அந்தராத்மாவின் ஆட்டம்

0
(0)

”டக்கர டக்கர டக்கர “

அந்தரத்தில் அந்தக்குழந்தை கயிற்றில் மிதந்தபடி வித்தையாடிக்கொண்டிருக்க கீழே குழந்தையின் தாயார் – அப்படித்தான் இருக்கவேண்டும். ஒடிசலான உடல் அமைப்போடு சர்க்கஸ் பெண்ணின் உடையுடன். பம்பைக்கொட்டு ஒன்றை கழுத்தில் தொங்கவிட்டு தாளம்தப்பாமல் அடித்துக் கொண்டிருந்தாள்.

இப்படிஒரு காலை நேரத்தில், நட்டநடு வீதியில் – அதுவும் பஸ்ஸ்டாண்டில் இந்த கூத்தை நடத்த விடலாமா,. பச்சைமண்ணை அந்தரத்தில் ஆடவிட்டு எப்படி ரசிக்க முடிகிறது. தலையை குலுக்கிக் குலுக்கி பதிவான  காட்சிப் படத்தை அழிக்க முயற்சித்தார் பெருசு. ஆனால் கண்ணெதிரே ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.

தரையில் விரித்திருந்த நைந்த சமுக்காளத்தில் மேல்சட்டையில்லாமல் ஒருஆண் பலகலராலான பேண்ட் அணிந்து பல்டிமேல் பல்டி யடித்தபடி கூட்டத்தின் சேர்க்கையினை அதிகப்படுத்தினான். அதோடு தாயார்பெண்ணின் தாளத்தோடு சேராமல் தனித்து ஒலிக்கும்படியான ஓசையில் எவர்சில்வரா லான வட்டத்தட்டு ஒன்றை ஆள்க்காட்டி விரலில் சுழலச்செய்தும், குச்சியொன்றால் தாளமிட்டு அதிரச்செய்தபடியும் கூட்டத்தை நகர விடாத ஒருமையினை அமைத்தான்.

பெருசு, பேரப்பிள்ளைகளைப் பார்க்க வாரந்தோறும் பெரியகுளம் போவது வழக்கம். முன்னெல்லாம் வீட்டிலிருந்து எந்தநேரம் வந்து ஸ்டாண்டில் நின்றாலும் திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், சேலம், சென்னை என அத்தனை பஸ்களும் அடுத்தடுத்து வந்து நின்றுபோகும் எல்லாவண்டிகளுமே பெரியகுளம் கடந்துதான் செல்லுமென்பதால் அவருக்குக் கவலையில்லை. வரும்போதும் நடுச்சாமம் கடந்தாலும் பிரச்சனையில்லை. எல்லாவண்டிகளுமே திரும்பவும் வரும். ஆனால், இப்போது ஊருக்கு சம்பந்தமில்லாமல் பைபாஸ் பக்கம் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டிவிட்டதால் மூணுகிலோமீட்டர் தள்ளி, அதும் பழைய பஸ்ஸ்டாண்ட் போய் இன்னொரு வண்டிபிடித்துப்போக வேண்டும். அல்லது ஆட்டோதான் அரைமணிநேர பயணத்திலிருந்த பெரியகுளம், பஸ்சுக்காக மட்டும் பலமணிநேரம் காத்து நிற்கவேண்டிய சூழ்நிலை ஆகிப்போனது. காத்து நிற்பதாலேயே பல கண்றாவிகளை கண்கொண்டு பார்க்கவும் வேண்டியிருக் கிறது. தினமும் எவனாவது தண்ணியைப் போட்டுக் கொண்டு வந்து வெட்டிநாயம் பேசிக்கொண்டிருப்பான். அதனைக் காதுகொடுத்துக் கேட்பதற்குள் அவனது போதை தனக்கு ஏறிவிடும்.

அப்படியில்லையானால் இந்தமாதரி சர்க்கஸ், சவுக்கை எடுத்து ரத்தம் வழிய வழிய உடம்பில் அடித்து தானம் கேட்பது என்று எதானாச்சும் கருமாயத்தைப் பார்த்துத் தொலைக்க வேண்டிருக்கிறது. இன்னைக்கி கடவுள் இதப்பார்க்க லவித்துவிட்டான் போலிருக்கிறது. எதுக்கு இப்படி சிறுபிள்ளைகளைப்போட்டு சித்தரவதைப் படுத்துகிறார்கள். ஓட்டலில், கடைகளில் வேலைபார்க்கும்  பிள்ளைகளைக் கேள்வி கேட்கும் அரசாங்கம் இதைமட்டும் எப்படி விட்டது.?  ஏழுஎட்டு வயசு இருக்குமா . .? அப்படியே சின்னவனின் மகள் சாவித்திரியை நாவகப்படுத்துகிறது. கயத்தில் ஆடுகிற இந்தக்கழுதை.  அங்கே இன்னமும் சாவித்திரிக்கு தானாக பாவாடைசட்டை போடத்தெரியவில்லை. பள்ளிக்கூடம் அனுப்பிவைக்க, பல்லு விளக்குவதிலிருந்து சட்டைக்கு பட்டன் போடுவதுவரை அத்தனையும் ஆள்போட்டுச் செய்யவேண்டியிருக்கிறது.

இதுக்காகவே கிழவியை அங்கேயே வைத்துக்கொண்டார்கள். வயசான காலத்தில் இங்கே இருந்து புருசனைக்கவனியாமல் கூப்பிட்டவேகத்தில் ஓடிப் போனாள் சிறுக்கி. பேரப்பிள்ளைக பாசம் அப்பிடி இழுக்கிறதாம். ’’ பாசத்துல ரெம்பவும் சிக்கீராத வழுக்கீரும். ஆமா, எமெங்கிட்ட இருக்கறதும் பாசக்கயறுதா. பட்டுன்னு எடுத்து வீசீறப்போறான் ”

கிழவியோடு கோபம்வந்து அவளோடு சரிக்குச்சரி மல்லுக்கட்ட முடியாத சந்தர்ப்பத்தில் இயலாமையில் இப்படிச்சொல்வது பெருசுக்கு வழக்கமாகியது.

“இந்த ஏமேங்கிட்டக்க இருந்து வேற எந்த எமெ வந்து கூப்புட்டுக்குவான். அம்புட்டுத் தகிரியம் இருக்கா அவனுக்கு..? ” பெருசின் தலையில் நச்சென குட்டுவைத்து  ஒருசிரிப்புச் சிரிப்பாள் கிழவி. அதற்காகவே அவளை பொழுதூக்கும் சொல்லிக்காட்ட வேணும் போலிருக்கும்.

இன்னமும் பஸ் வந்தபாடில்லை.. வெள்ளைக்கலரில் ஷேர் ஆட்டோ வந்து  நின்றது. “பெர்சு, பெரியகுளமா .  ? “ டிரைவர் மெனக்கிட்டு தலையை வெளியில் நீட்டிக்கேட்டான். வேறுபலர் ஏறினார்கள். இவர் இல்லையென தலையசைத்தார்.  அதுபோனதும் அடுத்த ஒருநிமிடத்தில் இன்னொன்று. தள்ளிநின்றுகொண்டார். ஒவ்வொரு ஆட்டோவுக்கும் பதில்சொல்ல முடியாது.

பொதுவாகவே பெருசு தனியார் வாகனங்களில் ஏறுவதைத் தவிர்ப்பார். உயிர்ப்பயம் என்பதற்குமேல் அரசுக்கு குடிமகன் செய்யும் கடமை, தனது பணம் தனியார்க்குப் போகக்கூடாது என்பதுதான். பிள்ளைகளோடு பிரயாணம் மேற்கொள்கிறபோதுதான் சில சங்கடங்கள் வரும் அதிலும் பெரியவனை  தன்போல திருத்தியிருந்தார். சின்னவன் வேகமெடுத்தவன். புரிந்துகொள்ளும் தன்மையில்லை.

“ பாருங்கய்யா, எத்தன ஆட்டா பெரியகொளத்துக்கு சண்டிங் அடிக்கிது பூராமே அவுஸ்புல்லுதே ஒரு நாலஞ்சு பஸ்ச சேந்தவாக்கில விட்டா, சனங்களும் செரமமில்லாம போய்வருவாங்க, கவர்மெண்டுக்கும் நாலுகாசு போகும். மடப்பயக,.வளர்ச்சி வளர்ச்சின்னு பேசறவங்க, சனங்களோட சவுகரியம்தா வளர்ச்சிங்கறத புரிஞ்சிக்காம மொதலாளிகளொட லாவந்தா வளர்ச்சின்னு மொக்கையா நடக்கறானுக “ அவரோடு நின்றிருந்த ஒரு இளைஞன் அங்கலாய்த்தான்.

பெருசு அவனைப்பார்த்துப் புன்னகைத்தார்.

தேனிக்கு புதுபஸ்ஸ்டாண்ட் வந்தபிறகு மொபசல்பஸ்கள் எதுவும் ஊருக்குள் வருவது கிடையாது.. ஒன்றிரண்டு டவுன்பஸ்கள்மட்டும் முக்கால்மணி நேரத்திற்கு ஒன்று எனும் கணக்கில் போக்குவரத்துக்கு அனுமதித்து இருந்தது ஆர்டிஓ அலுவலகம். அதுவும் அரதப்பழைய வண்டிகளை அனுப்புகின்றனர்.. இரவு பத்துமணிக்கு மேல் அதுவும் கிடையாது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் பொதுஜனங்கள் வசிக்கும் ஒருபகுதி கேட்பாரற்றுக் கிடக்கிறது. இரவு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் வெளியூரில் படிக்கும் பிள்ளைகள், திருப்பூர், கோவை பகுதியில் வேலைபார்க்கும் ஆண்-பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாக  நேரிடுகிறது. எம் எல் ஏ வந்துநின்று போராடியும் காரியம் நடக்கவில்லை. ஆட்டோக்காரர்களுக்கும் மினிபஸ்கார்களுக்கும் நல்ல சவாரி.

தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு தாய்க்கிராமம் அல்லிநகரம். கடைசிக் காலத்தில் தாயை தவிக்கவிட்டது போல துண்டுபட்டுப் போனது  ஊர்,. இதில் பெருசு போன்ற வயசாளிகளுக்கு மிக்கவருத்தம்.

மீண்டும் “டகர டகர டகர “ சத்தம். இப்பொது அந்தச்சிறுமி கும்ப ஆட்டத்தைத் துவக்கி இருந்தாள்..

அந்தரத்தில் கட்டிய கயிற்றில் வெறும்காலிலும், செருப்பணிந்த நிலையிலும் பயணித்த அச்சிறுமி, தலையில் ஒன்றன்மேல் ஒன்றாய் மூன்று கும்பங்களை அடுக்கி அவைகள் கீழேவிழாமல் ஒருதரம் நடந்து காண்பித்தாள்.

‘அதுமட்டும் போதாது, எவர்சில்வர் தட்டைப்போட்டு அதனை கயிற்றில் நிறுத்தி அந்தத் தட்டின்மேல் நின்று கயிற்றில் பயணிக்க வேண்டும் ‘ என கீழிருந்து ஆண் கட்டளையிட்டான். தாய்ப்பெண் ’செய்வா செய்வா ‘ என உரைத்துவிட்டு தன் வசமிருந்த உருமியால் “டண்டனட்டு . டண்டனட்டு . டண்டனட்டு” என ஒலித்தாள்.

“எல்லாரும் கைதட்டுங்க ..” ஆண் கேட்டுக்கொண்டதும் கூட்டத்தார் கைதட்டினார்கள்.

மரப்பாச்சி பொம்மையைப்போல அந்தச்சிறுமி முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் காட்டாமல் கவட்டைக் குச்சியிலிருந்து எழுந்து நின்றாள். தலையில் கும்பங்கள் அடுக்கியபடி இருந்தன. கீழிருந்து ஆண், தட்டை எறிந்தான். லாவகமாய் அதனைப் பிடித்த சிறுமி, கழுத்தை அசைக்காமல் உடம்பைமட்டும் கீழிறக்கி தட்டை கால்களில் பொருத்திக்கொண்டாள்.

உள்புறம் தள்ளிநின்ற பெருசு முன்னால் வந்தார். “அட, எடுவட்ட சனியனே ஒனக்கு இது தேவயா, காலம்பற எந்திரிச்சமா, மூஞ்சியக்கழுவி பல்லத்தேச்சு பள்ளியொடம் போனமா பொஸ்தகத்த எடுத்து ரெண்டு பாடத்த படிச்சமா ன்டு இல்லாம, உச்சிவெய்யீல்ல இப்பிடி ஒசரத்தில நின்டு உசுருக்கு பங்கம்வச்சு வித்தகாட்ட எந்தக்கடவுள் அனுப்பிச்சுவச்சான் ?”

பெருசு வேறுவிதமாய் யோசிக்கலானார். இந்த ஆட்டத்தை கற்றுக்கொள்ள சிறுமி எத்தனைநாள் எப்படி எப்படியெல்லாம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பாள் .?

முதலில் தரையில் செய்யச் சொல்லி இருப்பார்கள். பெரியமனுசிகளே ஒருகுடம் தண்ணீரை தலையில் வைக்க, அதும் கையைவிட்டு நடக்க ஏகப்பட்ட பயிற்சிக்குப் பிறகு கைவீசி நடப்பார்கள். இந்தச்சிறுமிக்கு வெற்றுக் கும்பம்தான் என்றாலும் இதுவயசுக்கு தலையை அசைக்கமல் சிறுவயசுக்கே உரித்தான சில்லுண்டித்தனம் செய்யாமல் கழுத்தோடு இறுக்கிக் கயறுபோட்டு கட்டிவைத்தாற் போல நடக்கவேணும். தரையில்சரி. அந்தரத்தில் . .? நீளமான குச்சியை படுக்கவசம் பிடித்து நடக்க எத்தனை துணிச்சல் இருக்கணும். பயம் இருக்காதா . ! வீட்டுக்குள் சாதாரணமாக ஏணிமேல் ஏறி ஒட்டடை அடிக்கவோ வெள்ளையடிக்கவோ ஏணியைப் பிடித்துக்கொள்ள ஒராள், ஏணிநகராமல் பார்த்துக்கொள்ள இன்னொருஆள், என துணைக்கு ஆள்பிடிக்கும் காலத்தில் இந்த பச்சைமண் அசால்ட்டாய் ஏறிவிளையாடுகிறது  நிச்சயமாய் ஒருநாளில் ஒருநேரத்தில் பழகியிருக்க முடியாது. எத்தனை நாள்  எத்தனை பொழுது, அதோடா முடிந்திருக்கும் . .?

கும்பம்கீழேவிழுந்தால் . . நீள்கம்பு தவறிச் சாய்ந்தால், ஏன் இந்தப் பச்சைமண்ணே கயத்திலிருந்து தரையில் விழுந்தால்……? ஆறுதல் சொல்லி தூக்கிவிட்டிருப்பார்களா….. அடித்து சூடுபோட்டிருப்பார்களா…. சரியாய் வித்தை வராததால் சோறுகிடையாது என பட்டினி போட்டிருப்பார்களா…..? நினைக்கையிலேயே பெருசுக்கு உடம்பு சிலிர்த்தது. சொந்தப்பிள்ளையாய் இருந்தால் அப்படிச் செய்யமாட்டார்கள் ஒருவேளை ஆஸ்பத்திரியில் களவாடியபிள்ளை, அல்லது காசுகொடுத்து விலைக்கு வாங்கின பிள்ளையாக இருந்தால் பாசம் எப்படிவரும்.

“டவூண்டவூண்ட  டவண்ட  டவூண்டவூண்ட  டவண்ட ”

இப்போது மேளச்சத்தம் விடாமல் ஒலித்தது. ஆணும்பெண்ணும் சேர்ந்து ஒரேமாதரி இசைக்கலாயினர். ஆண், தனது வித்தையினை நிறுத்தியிருந்தான் வேடிக்கை பார்க்கும் கூட்டத்துடன் அவனும் சேர்ந்துகொண்டது தெரிந்தது. ஒருவேளை சிறுமியின் கும்பநடனம் மற்றவர்களைப்போல அவனையும் பதைக்கச் செய்திருக்குமோ . . ? பெருசுக்கு அப்படியெல்லாம்கூட தோன்றியது.

பெரியவனின் மகனும் இப்படித்தான். இங்கிருந்து  கிழவியோ தானோ போய்விட்டால் வேறு யாரிடமும் போகமாட்டான். ஊருக்கு வந்துசேருமட்டும் அவனைத் தூக்கிச்சுமந்து இடுப்பும் தோள்பட்டையும் வலியெடுத்துப்போகும். வீட்டுக்கு வந்துபடுத்தால் அந்தவலி அத்தனை சுகமாய் இனிக்கும் . வலி சுகமானது என்பதை அந்த நாளில்தான் பெருசும் கிழவியும் ஒருவருக் கொருவர் சொல்லிக்கொள்வார்கள். பிள்ளைகளைப் பெற்றபோது – அவர்களை காலமெல்லாம் தூக்கிச் சுமந்தபோதுகூட இத்தனை ருசி கிட்டவில்லை. பேரப்பிள்ளைகளிடம்  மட்டும் எப்படி இத்தனை தித்திப்பு .?

மூத்தவனின் வீட்டுவாசல்படிக்கு ஐந்துபடிகள். சாயங்கால வேளையில் அந்த வாசலில்தான் தெருசனங்கள் உட்கார்ந்து பேசுவார்கள். அத்தனை நீளமானது. உயரம் வழக்கமான முக்காலடி, அல்லது ஒரடிதான் இருக்கும். தம்மைப்போல எல்லோருடனும் சேர்ந்து ஊரைப்போல நாட்டைப்போல ஒன்னிரண்டு பேச்சுப் பேசவிடமாட்டான். எத்தனைபேர் உட்கார்ந்திருந்தாலும் எல்லோரையும் விட்டு விடுவான். கிழவியும் கிழவனும்தான் அவனுக்கு சோடி. வா . .வா . .என கையைப்பிடித்து இழுப்பான். நாடியைப் பிடித்துப் பிய்ப்பான்.

“அப்பாயி, தாத்தாவ ரெண்டு பேச்சு பேசவிட்றா…” அவனைப் பெற்றவர்கள் கண்டிப்பார்கள். பேரன் யாருக்கும் மசியமாட்டான். அவனது கோரிக்கை இதுதான். மேல்படியிலிருந்து கீழ்படிவரைக்கும் ஒவ்வொரு படியாய் நின்று குதிக்கவேண்டும் அதுதான்.அவனுக்கு முக்கிய விளையாட்டு.

அப்படிக் குதிக்கிறபோது கிழவியோ பெருசோ பக்கத்திலிருக்க வேண்டும். அம்மா அப்பாவை விரும்பமாட்டான். அவர்கள் சலித்துப் போவார்கள் என்பது காரணமாய் இருக்கலாம். அதுமட்டுமில்லாது ஒவ்வொரு குதிப்புக்கும் அவனோடு சேர்ந்து உற்சாகக்குரல் எழுப்புவது முக்கியம்.

“யே….. தம்பி குதிச்சுட்டாண்டா….. இன்னொரு குதி,! குதி .! .சூப்பரு…” முதல்படி, இரண்டாம்படி, மூன்றாம்படி வரை உற்சாகக்குரல் ஓங்கிஒங்கி வரும், நாலாவதுபடி வருகையில் வடிந்துவிடும். மீண்டும் முதலிலிருந்து, துவங்கும்.

இதை கலைப்பதற்கென சில வாண்டுகள் தெருவில் திரிவான்கள். முதல்படியிலிருந்து இரண்டாவதுபடிக்கு பேரன் குதிக்கிறபோதே கலகக்காரன், நேரே ஐந்தாவது படிக்கு குதித்து பேரனின் உற்சாகத்தைக் குலைத்திடுவான். அதனை ஈடுகட்ட கிழவி, நிலைப்படியிலிருந்து பேரனை அச்சுத்தூக்காய்த் தூக்கி கீழே ’டம்’ மென இறக்கி விடுவாள்.  “ தம்பிப்பய தாண்டிட்டாண்டா . “.

அவ்வளவுதான். பிள்ளைக்கு சந்தோசம் தாங்கமுடியாது. ’ஹே ஹே’ என கும்மாளமிட்டுக் குதிப்பான். அது தரையில்தான் என்றில்லை. தாத்தாவின் மடியாய் இருக்கலாம், அப்பத்தாளின் இடுப்பாய் அமையலாம். அவனோடு சேர்ந்து நாமும் குதிக்கவேண்டும். குறைந்தபட்சம் சத்தமாவது காட்ட வேண்டும். அதுதானாகவே வந்துவிடும். சிலசமயம் அவனையும் மீறின குரலாய் ஒலித்ததும் உண்டு. அதற்கப்பறம் நமக்கு அவனைக் கொஞ்சத் தோணும். முகத்தில் மட்டுமல்லாது வயிறு,கைகால், உச்சந்தலை என துணிமூடாத பகுதிகளில் – வெற்றுடம்பில் முத்தச்சண்டை நிகழும். பதிலுக்கு பேரப்பிள்ளைகளிடமிருந்தும் முத்தக்கணை வரும். ஆனால் இங்கிதமெல்லாம் அவர்களிடம் பார்க்கமுடியாது. அதும் சின்னவனின் மகனுக்கு முத்தமிடவே தெரியாது. “ஆச்சிக்கு ஒண்ணு, அம்மாய்க்கு ஒண்ணு” என்று முகத்தை நீட்டினால் தனது கிளிப்பல்லால் கடித்து வைப்பான். நினைக்கும்போதே பெருசுக்கு சிலிர்த்தது. உடனே இந்த இடத்திலேயே – பஸ்ஸ்டாண்டில் ஒரு கடி பெறவேணும்போல உடலும் மனமும் தவித்தது.

“ தாத்தா…..” அந்தரத்தில் ஆடிக்கொண்டிருந்த சிறுமி தனது ஆட்டத்தை முடித்துவிட்டு தரையில் இறங்கி தான் ஆடிய தட்டை கையிலேந்தி வந்தாள்.

பெருசுவுக்கு என்னசெய்வதென விளங்காமல் திகைத்தார். திடுமென அச்சிறுமியைத் தூக்கிக் கொஞ்சலானர். ” என்னப் பெத்தாளே . .! “பஸ்ஸ்டாண்டிலிருந்த அத்தனைபேரும்  அவரை அதிசயமாய்ப் பார்த்தனர்.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top