அய்யம்பெருமாள் என்றொருமனிதர்

5
(1)

வழக்கம் போல நானும் நண்பர் சாரதியும் ரோட்டோரமாய் இருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தோம். ஆபீஸ் விட்டு வந்த பிறகு ரெண்டு பேரும் சந்திப்பதும் ஒருவர்க்கொருவர் தவிர்க்க முடியாத துணையாகிப் போனதும் நேர்ந்து வெகு நாட்களாகிவிட்டது. சில நேரம் நடை, அல்லது நகராட்சிப் பூங்காவின் சூடு ஆறத்து வங்கியிருக்கும் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். பல கதைகள், பால்ய நாட்கள், குடும்ப வாழ்க்கை, பிரச்சினைகள், பத்திரிகை செய்திகள், படித்த புத்தகங்கள், வேதாந்த விசாரம், சமூக விமரிசனம் என்றுமே எங்களுக்கு பேச விஷயம் இல்லாது போன நாளேயில்லை. இதில் சலிப்பு தோன்றுகிற மாதிரி ரெண்டு பேரும் உணர்கிற நேரம் ரெண்டு நாட்கள் முழுக்க சந்திக்க மாட்டோம். மறுபடியும் அந்த ஆவல் கிளர்ந்து வரும். நெடுநாள் கழிந்த மாதிரி பேசத் துவங்குவோம். இத்தனைக்கும் பால்யத்திலிருந்து இருவரும் ஒரே தெருவில் வளர்ந்தவர்கள். இடையில் சில வருஷங்கள் படிப்பின் பேரிலும், வேலையின் நிமித்தமும் நண்பர் வெளியூரில் இருந்தார்.

டீ குடித்ததும் நண்பர் சிகரெட் வாங்கப்போனார். அவர் வரும் வரை நான் ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, எங்கிருந்தோ முளைத்த மாதிரி, ஓலைப் பாயில் சுருட்டிக் கட்டிய ஒரு அனாதைப் பிணத்திற்கு மலிவான கதம்ப மாலை போட்டு நாலைந்து பேர் மட்டும் தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். எனக்கு எப்போதும் சவ ஊர்வலங்களைக் கண்டாலே மனசில் ஒரு வித துயரம் சுரக்கும். அது ஏனென்று தெரியாது. இன்றைக்கும் அந்த அனாதைப் பிணம் மனசை என்னவோ செய்தது. நேற்று தான் சிவராமகாரந்தின் ‘அழிந்த பிறகு’நாவலைப் படித்திருந்தேன். மனிதன் உயிருடன் இருக்கும் வரை அவனுக்கு எத்தனை விதமான முகங்கள். அவன் காரியங்களுக்கு எத்தனை விதமான வியாக்கியானங்கள். செத்த பிறகு என்ன விநோதம். மனிதனின் பல வருட வாழ்க்கையும் சில மணி நேரங்களில் அபிப்ராயங்களாக, கணிப்புகளாக விமரிசனங்களாக காற்றில் கரைந்துவிடுகின்றன. அதன் பிறகு கொஞ்ச காலம் அந்த மனிதர் அபிப்ராயங்களிலும் அவர் செய்த காரியங்களின் எதிர் விளைவுகளிலுமாக வாழ்கிறார். அதன் பிறகு… அதன் பிறகு…

அநாதைகளென்றால் அதுவும் இல்லை. இறந்த மறுகணமே இந்த உலகில் நினைவுகளேதும் விட்டு வைக்காமல் சூனியமாகி விடுகிறார்கள். அப்புறம் இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? வாழ்விலே என்ன விநோதமிருக்கிறது?

“போகலாமா…”

நண்பர் அருகில் நின்று கொண்டிருந்தார். இருவரும் நடந்தோம். சாயங்கால மஞ்சள் ஒளி ரோட்டை முழுக்காட்டியது. முடிவேயில்லாத அந்தத்தார் ரோட்டில் பிரகாசித்த ஒளி மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் கூட அபூர்வ சோபையளித்தது. நான் என் மன விசாரத்திலும், வேடிக்கை பார்ப்பதிலுமாக வந்து கொண்டிருந்ததில் நண்பரின் மௌனத்தைக் கவனிக்கவில்லை. சாதாரணமாய் அவர் அப்படி இருக்கமாட்டார்.

“என்ன யோசனை…”

“இப்போ கொஞ்ச முன்னால ஒரு பொணம் போனதைப் பாத்தீங்களா… அது யாருன்னு தெரியுமா…”

நான் குறுக்கு மறுக்கும் தலையை ஆட்டினேன்.

“அய்யம் பெருமாள்…”

அதைக் கேட்டதும் எனக்கு ஒரு விநாடி நடுக்கமெடுத்தது. யாரோ என்றிருந்தவரைக்கும் நிதானமாயிருந்த மனசு தெரிந்தவர் என்றதும் நிலை தவறியது. சரியாகக் கவனிக்கவில்லையே என்று வருத்தப்பட்டேன். நீண்ட பெரு மூச்சு எழுந்தது.

பூங்காவுக்குள் சென்று ஆளரவமற்ற இடத்தில் உட்கார்ந்த போது நண்பர் சாரதி சொன்னார்.

“இப்படி அநாதையா போவோம்னு கனவுல கூட நெனச்சிருக்கமாட்டாரு இல்ல. ஒங்களுக்கு பழசெல்லாம் ஞாபகமிருக்கா…”

எப்படி மறக்க முடியும்? அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நான் ஞாபகச் சுவடுகளூடே பின்னோக்கிப் பயணம் செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

அய்யம் பெருமாளுக்குப் பையன்களைக் கண்டாலே ஆகாது. அது ஏனோ அவர் சுபாவத்திலேயே இருந்தது. யாரைக் கண்டாலும் விரட்டுவார். பையன்களுக்கு அவரை அருகில் கண்டாலே பயம். தூரத்தில் நின்றால் எக்காளம், கிண்டல், கேலி எல்லாம்.

அவருடைய அட்டைக் கறுப்பு நிறத்திற்கும், வெளியே எத்தி நின்ற பற்களுக்கும், நடுவில் சொட்டை விழுந்த தலைக்கும் சற்றும் பொருத்தமில்லாமல் அவர் பெண்டாட்டி இருந்தாள். மெலிந்த உடம்பு காதுகளில் கல் வைத்த பெரிய கம்மலும் மூக்குத்தியும் போட்டு கோடாலிக் கொண்டை போட்டு சாந்த சொரூபியாய் இருந்தாள். பேச்சும் மெலிசு. எப்பவும் வியர்க்காத முகம். தலையில் பூ எப்பவும் இருக்க வேண்டும். எட்டு வருஷமாகியும் இன்னும் குழந்தையில்லை.

நாங்கள் அந்த அம்மாள் தீப்பெட்டிக்கட்டைகள் அடுக்க கூடமாட இருந்து ஒத்தாசைகள் செய்வோம். சமயங்களில் கடலைப் பிண்ணாக்கு திங்கக்கிடைக்கும். அப்போது செதுக்கு முத்து விளையாடுவது தான் வழக்கத்திலிருந்தது. செதுக்கு முத்து விளையாட புளியமுத்து வேணுமே. அந்த அம்மாள் புளியமுத்து கொடுப்பார்கள். திடீரென்று புளியமுத்துக்கு ஏகப்பட்ட கிராக்கி. யார் யாரோ வந்து படிபடியாய் வாங்கிக் கொண்டு போனார்கள். அப்போதெல்லாம் நாங்கள் ஒரு தீப்பெட்டிக்கட்டை அடுக்கிக் கொடுத்தால் மாகாணிப்படி புளிய முத்து கொடுப்பாள். இது அய்யம் பெருமாளுக்குப் பிடிக்காது.

“கண்ட கண்ட நாய்களையெல்லாம் உள்ள விட்டு வேடிக்கை பார்க்காத… திருட்டுப் பசங்க… திருடிட்டு போயிடுவாங்க…”

கோபம் அதிகமானால் அந்த அம்மாளை அடித்துவிடுவார். அந்த அம்மாள் இப்படி அடி வாங்கினாலும் மறுபடியும் எங்களைக் கண்டால் இழுத்து இழுத்து வைத்துப் பேசும்.

பக்கத்திலிருந்த பெரிய வேப்ப மரத்தில் அடைந்த பறவைகள் நினைவுகளை அறுத்தன. நண்பரும் தூக்கத்திலிருந்து முழித்தவர் போல சுற்று முற்றும் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து லேசாய் சிரித்தார்.

“அய்யம்பெருமாள் அப்ப அடாவடிக்கு ரொம்ப பேமஸில்ல…”

“ஒங்களுக்கு ஞாபகமிருக்கா… அவர் வீட்ல பின்னாடி அடிபம்பு ஒண்ணு இருந்திச்சி… அப்பவே ஒரு கொடம் தண்ணிக்கு அஞ்சு பைசா வாங்குவார்… அது மட்டுமில்ல… பம்புரிப்பேரானால் அதுக்கும் தனியாக காசு வசூலிப்பார்…” நான் சொன்னதும் நண்பருக்கும் ஆர்வம் திரண்டது.

“அப்ப ஒங்களுக்கு வைசூரி போட்டிருந்தது… நீங்க வீட்ல இருந்தீங்க… அய்யம்பெருமாளோட அண்ணன்… வந்து பிச்சைகேக்காத கொறைதான்… கொஞ்சங்கூட மசியல என்ன ஜென்மமோ…”

இருளை சேர்த்திழுத்துக் கொண்டு திரள் திரளாய் மேகங்கள் வந்து குவிந்தன. நான் மேகங்களை விளிம்பிடும் கடைசி ஒளியை வெறித்துக் கொண்டிருந்தேன்.

அய்யம்பெருமாள் அவர் குடும்பத்தில் கடைசிப்பிள்ளை. இரண்டு அண்ணனும் ஒரு அக்காவும் உண்டு. அப்போது யாரும் ஒரு வேளைச் சோறு கூட போடவில்லையாம். அவருடைய மூத்த அண்ணன் ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கி ஒத்தையிலேயே உரித்துத் தின்று விட்டு தொலியை அய்யம் பெருமாளின் மீது வீசுவாராம். அதை மறக்கவேயில்லை. அய்யம்பெருமாள். அய்யம்பெருமாளின் பேரில் யாருக்கும் எந்த நல்லபிப்பிராயமும் கிடையாது. நிறையப் பேர் அவருக்கு ஏதாவது கஷ்டம் வராதா என்று ஏங்கினார்கள். ஆனால் எல்லோருக்கும் சவால் விட்டு ஒத்தைக் கோவணம் அதற்கு மேல் ஒரு துண்டோடு ஊர் பூராவும் அலைவார். வேட்டி சட்டையோடு பார்க்கிற நாட்கள் அபூர்வம். அப்படி அவரைப் பார்த்தேயிராத ஆட்களும் தெருவில் இருந்தார்கள். கடுகடுப்பான அவரது சுபாவம் எல்லோரையும் விலகச் செய்தது. சில சமயங்களில் யாரோ சொன்னதுக்கு பதில் சொல்வது போல,

“ஆமாய்யா… நான் ஏமாத்தறேன்… பால்ல தண்ணி ஊத்தறேன்… யார் இல்லன்னா… முடிஞ்சா நீயும் செய்யி… இந்தக் காலத்திலே பொழைக்கணும்னா இதுதான் வழி. இல்லன்னா கையில சட்டி ஏந்த வேண்டியது தான்…”

இப்படி இறுமாப்புடன் பேசிக்கொண்டிருந்த அய்யம்பெருமாள் கஷ்டப்படும் காலமும் காற்றைப் போல கடுகி வந்தது. அப்போது நாங்கள் வளர்ந்து கொண்டிருந்தோம். எதிலும் பட்டுக் கொள்ளாமல் எங்கள் பிரத்யேகமான உலகத்தின் கனவுகளுக்கு நாங்கள் விரும்பிய வர்ணம் பூசிக்கொண்டிருந்த காலம்.

“அதுக்கப்புறம் என்னாச்சி… எங்க அப்பாவுக்கு டிரான்ஸ்பர் வந்து நாங்க கடையநல்லூர் போயிட்டம்ல… அந்த அம்மா ஓடிப்போயிருச்சாம்ல…”

நண்பர் கேட்டார். பூங்காவின் வானொலியில் ஏழேகால் செய்தி கேட்டது. வி.பி.சிங் ராஜினாமா வாபஸ் என்று சொல்லியதை மட்டும் கேட்டு விட்டுத்திரும்பினேன்.

“ஆமா… டீக்கடைக்கு பால் எடுக்கவரும்மாட சாமி கூடஓடிப்போயிருச்சி…”

“அது மனசில என்ன நடந்ததோ…”

“அதோடயே அய்யம்பெருமாள் ஆள் தளர்ந்துட்டாருன்னு சொல்லலாம்… அந்த அம்மா போகும் போது இருந்த நகை, பணம் எல்லாத்தையும் எடுத்துட்டுப் போனதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனா நிறைய பேருக்கு அய்யம்பெருமாளுக்கு இப்படி நடந்ததில சந்தோஷம்…”

“அது எப்பவும் உண்டானது தான்… அப்புறம்…”

“அஞ்சாறு மாசமிருக்கும் இருந்த மாடுகளையும், வீட்டையும் நெலத்தையும் வித்துட்டு திடீர்னு அவரும் காணாமப் போயிட்டாரு…”

பூங்காவிலிருந்து கூட்டம் லேசாய் வடிய ஆரம்பித்தது. நட்சத்திரங்கள் எக்கச்சக்கமாய் பூத்திருந்தன. மெலிதான காற்று கேசத்தைக் கலைத்தது. நண்பர் அந்தச் சூழ்நிலையை இடைஞ்சல் செய்யக்கூடாத மாதிரி கொஞ்சம் நெருங்கிக்கேட்டார்.

“அப்புறம் நீங்க பாக்கலியா…”

“பார்த்தேன்…” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்த என் கண்களுக்கு பிரகாசமாய் ஒரு எரிகல் எரிந்து வானத்திலிருந்து கீழே சரிந்தது.

“அங்கே பாருங்க…” நண்பர் நிமிர்வதற்குள் புள்ளியாகி மறைந்துவிட்டது. நண்பர் ஏமாற்றத்தடன் என் முகத்தைப பார்த்தார்.

அய்யம்பெருமாளை பல வருடங்கள் கழித்து நான் பார்த்தேன். அப்பொழுது எனக்குக் கல்யாணமான புதுசு. எனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ மற்றவரின் சுதந்திரத்தில் அநாவசியமாய் குறுக்கிடக் கூடாதென்ற என் ஜனநாயகப் பண்புப்படி மனைவியின் வற்புறுத்தலுக்காய் கோயிலுக்குத் துணையாய் போகும்படி ஆனது. எப்போதும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நழுவிவிடும் நான் அன்று எக்குத்தப்பாய் மாட்டிக்கொண்டதும் ஒரு வகைக்கு நல்லது தான். இல்லாவிட்டால் அய்யம்பெருமாளை மறுபடி சந்திக்க நேர்ந்திருக்காது. தெப்பக்குளம் பிள்ளையார் கோயிலில் தேங்காய் விடலை போட வேண்டும் என்ற என் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க, தேங்காயை வாங்கி கோயில் படிக்கட்டில் ஓங்கி அறையப்போன போது அந்த முகத்தைப் பார்த்தேன். விடலைத் தேங்காய் பொறுக்குகிற சிறுவர்களுக்கு மத்தியில் அய்யம்பெருமாளும் விடலை பொறுக்க தயாராய் இருந்தார். ஒரு கணம் என் கை நடுங்கியது. எப்படியோ தேங்காயை வீசி விட்டுத்திரும்பினேன். சிதறி ஓடிய தேங்காய்ச் சில்லுகளைப் பொறுக்குவதில் அவருக்கும் பையன்களுக்கும் சண்டை. அவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். பையன்கள் அதைச் சட்டை செய்யாமல் அவர் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். அய்யம்பெருமாள் ஆள் தளர்ந்து கண்களில் பித்துப்பிடித்தது போலிருந்தார்.

அதற்கப்புறம் அய்யம்பெருமாளைப் பார்க்கிற சந்தர்ப்பம் நேரவில்லை. கடைசியில் இன்று பிணமாகப் பார்க்கும்படி ஆகிவிட்டது. நாங்கள் இருவரும் ஒரேமாதிரி யோசித்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ ஒன்று போல் நீண்ட பெரு மூச்சுவிட்டோம்! நண்பர் மெல்லிய கசப்பான குரலில்,

“என்ன வாழ்க்கை… என்ன உறவுகள்…”

நான் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. மெல்ல வாயைத் திறந்து வார்த்தைகளை அளந்தேன்.

“மனிதன் வாழும் போது எவ்வளவோ ஆசைகளோடு வாழ்றான்… ஆனால், வாழ்க்கையோ… அவனறியாமல் அவன் பிடரியில் கை வைத்தோ… காலை இடறிவிடும் கல்லாகவோ இருந்து தலை குப்புற தள்ளிவிடுகிறது. விழுந்து எழ முடியாம பைத்தியம் பிடித்தலைகிறான்… அய்யம்பெருமாளை பொறுத்த வரையில் அவர் செஞ்சதுக்கு அநுபவிச்சிட்டாரு…”

“எனக்கு இந்த வேதாந்தத்திலே நம்பிக்கை கிடையாது… நாம ஒவ்வொருத்தரும் வாழ்க்கை தரும் ஏமாற்றங்களை ஒவ்வொரு விதமா எதிர்கொள்கிறோம். அய்யம்பெருமாளின் எதிர்கொள்ளல் கொஞ்சம் கடினமானது என்று வேணாசொல்லலாம்…”

“சமூகமும், மனிதர்களும் பாதிக்கப்படறாங்களே…”

“உண்மை தான். உணர்வுகளின் தீவிரகதியில் எல்லா மனுசங்களுமே பைத்தியமாகி விடுகிறார்கள்… சமயங்களில் நமக்கே அந்த மாதிரி மனோநிலை வருகிறதே. பழிக்குப் பழி, ஆத்திரம், கோபம், ஏன் பணம் சம்பாதிக்கணும்கிற வெறி…”

“அப்படின்னா இந்த வாழ்க்கை… சமூகம்… உறவுகள்… இதுக்கெல்லாம் என்ன அர்த்தமிருக்கு… அய்யம்பெருமாள் என்கிற மனிதர் அநாதையாய் செத்துப்போனார்… அவர் எதற்காக பிறந்தார்… அவருக்கும் சமூகத்திற்கும் என்ன சம்பந்தம். உண்மையில் அவர் வாழ்ந்தாரா எதற்காக வாழ்ந்தார்… ஏன் வாழ்ந்தார்?”

நண்பர் எதனாலோ திடுக்கிட்டவர் போல பேசுவதை நிறுத்திவிட்டார். மௌனம் எங்கள் மீது கவிந்தது. இருவரும் ஏதேதோ யோசனைகளில் இருந்த மாதிரி இருந்தோம். ஏனோ துக்கமாயிருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. தூரத்தில் பூங்காவின் காவலாளி வந்து கொண்டிருந்தான். நாங்கள் இருவரும் எழுந்து மேற்கொண்டு அதிகம் பேசாமலேயே பிரிந்துவிட்டோம்.

இரண்டு நாளாய் நான் நண்பரைப் பார்க்கவில்லை. மூன்றாவது நாள் அவரே வீடுதேடி வந்துவிட்டார். அவர் வீடு தேடி வந்தால் ஏதாவது விசேஷம் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அது அய்யம்பெருமாள் சம்பந்தப்பட்டது என்று கடுகளவு கூட நினைக்கவில்லை. ரெண்டு பேரும் வீட்டில் காப்பி குடித்துவிட்டு வெளியே கிளம்பினோம். வீட்டை விட்டு வெளியேவந்ததும்,

“என்ன விசேஷம்”என்றேன்.

நண்பர் தலையாட்டிக் கொண்டு பேசாமல் வந்தார். அவர் பரபரப்படைந்திருந்தது முகத்தில் தெரிந்தது. ஒரு சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தார். நான் பொறுமையிழந்து மறுபடியும்,

“என்ன…”

“அய்யம்பெருமாள் கதையில விடுபட்ட ஒரு விஷயம்.” நான் ஆவலுடன் காத்திருந்தேன். நண்பர் சாரதி சிகரெட்டை மறுபடியும் ஆழ்ந்து இழுத்தார்.

கையில் இருந்த மாடுகளையும், சொத்தையும் வித்து மனைவியைத் தேடி ஊர்ஊராக அலைந்தார் அய்யம்பெருமாள். ஊண் உறக்கம் மறந்து திரிந்தார். அங்கே இங்கே என்று துப்புச் சொன்ன இடத்துக்கெல்லாம் போனார். நெஞ்சில் வெறுப்பும் ஆங்காரமும் தீயாய்ப்பற்றியெரிந்து ரத்தத்தைக் கருகச் செய்திருந்தது. நாளாக நாளாக ஆக்ரோஷம் அவிந்தது. ஆனால், தேடு தலைவிடவில்லை. அவர் எப்படியாவது அவளைப் பார்க்க வேண்டும். பார்த்து ஒரே ஒரு கேள்வி. ஏன்? இதுதான் இப்போது அவர் விருப்பப்பட்டது. வருஷங்களின் ஓட்டம் மனதைத் தளரச் செய்த நேரத்தில் மறுபடியும் கமுதி பக்கமாய் யாரோ பார்த்ததாகச் சொல்ல, பஸ் ஏறினார். கமுதிக்குப்பக்கத்தில் ஒரு கிராமத்தில் கண்டுபிடித்தார். மாடசாமி கிளப்புக்கடை வைத்து நடத்திக்கொண்டிருந்தான். இரண்டு பிள்ளைகள், அய்யம்பெருமாள் நேரே வீட்டுக்குப் போனார். அந்த அம்மாள் அவரைப் பார்க்கக்கூட பிரியப்படவில்லை. அய்யம்பெருமாள் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். மூத்த பெண்ணிடம் அம்புட்டு நகைகளையும் எடுத்துக் கொடுத்துவிட்டது. மூத்த பெண் அம்மாவைப் போலிருந்தது. முழித்துக்கொண்டே அம்மா சொன்னபடி அத்தனையையும் அய்யம்பெருமாளின் முன்னால் கொண்டு வந்து வைத்தது. ஒரு கணம் அதை வெறித்துப் பார்த்தவர் அப்படியே திரும்ப அந்தப் பெண்ணின் கையிலேயே கொடுத்து தலையைத் தடவி ஆசீர்வதித்துவிட்டு விழுந்தார். அப்போது தான் திண்ணைக்கு அருகிலிருந்த ஜன்னலிலிருந்து விசும்பல் சத்தம் கேட்டது. உடனே அவருடைய உடல் நடுங்கியது. அதைத் தாங்க முடியாமல் வேகமாக அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார். அதற்கப்புறம் தான் ஆள் கோட்டி பிடித்த மாதிரி ஆகிவிட்டார்.

எனக்கு உடம்பு புளகாங்கிதமடைந்தது. நண்பர் அர்த்த பாவத்துடன் அமைதியாக இருந்தார்.

“அய்யம்பெருமாள் வாழ்ந்திருக்கிறார். அதுவும் ஒரு உன்னத கணத்தில் வாழ்ந்திருக்கிறார். மனிதனிடம் இன்னமும் அன்பு, பெருங்கருணை, பெருந்தன்மை அழியவில்லை…”

உடனே நான்,

“உண்மையில் மனிதன் மகத்தானவன்.”

சிகரெட்டைக் கீழே போட்டு அணைத்துக் கொண்டே சாரதி,

“அவன் அசிங்கங்களையும் சேர்த்தே…” என்று முடித்தார். குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. எங்கள் இருவரின் மனசிலும் அய்யம்பெருமாளின் ஆகிருதி நிறைந்திருந்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அய்யம்பெருமாள் என்றொருமனிதர்”

  1. sakthi bahadur

    அய்யம்பெருமாள் என்ற மனிதரின் கதை வழியே மனிதத்தை சொல்லித் தரும் அருமையான கதை கதை என்பதைவிட வாழ்க்கைக்கான பாடம் என்றே சொல்லலாம். வாழ்த்துக்கள் தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: