அரும்புதல்

0
(0)

“அம்மா …. நாளைலருந்து பதிமூணு நாள் லீவு … மூணாந்தேதி தான் பள்ளிக் கூடம்”

கலைந்த தலையும் கசங்கிய யூனிபாரமுமாய் வீட்டுக்குள் நுழைந்த ரமேஷ் சொன்னான் பின்னாலேயே உஷாவும் வந்தாள். புத்தகப் பையையும், வாட்டர் பேக்கையும் ஆளுக்கொரு பக்கமாய் வீசினார்கள்.

நாளைக்கே பாட்டி ஊருக்குப் போகணும். அப்பாவ கொண்டு விடச் சொல்லுங்க… ஆளுக்கொரு விசயமாகச் சொன்னார்கள்.

“அப்பா வரவும் பேசிக்கலாம் …. கைகாலக் கழுவிட்டு வாங்க …… சாப்பாடு போடுறேன்.” சொல்லி விட்டு மைதிலி சமையல் அறைக்குள் நுழைந்தாள். அப்பா வேணாம்னு சொல்லிட்டா?” உஷா கேட்டாள். “சொல்லிட்டா? …. மாமாவுக்கு காகிதம் போட்டு வரச் சொல்லி அவரோட போகணும்” ரமேஷ் பதில் சொன்னான். அதுக்குள்ள லீவு முடிஞ்சிடும். உஷா சொல்லவும் குழப்பம் ஏற்பட்டது. ரமேஷ் பதில் சொல்லவில்லை. ஊரில் உள்ள பாட்டி, பாபு, வேணு, மாமா, அத்தை எல்லோரும் ஒரு நிமிடம் வந்து போனார்கள். இவர்கள் பேசிக் கொண்டு நிற்பதை சமையல் அறையிலிருந்து மைதிலி எட்டிப் பார்த்தாள். ஊர் நினைவும், களைப்பும் தெரிய முகத்தை சோர்வாக வைத்துக் கொண்டு ஆளுக்கொரு கோணத்தில், காற்றுப் போன ரப்பர் பொம்மைகள் போல் வாடி நின்றார்கள்.

“ஓஹோ …. ஹோ ….” வென்று வெளியிலிருந்து வந்த சத்தம் இவர்களது நினைவைக் கலைத்தது. சிறுவர்களின் ஆரவாரம் பெரிதாகக் கேட்டது. என்னவென்று புரியாமல் வெளியில் ஓடினார்கள். தெருவை அடைத்துக் கொண்டு சிறுவர்கள் கூட்டம் அலைமோதியது. தெருவின் நாற்சந்திப்பில் அந்த உருவம் வர, நாலாபுறமும் விலகியே நின்று ஆரவாரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அனுமார் வேடமிட்ட ஒருவன் ஒவ்வொரு கடை முன்பும், வீட்டின் முன்பும் நின்று நின்று வர, கையில் தட்டுடன் ஒரு சிறுவன் கடை கடைக்கு ஏறி இறங்கினான். பெரிய அனுமார் தலையை மாட்டிக் கொண்டு நீளமான பிடியும், பெரிய உருண்டையையும் கொண்ட கதையை நிமிர்ந்த தோளில் சாய்த்துப் பிடித்துக் கொண்டு அசைந்தான் உடல் முழுவதும் நீலநிற உடை. கனத்த உடம்பை கம்பீரமாய் காட்டியது. சிவப்பு நிறத்தில் பெல்ட்டும் அதன் பின்புறத்தில் நீண்டு கேள்விக் குறி போல் மேல் நோக்கி வளர்ந்த வாலும் ஜரிகை சுற்றப்பட்டு பளபளத்தது. வாலின் நுனியில் தொங்கிய குஞ்சம் மஞ்சள் நிறத்தில் ஆடியது. ‘

இடுப்பிலும், கால்களிலும் தட்டிய சலங்கைகள். “ஜல் ……. ஜல்…..” என்று ஒவ்வொரு அசைவையும் ஒலித்தன. சுற்றிலும் வந்த சிறுவர் கூட்டத்தோடு நடுவில் இந்த அனுமான் வருவது. பெரிய மக்கள் கூட்டத்திற்கு நடுவே, ராட்சச அவதாரமெடுத்த அனுமார் வரும் சினிமாக் காட்சி போல் இருந்தது. ஒவ்வொரு அடியும் பூமியே அதிர்வது போல் “ஜல்……. ஜல்…..” என்று முழங்கின.

சொக்கமன் தெருவிலிருந்து குளத்துத் தெருவில் திரும்பி, பாய்ந்து விடப் போவது போல் ஒரு பாவனை செய்தான். சிறுவர்கள் சிதறி ஒடினார்கள். புரட்டாசித் தூறலில் நனைந்த தெருக்களில் சகதி நசநசத்தது. ஓடிய சிறுவர்கள் சகதியிலும் சாக்கடையிலும் விழுந்து புரண்டார்கள்.

இப்படிப் பாய்வது போலவும், தாவிப் பிடிப்பது போலவும் செய்து சிறுவர்களிடம் அலைமோதலையும், ஆரவாரக் கூச்சலையும் ஏற்படுத்தினான். பயந்தவர்கள் பதுங்கி நின்றும், தைரியசாலிகள் கொஞ்சம் முன்னேறியும் பார்த்தார்கள். சிறிது சிறிதாக பழைய கூட்டம் சேர்ந்தது. ஆனால் ஒடுவதற்கு தயாராகவே நின்றார்கள்.

டீக்கடையின் உள்ளே போய், கல்லா டேபிளை ஒட்டி நின்று ரமேசும், உஷாவும் பார்த்தார்கள். புரியாத கலவரத்தோடு பய உணர்வும் சேர்ந்து குழப்பமான மனநிலையோடு நின்றார்கள். ரமேசுக்குப் பின்னால் பதுங்கி நின்று கொண்டாள் உஷா. பயத்திலும் ஏதோ புரிவது போல் ரமேஷ் இருந்தான்.

அனுமாரின் வேடிக்கை ஆட்டங்கள் அதிகமாக ஆக கூட்டமும் சேர்ந்தது. பெரியவர்களும் அங்கங்கே நின்று பார்த்தார்கள். பயந்து நின்ற சிறுவர்களைப் பிடித்து முன்னே தள்ளி விட்டார்கள். தட்டில் காசு போட்டார்கள்.

கூட்டமும் காசும் சேர்வதால் ஆட்டமும் அதிகரித்தது. கதாயுதத்தை வலது கையால் இடுப்பில் ஊன்றியபடி நிமிர்ந்த நிலையில் அடி எடுத்து வைத்து நடந்தான். பூமி அதிரும்படி கால் ஊன்றி “ஜல்…… ஜல்……” என்று ஓசையோடு வட்டமாக நடந்தான். கதாயுதத்தை சுழற்றி சுழற்றி வீசி, ஜல், ஜல் என்று சலங்கை குலுங்க எம்பி எம்பிக் குதித்து வந்தான்.

பிள்ளைகளைத்தேடி தெருவில் எட்டிப் பார்த்த மைதிலியும் வாசல் படியிலேயே நின்று விட்டாள். இந்தக் கூட்டத்தில் எப்படி பார்க்க முடியும்?

டீக்கடையில் நின்ற ரமேஷ் பயம் குறைந்து கொஞ்சம் முன்னே வந்து நின்றான். உஷாவுக்கு அவ்வளவு தைரியம் வரவில்லை.

சிறிது நேரம் ஆடிய பிறகு, வியூகம் அமைத்தது போல் சிறுவர்கள் சூழ்ந்து வர, கோட்டைத் தெருவில் நுழைந்தான். சில பெரியவர்கள் கூட பின் தொடர்ந்தார்கள். கூட்டம் முழுவதும் சென்றது.

தெளிந்த முகத்தோடு ரமேஷ் ஒடி வந்தான். “அம்மா……… மனுசன்தாம்மா…..” இவன் சொல்வது மைதிலிக்குப் புரியவில்லை. என்னடா சொல்ற? “ஆமாம்மா …… மொதல்ல என்னமோ நௌச்சேன்….. கடேசில மனுசன் தான்”

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top