அம்பலக்கல்

4.3
(24)

வாரத்துக்கும் நடக்கும் மொத்தப் பிரச்சனைகளையும் ஞாயிற்றுக்கிழமை மந்தையில் உட்கார்ந்து பேசி தீர்வு காண்பது ரொம்ப காலத்து வழக்கம். இப்போது இந்த பஞ்சாயத்திற்கு மவுசு குறைந்து விட்டது.பெரும்பாலான மன்றாடல்கள் இன்றைக்கு நீதிமன்றத்தில் சரணடைந்து கிடக்கின்றன. உட்கார்ந்து ஒரு டீயைக் குடித்துவிட்டு செய்தித் தாள்களின் அத்தனை எழுத்துகளையும் மண்னம் செய்வது மாதிரி ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்து பலருக்கு பிடித்தமான வாய் பார்ப்புப் பொழுதுபோக்காகும்.

கழுதைப் பாறைப்பட்டி மந்தை ஆயிரமாயிரம் பஞ்சாயத்துக்களைப் பார்த்தது. வேம்பின் அடர்ந்த நிழல். எதிரே மந்தையம்மன் கோவில். வீடுகளின் பின்பக்க கூரை ஒட்டு நிழலில் பெண்களும் மந்தையோரம் நிறுத்தப்பட்டிற்கும் மாட்டு வண்டியில் பீடி பிடிப்போர்களும் பஞ்சாயத்துப் பேசுவோரின் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்திற்குள் சிறார்கள் வேப்பம்பழத்தைப் பிதுக்கி விளையாடிக்கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் தவிடன் மகன் பாஸ்கரனும் உட்கார்ந்திருக்கிறான். பாஸ்கரன் காலனிபையன். பஞ்சாயத்தில் தீர்ப்பெழுதும் ஆட்கள் ஊருக்குள் இருப்பவர்கள். காலனி ஆட்கள் கீழ் சாதி எனவும் ஊருக்குள் இருப்பவர்கள் மேல் சாதி எனவும் ஊருக்குள் இருப்பவர்கள் நினைத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

மரத்திலிருந்து உதிர்ந்து காற்றில் மிதந்தபடியே கீழே விழுகின்ற வேப்பம் பூக்களையும் வேப்பஞ்சக்களத்திப் பூக்களையும் ரசித்தபடியே இருந்தான் பாஸ்கரன். காலனிக்காரர்கள் அம்பலக்கல் அமர்ந்து தீர்வு சொல்ல அனுமதிக்கப்படாதவர்கள் எனினும் அம்பலக்கல் நாற்காலியில் உட்கார்ந்து அவர்களைப்போன்று கைநீட்டி கைநீட்டி பேச வேண்டும் என்பது பாஸ்கரனின் கனவாக இருந்தது. வீட்டில் வசவுகளைப் பெற்றுக்கொண்டும் கூட அவன் பஞ்சாயத்துக்களை தவராமல் வேடிக்கை பார்த்து வந்தான்.

தனக்கு அருகாமையில் நின்றிருந்த தன் சித்தப்பனிடமிருந்து ஒரு அழுக்குத் துண்டை வாங்கி உருண்டையாக சுருட்டி பாதி குனிந்தும் குனியாமலும் தெனாவெட்டாக முறி வைத்து எழுந்து, “பஞ்சாயத்து என்னா சொல்லுதோ அதுக்கு கட்டுப்படுறேனப்பா” என்றபடி இடது காலை ஊன்றி வலது காலை ஆட்டுவதற்குத் தோதாக லூசாக வைத்துக்கொண்டு நின்றான் பூம்பாண்டி. அம்பலக் கல்லில் அமர்ந்திருக்கும் பெரிய மனிதர்கள் எனும் நீதிபதிகளின் எதிர் வலத்தில் விருமாயி கண்ணீர் வழிந்தபடியே உட்கார்ந்திருந்தாள். வயது முப்பதிருக்கும். அவளின் கணவன் கையில் வைத்திருந்த குற்றாலத்துண்டை சுருட்டி வைத்தபடி, “மந்தையில் கும்பிட்டு விழுகுறதுல எந்த தவறுமில்ல, அதே சமையம் இத நல்லபடியா கேட்டுக்குடுக்கணும்… தறுனா அவன குத்திப்புட்டு ஜெயிலுக்குப் போயிருவேன்.. இல்லன்டா நாங்க குடும்பத்தோட அரளிக்காயத்தின்டு செத்துப்போவம்” என நா தளுதளுக்க சொல்லி குறிவைத்து கும்பிட்டு விழுந்தான்.

“என்னாப்பா ஏய் கிறுக்கன் மாதிரி பேசிக்கிருக்கான் வேடிக்க பாத்துக்கிருக்கீங்க, பூம்பாண்டிக்கு என்னா சொல்லப்போறைங்கன்டு ஆவலா வெளிக்குப் போயிட்டு கழுவாமக்கூட வந்து நின்டுக்கிருக்கேன். நீங்க என்னடான்டா சாத்தா கோயில் பக்கத்திலருந்து சவனம் சொன்னாத்தான் பேச ஆரம்பிப்பீங்க போலருக்கு” என்றான் ஒரு அவசரப்புத்திக்காரன். “ரெகுலரா கழுவுறவன் மாதிரியே பேசுறியே மாப்புள” என ஒருவன் அவனுக்கு கட்டையைக் கொடுக்க “ஏய் நீயி ஓம் பொச்சப் பொத்துடா கொஞ்சம் வளந்துருந்தா ஒனக்கு அமிதாப்பச்சன்டு நெனப்பா” என கடுகடுக்க.. “ஏப்பா கொஞ்சம் பேசாம இருங்க… ஊருல நாங்க பெரிய மனுசைங்களா? நீங்க பெரிய மனுசைங்களா?” “நீ பேசு பெருசு எங்க பேச்ச மைக் டெஸ்ட் பண்ணுனது மாதிரிவச்சுக்க” என்றான் அமிதாப்பச்சன் நினைவில் இருந்ததாகக் கூறப்பட்டவன். கூட்டத்திற்குள்ளிருந்து “அடி கறுப்பு நெறத்தழகி… ஒதட்டுச்செவப்பழகி… சில்லரையா செதறிட்டேன்டி..” என்ற கொம்பன் படப்பாடல் கொரியன் மொபைல் செட்டிலிருந்து ஒலிக்க, ஒரு எளந்தாரிப்பயல் அதை ஆன் செய்து தலையை கவுட்டுக்குள் வளைத்து நசுக்கி நசுக்கிப் பேசிக்கொண்டிருந்தான்.

ஒரு கெட்டவார்த்தையில் தனது வசனத்தை துவங்கிய புருவம் நரைத்த பெரியவர் “சாதிகெட்ட வக்காளி… அரிப்பெடுத்தா எங்கையாச்சும் செவருகிவரப் பாத்து ஒரச வேண்டியதான, அதுக்காக கல்யாணமான பிள்ளகிட்டயா வம்பிழுக்கிறது? ஊருக்குள்ள மழ எப்படிறா பேயும் மடப்பயலே” என முடித்தார். “செத்த பொறப்பாய்… நா பேச வேணாமா?” தீர்ப்பாளர் குறுக்கிட இப்போது எல்லோரும் காதுகளை அவருக்கு நீட்டினர்.

“நீ ஏன்டா கல்யாணமானவ வீட்டுக்குள்ள நொழஞ்ச பூம்பாண்டி, ஒனக்கு வேற வீடு கெடைக்கலையா?” கறுப்புக் கண்ணாடி இறக்கி முழி ரெண்டையும் வெளித்தள்ளியபடி கேட்க, பூம்பாண்டி நெளிந்தான், விருமாயி வயிற்றெரிச்சலில் உட்கார்ந்திருந்தாள். தண்டட்டி போட்ட ரஞ்சிதம் கிழவி மூஞ்சியை ஒருடைப்பாக வைத்து, “ஒரு சொளகு நெறையா உமியக் குடுத்தா தூக்கமுடியாத கெழடுக்குப் பேச்சப் பாரு பேச்ச… எளந்தாரிப் பயலுக்கு ஒரு புத்தி மதிய சொல்லுவான்டு பாத்தா வேற வீடு கெடைக்கலையான்டு கேள்வி வேற” எனத் திட்டினாள். “ஏய் பஞ்சாயத்துல பொம்பளைக்கு என்னலா வேல” என நடுத்தர வயதாள் சிம்பினான். “படுக்குறதுக்கு பொம்பள வேணும்.. பஞ்சாயத்துக்கு மட்டும் வேணாமுன்டா என்னடா அர்த்தம்? கீழ மசுரு மொளச்சுட்டாப்புல பெரியமனுசனாகிருவியா? பொம்பள கிம்பளன்டு பேசிக்கிட்டுத் திரிஞ்சன்டு வச்சுக்க பண்ணருவாள வச்சு ஒட்ட அறுத்துப்புருவேன் பாத்துக்க..” என நறுக்கென்று கேட்டாள் ரஞ்சிதம் கிழவி. கிழவியின் பேச்சை நேர் நின்று எதிர்க்க முடியாத ஆண்கள் சாடை மாடையாய்ப் பேசி கச கசக்க “ஏன்டா ஏய் பஞ்சாயத்துப் பேச வந்திருக்கமா இல்ல வாத்தியாரு தருசுல மாடு மேய்க்க வந்திருக்கமா?” காரியக்காரப் பெருசின்கத்தலில் கூட்டம் அமைதியானது.

“ஏன்டா பூம்பாண்டி நீ செஞ்சது ஒனக்கே நல்லா இருக்கா?” “குடி போதையில் தெரியாம போச்சு பெரியப்பா.. அப்பறமும் கையப்புடிச்சு இழுத்தேனே தவிர ஊரு நெனைக்கிற மாதிரி தப்புத்தண்டா ஒண்ணும் பண்ணல் பெரியப்பா” “எடு செருப்ப.. குடி போதையில் கண்ணு தெரியாம கழுத மேல் ஏறிருவியா?” பூம்பாண்டி திருதிருவென முழித்தான். பஞ்சாயத்திற்கு தாமதமாய் வந்த அரைக்காரியக்காரர் ஒருவர் நெருக்கடியிலும் அம்பலக்கல்லில் செருகிக்கொண்டார். ஒருவழியாய் வாதமும் பிரதிவாதமும் ஆரம்பித்தது. பஞ்சாயத்துப் பெரியவர் சட்டையில் பட்ட காக்கை எச்சத்தை ஒரு பழுத்த வேப்ப இலைகொண்டு துடைத்து முடிப்பதற்குள் விவாதங்கள் முடிந்திருந்தன. இனி தீர்வு சொல்கிற நேரம்… பாஸ்கரன் ஆவலோடு காத்திருந்தான். நன்றாக யோசித்து முடிவெடுத்தவர் போல் பெரியவர், “டேய் பொன்ராம் மகனே.., கும்பிட்டு விழுந்து ஐயாயிரம் ரூபாயக் கட்டிட்டுக் கெழம்புடா.” எனச் சொல்ல, “தங்கும் தாங்காது பெரியப்பா” என விழுந்து வணங்கினான். “சரி போது ரெண்டாயிரத்தக் கட்டிட்டுப் போ” “தாங்கும் தாங்காது பெரியப்பா” “ஆயிரம் தாங்குமா?” இதற்கு மட்டுமல்ல “நூறு தாங்குமா?” என்ற தற்கும் தாங்காதென்றே விழுந்து வணங்க வாயில் அதக்கியிருந்த வெத்தலையை ஓரத்தில் துப்பிவிட்டு “டேய் ஒண்ணேகால் ரூபாய மந்தையம்மாளுக்கு காணிக்க முடிஞ்சு போட்டுட்டு எண்ணெய வாங்கி ஊத்திர்றா” எனக் கூறிவிட்டு பெருந்தீர்ப்பை எழுதிவிட்டு பேனா நிப்பை உடைத்துவிட்டவர் போல் முகத்தை வைத்துக் கொண்டு சனங்களைப் பார்க்க, “ஓந்தீர்ப்புல நாயவிட்டுத்தான்டா குசுவிட சொல்லணும்” என்று வெடுக்கென்று எழுந்து சென்றுவிட்டாள் கிழவி. “யப்பா அடுத்த பஞ்சாயத்து யாருதப்பா.?” இந்த கேள்விக்கெல்லாம் அடுத்த முறி வைத்தலும் விவாதமும் துவங்கியது.

மறு நாள் திங்களன்று சாத்தங்குடி கழுவத்தேவர் கடைக்குப் போயிவிட்டு, மந்தை வழியாகத் திரும்பிய பாஸ்கரன் அம்பலக்கல் மேல் கண்களைப் போட்டு எடுத்துச் சென்றான். மந்தை நேற்று போல் இல்லை வெறிச்சோடிக் கிடந்தது. இருவர் மட்டும் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்துக்களில் எளிய மனிதர்கள் தொடர்ந்து வெட்டப்பட்டுக் கொண்டிருந்தனர். ஒருகாலத்தில் ஞாயம் பேசப்பட்ட மந்தை இன்று பலிகாடாக மாறிப்போனது. இது இந்த ஊரில் மட்டுமல்ல, கிராமங்கள் தோறும் வலுத்தவன் கைகளே ஓங்கியிருந்தன. ஆடுபுலி ஆட்டம் என்பது புலிகளுக்கு சாதகமாக பதினஞ்சாம்புலி ஆட்டம் என்றும் இந்தப் பகுதிகளில் சொல்லப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஆடுகளத்தில் ஆடுகள் வெட்டப்படுவது மட்டும் நடப்பதில்லை. திட்டமிடுதலோடும் ஒற்று மையோடும் எதிர்கொண்டால், மூன்று புலிகளையும் பதினைந்து ஆடுகள் சேர்ந்து நடக்க பாதைகளற்று ஸ்தம்பிக்கச் செய்ய முடியும் என்பதற்கான படிப்பினையை இந்த விளையாட்டு நமக்குக ற்பிக்கிறது.

எல்லோருக்குள்ளும் சாதி இருக்கிறது. அது காமக்கிறுக்கென ரத்தத்தில் ஊறித் திளைத்திருக்கிறது. ஓனானை எங்கு பார்த்தாலும் கல்லால் அடிக்கவே தோணுகிற சிறுவர்களுக்கான மனசு மாதிரியே காலனி ஆட்கள் மீது ஊருக்குள் இருப்பவர்களுக்குத் தோன்றுகிறது. இங்கே செறுக்குடன் அலையும் யானைக்கும் நோஞ்சான் பூனைக்குமான இடைவெளியில் சாதித்திமிர் நீர்கோர்த்துத் திரிகிறது. பஞ்சாயத்தில் காரியத்தனம் செய்பவரின் பிள்ளைகள் அவர்களின் மடியிலும் அம்பலக்கல்லிலும் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறபோதெல்லாம் பாஸ்கரனுக்கும் ஆசை வரும். ஆனால் அம்பலக்கல்லில் காலனி ஆட்கள் உட்கார்ந்தால் தீட்டு என்று சொல்லி வைத்திருந்தார்கள்.

ஒரு நாள் தான் நீண்ட நாள் ஆசைகொண்டிருந்த ஒரு பெண்ணை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் முன்பொரு பஞ்சாயத்தில் வந்தபோது, அந்தப் பெண்ணை அவனுக்கே கட்டிவைத்து அவனுக்கு உச்சபச்ச தண்டனையை வழங்கிவிட்டதாகவும் அதன்மூலம் அவளுக்கு தாலி பாக்கியம் கிடைத்துவிட்டதாகவும் ஊர் கொண்டாடியது. இது இரவில் ஓடு பிரித்து இறங்கிய திருடனுக்கு விடிகாலை பஞ்சாயத்தில் அந்த வீட்டையே பரிசாகக் கொடுத்தது மாதிரித்தான் என்பது சிறுவன் பாஸ்கரனுக்கும் தெரிந்ததே.

கடலை, துவரை, தட்டைப்பயறு, பாசிப்பயறு கல்பித்தான், காணை, உளுந்து, கம்பு சோளம் போன்ற பயிர் பச்சைகளின் விளைச்சலில் இந்தப் பகுதியில் க.பாறைப்பட்டியோடு போட்டி போட வேறு ஊரால் முடியாது. கோவில் கலசம், நிலைப்படி மற்றும் முகூர்த்தக்கால் ஆகியவற்றில் நவதானியம் முடிந்துகட்ட இந்த ஊருக்குத்தான் வருவார்கள். அப்படியான மண்ணில் தரிசு உழவிலிருந்து விதைப்பது களையெடுப்பது, உரமிடுவது விளைந்து அறுவடை செய்வது வரைக்குமான வேலைகளில் காலனி ஆட்கள் இல்லாமல் ஒரு தானியமும் வீடுவந்து சேராது. அப்படியிருந்தும் கடலை ஆய்ந்த ஒரு நாளில் பாஸ்கரனின் அம்மா சோறு கொண்டுவந்த தூக்குச்சட்டியில் கால்படி கடலையைப் போட்டு மூடி பாஸ்கரனிடம் கொடுத்துவிட அதை தோட்டக்காரர் மூக்கத்தேவர் ரிசோதனை செய்து கடலையை எடுத்து கொண்டதோடு பாஸ்கரனின் அம்மாவை சாதி சொல்லி திட்டி வெறும் தூக்குச் சட்டியைக் கொடுத்தனுப்பிய ஈரமற்ற தனத்தை பாஸ்கரனால் மறக்கமுடிய வில்லை.

அதேபோல்தான் குடிதண்ணீர் விசயத்திலும், காலனியில் வரும் தண்ணீரில்தான் பருப்பு நன்றாக வேகிறதென்று ஊருக்குள் இருப்பவர்கள் வந்து மொய்த்துவிட்டுப்போன பின்தான் காலனி ஆட்கள் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டத்தையெல்லாம் அமல்படுத்தியிருந்தார்கள். அதே நேரத்தில் காலனியில் தண்ணீர் வரவில்லையென்று ஊருக்குள் போயி கெஞ்சும் சனங்களுக்கு சொட்டுத் தண்ணீர்கூட ஈயமாட்டார்கள். அப்படியும் ஒரு குடம் தண்ணீர் கொடுத்தால், கூடவே ரெண்டு குடம் கெட்ட வார்த்தைகளும் சேர்த்து மூன்று குடமாய்த்தான் கொடுப்பார்கள்.

வாத்தியார் தரிசில் ஆடு மாடுகள் மேயப்பத்தி விட்டு சிங்கம் போடும்போதுகூட காலனிக்கார்கள் ஜெயித்தால் ஆட்டத்தைக் கலைத்துவிடுவதும் ஓடித்தவ்வுதல், கபடி மற்றும் எருக்குத்தி போன்ற விளையாட்டுக்களில் கூட கள்ளாட்டம் செய்வதேயே தங்களின் கொள்கைகளாய்க்கொண்டு திரிவார்கள். இதன் உச்சமாக நாட்டில் எங்கு சாதிச்சண்டை நடந்தாலும் ஊருக்குள் இருப்பவர்கள் காலனிக்குள் நுழைந்து மோதி விட்டே திரும்பினர்.

நல்லெண்ணெய், புளி, து.பருப்பு கடுகு போன்ற மளிகைச்சாமான்களை சாத்தங்குடி கழுவத்தேவர் கடையில் வாங்கிக் கொண்டு பாஸ்கரன் திரும்பிக்கொண்டிருந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மந்தையில் எப்போதும்போல் கூட்டம் இருந்தது. வீட்டை மறந்துவிட்டு சப்பட்டைபோட்டு உட்கர்ந்து வாய் பார்த்தான். “பத்து வெரல்ல வேல பாத்து அஞ்சு வெரல்ல சோறு திங்கிறதுக்குத் துப்புக்கெட்ட ஈனப்பயலுக்கு ஏம் புருசந்தான் கெடச்சானா? நா பொம்பளைக்குப் பொம்பள ஆம்பளைக்கு ஆம்பள” இது மாரியப்பனின் சம்சாரம், “வெக்கமில்லாம் நாக்கத் தூக்கிப்போட்டுப் பேசுறியே… விடிஞ்சு எந்திரிச்சதுமே சோத்துக்கு ஓ வீட்டுக்கா வந்து நிக்கிறோம்?” இது மாரியப்பனின் தம்பி சம்சாரம். வழக்கம்போல் ஒரு பல் துலக்கா த பயல், “பஞ்சாயத்துல பொம்பளைக வாயத்தொறக்கக் கூடாதுன்டு எத்தன தடவ சொல்லுறது ஒங்களுக்கு?” என சத்தமிட “வாயத்தொறந்து பேசாம வெளக்கமாத்த எடுத்துக்கிட்டாடா பேச முடியும்” என ரஞ்சிதம் கிழவி பீயைப் பார்ப்பதுபோல் அவனை அறுவறுப்புடன் பார்த்துப் பேசினாள். பிறகு இரு தரப்பினரும் முறிவைக்க மூத்த பங்காளி ஒருவர் முறிகளை எடுத்துவைக்க பஞ் சாயத்து சூடு பிடித்தது.

தகப்பன் சரிபாதியாகப் பிரித்துவிட்ட வீட்டடி நிலத்தில் தம்பிகாரன் பங்கில் ஒரு புளியங்குட்டி சேர்த்து இருந்து போனது தான் அண்ணன் தம்பிக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்குக்காரணம் அண்ணங்காரனுக்குக் கொஞ்சம் காசைக் கொடுத்து சரி செய்துவிட தம்பிகாரன் எவ்வளவோ முயற்சி செய்தும், “எதுக்கு வீண் பிரச்சன என்னைக்கு அண்ணந்தம்பிக்குள்ள ஒரு கழுத சண்டை இழுத்துவிட்டுச்சோ அந்த சனியன் சும்மா விட்டுட்டு ஒக்காரணுமா? புளியங்குட்டிய வெட்டி எறிஞ்சிட்டு பிரச்சனைய முடிச்சிட்டுப் போங்கடா” என பெரியவர் தீர்ப்பை முடித்தார். அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த பாஸ்கரனின் பின் கழுத்தில் வியர்வை, அழுக்கு கலந்து முதுகுத்தண்டு வழியாக ஒழுக, நிறைவற்ற மனதுடன் மண்தரையில் ஊன்றியிருந்த தன் இடது கையை எடுத்து பதிந்து கிடந்த சிறு கற்களை வலது கையால் உதிர்த்தபடி எழுந்தான்.

பல நாள் இரவுகளில் பஞ்சாயத்தில் வழங்கப்படாத பல மாற்றுத் தீர்வுகளை தவிடன் தன் மகன் பாஸ்கரனிடம் சொல்லியிருக்கிறார். அழுக்கு வேட்டி கட்டி முழங்கையில் துண்டு சுமக்கும் கூலித் தொழிலாளியான தனது அப்பனுக்குத் தெரிந்த ஞாயம் கூட வெள்ளைச் சட்டையணிந்து கை நீட்டி கை நீட்டி பேசும் முதலாளிமார்களுக்கு இல்லையே என்று நினைத்துப் பார்த்த பாஸ்கரன் காலனி ஆட்களால் மந்தை ஏறி பேச முடியவில்லையே என கவலையும் கொண்டான். கீழ் சாதி மேல் சாதி என்ற முகங்களை எப்படி உருவாக்கினார்கள். இது அழிக்க முடியாததா? அழிக்கக் கூடாததா? என்ற விபரம் கூட தெரியாதவனாகக் குழம்பினான்.

தவிடன் ஒருகிலோ மாட்டுக்கறியை செக்கனூரணியில் வாங்கிக்கொண்டு வர கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தயாராகி சாப்பிட்டார்கள். தவிடன் திண்ணையில் கண்ணசந்தார். தவிடன் மனைவி பாஸ்கரனிடம் உலைசட்டியைக் கொடுத்து “நம்ம குழாயில் காலயிலருந்தே தண்ணி வரலப்பா, ஊருக்குள்ள இருக்குற குழாய்க்கு நாபோனாயாரும் தரமாட்டாக. நீ போயி ஒரு சட்டி தண்ணி தூக்கிக்கிட்டு வாப்பா மழ மேகமா இருக்கு.” எனச் சொல்ல உலைச்சட்டியை எடுத்துக்கொண்டு தெருவில் நடந்தான். மேற்கு வெயில் ஏதோ அவன் கன்னத்தில் எழுத முயற்சிக்க மோடம் அதை அழித்துக் கொண்டிருந்தது. எப்போதும்போல் பாஸ்கரனின் கண்களில், அம்பலக்கல்லில் மாயாண்டித்தேவர் வெள்ளாடுகள் சத சதவென சாணியைப் போட்டுவிட்டு நகர்ந்தன. சிறு சிறு குட்டிகள் தவாளம் போட்டு குதித்துக்கொண்டிருந்தன. வேப்பமரத்திலிருந்து சின்ன சின்ன புழுக்கள் வெவ்வேறு அளவுகளில் நூல்விட்டு தொங்கிக்கொண்டிருந்தன. பொண்டாட்டிமார்கள் மத்தியானக்கஞ்சிக்கு அழைக்கும் வரை இடத்தை விட்டு அசைவதில்லையென துரைமார்கள் கங்கணம் கட்டி ஆடுபுலி ஆடினர்.

காற்று சற்று வலுத்திருந்தது. ஊருக்குள் இருக்கும் திருகு குழாயில் பொண்டாட்டியை காவு கொடுத்த ஒருவன் பித்தளைப் பானையில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்க, பாஸ்கரன் சட்டியுடன் காத்திருந்து, அவனின் பானை நிறைந்த தருவாயில் “அண்ணே கொஞ்சூண்டு தண்ணி இந்த சட்டியில் ஊத்துங்கண்ணே காலையில் ஒலவைக்கிறதுக்கு” பாஸ்கரனின் வார்த்தைகளை காதில் வாங்குவது அவசியமற்றதெனக் கருதி நிறைந்த பானையைத் தூக்கத் தயாரானான். “ப்ளீஸ்ண்ணே” அழாத குறையாகக் கெஞ்சினான். அவனோ பாஸ்கரனின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியபடி.. “ஒங்களுக்கெல்லாம் வர வர திமிரு கூடிப்போச்சுடா.. ஒரு தடவ சொன்னாத் தெரியாது?” எனச் சொல்லி பாஸ்கரனின் தலையில் ஒரு தட்டுத் தட்ட, பாஸ்கரன் கண்களில் நீர் நிரப்பிக் கிழம்பினான்.

வீடு நோக்கி நடந்தான் பாஸ்கரன். காற்று சுழித்து சுழித்து அடித்தது. ஆடு மாடுகளை காத்தடிக்குப் பயந்து வீட்டிற்கு ஓட்டி வந்தார்கள். அடுப்பெரிப்பதற்காக ஒரு காய்ந்த சீமகருவேலங் கொப்பை விருமாயி இழுத்துச் சென்று கொண்டிருந்தாள். கொடியில் காய்ந்து கொண்டிருந்த அரசாங்க ஆங்கில பள்ளிச் சீருடைகளை தாய்மார்கள் எடுத்து வீட்டிற்குள் சென்றனர்.

எதிர்காற்றில் உடல் கனமிழந்து நடந்து வந்தான் பாஸ்கரன். மந்தை வந்தது. ஒத்த மழைச் சொட்டை பத்தாய்ப் பிரித்தது போ ன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூறல் விழுந்தது. ஆள் அரவமற்ற மந்தையையும் அம்பலக்கல்லையும் ஏக்கத்தோடு பார்த்தான் பாஸ்கரன். நொடிப் பொழுதில் மூளைக்குள் ஏதோ உதித்து, சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அம்பலக்கல்லின் அருகே சென்ற பாஸ்கரன் உலைச்சட்டியை தலையில் கவிழ்த்து முகம் மறைத்துக்கொண்டு அதில் உட்கார்ந்தான். கால்மேல் கால் போட்டான். பிறகு கைகளை நீட்டி நீட்டி ஏதேதோ பேசினான். ஊருக்குள் இருக்கும் ஆட்கள் சிலர் மந்தையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டுதான் இருந்தார்கள். இனி.. காற்று நின்று மழைவலுக்கக்கூடும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

202 thoughts on “அம்பலக்கல்”

 1. செ.ஜனகரத்தினம்

  செ.ஜனகரத்தினம்
  கூதாம்பி கிராமம்
  ஈரோடு மாவட்டம்
  7598329229

  அம்பலக்கல்

  அனைவருமே நாம்எல்லோருமே மனித இனங்கள் அனைவருமே ஒன்றுதான்

  வேலையை வைத்தோ படிப்பை வைத்தோ நீ மேலானவன் நான் கீழானவன் என்று சொல்லிக்க முடியாது ஆனால் அந்த காலத்தில் பஞ்சாயத்து ஊர் பெரியவர்களும் பெரிய சொத்துக்கள் அதிகம் உடையவர்களும் தான்
  அவர்கள் தீர்ப்பு சொன்னாலே ஒரு நம்பிக்கையான தீர்ப்பாகதான் இருக்கும்

  நாட்பட அவைகள் பொருள் லஞ்சமாக கொடுப்பவனுக்கும் தன்னிடம் நெருங்கி பழகுகிற
  மனிதர்களோடும் மரியாதைக்காக அல்லாமல் சமூகத்தில் தனக்கு பெயரும் புகழும் வர குற்றம் செய்தவர்களுக்கு சாதகமாய் தீர்பபு வழங்கி விடுகிறார்கள் இனறைய நிலையில் கோர்ட் ல பரவாயில்லை

  அந்த காலத்தில் தீண்டாமையை நான் நேரில் கண்டுள்ளேன் எஙகள் ஊர்பக்கம் அடி பைப்பில் தண்ணீர் புடிக்கும் போது அவர்கள் சாமி எனக்கு ஒரு குடம் அல்லது தேக்ஸாவில தண்ணீரை ஊற்றுங்கள் என கூறுவார்கள் நான் பைப்பிலேயே பிடியுங்கள் என கூறுவேன் அவர்கள் பிடிக்குமபோது யாரவது வநதால் எனக்கு தான் அதிகமான பேச்சாக இருக்கும்

  இது மாதிரி இச்சிறுகதையில் எனக்கு பிடித்தது இப்போது அனைத்து வேலைகளிலும் அவரகள் ஈடுபட்டு கொண்டு காய்கறி
  பொறிப்பதிலிருந்து நமக்கு உணவாக பயன்படுத்தம் பொருள் எல்லாவற்றிலும் அவர்களின் உழைப்பு தான் மிக மிக அதிகம்

  தீர்ப்புகள் பக்கம் சென்றால் உறவுகளுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களிடம் சன்மானம் வாங்கி பலனடைகிறார்கள் பஞ்சாயத்தில் அவர்கள் சொல்வது தான் நடக்கும் ஏனென்றால் அவர்கள் அதற்காகவே படித்தது போல் இல்லாதவர்களிடம் வழக்கை காரணம் காட்டி பேரம் பேசி
  ஒரு வழியாக அவர்களிடம் பணத்தை பிடுங்கிவிடுகின்றனர்

  இப்போதெல்லாம் பரவாயில்லை
  சட்ட திட்டங்கள் கடுமையாக இருப்பதால் உள்ளூரில் அனைவருக்கும தண்ணீர் வசதி
  வீடு வீடாகவும செய்து அரசு உதவியதால் அதிகமான தீண்டாமை அன்றைய அளவுக்கு இப்போது
  இல்லை

  மிக மிக பாராட்டுகள்

  1. பாஸ்கரனின் ஏக்கம் நியாயமானது. பஞ்சாயத்து என்கின்ற பெயரில் ஒரு பிரிவினருக்கு சாதகமாக தீர்ப்பளிப்பது மற்றவர்களை அசிங்க படுத்துவது, அடிமையாக நடத்துவது மனித குலத்தின் சாபக்கேடு. எத்தனை சட்டங்கள் போட்டாலும், தலைவர்கள் வந்தாலும் சாதி மத வேறுபாடின்றி மக்கள் வாழும் காலம் இன்னும் வரவில்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

   பாஸ்கரன், கிழவி போன்றவர்கள் தங்கள் உரிமையை பெற முயல்வது போல அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாக வாழ்ந்து அவர்களது உரிமைக்காக போராட வேண்டும்.

   லாவண்யா ரவி
   9094045655

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: