அருள்!

0
(0)

பஸ்ஸை விட்டு இறங்கி, வீதிகளைக் கிழிக்கும் சாக்கடைகளைக் கடந்து நடுத் தெருவில நுழைந்த போது, அக்கா வீட்டுமுன் பெரிய கூட்டம் தெரிந்தது. நடையின் வேகத்தைக் கூட்டினான்.

டிடிவிண் டிடிவிண் டிடிவிண்டா!

டிடிவிண் டிடிவிண் டிடிவிண்டா!

உறுமி முழக்கம் எனக்கு முதல் வரவேற்பைக் கொடுத்தது.

உறுமிக்காரன் ஒரு பொது விதிக்கு உட்பட்ட ஸ்ருதி லயத்தோடு முழங்கிக் கொண்டிருந்தான். இடது கைக்கோலால் தேய்த்தும் வலது கைக்கோலால் அடித்தும் உறுமியை இயக்கிக் கொண்டிருந்தான். தேய்ப்பதாலும் அடிப்பதாலும் உண்டாகிற இருவேறு ஓசை வடிவங்கள் ஒரு நியதிக்கு உட்பட்டுக் கலவையிடும் போது நமக்கு உணர்வாவிகிற ஸ்ருதி லயம் இருக்கிறதே! அடடா! என்னே இனிமை!

டிடிவிண் டிடிவிண் டிடிவிண்டா!

டிடிவிண் டிடிவிண் டிடிவிண்டா!

வந்ததும் வராததுமாக வீட்டுக்குள்ளே கூட என்னை மறந்த ஒரு மௌன மயக்கத்தில் ஆழ்ந்து உறுமி முழக்கத்தில் ஒன்றிப் போனேன்.

“வாடா சந்திரா! இப்பத்தான் நேரம் வாச்சுச்சாக்கும்?”

அக்காவின் குரல் கேட்டு நுய நிலைக்கு வந்தேன். “பஸ்ஸ{ கெடக்யலக்கா” என்று சமாளித்தேன்.

“பெரிய்ய பஸ்ஸ{, வரணும்னு இஷ்டம் இருந்தா நேத்தே வந்திருக்கலாம்ல?  கடனக் கழிக்கிறதுக்குக் கடைசி நேரத்துல தலையக் காட்டுறியாக்கும்?”

போன வாரமே இங்கு வந்து முகாமிட்டிருக்கும் அம்மாவும் என்னைச் சத்தம் போட்டாள். “படிப்படியா சொல்லிட்டு வந்தன்ல| ஒருநா முந்தியே வந்துரணும்னு, கேட்டியா?”

“தம்பிக்கிப் பட்டிக்காடுன்னா பிடிக்காது போல்ருக்கு.” நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி ஊடு சரடு விட்டாள்.

“ஏண்டா அப்படியா?” என்றாள் அக்கா.

“போக்கா அங்குட்டு” என்றாள் சமாளித்தேன்.

கூட்டத்தின் நடுவே மச்சான் நின்றிருந்தார். தீ;ச சட்டி எடுக்கத் தயாராகி விட்டார் போலும். சட்டை இல்லாத உடம்பு! இடுப்பில் ஒரு மஞ்சள் வேட்டி, தார்ப்பாய்ச்சி கட்டி இருந்தார். நெற்றியில் ஒரு மில்லி மீட்டர் கூட இடைவெளி இல்லாமல் விபூதிப் பட்டை! கழுத்து, முழங்கை, தொடைக் கை, மார்பு, வயிறு என்று உடம்பு பூராவும் விபூதித் திட்டுக்கள்! மணிக்கட்டுகளிலம் முழங்கை ஓரத்திலம் கதம்பப் பூ சுற்றப் பட்டிருந்தது. வலது மணிக்கட்டில் மஞ்சள் கயிறு….கங்காணம்…கட்டியி இருந்தார்.

“எல்லாம் ரெடியா?” கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு நுழைந்தார் காவி வேட்டிக்காரர் ஒருவர்.

“எல்லாமே ரெடியாருக்கு சாமி.” அமமா முன்னுக்கு ஓடினாள்.

பக்கத்தில் நின்றிருந்த ஒருவரைக் கேட்டேன். “யாரு இவரு?”

“ஊரோரத்துல இருக்குற சவுடம்மா கோயில் பூசாரி” என்றார் அவர். “பெரும்பாலும் இந்த ஊருல இவர வச்சுத்தான் சட்டி முந்திரிப்பாக.”

தலைக்குமேல் கைகளை உயர்த்தி சூரியனை நமஸ்காரம் பண்ணிவிட்டு சம்மணம் போட்டுக் கீழே உட்கார்ந்தார் சாமியார்.

“ஒவ்வொண்ணா எடுத்துக் குடுங்க.” ஆணையிட்டார்.

“இந்தா தாரேஞ்சாமி.” மிகவும் பணிவான தோரணையில் அம்மா பொருட்களை எடுத்துக் கொடுத்தாள்.

“மொதல்ல சட்டி” என்றார் சாமியார்.

பூவேலைப்பாடு தீட்டப் பட்ட தீச் சட்டியை அம்மா எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கி பய பக்தியோடு நின்றிருந்த மச்சானுக்கு முன்னால் பவ்வியமாய் வைத்தார்.

“அடுத்து சோத்துக் கத்தாழ.”

சோத்துக் கத்தாழை இரண்டு துண்டுகள் அவரிடம் அளிக்கப் பட்டன.

அதை வாங்கி தீச் சட்டியின் உள் அடியில் பெருக்கல் குறி வடிவத்தில் வைத்தார்.

“சட்டிக்குள்ள எதுக்கு சோத்துக் கத்தாழ?” நான்.

“தீச்சூடு தூருக்குப் பரவாம தடுக்கும்.சட்டி ஏந்துற கைக்குப் பாதுகாப்பு.” பக்கத்தில் இருந்தவர்.

“ஏன்? அக்கினிய அந்த மாரியாத்தா தாங்க மாட்டாளா?”

“தாங்குவா. இருந்தாலும் அவ கையும் சுட்டுறக் கூடாதுல்ல!” ஜோக் அடித்தார்.

யாருக்கும் தெரியாமல் சின்னதாய்ச் சிரித்துக் கொண்டேன் நான்.

சோத்துக் கத்தாழைக்கு மேல் சட்டியின் முக்கால் பாகம் வரை பச்சை நெல் உமியை நிரப்பினார். இதுவும் சூட்டைத் தணிக்கத்தானாம்.

“ஏன், அவிச்ச நெல் உமியப் போட்டா என்ன?”

“ஆத்தாளுக்க ஆகாதாம்.”

அடேயப்பா! அம்மனுக்கு எது எது தேவை என்று கணித்து வைத்திருக்கிறார்கள் இந்த மனிதர்கள். ஆத்தாளுக்குத் தேவையானதை நாம் கொடுத்தால் நமக்குத் தேவையானதை அவள் தருவாளாம். ஆழமாக நம்புகிறார்கள் இந்த கிராமத்து ஜனங்கள்.

அம்மாவிடம் இருந்த சூடக் கட்டு பூசாரியின் கைக்கு மாறியது. சிகரட் பாக்கெட் வடிவத்தில் இருந்த சூடப் பாக்கெட்டை ஒரு பக்கம் வாய் பிளந்து உள்ளங்கையில் கொட்டினார். ஒன்பது சூடங்களை எடுத்துத் தீச் சட்டியின் நடு மையத்தில் நெல் உமிக்கு மேல் வட்ட வடிவத்தில் அடுக்கினார். மடியில் இருந்த தீப் பெட்டியை எடுத்து சூடத்தைப் பொருத்தினார். தீ ஜுவாலை விட்ட போது உறுமி வேகமாய் முழங்கியது.

டிடிவிண் டிடிவிண் டிடிவிண்டா!

டிடிவிண் டிடிவிண் டிடிவிண்டா!

வானை நோக்கிக் கிளம்பிய உறுமிச் சத்தத்தோடு பெண்களின் குலவைச் சத்தமும் சேர்ந்து கொண்டது. கூடியிருந்த மூதாட்டிகள் ‘லூஉ லூஉ லூஉ லூஉ என்றபடி குரல் விட்டுக் குலவை இட்டார்கள். குலவை என்பது தெய்வத்தை விரைந்து கூப்பிடும் அழைப்புக் குறியாம்.

“மஞ்சத் தண்ணி ஊத்துங்க!” பூசாரியின் ஆணை பிறந்த நேரத்தில் பானையில் மஞ்சள் கரைத்த தண்ணீரைக் கொண்டு வந்தாள் அக்கா. மச்சானை உட்காரச் சொல்லி தலை வழியாய் ஊற்றினாள். உடம்பு பூராவும் நனைந்தது.

‘செறகாய எடுங்க!” உரக்கச் சத்தம் போட்டார் பூசாரி. உரப் பொடிப் பையில் இருந்த வேப்பஞ்செறகாயை எடுத்துத் தந்தாள் அம்மா.

வான் நோக்கித் தலை நிமிர்ந்த கற்பூரச் சுடர்மேல், செதில் செதிலாய் நறுக்கப் பட்ட வேப்பஞ்செறயாய்த் துண்டுகளை அடுக்கினார். தீ நீண்டு பரந்து எரிந்தது. தூக்குப் போணியில் இருந்த விளக்கெண்ணைணைச் சின்னக் கரண்டியால் அள்ளி அள்ளி ஊற்றினார். சொகமான நெடியுடன் கூடிய புகையைக் கிளப்பிக் கொண்டு ஜுவாலை மேலும் வளர்ந்து விரிந்து எரிந்தது. குலவை ஒலியும் உறுமி முழக்கமும் விண்ணதிர வீர்யம் காட்டின.

மச்சான் கையில் வேப்பிலை தரப்பட்டது. நெல் உமி,சோத்துக் கத்தாழை இவற்றை எல்லாம் தாண்டி அக்கினி அந்தச் சட்டியைத் தாக்குமானால் சட்டியேந்திய தரங்களைக் காப்பது இந்த வேப்பங்குலைதான். வேப்பங்குலை ஒன்றை எடுத்து இணுக்கு இணுக்காக இணுங்கி மச்சானின் இடுப்பில் சுற்றி வேட்டியில் செருகிவிட்டார் ஒரு பெரியவர்.

இப்போது சுய உருவில் இருந்து மாறி தெய்வீக உருவத்துக்கு மாறி இருந்தார் மச்சான். ஏற்கனவே வாங்கி வைக்கப் பட்டிருந்த மாலையை அம்மா என்னிடம் கொடுக்க, கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு நுழைந்து மச்சான் கழுத்தில் அணிவித்தேன்.

மச்சான் நெடுஞ்சாண் கிடையாக பூசாரியின் காலில் விழுந்து எழுந்தார். கண்களை இறுக மூடி கைகளைக் கூப்பி தீச்சட்டியை வணங்கி நின்றார்.

முன்னைவிட வேகமாய் முழங்கியது உறுமி. குலவைச் சத்தம் உறுமி முழக்கத்தைத் தோற்கடித்து உயர்ந்தது.

பூசாரி எழுந்து மச்சானைப் பார்த்து நின்றார். இடது கையில் விபூதித் தட்டும் வலது கையில் சிட்டிகை விபூதியுமாய் மந்திர ஸ்லோகம் ஜெபித்தார். பூமியையும் வானத்தையும் மாறி மாறிப் பார்த்து ஸ்தோத்திரங்கள் சொன்னார். பிறகு வலது கை விபூதியை மச்சான் தலையில் உதறி விட்டு நெற்றியில் பூசிவிட்டார்.

வேப்பஞ்செறகாய்களையும் விளக்கெண்ணையையும் சாப்பிட்டுக் கொண்டு மொதுமொதுவெனக் கனன்று எரிந்தது தீ. அருள் இறங்கினால்தான் சட்டியைத் தூக்க வேண்டும். தீச் சட்டியைச் சுமக்கப் போவது மச்சான் இல்லையாம். அவர் மாரியாத்தா இறங்கி அவள்தான் சுமப்பாளாம்.

மச்சானுக்கு அருன் இறக்கும் வேலையைத் தீவிரமாகச் செய்தார் பூசாரி. விபூதியைச் சிட்டிகை சிட்டிகையாய் அள்ளி மச்சான் தலையில் தெளித்து விட்டார். வேப்பந்தழையால் முகத்தையும் உடம்பையும் பையப் பைய நீவிக் கொடுத்தார். அருள் இறங்கவில்லை என்றானபோது வேப்பந்தழையால் உச்சந்தலையில் சடீர் சடீரென அடித்தார். வேப்ப இலைகள் தரையில் உதிர்ந்தன. உறுமி முழக்கம், குலவைச் சத்தம், பூசாரியின் மந்திர உச்சாடனம், விபூதித் தெளிப்பு, வேப்பந்தழை விளாசல் எல்லாம் ஓர் உச்ச கட்டத்தை அடைந்தது. இன்னும் அருள் இறங்கவில்லை.

“ஆத்தே! என்னடி இது? இம்புட்டு மந்தம்?” ஒரு மூதாட்டி அங்கலாய்த்தார். “பொன்னுத் தாயி மக தாயம்மா அஞ்சு செகண்டுல அருளெறங்கி ஆட்டம் போட்டுட்டா| இவனுக்கென்னடான்னா ஒடம்பு கூட சிலுசிலுக்கலியே!”

“சாமி குத்தமாயிருக்கும்” என்றார் இன்னொரு மூதாட்டி.

“அவன் அப்படி ஒண்ணும் அக்குறும்புக் காரனில்லியே!”

“அவன் அக்குறும்பு பண்ணாட்டிப் போதுமா? அவங்குடும்பத்தில?”

“திட்டு மொறப்பாடா இருக்குமோ?” இன்னொரு கிழவி வேறொரு குற்றச் சாட்டை வைத்தாள். “பாட்டம் பூட்டங்காலத்தில ஏதாச்சும் தீம்பு நடந்திருக்கும்.”

“இருக்கும், இருக்கும்” என்றார்கள் மற்;ற இருவரும். “இவன் தங்கமான பயலாச்சே, இவனுக்கா வந்து விடியணும்?”

இந்தக் கிழவிகள் மட்டுமல்ல| அங்கு கூடியிருந்த அத்துணை பேருமே மச்சானுக்கு அருள் இறங்காததற்கு என்எனன்னமோ காரணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

குடம் குடமாய் மஞ்சத் தண்ணி ஊற்றப் பட்டது. கட்டுக் கட்டாய்ச் சூடம் கொளுத்தப் பட்டு மச்சான் முகத்துக்கு முன் ஆரத்தி எடுக்கப் “பட்டது. தழைதழையாய், இலை இலையாய் உதிரும் அளவுக்கு வேப்பங்குலை அர்ச்சனை நடந்தது. கண்மூடிய நிலையில் அத்தனை விளாசல்களையும் தாங்கிக் கொண்டு மச்சான் மௌனமாய்க் கும்பிட்டது கும்பிட்டவக்கில் நின்றிருந்தாரே தவிர அருள் இறங்கி ஆடவில்லை.

வான்மறந்து, மண்மறந்து, அக்கம் பக்கத்து அரவம் மறந்து, ஏன், அங்கேயே முழங்கிக் கொண்டிருந்த உறுமி முழக்குத்தையும் மறந்து அத்துணை கண்களும் அவரையே வெறித்துக் கொண்டிருந்தன. அவர் ஆடவும் இல்லை, அசையவும் இல்லை, உலையில்போட்ட ரேசன் அரிசி மாதிரி விரைத்தது விரைத்த படி நின்றிருந்தார்.

“டாய்!”

உறுமிச் சத்தத்தையும் அத்தான் மேல் இருந்த ஜனங்களின் கவனத்தையும் மீறிக் கொண்டு வந்தது ஒரு குரல்.

ஏறிட்டுப் பார்த்தார்கள்| நானும்தான். நடுத்தர வயது பெண்ணொருத்தி ‘உஸ்’ ‘உஸ்’ என்று உதறிக் கொண்டு தலைவிரி கோலமாய் ஓடிவந்தவள் கூட்டத்தைப் பிளந்து நுழைந்தாள். பூசாரிக்கு முன் போய் நின்றாள். அவரிடம் இருந்த வேப்பங்கொழுந்தைப் பிடுங்கி உருவித் தின்றாள். “டாhhhய்!” பல்லைக் கடித்துக் கொண்டு கர்ஜித்தாள். “என்னடா நெனச்சுட்டிருக்க மனசுல?”

அக்கா ஓடிவந்து அந்தப் பெண்ணின் காலடியில் வழுந்தாள். தரையில் முட்டி முட்டி அழுதாள்.

அம்மா வேகமாய் ஓடி வந்து சாமியாடும் பெண்ணருகே நின்றாள்.

“மனசுர என்ன நெனச்சிருக்க? ம்ம்ம்…” என்று வேப்பங்கொழுந்தை மென்று கொண்டே உறுமினாள்.

“நீ ஆரு தாயி?” என்றாள் அம்மா. “நாங்க நெகாத் தெரியாத எளிய சனங்க| என்ன குத்தம் இருந்தாலும் மன்னிக்யணும்.”

“என்னயவா ஆருன்னு கேக்குற? ஆய்ய்ய்ய்!” என்று பயமுண்டாகும் படி கர்ஜித்தாள். “நான் யாருன்னு காட்டுறம் பொறு.”

அம்மா பதறிப் போனாள். “வேணாந்தாயி! ஒன் சொரூபத்தத் தாங்குறதுக்கு எங்களுக்கு சத்தி இல்ல.”

அக்கா இன்னும் காலடியில்தான் கிடந்தாள். பூசாரி விபூதி தெளித்து ஆங்காரத்தைக் குறைக்க முயற்சித்தார்.

“நீ ஆருன்னு சொன்னாத்தான எங்களுக்குப் புரியும்? அதில்லாம சும்மா கோபப் பட்டு என்ன பிரயோஜனம்?” இன்னொருவர் சாமியாடியின் முகத்துக்கு நேரே நின்று வினாக் கணை தொடுத்தார்.

“நானா…?” இரைக்க இரைக்க மேமூச்சு கீமூச்சு வாங்கக் கேட்டாள். “நானு காதோல கருக மணி போட்டு, கண்டாங்கிச் சீல கட்டி, தெக்கு மூலைல இருக்க பெண் தெய்வம்.”

“பெண்தெய்வமா? அப்படின்னா ஒம்பேரு?” மீண்டும் வினா எழுப்பினார்.

“வீரு சின்னு!”

அம்மாவின் முகத்தில் ஒருவித மலர்ச்சி. “எங்க குலதெய்வம்.” பெருமிதத்தோடு சென்னாள்.

“குல தெய்வந்தாண்டி, குலதெய்வந்தான்.” ஆங்காரம் அதிகரித்தது சாமியாடிக்கு. “வெள்ளி செவ்வாய்க்கி என்னய நெனச்சதுண்டா? வருசம் இருநா எனக்கு சீல வச்சுக் கும்பிட்டதுண்டா?”

“கும்பிட்டஞ்சாமி.” காலடியில் கிடந்த அக்கா விருட்டென எழுந்து தான் பக்தி மார்க்கம் தவறாதவள் என்பதை நிரூபிக்க முயற்சித்தாள். வெள்ளி செவ்வா தவறாம சூடங்கொளுக்கினோம். ஒவ்வொரு அமாவராசக்யும் தேங்கா ஒடச்சுக் கும்பிட்டோம்| வருசம் ஒருக்கா சீல எடுத்து வச்சோம்.”

பூசாரி குறுக்கிட்டார். “புத்தி கெட்ட நாயி| ஆத்தா சொல்லத் தட்டாத| அது சொல்றத ஒத்துக்க| இல்லாட்டி…..”

“ஆய்ய்ய்ய்!” சாமியாடியின் ஆங்காரம் உச்ச கட்டத்தை அடைந்தது. “என்னயவே குத்தவாளி ஆக்குறியா?”

எங்கள மன்னிச்சுடு தாயி!” அம்மா காலுக்கு விழுந்தாள்.

“ஆமா தாயி” என்று பூசாரியும் சிபாரிசு செய்தார். “சின்னஞ்சிறுசுக| இந்த ஒரு தடவ மாப்பு விடு| இனிமே எந்தப் பிழையும் வராம நாம்பாத்துக்கிறேன்.”

‘உஸ்’ உஸ்’ என்று அங்குட்டும் இங்குட்டும் ஆடினாள். ஆங்காரம் குறைந்த மாதிரி தெரிந்தது.

பூசாரி சாமியிடம் மன்றாடினார். “கதிரேசன் ஒண்ணும் தெரியாத அப்பாவி. அவனுக்கு அருள் எறக்கி தீச்சட்டியக் தையில தூக்கிக் குடுத்துட்டு ஜல்தியா மலையேநு தாயி.”

சாமியாடி மச்சான் அருகில் சென்றாள். விபூதி பூசிவிட்டு வேப்பங்குலையால் தலையில் அடித்தாள். மஞ்சத் தண்ணிக் கேட்டு வாங்கி முகத்தில் தெளித்தாள். ஊஹ{ம்! மச்சானுக்கு அருள் இறங்குவதாய்த் தெரியவில்லை.

அக்காவைப் பார்த்தேன். முகத்தில் சாரை சாரையாய்க் கண்ணீர்! அம்மாவின் முகத்தில் ஒருவிதப் பதற்றம். எனக்கும் கூட மனசுக்குள் லேசான அச்சம். குடும்பத்துக்கு ஆகாது என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்டது.

