அதாக்கப்பட்டது

5
(4)

எல்லையில்லாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் வானை முட்டிக் கொண்டு கட்டிடங்களாய் நிறைந்திருந்தன. வானம் தண்ணீர்ப்பச்சை வண்ணத்தில் மேகங்களே இல்லாமல் பரவிக்கிடந்தது. அதே தண்ணீர்ப்பச்சை வண்ணத்தில் கட்டிடங்கள் கண்ணாடிகளால் போர்த்தப்பட்டிருந்தன. கண்ணாடிகள் வழியே கரும்பச்சைக் கோடுகள் அவைகளைச் சம சதுரங்களாய்ப் பிரித்துக் கொண்டு சின்னதாய் மின்னியவாறு ஒடின.

அந்தக் கண்ணாடிகள் மீது ஆண்களும் பெண்களுமாய் மேலும் கீழும் நடந்து கொண்டிருந்தார்கள். சிகப்பு நிறத்திலிருந்த அந்தப் பெண்கள் கருப்பு நிறத்தில் குட்டைப்பாவாடையும் மேல்ச்சட்டையும் உள்சட்டையாக வெள்ளைநிறத்திலும் அணிந்திருந்தார்கள். சிலர் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். அவர்களைக் கடக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து புன்னைகை செய்து கொண்டே கடந்தார்கள். அவர்களது உயரமான ஹீல்ஸ் செருப்புக்களின் வேகமான நடையில் சத்தமே வரவில்லை. எல்லா நிறத்திலுமான ஆண்களும் கருப்பு கோட் சூட் போட்டுக் கொண்டு வெள்ளைநிற உள்ச்சட்டை அணிந்து கருப்பு வண்ண டையைக் கட்டிக் கொண்டு சூட்கேசுகளோடும் பூட்ஸ் காலுகளோடும் வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். இவர்களும் தங்களைக் கடப்பவர்களுக்கு புன்னகை அளித்தார்கள். இவர்களின் இந்தப் புன்னகைகளால் நுண்விநாடிக்கொருமுறை உதடுகள் விரிந்து மூடிக் கொண்டிருந்தன. அந்தக் கண்ணாடிகள் மீது நடந்து கொண்டிருந்தவர்கள் ஆங்காங்கே திடீர்த் திடீரென்று அப்படியே எய்யப்பட்ட அம்பைப் போல கண்ணாடிக்குள் மறைந்தார்கள். அப்படி மறைந்தவர்கள் அந்தக் கட்டிடங்களுக்குள் இருந்த அவரவரது அலுவலக நாற்காலிகளில் சொய்ங்க் சொய்ங்க் என்றமர்ந்து காற்றில் எழுந்து நிற்கிற கணிணியை விரல்களால் தடவி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

ரிஷ்வந்த்தும் மிகக் கவனமாக விரலசைவுகளால் தன் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான்.

“மிஸ்தர் ரிஷ்வந்த் யூ ஆர் செலக்ட்டேட்..” என்ற கணிணியின் கரகர குரலோடு அவனது கனவு கலைந்தது. இரண்டு எருமை மாடுகள் கட்டப்பட்டிருந்த அந்தச் சின்னக் கொட்டத்தில் கயிற்றுக் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அவனது கனவு கலைந்த பொழுது ஒரு எருமை மாடு ம்மாஆ என்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்திக் கொண்டிருந்தது. பாலுக்கு அவிழ்த்து விடப்பட்ட கன்னுக்குட்டி இவனது முகத்தை நக்கி நக்கி நக்கிய நாக்கைச் சுழற்றி அதனுடைய வாயையும் நக்கியது. நீளமான மூக்கும் மடல் மடங்கிய காதுகளும் சிவந்த சதுர முகத்தில் அரும்பு மீசையும் ஆங்காங்கே முளைத்த தாடியுமாய்..

“அம்மா இதப் புடிச்சு அங்கிட்டுக் கட்டுமா..” என்று கத்தினான் ரிஷ்வந்த். தூக்கம் கலைந்த முகத்தை வெறும் கைகளால் துடைத்துக் கொண்டு அப்படியே உடம்பை முறுக்கி எழுந்தான். கன்றுக்குட்டி விடாமல் அவனது கைகளை நக்க ஆரம்பித்தது.

“ ஏம்ப்பா மூனு மணிக்கு பஸ்ஸுக்கு கெளம்பனும்ன்னு சொன்ன..” பாலைக் கரந்து கொண்டே ரிஷ்வந்த்தின் அப்பா மாயதுரை கேட்டார்.

“ நடு ராத்திரி ரெண்டு மணிக்கு பால் பீச்சாதீங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்., கேக்கவே மாட்டீங்களாப்பா..” மாயதுரைக்கு ரிஷ்வந்த்தின் பேச்சு பெரிதாகப்படவில்லை. கரப்பதில் கவனமாய் இருந்தார். ரிஷ்வந்த் கன்றுக்குட்டியை இழுத்து கொட்டத்துக் குத்துக்கல்லில் கட்டினான்.

“ விடுப்பா இப்பப் பீச்சுனாத்தேன் காலைல நாலுமணிக்கெல்லாம் கடைகளுக்கு பால் கொண்டு போக முடியும்., நேரத்துக்கு கொண்டு போகலன்னா அவய்ங்க வசவக் கேக்க முடியாது.. நீ வா சுடுதண்ணி போட்டு வச்சிருக்கேன் குளிச்சுட்டுக் கெளம்பு..” என்ற தங்கம்மாள் சொளகில் எடுத்து வந்த தவிட்டை குளுதானியில் போட்டுக் கலக்கி இன்னொரு மாட்டை அவிழ்த்து தண்ணிக்கி விட்டாள். குளுதானியில் தவிடு கலக்கிய அவளது கையில் முழங்கை வரை ஒட்டியிருந்த தவிட்டை நக்கிச் சுவைத்த எருமை மெல்லியதாய் ம்மென்ற மூச்சோடு தலையை குளுதானிக்குள் கண் வரை முக்கி குடிக்க ஆரம்பித்தது.

குளித்து முடித்து பேண்ட் சட்டை அணிந்து தன் பயணத்துக்கான துணிமணிகளை பேக்கில் அடைத்துக் கொண்டு அம்மா.. என்ற ரிஷ்வந்தின் குரலுக்கு மாட்டை கொட்டத்தில் கட்டிவிட்டு வேகமாக வீட்டுக்குள் வந்த தங்கம்மாள்..

“என்னப்பா எல்லாம் எடுத்துக்கிட்டியா., கவனமாப் போயி கவனமா வரணும்ப்பா., அப்பா கூட பைக்ல போயி பஸ்டாண்டில இறங்கிக்க..” என்றவள் தன் கணவனை அழைத்தாள்.

இருவருமாய்ச் சேர்ந்து குலசாமியைக் கும்பிட்டு ரிஷ்வந்த்திற்கு விபூதி பூசிவிட்டார்கள். தங்கம்மாள் சாமி படம் முன்னிருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து ரிஷ்வந்தின் பைக்குள் வைத்துவிட்டாள். அவனும் அம்மா அப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டான். அப்பனும் மகனுமாய் கிளம்பிவிட்டார்கள். இருவரும் அந்த நிலா வெளிச்சத்தில் தெரு முனையிலிருந்து மறையும் வரை தங்கம்மாள் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். காகங்கள் கரையும் சத்தமும் சேவலின் கூவல்களும் அவளின் காதுகளில் விழுந்து கொண்டிருந்தாலும் அவளின் மனக்கண்ணில் ஓட ஆரம்பித்த காட்சிகள் இதயத்தில் காயாமல் படிந்திருந்த சாட்சிகளாய் எழுந்தன. கொதிக்கிற உலை தண்டமானம் போடுவது போலிருந்தன அக்காட்சிகள்.

ங்கம்மாளுக்கு பத்து வயது இருக்கும்..

“எங்கடி ஒம்புருசன்..” என வீட்டிற்குள் மொது மொதுவென நுழைந்த போலிஸாரில் ஒருவன் தங்கம்மாளின் அம்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவாறு கேட்டான். அம்மாவின் சேலைக்குள் தங்கம்மாள் கதறிக்கொண்டிருந்தாள். போலிஸ்கார கண்களின் வீச்சு தங்கம்மாள் மீது பாய்ந்தது. அவர்களது கால்களில் புரண்டு கதறினாள் அவள் அம்மா. உதறித் தள்ளினார்கள்.

“என்ன நாடகம் போடுறீங்களா..? ஒம்புருசன அவ்வளவு லேசா விட்டுட மாட்டோம்., சிக்கட்டும் அவஞ் சாணிதேன்..” என்றவாறு இருந்த நாலு சாமான் சட்டுகளையும் துணிகளையும் விசிறிவிட்டுக் கிளம்பினார்கள். தங்கம்மாள் அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

இச்சம்பவம் அவர்களது வீட்டில் மட்டுமல்ல அந்தப் பகுதியில் தினமும் ஏதாவது இரண்டொரு வீடுகளில் நடந்து கொண்டிருக்கும். அந்தப்பகுதி ஊரின் சந்தைக்குப் பின்னால் தான் இருந்தது. ஊரோடு ஒட்டியிருந்தாலும் அது தீவு மாதிரிதான். ஊர்க்காரர்கள் அந்தப்பகுதிக்குள் அவ்வளவு சாதாரணமாக நுழைந்து விடமாட்டார்கள். அப்படி அவர்கள் நுழைவதை அசிங்கம் என்றும்., அப்படி உள்ளே நுழைந்துவிட்டால் போன பொருளோடு திரும்ப முடியாதென்றும்., அங்கிருப்பவர்கள் மிரட்டியோ ஏமாற்றியோ பிடிங்கிக் கொள்வார்கள் என்றும்., அவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள் என்றும் அடியாட்கள் என்றும்., அங்கிருப்பவர்களுக்கு திருடுவதும் ஏமாற்றுவதும் சாராயம் காய்ச்சுவதும் கஞ்சா கடத்துவதும் தான் தொழில் எனவும் பேசிக் கொள்வார்கள். தங்கம்மாள் பிறந்த சமூகத்தில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

பெரும் பனங்காடுகளாக இருந்த பகுதி 1895 ல் முல்லைப் பெரியாறு அணைத் திறப்பால் இன்று பெரும் விவசாயப் பகுதியாக மாறியிருந்தாலும்., அது பெரும் தனக்காரர்களுக்கும் சாதியால் மேம்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களின் வாழ்க்கையை மட்டுமே அவரவர் தகுதிக்குத் தக்கன செழுமைப் படுத்தியிருந்தது. இந்தியச் சட்டம் 1919ன் படி தங்கம்மாளின் சாதியினருக்கான சீர்திருத்தத் திட்டம் 1920 லிருந்து அமல்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மேம்படுவதற்கு ஒரு நூற்றாண்டு காலம் இன்னும் போதவில்லை.

ஒரு காலத்தில் வேட்டையும் களவும் காவலுமாய் வாழ்ந்த சமூகம். ஆங்கிலேயர் காலத்தில் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு அச்ச்சட்டம் காலாவதியாகிப் போனாலும் அந்தச் சமூகம்  இன்று வரை களவுக்கான சமூகமாகவும் அடியாட்களுக்கான சமூகமாகவும் பார்க்கப்படுவது வெகுவாகவொன்றும் மாறிவிடவில்லை.

திருந்தியவர்களை காவல்துறை விடாது. தொழில் செய்து கொண்டு மாமூல் வெட்டாவிட்டாலும் வீடுகளுக்குள் புகுந்து கலவரம் செய்யும். இல்லையென்றால் ஏதாவதொரு பிரச்சனையை உருவாக்கிப் பஞ்சாய்த்துப் பேசிப் பணத்தைப் பறிக்கும். உயிரைப் பணயம் வைத்து அவர்கள் சம்பாரிப்பதை விட அவர்கள் சம்பாத்தியத்தில் சொகுசு கண்டவர்களே அதிகம். ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னான இந்திய அரசியலமைப்பு காலப் போக்கில் அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை கல்வியாலும் கொஞ்சம் முன்னேற்றி இருக்கிறது. மரியாதையையும் அவர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இருந்தாலும்.. அந்தப் இடைப்பழமையின் வேர் இன்னும் கருகாமல்தான் இருந்து வருகிறது.

இந்தப் பழிபாவங்களில் இருந்து மகன் நல்ல வாழ்க்கை வாழ்வேண்டும் என்பதே தங்கம்மாளின் வாழ்நாள் எண்ணமாக மாறிப் போயிருந்தது. திரண்டிருந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டு கொட்டத்தில் கத்திய கன்றுக்குட்டியை நோக்கிப் போனாள்.

தங்கம்மாள் தனது முப்பதெட்டாவது வயதில் தான் தன்னை விட இரண்டு வயது மூத்த மாயதுரையை இரண்டாவது கணவனாக கட்டிக் கொண்டாள். தங்கம்மாளின் முதல் கணவன் அவளுக்குத் தாலிகட்டிய அன்று இரவே போலிசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போனவன். இன்று வரை போலிஸ் ரெக்கார்டில் தேடப்படும் குற்றவாளியாகவே இருந்து வருகிறான்.

பேருந்து நிலையத்தை அப்பனும் மகனும் வந்தடைந்தார்கள். ரிஷ்வந்த் தனது பையை எடுத்து முதுகில் மாட்டிக்கொண்டான். அங்கிருந்த டீக்கடையில் இருவருக்கும் டீ சொன்னார்கள்.

“ மனே கவனமா இருக்கணும்ப்பா., போய் வர இடங்கள்ல பக்குவமா இரு., நல்லா வரணும்ப்பா., உன்னய வச்சுத்தேன் நம்ம குடும்ப முன்னேத்தமே இருக்கு., ஏதோ ஆத்தாவும் நானுஞ் சேந்து எங்களால முடிஞ்சளவுக்கு உனக்கு செஞ்சாச்சு., இனி எல்லாம் ஒங்கையிலதேன் இருக்கு., மரியதையான பொழப்பா பொழைக்கணும்ப்பா.,.,” மாயதுரையின் தொண்டையில் வறண்ட தண்ணீர் கண்களில் தழுதழுத்தது.

“அப்பா..” என்றான் தொண்டை அடைக்க.,

“ஒங்கம்மா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லப்பா., அதுக்கு சளைக்காது நாம்பட்ட கஷ்டமும்., மனசுக்கே பிடிக்காம வேற வழியில்லாம அடியாள் வேலைக்குப் போயிருக்கேன்., இன்னக்கி என்னதேன் மாடு வச்சு பொழப்பு பொழச்சாலும்., ஊருக்குள்ள பாக்குற சனங்களுக்கு நான் இன்னும் அடியாள்தேன். ஒன்னு கஞ்சா விக்கணும் இல்ல சாராயங்காய்ச்சணும் அதுவுமில்லையா அடியாள் வேலதேன் அன்னக்கி., ஏதோ நாம சனங்க ஒன்னுரெண்ட சேத்து வச்சு பிள்ளைக படிக்கனும்ன்னு ஆசப்பட்டாக, இந்தப் பொழப்பு நம்மளோட சமாதியாயிரணும்ன்னு நெனச்ச நெனப்பும் அதுக்குத் தகுந்த மாதிரி பள்ளிக்கூடமும் சத்துணவுச் சோறும் கெடச்சதால ஒன்னு ரெண்டா முன்னுக்கு வந்து அப்படியே பெருகிக்கிட்டு இருக்கு அந்தப் பெருக்கத்துல நீயும் சேந்துரணும்ப்பா.,” தட்டுத் தடுமாறும் வார்த்தைகளால் மாயதுரையின் அகம் கசிந்தது. ரிஷ்வந்த் கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது. மூக்கை உறிஞ்சிக்கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டான்.

மாயதுரை தனது பனிரெண்டு வயதிலேயே சின்னச் சின்ன கஞ்சாப் பொட்டலங்களை விற்க ஆரம்பித்தவர். ஒருமுறை அவரிடம் கஞ்சா வாங்கிச் சென்றவன் போதையில் தன் மனைவியையும் குழந்தைகளையும் கழுத்தை அறுத்துக் கொன்ற செய்தி கேள்விப்பட்டவுடன் கஞ்சா விற்பதை நிறுத்திவிட்டிருந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பண்ணையம் செய்து வந்த பால்சாமிபிள்ளையிடம் காவல்காரர் என்ற பெயரில் அடியாள் வேலை பார்த்து வந்தார். பால்ச்சாமிபிள்ளையும் சண்முகம் செட்டியாரும் ஊருக்குள் விதைத்திருந்த கடன்களை வட்டியும் முதலுமாய் அறுவடை செய்வதும் கடன் கட்ட முடியதவர்களை வீட்டைவிட்டும் சில நேரங்களில் ஊரைவிட்டு விரட்டுவதுமென முதலாளிகளுக்கான விசுவாசியாக இருந்தார். பால்சாமிபிள்ளை சண்முகம் செட்டியாரின் கேடுகெட்ட பொறுக்கித்தனங்களுக்கு ஆதரவளிக்க மனங்கொள்ளாமல் போலிசாருக்கு துப்பு தருபவராக தனது முப்பதாவது வயதில் மாறியிருந்தார்.

ஒரு சூழலில் கம்யூனிஸ்ட் தோழர்களின் தொடர்பால் கடனுக்கு பால்வாங்கி தோழர்களின் குடும்பங்களுக்கு ஊற்றத் தொடங்கியவரின் மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று சில மாடுகளுக்கு உரிமையாளராய் மாறியிருக்கிறார். இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் கஞ்சாவிற்றதும் பால்சாமிபிள்ளையின் வார்த்தைகளுக்கு கண்மண் தெரியாமல் அடியாளாய் அவருக்காக செய்த வேலையும் அப்படியே மாயதுரையின் பெயருக்கு முன்னால் இன்சியலாக மாறியிருந்தன.

 

“ யப்பா., டீயக் குடிப்பா., ஒங்க ரெண்டுபேரு நெனப்புக்கும் தப்பாம இருப்பேம்பா., பாத்து வீட்டுக்குப் போங்க., நான் அங்க போயிட்டுக் கூப்பிடுறேன். பேருந்தில் ஏறி அமர்ந்தான் ரிஷ்வந்த். பேருந்து கிளம்ப மாயதுரையும் மகனைப் பார்த்துக் கொண்டே நின்றார். பேருந்து கிளம்பி வளைவு தாண்டியதும்.. பிள்ளைக்கு கஷ்ட நஷ்டத்தத் சொல்லியே வளர்த்திருக்கிறோம், அவனும் அதை நன்றாகவே புரிந்திருக்கிறான், எப்படியாவது நல்ல நிலைக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு குலசாமியை மனதில் நினைத்துக் கொண்டு பால்கேன்கள் கட்டிய தனது பைக்கை நோக்கிக் நடந்தார்.

ரிஷ்வந்த் சென்னைக்கு தன்னை வரச் சொன்ன தனது நண்பன் வரதன்முதலிக்கு வாட்சாப்பில் தான் கிளம்பிவிட்ட செய்தியைத் தட்டிவிட்டு அப்படியே சன்னலோரத்தில் சாய்ந்தான். அம்மாவும் அப்பாவும் அவனுக்குச் சொல்லி வளர்த்த வார்த்தைகள் அவனுக்குள் வைராக்கியத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ்வார்த்தைகள் அவனுக்குள் திரும்பத் திரும்ப காட்சிகளாய் விரிய அப்படியே தூங்கிப் போனான்.

மூன்றறை மணிக்கெல்லாம் சென்னை கோயம்பேடில் இறங்கினான் ரிஷ்வந்த். வானத்தை அண்ணாந்து பார்த்து கொஞ்சம் மூச்சை இழுத்துவிட்டான். சென்னை அவனுக்குப் புதிது. மெட்ரோ ரயில் அந்தரத்தில் ஒரு மரவட்டையைப் போல ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கட்டிடங்கள் உயர்ந்து நின்றன. அவன் கண்ட கனவில் வந்த கட்டிடங்களாகவே இவன் மனதில் பட்டது. ஆனால் மனிதர்கள் மட்டும் அக்கட்டிடத்தில் நடந்தவர்கள் போலில்லை.

அவனது செல்போன் அழைப்பை எடுத்தான். வரதன்முதலி அழைத்திருந்தான்.

“என்னடா வந்திட்டியா..”

“வந்துட்டேன் மாப்ள..”

“சரி அப்படியே வெளில வா, ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்துல நிக்கிறேன்”

”ம்.. வர்றேன்” என்ற ரிஷ்வந்த் பக்கத்திலிருந்த கண்டக்டரிடம் விசாரித்துக் கொண்டு வேகமாக நடந்தான்.

“வாடா.. வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க..”

“பரவாயில்லடா.. அம்மா அப்பா ரெண்டு பேருக்குமே என்னப் பத்திதான் கவல.. அவங்கள நல்லா வச்சுக்கிரணும்..”

“கவலைய விட்றா.. அதேன் நான் இருக்கன்ல.. வா போகலாம் வண்டியில உட்காரு..” என்றான் வரதன்முதலி.

வரதன்முதலியும் ரிஷ்வந்த்தும் கல்லூரி நண்பர்கள். நெருக்கமானவர்களும் கூட வரதன்முதலிக்கு ரிஷ்வந்த் மீதும் அவனது குடும்பம் மீதும் எப்பொழுதும் தனிப்பாசமுண்டு. சில நேரங்களில் ரிஷ்வந்த் வரதன்முதலி என்ற அவனது பெயருக்காகவே கிண்டலடிப்பான்.

”என்னடா அவனவன் பேருக்குப் பின்னாடிதேன் சாதியச் சேப்பாங்க.. ஒனக்கென்னடா பேருலேயே சாதி இருக்கு..” என்ற ரிஷ்வந்தின் கேள்விக்கு வண்டியோட்டிக் கொண்டே பதில் சொன்னான் வரதன்முதலி.

”அத ஏண்டா கேக்குற., எங்கப்பாவுக்கு சாதிப்பாசம் அதிகம். இப்பெல்லாம் சாதிப்பாசம் உள்ளுக்குள்ள இருந்தாலும் அடிக்கடி பேருக்குப் பின்னாடி போட்டுக்கிற வழக்கமெல்லாம் கொறஞ்சிட்டே வருதாம்., அதுக்காகவே இப்படி பேர வச்சுட்டாரு. நாம்படுற அவஸ்த எனக்குத்தான தெரியும்., பேர மாத்தலாம்ன்னு நெனச்சா.. அவரு போய்ச் சேந்த பெறகுதேன் நடக்கும் போல..”

“லேய்.. இதுக்காவே ஒங்கப்பாவக் கொன்றாதடா..” இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

வண்டியை அந்த டீக்கடையின் முன் நிறுத்தினார்கள். டீக்கடைக்காரர் வரதன்முதலிக்கு வணக்கம் வைத்தார். வழக்கமான கடை போல.,

”ரெண்டு டீண்ணே.. அண்ணே திண்டுக்கல்றா.. பேசுனாருன்னா லியோனி தோத்துப் போவாப்ல..” என்றான் வரதன்முதலி.

” வ்வோ..” என்ற ரிஷ்வந்த்

“ஏண்டா எப்பவுமே இண்டர்வியூ காலைலதேன் வப்பாங்க.. இங்க மட்டும் என்னா சாயங்காலமா வச்சிருக்காங்க..”

“அது அப்படித்தான்டா.. இன்னிக்கெல்லாம் ஒலகம் வேற மாதிரி போய்ட்டிருக்கு.. சரி இந்தா டீயக்குடி..” வந்த டீயை வாங்கி ரிஷ்வந்திடம் கொடுத்தான்.

“சரி.. நேரமில்ல., டீயக் குடிச்சுட்டு இங்கேயே ரெஃப்ரஷ்    ஆகிக்க.. இன்னக்கி இண்டர்வியூ பண்றவரு எங்க ரெஜினல் மேனேஜர். அவரு டைம்ம ஒட்டிதேன் இண்டர்வியூவுக்கே கால் கொடுத்திருக்காங்க., ஆளு நல்ல மனுசன். ஆளப் பாத்த உடனையே அனலைஸ் பண்ணிருவாப்ல.. அவரு சொல்றத மட்டும் நல்லாக் கேட்டுக்க., வாழ்க்கையில முன்னுக்க வந்திரலாம் ஷேஃப்பா செட்டில் ஆகிடலாம்., நானும் உன்னப் பத்திச் சொல்லிருக்கேன்., வேல உறுதிடா..” என்றவாறு குடித்த டீக்கிளாஸை வாங்கி கடையில் கொடுத்த வரதன்முதலி தண்ணீர் பாட்டிலொன்றை வாங்கி ரிஷ்வந்த் முகம் கழுவக் கொடுத்தான். முகம் கழுவிக்கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

அது ஏழு அடுக்குக்கட்டிடம். நான்காவது தளம் முழுவதையும் அந்த வங்கி ஆக்கிரமிப்பு செய்திருந்தது. லிப்டில் வந்த அனுபவமே ரிஷ்வந்த்திற்குள் பட்டாம்பூச்சிகள் பறந்தன. வங்கியின் அமைப்பைப் பார்த்ததும் பிரமித்துப் போனான். குளிரூட்டப்பட்ட அந்த இடம் முழுவதும் சீன மர வேலைப்பாடுகளால் அறைகளாகப் பிரிக்கப்பட்டு கண்ணாடிகளால் வேயப்பட்டிருந்தன.

ரிசப்சனில் அழகு பொம்மையாய் இருந்த அந்தப் பெண் அவளது மென்மையாகப் பூசப்பட்ட லிப்ஸ்டிக் உதடுகளால் வெல்கம் என்றபொழுது ரிஷ்வந்த் உருகிப்போனான். வரதன்முதலி சிரித்தவாறு இவனை இழுத்துகொண்டு உள்ளே நடந்தான்.

அந்தப் பெரிய அறைக்கு முன்னால் வராந்தாவில் போடப்பட்டிருந்த இணைப்பு நாற்காலிகளில் இண்டர்வியூவிற்கு இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். வரதன்முதலி ரிஷ்வந்த்தை அமரச் சொன்னான்.

“சரிடா மாப்ள.. பெஸ்ட் ஆஃப் லக்., சார்கிட்ட ஏற்கனவே உன்னப்பத்திச் சொல்லிருக்கேன்.. முடிச்சுட்டு ரிசப்சன்ல எம்பேரச் சொல்லு எனக்கு இண்டர்காம் லிங்க் குடுப்பாங்க.. அப்படியே வெளில போய்ட்டு வரலாம்..” என்றவாறு அவனது தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு அவனுக்கான மேனேஜர் கேபினை நோக்கி நடந்தான் வரதன்முதலி.

“ரிஷ்வந்த்..” அழைத்தார்கள். அந்த அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் மூச்சை வெளியில் விட்டுவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

“மே ஐ கம்மின் சார்..”

“ப்ளீஸ் கம் பீ சீட்டேட்..” எனறார் வரதாச்சாரி. நீலநிறச் சட்டையில் அந்த குசன் நாற்காலியை ஆக்கிரமித்திருந்தார். நெற்றியில் நாமம். பரந்த டேபிளில் சிங்கப்பெருமாள் குடலை உருவிய கோலத்தில் இருந்த படத்தின் முன்னால் சில உதிரி மல்லிகைப்பூக்கள். அவரது வெளிர்நிற முகத்தில் அவர் உதிர்த்த புன்னகை அவரின் மேல் ஒருவித பயத்தையும் மரியாதையையும் ரிஷ்வந்திற்குள் விதைத்தது.

அமர்ந்தான்.

” ஆர் யூ ரிஷ்வந்த்..”

“யெஸ் சார்..”

“கிவ் தே ஃபைல்ஸ்” அவர் உச்சரித்த அந்த ஆங்கிலத்தில் புலமைத் திமிர் இருந்தது. ரிஷ்வந்த் தனது சான்றுதழ்கள் அடங்கிய பைலை நீட்டினான். வாங்கியவர் விரித்துப் பார்த்தார். வியந்தார்.

“குட் ரிஷ்வந்த் நல்ல ஃபெர்பாம்..” ரிஷ்வந்த்திற்குள் நம்பிக்கை துளிர்த்தது.

சில கேள்விகள் கேட்டார். துல்லியமாகப் பதிலளித்தான். கேட்டவர் ஆச்சரியத்தோடு..

“உங்களோட ந்நாலெட்ஜுக்கு., என்னோட இந்த இடத்துக்கு வர்றதுக்கு எனக்கு பத்து வருசம் ஆச்சு., நீங்க அஞ்சே வருசத்துல ரீச் பண்ணிடலாம்.. டைரக்ட் மேனேஜிங் ஃபோஸ்டே உங்கள நம்பித் தரலாம் “ என்றார்.

ரிஷ்வந்த்திற்கு அம்மாவும் அப்பாவும் குலசாமிசிலையும் என கண்ணுக்குள் வந்து போக வரதன்முதலிக்கு உள்ளுக்குள்ளேயே. “தேங்ஸ் மாப்ள..” என்றான்.

பேசிக்கொண்டே ரிஷ்வந்த்தின் ஃபைல்களைத் திருப்பிக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று அந்தச் சான்றிதழில் கண்கள் நிலை குத்தியது. உற்சாகமாய் பேசிய அவரின் கண்களில் அவன் தூரமானான். அவரது குரல் கொஞ்சம் மிடுக்காக மாறியது.

“ நீ வரதமுதலிக்குச் சொந்தமா..?”

“இல்லங்க சார் ஃப்ரண்ட்., ஏன் சார்.?”

“உங்க பேரப் பாக்கும்போது அவரோட சொந்தமோன்னு நெனச்சுட்டேன்., ஓக்கே நத்திங் வ்வொரி., என்ன கம்யூனிட்டி நீங்க.?”

“டி.என்.சி சார்..”

“அப்படின்னா..”

“கள்ளர் சார்..” ரிஷ்வந்த்துக்குள் இந்தக் கேள்விகள் கொஞ்சம் உதறலைக் கொடுத்தது. அவர் ஏன் சான்றிதழில் கம்யூனிட்டியைப் பார்த்துவிட்டு அழுத்தமாகத் தன்னிடம் கேட்க வேண்டும் என்ற பதட்டம் உருவானது. அதைக் கவனித்த வரதாச்சாரி..

“டோண்ட்டொரி ரிஷ்வந்த்.. ஆர் யூ செலக்டேட்..” என்றவாறு தனது டேபிளில் இருந்த பஸ்ஸரை அழுத்தினார்.

அவரின் இந்த வார்த்தை ரிஷ்வந்தின் கனவில் வந்த வார்த்தைகளாக இருக்க கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தான்.

பஸ்ஸரின் சத்ததிற்கு வந்த பியூனிடம்..

“ரங்காச்சாரி இவர முகமதுகிட்ட அழச்சிட்டுப் போங்க.. நான் இண்டர்காம்ல பேசிக்கிறேன்..” என்றவர் ரிஷ்வந்த்திடம்..

“உங்களுக்கு என்ன வேலன்னு முகமது சொல்வார்.. குட் லக் ரிஷ்வந்த்..” என்றபடி டேபிளில் இருந்த தன்ணீர் பாட்டிலை எடுத்தார்.

“வெல்கம்.. ப்ளிஸ் சீட்டேட்.. வரதா சார் சொன்னாரு.. மை நேம் இஸ் மொகமத்., இனி நீங்க என்னோட டீம்” என்ற முகமது தொடர்ந்தார்..

“நாம கலெக்சன் டீம்.. நம்ம பேங்க்ல லோன் வாங்கியிருப்பவங்ககிட்ட கலெக்சன் பண்ணனும். குறிப்பா சார் உங்கள ரெக்கவரி டீம்ல அஸிஸ்டெண்ட் ஏஜென்ஸி மேனேஜரா அப்பாயின்மென்ட் பண்ணிருக்கார். ஜஸ்ட் ஃபீவ் மினிட்ஸ் உங்க கன்பெர்மேசன் லெட்டர் ரெடியாயிடும்..” என்றவாறு சக்கர நாற்காலியில் சுழன்றார்.

“சார் ரெக்கவ்ரி கலெக்சன்னா..” சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரிஷ்வந்த் கைகளை பிசைந்து கொண்டே கேட்டான்.

“தட்ஸ் குட் நைஸ் கொய்ஸ்டின்.. அதாவது  நம்ம பேங்க்ல பெர்சனல் லோன், டூவீலர் லோன், கார் லோன், கமர்சியல் வெய்க்கிள் லோன், அக்ரி லோன், ஹோம் லோன் இப்படி பல லோன் வாங்கியிருப்பாங்க.. அதெல்லாம் வசூல் பண்றது தான் நம்ம வேல. ரெக்கவரிங்கிறது ஒரு வருசத்துக்கு மேல கடன் கட்டாதவங்ககிட்ட எந்தவகையிலாவது உருட்டி மெரட்டி வசூல் பண்ணணும். இல்ல பொருள்ன்னா தூக்கிட்டு வந்திரணும், சொத்துன்னா அதப் பறிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணணும். அதுக்கு நம்ம லீகல் டீம் சப்போர்ட் பண்ணுவாங்க.. இந்தமாதிரி வேலையச் செய்ய உங்கள மாதிரி என்னய மாதிரி ஆளுங்களுக்கு ஈஸின்னு வரதாச்சாரி சார் அடிக்கடி சொல்லுவார்.. இந்தாங்க இந்த இடத்துல சைன் பண்ணி ரிசப்சன்ல கொடுத்திருங்க.. டுமாரோ மார்னிங் சார்ப்லி நைன் தர்ட்டி., யூ வில் கம் வித் ஜாய்ன் மை டீம்.. குட்லக்..” என்றவாறு ரிஷ்வந்த்தின் பணிச்சேர்க்கை காகிதத்தை  ரிஷ்வந்த்திடம் நீட்ட..

ரிஷ்வந்த் அமைதியாகப் பெற்றுக் கொண்டான்.. அப்படியே எழுந்து நடந்தான்.. அவனது கால்களை யாரோ கட்டியது போலிருந்தது.. மெதுவாக சிரமப்பட்டு எட்டுக்களை எடுத்து வைத்தான். அப்பா சொன்னதும் அம்மா சொன்ன வார்த்தைகளும் ஈனமாய் அவனது இதயத்தில் ஒலித்தது.. அவன் ஒரு நிலையில் இல்லை.. ரிசப்சனைக் கடந்தான்.. ரிசப்சன் பெண் ”சார் ஆர் யூ ரிஷ்வ்ந்த்.?” என்றது அவன் காதுகளில் விழவில்லை..

அவன் அப்பாவின் மீசையை அவனுக்கு யாரோ ஒட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் களிம்பேற்றிய கைத்தடியை அவனுக்கு ஒரு பேரரசனைப் போல வழங்கினான். இன்றிலிருந்து ரிஷ்வந்த் எம்பிஏ நமது ஆஸ்தான அடியாளாக நியமணம் செய்யப்படுகிறார் என ஒருவன் பிராமணப் பத்திரம் வாசித்தான்.. இப்படியாக அவனது மனக்கண்ணில் விரிந்த காட்சிகளில் தங்கம்மாள் மாயதுரையின் கண்ணீர் திரையாக விழுந்து நனைந்து மிதந்தது.

உலகத் தாராளமயம் தேசத்திற்குத் தகுந்தாற் போல் தன் முகப்பூச்சைப் பூசிக் கொள்வதையே அதன் வெற்றியாக வைத்திருக்கிறது. இந்தியா போன்ற தேசத்தில் தன் வேர்களைப் பரப்ப சாதியத்தைப் பூசிக்கொள்வதிலும் அது தயங்கவில்லை.

ரிஷ்வந்த் படிகளில் இறங்கினான்.. அவனது கனவில் வந்த அந்த எல்லையில்லாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் வானை முட்டிக் கொண்டு நின்றிருந்த கட்டிடங்கள் ஒடிந்து விழுந்தன.. சிதறிய கண்ணாடிகளோடு இவனும் சிதறினான்.

சார்.. ரொம்ப நேரமா ஒரே இடத்துல நிக்கிறீங்க., அதுவும் ஆடாம அசையாம., ஏதும் பிரச்சனையா., டீ சாப்பிடுறீங்களா.,.?” என்ற கேள்விக்கு ரிஷ்வந்த் தன்னிலை திரும்பினான்.

“இது எந்த இடம்.. நீங்க..”

“சரியாத் தெரியல சார்., நான் ஊருக்குப் புதுசு., முதுகுளத்தூர் பக்கம்., அந்தத் தெருவுல இருக்குற எம்.என்.சி கம்பெனிக்கு இண்டர்வியூவுக்கு வந்தேன்..” கம்பெனியின் பெயரைச் சொல்லி திசை கட்டினான். ரிஸ்வந்த் தன்னிலை கலைந்து ஆர்வமாய்.,

“என்னாச்சு..” என்றான்.

“எங்க சார்.. எம்.பி.ஏ ஃபர்ஸ்ட் கிளாஸ் முடிச்சிருக்கேன்., இண்டர்வியூ பண்ணவரு நல்லாத்தேன் பேசுனாரு.. நானும் நம்பிக்கையா இருந்தேன்.. என்ன கம்யூனிட்டினு கேட்டாரு.. சொன்னேன் ஹவுஸ் கீப்பிங் இன்சார்ச்சுன்னு சொல்லிட்டங்க..” என்றான் கிடைத்ததைப் பறிகொடுத்தவனாக..

“நீங்க..” தொடர்ந்து கேட்டான். ரிஷ்வந்த் சிரித்துக் கொண்டே அவனது கையை அழுந்தப் பிடித்தான். தன்னைப் போல அவனும் கனவு கண்டிருக்கக்கூடும் அதே மாதிரியான படிக்கட்டுகளை இவனும் கடந்திருப்பான்., எத்தனைக் கட்டுக்களையும் உடைப்பதற்கான காலம் வராமலா போகும் என நினைத்தவன்.

“வாங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்..” என்றான்.

இருவரும் நடக்க தொடங்கினார்கள். மேற்கே சூரியன் மறைந்து கொண்டிருந்தான். சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “அதாக்கப்பட்டது”

  1. ஒரு முதல் பட்டதாரி என்று சாதனைக்கு பின்னால் அவரின் குடும்பம் பரம்பரை சாதி இவர்கள் பட்ட கஷ்டம் என்ற மிகப்பெரிய வரலாற்றை ஒற்றை சிறுகதையில் எழுதிவிட்டார் தோழர் அயௌ.தமிழ்மணி.

    சாதிகள் இல்லையடி பாப்பா … என்று படிக்கத் துவங்கிய குழந்தைகள் பட்டம் பெற்றாலும் அவர்களுக்கு கிடைக்கும் வேலை சாதி அடிப்படையில் தான். எத்தனை புரட்சியாளர்கள் வந்தாலும் மாறாத நம் சமூகத்தின் அவலத்தை உரித்து காட்டும் அற்புத படைப்பு வாழ்த்துக்கள் தோழர்

  2. ஜெகநாதன்.வீ 9789177991

    நாகரீகம் அடைந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த சமூகம் அவரவர்களை அவர்களின் தொழிலால் பிரித்து வைப்பது நிற்கவில்லை.

    அது சற்று அரிதாரம் பூசிக்கொண்டு நிற்கிறது ுு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: