அன்புள்ள சித்திக்கு

4.5
(2)

நேற்று விஜயா சித்தியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. நான் தமிழ்நாட்டின் வடகடைசியில் கவர்மெண்ட் வேலைக்குச் சேர்ந்த பிறகு வந்த முதல் கடிதம், அவளுடையது. எப்படியோ விசாரித்து என் விலாசத்திற்கு எழுதியிருக்கிறாள். கடிதத்தில் நாலே வரி. நாலும் என்னைப் பற்றித் தான். அவளைப் பற்றி செம்பா, மாரியம்மாளைப் பற்றி, சித்தப்பாவைப் பற்றி ஏதும் இல்லை. எவ்வளவு நாளாயிற்று சித்தியைப் பார்த்து.

இந்த மாதிரி மழை கொட்டுகிற ஒரு ராத்திரியில் தான் விஜயாசித்தி செம்பாவையும் மாரியம்மாளையும் கூட்டிக்கொண்டு சிவகாசிக்கு பஸ் ஏறினாள். இப்பொழுது செம்பாவும், மாரியம்மாளும் என்னைப் போல வளர்ந்து பெரிய கொமருகளாகயிருப்பார்கள். என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவ்வளவாக என் சித்தியையும், முழுசுமாக என் சித்தப்பாவையும் பிடிக்காது. சித்தப்பா எந்த வேலையிலும் நிரந்தரம் கிடையாது. ஓர் நாள் ஹோட்டலில் சப்ளை செய்து கொண்டிருப்பார். மறுநாள் பலசரக்குக் கடையில் பொட்டலம் கட்டிக் கொண்டிருப்பார். இன்னொரு நாள் சைக்கிள் கடையில் பஞ்சர் பார்த்துக் கொண்டிருப்பார். குடும்பத்தைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. குஷியான ஆள். எல்லாம் விஜயா சித்தி தலையில் தான் விடியும். அவள் ஊருக்கு வெளியே இருந்த ஒரு தீப்பெட்டியா பீசுக்கு பக்கத்தில் குறைந்த வாடகையில் ஒரு வீட்டை அமர்த்தினாள். செம்பாவையும், மாரியம்மாளையும் தீப்பெட்டியாபீசில் தீப்பெட்டிக்கட்டை அடுக்க அனுப்பினாள். காலையில் இட்லி அவித்து தீப்பெட்டியாபீஸ் முன்னால் வியாபாரம் செய்தாள். மீந்த நேரம் அவளும் குறுக்கொடிய உட்கார்ந்தே கட்டை அடுக்கினாள்.

கன்னிப் போயிருந்த சித்தியின் சிவந்த முகத்தில் வலது கண்ணுக்குக் கீழே இருந்த கறுப்பு மரு அவளுக்குத் தனி சாந்தத்தைக் கொடுத்தது. நான் ரொம்பச் சின்னப்பையனாயிருந்த போது சித்தியின் மடியில் உட்கார்ந்துகொண்டு அவள் மருவையே தடவிப் பார்த்துக் கொண்டிருப்பேன். எப்பவாவது சித்தி செம்பாவையும், மாரியம்மாளையும் கூட்டிட்டு என் வீட்டுக்கு வருவாள். அநேகமாக அப்போதெல்லாம் அஞ்சோ, பத்தோ அம்மாவிடம் கேட்பாள். அது நிலைமை ரொம்ப மோசமான பிறகு தான் என்று நினைக்கிறேன். செம்பாவும், மாரியம்மாளும் அம்மா சாப்பாடு வைக்கும் போது “அவக் அவக்”கென்று தின்பார்கள். சித்தியின் முகம் சங்கடப்படும். ரொம்ப வற்புறுத்தினால் தான் அவள் கொஞ்சம் சாப்பிடுவாள். அவள் பணம் கேட்பதற்குள் படுகிற சிரமம் இருக்கிறதே! ஏதேதோ பேசிக் கொண்டிருப்பாள். திடீரென நிறுத்தி பெரு முச்சுவிடுவாள். கேட்டு விட முயற்சிப்பாள். அம்மாவுக்குஒவ்வொருதடவையும்இதுதெரிந்தாலும், தெரியாத மாதிரி மணிக்கணக்கில் சித்தியைப் பற்றி, சித்தாப்பாவைப் பற்றி, சித்தப்பாவைக் கைக்குள் போட முடியாத சித்தியின் ஏமாளித்தனம் பற்றி பேசிக் கொண்டேயிருப்பாள். கடைசியில் சித்தி கேட்ட பிறகு இன்னும் கடுமையாக அறிவுரை சொல்வாள். சித்தி எல்லாவற்றையும் பொறுமையாக கண்ணீர் விட்டபடியே விரலில் அகப்பட்ட துரும்பை தரையில் தேய்த்தபடி கேட்டுக் கொண்டிருப்பாள்.