மச்சான் முகத்திலும் கொஞ்சம் அச்சம் படர்வது தெரிந்தது. “அருள் எறங்கல சாமி” என்று விபூதி பூசிய வீருசின்னுவிடம் புலம்பினார்.

அக்காவும் அம்மாவும் கோவெனக் கதறினர். அக்கா அழுவதைப் பார்த்துப் பிள்ளைகுளம் அழத் தொடங்கின.

என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினேன். மச்சானுக்கு எப்படியாவது அருள் இறங்க வழி வகுக்க வேண்டும். அருள் இறங்கவில்லை என்றால்p அருள் இறங்குவதே பொய் என்று புரிந்து கொள்வதற்குப் பதில் ‘சாமி குத்தம்’ என்று புரிந்து கொண்டு தெய்வ கோபத்திற்கு ஆளானதற்காக தன்னைத் தானே வருத்திக் கொள்வாள் அக்கா. மகளுக்கு ஒன்றென்றால் அம்மாவும் செத்துப் போவாள்.

அங்கும் இங்கும் ஓடினேன். பலரையும் யோசனை கேட்டேன். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக அருணாச்சலம் தாத்தாவிடம் போனபோது……

“ஒம்மச்சான் ஞானமில்லாதவனா இருக்கானே|” என்று கோபப் பட்டார். “அருள் தானாவா எறங்கும்? மஞ்சத் தண்ணிய ஊத்தும் போது ஒடம்பு புல்லரிக்கும். அதுதான் அருளு| அப்பறம் நாமளா ஆடிக்கிற வேண்டியதுதான். அருள் பாதி மருள் பாதின்னு பெரியவுக சும்மாவா சொன்னாக? கதிரேசன் கூரு கெட்ட பய| போயி அவங்காதுல ஓது.”

ஓ! இப்போது எனக்குத் துல்லியமாய்ப் புரிந்தது. அருள் பாதி மருள் பாதி ன்பதுதான் சாமியாடுவதன் அடிப்படை. பாடம் சொல்லித் தெரிய வேண்டிய தேவை இல்லாமல் ரத்தத்தோடு கல்நது விட்ட விஷயம் இது. இந்த விஷயத்தில்மச்சான் ஒரு மக்கு என்பதில் ஐயமில்லை.

ஓடினேன்! மச்சான் அருகில் போய் நின்றேன். அருணாச்சலம் தாத்தா சொல்லியதை அவர் காதில் ஓதினேன். புரிந்து கொண்ட மாதிரி முறுவலித்தார்.

குடித்துக் கிறங்கிப் போனவனைப் போல பையத் தள்ளாடத் தொடங்pகனார் மச்சான். கூட்டம் களிகொண்டு ஆடியது. ‘வேல்மயில்’ ‘வேல்மயில்’ ஆண்கள் கூட்டம் ஆரவாரம் செய்தது. பெண்கள் குதூகல ஒலி எழுப்பிக் குலவை இட்டார்கள். உறுமிக் காரன் தன்னை அறியாமல் மேலும் கீழும் குதித்துக் குதித்து சாட்டினான்.

மச்சானின் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தலையில் கால் பதியாமல் குதியாட்டம் போட்டார். ‘அருள்’ இறங்கி ஆடிய ஆட்டத்தைப் பார்த்த அக்காவும் அம்மாவும் புன்சிரித்தார்கள். ஆவேசச் சுடர் உமிழ்ந்து ஆங்கார ஜ்வாலை வீசிய அக்கினிப் பிழம்பை சட்டியோடு தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாய்ப் பயணப் பட்டார்.

“அடி ஆத்தே! எம்புட்டு ஆங்காரமா ஆத்தா சொரூபங்காட்டுறா பாரு!” ஒரு கிழவி ஆச்சர்யப் பட்டாள்.

பூசாரி அக்காவைத் தனியாக அழைத்துப் பேசினார்.”இங்க பாரு தாயி! மாட்டேன்னு அடம் பிடிச்சுக்கிட்டிருந்த ஆத்தாள நான்தான் வசியம் பண்ணி இழுத்தாந்திருக்கேன்| அடுத்த மாசம் கெடா வெட்டி செரப்புக் குடுத்துரு| அதே போல ஒங்குல தெய்வத்துக்கும பட்டுச் சீல எடுத்து வச்சுக் கும்புடு| குடும்பத்தப் பிடிச்ச பீட இதோட வெலகிரும், என்ன?”

“ஆகட்டுஞ்சாமி” என்றபடி மச்சானுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினாள் அக்கா.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top