அறம்

0
(0)

ராசம்மாவுக்குக் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னார்கள். பழைய செய்திதான். ஆனாலும் ஊருக்கு வந்த இடத்தில் அம்மா மறுபடியும் ஞாபகப்படுத்திச் சொன்னபோது வனராசுவால் சும்மா இருக்க முடியவில்லை. பழையன யாவும் நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தன  அவளது ஓரக்கண் பார்வையும் அதன் தொடர்ச்சியாய் நீளும் கலகலவென்ற சிரிப்பும் காந்தமாய் ஞாபகத்தை இழுத்து. உடனே. மனம் குரங்காய்த் தாவ தடம் தேடியது. அதற்கு முன்னால் ராதிகாவிடம் கலப்பது போல பாவனை செய்தான். “ஏந் ராதிகா மொதக் கொழந்தையோ ரெண்டாவதையோ நாம போய்ப் பாத்து வந்தம்ல..”  கேட்டான்.

 

” ஆ.. மா.. இவருக்கு அப்பிடித்தே எல்.லா.ம் ஞாபகம் வச்சிருப்பாரு..இது நாலாவதாம்…ங்க “ பாதிச் சிரிப்பும், வியப்புமாய்ச் சொன்னாள் ராதிகா.

 

”இந்தக் காலத்திலயும் நாலு.. அஞ்சு…ன்னு ஆச்சிரியமா இருக்குல்ல..”

 

”கிராமத்தில எல்லாரும் பிள்ளைகள செல்வமாத்தான் பாப்பாங்க நம்ம பக்கம்தான் அதுகளச் சுமையா நெனைக்கிறம்.”  சொல்லிவிட்டு வனராசு அய்யாவின் மர நாற்காலியில் உள்ளிழுத்துச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். கைகளிரண்டையும் நீட்டிவைத்துக்கொள்ள வசதியாய் வழுவழுவென வார்னிஷ் பூசிய பட்டையான கைப்பிடிகள் இருந்தன. கால்களை நீட்டிச் சாய்ந்து கொள்ள சாய்மானமும் இருந்தது.. சிவனாசாரி வெற்றிலையைக் குதப்பியவாறே தனி ஆளாய் நின்று செய்து கொடுத்தது.

 

”அதெல்லா இங்கியும் மாறிருச்சு. என்னத்தியோ ராசம்மாவப் போல ரெண்டு ஏலமாட்டாதவளுகதே மூணு நாலுன்னு பெத்து பேருவச்சு இழுவட்டுத் திரியிறாளுக.. ஒண்ணு ரெண்டுக்குமேல ஒலகத்துல கெடையாது.ஆ..மா”

 

’’முந்தியெல்லா வீட்ல மாமியா நாத்தனாரு கொழுந்தியான்னு வீடு நெறஞ்சு ஆளுக நிப்பாக. புள்ளயப் பாக்கச் செய்ய பெரச்சன இல்ல. இப்பத்தே மணவறைல தாலியக் கட்டுன மறுநிம்சமே தனிக்குச்சு தேடிக்கிறாகளே அவகளப் பாக்கவே ஆள்ப்போட வேண்டி இருக்குது”

 

”மலடின்னு பேர்வாங்காம பிள்ளயப் பெத்துக்கறாக்..”

 

வனராசுவின் தம்பிமார், அவர்களது ம்னைவிமார்கள், பிள்ளைகள், தங்கச்சிமார் என கூடியிருந்தனர். மாசத்தில் ஒருதரம் அல்லது மூணுநாலுநாள் சேர்ந்தார் போல வருகிற விடுமுறைகளில் அம்மாவைப் பார்க்க கிராமத்திற்கு வந்துவிடுவான். அதும் ’நானோ’ கார் வாங்கிய பிறகு அதை வீட்டில் நிறுத்தி வைக்கவும் முடியவில்லை. ஏதாவது ஒருவேலையைக் கண்டுபிடித்து ஒட்டிச்செல்ல வேண்டியிருக்கிறது. இரண்டுநாள் தொடர்ந்தார்போல் காரை நிறுத்திவிட்டால் தெருவில் கேட்கிறவர்களுக்கு பதில் சொல்லிமாளாது. ‘வண்டின்னா உருண்டுக் கிட்டிருக்கணும்சார். நூலாம்படை பிடிக்கவிட்டா எஞ்சின் என்னாத்துக்காகும்…!’