அப்பா ஆபீஸ் விட்டு வந்ததும் சொல்லுவாள். அதற்கு அப்பாவும்,

“அவ எதுக்கு வந்தா… இப்பிடி ரூவா கொடுத்துப் பழக்கப்படுத்தாதே.’’

“என்ன செய்ய… கழுதக ரெண்டு நாள் சாப்பிடாம வந்து நிக்கிதுக. பாவமாவும் இருக்கு…” அம்மா பெரு மூச்சுவிடுவாள்.

அம்மாவும் நானும் மாதம் ஒரு தடவையாவது சித்தி வீட்டுக்குப் போவோம். எனக்கு சித்தி வீட்டுக்குப் போவது என்றால் ரொம்ப பிரியம். என்னைப் பார்த்ததும் சித்தி அப்படியே நெஞ்சோடு சேர்த்துக் கொள்வாள். அப்பொழுது அவள் சேலையில் இருந்து தீப்பெட்டி மெழுகின் புழுக்கமான வாடையும், கற்பூர வாடையும் கலந்து வரும். எனக்குக் கூச்சமாகவும், பெருமையாகவும் இருக்கும். அப்படியே மடியில் இருத்தி என் தலை முடியை சும்மாவேனும் பிரித்துப் பிரித்து பேன் பார்த்துக் கொண்டிருப்பாள். அநேகமாக செம்பாவும் மாரியம்மாளும் தீப்பெட்டியாபீஸ் போயிருப்பார்கள். அப்படியே அவர்கள் சில சமயம் இருந்தாலும் ஏதும் பேசமாட்டார்கள். விளையாட வர மாட்டார்கள். தீப்பெட்டிக்கட்டை அடுக்கிக் கொண்டேயிருப்பார்கள் வீட்டிலும். செம்பாவாவது என்னை விட வயசு மூப்பு. மாரியம்மாளுக்கு என் வயசு தான். அவளும் கூட பெரியமனுஷி மாதிரி இருப்பாள். ஆனால், அவர்கள் ரெண்டு பேரும் குசு குசுவென்று சினிமாக் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். நான் அருகில் போனால் நிறுத்தி விடுவார்கள். அதனால் சித்தி கூடவே ஒட்டிக்கொள்வேன்.

சித்தி என்னை கூட்டிட்டு பலசரக்குக்கடைக்குப் போய் அங்கிருந்த தண்டியான முஸ்லிம் பாயிடம் கெஞ்சி மன்றாடி அரிசி, பருப்பு, புளி எல்லாம் வாங்கிக் கொண்டு வருவாள். மறக்காமல் எனக்கு ரெண்டு முறுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுப்பாள். என் வீட்டில் அம்மா வைக்கிற குழம்பு, கறிகளைவிட ஒரு காயும் தொட்டுக்க இல்லாமல் விஜயா சித்தி வைக்கிற குழம்பு அப்படியே மணக்கும்! நான் அம்மா அதட்டுவதன் விவரம் புரியாமல் ரெண்டு மூன்று முறை வாங்கிச் சாப்பிடுவேன்.

அப்புறம் புறப்படுகிற சமயம் அம்மா பணத்தைக் கேட்பாள். சித்தி ஏதோ சமாதானம் சொல்லுவாள். நான் சித்தப்பாவை ஒரு தடவை கூட வீட்டில் பார்க்கவில்லை. என் வீட்டிற்கும் வந்தது கிடையாது. எங்கேயாவது ரோட்டில் பார்த்தால்,

“என்னடா… ஒங்கப்பன் எப்படியிருக்கான்… பொண்டாட்டிக்கு ஒழுங்கா பயப்படறானா…” என்று கரகரத்த குரலில் கத்துவார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாது. பேசாமல் வந்துவிடுவேன்.

நான் ஹைஸ்கூலில் சேர்ந்த பிறகு சித்தி வீட்டுக்குப் போவது குறைந்துவிட்டது. பள்ளிக்கூடம் ஒரு மைல் தூரத்திலிருந்தது. நானும் பலஹீனமாயிருந்ததால் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பேருக்குப் படித்துவிட்டுத் தூங்கிவிடுவேன். அப்போது பள்ளிக்கூட லீவில் ஒரு நாள் அம்மா என்னை சித்தி வீட்டுக்குப் பணம் கேட்டு போய் வரச்சொன்னாள். எனக்கும் சித்தியைப் பார்க்க வேண்டும் போல் ஆசை. அம்மா பணம் கேட்டு வாங்கி வரச்சொன்னதை விட சித்தியைப் பார்க்கிற ஆவல் மேலெழுந்து நின்றதால் அப்போது பணம் கேட்கிற விஷயத்தை பெரிய காரியமாய் நினைக்கவில்லை.

என்னைப் பார்த்தவுடன் சித்தியின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது.

“வாய்யா… என் ராசா… இப்ப தான் சித்தியைப் பார்க்க நெனப்பு வந்ததா…” சிரித்துக் கொண்டே சொன்னாள். எனக்கு வெட்கமாக இருந்தது. சித்தி மெலிந்து ஓடாய் இருந்தாள்.

வீட்டில் ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு பாத்திரங்களை இப்போது பார்க்க முடியவில்லை. சித்தி உள்ளே எதையோ போட்டு உருட்டிக்கொண்டே,

“அம்மால்லாம் சௌக்கியமா… நீ ஹைஸ்கூல் போறியா… ரொம்ப தூரமாடா கால் வலிக்குமே… அப்பாட்ட ஒரு சைக்கிள் கேக்கக்கூடாது. புள்ள என்னமாத்தான் இருக்கு… மெலிஞ்சு… கறுத்து…”

எனக்கு அந்த வீடும் சூழலும் புரிகிற விவரம் வந்திருந்ததால் அங்கே இருக்கவே ரொம்ப சிரமமாக இருந்தது. அப்போது தான் அம்மா சொன்ன காரியத்தின் கஷ்டம் புரிந்தது. சித்தி ஒரு ஈய டம்ளரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள். கட்டியிருந்த பழைய சீலை சாயம் போன நிலையில் இத்துப் போயிருந்தது. சித்தியின் கண்களிரண்டும் குழிக்குள் கிடந்தாலும், கன்ன எலும்புகளின் துருத்தல் கூட என் சித்தியின் கண்களில் அளவற்று பொங்கிக் கொண்டிருந்த அன்பை, சாந்தத்தை ஏதும் செய்ய முடியவில்லை.

நான் எழுந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டே,

“எங்கே போறே… சித்தி…”

“சும்மா… இந்தா வாறேன்…”

அவள் எனக்கு டீ வாங்கி வரத்தான் கிளம்பினாள் என்று தெரியும். அவளிடம் கையில் பைசா கிடையாது. அவள் போய் டீக்கடைக்காரனிடம் எப்படியெல்லாம் மன்றாட வேண்டும் என்பதையும் என்னால் யோசிக்க முடிந்தது.

“நீ எங்கேயும் போக வேண்டாம்… இங்க இரு…” என்று கொஞ்சம் வலுவாகவே அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். அவள் அழுதாள். எனக்கும் கண் கலங்கிவிட்டது. மெல்ல சீலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே சாதாரணக் குரலில்.

“என்னடா… ராசா அம்மா ரூவா கேட்டு விட்டாளா, நான் என்ன செய்வேன்…”

“இல்ல சித்தி… சும்மா தான் வந்தேன்…”

அவள் என் கணநேர தடுமாற்றத்தில் தெரிந்து கொண்டுவிட்டாள். வேறு ஏதும் பேசவில்லை. திடுமென நெடு மூச்சுவிட்டாள். என்னை நம்பலாமா என்பதைப் போல கூர்ந்து பார்த்தாள். அப்புறம்,

“ராசா… புதங்கிழம ராத்திரி எல்லோரும் சிவகாசி போறோம். உங்க சித்தப்பா வரச் சொல்லியிருக்காக.”

“வீட்டை காலி பண்ணிட்டா…”

“ஆமா… ராசா… இனிமே இங்க இருக்க முடியாது… யாருக்கும் தெரியாமத் தான் போறோம்… நீ யார்ட்டயும் சொல்லாத… அம்மாட்ட கூட சொல்லக் கூடாது… இன்ன…” நான் தலையாட்டினேன். இப்போது ஏக்கம் என்னைக் கவ்விக் கொண்டது. கொஞ்ச நேரம் சித்தியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் எதிர்கால நினைப்பில் எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

“சரி… சித்தி நான் வரட்டா…”

“சரி ராசா…” என்றவள் ஒரு நிமிஷம் கழித்து “புதங்கிழமை ராத்திரி பஸ் ஸ்டாண்டுக்கு வருவியா…”

கெஞ்சலாய்க் கேட்டாள். நான் ‘சரி’என்று தலையாட்டிவிட்டு வந்தேன். வீடு எப்போது வந்து சேர்ந்தேன் என்று எனக்கே தெரியாது.

நேற்று என் சித்தியின் கடிதத்தைப் படித்ததும் அவள் ஞாபகங்கள் பெருகிவிட்டன. நாட்கள், வருடங்கள், யுகங்கள் கழிந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால், மனித வாழ்க்கைக்கு ஆதாரமான ஜீவஊற்று எங்கோ மனசின் அடியாழத்தில் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் இந்த வாழ்க்கை கொடும்பாலையில் உயிரை நனைத்துக்கொள்ள முடிகிறது. அது வற்றி விடக்கூடாது. நான் சித்திக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தேன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அன்புள்ள சித்திக்கு”

 1. Sakthi Bahadur

  கொடிதினும் கொடிது இளமையில் வறுமை.

  அதனினும் கொடிது நமக்குப் பிரியமானவர்களின் வறுமையில் உதவ இயலாத நம் கையறு நிலை.

  தனக்கு பிரியமான சித்தியின் வறுமை நிலையை நினைத்துப் பார்க்கும் இளைஞனின் சிறுகதை. தன் பிரியமான சித்தியிடம் இருந்து வந்த நாலு வரி கடிதத்திலிருந்து துவங்குகிறது.

  எழுதிய அந்த நான்கு வரிகளும் தன்னை பற்றியும் தன் மகள்களை பற்றியும் எழுதாமல் தன் பாசமிகு அக்கா மகனைப் பற்றி மட்டுமே விசாரிக்கிறது அந்தக் கடிதம்.மனித உறவுகளின் உன்னதத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.

  வாழ்த்துக்கள் தோழர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: