அன்னகாமு

2
(1)

இன்னக்கி என்ன கதை தாத்தா?” என்று கேட்டான் வினோதன்.

மொட்டைமாடியில் விளக்கு வெளிச்சத்தையும் மீறி நிலவொளி வீசியது. ஒளி தென்னங்கைகளில் பட்டுத் தகதகத்தன.  ஆடுகளையும், குட்டிகளையும் இனம் பிரித்துக் கொண்டிருந்த கிடைக்காரர்களின் சத்தம் தவிர்த்து வேறுve எந்தச் சத்தமும் இல்லை. இரண்டு நாட்களாக டி.வி. ரிப்பேர். தாத்தாவும், பேரனும் மொட்டைமாடியில் உட்கார்ந்திருந்தார்கள்.

”என்ன தாத்தா யோசனை? ” மீண்டும் பேரன் கேட்டான்.

”ஒரு நல்ல கதைய யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.”

 

தாத்தா ராமையாவுக்கு வினோதனின் அப்பா ஒரே மகன்.  நல்லா படிக்க வச்சாரு. நெய்வேலியில அனல்மின் நிலையத்துல வேலை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சொந்த ஊர் வந்துசெல்லும் நகரவாசியாகி விட்டான் மகன். ராமையாவுக்கு கிராமம் விடை கொடுக்கவில்லை.  ஊர் ஒட்டிய நிலம். 300  செம்மறி ஆடுகள். விவசாயம், ஆடு எல்லாம் பார்த்துக்கொள்ள நான்கு வேலையாட்கள். அவர்களுக்கும் சேர்த்தே பக்கத்தில் வீடு.  அந்த சின்னஞ்சிறு கிராமத்திலும் இன்னொரு கிராமமாகவே வாழ்ந்தார்.

 

திருவிழா நாளில் மட்டும் ஊருக்குள் போவார். சாமிக்கு குடை தூக்குவார். ரெண்டு மைல் தூரம் எறும்பு நகர்வது போல சாமி ஊர்வலம் நடக்கும். கை வலிக்குது என்று யாரிடமும் கொடுத்து மாற்ற மாட்டார். சாமி சாட்டிய 15 நாளும் கடுமையான விரதம் இருப்பார். சாமி கும்புடு தவிர்த்து, ஏதாவது எழவு விழுந்தால் மட்டுமே ஊருக்குள் போவார். ஆடு, மாடு, தோட்டம், வேலையாட்கள் இதுதான் இவரது உலகம்.

 

”நீ கதை சொல்லப் போறீயா… இல்லையா?” வினோதன் கோபமடைந்தான்.

”பொறுடா தண்ணி குடுச்சிட்டு வர்றேன்.”

தண்ணி குடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார். தொண்டையை லேசாக செருமி, சரி செய்தார். கதை சொல்லத் தொடங்கினார்.

”ஒரு ஊர்ல ஒரு ஆட்டுக்காரர் இருந்தாரு. அவரு பேரு அன்னகாமு. ஆட்டோட அவர் பெறந்தாரா? அவரோட ஆடு பெறந்துச்சான்னு பிரிச்சுப் பாக்க முடியாது. எந்நேரமும் ஆடு குட்டிகளோடவே தான் இருப்பாரு. ”

 

”எல்லா ஆடும் அவருக்குச் சொந்தமானதா? ”

”ஆடு மட்டுமில்லை, ஆடு போடுற புழுக்க கூட அவருக்குச் சொந்தமில்ல. எல்லா ஆடுகளும் ஆயிரம் மாட்டு அழகர்சாமிக்குச் சொந்தமானது. ”

”ஆயிரம் மாட்டு அழகர்சாமியா? அப்பிடின்னா என்ன அர்த்தம்? ”

 

”அவங்க வீட்டுல ஆயிரம் மாடுக இருந்துச்சு. அதனால ஆயிரம் மாட்டு அழகர்சாமின்னு பேரு வந்துச்சு. சரி அதவிடு. நம்ம கதைக்கு வருவம். அன்னகாமு, அழகர்சாமி வீட்டுலதான் ஆடு மேச்சாரு. அழகர்சாமி வீடு பெரிய்ய வீடு. ஆட்டுத் தொழுவம், மாட்டுத் தொழுவம் மட்டும் நம்ம தென்னந்தோப்பு அளவுக்கு இருக்கும். அவங்க வீட்டுல பண்ணையாளுக மட்டும் தெனசரி நூறு பேரு வேல செய்யிவாங்க.  இதுல தெனக்கூலிக்கு வர்றவங்களும் இருப்பாங்க. வருசப்பண்ணைக்கு இருக்குறவங்களும் இருப்பாங்க. ”

”வருசப் பண்ணையின்னா என்ன தாத்தா? ”

”இந்த சித்திர மாசம் தொடங்கி, அடுத்த சித்திர வரைக்கும் அவங்க வீட்டுல தான் இருக்கணும். மூணு வேள சோறு. வருசம் ஒரு தடவ தைப் பொங்கலுக்கு வேட்டி, துண்டு. இது போக கூலியா ரெண்டு மூட தவசம். இப்பிடி பண்ணைக்கு இருந்தவர்தான் அன்னகாமு. சின்னப் பிள்ளையிலேயே அவரு பண்ணைக்குப்போயிட்டாரு. ”

”அப்புறம்? ”

”ஆடு மேய்க்கிறது தான் அவருக்கு வேல. பண்ணையாளுகளுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்த ஒரு பொம்பள இருந்தா. அவதான் வெள்ளன இவங்கள எழுப்பி கஞ்சிய ஊத்தி, அவங்கவங்க வேலக்கு அனுப்பி விடுவா. அழகர்சாமி வீட்டுப் பொம்பளங்க இவங்க பக்கம் எட்டிக்கூடப் பாக்க மாட்டாங்க. இத்தனைக்கும் அன்னகாமு அழகர்சாமி பொண்டாட்டிக்கு தூரத்துச் சொந்தம். மாமா மொற வேணும்.”

”சொந்தக்காரங்க வீட்டுலேயே பண்ணைக்கு இருந்தாரா? ”

”எல்லாம் வறும தான் காரணம். வசதி இருந்தா தூரத்துச்சொந்தக்காரங்ககூட நெம்மகிட்டவந்து ரெம்ப நெருக்கம் காட்டுவாங்க. வசதி இல்லாட்டி கூடப் பெறந்தவங்ககூட தள்ளி நின்னு வேடிக்கை பார்ப்பாங்க.இதுதானப்பா ஒலகம். அன்னகாமு குடும்பமும் ஒரு காலத்துல ரெம்ப வசதியாப் பொழப்பு பொழச்ச குடும்பந்தான். அவருக்கு வெவரம் தெரியிற வயசுக்குள்ளயே இவங்க அய்யா, சொத்து சொகத்தையெல்லாம் தொலைச்சிட்டு, தானும் போயி சேர்ந்துட்டாரு. பாவம் அன்னகாமு. நிற்க நாதியில்லாம இங்க வந்து விழுந்துட்டாரு.”“

“அடப்பாவமே…. இப்பிடியெல்லாமா நடக்கும்…?“

“நடக்கும் நடக்கும். ஜான் ஏறுனா மொழம் சருக்குற  அவத்தப்பொழப்புல எல்லாமே நடக்கும். சரி. இப்ப அன்னகாமு கதைக்கு வருவோம். சின்னவயசுல பண்ணைக்குச் சேர்ந்த அன்னகாமு, இப்ப முழு எளந்தாரியாயிட்டாரு. சும்மா…. எள்ளுன்னா எண்ணையா நிக்கிற பருவம். அவருக்கு கலியாணம் முடிச்சு வைக்கிறதாப் பேசித்தேன் பண்ணைக்கு சேத்தாங்க. யாரு பொண்ணு தருவாங்க.? எந்தச் சொத்தும் இல்லாத வெறும் மனுசன். வெவரம் தெரிஞ்சநாள்ல இருந்தே ஆடுகளோடவும், ஆட்டுக்காரப் பயலுகளோடவுமே வளர்ந்த மனுசன். சாதி சனம், சொந்த பந்தம் ஏதும் அறியா வெள்ளந்தி.எங்க போயி பொண்ணுப் பார்ப்பாரு…?“

“பொண்ணு கெடச்சதா தாத்தா..?“

“ம்….கெடச்சது..கெடச்சது. அழகர்சாமியும்,அவரு சம்சாரமும் எங்கெங்கயோ  பொண்ணுதேடி கடைசியல சீப்பாலக்கோட்டயில பண்ணையார் வீட்டுல பண்டபாத்திரம் தேச்சிக்கிட்டு இருந்த மயிலிய கலியாணம் பண்ணி வச்சாங்க. ஒரு ஜாடியின்னு இருந்தா,அதுக்கொரு மூடி கெடைக்காமலா போகும்?”.

”கலியாணம் எங்க நடந்துச்சு தாத்தா? ”

”மதுர மீனாச்சி கோயில்லயா தாலி கட்ட முடியும்? அன்னகாமுக்கு நம்மூரு ஈஸ்வரன் கோயில்லதான் கலியாணம் நடந்துச்சு. கலியாணம் முடிஞ்ச மறு நாளே இவரு ஆடு மேய்க்கப் போயிட்டாரு. மயிலி பண்டபாத்திரம் கழுவப் போயிடுச்சு. ரெண்டு பேருக்கும் குடியிருக்க சொந்தமா வீடு கூட இல்ல. என்னதான் பண்ணக்காரனாயிருந்தாலும் அழகர்சாமி பொண்டாட்டிக்கு  சொந்தக்காரன் இல்லையா? அதுனால அந்தம்மா தன்னோட புருசங்கிட்ட கெஞ்சி, கூத்தாடி குப்பை கொட்டுற எடத்துக்குப் பக்கத்துல குடிசை போட்டுக் குடியேற ஒத்துக்க வச்சாங்க.”

 

சொல்லி முடித்துவிட்டு இரண்டுபேரும் மௌனமானார்கள். தாத்தா, பழைய நினைவு நெஞ்சிலாட, மனப்பாரம் குறையும்போது ஏற்படும் ஒரு சுகம் இருக்குமே… அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

 

”மிச்ச கதையும் சொல்லு தாத்தா எனக்குத் தூக்கம் வருது. ”

”ரெண்டுபேருமே ரெம்ப சந்தோசமா குடும்பம் நடத்துனாங்க. அன்னகாமு ஆடு ஆடுன்னு  காடுகாடா அலஞ்சாலும் சாயங்காலம் மசங்குற நேரத்துக்கு வீட்டுக்கு வந்திருவாரு. வரும்போது வண்டப்புலி நாடார் கடையில சுட்டு வச்சிருக்குற தொக்குச்சிய்யம் நாலு வாங்கித் துண்டுல கட்டிக்கிட்டுத்தான் வருவாரு. அந்தம்மாவும் பண்டபாத்திரம் தேச்சுக்கழுவிக் குடுத்துட்டு, மிச்சம் மீதிய எடுத்துக்கிட்டு வரும். ரெண்டு பேரும் எப்பவும் சண்ட போட்டதே இல்ல. ஒத்துமையின்னா.. ஒத்துமை அப்பிடியொரு ஒத்துமை. கலியாணம் முடிஞ்சு ரெண்டு வருசமாச்சு. அந்தம்மா கருப்புமில்ல செகப்புமில்ல மாநெறம். வெய்யில் வேல செய்யாம நெழல் வேல செஞ்சதாலயும், அழகர்சாமி வீட்டு மிச்ச மீதத்தத் திண்டதாலயும் கொஞ்சம் சத போட்டு, பார்க்க நல்லா இருந்துச்சு. ”

”அப்பறம்? ”

”மயிலிக்கு ஒரு ஆசை. மீனாச்சி கோயிலுக்குப் போகனும்னு. யாரு கூட்டிக்கிட்டுப் போவாங்க? அன்னகாமு காடே பரதேசமுன்னு திரியிறாரு.  சாவகாசமா புருசனும் பொண்டாட்டியும் ஒக்காந்து பேசுறப்பெல்லாம் சாடை மாடையாச் சொன்னாலும் அன்னகாமு அசைஞ்சு கொடுக்கிற மாதிரித் தெரியல. ”

”எப்பத்தான் மீனாட்சி கோயிலுக்குப் போனாங்க? ”

”அதுக்கும் ஒரு நேரம் வந்திச்சு. அழகர்சாமி பொண்டாட்டிக்கு பிள்ளையில்ல. ரெண்டாங் கலியாணம் முடிக்கலாம்னா மாமனார் வீட்டுல ஒத்துக்கல. சொத்து எல்லாமே மாமனாரோடதுதான். அந்தக்காலத்துலேயே மகள் பேருல சொத்த எழுதி வச்சிட்டாரு. யார் யாரு சோசியம் பார்க்க வாராகளோ எல்லாரிட்டையும் பாத்தாங்க. ஒரு தடவ வடக்க வைத்தீஸ்வரன் கோயில் போயி ஏடு போட்டுப் பாத்தாங்க. கொழந்த பாக்கியம் இன்னும் ஏழு வருசம் கழிச்சுத்தான் கெடைக்கும் அதுவரைக்கும் கோயில் கோயிலா அன்னதானம் செய்யிங்கன்னு சொல்லிட்டாங்களாம். ”

”நல்ல கதையா இருக்கே.”

”ஆமா…. பக்கத்துல பசியோடஇருக்குறவனுக்கு செம்பு தண்ணி தர மனசில்லாதவங்கதான் சாமிக்கு பயந்து  கோயில் கோயிலாப் போயி அன்னதானம் பன்னுவாங்க. இப்பிடி ஒரு தடவ மீனாச்சி கோயிலுக்குக் கௌம்பினாங்க. அன்னதானம் பண்ணுறப்ப கூடமாட வேல செய்ய மயிலியையும் கூப்பிட்டுப் போனாங்க, என்னதான் பண்ணக்காரங்களா இருந்தாலும் அன்னகாமு அவங்களுக்குச் சொந்தம் தானே. ”

”அப்பறம்? ”

”அப்பறந்தான் விசயமே  இருக்கு. மயிலிக்கு உடுத்த நல்ல சீலை கூட கெடையாது. இருக்கிற பழைய சீலையில ஒரு புதுச்சீலய கட்டிக்கிட்டு, இன்னொன்ன உடுமாத்துக்கு எடுத்துக்கிட்டு, தாலிக்கொடிக்குத் தொணையா கருகமணிப்பாசிய கழுத்துல போட்டுக்கிட்டு மயிலி கௌம்பிருச்சு. மூணு வில்வண்டியில போனாங்க. சாயங்காலம் மதுர போய் சேருறதா ஏற்பாடு. மாடுகளும் அவங்க நெனச்ச நெனப்புக்கு ஏத்த மாதிரி வேகவேகமாப் போயிட்டிருக்கு. மேலமாசி வீதியில இருக்குற போடி மாளிகையில வண்டி நிக்கிறப்ப சாயங்காலம் பொழுது சாஞ்சிட்டு இருக்கு. ”

 

”அன்னக்கி ராத்திரி தங்கிட்டு, மறுநா காலையில சாமி கும்பிட்டு அன்னதானம் பண்ணுறதா ஏற்பாடு. வில் வண்டியில வந்த அலுப்பு. எல்லாருமே தூங்கிட்டாங்க. மறுநா கோழி கூப்பிடுற நேரத்திக்கு முன்னாடியே எந்திருச்சு குளிச்சாங்க.   மயிலிக்கு அழகர்சாமி பொண்டாட்டி தன்னோட சீல, நகையெல்லாம் குடுத்து போட்டுக்கச் சொல்லுச்சு. மயிலிக்கு ரொம்ப சந்தோசம். ஓசி நகை, ஓசி சீலையின்னு மயிலி புதுப் பொண்ணு மாதிரி இருந்துச்சு. அழகர்சாமி ஓரக்கண்ணுல பாத்துக்கிட்டே இருந்தாரு. எல்லாருங் கௌம்பி கோயிலுக்குப் போனாங்க. சாமி கும்பிட்டு முடிச்சிட்டு, அன்னதானம் பண்ணிட்டு, கோயில விட்டுக் கௌப்புறதுக்குள்ள உச்சிப் பொழுதாயிருச்சு. ”

”அதுக்கப்பறங் கௌம்பி அவங்க தங்கியிருக்க எடத்துக்கு வந்தாங்க. கொஞ்ச நேரம் தகிப்பாறிட்டு சாயங்காலம் வெய்யில் தாழ, பஜார்ல போயி, பொருள் வாங்குறதா ஏற்பாடு. எல்லாரும் கௌம்புறப்ப அழகர்சாமி மட்டும் தலவலின்னு சொல்லி படுத்துட்டாரு. அவருக்கு தொணைக்கி யாரு இருக்குறதுன்னு ஒரே யோசனையா இருந்தாங்க. அவரு பொண்டாட்டி பஜாருக்குப் போறதுலயே ரெம்பக் குறியா இருந்தாங்க. மயிலிய விட்டா ஒத்தாசைக்கு ஆளு இல்ல. வேற வழியில்லாம மயிலி தொணைக்கி இருக்க வேண்டியதாப் போச்சு.”

”அடப்பாவமே!”

”எல்லாரும் போகவும் அழகர்சாமி எந்திருச்சு உட்காந்துட்டாரு. பட்டுச் சேல கட்டி நல்லா பளபளன்னு மயிலி இருந்த இருப்புல அழகர்சாமி சபலப்பட்டுப் போனாரு. சபலந்தெ தலவலியா உருமாறி நின்னுச்சு.  நக்கலும் நையாண்டியுமா பேசிக்கிட்டே தன்னோட மிருகவெறிய காட்டத் தொடங்கினாரு.  பாவம் அந்தம்மா. அந்த பணக்கார மிருகத்தோட போராட முடியாம, பரிதாபமா அந்த ஏழை ஆடு பணிஞ்சு போச்சு. கோயில் தளமின்னும் பாக்காம இப்பிடியொரு அசிங்கத்த அந்தாளு செஞ்சிட்டாரு. ”

”மிருகவெறி அடங்கன பெறகு ”கோவிச்சுக்காத மயிலி. இந்த சங்கதி நமக்குள்ள மட்டும் இருக்கட்டும். ஒனக்கு என்ன வேணுமோ கேளு. நான் தர்றேன். புத்திசாலித்தனமா நடந்துக்கோ. பாவம் நீயும் எத்தன நாளக்கித்தான் ஆட்டுக்காரனோட படுப்பே? ” இப்பிடி ஏதேதோ பேசி இந்தம்மாவ அந்தப் படுபாவி அடக்கிட்டான்.”

இதைச் சொல்லும் போதே ராமையாவின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. அது கோபத்தின் வெளிப்பாடா? சோகத்தின் வெளிப்பாடா? ஏதும் புரியாமல் வினோதன் தவித்தான். தாத்தாவே கதையைத் தொடர்ந்தார்.

 

”கோயிலுக்கு போயிட்டு வந்ததிலிருந்து மயிலி, தம்புருசங்கூட மொகங்குடுத்து பேசுறதில்லை. அவரத் ”தொட” விடுறதில்ல. எப்பப் பாத்தாலும் மேலு வலிக்குது, மேலு வலிக்குதுன்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. எத்தனை நாளைக்குத் தான் உம்மைய மறைக்க முடியும்? ”

”விசயம் அன்னகாமுக்குத் தெரிஞ்சு போச்சா? ”

”தெரியாம எப்பிடி இருக்கும்? புருசன வெறுத்த மயிலியால அழகர்சாமிய வெறுக்க முடியல. பண்டபாத்திரம் கழுவுறவள, சோறு எடுத்திட்டு மச்சு வீட்டுக்கு வரச் சொன்னாரு. எப்பவும் ஆக்குப் பாறையில உக்காந்து சாப்பிடுற மனுசன், இப்பெல்லாம் மச்சு வீட்டுக்கட்டுல்ல உக்காந்து சாப்பிடுறாரு. ருசி கண்ட பூன. சும்மா இருக்குமா? தொட்டுப்பேசி, தட்டிப்பேசி, ஒருநாள் கட்டுல்ல தூக்கிக் கவித்திட்டாரு”.

 

தாத்தாவும், பேரனும் அமைதியானார்கள். தாத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. பேரனும் சோகம் கொண்டான். அது மோசமான இறுக்கம். பாவம் பச்சப் பையனின் சோகம் தாத்தாவைத் தாக்கியது. வாய்விட்டு கலகலவென்று சிரித்தார். பேரனும் சிரித்தான். தாத்தா கதையைத் தொடங்கினார்.

 

 

”தான் வேல செய்யிற எடத்துல மொதலாளி குடுக்கிற இம்சைய எத்தன நாளக்கித்தான் தாங்க முடியும்? எதுக்க முடியும்? அதுவும் ஒரு பொம்பளயால? அண்டி வாழுற ஏழைகள நாசமாக்குற கொணந்தானே பணக்கார கொணம்? மெல்ல மெல்ல அந்தம்மாவும் அடங்கிப்போயிட்டாங்க.  இந்த விசயம் அழகர்சாமி பொண்டாட்டிக்கும் தெரிய வந்துச்சு, புருசன எதிர்த்துப் பேச தெம்பில்லாம தனியா அழுததுதான் மிச்சம். ”

”ஒரு நாள் ஆடு மேக்கிற எடத்தில ஒரு சின்னத் தகராறு, பேசிக்கிட்டு இருக்கப்பவே அன்னகாமு, தனிக்கொடியை கம்பால அடிச்சிட்டாரு.  அடி விழுந்த அடுத்த நிமிஷமே, ”கட்டுன பொண்டாட்டிய மொதலாளிக்கு கூட்டிவிட்டுப் பொழைக்கிற அவத்தப் பயபிள்ள, ஓங்கிட்ட எல்லாம் அடி வாங்குற நிலம வந்திருச்சேன்னு” சொல்லிக்கிட்டே தனிக்கொடியும் அடிச்சாரு.   பக்கத்துல இருக்குறவுங்க ரெண்டு பேரையும் விலக்கி விட்டாக, ”

 

”தனிக்கொடி கம்பால அடிச்ச வலி அன்னாகாமுக்கு மறைஞ்சிருச்சு, ஆனா வார்த்தையில அடிச்சது? அந்த வார்த்தை மட்டுமே நிழலாடிக்கிட்டே இருந்துச்சு.  மீனாட்சி கோவிலுக்கு போயிட்டு வந்ததிலிருந்தே பொண்டாட்டியோட நடவடிக்கை,  மத்தவங்க பேசுற பேச்சு, எல்லா விசயமும் மாறி மாறி மனசுக்குள்ள வந்துகிட்டு, போயிக்கிட்டு இருந்துச்சு.  அவரால ஒரு மனசுல ஆடு மேய்க்க முடியலை. சோட்டுக்கார ஆட்டுக்காரப் பசங்ககிட்ட தன்னோட ஆடுகளையும் சேத்துமேய்க்கச் சொல்லிட்டு,  அன்னைக்கி வெள்ளனவே வீட்டுக்கு வந்திட்டாரு. ”

”அப்பறம் என்ன நடந்துச்சு? ”

 

”வீட்டுக்கு வந்தவரு தண்ணியும் குடிக்காம கஞ்சியும் குடிக்கமா ஆட்டுத் தொழுவுல படுத்திட்டாரு.  மாறுநாள் காலையிலேயும் சோட்டுக்கார ஆட்டுக்கார பசங்களோட தன்னோட ஆட்டையும் சேத்துவிட்டுட்டு, ஆத்தங்கரையில இருக்குற அரசமரத்தடியில ரெம்ப நேரம் படுத்திருந்தாரு.  உச்சிப் பொழுது இருக்கும், ஏதோ யோசனை வந்தவரு போல திடீரெனு எந்திருச்சு மொதலாளி வீட்டுக்கு விறு விறுன்னு போனாரு.  வெளியில ஒரு ஆள் அரவமும் இல்லை.   தாவாரம் வெறிச்சோடிக் கிடந்துச்சு.  மொதலாளி படுக்குற மச்சு வீட்டுக்குள்ள நொழஞ்சாரு.   அங்க. . .  அவரு பாத்த காட்சி, அத பாக்குறப்ப அவர் மனசு பட்ட பாட்ட யாராலயும் சொல்ல முடியாது.  எந்தவொரு ஆம்பளையும் அப்படியொரு காட்சியைப் பாக்கக்கூடாது.  எத்தனையோ தடவை பிண்ணிப் பினைஞ்சு கிடக்கிற பாம்புகளப் பாத்திட்டு பயப்படாம, ஒரு நமட்டுச் சிரிப்போட நகந்து போற அன்னகாமால அன்னைக்கி அப்படி முடியல.  இடி விழுந்த மரம் மாதிரி ஒறைஞ்சு நின்னுட்டாரு.”

 

”ரெண்டு பேரும் தடா புடான்னு எந்திருச்சு ஆளுக்கு ஒருபக்கம் ஓடுறாங்க.   கோபம் தலைக்கேற தாவாரத்துல சொருகி வச்சிருந்த வேல்கம்ப உருவி யாரை மொதக் கொல்லுறதுன்னு தெரியமா வெறட்டிப் போனாரு.  நாலு எட்டு வச்சவர அழகர்சாமி பொண்டாட்டி கால்ல விழுந்து காலைப்புடிச்சிக்கிட்டு ஓ…ன்னு அழுது தடுத்துட்டாங்க.  நெனவு தெரிஞ்ச நாள் இருந்தே அவருக்கு சோறு போட்ட கை அந்த கை.   அவரு காலைப் பிடிச்சு கெஞ்சுது.  அந்த ஒரு நிமிசத்துல அவருக்குள்ள இருந்த நன்றி உணர்வு முழிச்சிருச்சு.  கையிலிருந்து வேல் கம்ப தூக்கி எறிஞ்சிட்டு அந்த அம்மாவ உதறி தள்ளிவிட்டுட்டு விறு விறுன்னு வெளியே போயிட்டாரு. ”

”எங்க போனாரு? ”

”எங்க போனாருன்னே தெரியல, கால் போன போக்குல போனாரு, ரெண்டு நாளா ஆளையே காணோம்.  பொண்டாட்டி மூஞ்சியில முழிக்கத் துப்பில்லாம அழகர்சாமியும் வெளியூர் போயிட்டாரு.  மயிலி குடிசைக்குள்ள படுத்தவ எந்திரிக்கவே இல்லை.  ரெண்டு நாள் கழிச்சு அழகர்சாமி பொண்டாட்டிதேன் மயிலியே எழுப்பி வீட்டுக்கு கூட்டி வந்திச்சு,  அன்னாகாமுவை தேடி ஆள் அனுப்பிச்சு. ”

”அன்னகாமு கிடைச்சாரா? ”

”கிடைச்சாரு,  பொணமாத்தேன் கிடைச்சாரு, ஊத்துக்கடவுக்கு மேல ஏழு சொனைக் காட்டுல ஓர் ஆல மரத்துல தூக்குப் போட்டு தொங்கிக் கிடந்தாரு.   தூக்கிட்டு வந்து எல்லா காரியத்தை அழகர்சாமி பொண்டாட்டிதேன் செஞ்சாங்க,  அன்னகாமு செத்துப்போன செய்தி கேட்டும் அழகர்சாமி வரவேயில்லை.

”அன்னகாமு செத்து ஒரு மாசம் கழிச்சு, அவரு பொண்டாட்டி முழுகாம இருக்கிற சங்கதி தெரிஞ்சுச்சு.  கருவைக் கலைக்கணுமின்னு எவ்வளவோ மொயற்சி செஞ்சாங்க, அழகர்சாமி பொண்டாட்டிதேன் தடுத்துட்டாங்க, தாயா இருந்து கவனிச்சு, மயிலி ஒரு ஆம்பளைப் புள்ளையப் பெத்தெடுக்க வச்சாங்க.  காணாம போயிருந்த அழகர்சாமி யாருக்கும் தெரியாம ரெண்டாம் கல்யாணம் முடிச்சிட்டாரு.  அந்தம்மாவுக்கு ஒரு ஆம்பளைப் புள்ளை பெறந்திருச்சு”.

”அப்புறம் என்ன நடந்துச்சு தாத்தா? ”

”தன் மகன்தேன் சொத்துக்கு வாரிசுன்னு சொந்தம் கொண்டாடினாரு அழகர்சாமி,  ஆனா அவரோட மூத்த தாரம் அழகர்சாமிக்கு சல்லிக் காசு கொடுக்காம சொத்தையெல்லாம் அன்னாகாமு  பொண்டாட்டிக்கும், மகனுக்கும் எழுதிக் கொடுத்துட்டாங்க.   கடைசி வரைக்கும் அவங்க கூடவே இருந்து அவங்களும் போயி சேந்துட்டாங்க. ”

”அன்னகாமு மகன் இப்ப எங்க இருக்காரு? ”

”நேரமாகுது தூங்குவோம், மீதிக் கதையை நாளைக்கு சொல்றேன்” என்று சொல்லி பேரனைத் தூங்க வைத்தார்.   பேரன் தூங்கிய பிறகு நீண்ட நேரம் தாத்த இராமையா அழுதார். அன்று விடிய விடிய அவர் தூங்கவே இல்லை.  காலையில் பேரன் கேட்டால்  எப்படி சொல்வது? எப்படிச் சொல்ல முடியும்?

”அன்னகாமு பொண்டாட்டிக்கும், ஆயிரம் மாட்டு அழகர்சாமிக்கும் பிறந்த மகன் தான் உன் தாத்தா” என்று.

 

(மார்ச்-2005 செம்மலர்)

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 2 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top