன்னால் தான் வேறு வேலை கொடுக்காமல் வயர்மேனை அவரது கிராமத்துக்கு அனுப்புவார்கள் அதனால் ஏ.இ. எங்கு இருக்கிறார் என்று விசாரித்தார்.

விசயத்தை பெரிய அதிகாரியிடம் சொல்லச் சென்ற ஏ.இ. இன்னும் வரவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரத்தில் அவசரமாக வந்த ஏ.இ. போர் மேனைக் கூப்பிட்டு ஏதோ சொல்லி விட்டு திரும்பவும் பெரிய அதிகாரியின் அறைக்கே சென்றார்.

போர்மேன் ஏதோ சொல்லவும் அங்கு நிலவிய அவசரநிலை நின்றது. நேரம் கிடைத்த போர்மேன் சற்று ஓரமாய் சென்று பீடியைப் பற்ற வைத்தார். ஓடியாடி வேலை செய்தவர்கள் மரத்தடியில் சற்று ஓய்வாக அமர்ந்தார்கள். அவர்களோடு பெரியவரும் அமர்ந்து. ஏ.இ.க்காக காத்திருந்தார்.

சிறிது நேரத்தில் அழைப்பு வரவும் போர்மேனும் பெரிய அதிகாரியின் அறையை நோக்கி ஒட்டமாகச் சென்றார். அங்குள்ள ஒருவருக்கும் சூழ்நிலை புரியவில்லை. சிறிது நேரத்தில் திரும்பி வந்த போர்மேன் எல்லோரையும் கூப்பிட்டார்.

“திடீர்னு மினிஸ்டர் வர்றதாகத் தகவல் வந்திருக்கு. எம்.எல்.ஏ. விட்டு கல்யாணத்துக்கு போறவரு அப்படியே இங்க வந்து கோட்ட மேட்ல ஓவர் ஹெட்டு தண்ணி டேங்க தெறக்கணுமா …… அதுக்கு அவசரமா ஏற்பாடு செய்யணும். அதனால லாரில ஏத்துன சாமான் களையெல்லாம் எறக்குங்க.”

இறக்கி முடித்த பிறகு, அடுத்த வேலை ஆரம்பமாகியது. மினிஸ்டர் வரும் தண்ணீர் டேங்கு திறப்பு விழாவிற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைப்பதற்கு இரண்டு, மூன்று லைன்களில் இருந்து மின்சாரம் பெற மாற்று ஏற்பாடுகளும், அதற்கான சாமான்களை மீண்டும் லாரியில் ஏற்றும் வேலையும் மிக அவசரமாக ஆரம்பமாகியது. இப்போது போர்மேனும். ஓடியாடி வேலை செய்ய ஆரம்பித்தார்.

மரத்தடியில் அந்தப் பெரியவர் மட்டும் தனியாக உடகார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். உட்கார்ந்திருப்பதா, அல்லது நின்று கொள்வதா என்று யோசித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் அங்குள்ள பெரிய அதிகாரியையும் ஏ.இ. யையும் ஏற்றிக் கொண்டு விழா நடக்கப்போகும் இடத்திற்கு மின்வாரிய ஜீப் அவசரமாகப் புறப்பட்டது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top