 

ஆனாலும் அம்மாவைப் பார்ப்ப்தற்காகவே கார் எடுத்ததாகச் சொன்னான்.

 

தம்பிகள் ஆளுக்கொரு பெரியகார் வைத்திருக்கிறார்கள். வனராசு நானோ புக்கிங் செய்தது அம்மாவுக்குத் தெரியாது. திடுமென காருடன் கிராமத்துக்குப் போய் வாசலில் நின்றதில் அம்மா ஓ வென கதறி இவனைக் கட்டிக்கொண்டது.

 

“நம்பும்மா.. ஒனக்காகத்தான் வாங்குனேன்.. ஊருக்கு ஒன்னியக் கூட்டிப் போக ஒவ்வொருதரமும் தம்பிககிட்ட ஓசி கேக்க வேண்டியிருக்கு இல்லாட்டி பஸ்சுக்கு காத்துக்கெடக்கணும்..

 

அம்மாவுக்கு அவ்வளவு சந்தோசம்.

 

தான் சந்தோசப்படுகிற ஒவ்வொரு காரியத்திலும் தன்னைவிட அம்மா இன்னொரு மடங்கு அதிகமாகச் சந்தோசம் கொள்ளும் என்பது இவனுக்குத் தெரியும். த்ம்பிமாரெல்லாரும் கெட்டிக்காரத்தனமய் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் வகையில் சம்பாதித்து நிலபுலம் வீடுவாசல் என்று செழிப்பமாய் இருக்க இவன் மட்டும் பேங்கில் லோன் போட்டு வீடுகட்டியபோது வாணம் தோண்டியதில் துவங்கி பால்காச்சி வீடு நுழைவது வரைக்கும் அருகிலேயே இருந்து பார்த்துக் கொண்டது.

 

தம்பிகளில் மூத்தவன் ஊர்ப்பஞ்சாயத்துப் பிரசிடண்டாக இருக்கிறான். அடுத்தவன் பெரிய சம்சாரி. தோட்டம், தோப்புவகையறாக்களைப் பார்க்க,  சமயங்களில் மூத்தவனோடு பஞ்சாயத்து., வழக்குகளில் சுற்ற,. என பரபரப்பாக    வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கொரு ட்ராக்டரும் சொந்தத்துக்கு இருக்கிறது. பெண்பிள்ளைகளில் ஒன்று கூடலூரில் தலைமையாசிரியருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறது. இன்னொன்று அரைப்படித்தேவன்பட்டியில் பெரிய சம்சாரிவீட்டில் மூத்தமருமகளாய் காபந்து செய்துகொண்டிருக்கிறது. நாலைந்து ஜேசிபி எஞ்சின்கள் வைத்து மச்சான் உருட்டிக் கொண்டிருக்கிறார்.

 

அய்யாவுக்கு சாமிகும்பிடுகிற நாளில் அனைவரும் ஒன்றுகூடுவார்கள். அன்றையதினம் ஊரில் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்படும். ஊருக்கு தலசான வீட்டு அழைப்பை யாரும் தவிர்க்க விரும்பமாட்டார்கள். அய்யாவின் திவசத்தை கிராமமே முன்நின்று கும்பிடுவது போலிருக்கும். மறுதினம் கறிக்கஞ்சி. வீட்டளவில் விருந்தென்றாலும், ஒரு முழு ஆட்டை உரித்துத்தான் சமையல் நடக்கும்.

