அதுவேறு

0
(0)

வீரபாண்டித்திருவிழா முடிந்து கடைகள் ஒவ்வொன்றாக டெம்போவிலும் லாரியிலுமாய் ஏறிச்சென்றுகொண்டு இருந்தன. ஒவ்வொரு வாகனத்தின் உச்சியிலும் எட்டுநாள் உறக்கச்சடவுடன் முகம்வீங்கிய மனிதர்கள் கட்டுக்கயிற்றைப் பிடித்தபடி பயணித்துக்கொண்டுஇருந்தனர்

 

சுருளியப்பனின் காப்பிக்கடை பெஞ்சில் உட்கார்ந்து போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வீருராசுவுக்கு ஒவ்வொரு வண்டியிலும் ஒருகதை தெரிந்தது.

 

இந்தவருசத் திருவிழாவிற்கு வீருராசு போகவில்லை. அனேகமாக தனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திருவிழா காலத்தில் கோயில் எல்லையை மிதிக்காத ஆண்டு இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

 

வீரபாண்டி இங்கிருந்து மிஞ்சிப்போனால் எட்டுமைல்தூரம்தான். பேருந்துக் கட்டணமென்றால் பத்துபதினைந்து ரூபாய் இருக்கும். போகவர முப்பதுருபாய் இருந்தால் போதும். அழகாக  திருவிழாவை வேடிக்கை பார்த்துத் விட்டுத் திரும்பலாம். பகலில் போனால் தீச்சட்டி நிறைவருசம் முடிப்பவர்கள். கிடா வெட்டி கும்பிடுவார்கள் எந்தப் பந்தியில் உட்கார்ந்தாலும் வயிறுமுட்ட கறிக்கஞ்சி கிடைக்கும். வாலிபத்தில் எட்டுநாளும் திருவிழாவுக்குப் போன சாட்சி உண்டு.  இனிமேல் அது வாய்க்குமா… ஏக்கமாயிருந்தது. குடும்பத்தோடு போய்வர ஐநூறு ஆயிரம் தேவைப்படும்.

 

”கொஞ்சம் தள்ளி ஒக்காருப்பா..”

 

ஒராள் வலதுகையில் தினசரியும் இடதுகையினில் தேனீர்த் த்ம்ளருமாக உட்காரவந்தான். வீருராசுவின் பக்கமாய் தம்ளரை வைத்து விட்டு தினசரியை இரண்டுகைகளாலும் விரித்து வாசிக்கலானான். தம்ளரில் விளிம்பிற்குமேல் நுரையேறி கொப்புளங்கள் உடைய ததும்பி நின்றது தேனீர்.

 

ஊரிலுள்ள் நல்லகடைகள் நாலைந்தில் சுருளியப்பனின் கடையும் ஒன்று. தேனீரோ காப்பியோ குடித்தால் நாக்கில் கொஞ்சநேரமாவது சூடும் சுவையும் நிற்கும். ஆனால் ஆள் சரியான வண்டன். யாருக்கும் தயவுதாட்சண்யம் காட்டமாட்டான். பேசுகிறபேச்சில் தீப்பிடிக்கும். கடன் என்கிற வார்த்தை அவனுக்குப் பிடிக்காது. தப்பித்தவறி கடன்பட்டால் அதனை வசூலிக்கும் விதம் அலாதியானது. கடன்காரனை எந்த நாளிலும் தேடிப்போகமாட்டான். அதிகமாகவும் கடன் நிலுவையிருக் காது மிஞ்சிப்போனால் பத்து அல்லது இருபது ரூபாய்தான். அதனால் உறுமீனைப்போல காத்திருப்பான். அப்படி சிக்குகிற மீன் சுருளியப்பனி டம் படாதபாடு பட்டு விடும்.

 

”ஒர் நிமிச்ம் இப்பிடி வாப்பா…”  என கடையின் இடதுபக்கமாய் அவனை வரவழைப்பான். இருபுறமும் திறவையான வசதியுள்ள கடை அது. முன்புறம் தகரத்தை நீட்டிவிட்டு வாடிக்கையாளர் உட்காரஇரண்டு மரபெஞ்சுகள் போட்டிருந்தான். வலப்பக்கம் அடைத்திருக்கும் கடை, பார்சல் வாங்கவரும் பெண்களுக்காகவும் நுழைவுவாசலாகவும் இடதுபுறம் பயன்பட்டுவந்தது. அதுஒரு சுணக்கமான பகுதி. நாலுபேர் நின்று தம்மடிக்க தோதுவான இடம். ஆனால் அப்படிப்பட்ட வேலைக் கெல்லாம் அனுமதிக்க மாட்டான்.

 

சுருளீயப்பனைப்பற்றித்தெரிந்தவர்கள். ‘இப்பிடி வா..’ எனக் கூப்பிட்ட உடனேயே சுதாரித்து விடுவார்கள். “ஒம்பாக்கியக் குடுக்கத் தானப்பா வந்தேன்..” என்றோ, “ நா வாரப்ப எல்லாம் ஒன்னிய கடைல பாக்கவே முடியல.” என சமாளித்தோ பாக்கியை கொடுத்து முடித்து விடுவார்கள். அந்த்குணம் தெரியாதவர்கள். ஏதோ விசயமாக்கும் என்று பக்கமாய்ப் போனால் அவ்வளவுதான்.

 

எடுத்த் எடுப்பில்,” ஆவுக சத்தி கொறஞ்சி போச்சா..?” என ஆரம்பிப்பான். “ பன்னி மூத்தரம் குடிச்சாப்பல் காப்பியக் குடிச்சிட்டு போனது மறந்து போச்சில்ல..”  அப்போதாவது சுதாரித்தால் ஓரளவு தப்பித்தான் அப்பவும் காசுதராமல் ஏதாவது சரிக்கட்டுகிறோம் என நினைத்து பதில் சொன்னால், செத்தான்  ‘’சட்டயமட்டும் வெளுப்பா போட்டுரிக்கீல்ல..கீழ வேட்டி காணாதுன்னு பேண்ட்.. மாட்டீருக்கீல்ல? வெக்கமாயில்ல..யா எத்தினி நாளாச்சி”

 

அடுத்த் கட்டமாய் பேண்ட்டையும் உருவிவிடுவனோ என பயம் கொள்ளாதவர் மிகச்சிலரே.  பிச்சைக்காரர்களுக்குக்கூட இங்கே தருமம் கிடைக்காது. “வேற கடயப் பார்… “ என்று தாட்சண்யம் காட்டாது விரட்டுவான். “யேவாரம் பாக்கறதுங்கறதே ஒரு தருமந்தான் தெரியுமா? .” முனகிக் கொள்வான்.

 

”ஆறிடப் போகுது ண்ணே.. டீயக் குடிக்கல்”  தினசரியில் லயித்துக் கிடந்தவனை உசுப்பிவிட்டன் வீருராசு.

 

”  ம் “ நினைவுபடுத்தியதற்கு நன்றி சொல்லிவிட்டு தம்ளரைக் கையிலெடுத்தான்.

 

”ணே… பீடி  இருக்குமா..”  தனது சட்டைப் பையிலிருந்து வெறும் தீப்பெட்டியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு கையேந்தினான் வீருராசு.

 

தம்ளரிலிருந்து தேனீரை ஒருமிடறு விழுங்கிய அந்தநபர், கையிலிருந்த தினசரியை விலக்கிக்கொண்டு வீருராசுவைப் பார்த்தார். “பீடியா..? ”

 

” ம் ” தலையையும் ஆட்டினான்.

”மலபார் பீடிதே இருக்கு.”

 

”சையது இல்லியா..”

 

தனது சட்டைப்பையிலிருந்து ஒருமலபார் பீடியை எடுத்து நீட்டினான்.

 

கொஞ்சம் தயங்கிய வீருராசு சின்ன ஏமாற்றத்துடன் அதனை வாங்கிக் கொண்டான். உடனே பற்றவைக்க துணிவில்லை. கம்பெனி மாறுகிறபோது இருமல் வரக்கூடும.

 

”தீப்பெட்டி வேணுமா..?”  வீருராசுவின் தாமதத்தைக் கண்ட அந்த நபர் மேலும் கேட்டான்.

 

”இருக்கு.”  – பீடி சேராது என்றால் கொடுத்ததை திரும்ப வாங்கிக் கொள்வானோ என்கிற சந்தேகமும் எழும்பியது. காலையில் எழுந்த நேரத்தில் ஒருபீடி குடித்தது. அதற்கப்பறம் வெறும் வாய்தான். நாக்கும் தொண்டைக்குழியும் என்னவோ போலிருக்கிறது. ஒருவாரம் சோறு கூட சாப்பிடாமல் இருந்துவிடலாம் போல, சனியன் இந்த பீடியைமட்டும் கொஞ்சநேரம் குடிக்காமல் தாக்காட்ட முடியவில்லை கிறுக்குப் பிடிச்சுப் போய்விடுகிறது.

 

மெல்ல எழுந்து கடைக்காரரிடம் போய் நின்றான். சுருளியப்பன் காப்பி பில்ட்டரைக் கழுவிக்கொண்டிருந்தான். புது டிக்காசனுக்காக  அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது. பிலடர். பித்தளையில் அரையடி உயரம் இருந்தது. கழுவிய பில்டரின் கீழ்பாகத்தை துணி கொண்டு துடைத்தவர், மேல் பாகத்திலிருந்த் சல்லடை கண்களை வாயால் ஊதி அடைப்புகளை நீக்கி இரண்டையும் பொருத்தி வைத்தார். முதலில் கொஞ்சம் சீனியை உள்ளே தூவிவிட்டு பாக்கட்டை உடைத்து காப்பித்தூளை கொட்டினார். திரும்பவும் கொஞ்சம் சீனியை மேலே தூவியதும் அடுப்பில் காய்ந்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து பில்டரில் ஊற்றினார். ஆவிபறக்க இறங்கிய வெந்நீர் கறுங் குழம்பாய் மேலெலும்பி நின்றது மூடியை மூடியதும் பிலட்டரை பட்டறையின் வலதுபக்க ஓரமாய் நகர்த்தி வைத்தார்.

 

”என்னா சுருளி டிக்காசனா..? “

 

” ம்.. வாசன வருதா..? “ பெருமையாய்க் கேட்டான்.

 

” நீ ஒராள்த்தேஞ் சுருளி வேல்யத்து இதச் செய்ற.. எல்லாரும் சிக்கரியப் போட்டு வேலய முடிச்சிருறாங்க..”

 

”அடுத்தாளப் பத்தி நமக்கெதுக்கு பேச்சு..” கையைக் கழுவிக் கொண்டான். அதற்குமேல் என்ன பேச, அதற்குள் ஒரு ஏவாரம் வந்துவிட்டது.

 

”இந்தவர்சம் வீரபாண்டி திருவிழாவில எல்லார்க்கும் நல்ல ஏவாரமாம் ல..”  கடை ஏவாரம் முடித்ததும் வீருராசு தனது பேச்சைத் துவக்கினான்.

 

”செலபேரு நல்லா இருந்துச்சுங்கறாங்க.. செலரு பத்தலங்கிறாங்க எங்கிட்டோ மொதல் போட்டவெ கை நட்டமில்லாம வாந்தாச் சரித்தே என்னா நாஞ்சொல்றது ” எனக் கேட்ட சுருளியப்பன்.,” நீயென்னா கடய தாங்கி நிக்கிறவெ.. டீ போடணுமா..? “ என விசயத்துக்கு வந்தான்.

 

”அதுக்கெல்லா இன்னிக்கி வசதி இல்லசுருளி. சேப்பு ஓட்டயாக் கெடக்கு..” என பகடி பேசினான் வீருராசு.

 

”அப்படீன்னா.. அங்கிட்டு ஓரமாப் போயி ஒக்காரு. ” அடுத்த ஏவாரத்தை கவனிக்கத் தொடங்கினான்.

 

செங்கல் சூளையில் மண்ண்டிப்புக்கு வேலையில்லாத காலங்களில் சுருளியப்பன் கடைதான் வீருராசுவின் இருப்பிடம். ஊரின் முக்கியவீதி இது. வேடிக்கை பார்க்கவும்  ஏதாவது வேலைநிலமைகளை அறிந்துகொள்ளவும் வாய்ப்பான இடம்.அதுமட்டுமல்லாமல்அவ்வப்போது சுருளியப்பனும் தனது கடைக்கு ஏதாவது சாமான்கள் வாங்கிவர என சின்னச் சின்ன எடுபிடி வேலைகள் செய்யச் சொல்லுவான். அதுமாதிரி யான சந்தர்ப்பங்களில் வீருராசுவுக்கு டீ , பீடி இலவசமாகக் கிடைக்கும்.

“ கடைக்கு எதுனாச்சும் வாங்கணுமா சுருளி..” நாக்கு டீத் தண்ணிக்கு அல்லாடியது

.

அதற்கான பதிலேதும் சொல்லாமல், “ஒக்கார்.. ஒக்கார்..” என்றான்

.

உட்காரப் போகவில்லை வீரூராசு.

 

“போய்யா…”

 

“இந்த பீடிக்கி ஒரு சையது பீடி குடேன்..”

 

அந்தநேரம் டீக் குடித்த் அந்தநபர் காலித்தம்ளரை வைத்துவிட்டு காசைக் கொடுக்க்வந்தார்.

 

“குடிக்கிறது ஓசிப்பீடி.. இதுல பிராண்டல்லா பாக்கக்குடாது.. சும்மா குடிப்பா..இத்லயும் பொகதே வரும் ” சுருளியப்பன் நய்யாண்டி செய்தான்.

 

“பொகச்சல் வரும் சுருளி..”

 

“தண்ணீல நனச்சுக்குடி..” எனற சுருளியப்ப்ன்,” சில்லறை ரெண்டு ரூவா இருந்தா குடுங்க..” என அந்தநபருக்கு பாக்கிகொடுக்கும் பணியில் மூழ்கலானான்.

 

சில்லரை கொடுத்து மீதியை வாங்கிக்கொண்ட அந்த்நபர், “அதேன் பொகச்சல் வருங்கிறார்ல மாத்திக் குடுத்துவிடுங்க நாங் குடுத்த பீடிதே..” என வீருராசுவுக்கு சிபாரிசு செய்தார்.

 

“அது தப்புங்க… இன்னிக்கி நீங்க குடுத்த பீடின்னு மாத்திக்குடுத்தா  நாளைக்கி கீழ கெடக்கிறத எடுத்து வருவாப்ல.. அதையும் மாத்திக் கேப்பாப்ல.. குடுக்கலாமா.. “

 

“அம்பதுகாசு பீடிக்கு இம்ம்பிட்டு யோசிக்க வேணாம்.. அவெவெ ஜவுளிக்கடைல் ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு எடுத்த உருப்படிகளையே அன்னுமறுநாள் போயி மாத்திவாராங்கெ..”

 

“ அதுவேற.. இதுவேற..ங்க.. எச்சிப்பீடிக்கும் பட்டுச்சேலைக்கும் முடிச்சுப் போடறீங்க..”

 

கடையைவிட்டு வெளியில்வந்த அந்த நபர் வீருராசுவிடம் இரண்டு ரூபாய் கொடுத்தார்.” இந்தாள் கடைல இன்னிமேல் ஏவாரம் வச்சுக்காதீங்க.. வேற கடைல பீடிவாங்கி குடிங்க..”  என சொல்லி விட்டுக் கிளம்பினார்.

 

அந்தநபர் கொடுத்த காசு உள்ளங்கையில் பொதிந்து உறுத்திக் கொண்டிருந்தது. அப்பவும் வீருராசு சுருளியப்பனின் கடைப் பெஞ்சியில் தான் உட்கார்ந்திருந்தான். என்ன செய்வதென விளங்கவில்லை. கையில்காசு… வாயில் பீடிக்கான நமைச்சல்… வாடிக்கைக் கடை…. காசுகொடுத்த நபரின் உத்தரவு….. குழப்பமாய் இருந்தது.

 

அப்போது ஒரு ராட்சத ராட்டிணத்தின் கட்டுமான உதிரிபாகங்கள் ஏற்றப்பட்ட பெரிய லாரி ஒன்று திணறியபடி கடந்து சென்றது.

 

“ அப்பா…! “

 

திரும்பிப்பார்த்தான்.

வீருராசுவின் கடைக்குட்டியான ஏழுவயசுப் பையன் தன்நண்பர்கள் புடைசூழ நின்றிருந்தான். அவனுக்கு தன் அப்பாவை கண்டு விட்டதில் அத்தனை மகிழ்ச்சி. அதனை அவனது குரலும் முகமும் காட்டின.

“யே.. என்னாடா ரோட்டுப்பக்கம்..? ”

 

தந்தையின் பதட்டத்தை கொஞ்சமும் கண்டுகொளாதவனாய், “காசு குடுப்பா…” என கையேந்தி நின்றான்.

 

காசு என்றதும் வீருராசுவுக்கு நலவிசாரணை அத்தனையும் வற்றிப்போனது. “ காசா..”  கையை விரித்து “ இல்ல..” என்றான்.

 

விரித்த கையிலிருந்த இரண்டு ரூபாய் ஏழுவயது மகனிடம் மாறியது.. “ முட்டாய் வாங்கிக்கறட்டா..”  கேட்டுக்கொண்டே சுருளியப்பன் கடையில் காசைக் கொடுத்தான்.

 

மிட்டாயை வாங்கி டவுசர் பாக்கட்டில் பத்திரப்படுத்தியவன், “வீட்டுக்குப் போறேம்ப்பா..” என நல்ல பிள்ளையாய் நகர்ந்தான்.

 

வீருராசுவுக்கு நாக்கு மேலண்ணத்தில் பசைபோட்டது போல ஒட்டிக்கொண்டது. தண்ணீர் குடிக்க சுருளியப்பன் கடைக்கு மறுபடி வந்தான். டீ பட்டறை ஓரமாய் பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது.

 

“தண்ணி குடிச்சுக்கறே சுருளி..” அனுமதி கேட்டு இரண்டு தம்ளர் மொண்டு குடித்தான்.

 

குடத்தைமூடி தம்ளரை மூடியின்மேல் வைத்துவிட்டுத் திரும்பிய போது வீருராசுவின் கடைக்குட்டி மறுபடியும் வந்திருந்தான்.

 

“என்னாடா வீட்டுக்குப் போகாம இன்னமுஞ் சுத்தீட்ருக்கியா..” ஓங்கிச் ச்த்தம் கொடுத்தான்.

 

டவுசர் பாக்கட்டிலிருந்து மிட்டாயை எடுத்த பையன்,” இந்த முட்டாய் வேணாம்ப்பா.. ’பூமர்’  வாங்கிக்கறேன்..” என்றான்.

 

வீருராசு பரிதாபமாய் நின்றான். சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தனது தலைக்குள் செல்வதாக உணர்ந்தான்.

 

அப்போது “ டேய் வாண்டு என்னாடா…  இங்கவா” என சுருளியப்பன் வீருராசுவின் பையனைக் கூப்பிட்டான். மிட்டாயை மாற்றிக் கொடுத்ததோடு சையது பீடி ஒன்றையும் த்ந்தனுப்பினான்.

 

சாலையில் திருவிழாக் கடைகளைச் சும்ந்து செல்லும் லாரிகளின் போக்குவரத்து இன்னமும் ஓயவில்லை

 

இப்போது லாரியில்  சர்க்கஸ் யானை ஒன்று கட்ந்து போனது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top