 

காலையில் கண்ணுமுழிச்சதும் மிளகுப்பொடி போட்டு ரத்தப் பொரியல், தலைக்க்றிக் குழம்புடன் இட்டிலி, ஆளுக்கொருதட்டில் ஆவிபறக்கக் காத்துக் கிடக்கும். அம்மாமார்கள் பிள்ளைகளுக்கு நாயைக்காட்டி, பூனையைக் கூப்பிட்டு, பூச்சாண்டி வந்து தூக்கிப்போய்விடுவதாக கதைகள் சொல்லி வீடெல்லாம் சுற்றிவந்து ஊட்டிவிடுவார்கள். மதியம் எண்ணெய் வருவலும், கொழுப்பு மிதக்கும் குழம்புமாய் சாப்பாடு. தோப்பில் வாழைஇலை அறுத்துவந்து பரிமாறுவார்கள். தட்டுக்களில் சாப்பிட்டால் கொழுப்பு பிசுக்கு தட்டில் படிந்து பாத்திரம் கழுவும் பெண்களூக்கு தேய்த்துத் தேய்த்து தோள்பட்டை வீங்கிப்போகும்.  அதனால்  பண்ணையாளிடம் சொல்லி தம்பி வாழைஇலை அறுக்கச் சொல்லி விடுவான்.

 

ராத்திரி எவ்வளவு சாப்பாடு மிஞ்சிக் கிடந்தாலும், அம்மாவுக்குக் கேப்பக்களி கிண்டி, கறிக்குழம்பு தொட்டுச் சாப்பிட்டால்தான் அந்தநாள் நிறைவு பெறும். இது அய்யா காலத்து வழக்கம். கிராமத்தில் எல்லோரும் கறிஎடுத்த நாளில் அரிசிச்சோறு சமைத்து உண்ணுகிறபோது அய்யாமட்டும் ’இருங்கச் சோளம் வாங்கி அரியாக்கிக் களி கிண்டச் சொல்லுவார்.

 

அப்போது காடெல்லாம் வெள்ளைச்சோளமும், இருங்க்ச் சோள்மும் திமுதிமுவென விளைந்து கிடக்கும். விலைக்கு அளந்துவிட்டது போக, வீட்டுக்கென அம்மா கொஞ்சம் எடுத்து குலுக்கையில் சேமித்து வைத்துக் இருக்கும். தேவைப்படுகிற பொழுது, வெய்யிலில் உலர்த்தியோ, அவசரம் எனில் இரும்புச்சட்டியை அடுப்பில் காயவிட்டு வறுத்தோ எடுத்து, குந்தாணி உரலில் போட்டு குத்தி முதலில் மேல்தோலை நீக்கிக்கொள்ளும். அப்படி தோல் நீக்கிய அரிசியை ஊறவைத்து அதை கல்லுரலில் போட்டு இரும்பு பூண் பூட்டிய உலக்கையால் இரண்டுகையும் மாறிமாறிப் பிடித்துப் போட்டு உரலில் மாவு துள்ளத்துள்ளக் குத்தி ச்ல்லடை கொண்டு சலித்து அரிசிதனியாக மாவு தனியாகப் பிரித்து எடுக்கும்.

 

அடுப்பில் உலை ஏற்றி, முதலில் அரிசியைப்போட்டு வேகவிடும், முக்கால் பாகம் வெந்ததும்,  சோள அரிசி ஒவ்வொன்றும் கண்ணுமுழியை போல உருண்டைஉருண்டையாய் மிதந்துகொண்டு கதகதவென கொதித்து வருகையில் மாவினைக் கொட்டிக் கிண்டி எரிகிற தீயை அணைத்துவிட்டு, சற்றுநேரம் அடுப்பில் புழுங்கவிட்டு இறக்கிவைக்கும்.

 

அய்யாவுக்கு அடுப்பில் இருக்கும்போதே சுடச்சுட தட்டில் பரிமாறி கறிக்குழம்பு மிதக்க ஊற்ற வேண்டும். தங்கச்சி, தம்பி என குவியலாய் உட்காரவைத்து சட்டியைக் காலியாக்கினால்தான் அவருக்கும் திருப்தி.

 

அந்தப் பழக்கத்தை அம்மா இன்னமும் கைவிடாதிருந்தது.

 

பெரும்பாலும் அம்மா கேப்பக்களி கிண்டுகிற நாளில் ராசம்மாவை வரச்சொல்லிவிடும். மகள்கள், மருமக்கமார்களைவிட ராசம்மாவைத்தான் அம்மா  உரிமையோடு ஏவி வேலைவாங்கும்.

 

“நல்லா இழுத்துக்கிண்டுடி… குட்டி விழுந்திடப்போகுது.. கஞ்சிக்கிச் செத்தவ மாதரி வேல செய்றவ..” உற்றுப்பார்த்துக் கொண்டே வேலைவங்கும். ராசம்மாவும் அம்மா திட்டதிட்ட சிரித்துக் கொண்டேதான் வேலைபார்ப்பாள். “அத்தகிட்ட் ரெண்டு பேச்சு வாங்காட்டி எனக்கும் வேல பாத்த மாதரி இருக்காது.” என்பாள்.

 

“நா வளத்த மருமகளில்லியா.. நா வையாம வேற எந்த சிறுக்கி ஒன்னிய வைவா..ம்..?”  என அம்மாவும் அவளை நெஞ்சோடணைத்துச் சந்தோசம் கொள்ளும். ஆனால் எத்தனை வேலை செய்தாலும், எத்தனைபேர் கெஞ்சிக் கூப்பிட்டாலும்  ராசம்மா அவர்களோடு ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடமாட்டாள். ’ எங்கவீட்டுல சோறு ஊறிக்கெடக்கு…த்த அத யாரு திம்பா.?” என நழுவுவாள். அம்மாவுக்கு அந்த நழுவலின் காரணம் தெரியும். அதனால் ஒருசட்டியில் சாப்பாடும், வாளியில் குழம்பும் ஊற்றிக் கொடுத்தனுப்பும். வாங்கிக் கொள்வாள். ‘தம் பிள்ளைகளோட சாப்பிட அவளுக்கும் ஆச இருக்கும்ல..’  அம்மா விளக்கிச் சொல்லும்.

 

ஒருவகையில் ராசம்மா ஒன்றுவிட்ட சொந்தம்தான்.  அடுத்தடுத்த தெருவில் வீடு. சிறுவயசிலிருந்தே இருகுடும்பங்களுக்கும் போக்குவரத்து இருந்து வந்தது. அவளது அய்யாவும் இவனது அய்யாவும் காடு திருத்த, தோப்புகளைப் பராமரிக்க என்று தோள்மேல் கைபோட்டு ‘மாப்ளே… மச்சான்… ‘ என ஒண்ணு மண்ணாய்த் திரிந்தவர்கள்.

 

ராசம்மாவின் வீட்டிலும் நாலைந்து உருப்படிகள். அவள் பெரிய மனுஷியாகிறவரை  இவர்களது வீட்டிலேயேதான் கிடப்பாள். வீடடைந்த பிறகும்கூட ஏதாவது வேலை எனக் கேள்விப்பட்டால் நொடிப்பொழுதில் வந்து நிற்பாள். அவளது அம்மாகூட ஒருதரம் இவனது அம்மாவிடம் சொன்னது,”ஏம் மதினி ஒங்க தகுதிக்கி இல்லாட்டியும் எங்குட்டாச்சும் கடன் ஒடனப்பட்டு ஒரு பத்துப்பவுனு போட்டு விடுறேன் பேசாம இவள அங்கியே வச்சுக்கிறீக..தான..’ என்றது. அப்போது வனராசு +2 முடித்து டீச்சர் ட்ரெய்னிங்கில் சேர்ந்திருந்த் தருணம். மூத்த அண்ணனுக்கு நாப்பதுபவுன் நகையும் அஞ்சுகுழிக்காடும் வாங்கி அம்மா கலியாணம் முடித்திருந்தது. வாத்தியார் ஆகப்போகிற இவனைப் பற்றி அம்மாவுக்கு கனவு இருந்தது. ஆனால் தன்னோடு வேலை பார்த்த ராதிகாவைக் காதலித்து தாலிகட்டிக்கொண்டு வந்ததில் மற்றவர்களை விட அம்மாதான் ரெம்பவும் பாதிக்கப்பட்டது.

 

. தங்கள் குடும்பத்தில் வாத்தியார் படிப்பு படித்து அரசாங்க வேலையும் பார்க்கிற முதல்நப்ர் இவன்தான். அதனால் எத்தனையோ சீரும்பேருமாய் அவனது கல்யாணத்தை நடத்திப் பார்க்க அம்மாவுக்கு ஆசை ’’இப்படி தானடிச்சமூப்பா யாட்டயும் சொல்லாம கொள்ளாம சொற்ப ரேட்டுக்குப் விழுவான்னு சொப்பனத்திலியும் நெனச்சுப் பாக்கலியே..கடவுளே… ’’அம்மா பொருமியது.

 

அன்றிலிருந்து குடும்பத்தில் இயல்பான பேச்சு குறைந்து போனது. வனராசுவும் டவுனுக்கு தனிக்குடித்தனம் வந்துவிட, ராசம்மாவின் போக்குவரத்தும் மங்கிப்போனது. அய்யாவின் இறப்பில்தான் மறுபடி ஒன்றுகூடினர்.

 

போக்குவரத்து நின்றுபோனாலும் இவனைப்பற்றிய பேச்சுக்கள் பேசாத, நினைக்காத நாளில்லை அம்மாவுக்கு. “வார பொம்பளகிட்ட அட்டியலையும் பதைக்கத்தையும் வாங்கி ஏங்கழுத்திலயா மாட்டிக்க கேட்டேன்… அட கிறுக்கா.. கட்டீட்டு வந்தவ்ள நாலுஎடத்துக்கு கூட்டிட்டு போவணும். ஒரு ஆத்தரஞ் சாத்தரத்துக்கு அடகுவச்சு நல்லதுகெட்டது பாத்துக்கணுமிண்டுதான அடிச்சுகிறே அதவிட்டு, கட்டுனவள இப்பிடி வேதக்கார பொம்பள கணக்கா வெறுங்கழுத்தும் வீசுனகையுமா கூட்டிட்டு வந்துட்டானே…” என்று பொழுதெல்லாம் புலம்பியது. “வீடுன்னா ரெண்டு முட்டுக்கால் வேணும்.. இப்பிடி கொண்டவனையும் அண்டாம, குடுததவனையும் சேராம, சாதிகெட்ட சளுக்கார் சம்பளத்த மட்டும் நம்பி சன்னாசியா பொழப்பு பொழைக்கமுடியுமா..’’

 

ராதிகாவும் அம்மாவின் விசும்பலுக்கும் புலம்பலுக்கும் அமைதிகாத்தாள். அதுவே கொஞ்சநாளில் ராதிகாவை  குடும்பத்துக்குள் இழுத்துப் போட்டது. ”அந்த தேனிக்காரி என்னத்தப் போட்டு வேக வக்கிறாண்டு தெரியலத்தா.. அவ கைப்பக்குவம் கெழட்டாட்டுக் கறியக்கூட் பல்லுக்கு மெதுவா ஆக்கிக் குடுத்துர்ராளே.. “ என்று ராதிகா குக்கரில் நாலுவிசில் சேர்த்துவிட்டு வேகவைத்த ஆட்டுக்கறியை அம்மா மெச்சிப் பேசுமளவு வேர் கொண்டு விட்டாள். அதனாலோ என்னவோ வனராசுவைவிட கிராமத்துக்குப் போகிற தினத்தை அத்தனை ஆவலுடன் எதிர்கொள்வாள். நானோ காருக்கு விதை போட்ட்தே அவள்தான்..

 

ராசம்மாவின் வீடு மேற்குத்தெருவில் இருந்தது. வீட்டுக்குப் பின்னால் இலவமரங்கள் செல்போன் டவர்களைப்போல உயரஉயரமாய் வேர்பிடித்துத் திரிந்தன. பக்கவாட்டுக் கிளைகளில் தூக்கணாங்குருவி கூடுகள் போல இலவம் காய்கள் தொங்கி காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. மேகாத்து வீசுகிற பொழுதெல்லாம் இலவங்காய்களின் முற்றிய நெற்றுக்கள் உரசி எழும் சப்தமும், கிளைகளின் வீச்சொலியும் நதியின் பேரோசையைப் போல ஒலித்தன.

மேட்டுப்பாங்கான இடத்தில் கல்வீடு ஒன்றைக்கட்டி இருந்தாள். மேலே தகரம் பரத்தி இருந்த்து. காற்று தூக்கிவிடாதிருக்க இழுவைக்கயறுகளும், தகரத்தின் மேலே உடைகற்களும் தூக்கிவைத்திருந்தனர். வாசலை ஒட்டி அகலமான திண்ணையும், காலி இடம் முழுக்க காம்பவுண்டு சுவரைப் போல குத்துச் செடிகளும் நட்டுவைத்திருந்தனர்.

 

வனராசுவும், ராதிகாவும் வேலிப்படலை நீக்கி உள்ளே நுழைந்தனர்.ஆள் அரவங்கேட்டு திண்ணைக் காலில் கட்டி இருந்த ஆட்டுக்குட்டிகள் கத்தின. அது கேட்டு வேலிப்புதருக்குள் இரையைக் கிளறிக் கொண்டிருந்த கொண்டைச் சேவல் ஒன்று தலையைத் திருப்பிக் கழுத்தை உயர்த்தி ‘கொக்..கொக்..கொக்’ கென அபாயக்குரல் விடுத்தது. ஏதாவ்து நாய் வந்து விரட்டுமென எதிர்பர்த்தார்கள். கீழேநின்று கொண்டிருந்த பூனை ஒன்று மளாரெனத்தாவி அடுக்களைச் சுவரைத் தொட்டு தகரத்தில் பாய்ந்து வீட்டின் பின்புறம் மறைந்தது.

 

“யா…ரு?” என எட்டிப் பார்த்தவள். ”அய்ய்யோ…! வனம் மாமாவா..! ஹை… ராதிகாக்கா…!” திண்ணையில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்த ராசம்மா கூச்சலிட்டாள். மடியில் கைக்குழ்ந்தை பால அருந்திக் கொண்டிருந்தது. அவள் முகமெல்லாம் தெரிந்த உற்சாகமும் குதூகலிப்பும் எங்கே குழந்தையை வீசிவிட்டு கட்டிலிலிருந்து குதித்து வந்து விடுவாள் போல இருந்தது.,

 

’’இருஇரு. யேந்திரிக்க வேணாம்…”  ராதிகா ஓடிவந்து கட்டிலின் அருகில் நின்று ராசம்மாளைத் தொட்டாள். “ புள்ளய அமத்துங்க.. மொதல்ல”

 

“”எப்ப வந்தீங்க…?”

 

”நேத்து…!’’

 

ராதிகா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராசம்மா குழந்தையை மார்பிலிருந்து நீக்கினாள். “ஆரு வந்திருக்கா பாரு… பெரீம்மா பெரிப்பா… வாங்கன்னு சொல்லு சாமி..!”

 

“ அட பால் குடிக்கிற பிள்ளய…” ராசம்மாவைக் கடிந்து கொண்டே பிள்ளையை வாங்கினாள் ராதிகா. உடனே ராசம்மாவும் கட்டிலைவிட்டுக் கீழே இற்ங்கலானாள். அதுகண்டு வனராசு, “எறங்க வேணா ராசமா.. சும்மா ஒக்காரு” என்றான்.

 

“பெஞ்சி எடுத்தாறேன்..”  என்றவளை மறுபடி மறித்தான். “ நா எடுத்துக்கறேன்…” சொல்லியபடி வீட்டிற்குள் நுழைந்து ஒரு வயர்சேரை எடுத்துவந்தான். ஆனாலும் ராசம்மா நின்று கொண்டு ராதிகாவை கட்டிலில் உட்கார வைத்தாள்.

பிள்ளைத்தாச்சியை வெறுங்கையொடு பார்க்கவந்ததில் இவனுக்கு அசிங்கமாய் இருந்தது..

 

இந்தஊரில் பழங்கள் கிடைக்காதென்றாலும் ஹார்லிக்ஸ், பூஸ்ட் என்று எதையாவது கையில் பிடித்து வந்திருக்கலாம்.

 

‘அவ புருசன பாரஸ்ட்காரங்க பிடிச்சு போய்ட்டாங்க, சாமீன எடுக்க முடியாம செரமத்துல இருக்கா..பாவம் கையில ஏதாச்சும் ஆயிரம், ஐநூறக்குடுத்தா  பிரயோசனமா இருக்கும் “ என அம்மா சொல்லிவிட்டது.

 

ராசம்மாவின் புருசன்  சம்சாரிவேலை பார்ப்பதோடு, அவ்வப்போது மலைஏறும் ஆட்களோடு விறகுவெட்டுக்கும் போய்வருவானாம். வருசத்தில் ஏதாவது ஒருகிழமையில் பாரஸ்ட் ஆபீசர்வசம் சிக்குற வழமையும் இருந்தது. அதற்கு சாமீனுக்கு ஆள்பிடித்து  கேஸ் முடிப்பதற்குள் அடுத்தொன்று எனத் தொடவதுமாய்…….

 

“பிள்ள.. யார் சாட…? “ ராதிகா குழந்தையை உருட்டிப் புரட்டிப் பர்ர்த்தபடி கேட்டாள்.

 

’’மூத்ததுக பூராமும்.. ’அவுக’ ஆளுகளக் கொண்டு இருந்துச்சுக்கா. இதுதே ஏந்தம்பி சாட… மூக்கப் பாருங்களேன்.. பிடிச்சுவச்ச மாதிரி க்கூரா..இருக்கா..”

 

ராதிகா குழந்தையின் மூக்கைப் பிடித்துப் பார்த்தாள். தொட்டதும் குழந்தை துள்ளியது. “கூச்சத்தப் பாரு.?”

 

“பிள்ளைகள்க் கூப்புட்டு வரலியா..?”  வனராசுவைப் பார்த்துக்கொண்டு ராதிகாவிடம் கேட்டாள்.

 

“வந்திருக்காங்ஙெ அவக அப்பத்தாகிட்ட வம்பிழுத்துக்கிட்டு இருக்கான்ங் ஙெ..”

 

“நல்லா படிக்கிறாங்களா…? “ எனக்கேடவள், ” வாத்தியாரு வீட்டுப் பிள்ளையலக்.. கேக்கவா வேணும்..?”

 

“மண்டூங்கிறியா….!”

 

வனராசுவின் கிண்டலில் ராதிகாவும் சிரித்தாள்.

 

“ம்…? அப்பிடிச் சொல்லுவேனா..?”

 

“சரீ ஓம் பிள்ளைக என்னா செய்யிதுக….?”

 

“மூத்தவெ நல்லா ஒங்கள மாதிரி கொண்ம்மா வருவாம் மாமா..சின்னது பரவால்ல,. நடுவுலதுதே அவக அய்யா மாதரி கொஞ்சம் மொரடு.”

 

“படிப்பக் கேட்டேன்…!”

 

“எங்கூர் படிப்புதேம்  மாமா..”

 

“எல்லா ஊர்லயும் படிப்பு ஒண்ணுதே. ராசம்மா. . நானும் இங்க படிச்சு வந்தவெந்தான..”

 

“சரி ரெண்டு வேரும் பேசிட்டு இருங்க.. ந்தா வாரேன் .”  சொல்லியபடி வீட்டுக்குள் சென்று ஒரு சருவச் செம்பை எடுத்து வந்து கழுவலானாள். “காப்பி சாப்பிடுவீங்கள்ல..? இல்ல கலர் வாங்கியாரவா…”

 

“நிய்யா வாங்கப்போற்…?”

 

“ ம்…! பிள்ளைக ஸ்கூலுக்குப் போயிருச்சு… மாமனாரு கோர்ட்டுக்குப் போயிருக்காரு.. அவகளுக்கு இன்னிக்கி சாமீன்..” சொல்லுகிற போதே அவளுக்கு குரல் வழுக்கியது. கண்களில் ஒரு படபடப்பு.

 

“நாங்க பொறுக்கச் சாப்பிட்டுத்தே வ்ந்தம் க்கா.. ஒக்கார்ங்க..” ராதிகா அவளது கையைப் பிடித்திழுக்க, ராசம்மா கையை விலக்கிக் கொண்டிருந்தாள்.

 

“ ச்.. ஒக்கார்னா ” வனராசு குரல் உயர்த்திப் பேசியதில் ராதிகாவின் பக்கமாய் உட்கார்ந்தாள். ஆனாலும் கைப்பிடியில் சருவச் செம்பு விலகாதி ருந்தது. “ஒங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..” .

 

“சொல்லுங்..மாமா…”

 

என்ன சொல்ல.. அவளுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும். தானாய் வலிய எதுவும் செய்ய முடியாது. கிராமத்தில் எல்லாவற்றையுமே வரட்டுத்தனமாய் அணுகுகிற போக்கு கூடுதலாய் ப்டிந்திருக்கிறது. அதில் வாழ்க்கை விரயமாவதை விளங்கிக் கொள்கிற பக்குவம் வந்துவிட்டால் நகர வாழ்வைக் காட்டிலும் இங்குதான் சுபிட்சம் பெருகும். அதை எப்படிச் சொல்ல. .ராசம்மாவின் புருசன் மட்டும். அவர்களுக்குத் தெரிகிற வழக்கமான விவசாயத்தைச் செய்தால் போதும் எதற்கோ ஆசைப்பட்டு அல்லது யார் சொல்லோ கேட்டு, சட்டவிரோதமான வேலையில் ஈடுபட்டு.. ! அதனால் எத்தனை எத்தனை இழப்பு.. மனவேதனை..!

“பாடுபட போதுமான வலு ஒங்க ரெண்டு பேருக்குமே இருக்கில்ல… அதுல இன்னிக்கி இருக்க நவீனமான ஏற்பாடுகள செஞ்சு வேண்டியதச் சம்பாதிக்க முடியாதா.. ராசம்மா. பத்தலேன்னா பக்கத்தில இருக்கநெலத்தக் கூட  ஒத்தி குத்தகைனு வாங்கி பாக்கலாம்ல..  எத்தன வழி இருக்கு. அப்படி நிண்ட எடத்திலியே பொழப்பத்தேடாம, என்னாத்துக்கு பாரஸ்ட்டுக்குள்ல நொழையணும்.. திருட்டுப் பட்டம் வாங்கி தெண்டம் கட்டி… கோர்ட்டு கேசுன்னு அலஞ்சு ஒடம்பும் கெட்டு மனசும் நொந்து… யோசிச்சுப்பாரு..”

 

வனராசுவின் பேச்சுக்கு தலைகுனிந்தபடி இருந்தாள் ராசம்மா.

 

“இவரக்கூட சும்மார்க்க நேரத்துல எதுனாச்சும் காச வட்டிக்கு குடுத்து வாங்கலாமேன்னு பலபேர் கூப்பிட்டாங்க ஒரு வாத்தியாரா இருந்துக்கிட்டு அது செய்யக் கூடாதுன்னுட்டார்.. ல்ல..”,

 

குனிந்த தலையை சற்றே நிமிர்த்திய ராசம்மா,  கீச்சுக்குரலில் பதில் சொல்லலானாள்.

 

“ வாஸ்தவந்தே க்கா பெரிய சம்சாரி வீட்டுக்காரவக நீங்கசொன்னா சரியாத்தே இருக்கும்.. நாங்க என்னா பாடுபடாமயா இருக்கம்ணு நெனைக்கிறிக.. ரவ்வும் பகலும் இந்த மண்ணத்தான  நோண்டிக்கிட்டு இருக்கோம். அதுக்குமேல பொழுதில்லியே. மாமா…!. எம்பிட்டு ஒழச்சும் ஈசலப் புடிச்சு வாயிலபோட்ட மாதிரிதே  வருமானம்.. இந்த மாதிரி எதுனாச்சும் போய்வந்தாத்தே எதோ ரெண்டு கவளம் கடக்குன்னு வகுத்துல வந்து விழுகுது. செய்யிறது தப்புத்தே… இல்லேண்டு சொல்லல .. எங்களுக் கென்னா ஆசயா  இப்பிடி செயிலுக்குப் போயி கேப்பக்களி திங்கணும்னு… யாராச்சும் சிரிச்சுக்கிட்டே மருந்து திங்கக் கண்டுருக்கமா…க்கா?” சொல்லிவிட்டு வறட்சியாய்ச் சிரித்தாள்.

 

ராசம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் வனராசு உட்கார்ந்திருந்த நாற்காலியின் கால்களை உடைத்தது.

 

“இருந்தாலும் மாத்திக்கறோம் மாமா… நீங்களும் மெச்சிப்பேசற மாதரி வர்றம் பாருஙக..”. என்றபடி ராதிகாவிடம் வந்து நின்றுகொண்டாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top